Friday, June 29, 2012




வர்ணம் பூசவில்லை
இலக்கம் எழுதவில்லை
முக்கியமாய் பெயர் பலகை
மீசை முறுக்கவில்லை

யாரும் வழி சொல்லி விட முடியாத
இடத்தில்
இவ்வீட்டை சாத்திக் கொண்டு
திறக்க சாத்தியமுள்ள கதவை
திரும்பிப் பாராமல்
நீவந்து கதவை திறப்பாய்
என்று காத்திருக்கிறேன்

ஏன் என்றால்
நுழைய வேண்டியிருப்பது
உனக்குள்ளே
நான்.



நீங்கள்
விளிம்பில் தானே நிற்கிறீர்கள்

நீங்கள் என்றால் அது நானில்லை
உங்களுக்குள் வெள்ளம் முட்டும்போது
நான் கரையுடைவதில்லை
எனக்கு கிடைக்கும் பருக்கைகளை
நீங்கள் கணக்கிடுவதுண்டா
என்று திடுக்கிடுவதும்
வழக்கம்

என்றாலும்
உங்களுக்கு உதவி செய்ய
அவா.

அல்லது
ஒழித்து கட்ட
வெறி

ஏனென்றால்
விளிம்பில் தானே நிற்கிறீர்கள்
பத்தாததுக்கு
விறைத்துக் கொண்டும் நிற்கிறீர்கள்

Thursday, June 28, 2012




நீயும் நானும் துண்டு வானங்களை பார்த்து
கம்பிகளை கடித்து கலகம் பண்ணி வைக்கிறோம்

தாண்டிக் குதிக்க முடியாத சட்டகங்கள் பற்றி
நமக்கு தெரியாதா என்ன

என்றாலும்

சொல்லில் சிக்கிய பூ ஜடமாயிருந்தும்
சொல்ல தூண்டும் ஒரு சின்ன புள்ளியை
நிறைத்திருக்கிறது
காயம் பட்ட புழுவின் வலி

ஏன் நான் உன் மார்பில் புதையக் கூடாது?



தும்பியின் வாலில்
நூலை கட்டி
காத்தாடியாக்கி விளையாடி இருப்போம்
அப்ப

கடவுளுக்கு எதிராக விளையாடாதே
என்றிருப்பார்கள் நம் அம்மாக்கள்

இல்லை

நாம்
கடவுளுக்கு எதிராக விளையாடவில்லை
கடவுளைப் போல விளையாடுகிறோம்.   



என்ன
பார்க்கிறாய்

நான் தான்
நானே தான்

மாறியிருக்கிறேன்
இல்லை?

என்ன செய்வது
என்னை கைவிட்டுவிட்டு
உன்னில் தொற்றிக் கொண்டிருந்தேன்
விதைக்காமல் விளைவிக்காமல் அறுக்காமல்
நின்றிருந்ததில் வந்த பசியின்
களைப்பு

நஷ்டப்பட்டாலும் நஷ்டமில்லை
நன்றாய் இரு, போ !



என்ன
புகார்

வாழ்க்கை
சில சந்தர்ப்பங்கள்
கொடுத்து பார்க்குமாம்
கேட்டுக் கொள்

காலம் ஒரு முகம் புனைந்து
கடுகடுக்கையில்
நீ மனிதர்கள் பற்றி
அறிந்து கொள்கிறாய்
ஹா ஹா ஹா

நம்பிக்கைகள் என்றால்
அடி அதன் மீது தான் விழும்
சரியா
அப்புறம் வலியை பற்றி பிதற்றாதே

வளர்கிறாய்
என்று விடுவோம்.
 

Saturday, June 23, 2012







தாழிடப்பட்ட
அறை

அடைந்து கொண்ட
கண்கள்

செவிகளின் உள்ளே
கோடி மைல்களுக்கு அப்பால்
அலைகள்
கடல் அலைகள், ஓங்கிஎழுந்து
பதறி பதறி
தன் நெஞ்சை கொண்டு பாறையில்
மோதி பிளக்கும்
அலைகள்

யாராவது வரக் கூடும்
என்னவென்று கேட்கக் கூடும்

பாய் விரித்து தலையணை வைத்து
படு மரியாதையாய் என்கிறேன்......

 



உணர்வு..!


