Tuesday, November 10, 2015




நிலவின் உப்பு
கடலில் புரண்டிருக்கும்போது
திரும்பினோம் தத்தம்
குடில்களுக்கு
இந்தக் கோப்பையின்
தேநீர் தித்தித்திருக்குமாவென
எங்கோயிருந்து உறிஞ்சியவாறிருக்கிறாய்
வெறும் ஒரு பிடி உயிரை.








காலங்களில் அவள் வசந்தம். கலைகளிலே அவள் ஓவியம். மாதங்களில் அவள் மார்கழி. மலர்களிலே அவள் மல்லிகை.

எனவே கலை கீதாவை விரும்பினான். ஒரு சிப்ஸ் கடையில் சிப்ஸ் வாங்க வந்தாயா என்பது போல கேட்டு பழக்கமாகி அப்புறம் ஒருநாள் மிகுந்த பணிவுடன் காப்பி வாங்கிக் கொடுத்து பின்னொரு நாளில் நகரத்தின் ஒளிமழை பொழியாத இருள் தெருவில் அவளது புன்னகையை முத்தமிட்டான். உதடுகளில் அழுந்தாத உதடுகள் பக்கவாட்டில் உராசிப்பிரிந்ததற்கே அவனது உள்ளாடையில் பிசுபிசுப்பு படர்ந்து விட்டது. மிகுந்த தயக்கம். கூச்சமும்தான். இருந்தாலும் எச்சரிக்கையுடன் அவனும் அவளும் இருந்த நான்கு அடுக்கு வீடுகளின் ஒரு வீட்டுக்கு மேலே வரமுடியுமா என்று கேட்டு விட்டான்.

வர முடியுமே.

நான்காம் மாடி பால்கனி விளிம்பில் பாதத்தை அழுத்திக் கொண்டு தவறினால் மரணம் என்கிற நிலையில் அடுத்த காலை எடுத்துப் போட்டு பற்றி தாவிக் கொண்டு வந்து மொட்டை  மாடியில் அவனுடன் படுத்தாள் கீதா. அறுத்து வைத்த தர்பூசனிப்பழம் போல ஒரு நிலா. கொஞ்சம் விண்மீன்கள். ஜீவதுடிப்பு மட்டுப்பட்டதற்கு அப்புறம் அவள் சிரித்துக் கொண்டே இருந்தாள். அவன் நாய்க்குட்டி போல எட்டும் பகுதிகள் அனைத்தையும் ருசி பார்த்திருந்தவாறு தனது காதலின் வலிமையை திருகி திருகி சொல்லி சோர்ந்தான். அப்படி மறுபடி அமைந்த தினங்களின் அந்த இடைவிடாத சிரிப்புகளுக்கிடையில் அவனால் சொல்ல முடியாமல் தவறின எதிர்காலம் நெஞ்சுக்குள் வலித்தது. என் கண்ணே, நீ சொல்வாய் எனில் இந்தக்கணம் கீழே பாய்ந்து இறந்து போவேன் என சொல்லுவதைக் காட்டிலும் அப்படி பாய்ந்து இறந்து போவதற்கு மனம் முந்தியது ஏன் என்பது பிடிபடவில்லை.

மூச்சு பிடிப்பு வந்த மாதிரி.



பிழைப்புக்கு பணி புரிகிற இடத்தில் ஒன்று என்றால் இரண்டு என்றும் இரண்டு என்றால் நான்கு என்றும் வேலைகளை தலையில் சுமத்திக் கொண்டு தன்னை மறந்திருப்பது வழக்கம். அல்லது கீதாவை நினைக்காமல் இருக்க முயல்வது வழக்கம். ஒரு திங்கள்கிழமை யாரோ ஒருவன் உன்னை பார்க்க வந்திருக்கிறான் என்றார்கள். யாரோ இல்லை,  லம்பா ராமுடு. அரை மில்லி மீட்டர் புன்னகைகளை கடந்து அவன் யாரோ, இவன் யாரோ. கடை தெருவுக்கு கூட்டிச் சென்று வாழைத்தண்டு ஜூசை வாங்கிக் கொடுத்து சாப்பிட சொன்னான். உடம்புக்கு நல்லது என்று சொன்னதும்    சரிதான்.  ஆனால் கீதாவைப் பின் தொடர்வது உன் உடம்புக்கு ஆகாது என்றான்.

உண்மையில் மூச்சு பிடித்தது.

காதலை காதலர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். கேள்விப்படுகிறவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்றான் லம்பா ராமுடு. இதை சொல்லும் போது அவனது முகத்தில் வேதனை துடித்தது. படிகளை கடந்து பால்கனியில் இருந்து தாவி மொட்டை மாடியில் அவனுக்காக அவள் காத்திருந்த அந்தத் தருணத்தை உன்னால் எப்படி புரிந்து கொள்ள முடியும் என்று அவன் கேள்வி எழுப்பினான்.


உற்ற காதலன் துணையிருக்க இடைவெளி இல்லாமல் சிரிக்கிற பாக்கியம் அவளுக்கு கிடைத்திருக்கிறது. எதன் பெயராலும் அதை எவரும் பறிக்க நினைப்பது பாவம் என்று விட்டு கொஞ்சம் பேசாமல் இருந்தான்.

அதெல்லாம் இருக்கட்டும். சாக ஆசைப்படுகிறாயா என்று கேட்டான்.

