Sunday, February 19, 2012

" நமது கால இயந்திரம்"




இசையை பற்றி எழுத வேண்டுமானால் அந்த துறையை சார்ந்த தீவிரவாதியாய் தான் இருக்க வேண்டும் என்றில்லை. இந்த 'ஜனநாயக' யுகத்தில் மனசில் பட்டதை எல்லாம் சொல்லலாம், யாரும். அப்படி மனசில் இருப்பதையெல்லாம் வரிசைப்படுத்தி பொறுமையாய் பக்குவமாக சொல்ல ஒரு திறன் தேவைப்படுகிறது அல்லவா? நான்கு பேர் அதை கேட்கும் போது நான் பேச நினைத்து பேச முடியாமற் போனதை இவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்று உணர்ச்சிவசப்படுவது எப்போதும் நிகழும் காரியம் அல்ல. நிஜமாகவே 'உயிர் எழுத்து' இதழில் 'என் கால இயந்திரம்' படித்த போது சொல்லவொண்ணா ஆற்றாமையும் பொறாமையும் எழுந்தது.

கட்டுரை என்றா சொல்வது? 



எனக்கு அதை இன்னதென்று நினைத்து பார்க்கவே பிடிக்கவில்லை. இளையராஜாவை பற்றி எழுதி இருப்பவர் செழியன். எனக்கு மிகவும் பிடித்த ஒளிபதிவாளர். தான் இருக்கிற இடத்தை காட்டிக் கொள்ளாமல் இரண்டாம் திரைக்கதை எழுதுபவர். 'காதல்' படத்தை விட 'கல்லூரி' முக்கியமான படம்  என்பது என் நம்பிக்கையெனில் இலக்கியம் தெரிந்த செழியனால் அந்த படம் பண்பட்டிருந்தது என்பதையும் நம்ப தலைப்படுவேன். இன்னும் சில படங்களில் கூட அவர் உண்டாக்கிய படிமங்கள் பல இடங்களில் தெரிந்திருந்தது. மற்றும் அவர் ஒரு எழுத்தாளரும் கூட. இல்லையா?

ஆனால் இந்த தகுதிகளை நினைத்து பார்க்கவே தேவையில்லாமல் வேறு ஒரு தடத்தில் அவர் ராஜாவின் பாடல்களை பற்றி சொல்லியிருக்கிறார். என்னைப் போல ஆயிரக்கணக்கானவர்களில் வாழ்வு ராஜாவின் இசையோடு கூடி நடந்த கதையை, அவர் தனது அனுபவமாக மட்டும் சொல்லியிருப்பது தெரியும். நகரத்திலேயே பிறந்து வளர்ந்த நானும் கூட செழியனோடு வித்தியாசப்படவில்லை என்று புரிந்து கொள்கிறேன். நிலக்காட்சிகள் வேறாய் இருக்கலாம்.  ஞாபகங்களும் கற்பனைகளும் வேறு கோணத்தில் இருக்கலாம். ஆனால் எங்குமே கண்ணீரின் சுவை ஒன்று.




ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட் பற்றியெல்லாம் என்ன சொல்வது? செழியன் எழுதிய வரிகளையெல்லாம் தான் நான் திருப்பி எழுத வேண்டும். என்னைப் போல ஆயிரம் பேர் கூட இருப்பார்கள். இன்று இருக்கிற இடத்தில் இருந்து ஒரு கணம் திரும்பி பார்த்தால் நாம் எப்போதும் நினைத்து கொண்டிருக்க முடியாத மூச்சு காற்று போல் இருந்திருக்கிறாரா ராஜா? அப்படி தான். அதனால் தான் இப்போதைய டக்கு முக்கு டிக்கு தாளங்களை சகித்து கொள்ள ஆகாமல் பலரும் பொருமுகிறார்கள். காலம் அணிந்து கொள்கிற புது புது கோலங்களுக்கு முன்னே மூச்சு வாங்க பேசி திக்கி திணறி தோற்கிறார்கள். இளையராஜா தனக்குள் திகழ்த்தியதைப் பற்றி அவர்களால் சொல்ல முடியவில்லை. பழசு போய் புதுசு வரும் என்கிற விதிக்கு இளையராஜாவுமா என்பது திகைப்பாய் வருகிறது. ஆன்லைன் அப்டேட்  முற்போக்கு ரைட்டர்ஸ் எல்லாம் காலம் மாறி போச்சு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே?

