Saturday, November 9, 2013






ஆம்
அவன் வாயில் இருந்து என்ன வார்த்தை விழும்
அவனது கரங்கள் எந்த ஆயுதத்தை எடுத்துக் கொள்ளும்
ஆயிரம் ஆண்டுகள் கொண்டு நடந்த
பளிங்கு
எப்போது கை நழுவி விழும்
எதையும் சொல்லி விட முடியாது
பார்த்தாயா
அவனது பாத விளிம்புகளுடன்
தொடர்ந்து நடக்கிறது அந்த பள்ளத்தாக்கு
அவனை அள்ளி மூடும் ஒரு தினத்துடன்

இந்த நாளில்
யாரை யார் நம்பிக் கொண்டிருப்பது

எனினும் மொக்காய் இருப்பது விரிகையில் வாழ்வு. 

Saturday, October 26, 2013












பாலையோ
அடர் வனம் தானோ
பசித்தும் புசித்தும்
உறங்கியும் உறுமியும்
வண்ணக் கனவுகளில்
இசைவது யாருடனோ
விண்மீனோடு ஒருவர் உரையாடும் போது
இறங்கிக் கொண்டிருக்கலாம் மற்றொருவர்
பாதாளத்தில்
பட்டன் கட்டலாம்
பாட்டு பாடலாம் 
பருப்பு சமைக்கலாம்
பருப்பாய் ஒலாத்தலாம்
ஓய்வில்
ஒரு முகம் ஜொலிக்க
ஒரு கவிதை எழுத முயலும் போது 
என் கண்ணம்மா
அது இப்படி.

Tuesday, September 10, 2013

எத்தினி கரணம்
எத்தினி தொழுக
மி மீ விட்டு வைக்காம
எங்கயும் விரிஞ்ச மானம் பூரா
சந்தோஷத்த ஒவ்வொருத்தன்
பாத்தீன்னா பந்து தட்டறான் மாமு
அப்பன்னா இங்க பாரு
எலும்ப வளைச்சு குனிஞ்சு எழுந்து
இன்னா மாதிரி ஒரு
மோடி வித்த
மண்டி போட்டு அவிஞ்ச கண்ணுக்கு கீழ
வெந்து பொகயிற இளிப்பென்ன  இளிப்பு  
கவித வருமான்னு
கட்டு சோத்த கட்டாம விட்ட
ஆயிரம் பேரும்
எத்தினி காலம் எத்தினி காலம்
எத்தினி காலம்
துண்ணுவான்
தீ?      

Thursday, June 13, 2013





புத்தி வளந்த பிள்ள மாதிரி
நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள
வேண்டியதாயிற்று
எல்லோரையம் போல
என்றாலும்
புரு புருவென
வலி துளைக்கும் சந்தில்
நேற்றைய வெண்திரை அசைந்தால்
வெறுக்கிறாய் மறுக்கிறாய்
பூவென அசட்டையாய் சுழியும்
கீழுதட்டின் மறைவில்
அழைக்கிறாய்
கண் மூடியுண்ட கள்ளின் முள்
தொண்டையில் குத்த
பொறுக்கியது
கோடி சொற்கள்
ஏறி இறங்கின மலைமுகடு
இருளில் கொதித்த மழைக்காடு
பாடித் தீராத பாடல்களோடு சேர்ந்த
கண்ணீ ரோடிக் கலந்த
பெருங்கடல்

யாரும் காண வேண்டியிராத காட்சிகள்
எல்லோருக்கும் தனித்தனியாய்
என்று முடிப்பது ஒரு
எது?