கலையரசன் பிறந்தது வளர்ந்தது எதுவும் சொல்லிக் கொள்ளுவது போல இருக்காது. பன்றிகள் போல அங்கே மனிதர்கள் இருந்தார்கள். யார் யாருக்காகவோ அவர்களுடைய வாழ்வு இருந்தது. அப்பா எவளுடனோ போனார். பெற்று விட்ட பிள்ளைகளுக்காக மாடு போல உழைக்க வேண்டியிருந்த அம்மா கசப்பை மட்டுமே பகிர்ந்தாள். உடன் பிறந்தவர்கள் பாயும் புலிகளாய் இருக்கவே, அவன் யாருமில்லாமல் தனித்திருந்து என்ன நடக்குமோ என்று விழித்திருந்து கிடைக்கும் போது சாப்பிட்டு பசித்திருந்து ஒரு தரிசனம் பெற்றான். அது ஏதாவது ஒரு திரைப்படம் முடுக்கி விட்ட ஞானமாகவும் இருக்கலாம். அது இந்த அழுக்கு தீவில் இருந்து தப்பித்து வெளியேறி ஒரு நல்ல குடும்பத்தை அமைத்துக் கொள்வது. பரிசுத்தமாய் பத்து பேர் மதிக்கிற மாதிரி கண்ணியமாய் நடமாடுவதற்கு இதோ அம்மணமாய் படுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறவள் ஒத்துழைத்திருக்க முடியாதா. இவை எல்லாம் எளிய கனவுகள் தானே? மொட்டை மாடிக்கு ஏறும் முன்னே அரை மயக்க நிலையில் இரண்டாம் அடுக்கு பாப்பாவின் ஜியாமண்ட்ரி பெட்டியில் இருந்து எடுத்த காம்பசை ஒங்கி இறக்கினான். அம்மா என்று வீரீட்டாள் அவள். மறுபடி மறுபடி குத்தினான். அவளது குறி ரத்தசகதியானது. தொண்டை கிழிய கூச்சலிட்டுக் கொண்டிருந்தவளின் குரல் அடங்குவதற்கு முன் கலை இறங்கி நடந்துவிட்டான். ஆட்கள் படிக்கட்டு ஏறிக் கொண்டிருந்தார்கள்.

அவனது சாமி அடங்கவில்லை.

எங்கே போக வேண்டும் என்று தெரிந்திருந்தது. நகரின் வடக்குப் பகுதி. கடலலைகள் கோஷமிட்டன. சில இடங்களில் பதுங்கினான். மதில் சுவர்களை தாண்டிக் குதித்தான். முன்னேறி சென்று ராட்ஷச லாரி ஒன்றில் சரக்குகளை ஏற்றும் ஆட்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த லம்பா ராமுடுவைப் போட்டான். போகிற போக்கில் அங்கேயே எடுத்த ஒரு இரும்புத்தடி தான். அது மிக சாதாரணமாய் பகுதி ஊரை ராஜாங்கம் செய்து கொண்டிருந்த ஒருத்தனின் வரலாறை முடித்து வைக்க போதுமானதாயிருந்தது. திடுக்கிட்டு விலகியவர்கள் திட்டு திட்டாய் கூடிக்கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். உண்மையில் யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

கலை மனசின் புயல் அடங்கி அமர்ந்து மண்ணால் கோபுரம் குவித்தான்.

நிமிர்ந்து போலீசைக் கூப்பிடுங்கள் என்றான்.


2

அவளுக்கு ராம் பாய் என்று தான் பெயர். பிடிக்கவில்லை. எப்படி செய்வது என்று நான்கு பேரிடம் விசாரித்து அத்தனை அரசு சடங்குகளுடனும் மோனிக்கா என்று மாற்றிக் கொண்டாள். யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பொதுவாகவே அவள் எதையாவது செய்யும் போது யாரும் தப்பு சொல்ல மாட்டார்கள். தப்பாய் வராது என்று நம்புவார்கள். அப்படி ஏதேனும் ஆட்ஷேபம் கிளம்பினால் உடனடியாய் எதையாவது பேசி அதை அடக்கி விடுவாள். எல்லோரும் அவள் பேச்சுக்கு பயந்தார்கள். இப்போது அவளால் பேச முடியவில்லை. மொபைலை வைத்துவிட்டு அப்படியே உட்கார்ந்து விட்டாள். முதலாளி ராஜப்பா அவளையே வெறித்துப் பார்த்திருப்பது தெரிந்து தான் இருந்தது. என்ன செய்வது,  என்ன செய்வது, என்ன செய்வது என்று இருந்தது அவள் முகம். ஆர்ஜெஆரின் எச்சிலைத் தின்னும் நாய்கள் வீட்டுக்குள் புகுந்து பாத்திர பண்டங்களை தூக்கிப் போட்டு உடைத்து மோனிக்கா எங்கே என்று கேட்டிருக்கின்றன. அவைகள் இப்போது இங்கே வந்து கொண்டு இருக்கின்றன.

முதலாளி ராஜப்பா ஒரு முறை வந்து காத்திருக்கிற வாடிக்கையாளர்களைப் பார்த்து விட்டு மோனிக்காவைப் பார்த்தார். அவருக்கு ஏழைகளை இளக்காரமாய் கருதி அவர்களை குடைந்து கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டு இருந்ததால் கிண்டல் செய்கிறோம் என்கிற நினைப்பில் கேட்டார்.

“இப்போது என்ன செய்யலாம்?”

”அவர்களை அனுப்பி விட்டு கடையை மூடி விடலாம். போய் விடலாம்.”

அட. என்னிடம் மாதமானால் சம்பளத்தை இரந்து வாங்கும் ஜந்து ஒன்று என்னை கேலி செய்கிறது என்பதாய் எடுத்துக் கொண்டு அவள் மேல் வீசுவதற்கு அவர் அந்த அட்டை பெட்டியை தூக்கும் போது ஒரே ஒருவன் தான் வந்தான்.