செழியன் எழுதியதில் இருந்து நான் யோசித்தது கொஞ்சம்.

இளையராஜா இறுதி வரையில் ஒரு சினிமாக்காரர் அல்ல. அவர் பணி புரிந்த படங்கள் இருக்கும், போகும். சாகா வரம் பெற்ற திரைப்படங்கள் நம்மிடம் ஏது? ஆனால் எந்த கான்கிரிட் வனங்களாயினும் அதில் உலவுகிற இரும்பு மனிதர்களின் இதயம் ஒரு கணம் தளர்த்தப்படுமானால் அதை நெகிழ்த்துவதற்க்கு ராஜாவால் முடியும். விற்பன்னர்களின் வீதியில் பாமரர்களை இயக்கியவர் அவர். கம்பனையோ இளங்கோவையோ  ஷேக்ஸ்பியரையோ தஸ்தவேஸ்கியையோ நீங்கள் அடையாளம் கண்டு கொண்டு உங்களுக்குள் இளகியதுண்டா?  அந்த இளக்கத்திற்கு எது காரணமோ அது இளையராஜாவை அறிந்து கொண்டு சிலிர்த்து கொள்ளும். எவ்வளவோ டக்கு முக்கு தாளங்களை தாண்டி அது நடக்கும்.

செழியனுக்கு நன்றி!

Tuesday, February 14, 2012

"வீழ்வேன் என்று நினைத்தாயோ ?"


மணி மூன்றிருக்குமா? புலரியின் இளங்குளிரை  தள்ளி வைத்து கிறக்கத்தில் அமிழ்ந்திருக்கிற விழிகளை விரித்து பிரித்து சன்னல் வழியே நிலவிருக்கிற அட்டகாசத்தை பார்க்க ஆகவில்லை. காரணம் நீ. ஆமாம். மனக்கண்ணில் அந்நிலவு இப்போதும் அமிர்தம் பொழிந்து கொண்டு தான் இருக்கிறது. என்னைப் போல. ஆஹா, நான் நனைந்து போயிருக்கும் ஒரு துணியைப் போல இருப்பதை இன்னும் உன்னிடம் சொல்லவில்லை அல்லவா. மலைஅடிவாரத்தில் கொத்து பூக்கள் பனித்துளிகளை ஏந்தியபடி சுகந்தம் பரப்புகின்றன. கனவில் கள்ளத்தனமாய் வந்து மேய்ந்து போன மாதிரி இப்போதும் உன்னால் பிரத்தட்ஷய பட முடியுமெனில் நான் இரண்டு தொடைகளுக்கு நடுவே உன்னை அழுத்திக் கொள்வேன். வெய்யிலோடி  களைத்த ஒரு சிறுவன் சில்லென்ற நதிநீரை இரண்டு கைகளாலும் அள்ளி எடுத்து பருகுவதை நான் இப்போதே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. மழைக்கால வெள்ளத்தின் போது மேடுகளை ஏறி, கதகதப்பான ஒரு பொந்தில் சுருண்டு கொள்கிற நாகத்தின் தியானத்தை எப்போதும் பார்த்திருக்கிறேன். ம்ம்.... உனது முகத்தில் தான். எப்பேர்ப்பட்ட மந்திரக்காரன் நீயென்று நினைத்து என் பெருமூச்சை தீயாக்கிக் கொள்ளும் போது, ரவுடி கையில் இருக்கிற உருட்டுக்கட்ட மாதிரி என் புருஷனின் கரம் உடம்பு மீது விழுகிறது.

இனி என்ன.

பில்ட்டர் காப்பிக்கான ஆயத்தங்களை தொடங்க வேண்டியது தான்.

