Tuesday, October 28, 2014


சொல்லு
நதி எனில் இக்கரை அக்கரை
இங்கே சலிப்பு அங்கே சூன்யம்
சுழித்தோடும்
உயிர்ப்பின் அலைகளுக்கிடையே
என்னால் இதை கேட்டு விட முடிகிறது
சொல்லு
நமக்கு தெரியும்
வேடிக்கை பார்ப்பது போலிருந்தாலும்
அவற்றின் கவனம், அடைபடாத விழிகள்
புன்முறுவலிக்கும் அதன் சடங்குகள்
அதனால் கட்டி எழுப்ப முடியக் கூடிய
நரகம்
தட்டில் வைத்து ஊட்டித் தரும் ஒரு சாவு
உலகு பற்றி அனைவரும் அறிவார்கள்
நம்மைப் போல் பங்கு பெறுவதால்
சொல்லு
நான் இப்படி என்று சொன்ன பிறகு
சொன்னால் போதும்
நீ யார் என்று
உன் உள்ளில் என்ன
ஒருவரும் பார்த்திருக்க ஆகாத
அந்த ரத்தினம் பற்றி எரியட்டும் என் விழிகளில்.
சொல்லு.

Thursday, August 28, 2014









மண் கீறி
மூக்கு நீட்டும் குருத்தின்
கவனம் எங்கோ
நெடுந்தூரம்
விட்டம் தொட
ஸ்டூல் ஏறின குழந்தை
முன்னம் ஒரு முறை விழுந்தது தான்
மூத்திரம் எப்படி வருகிறது
அக்கா ஏன் பாவாடையைக் கட்டிக் குளிக்கிறாள்
காதல் கடித்ததில் என்ன மிஸ்டேக்
கல்யாணத்துக்கு அப்புறம்
கர்ப்பத்துக்கு அப்புறம்
கருந்துளைக்கு அப்புறம்
காலம் தாண்டி பறக்க முடிவதற்கு அப்புறம்
கடவுளைத் தீண்டும் விரல்
முளைத்ததற்கு அப்புறமும்
இருக்குமில்லையா
இவ்வாழ்வு.
எனினும்
நாளை விடிந்த உடன் கட்ட வேண்டியது
மீட்டர் வட்டி.

Saturday, March 22, 2014








எங்கே
மோதி
உடைப்பது

சுக்கு நூறாய்
நொறுங்குவது எங்கனம்

அல்லது
தெருவில் படுத்து விடுவது
எப்படி 

பசி
முகத்தைப் பற்றி
கோணிக் கொள்ள செய்யும் போது
குறைந்த பட்ஷம்
சிரிக்காமல் இருக்க
இருக்குமோ
வழி

சாட்டை சுழற்றி
சதையை பிளந்து
துளிர்க்கும் ரத்தத்தை காட்டாமல்
விளைந்து வரும் எழிலைக் கிழங்கு
வந்து சேர்ந்து 
வேகாதா

வெறும் பனியாய் மயங்குகிற கவிதைக்கு பேக் அப் சொல்லி
நகர்.

படுத்து விடலாம் சுருண்டு

எங்கும்.










Wednesday, March 12, 2014








ஒரு கணம்
நானாய் நடந்த
இயந்திரம் நிற்கிறது
இந்தப் புன்னகையின்
முன்

செலுத்தாத அர்த்தம்
எளிமையின் மலர்
அன்பால் இவ்வுலகை
அள்ளிக் கொள்ள துழையும்
இப்பிள்ளையின்
இப்புன்னகை
என்ன

உனது
குட்டித் தீவுக்கு அப்பால்
நூற்றாண்டுகளாய் கொழுத்த அசுரம்
அருள் வாக்கு அருளியவாறு
குருதி குடித்து
படர்கிறது
இதோ கவிதை எழுதுபவராய் அறியப்பட்ட
மாமனிதர்கள்
தொகையறா எழுதுவதுடன்
அதன் குடல் வெறியைத் தணிக்க
குழந்தைகளை
தேடுகின்றனர்.

பதுங்கு குழி எனக்குப் பழகிற்று
என் தலை முறைக்குப் பழகிற்று
பட்ஷிகள் தம் விடுதலையை கிளுகிளுக்கிற
ஒரு தூய ஆகாயத்தை நீ விரும்பினாயெனில்
அதற்கு நான் எங்கே செல்வேன் என் மகனே.   






Friday, January 24, 2014





கறுத்துத் திரண்டு
முட்டினாலும்
பொழியாத ஒரு மேகம்
செரிக்காத கருங்கல்லாய்
புரண்டிருக்க
ஒவ்வொரு எழுத்திலும்
வார்த்தையிலும்
வருகிறது இல்லையா
ஒரு
வாடை

குருதியா
கண்ணீரா

முதலில்
குளி

ஸ்ப்ரே
பண்ணு

ஜிகினா வாங்கக் காசிருக்கா

ஆழத்தை அடை
ஈரத்தை துடை
குடல் கருகி செத்த
சடலங்களை கருக்கி
ஸ்டேஜ போடு
லைட்ட போடு
அப்புறம்
போடுறா ங்கோத்தா
அந்த ரெக்காட

ஆடு.

லேடீஸ் அண்ட் ஜென்டில் மென்
இன்னொரு ரைட்டர் வந்துட்டார்
கொண்ட்டாட்டதோட.