ஒரு கோப்பையில் கரைந்து போகுமென்றால்
நினைவுகள் இரக்கமுள்ளவை
லஹரி நெம்புமொருஉறக்கத்தில் மறந்து போகுமென்றால்
அவை அடக்கமுள்ளவை
எரியும் குடல்களின் இழுவையில்
செரித்து கழிவாகுமென்றால்
சுலபமானவை

ஹே......

அப்படியா

பசிக்கு உணவு
கால்களுக்கு பக்கத்தில்
இருக்கை
எப்போதும்
தலை வருடி தந்து
நான் என்னையே வளர்த்துக் கொண்டது
அல்லவா?

உன்னை துரத்தினால்
நான் காணாமற் போவேன்......
 

Friday, June 22, 2012

இன்று வானிலை எப்படி

காலையில் கிடைத்தது பரோட்டா தான்
வயிறு சரியில்லை

வீடு கிடைக்குமா
ராசியில் கோளாறு







கமலா சௌக்கியமா
விமலா சௌக்கியமா
இவங்க ரெண்டு பேர தெரியலேன்னா
அமலா சௌக்கியமா

ட்வல் பி வராது
இருவத்து மூணு சீ போவாது
மஞ்சு வழுக்கி விழுந்தது
தீம் பார்க்குல தானே

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ஒண்ணும் ஒண்ணும்
பதினொண்ணு
பதிநோண்ணும் பதிநோண்ணும்
ஆயிரத்தி நூத்தி பதினொண்ணா

போயிட்டு வரேன்
வர்ற அப்பவாவது சொல்ல முடியுமா
பாக்கணும்  

 



எல்லாரும்
மூடிகிட்டு தான் போறாங்க
அமைதின்னு சொல்லிட முடியுமா
அத
அப்ப அப்ப அங்க அங்க
கூட்டம் கூடிடற மாதிரி தான் இருக்கு
புரட்சி ன்னு தான்
புல்லரிச்சுக்க முடியுமா

இருந்தாலும்
எழும் சிறு பொறி மிகப் பெருந் தீயாய் ன்னு சொல்றது
அறிவியல் மாதிரி
படலே?


ஒரு
பயணம் தானே எல்லாம்

ஒற்றையாவோ
ஊரையே கூட்டிக்கொண்டோ 

புத்தன்
என்ன கொண்டு போயிருப்பான்
என்று தெரியாவிடினும்
தங்கத்தை அள்ளி வரப் போனவர்கள்
என்ன வைத்துக் கொண்டு
இருந்திருப்பார்கள் என்பது நமக்கு தெரியும்.

கருவிகளின் முகம் மாறியிருக்கலாம்
கணக்கில் இருப்பது தானே
எல்லாம்?


பசி
புரியாது

சிரிச்சுட்டு
நகர்ந்து விடலாம்

ஆத்மா நஷ்டபடுவதை
சொல்ல முயன்றான்
ரித் விக்

வாழ ஆசையை இருக்கிறது
என வீறிட்ட குரல்
யாருக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறது
இப்போதும்?

Thursday, June 21, 2012




எனது சிறகுகள்
ஒய்வு காணும் வரை
உன் வானை எங்கனம்
குடை மடக்க முடியும்
எனினும் 
ஒரு மிடறு தீயை
விழுங்கி முடிப்பதற்குள்
திரும்பி வா...



உன்
விழிகளுக்குள் எட்டி பார்த்து
வீழ்ந்த பின் அறிந்தேன்
பறந்து கொண்டிருக்கிறேன்
என்று -
உன்னுள்
விரியுமொரு
வானை அறியாமல்
எங்கே விடை கொடுக்கிறாய்?

Sunday, June 17, 2012




திரைக்கதை


புழங்கு மொழியில்
சிறிய பொறி தான்
அது

பற்றியெரியும் வனமென
துவங்கும்

தானே தன்னை கைவிட்ட முட்டுசந்தில்
பிரும்மாண்டமான சாலைகளை பரப்பி பார்த்து
உடல் குறுக்கி நடக்கக்கூடும்
தேய்மானம் போன
ஒற்றையடிப்பாதையில்

யோசித்து பாரேன்
இப்போது துடித்து தெறித்து
யாருமறியா இருளில் பறிக்கிற
சினை முட்டையை

கருவில் இருந்துகொண்டு
கதையை
கதையில் இருந்து கொண்டு
முகங்களை
முகங்களில் இருந்துகொண்டு
வாழ்வை அறி

சொல்.



