Wednesday, November 30, 2011

"நவம்பர், இன்று மழை தினம் !"








இது
மழை தினம்.

ஜன்னலுக்கு அந்த பக்கம்
உற்சவம்.
இருப்பினும் எனது வெறிப்பை
சுற்றிச் சூழ்ந்து
சாம்பல் பூக்கிறது

என்ன வேண்டும்
ஒரு கப் தேனீர்,
அல்லது ஒரு கோப்பை விஸ்கி?

எதிர்பாராத தொலைபேசியில் இருந்து
நம்பிக்கையூட்டும் ஒரு அழைப்பு ?

ஒரு பெண்ணின் வம்பளப்பு ?

அடுத்த நிமிடத்தை கூட
புதிராய் வைத்திருக்குமாமே
அந்த வாழ்வின்
ரகசியம் ?

இறந்து போகக்கூடிய தேதி ?

இல்லை
தெரியவில்லை.

குளிர்ந்த மரக்கட்டை மீது
ஊர்ந்து கொண்டிருக்கிறது
அந்த மரவட்டை
மழையின்
ஒரு பகுதியாகவே

மனசுக்கும்
மழைக்கும் இருக்கிற தூரத்தை
அளக்கும் போது
எத்தனை சிறியவன் என்று
வியக்கிறேன்.

கனம்
குறைகிறது.

இப்போது இந்த கவிதையை எழுதி முடித்து
என்னை நான் ஏமாற்றிக் கொள்ள முடியும்.






Wednesday, November 16, 2011

"சிகரங்களின் தனிமை !"




அபரா தூங்கி கொண்டிருந்தாள்.

விஸ்வன் எழுந்தான். அபராவினால் அவிழ்த்துவிடப்பட்டிருந்த தலைமுடியை ஒழுங்கு செய்து சுருக்கமாக முடிச்சிட்டான். வளர்பிறை சந்திரனின் தண்ணோளியில் மினுங்கிக் கிடந்த சாளரத்தின் அருகே வந்து விஸ்வன் நின்ற போது, வியர்வை நனைந்த பின்னங்கழுத்து வெகு நிதானமாயும் ஆனால் ஆழமாயும் பரவியிருந்த காற்றை உணர்ந்தது. அபராவின் கைவிரல் நகங்கள் கூர்மையானவை. அவள் உண்டாக்கின கீறல்கள் இப்போது எரிய ஆரம்பித்தன. வியர்வை ஆறிக்கொண்டிருந்த பகுதிகளில் காற்றின் குளுமை தேகத்தை ஊடுருவதாக இருந்தது. தன்னுடைய நிர்வாணம் தன்னை சிறிதும் கூச்சபடுத்தவில்லை என்பதை தீர்மானம் செய்து கொண்டபின் அவனுக்கு ஆசுவாசமாயிற்று.

கண்கள் தொலைவில் லயித்தன.

மலை முழுக்க நிலவில் தோய்ந்திருந்தது. மரங்கள் தங்கள் விளிம்புகளில் பொன் கோர்த்திருந்தன. அடிவாரம் வெண்பஞ்சாய்  இருக்கிறது. ஆம்.  வெறுமனே பார்த்தால் அகப்பட்டுவிடாத நுட்பமான வர்ண கோடுகள் இரைந்து கிடக்கிறது. கண்மூடி தங்கள் மேனிகளுக்குள் எழுகின்ற நாதத்தை தாங்களே கேட்டவாறு மயங்கியிருக்கும் பரவச நிலை. விஸ்வன் திரும்பி தூங்குகிற அபராவை பார்த்தான். எல்லா கச்சைகளும் அவிழ்ந்த நிலையில் நிர்வாணமாய் கிடந்த உடல் ஒரு சிற்பம் போலவே இருந்தது. சோர்வு. மனிதர்களுக்கு வயிற்று பசி போன்றே உடல் வேட்கையும். வாரி விழுங்குவதுதான். இளைப்பாற தெரியாது. படபடப்பு இல்லாமல் நாதத்தில் லயித்து ஆத்மா நோக்கி பயணிக்க தெரியாது. அடி பெண்ணே. உன் ஆசையும் அதன் முடிவும் அத்தனை சீக்கிரம் முடிந்துபோய் விடுகிறது. கை கோர்த்து, ஆக்கிரமித்து ஒரு விரோதியின் வன்மம் கொண்ட முகத்துடன் மேலேறி வெறியூஞ்சலாடி யோனியால் உறிஞ்சியவள் இதோ அடுத்த நிமிடம் பால்வடியும் சிசுவாய் தூங்கிக்கொண்டிருக்கிறாள்.