சோப்பு சீப்பு வளையல்கள் ஸ்டிக்கர் பொட்டு அட்டைகள் என்று கையில் கிட்டியதை எல்லாம் தூக்கிப் போட்டான். வசமாய் கிடைத்த ஒரு கண்ணாடிப் பேழையை வீசி பிரம்மாண்டமாய் ஒங்கி வளர்ந்து நின்றிருந்த அலமாரியின் கண்ணாடிகளை நொறுக்கித் தள்ளினான். தடுக்க முந்திய முதலாளி ராஜப்பாவின் இரண்டு கன்னங்களிலும் கொழுக்கட்டைகள் முளைத்தன. அது போதாமல் அவரது முகத்தில் ரோஜா வர்ண ஹோலி பவுடரைகொட்டி ஊதா நிறத்தில் ஒரு பிராவை எடுத்து வாயில் திணித்து அவரை நடனமாட சொல்லி விட்டு அப்புறம் தான் அந்தக் கத்தியை வெளியே எடுத்து மோனிக்கா யார் என்று கேட்டான். அவள் முன்னே நடக்க அவன் தொடர்ந்தான். அவன் காட்டிய ஷேர் ஆட்டோவில் வேறு பலரும் இருந்து மரியாதையாய் ஒதுங்கி இடம் கொடுக்க இவள் எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்து கொண்டாள்.

சில விஷயங்கள் அவளுக்கு தெரியும். ஆர்ஜெஆர் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஆர்ஜெஆர் இவளிடம் ஐலவ்யு சொன்ன காலத்தில் லம்பா ராமுடு இருந்தான். அவனை அப்புறப்படுத்தி விட்டு வந்தவன் இவன். கலையரசன். இவனை அப்புறப்படுத்த இன்னொரு நாள் வேறு ஒருவன் வருவான். லம்பா ராமுடுவோ, காம்பஸ் கலையோ காணாமற் போனால் யாரும் தேட மாட்டார்கள்.


அவள் சொன்னாள்.

“உன்னை நினைத்தால் எனக்கு பரிதாபமாய் இருக்கிறது.”

அவளைத் தொட ஒரு நல்ல நாள் பெரிய நாள் சொல்ல கேரள நம்பூதிரி விமானத்தில் வந்தார். ஐப்பசியில் தீபாவளியுடன் ஒட்டிக் கொண்டு ஒரு அமாவசை வருமில்லையா, அது வரை ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுக்க வேண்டும் பெருந்தகையீர் என்று விடவே கலையின் பொறுப்பில் மோனிக்கா வைத்துக் கொள்ளப்பட்டாள். சர்வ நிதானமாய் இருந்த அவளைப் பார்க்கவே அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் தேசத்துக்காக உழைக்கும் ராணுவ வீரன் போல தனது கடமைகள் அனைத்தையும் பற்று வைக்காமல் செய்தான்.  பெண்களை வெறுக்க வேண்டும் என்கிற அலட்டல் உள்ளுக்குள் அவ்வளவு சரியாய் இல்லை என்பது ஒரு தினம் நடு இரவில் அவள் நல்ல மீன் குழம்பு வைத்து சுட சுட சோறு பரிமாறிய போது புலப்பட்டது. இனி மேல் கண்ட நேரத்துக்கு பரோட்டாவை தின்று வைக்கக் கூடாது என்று அதட்டிய போது தலையை அசைத்து வைத்தான்.

அவள் சொன்னாள்.

”தர்மத்துக்கு தலை வணங்க வேண்டும். தர்மம் தழைக்க பாடுபட வேண்டும். இதெல்லாம் சாதாரண விஷயங்கள் இல்லை என்பது பழைய சினிமா பாடல்களில் இருப்பதால் புரிகிறது தான். தர்மத்துக்கு தலை வணங்குவது சிறப்பு. ஆனால் அதர்மத்துக்கும் தலை வணங்கி விடுவது சிறப்பிலும் சிறப்பு. இல்லை எனில் ஒரு பூச்சிக்கு கூட தெரியாமல் பனிக்கட்டி போல ஆவியாகி விடுவாய்.”

அது ஏதோ ஒரு விதமான உண்மை போலதான் பட்டது.  மோனிக்காவின் குடும்பம்  போலீசுக்கு போகாமல் கம்பெனி ஏற்பாடு செய்த வீட்டுக்கு மாறியது. அவளது அண்ணன் மட்டும் மிகவும் முரண்டு பிடிக்கவே அவன் கேட்ட ஹோம் தியேட்டரை அந்த வீட்டில் அமைத்துக் கொடுத்தார்கள். உற்றார் உறவினரும் சுற்றமும் நட்பும் எவ்விதமான கோபமும் குமைச்சலும் கலந்து விடாத நமுட்டு சிரிப்புடன் அவள் நன்றாய் இருக்கிறாளா என்று கேட்டு வைத்தது இன்று தண்ணீர் லாரி வருமா என்பது போல தான் இருந்தது. மோனிக்காவே கூட உதவிக்கும் காவலுக்கும் இருந்த மூன்று பெண்களிடம் பேன் பார்த்துக் கொண்டு சிரித்தவாறிருந்தாள்.

அவள் சொன்னாள்.