***

டபிள்யூ எப்போதுமே தன்னை ஒரு கோபக்காரனாய் நினைத்து கொள்வது வழக்கம். ஆனால் பிரச்சனை என்னவென்றால் யாரை பார்த்தாலும் கோபம் வருகிறது. ஒருத்தன் முன்னாலேயும் சீறி விழ வக்கில்லாமல் போவது கூட பரவாயில்லை. இளித்து வைத்து விடுவது தான் கஷ்டம். பாரதியாய் வந்த எஸ் வி சுப்பையா மாதிரியோ, தொலைகாட்சி நேர்காணலில் வருகிற வைரமுத்து மாதிரியோ ரொம்ப நேரத்துக்கு தன்னை தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லை.

கோபம் ஆவியாய் போன பிறகு வருகிற அயர்ச்சி இருக்கிறதே, அது நரகம். கொட்டாவியை அமுக்கி மகாவிஷ்ணு மாதிரி சயனித்துக் கொண்டு டபிள்யூ "தம்பி, என்ன கேட்டிங்க?" என்றான்.

இரண்டு இளைஞர்களில் ஒருவன் மட்டுமே பேச சளைக்காதவன். காத்திரமான ஆர்வத்துடன் "இதுவரைக்கும் நீங்க ஏழு நாவல் எழுதிட்டீங்க. நாலு ஷாட் ஸ்டோரீஸ் கலக்சன். அப்புறம் பத்து கட்டுர தொகுப்பு. சினிமா விமர்சனம். இத எல்லாம் நீங்க எப்படி எழுதறீங்க. எங்க இருந்து சார் வருது?" என்றான்.

இப்போது ஒரு புன்முறுவல். அதற்கு நூறு அர்த்தம். ஆர்வ கோளாறுகள் அதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

இளைஞன் புரிந்து கொண்டு விட்ட தற்பெருமையுடனும் ஒரு சீரிய எழுத்தாளனை அண்ணாந்து பார்க்கிற வியப்புடனும் "இந்த புக் பெஸ்டிவலுக்கு கூட உங்களோட புது நாவல் வரபோவது இல்ல? " என்று கேட்க - அதே புன்முறுவலை நீட்டித்து கொண்டு டபிள்யூ தலையசைத்து வைத்தான்.

"எவ்ளோ பேஜ் எழுதியிருக்கீங்க சார், முடிச்சீட்டீங்களா? "

இப்போது டபிள்யூ சற்று குழம்பிக் கொண்டான். இணையத்தில் அப்ப அப்ப பூந்து வந்து ஏறக்கொறைய காபி பேஸ்ட் பண்ணினது கொஞ்சம். அப்புறம் பொழுது விடிந்து பொழுது போகிற வரைக்கும் அது இல்ல இது இல்ல என்று வருகிற தலைவலிகளை எழுத்தாளனின் தலைவிதியோடு ஒப்பிட்டு எழுதினது கொஞ்சம் வருமே. எல்லாத்த விட லவ் சீன்ஸ் தான் அதிகம் இருக்கும். ருமேனியால செத்து போன ஜனங்கள பத்தி எழுதி அத்தையும் இத்தையும் மிக்ஸ் பண்ணா எவ்ளோ சேரும். கணக்கு புலப்பட்டு தெளிவுக்கு வரமாட்டேன்  என்கிறது.

எந்த கேள்விக்கும் பதிலே சொல்லாமே சிரிச்சு வைக்க வேண்டியது பின் நவீனத்துவ காலத்து அவஸ்தையோ. புதுமைப்பித்தனுக்கு இந்த மாதிரி புடுங்கலுங்க இருந்துருக்காது என்று நினைக்கும் போதே எந்த நினைப்பெல்லாம் ஏன் வருகிறது என்று தோன்றியது.