விஸ்வன் எழுந்து பெருமூச்செறிந்தான்.

மறந்து போனவை போலிருந்த நினைவுகளெல்லாம் எழுந்து வருகின்றன. இன்னும் எவ்வளவு மதுவை குடிக்க வேண்டும். எவ்வளவு போகத்தில் ஈடுபடவேண்டும்.

எப்போதும் விட்டு விலகாத தனிமை சூழ்ந்தது நெஞ்சில். அடுத்த கணத்தில் அவன் வெறுமையை உணர்ந்தான். இது வழக்கம் தான். பாரம் ஏறியது. கண்கள் அலைபாய்ந்தன. பட்டு தெறிக்கிற எதுவும் உள்ளில் பதியாமல் இவை எல்லாம் என்ன என்கிற துயரம் பொங்கிற்று. எரிந்து எழும்புகின்ற ஒரு நெருப்பு நாவில் வறண்டு மதுவின் ருசியை தேடிற்று. விஸ்வன் தான் அலைகழிக்கபடுகின்ற நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்து லகரிக்கான துடிப்பை சந்தித்தான். என்ன அபத்தம் ?. என்ன குடித்து எதுவாகிவிடும். தனக்குள் எழுந்த இளக்காரத்தில் தானே வெட்கமுறுவதை அறிந்தான். எத்தனை பகுதிகளாக துண்டுபட முடியும் ஒரு மனிதன். வியப்பு தோன்றியது அவனுக்கு. விழுந்து கிடந்த கரும்பாறையில் ஒரு உளியால் தன் தகப்பன் ஒரு உயிரை செய்து கொண்டிருக்க அதை வேடிக்கை பார்த்து நின்ற நிகழ்ச்சி நினைவு வருகிறது.

"வா" என்றான் வாத்சல்யமாக மகனிடம்.

உளியை சின்ன கரங்கள் கொண்டு பற்ற வைத்தான். "ம்" என்றான்.

அதுதான் துவக்கம்.

" விதி" என்று முனகிற்று விஸ்வனின் உதடுகள். ஏதோ அரவம் கேட்டு திரும்பி நோக்கியபோது படுக்கையில் அபரா தன்னை தேடி தூழாவுவதை பார்த்தான். ஒரு சில நிமிடங்களுக்குள் எழுந்து அமர்ந்தாள். "நன்றாக தூங்கிவிட்டிருக்கிறேன். உனக்கு என்ன?" என்றாள்.

"... .... .... "

விஸ்வன் படுக்கையில் அமர்ந்தான். குத்துவிளக்குக்கு முன் சுடர்விடுகின்ற உலோக சிற்பத்தை போலிருந்தாள் அவள். கண்கள் ஒளிர்ந்தன. அவளை ஒரு குழந்தையாய் பார்கின்ற அகங்காரத்தின் பாவத்தை விஸ்வனால் உணர்ந்துக்கொள்ள முடியும். அவன் தன்னை இளக்கி கொள்ள விரும்பவில்லை. இளகினால் ஒரு வேளை தகர்ந்து போய் விடலாம். அவளுக்கும் அச்சம் உண்டாகிவிடும். அவளது கரம் நெற்றியை வருட வரும் போது அதை பற்றி கொண்டு "நீ இன்னும் சற்று உறங்க வேண்டியதுதானே" என்றான்.

"உனக்கு என்ன என்று கேட்டேன்"

"வெளியே நல்ல நிலவு !" 

"குளிர்கிறது" என்றாள். அவனது தோள்களில் சாய்ந்து இறுக்கிக் கொண்டு நிம்மதியற்ற கண்களைப் பார்த்தாள். "இனி நீ ஒரு கலைஞன் அல்ல. மறுபடி மறுபடி மனதிற்கு அதை சொல்லி கொடு. ஞாபகப்படுத்தியவாறு இரு. உனக்கு சிற்பங்கள் செதுக்கத் தெரியாது. ஒரு பாமரன்".