”உலகு நல்லவர்களால் நிரம்பித் ததும்புகிறது என்கிற உண்மையை நான் இடைவெளி இல்லாமல் அனுபவித்து வருகிறேன். அடிக்கடி அதன் பொருட்டு சிலிர்த்துக் கொண்டு அடங்குவதால் உடலே கூட சோர்ந்து போகிறது. கேள்விப்பட்டிருக்கிறாயா, புத்தாடை சூட்டி இனிப்பு வழங்கி அனாதைக் குழந்தைகளுடன் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார் ஒருவர். உயிருக்கு போராடும் ஒருவருக்கு ஓ பாசிட்டிவ் ரத்தம் வேண்டும் என்று ஒருவரும் சமையல் கேஸ் இணைப்புக்களை சரி பார்த்துக் கொள்ளுவது எப்படி என்று ஒருவரும் மிளகு ரசத்தின் பலாபலன்களை வேறு ஒருவரும் பொது மக்களின் நலன் கருதி எல்லோருக்கும் பரவலாய் சென்று சேர முகப் புத்தகத்தில் கருத்திடுகிறார்கள். அதை நூற்றுக் கணக்கான ஒருவர்கள் அக்கருத்து ஆயிரக்கணக்கான ஒருவர்களை சென்று சேர ஷேர் செய்கிறார்கள். சருமம் தொள தொளத்து அரை மயக்கத்துடன் நடமாடும் முதியவள் ஒருத்தி சாலை கடந்து செல்ல ஒருவர் உதவுகிறார் மற்றும் ஒருவர் அவளை கலை நயத்துடன் புகைப்படம் எடுக்கிறார். அட,  அதை விடு. ஊனமுற்ற ஒரு மனிதன் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறியதை ஒருவர் சினிமாவாகவே எடுத்து விட்டார். இப்படி ஒருவர்,  ஒருவர், ஒருவர் என்பது சிறுதுளி பெருவெள்ளமாய் பல்கிப் பெருகி நாமெல்லாம் நிற்பதற்கு நிலம் இல்லை தெரியுமா?புளகாகிதம் அடைவதில் ஒரு எல்லை இல்லமல் போய் பரபரவென்று நான் தலையை எல்லாம் பிய்த்துக் கொள்ளுவதுண்டு.”

கலைக்கு எதுவும் புரியவில்லை. அப்புறம் எப்போதாவது புரிந்து கொள்ள முடியும் என்பது போல கேட்டிருந்தான்.


“அடித்த அடியில் முதலாளி ராஜப்பா வெறும் ராஜப்பாவாய் தொங்கட்டம் போட்டு துவண்டதை நினைத்துக் கொள்கிறேன். நமக்கு சமயம்  வாய்த்தால் நான் ஒருவர் ஒருவர் என்று சொன்ன ஒவ்வொருவரையும் நிற்க வைத்து கிழிக்க வேண்டும். ஆம்,  குறைந்த பட்ஷம் மலம் கழிக்கும் போதாவது கதறும் அளவிற்கு கிழிக்க வேண்டும். ஏன் என்றால் யாருக்கு என்ன நீதி தேவையோ அதை கிடைக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறவர்கள்-  ங்கோத்தா, இவர்கள்தான் ! “

தீபாவளி நெருங்கும் போது பூவிருந்தவல்லிப்பக்கம் ஒரு பாண்டியனின் காலை எடுத்து விட்டு அரசுப் பேரூந்தில் கலை வந்து கொண்டிருந்தான். போனில் ஒருசெய்தி. ஆர்ஜெஆர் மருத்துவமனையில் அனுமதி. அந்தப் பெண் மோனிக்கா சாப்பாட்டில் விஷம் வைத்து விட்டாள். பேரூந்தை விட்டு இறங்கி ஆட்டோ பிடித்து ஒடுவதற்குள் பெரிய திருப்பம். ஆர்ஜெஆர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீட்டுக்கு போயாயிற்று. என்னடா இது. ஒன்றும் இல்லை. ஆர்ஜெஆருக்கு வயது எழுபத்தெட்டு. மோனிக்காவின் முகத்தை பார்த்துக் கொண்டே முட்டை,  கருவாடு,  மட்டன் என்று சந்தோஷமாய் விழுங்கி வைத்திருக்கிறார் .பிரஷர் கூடி இருக்கலாம். அப்படி சொல்லுவது அவருக்கு பிடிக்காது என்பதால் அது ஒரு ஆனந்த மயக்கம்தான். அமாவசையன்று திரு நிறை செல்வி மோனிக்கா கழுத்தில் திரு நிறை செல்வன் ஆர்ஜெஆர் அவர்கள் தாலியைக் கட்டி புது இல்லமொன்றில் புது வாழ்வை துவங்கப் போகிறார்கள்.


வெடிகளின் ஒலியில் கேட்பது பண்டிகைகளுக்கு முந்தும் மனிதர்களின் பதட்டமா?

அவள் சொன்னாள்.

”இதைப் போல ஒரு தீபாவளி. விடியற்காலை எண்ணெய் குளியல் முடிந்த பிறகு போட்டுக் கொள்ள புது சட்டை இல்லை. ஆட்டுக்கறி வாங்கவில்லை. அம்மா போடுகிற சாபங்களை கேட்டுக் கொண்டே அப்பா என்னை சைக்கிளின் முன்னே உட்கார வைத்துக் கொண்டு செய்த வேலையின் கூலி வாங்கி வர ஏதோ தேவடியாள் மகனின் அலுவலகத்துக்குப் போனார்.  பணத்தை வாங்கி அம்மாவுக்கும் எனக்கும் புதுத் துணி வாங்கி ஆட்டுக்கறியும் அதை சமைக்க பொருட்களும் வாங்கி சந்தோஷத்தின் குருட்டுத்தனத்தில் அவர் சைக்கிளை மிதிக்க எதிரே பாதையை விட்டு விலகிய லாரி எங்களை பார்த்துத் திரும்பியது.

என்னை வீசி எறிந்ததும் அவர் நசுங்கிக் கூழாய் போனதும் ஒரே நொடி.வெறும் ஒரு நொடி.

கலையரசா, பணம்டா !


