Saturday, December 31, 2011

வாய்மையே வெல்லும் என்றால் என்ன ?




பெல் எப்போது அடிக்கும் என்று காத்திருப்பதே ஒரு கிறுகிறுப்பு தான். மிஸ் போன பிறகு மற்றவர்களெல்லாம் ஓடின மாதிரி பாசு ஓட வேண்டியிருக்கவில்லை. ஏன் என்றால் அவனாக வீட்டுக்கு ஓடிவிட முடியாது. குறைந்தது மூன்று நான்கு அறைகளாவது பெருக்கி முடித்து விட்டு தான் ஸ்கூல் ஆயா 'என்னப்பா எல்லோரும் வந்தூட்டீங்களா ?' என்று தயாராகி வரும். தேன்மொழி, கல்யாண சுந்தரம், நூருன்னிசா ஆகியோரை அவரவர் வீடுகளில் சேர்ப்பித்து விட்டு கடைசி கடைசியாய் தான் இவன் வீடு வந்து சேர முடியும்.

ஒரு தடவை நாளைக்கு செய்ய வேண்டிய வீட்டுப்பாடம் என்னவென்று நினைவுப்படுத்திக் கொண்டே பாசு நிதானமாய் தன் 'பெட்டி' யில் புத்தகங்களை அடுக்கினான். ஸ்கேலை பென்சிலை பத்திரப்படுத்தும் போது காலையில் கடித்து விட்டு வைத்த நெல்லிக்காய் அகப்பட்டது. அதை எடுத்து ஒரு கடி கடித்து விட்டு வைத்தான். மென்று கொண்டே தண்ணீர் பற்றி நினைத்தவாறே பெட்டியை மூடினான். பெரிய பசங்க படிக்கும் அஞ்சாங்கிளாசுக்கு பக்கத்தில் தான் தண்ணீர் குடிக்கிற குழாய் இருக்கிறது. நாக்கில் சின்ன அரிப்போடு பெட்டியுடன் எழுந்தவனுக்கு ஒரு திகைப்பு. உற்று பார்த்தான்.

ப்ரௌன் பென்சில். புதுசு. ஒரு பக்கம் ரப்பர் இருக்கும்.

அது யாருடையது என்று அவனுக்கு தெரியும்




ஒரு கணம் யோசித்து நின்றான். முறைப்படி அதை மறுநாள் காலையில் மிஸ்ஸிடம் ஒப்படைப்பது போல் அவனது மனசுக்குள் ஒரு காட்சி ஓடியது. அடுத்த நொடியிலேயே வேறு ஏதோ ஒன்று அவனுக்குள் சில்லிட்டது. அதை  விளங்கி கொள்வதற்குள் அவன் அதை சட்டென எடுத்துக் கொண்டு ட்ரவுசர் ஜேபிக்குள் வைத்துக் கொண்டு விட்டான்.

அக்கம் பக்கம் பார்க்க தோன்றவில்லை. எழுந்து நடந்தான். குழாயின் அருகே பெட்டியுடன் நின்றவனுக்கு தண்ணீர் வேண்டுமா என்று புரியவில்லை. நெல்லிக்காயின் துவர்ப்பு உறுத்தினால் தானே. ஸ்கூல் ஆயா வருவதற்குள் அவன் நூறு முறை தன் டிரௌசர் பாக்கெட்டை தொட்டுப் பார்த்து கொண்டான். வழக்கமாய் கேட் மீது ஏறிக் கொண்டு வண்டியோட்டுவான். இப்போது அதை யோசிப்பது கூட அபத்தமாய் பட்டது.

வீட்டுக்கு போகிற வழியில் நூருன்னிசா உன் பெட்டியில் நெல்லிக்காய் வைத்திருக்கிறாய் தானே என்பது போல எதையோ கேட்டாள்.

பதற்றமாய் இருந்தது.

சுவர் மீது வரையப்பட்ட ராட்டை சின்னத்தை பார்க்கிற மாதிரி அமைதி காத்து நடந்தான். நூருன்னிசா ஞாயிற்று கெழமை வரப்போகிற அப்பாவை பற்றியும் அவரது மிலிட்டரி டிரஸ் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தாள்.பென்சில் ஜேபிக்குள் பத்திரமாய் இருந்தது என்றாலும் இவன் அதை கையால் அமுக்கி பாதுகாத்துக் கொண்டே வந்ததால் அதன் முனை அவ்வப்போது தொடையை குத்திக் கொண்டிருந்தது.