" ஒரு காதலன் என்றும் சேர்த்துக் கொள்".

"குற்றமில்லை. காதலிப்பது கூட மிகப்பெரிய காரியம். சிற்பிக்கு என்ன தெரியும் அதைப் பற்றி ?.  கல்லோடு வாழ்ந்தவனுக்கு வலிகள் பற்றி தெரியாது!".

"ம்"

"என்ன. ம் ?"

இருவரும் பேசவில்லை. மின்மினிகளின் ரீங்காரம் கேட்டது. அவள் பிளந்து தந்த உதடுகளை கவ்வி நிதானமாக இழைந்தான். உறிந்து குடித்தான். அன்பின் குளிர் மிகுந்த நிழலை மனசு உணர்ந்த கணத்தில் அவனுக்கு எதிர்விளைவு உண்டாயிற்று. கனத்துப் போகிற மனம். எத்தனை தளர்ச்சி.

அபராவின் கண்களைப் பார்த்தான். "அவர்கள் நம்மை பிடித்து விடுவார்கள் அபரா !"  என்றான்.

"இங்கிருந்தும் போய் விடுவோம்" .

" எங்கே போனாலும்.......  அபரா. உனக்குப் புரியவில்லை....... ஆலயப் பணியை பகுதியில் விட்டு விட்டு ஓடிவந்தமைக்காக நான் வருத்தப்படவில்லை. நீ யார் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது உள்ளில் ஒரு குரல். என்ன உன் கலை என்று கேட்கிறது அது !.  ஒருவன் தன்னை பாமரனாக மாற்றிக் கொள்ள முடியாது அபரா !.

".... .... .... "

"இவர்கள் செதுக்கச் சொல்லும் சிற்பங்களில் எனக்குள் திமிறுகின்ற ஏதோவொன்றுக்கு பதில் இல்லை! முட்டாள்களுடன் குலாவிக் கொண்டிருக்க முடியாமல் அடிவாரத்திலிருந்து சிகரத்துக்கு வந்த பிறகும் அந்தக் குரல் எனக்குள் உறுமுகிறது அபரா !. நீ யார் ? உன் கலை என்ன ?."






விஸ்வனின் கண்கள் எங்கோ வெறித்தன. கண்களுக்குப் புலப்படாத நச்சு உருவங்கள் அவனெதிரே சதிராடுகிரார்கள். உறக்கத்தில் கையும் காலும் அசைத்து எதற்கோ போராடும் ஒருத்தனின் முகம் போல இருக்கிறது. அவனுடைய முகம். நிறைவு செய்யப்படாத ஆலயத்தின் சூன்யத்தன்மை மிகவும் பயமூட்டியிருக்கும் அரண்மனையை. தெய்வத்தின் பெயரால் சர்வ வல்லமையோடு வாழ விரும்பும் பிராமணர்களுக்கு தலைமைச் சிற்பி ஓடி போய் விட்டான் என்பது அதிர்ச்சியாய் இருந்திருக்கும். அவர்களுக்குப் புரியாது. அந்த சிற்பி கல்லை கனிய வைத்துக் கொண்டிருந்த போது அவனுக்குள் என்ன நிகழ்ந்ததென்று. அவர்கள் அவனுக்குள்ளே காலங்காலமாய் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு குரலை. அறிந்திருக்க முடியுமா.  கூட்டத்தின் கற்பனைகளை பாதுகாக்க, கூட்டத்தின் களிப்புகளை திருப்பதிப்படுத்த அவர்கள் நிறுவும் பொய்யில் கலைஞனுக்கு ஏது முகம் ?. அவர்களால்  கோபப்படுவதைத் தவிர்த்து வேறொரு மார்க்கத்தை கண்டடைய முடியாது. தேடிக் கொண்டிருப்பார்கள். பிடிப்பட்டால் அவனை பணிய வைக்க அவர்களால் முடியும்.

அவர்களால் யாரையும் பணிய வைக்க முடியும்.

எத்தனையோ பேர் பணிந்தும் போயிருக்கிறார்கள்.