"தம்பீ "

"சொல்லுங்க சார் "

"நான் பழைய காலத்து தயிர் சாதம் கெடையாது. தலைக்காணி சைஸ்ல எழுதினா தான் எழுத்தா. கார்யத்த விட வீர்யம் பெருசு. நூறு சூரியன்கள் வசிக்கும் அரை இரவுன்னு ஒரு நாவல். மொத்தம் நாற்பது பக்கம். குரோஷிய நாவல். கேள்விபட்டுருக்கீங்களா?"

லலிதாங்கியின் எஸ் எம் எஸ் வந்தவுடன் இளைஞர்களை சகிக்க முடியவில்லை. ஒரு கலைஞனின் படைப்பு தருணங்கள் பற்றி சுருக்கென்று சொல்ல ஆரம்பித்து, அது அந்த முண்டங்களுக்கு புரியாமல் போகவே எழுதணும் என்று புளுகி அவர்களை கழற்றி விட்ட பின்னர் காபி ஷாப்புக்கு வந்தான். என்ன கொடுமையடா சாமி லலிதாங்கியால் வர முடியவில்லையாம். அது கூட பரவாயில்லை. அந்த லூசு சாமிநாதனை அனுப்பி வைத்திருக்கிறாள். ஒரு வேளை இந்த கழிசடைக்கு மூடு வந்து பாருக்கு போலாமா என்று கேட்க கூடும். நாகூர் ஆண்டவர் புண்ணியத்தில் அது நடந்தால் மெக்சிகனின் கோழி அயிட்டத்தை சாப்பிட்டு விட வேண்டும்.

"என்ன டபிள்யூ டயர்டா இருக்கே ?"

"நாவல் வேல. "

"காலையில இருந்து ராத்ரி வர எழுதிகிட்டே இருப்பியா டபிள்யூ ?"

"வேற வழி"

"நீ இவ்ளோ கஷ்டப்படற ஆனா அதுக்கு வேண்டிய இன்கம் இதுல இருக்கா? "

" ஹா ஹா ... தமிழ்ல எழுத்துன்னு ஒரு பத்திரிக்க இருந்துச்சி. சி சு செல்லப்பா அத எப்படி தெரியுமா நடத்தினாரு ?" என்றவனுக்கு மேலும் பல பெயர்கள் ஞாபகம் வந்தன. ஜே ஜே வில் ஒரு வரிசை சொல்ல பட்டிருக்குமில்லையா? கலகக்காரன் என்று பேர் எடுத்த பிறகு சில பெயர்களை உச்சரிப்பதே கஷ்டம்.மேலும் இந்த சாமிநாதன் எல்லாம் ஒரு ஆளா?.

" ஹலோ டபிள்யூ"

"ஆ , ஆ , ஆ பண்ணா மாட்டியோன்னு பாத்தேன். சொல்லப் போனா, பரபரப்போட உன் போனுக்காக காத்துகிட்டிருந்தேன் லலிதாங்கி !"

"இப்ப கூட நான் ரொம்ப தற்செயலா தான் பண்ணேன் !"

"அது இருக்கட்டும். பொம்பளைங்க சொல்றத எல்லாம் நான் சீரியஸா எடுத்துக்கறதில்ல, ஹ , ஹ, ஹ, மெயில் பாத்தியா ?"

"படிச்சு முடிச்சு தான் இந்த காள் பண்ணேன்"

"நீ ஒரு லக்கான தேவத, ஒரு நாவலாசிரியன் ஒரு நாவல எழுதிகிட்டிருக்கான். ஒலகமே என்ன வருமோன்னு தத்தளிச்சிகிட்டிருக்கு. அந்த நாவல நீ தெனம் தெனம் ஹாயா உன் வீட்டுக்குள்ளேயே படிச்சிகிட்டிருக்கே"

"அது என்னன்னா எனக்கு நெறைய விஷயம் புரியல"

"இட்ஸ் ஓகே, அதனால என்ன?"

"அந்த நாட்டோட ராணுவ ஜென்ரலுக்கு இதயமே இல்லையே, பொம்பளைங்கள அப்படி எல்லாமா சித்ரவத பண்றது?"