பணம் ! “

இல்லாதவனாய் இருக்கும் போது எதை விரும்புகிறோமோ அதை எடுத்துக் கொள்ளத் தாவுகிறோம். இருக்கிறவனுக்கே எங்கே இல்லாமல் போய் விடுமோ என்கிற ஆத்திரம் இருக்கத் தானே செய்கிறது?கீதா இப்போது கலைக்கு மனைவி தான் என்றாலும் காலங்களில் அவள் வசந்தமில்லை, கலைகளில் அவள் ஒவியமில்லை,  மாதங்களில் அவள் மார்கழியில்லை,  மலர்களிலே அவள் மல்லிகையுமில்லை. கூட்டு சேர்ந்து வேட்டை நிகழ்த்துகிறார்கள். கீதா இப்போது வித்வத்துடன் கொலை செய்ய கற்றுக் கொண்டாள் என்பதைவிட,  பொத்தல் விழுந்து தைத்த குறியை சற்று பொத்திக் கொண்டு ஒரு அரை வட்டம் போட்டு சாகப் போகிற ஆம்பிளையின் கொட்டைகளில் ஒரு மிதி மிதிப்பாள் பாருங்கள், அதைக் காண கண் கோடி வேண்டும் முருகா.  ஒரே விஷயம் , வழக்கம் போல இந்த உலகில் எங்கே என்ன நடந்தாலும் , அவர்கள் நம்மைத் தேடிக் கொண்டு வர மாட்டார்கள் என்று மட்டும் நம்பிக்கை வளர்த்துக் கொண்டு நாம் பாட்டுக்கு நம்ம வேலையை பார்க்கலாம். எனவே வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.



காலங்களில் அவள் வசந்தம்.
ஒரு சிறுகதை.

எம் கே மணி.

Tuesday, October 13, 2015

எங்கே முடிய வேண்டுமோ
முடிந்து விட்டாய்

முடிவடைய ஆகாத
திக்கு நோக்கின திகைப்பில்
பேசின வசனங்கள் பிசுபிசுக்க
குருதி கொதித்த வினாடிகளின்
உறுமல்

எப்படி இருந்தேன் தெரியவில்லை
எப்படி இருக்கலாம் தெரியவில்லை
போகட்டும், இது ஒன்று தெளிய வேண்டும்
முடிவதற்கு முன்னமே தெரிந்து வைத்திருந்தாயா
தெரிந்திருக்கவே முடிந்து போனாயா  

  
நீ உதிர்த்த ஒற்றை சொல்லின்முலை குடித்து
தூங்காதிருந்து தூங்கிப் போன
தினங்களில் பதுங்கி இருக்கிறேன்  
வாழ்வின் வீதியில்
சலிப்பு வாங்கித் திரும்பும்
அணைந்த கண்களை
நேரிடாது.

நான்சென்ஸ்.  

Thursday, August 20, 2015





சொல்ஒன்று
விழுந்து
நொறுங்கியது

அதன்அடையாளம்புலப்படவில்லை
அதுஎந்தசொல்லாயிருந்ததுஎன்பதும்பிடிபடவில்லை

சர்வநிச்சயமாய்
அதில்ஒன்றும்இல்லாமல்இருந்தது
வழக்கம்போல
அந்தஒன்றினால்அதுஎல்லாமுமாயிருந்தது
கிளர்ச்சிக்கும்தளர்ச்சிக்கும்அதுகாரணம்
கட்டிப்போட்டிருந்தது
கட்டியணைத்துதந்தமுத்தம்உலர்வதற்குள்
கைவிட்டது

ஆற்றுமணலைஅளைவதாய்
அனைவருக்கும்சொற்களுடன்பந்தம்என்றிருக்கும்
என்பதுஅறிந்திருந்தாலும்
தேடித்திரிந்தும்கிடைக்காதசொல்லின்பரிகாசம்தான்
சுமந்துதிரியும்நெஞ்சின்தீ

அனைவர்க்குமான
கொள்ளிகளில்பற்றும்வரை
புன்முறுவலித்திருக்கும்
தீ.









சிறுகதை-ராதா மாதவம்.


இறுதி நடனம் முடிந்து பிராண்டோ குடிக்கிறான்.  அந்தப்பெண்ணுடன் நடந்து உன் பெயர் என்ன என்றே கேட்டு விடுகிறான்.கதையின் ஒரு வளைவில்  அவனை சுட்டு  முடித்து விட்டு போலீசாரிடம் அவன் பெயர் தெரியாது என்கிறாள் இல்லையா, மூன்றாவது பெக்கில் அதற்காக சிவதாசன் தன் தாடையை சொறிந்தவாறு பேச்சிழக்க குடிக்கவும் பேசவும் தெரியாதபரத் என்று அழைக்கப்படுகிற லூயிஸ் வயிற்றுக்கு நாலு இட்டிலி,  ஒரு முட்டைதோசை,  ஒரு மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டு அப்படி இப்படி நடந்து அவனே எதிர்பாராதவகையில் ஒரு பேருந்தில் ஏறிக்கொண்டு டிக்கெட்டை வாங்கிக்கொண்டு தூங்கிவிட்டான். காலையில் கோயம்பத்தூரில் மூத்திரம் கழித்தபிறகு மறுபடியும் சென்னைக்கு திரும்புகிற வண்டியை தேடிக்கொண்டு போய் அதில் சற்றுநேரம் அமர்ந்திருந்துவிட்டு சிகரெட்டு பிடிக்க இறங்கி அதைக்கொளுத்தாமல் தலையை சொறிந்து விறுவிறுவென நடந்து வேறு ஒரு வண்டியில் ஏறி அதிலும் டிக்கெட் எடுத்து தூங்கினான். ஒருமுறை கண்களை விழித்துப்பார்த்தபோது திருச்சூர் தாண்டி இருந்தது. அடுத்ததடவை விழித்து பத்தனம்திட்டாவிற்கும் வந்து சேர்ந்து ஒரு அறையை தேர்ந்துகொண்டு தூங்காமல் சன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு வெள்ளப்பமும் கடலையும் சாப்பிட்டான்.