"அபரா. அவர்கள் நம்மை பிடிக்க வந்தால் நீ என்ன செய்ய வேண்டுமென்று சொன்னேன் ? ஞாபகமிருக்கிறதா ?"

அபரா அவனது கைவிரல்களை வருடினாள். "விஸ்வா நாம் இங்கிருந்து போய் விடுவோம்! எங்கயாவது !. வெகு தூரத்திற்கு. !"

"நான் சொன்னதை மறந்து விடாதே. நீ என் மீது எவ்வளவு காதல் கொண்டிருக்கிறாய் என்பதற்கான நிரூபணம் அது!"

அபரா பளார் என அறைந்தாள் அவனது கன்னத்தில்.

அவனை விட்டு விலகி குப்புற படுத்து கொண்டாள். அப்புறம் போர்வையை இழுத்து உடம்பில் சுற்றி கொண்டாள். விஸ்வன் தனது அங்கியை தேடி எடுத்து உடுத்திக் கொண்டு வெளியே வந்தான்.

காற்று கூடியிருந்தது. எலும்பை தொடுகின்ற குளிர். இருளின் தடிமன் குறைந்து கொண்டிருக்கிறது. ஒன்றிரண்டு பட்சிகள் சீழ்கையடிக்கின்றன. குழிந்த அடிவாரம் கடந்து மறுபடி எதிர்புறத்தில் மலைகளாக நிற்கிற கிழக்கு வினோத வர்ணங்களை புனைந்திருக்கிறது. எங்கோ அருவி விழுகின்ற ஒலி. சப்தத்தை கவனித்து நடந்தான்.

விடிந்து விட்டது.

சூர்யனின் இளங்காலைக் கதிர்களை வெள்ளியாய் பிரதிபலித்தபடி பிரவாகிக்கிறது அருவி. பாறையில் பட்டு சிதறும் நீர்த்துளிகள் மாயாஜாலம் பண்ணின. இடைவிடாத சிந்தனைகள் அறுபட்டு வெறுமையோடு விரிந்த மனம் இயற்கையை பிரமிப்புடன் அள்ளி விழுங்கியது. விஸ்வனின் கண்களில் கண்ணீர் ததும்பியது. புகுந்து நனைந்தான் அவசரமாக. சில்லென அமிர்து! அவனது அழுகையையும் அது அடித்து கொண்டு போயிற்று. காலம் நகர்ந்து கொண்டே இருந்தது. விஸ்வன் விலகி நடந்தான். குளிர் நழுவிப் போயிருந்தது. வெய்யில் நல்ல இதம். எங்கும் பனி புகையாய் எழும்பியிருந்தது. விஸ்வன் தன் உள்ளே துணிவை உணர்ந்தான்.




காத்திருந்த அபரா இவனை பார்த்ததும் ஓடி வந்தாள். " உன்னை நான் காப்பாற்றுவேன், என் கண்ணே" என செவியோரம் முனகிற்று அவள் இதழ்கள். ஒருவர் மேனியில் ஒருவர் லயித்து நாதம் அறியும் போது  விஸ்வன் இரவைப் பற்றி நினைத்துக் கொண்டான். என் பெண்ணே. எப்படிப்பட்டவள் தெரியுமா நீ. மனம் பெருமித்தாலும் கர்வத்தாலும் நிறைந்தது. குனிந்தவன் அவளது நெஞ்சுக்குள் அமிழ்ந்த போது அவள் சீலையை விலக்கி கொடுத்தாள். ஒன்றை முலையை சூப்பிக் கொண்டிருந்தவனின் சிரத்தை வருடிக் கொண்டு நின்றவள் நிமிர்ந்தாள்.

புரவிகளின் குளம்பொலிகள்.

"விஸ்வா "

அவன் இன்னமும் முண்டிக் குடித்தான். நிதானமாக அவளது உடையைப் பூட்டி மார்புகளை மறைத்தான். கன்னத்தை இருகரங்களாலும் பற்றி வலுவாக உதடுகளில் முத்தமிட்டான். நகர்ந்து படுக்கைக்கு அருகே கிடந்த மூட்டையில் இருந்து அந்த கூரிய வாளை உருவினான்

சப்தங்கள் நெருங்கி விட்டன.