தந்தையர் தினம் என்று ஒரு தினமாம்
கேட்டுக் கொள்
அதாகப்பட்டது உனக்கென்று
ஒரு நாள்
நீ விதைத்து முளைக்க வைத்த ஓன்று  
பசியும் தாகமுமாய்
உனது
குருதியை குடித்து
தசையை தின்று முடிக்கிறது அல்லவா,
தீர்க்க முடியாத அந்த
குற்றவுணர்ச்சி
தானும் விதைக்க வேண்டி இருக்கிறபடியால்
அண்ணாந்து வானில் நிலை கொள்ள வேண்டிய
பீதி
அர்த்தமறியா வாழ்வின் அநீதி முன்
மண்டியிடுகிற
மலடு
ம்ம்ம் என்ன சொல்லி என்ன
இனிமேல் தினங்கள் இல்லாமல் நம்மை  நாம்
ஏமாற்றி கொள்ள முடியாது.

Wednesday, June 13, 2012




புலன்களை
திற

பொசிஷன்
எடு

டைலாக்
மனப்பாடமா

ஒவ்வொரு பிரேமும் பைசாவாவற
இந்த பிரம்மாண்டத்தில்
சகநடிகர்களின் பாத்திரங்களை
முறி

மேடைகள் முக்கியம்
கைதட்டல்கள் முக்கியம்
இருக்கைகளை பிடுங்க
இருள் சந்துகளுக்குள்
ஆத்மாவை
கூட்டிக்கொடு

விரட்டி விரட்டி விரட்டி
எங்கும் மிச்சம் வைத்து விடாமல்
துரத்தி அடி
உன்னை

பீடத்தில் இருந்து
பிணமாய் சிரித்திருந்து
இன்னொரு முறை
சாவு

இப்ப
ஒரு வழியா
ஸ்க்ரீன்ல
தி எண்ட் ...!



நாடு சுற்றி நகர் சுற்றி
நகரின் சந்து பொந்துகள்
எல்லாம் சுற்றி
மீன் விழி மான் நடை
தேன் மொழி
சகலம் பயின்று சலித்து
நட்டுகுத்தின கண்களுக்கு
வெற்று வான்

தூக்கம் வருகிறதா
தூங்கிக் கொள்கிறாயா
யாரோ யாரையோ
கேட்கிறார்கள்

என்னை தான் என்றால்
எப்படி கண்டறியலாம்
லட்சம் அடிதடியில்
இவ்வாஞ்சையின்
விளியை

முதலில் இருந்து துவங்கு
என்கிறான் .
  

Tuesday, June 12, 2012

விசேஷம் எதுவும் இல்லை




ஒரு காவியத்திலும்
நமக்கு கிடையாது
இடம்

சந்தடி சாக்கில்
யாருக்காவது சொன்னால்
அவர்களுக்கு கொட்டாவி வரும்

ஏய்ய்
உலகத்துக்கு ஆயிரம் கவலை தெரியுமா

இருந்தாலும் ஒரு விஷயம்,
இந்த இரவில் இந்த தனிமையில்
பிராணன் கனக்கிற
இந்த தீ நொடியில்
நீயும் இந்த விண்மீனை பார்க்கிறாய் என்றால்

சொல்லு இவ்வாழ்வை விட
வேறென்ன விசேஷம்?



தீராத விளையாட்டு பிள்ளைகள்
நாம்

தீர்வதில்லை அவா
திசைகள் நான்கும்
பற்றி எரிந்தால்
கூட

தீமையை தித்திப்பாய்
சப்பு கொட்டுகிறது
வாழ்வின்
நாவு

குழந்தைகளும்
பெண்களும்
சாகாத தினசரியில்
கொட்டாவி முட்டுகிறது

குத்துப்பட்ட நண்பனின்
அவல முகமோ
கலைக்கப்படுகிற மனைவியின் கண்ணீரோ
வேணும்

அந்தமற்ற பெரு வெளியில்
கடைவிரித்த நறுவிருந்தாய்
இன சாவு மத சாவு
போதாது என்று இன்னும் எவ்வளவு
போர்ப்பரணி

வெளிப்படாத மிருகம்
விழுங்கும் குருதியெல்லாம்
விளையாட்டுப் பிள்ளைகளின்
ஊட்டமென்றான பின்

லூசு
காத்துல இருந்து
எப்படிடா
மலர பறிப்பே

அதுவும் தேவ மலர ?