Monday, June 10, 2013

புரசவாக்கம்
சூப்பர் ஸ்டைல் கட சீட்டில்
சவரம் முடிவதற்குள்
வந்த அந்த கனவு தானென்ன
வென
குடையும் போது
நண்பர்களை விலகி
என்ன
குடலில் துவர்க்கும் விஸ்கி
விழிப்பை செருகி
வலியாலொரு இரவை
அடித்து கம்பி நீட்டிய மலை விளிம்பில்
டால்ஸ்டாய் போலொரு ஆள்
அல்லது
மொபிஸ்டோவின்
துணை நடிகன்
என்னவோ என்னை விட்டு
எனக்கு விசிறி வீசுபவனிடம்
ஒரு சூத்திரத்தை மந்திரம் முழங்கி
போனது தான்
ஏன்
ராஜகுமாரா
சாம்பியன் டேனி
ஆனா கவுனி போ . ஸ்டேஷன் ல
வலச வரும்
பாருண்ணி சேட்டா
நான் யாருன்னு சொல்லுங்கன்னு
போவும்போது
ஒத்த வார்த்த மிஸ்சாயி நவுந்து
தொடக்கமிலாம தொடர முடியாம
இன்னும் ஒரு கவித எழுதலே
ஏலேலங்கிளியே

Thursday, June 6, 2013





என்ன இப்போ

முன்ன
பத்து தெரு தள்ளி

காலத்துக்கு
என்ன செல்லுபடியோ
அந்த வேஷத்துல
இருந்துருப்பேன்

என்னாலே
கண்டு பிடிக்க முடியலே
பல பேர
தப்பில்லே
தல மறவாயிட்ட என்னையும்
பல பேராலே
கண்டு பிடிக்க முடியாது

நான் பச்ச
அதோ மஞ்சா
ப்ளோரசெண்டு ஊதாலே ஆடறவன்
ஒன்ஸ் அபான் எ டைம்
என்ன மாதிரி
செகப்புல
டப்பாங்குத்தியிருக்கலாம்

எப்பிடியோ போவுது
மண்ணுல இருந்துக்க
மனுஷ புத்திரன்களுக்கு
ஆயிரம்
அடவு
சொல்ல வந்தது என்னன்னா
நெஞ்சுள்ள சொருவி வச்ச
ஒரு கத்தி மட்டும்
எப்பவும் எப்பவும் எப்பவும்
எப்பெப்பவும்

ங்கோத்தா
நீ.   

 

Tuesday, June 4, 2013






அத்தனை
களிப்பாண்டங்களும்
சலித்துப் போக வேண்டும்
பொன்னுலகில் ஊஞ்சலாடும்
உறக்கக் குழந்தையின்
சலிக்காத தாய் முலையாய்
எப்படி ஆகலாம்
நீ

உதிர்ந்தால் காய்ந்து போகும்
ஒரு அற்ப வாழ்வை புரட்டி பார்த்தவாறு
பாவம் பாவம் இந்த 
பாமரம்.

Friday, May 24, 2013







திடுக்கிடுகிறேன்,
நனைவது மட்டும் தான் நானோ?


எந்தக் காலத்திலும் நான் என்னை நனைத்துக் கொள்ளும் ஒரு கவிதை. ஒரு அனுபவமாகி கொள்வது.



மின்னி முழங்கி
பொழிந்தாற்றான் பொழிவா
பொழிந்த பெருமழைக்கு பின்னால்
மெல்லக்
காத்திருந்து எழுமே ஓர்
பேர் மௌனப்பெருக்கு

அடைமழைக்குப் பின் முளைக்கும்
கதிவிரிக்காலையில்
வழியுமே
ஓர் எல்லையற்ற பேரமைதி

கழுவி துடைத்த வானின்
நஷத்திர விழிகள்
சொரியுமே
ஒரு ஸ்ருதிச் சுத்தம்

புலன்கள் உறைந்து போக
இவற்றின்
பொழிவில் நனைந்திலையா

இலையுதிர்த்த நெடுமரமாய்
ஏகப்பெருவெளியின்
சங்கீதம் குளித்திலையா ?

-சு. வில்வரத்தினம்.