உண்மையை சொல்வது என்றால் பாதுகாப்பு எங்கேயுமே இல்லை.

வீட்டில் பல்வேறு பகுதிகளையும் அவன் ஆராய்ந்தான். அம்மாவோ அப்பாவோ மாமாவோ புழங்குகிற இடங்களே எல்லாம். இந்த பென்சில் எங்கிருந்து வந்தது என்று கேட்க ஆரம்பித்து கடைசியில் இவனை தானே குடைவார்கள். ச்சே, எவ்வளவு பேஜாராயிருக்கிறது இதெல்லாம் ? காலையில் பென்சிலை கொண்டு போய் மிஸ்ஸிடம் கொடுத்து விட வேண்டியது தான்.

நிம்மதி.

பெட்டியில் ரொம்ப சகஜமாய் அதை போட்டு விட்டு தெருவுக்கு வந்தான். பக்கத்து கட்டை தொட்டியில் கை வண்டி இழுக்கிற முருகன் மாமாவின் பிள்ளைகள் இருவரும் இவனுக்கு சிநேகிதக்காரர்கள். பாசு என்று ஆனந்த கூச்சலிட்டார்கள். இவன் போய் ஜோதியில் அமிழ்ந்தான். ஒரு கட்டத்தில் விளையாட்டு உச்சத்துக்கு போய் எதற்கோ வாய் விட்டு சிரித்துக் கொண்டிருக்கும் போது பென்சில் ஞாபகம் வந்து விடவே மூச்சு ஒரு கணம் நின்றது.

எவ்வளவு அழகான பென்சில். நிச்சயமாய் அந்த பென்சிலால் எழுதினால் முத்து முத்தாய் கையெழுத்து வரும். அதை ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும்?

பென்சிலின் மேல்பகுதி எங்கும் ஒரு துண்டு பிளேடால் சீவினான். ப்ரௌன் கலர் கொஞ்ச கொஞ்சமாய் போய் கொண்டிருந்தது. கையில் வைத்து உருட்டி பார்த்தான். சற்று தூரமாய் அதை பிடித்து நிறுத்தி பார்த்தான். பென்சிலையே முனையில் வெட்டி சிறிதாக்கி விட்டால் என்ன. அது தான் சரி. ஒருவராலும் கண்டுபிடிக்க முடியாது. கோலம் கலைந்த பென்சிலுடன் மறுபடி அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்தான். அவர்களுக்கு தெரியாமல் அவன் அந்த பென்சிலை 'பழசாக்க' ஆரம்பித்தான். அழுக்கு மண்ணில் நுழைத்து அமுக்கி அமுக்கி எடுத்து விட்டால் அது புதுசாய் இருக்க முடியாதே. பையன்களோடு விளையாடுகிற மாதிரியே பாவனை பண்ணிக் கொண்டு அவன் பென்சிலை வதம் பண்ணியவாறு இருந்த போது வேறு ஒரு சந்து வழியாய் மாமா வீட்டுக்கு போய் கொண்டிருந்தது தெரிந்தது.

ஒரு மின்னல் தான்.

பாசு ஓடினான் அவரை நோக்கி.

"டேய், டேய், டேய், ஓடாத, மெதுவா மெதுவா"

" மாமா, எனக்கு அங்க இருந்து பென்சில் கெடச்சிச்சு" என்று குதித்தான்.

அவர் அந்த பென்சிலை பார்த்தார். குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா? களிப்புடன் இருக்கிற அவனது முகத்தை பார்த்து அன்பு சுரந்தது. சரி என்பது போல தலையை அசைத்து விட்டு அவனது கரத்தை பற்றிக் கொண்டார். "கை, கால எல்லாம் அலம்பிட்டு வீட்டு பாடம் எழுது. தமிழ், இங்கிலீஷ் ரெண்டும் கொடுத்திருக்காங்க இல்ல? "

அன்று இரவு புதுசாய் இருந்து பழசாய்  மாறின பென்சில் இருந்ததால் மிஸ்ஸுங்க கொடுத்த வீட்டு பாடம் மறக்கவில்லை. ரைட் போட்ட மிஸ் அவனது தலையை தட்டி கொடுத்து நோட்டில் வி குட் போட்டார்கள்.

தண்ணி குடிப்பதற்காக பெல் அடிக்கும். அப்போது வகுப்பில் மிஸ் இல்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த விஜயாவிடம் அவன் "எனக்கு கட்ட தொட்டியாண்ட ஒரு பென்சில் கெடச்சிச்சே" என்றான்.