Sunday, June 10, 2012





சிரஞ்சீவி  சார்.....


எப்படி இருக்கிறாய் 
என்றா  கேட்டாய் 

இப்போது இருக்கிறேன்  என்பது 
எப்படி இருக்கிறேன் என்பதை  விடவும்  முக்கியம் 

கல்வாரி  மலையெங்கும் 
கருகி  இருள் படர்ந்து 
உறுதியின்  கடைசி விண்மீன் 
அணையும்போது
என், தேவனே  ஏன் எம்மை கைவிட்டீர்  என
காற்றிலொரு முணுமுணுப்பு கரைந்திற்று
அல்லவா 
அப்போது  கூட  இருந்திருப்பேன் என தோன்றுகிறது.

ஆயிரம்  வருஷங்களுக்கு அப்புறமும்
இருப்பேன் 

எப்போதும் இருக்கிறவனிடம் 
எப்படி இருக்கிறாய் என்று மட்டும் 
கேட்டு விடக்கூடாது.  

Saturday, June 9, 2012




நசித்து போனதாய்
அடங்கிய எந்தை
கண்ணுக்குள் வைத்து
காக்க ஆகாமல்
பிதுங்கிய அம்மா

செத்தையும் சொத்தையுமாய்
பத்தாயிரம் கூட்டம்

எங்கோ ஹிமாலய அடிவாரத்தில்
பெயரறியா பூவாயிருந்து
குளிரில் நீராடி
ஏதோ சாலை விபச்சாரியின்
யோனியாயிருந்து
வெள்ளைப்படுகிறேன்

ஏய், வெண்ண
உனக்கு தெரியுமா

இனி என்றோ பிறக்க போகிற
குழந்தையின் வீரிடலில் இருக்கும்
என் பசி

Thursday, June 7, 2012






comes with the wind



எத்தனை மகத்தானவள்
நீ
என்பதை உனக்கே
சொல்ல வேணும்

சிருஷ்டிக்க போகிற
காவியம் உன்னை பற்றியது
என்பதையும்

அலைகள் வந்து மோத
துல்லிய நிலவொளியில்
ஜென்னியை பற்றி

சலவை கல்லில் மினுங்கும்
ஷாஜகானின்
கண்ணீர் துளிகள்
பற்றி

அன்னா தஸ்தவேஸ்கியின் 
காதல் பற்றி

சாலமன் மீன்களை பற்றி

இன்னும்! இன்னும்!

தொட்டியில் விட்ட
ரெட்டை மீன்களாட்டம்
மனசு ரெண்டும்
மீட் ஆகி விட்டால்
ஓரிரு முத்தமோ
கொஞ்சம் கண்ணீரோ
அதற்கு பின்னர்
வேறு வழியின்றி
கேட்க வேண்டியிருக்கிறது
நரைத்த ஜீன்ஸில் ,
மொட்டையடித்துக்கொண்டு,
சிகப்பாய்

யார் அவன்?

நற நற நற நற நற  

Tuesday, June 5, 2012




கண்ணுள்
நீ எழுதி கொண்ட கவிதையை
காற்றை வருடி
தெளிந்த பிறகு
மண்ணில் இறக்கி வைத்தால்
மற்றவர்கள் கேட்பர் என்று
விண்ணில் செலுத்தி விட்டேன்
என் கவிதையை
ஏந்தி சென்ற காற்று
எட்டி விட்டதா
உன்னை

அட,போடா
டுபுக்குங்கறியா

சரி இந்த கவிதையை
வேற யாருக்காவது குடுத்து பாக்கறேன்.