Saturday, May 11, 2013






எழுத நினைத்து
எழுதத் துவங்கி
எழுதியவாறிருப்பது
வேறு
என்னவெனில்
எழுதாமலிருக்கும் போது
எவருமறியாமல் போகுமென்று
அறிந்து
எழுதிக் கொண்டாவதிருப்பது
முக்கியம்
சரி அதைக் கொஞ்சம் காட்டு
என்ன தான் எழுதி இருக்கிறாய்?




இரவின் தாழி
உருண்டு
கனவின் கடைசி சுவரில்
முட்டித் திறந்த போது
புன்னகையை மூடிக் கொண்டு
நின்ற நீ
கட்டி போடப் பட்டிருந்த
வலியை
அவிழ்த்து விடுகிறாய்
அது என்னை ஆயுள் முழுக்க
நக்கி கொண்டு நடக்க.

Friday, May 10, 2013




எந்தக் காரணமும் இல்லை
என்றான்
அதிகாலை பிறந்து வருகிறதா இல்லையா
என்றான்
அது போல தான் எல்லாம்
என்றான்
வங்கி வேலையை முடித்து விட்டு
நான் லாஜிக்கை தேடிக் கொண்டிருக்கிறேன்
அவன் புலிப்பால் குடித்துக் கொண்டிருக்கிறான்

Tuesday, May 7, 2013




யோசித்துப் பார்த்தால்
நல்ல விஷயங்கள் தான்
எதுவும்
தட்டுத் தடுமாறி
தத்தம் சுருதி பிசகி
பசித்தும்
புசித்தும்
பச்சையை நேரிட்டு
பகலிரவை பங்கிட்டு
குத்தியும் குலாவியும்
ரத்தமும் ரத்தினமுமாய்
சேர்ந்த பொக்கிஷம்
இருக்கிறது
என்னிடமும் உன்னிடமும்
கொஞ்ச கொஞ்சம்
என்றால்

Wednesday, April 17, 2013




கத்தி எடுக்கலாம்
கன்னக்கோலிடலாம்
கற்பிழக்கவோ கற்பழிக்கவோ
செய்யலாம்
காருக்கடியில் விழலாம்
காரை ஏற்றி கொல்லலாம்
எனக்கென்னவோ
புத்தனாவதும்
மிமீ தூரத்தில் தான்
இருக்கிறது
ஆயின்
ஏதோ ஓன்று ஆவதற்கு
எதுவாகாமல் இளிக்கிறேன்
பார்

இப்போது
பிழைத்துப் போக
சௌகர்யமாயிருக்கிறது. 


  

Friday, March 1, 2013

மூச்சு
முட்டுகிறது

சடலம் அல்ல என்று
கரடி கண்டுபிடித்து விடுமா
என்பதைக் காட்டிலும்
மரத்தில் ஏறிக்கொண்டவனின்
சாமர்த்தியம் தான்
உள்ளில் இப்ப
வீசும்
காற்று.

சைக்கிள் ஒட்டவும்
நீச்சலடிக்கவும்
கரடி போகிற வரை
மரத்தில் ஏறி அமர்ந்து கொள்ளவும்
நீயாவது கத்துக்கடா
மகனே.

 

Thursday, February 7, 2013




குறுநில மன்னர்களா
 துணை நடிகர்களா
தெரியவில்லை
 வாள்  வாள் என்று
கத்துகிறார்களா
வாள்  சுழற்றுகிறார்களா
தெரியவில்லை
லட்சியம் கண்களில் நின்றெரிய
விரிந்த தோள்களும்
கருணை புன்னகையுமாய்
சற்றேறக்குறைய
ஒரு புனிதனை விட
கன கம்பீரத்துடன்
வீழ்ந்து விடுகின்ற எவன் மீதும்
மிதித்து நடந்து
அக்கரைக்கு அரண்மனைக்கு
சென்றவாறிருக்கிறது
அநீதி.