"சிற்பியாய் அல்லாத நரகம் எப்படியென்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த நிமிடம் தொட்டு நான் சிற்பியல்ல". வாளை அவளிடம் கொடுக்க. அவளது கண்கள் உறைந்திருந்தது.

கரத்தை நீட்டிக் காட்டினான். " துண்டித்து விடு"

புரவியில் நெருங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு காட்சி புரிந்து விட்டது. பெரும் கூச்சலுடன் முன்னேறினார்கள்.

வாள் எழும்பிற்று.

நீட்டப்பட்ட கரமோ விரல்களோ துண்டிக்கப்படவில்லை. ஆழமாக வாள் இறங்கிற்று நடுநெஞ்சில்.

விஸ்வன் சரிந்தான். விழிகள் இமைக்காமல் நிலை குத்திப் போய் இருந்தன. ஏன் என்று கேட்டன.

"நீ நினைத்திருப்பதை விட நான் உன்னை அதிகமாக காதலிக்கிறேன்! அதனால் தான்!" என்றாள். " நீ சிற்பி தான்"

விஸ்வன் புன்னகைக்கிறானோ?. இருக்கலாம். 

எல்லோரும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

விஸ்வன் அடங்கியதும்  " சிகரத்துக்கு கீழே அடிவாரத்திற்கு கொண்டு செல்ல ஒரு சிற்பியின் சடலமும் ஒரு கைதியும் !" என்றாள் அபரா அவர்களிடம் ஏளனத்தோடு.












Friday, November 4, 2011

வேட்டையாடு விளையாடு







நெகடிவ்
பாசிடிவ்
என்கிறார்கள்

நல்லவன்
கெட்டவன்
என்கிறார்கள்

என்கரேஜ்
டிஸ்கரேஜ்
என்கிறார்கள்

முற்போக்கு
பிற்போக்கு
என்கிறார்கள்
 
ஆண் பெண்
இரவு பகல்
நன்றி துரோகம்
நாத்தம் வாசம்
சந்தர்ப்பத்துக்கு எது சௌகரியமோ
குறி பார்த்து அடித்து விட வேண்டியதுதான்

எனக்கு என்னவென்றால்
நித்தம் நூறு புள்ளிகளை
சிருஷ்டி பண்ணி கொண்டிருக்கிறோம்
நிற்க வேண்டிய புள்ளி எது
புரிய மாட்டேன் என்கிறது





நூற்றாண்டுகளாய் தேடப்படும் ஒருவன்










மனிதன்

எத்தனை மனோகரமான
பதம்
என்றான் ஒருவன்

மனிதன்,
மகத்தான சல்லிப்பயல்
என்று நொடித்தான்
அனுபவத்தில்
மற்றொருத்தன்

உனக்கு தெரிந்திருக்குமே
மனிதனை காணும்போது
கண்ணீர்
முட்டுகிறது
காணாதிருக்கையில்
திடுக்கிட்டு தளர்கிறோம்

நிலைக்கண்ணாடியில்
ஒரு நாள் ஓநாயும், ஒரு நாள் கடவுளும்
வந்து போனால் கூட
மனிதன் தெரிகிற நாள்
மறந்து போகிறது
என்பது ஒரு
புதிர்,

அவன் ஏன் ஒரு இடத்தில் தங்குவதில்லை

அறைகூவல்களில் வாழ்கிற
புழுத்த வேசியின் வீட்டில்
அவன் வந்து போகலாம் என்றாலும்
பல்லக்கு வைத்து காத்திருந்தால்
ஏற வருவது
ஒரு ரத்தக் காட்டேரியாய்
இருக்கிறது

நான் நினைக்கிறேன்,
கடவுளுக்கு தந்தை மனிதன் தான்
நெறி புரண்ட தன் தாயை வைதபடி
ஒரு வேளை அந்த கடவுள்
கத்தியோடு அலைந்து கொண்டிருக்கலாம்

உன் வீட்டிலோ
என் வீட்டிலோ
மனிதன் ஒளிந்து கொள்ள
வாய்ப்பில்லையென்றால்
யார் வீட்டில்
இருப்பான்
அவன்