வெடி வைத்து பிளந்தால்
பாறைக்கு வலியில்லை
யாருக்கு தெரியும்

ஒளி கொண்டு புகுந்தால்
இருளுக்கு வலியில்லை
யாருக்கு தெரியும்

பிசையப்படும்போது
மண்ணுக்கு வலியில்லை
யாருக்கு தெரியும்

விருட்சத்தை வைத்திருந்தாலும்
விதைக்கு வலியில்லை என்று பம்மாத்திவிட்டு
வலிகளை பார்த்தால் வாழ்க்கையே இல்லை
ஒர்ரே போடு. 

Monday, June 4, 2012




நீ எப்படி சகிக்கிறாய் என்பதை
சொல்லி கொடு

வசந்தங்களும்
இலையுதிர் காலங்களும் கடக்க
நூற்றாண்டுகள் தாண்டி நீ
எப்படி இப்படி காத்து கொண்டிருக்கிறாய்

மனுஷ்ய இரைச்சல்களும் , தொழுகைகளும்,
கண்மூடிதனங்களும் முடிந்து
நீ நிசப்தயாய் ஆகும்போது
ஜீவவெறியுடன் முணுமுணுக்கிற கானகத்தை
அளவற்ற காதலுடன் நுரைத்து ததும்பி ஓடும் பம்பை ஆற்றின் சலசலப்பை
புணரும் பட்சிகளின் சிறகோசைகளை
எப்படி சகிக்கிறாய்

மேனியை கருங்கல்லாக்கி உறைந்த போதும்
பவுர்ணமிக்கால நிலவொளி ஒரு மயிலிறகாகி வருடும்போது
சிலிர்த்துக்கொள்வது இல்லையா, குறைந்தபட்ஷம்
மனசு

இளைப்பாறுவதற்கு ஒரு நிழல் சோலை வளர்த்து
நெஞ்சுக்குள் வைத்து காப்பாற்றி
ஓய்வெடுக்க வராத ஒரு ஆளின் நிழலுக்கு காத்திருக்கும் போது
உன் யவ்வனத்தை அரித்துக்கொண்டிருக்கிறது
காலம்

தேங்காய் உருட்டி
சாஷ்டாங்கமாய் விழுந்து எழுந்து
இயலாமையை தலையில் சுமந்து
திரும்பி செல்கிறது மானிடம்

மனமெரிய ஒரு பாமரன் கேட்கிறேன்
எப்படி

எப்படி சகிப்பது எல்லாவற்றையும் என்று
சொல்லிக்கொடு   

muthumai...



நான் ஒரு தீர்கதரிசி

வேண்டும் என்று போயிருந்தால்
இந்நேரம் நொறுங்கியிருப்பேன்

நான் ஒரு புத்திசாலி

இப்படித்தான் என்று தெரியாதிருந்தால்
இந்நேரம் என்னை
முடித்துக்கொண்டிருப்பேன்

நான் ஒரு அகங்காரி

மண்டியிட்டு கெஞ்சியிருந்தாலும்
கொடுக்கப்பட முடியாதவைகளை
பெற்றிருக்க முடியாது

இறுதியாக
நான் ஒரு தீவு

என்னில் ஒதுங்குபவர்களும்
தனியாக்கப்படுவார்கள்.

Saturday, June 2, 2012





எழுதப்பட்டிருந்ததா
இது முன்னரே
இக்கணம் கனவில்
உணரப்பட்டிருந்ததா

எந்த புள்ளியில்
துவங்கும் ஒரு
தினம்
எந்த தினத்தில்
நீ உன்னை
அறிந்தாய்

களிப்பில் மிதந்த போது
புதிரின் முதல் சொட்டாய்
காதலை சப்பு கொட்டிய போது
கண்ணீரில் பிசுபிசுத்த
யாரோ ஒருவனின்
கரங்களை பற்றும் போது
கடவுளில் வியக்கும் போது
திடுக்கிடுகிறோம்

யார் நமக்கு முன்
எல்லாம் தெரிந்து வந்து
நமக்குள்
இருந்து கொள்வது

ஏழு கடல்
ஏற முடியாத
எழுபது மலைகள் தாண்டி
எங்கள் உயிர்க்கிளி
கிறக்கத்தில்
இருப்பது எங்கே

உண்மை
வெறும் வார்த்தை இல்லை
இந்த கணத்தை இந்த கனவை
சிருஷ்டித்து
இதை நீ தான் எழுதி கொண்டு இருக்கிறாய்

எத்தனை அநீதி,
எம் வாழ்வை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.