நல்லமழை.

மழை பற்றியும், மழை கவிதைகள் பற்றியும், மழை வந்தால் கவிதை எழுதியே ஆகவேண்டியவர்கள் பற்றியும் யோசித்து சினிமாவில் மழைவந்தால் கட்டிக்கொண்டு தவறு செய்துவிடும் ஜோடிகளைப் பற்றியும் யோசனை செய்து இருந்த போது தூங்கி சிவதாசன் டாங்கோ ஆடுவதற்கு திடுக்கிட்டான். சற்று வெட்கத்துடன் அவர் கவனித்து விடாமல் மெல்ல நகர்ந்த போது அவனிடம் யாரோ ஆட சொல்லுகிறார்கள். இன்னது என்று சொல்ல முடியாத இரைச்சல்கள் பரவி குவிந்திருந்தாலும் காசு கிடைக்கும் என்கிற கிசுகிசுப்பு உரக்கக்கேட்டது. யாருடைய குரல் அது? அதை தேடி நடந்து ஒரு பாம்பை மிதித்து படிக்கட்டில் உருண்டபோது முழித்து, சில்லிட்டிருந்த சன்னலை திறந்து மீண்டும் மழையை பார்த்தவாறிருந்தான் .ஜீப்பில் கொஞ்ச பேரைதான் ஏற்றினார்கள்.  அடக்க ஒடுக்கமாய் இருக்கிற தன்னை ஒரு வேற்றாளாய் கருதிக்கொண்டாலும் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதில் ஆசுவாசம் பெற்று மழையை வெறித்தபோது எப்படியோ இந்த நிமிடம் திரும்பிப் போய்விடுவோம் என்கிற நம்பிக்கை புரியவில்லை. நாலு பேர் நசுக்கிக்கொண்டிருக்க வளைவிலும் திரிவிலும் தெறித்த மழைத்துளிகளில் நனைந்து நடுங்கியவாறு இருந்தது மேலும் கொடுமைஆயிற்று, மாதவனின் வீட்டுக்கு போகிற முக்கில் இருந்த சாயா கடையில் ஒதுங்கியது. காற்று சாட்டை போல வீறியது .சிகரெட்டின் கங்கு மின்னுவதை பார்த்தவாறு புகையை நெஞ்சுக்கு இழுத்துமிகவும் தாமதித்து புகையை வெளியேற்றும் போது இவன் குளிரால் நடுங்குவதை பார்த்திருந்த கடைஆள் வழக்கம் போன்ற மலையாளி உரிமையுடன் சாயா போடுகிறேன் என்ற போது மறுத்தான்.

தண்ணீரைத் தவிர எதுவும் குடிப்பதில்லை.

நெல்லிக்காய், இஞ்சி, சுக்கு,திப்பிலி, கடுக்காய் போன்ற சாறுகளை பிரயோகம் செய்து அடைந்த பேறுகளை மக்கள் சேவையின் பொருட்டு ஒருகாட்சியாக்கி படத்தில் வைக்க எழுதும் போது தன் இருமலின் நடுவே சுவர் இருந்தால் தான் சித்திரம் என்று இயக்குனர் சொன்னதை பொருந்தாத இடத்தில் நின்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தவன், சற்றுநேரம் தசைபயிற்சி செய்து மாதவன் முன்பு நின்று சிரித்தான்.      நல்லவேளை .அப்படியும் அது பாதிதான் வந்தது. மாதவன் எதற்கு வந்தாய் என்று கேட்கவில்லை. .அவருடைய  மனைவி , மகள்,   மகன் யாருமே இவன் யார் என்றும் ஒரு சொல் கேளாத நிலையில் தேங்காய்பாலில் ஊறின பத்திரியில் ஆட்டுக்கறியை சுருட்டி விழுங்கினது வழுக்கிப்போகாமல் இருந்ததற்கு காரணம் சிஜி. அவனது பால்யத்தில் எட்டும் பொட்டும் தெரியாத பாவாடைக்காரியாய் இருந்து மாங்காய்க்கு அடி வாங்கி மிரட்டலுக்கு மண்ணை தின்று யாரும் இல்லாத நேரத்தில் காட்டுகிறானே என்கிற அனுதாபத்தாலும் ஆர்வத்தினாலும் குஞ்சை பார்த்து பதிலுக்கு தனது பொக்கிஷத்தைக் காட்டி இந்த பத்திரியை தேங்காய்ப்பாலை ஆட்டுக்கறியை விரும்பியவள். மாதவனின் மகள் வாயைக் கோணிக் கொள்ளுவதும்,  மனைவி தலையை வெட்டிக் கொண்டு கூந்தலை பின்னுக்கு ஒதுக்குவதும் ,  மகன் ஏதோ பத்திரிக்கையை புரட்டியவாறு கொறிப்பதும் போனில் கூப்பாடு  போட்டு  பேசிக் கொண்டிருக்கிற மாதவனை சீண்டுவதற்கா அல்லது தன்னை துரத்துவதற்கா என்கிற தன்மானத்தின் நீர்க்கோடு நகர்ந்தவாறு இருக்க சிஜி பாடத்துவங்கும் போதெல்லாம் இவனது சுவாசக்காற்றைப் பிடுங்கிக் கொண்டு அவளது  இதழ்கள் பிரியும்  பிரம்மாண்டமான  கணம் பெரும் யுகமாய்  விரிந்து பரவியிருந்தது. ஒருமுறை கண்களை மூடித்திறந்து தன்னை இழுத்து வெளியே தள்ளும் போது அவர்களிடம் இவன் பரத் என்கிறார். சினிமா பண்ண காசு கேட்டு வந்திருக்கிறான் என்று தொடர்கிறார். ஏற்கனவே படம் பண்ண ஒருத்தன் பணம் கேட்டு வந்து இருக்கிறான் என்று இரண்டு மூன்று பேரிடம் தொலைபேசியில் சொல்லியாயிற்று.வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்கிற காரணத்தினால் நகைச்சுவை குண்டானில் நல்ல கருத்துக்களை போட்டு அடித்து மிக்ஸ் பண்ணி விதரணம் பண்ணப் போனால் பணம் கொட்டிவிட்டுப் போகிறது என்பதை சற்று தள்ளி இருந்த ஒரு ரப்பர் தோப்பில் புகை விடும் போது கமறினான்.  உடனடியாய்கிளம்புவதுஎன்றுமுடிவெடுத்தான்.