அவள் அவனையே பார்க்க.

பெட்டியிலிருந்து அதை எடுத்து காட்டினான்.

அவள் அதிர்ச்சியுடன் "ஏய் இது என் பென்சில்" என்றாள்.

அது அவனுக்கு மட்டும் தெரியாதா என்ன. என்னென்னவோ நடந்தது.

பாசுவுடன் மாமாவே பள்ளிக்கு கிளம்பி வந்தார். ஏழெட்டு மிஸ்ஸுகள் நின்றிருக்க, மாமா கொதிப்புடன் பேசுவதை இவன் பார்த்திருந்தான்.

"நான் பென்சிலுக்காக வரல. இவுளுண்டு அழுக்கு பென்சில். ஆனா நீங்க எங்க கொழந்தைய திருடனாக்கிட்டிங்க பாருங்க - அதத்தான் என்னால பொறுத்துக்கவே முடியல. ஏங்க, இந்த பென்சில கட்ட தொட்டியாண்ட இருந்து எடுத்து குடுத்ததே நான் தான்! தெரியுமா?".




எல்லோருமாய் சேர்ந்து விஜயாவிடம் இருந்து அந்த பென்சிலை வாங்கி பாசுவிடம் கொடுத்தார்கள். மாமாவிடம் சாரி சொன்னார்கள்.

பாசு அதற்கு அப்புறம் அடிக்கடி விஜயாவை சைடில் பார்த்து கொள்வது வழக்கம். அவனது திருட்டு கண்களை நேரிடும் போதெல்லாம் அவளுக்கு ஒரு மாதிரியான முழிப்பு வந்தது. அவள் தன்னை தானே ஒரு திருடி என்று நினைத்து கொள்கிற மாதிரிதான் அது இருந்தது.

* * *

"உங்க பேரு?"

"ரமா தேவி"

"எதாவது படத்துல நடிச்சிருக்கீங்களா?:"

"ஆங், பத்து பதினஞ்சி இருக்கும்".

"போட்டோ கொண்டுவந்து இருக்கீங்கல்ல? அதுக்கு பின்னால எல்லாத்தையும் எழுதுங்க. அப்படியே காண்டக்ட் நம்பரையும் எழுதிடுங்க".

நான் சற்று வேலை மும்முரத்தில் இருந்தேன். இருபது நாள் படபிடிப்பு. புதன் கிழமை ஷெடியூல் துவங்குகிறது. இனி செய்து முடிக்க வேண்டிய காரியங்களை வரிசையாய் நினைத்து பார்த்தால் தலையை சுற்றுகிறது. அசிஸ்டெண்ட் என்னிடம் தூக்கிபோட்ட ரமாதேவியின் போட்டோவை பார்த்தேன்.

"டேய், அவங்களை கூப்பிடுறா"

"ஏங்க, ஏங்க இங்க வாங்க".

அவளை நான் ஆழமாய் பார்த்தேன். ஒரு சினிமாக்காரி எப்படி தளுக்காக சிரிக்க வேண்டுமோ அப்படி சிரித்தாள்.  

"ஏங்க உங்க பேரு ரமா தேவிதானா, இல்ல சினிமாவுக்காக வெச்சிக்கிட்டிங்களா ?"

"எல்லாம் வச்சிகிட்டது தான் சார். நல்லதா ஒரு வாய்ப்பு குடுங்க. அம்மா கேரக்டர் குடுத்தா சூப்பரா அழுவேன்".

அவளை அனுப்பி வைத்து விட்டு புகைப்படத்தை பார்க்க அதில் இருந்தது விஜயா தான். அவன் ஏன் என்னை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்? சாகும் வரை மறக்க முடியாமல் நினைத்து கொண்டிருக்க வேண்டியவன் நான் தான். வாய்மையே வெல்லும் என்கிற எனது படத்தின் டைட்டிலை குறிப்பு புத்தகத்தில் நான் திரும்ப திரும்ப எழுதி கொண்டிருந்தது உணர்ந்து திடுக்கிடுகிறேன்.

செல் அடிக்கிறது.

எனது மகன் தான். தனது ப்ளே ஸ்டேஷன் காணோம் என்கிறான். யாரோ திருடிவிட்டார்கள் என்று ஆங்கிலத்தில் விளக்கி கொண்டிருக்கிறான். புகைப்படத்தில் எனக்கு இரண்டாம் கிளாஸ் விஜயா புலப்பட ஆரம்பிக்கிறாள்.