"இருக்காங்க லலிதாங்கி. அப்படிபட்டவங்க கண்டிப்பா இருக்காங்க. ஒவ்வொரு பொண்ணையும் தட்டுல வச்சு தாங்கி, அவங்க மாரோட சாஞ்சு மூஞ்ச வெச்சுகிட்டு அவங்க இதய  துடிப்ப கேக்கற டபிள்யூ மாதிரியே எல்லோராலயும் இருக்க முடியுமா?"

"... .... ...."

"ஆங், இப்ப நீ என்ன பத்தி தான யோசிச்ச?"

"இல்ல"

"அப்புறம்?"

"அந்த ராணுவ ஜென்ரல் ஏன் அப்படி இருக்கான். அவன பாக்கணும் போல இருக்கு......"

"வாட்? "     

"உங்களுக்கு தெரியுமா அவர? எழுத்தாளர்கள் எல்லாம் யாரையாவது ரோல் மாடலா வச்சு தான் எழுதுவாங்கங்கற உண்ம எனக்கு தெரியும். அவர நான் மீட் பண்ணியே ஆகணும். சாமிநாதனுக்கு தெரியாம அரேஞ்ச் பண்றீங்களா?"

டபிள்யூ போனை தூக்கி போட்டு உடைத்து விடலாமா என்று நறநறத்தான். இவளெல்லாம் ஒரு மாதிரி காஜி கேஸ் தான். ஆனால் எதையும் புரியாத விளக்கெண்ணை மாதிரி இருக்கிறாளே, இல்லையென்றால் அப்படி பண்ணிக் கொள்கிறாளா?

" லலிதா, லல்லும்மா "

" சொல்லுங்க டபிள்யூ "

"கதையோட ஹீரோயின் ஹீரோவ கனவு கண்டு முழிச்சி படுக்கைல படுத்து இருந்துருக்கா. அத பத்தி லெட்டர் எழுதறா மாதிரி ஒரு பாசேஜ் எழுதியிருந்தேனே, படிச்சியா?"

"ம்"

"எப்டி இருந்திச்சு ?"

"புரியல"

"புரியலையா?" ச், ச், ச்,.... டீப்பா படிக்க வேண்டியது தானே? புரியலன்னா மறுபடியும் ட்ரை பண்ணி படிக்கறதில்லையா? ஒரு பொண்ணு வெட்டா இருக்கறதா கவித நடையில எழுதியிருக்கேன்" என்று ஆரம்பித்து விளக்கியது வெந்ததா வேகலையா என்று புரியவில்லை. சாமிநாதன் வேறு அதிகாரத்தில் இருக்கிறவன். உளறி வைப்பாளா. ஒரு கட்டத்தில் நிறுத்தி கொண்டு இணையத்துக்கு வந்தான். எவ்வளவு பிரச்சனைகள். ஈழத்து பிணக் குவியல்கள் போதாதா?

மனம் ஒன்றிலும் குவியவில்லை. ஏற்கனவே சமுக போராளி என்றெல்லாம் பெயர் வாங்கியாயிற்று. ஆறு மாதம் கழித்து ஒரு இஷ்யுவை எழுதி விட்டால் கூட போதும். தனக்கே தனகென்று எதையாவது செய்து கொள்ள வேண்டும் என்பது தான் பேய் போல உதைத்து கொண்டிருந்தது.

டபிள்யூ மெயிலை திறந்து ஒவ்வொருத்த்தனின் அசட்டு கடிதங்களை வெறித்து கொண்டிருந்த போது தான் நிர்மலாவின் பெயரை கவனித்தான். மனம் துள்ளியது. படைப்பு கணம் மேலேழுந்து வருகிறது.

"ஹாய், நான் எழுதற நாவல்லருந்து ஒரு பாசேஜ  மெயில்ல அனுப்பி வெச்சிருக்கேன். ஏதோ ஒரு வகைல நீ தான் ஏன் கவித நடைக்கு இன்ஸ்பிரஷன்னு வெச்சுக்கோ. படிச்சு பாத்துட்டு எப்டி இருக்குன்னு சொல்லு!"