தலையசைத்தார்.

மழை வலுத்திருந்தது. மனசின் எல்லா மூலைகளையும் சிதறடித்துக் கொண்டிருந்தது. எந்தக் கேள்விகளும் இல்லை. இருந்தால் அர்த்தமில்லை . பிறப்புக்கு பக்கத்தில் எங்கேயோ சேகரம் ஆனதை திரட்டிக் கொண்டு மார்பை நிமிர்த்திய கோளாறு ஆடுகிற பெருநடனத்தை சொல்ல வேண்டும். ஒரு தாய்பறவையின் சிறகு போல உலகு வெறும் மனிதாபிமானத்தால் நெய்யப்பட்டிருப்பதால் எரியும் போதெல்லாம் களித்து சுற்றி சூழ்ந்து போகி மேளம் அடிப்பவர்களோடு ஒரு காலம் ஒரே தட்டில் சாப்பிட்டிருந்தான். சிறிய காரணம் கூட இல்லாமல் சிஜியை தவற விட்டிருந்தான். உயிர் பிழைப்பின் மலினமான பொய்களில் தோய்ந்து ஊறிக் கிடந்த பழக்கம் தான் கேவலம் ஒரு தலையசைப்புக்கு அடித்துக் கொட்டுகிற மழையில் இப்படி ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி எல்லாவற்றையும் வாங்கி முடித்து தொப்பலாய் அவனை காரில் ஏற்றுகிறது. மாதவன் புன்னகையில் கார் உறுமிக் கிளம்பி நகர்ந்தது. பத்து ஊர்திருவிழா போல மத்தளம் கொட்டும் மழை காருக்கு வெளியே வெறும் புகை. ஜனசந்தடி இல்லாது காடு பிடித்துக் கிடக்கும் குன்றில் ஏறுவதை ஊகித்துக் கொண்டான். ஒரு பாலத்தைக் கடக்கும் போது எதோ கடலுக்குள் இறங்குவது போல மனசில் திடுக்கிட்டது அப்படியே அங்கேயே இருந்து கொண்டிருந்தது ஏன் என்று அவனுக்கு தெரியும் என்றாலும் அவன் அந்தப் புதிர்பிராந்தியத்தில் காலடி வைக்கவில்லை.  சம்மந்தம் இல்லாமல் மூச்சை பிடித்துக் கொண்டிருந்தான். "டீராதே" என்று பாறை போல இறுகியிருந்த கதவை தட்டி அவள் வந்த போது கூட.

டிரைவரும்அவனுமாய்வாங்கிவந்தபொருட்களைமுற்றத்தில்வைத்தார்கள்.ஒருமுறைநிமிர்ந்தபோது "ஆங்" என்றமாதிரிகேட்டது. அதுநீயா-வாங்க- இருக்கிறாயா-ஓகே, சரி, விடு என்று ஏதேதோ அர்த்தமாகிற சப்தம். துல்லியமாய் மலையாளிகளுடையது. மாதவன் தனது அடிபொளி பிஸ்னஸ் மகாத்மியங்களை மிடறு மிடறாய் அடித்து ஏற்றின ஒட்காவினால் சத்தம் கூட்டியவாறு போனது அவளுக்காகவேதான். மழையில் கேட்டிருக்காது. வறுத்த சாளை மீன்களையும் வேக வைத்த முட்டைகளையும் கொண்டு வந்து வைத்து சாட்சாத் ஒரு வேலைக்காரியைப் போலவே வேறென்ன வேண்டும் பாணியில் நின்றவள் இப்பதான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவள் போல சட்டென்று திரும்பி ஒரே ஒரு பார்வை மட்டும் பார்த்தாள், மழையின் குளிர் வந்து தொட்டு பற்களில் கூசி அவனது கொட்டைகளுக்குள் இருந்த நரம்பு கூட அசைந்தது. ஒ, நீ குடிக்க மாட்டாயா என்று அவள் கேட்டதாகவே நினைத்தான். எல்லோரும் ஆளைப்போட்டால் நிழலைத் தள்ளிக் கொண்டு போய் போடும் மாதவன் என்று தன்னைப் பற்றி கொஞ்சம் நேரம் முன்னால் சொல்லியிருந்த அந்த ஆள் தனது முகத்தில் ஒரு ஓநாயின் பார்வையைக் கொண்டு வந்து அவளிடம் இவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையா என்று சிரித்தார்.