நாடகம் சரி
நம்ம ரோலு வெளங்கலையே .

Tuesday, February 5, 2013

எவனயாச்சும் போட்டுக் குடுக்க
கக்கூஸ் உள்ள உக்காந்து எழுதற
மொட்டக் கடுதாசி இல்லன்னு தெரியும்
நல்லா.

மடயனுங்க நாலு பேர கூட வச்சுக்கிட்டு
கும்மாளி போடலாம்
மந்திரத்த புடிக்க முடியலன்னா அங்க
பூ மணக்கறது எப்டி  புலியுறுமறது
எப்டி

கந்து வட்டிக்காரன் மாதிரி
சந்து பூந்து சந்து வந்து
ஆள் தேடி அடையாளம் தேடி
 அதிகாரத்தை தேன் சப்பி
ஊர் கூட்டி தேர இழுத்துட்டா
போஸ்டர்ல பேரு ,லவடா
பொங்கற மாதிரி ஒரு வரி
எங்க

ஜனங்கூடுற சந்தையில
வண்டி நிறையக் கொண்டாந்து
எறக்கி அவ்க்குற கதைய
எல்லாரும் பாக்கலாம் தான்
எங்க அந்த ஒரு சொட்டு
தண்ணி

ஊரையே எரிச்சு போடறா மாதிரி
ஒரு துளி நெருப்பு?










Monday, January 7, 2013

ஓன்று இரண்டாகி
இரண்டு இருபத்தி ரெண்டாகி
ஒரு மண்டலம் அமர்ந்து பேசியது
கண்ணீரை இழிவுபடுத்துவது
தானென்றால்
ஒரு நாள் அந்த உப்பு
ஒவ்வொரு நெஞ்சிலும் தனித் தனியே
கரிக்கும்.

ஐயோ, செல்வத்தை தேய்க்கும் படை
என்றல்லவா சொல்லியிருக்கிறான்?

Sunday, January 6, 2013




ஆம்

இருக்கிறேன்

சடுதி சந்தடி சச்சரவு
நச்சரிப்பு
தெரியாதா, பற்றியெரியும்
வீட்டை அணைத்துக் கொண்டே
இருப்பதல்லவா
வாழ்வு
யார் வந்தார் யார் போனார்
எதற்கும் நேரமில்லை
கசப்பின் வெறுப்பு
சுற்றிச் சூழும் நச்சு வெளியில்
இந்த வாள் சுழற்றல்களுக்கிடையே
நீ ஏதாவது சொன்னாயா
கனவு போலிருக்கிறது ,
சொன்னாயா?

குருதி படியாதிருந்தால்
ஆத்மாவை எடுத்துக் கொண்டு
அப்புல்வெளிக்கு
வந்து சேருகிறேன்.

நீ எங்கிருந்து
மூட்டை கட்டிக் கொண்டிருக்கிறாய்?

Tuesday, January 1, 2013

வைத்த பொருளை
மறப்பது போல
வாய்த்த பொக்கிஷம்
வந்து சேராதது
போல
கண்கள் திறந்திருக்கையில்
கண்ணாமூச்சி குறுகுறுப்பினும்
நீண்டு செல்கிறது
வெறுமொரு மதுரக்கனவு
மற்றும் ஒரு யுகத்துக்கு.
நீ யாரோவாக
இருக்க பிதுங்கி
எல்லாமுமாக நிரம்பி வழிவதில்
வினோதம் என்ன,
சும்மான்னாச்சும்
முழி தெரண்டு திடுக்கிடும் நீ தான்
என்றோ
நான் கருவில் சல்லாபித்து சம்பாஷித்து
தலை கோதிய
சிசு
வலிக்கும் வரிகளின் மணற்பரப்பில்
காத்திருந்தும்
காத்து வாங்கியும்
குட்டிகரணமிடுகிறது
யம்மம்மா பாவம் இந்த சினிக்கல்
லவ்வு.