கஞ்சா குடிக்கலாம்.அப்பா அதை குடித்தவன் இல்லை. கலை என்கிற சாமானை தலையில் சுமந்து கொண்டு நடக்கிறவன் கரையில் உட்கார்ந்து கொண்டு ஒடுகிற கால நதியை ஒடுகிறதே என்று பார்ப்பான். அந்த இடத்தை விட்டு பெயராமல் தானும் நசித்து பிறரையும் சிதறடிக்க வைக்க அவன் படைக்கப்பட்டிருப்பதால் அம்மா மூச்சுக் காற்றுக்கு அல்லாடி எவனோ ஒருவனுடன் ஓடிப்போனாள். வேறென்ன. திரும்பிய திக்கெல்லாம் பசி. லட்ஷம் பேர் சமயத்துக்கு மணமாகவும் ருசியாகவும் கண்ணியமாகவும் தின்று கொண்டிருப்பதை திடுக்கிட்டுப் பார்தவாறு வளரும் சிறுவனின் வயிற்றில் உலவிய மிருகம் உலகில் இருக்கிற ஒவ்வொருவனும் ஒவ்வொரு வஞ்சகன் என்று முடிவு செய்த பிறகு மாதவன் காசுகாரனானான்.  உச்சி முதல் பாதம் வரை முனைந்து ஒவ்வொரு அசைவிலும் ரத்தம் கரைத்த துயர் அறியாமல் அதே வஞ்சக உலகம் இதே மாதவனை காசு மரமாய் கற்பனை செய்து கை தொழுகிறது, காலை நக்கவோ கழுத்தைப் பிடிக்கவோ அலைபாய்கிறது.

இவன். ஹஹஹஹ.  என் காசில் தான் சினிமா எடுக்க வேண்டுமாம்.

அவள் பண்டொரு ஆட்கள் சொன்ன மாதிரி பல்லாயிரம் கல் தொலைவில் இருந்தது போல இருக்கவே இவனுக்கு சற்று பரவாயில்லை போல இருந்தது. மாதவன் தன்னை குறி வைத்து இழிவு செய்வதெல்லாம் எடுபடாமல் போனதற்கு அவனளவில் பலரும் பல வழி எடுத்து பலரை அவமதிப்பதன் மூலமாய் தான் தனது இருப்பை உறுதி செய்து கொள்கிறார்கள் என்பதை அறிந்து வைத்திருந்ததுதான். இதையெல்லாம் பழகி வந்த காலம் உள்ளில் ஒரு மரவட்டையாய் ஊர்வதும் நிற்காது. அவளை ஏறிட்டு பார்ப்பதற்குள் உள்ளே சென்றவள் சற்றைக்குள் விறுவிறுவென வந்து அந்தத் தேனீரை வைத்தாள்.“ஹஹஹஹ. எதையும் கேட்டு விட்டு செய்ய மாட்டாயா ராதா. அவன் எதையும் குடிப்பது இல்லை. தேனீரையும் தான். எடுத்துப்போ“  என்று சுழிந்தவரை பார்க்காதவளே போல இவனிடம் வெறுமனே ஆணையிட்டாள்.

“குடிக்கி.”

இல்லை.இதை மறுத்துப் பேச முடியாது. சினிமா ஆள் இல்லையா, காட்சிகளின் ஓட்டத்தில் இதோ பால் கொதிக்கிறது. தேயிலை கலக்கிறது. சக்கரையை சேர்க்கிறாள். அப்படி இப்படி என இரண்டு முறை சிக்கனமாய் ஆற்றி விட்டு கிளாசில் ஊற்றுகிறாள். பார்க்கிறாள். பின்னர் அதை எடுத்துக் குடிக்கிறாள். ஒரு கணம் அப்படியே நிற்கிறாள். அந்தத் தேனீரை தொண்டைக்குள் இறக்கவில்லை. தன் வாய் முழுவதிலும் அதன் சுவையை அறிந்து கொண்டு அப்படியே மீண்டும் கிளாசில் அதை உமிழ்கிறாள். துயருடன் பார்த்திருந்தாள். விருட்டென கிளம்பி வந்து இவன் முன்னே வைக்கிறாள்.

“குடிக்கி”

குடித்தான்.

அவளைப் பார்க்கிற அவரை பாராதிருந்து அவள் தன்னை பார்த்திருப்பதை இவன் பார்க்காமல் அறிந்து அதை குடித்தான். என்னமழை?காற்றில் இருந்த ஈரம் விசிறியது. நனைய வைத்து கேலி செய்வது போல ஒரு பிரமை. அதுவளர்ந்து,  பையன்களோடு குளிக்கப் போய் ஒரு தடவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது போல ரத்ததில் சத்தம் கேட்கிறது. இந்தக் கணம் அப்படியே சாய்ந்து கண் மூட வேண்டும் என எண்ணிய போது மாதவன் காரை எடுக்க சொன்னார்.

காரில் ஏறப் போகும் போது மழையின் பொழிவினூடே ஒரு சாயம் போன ஒவியம் போல பாதியாய் தெரிந்தவளிடம்  “வரட்டே சிஜி?”  என்றான்.

”சிஜி என்ன சிஜி? வப்பாடியா இருந்தாலும் பேரு கேட்டா மரியாதை வரணும். ராதா. அதுதான் அவளோட பேரு!”

அந்தக்கடுமையான மழை இரவில்,  புகை வண்டிகள் வராமல் ஆள் அரவமில்லாமல் வெறிச்சோடி மழையை ஏற்று அள்ளி கொண்டிருந்த ஒரு பேயைப் போல இருந்த ஸ்டேஷனில் தனியாய் படுத்திருந்து சென்னை வந்து சேர்ந்து என்னவும் செய்யவில்லை. டாங்கோ ஹாலை தேடவில்லை. அப்படி இருந்தால் கூட ஜெண்டில் மேன்களின் சபையில் தாறுமாறாய் சுழன்றாடி பேண்டை அவிழ்த்து மக்களுக்கு குண்டியைக் காட்ட முடியாது. ஒரு போதும் பிராண்டோ நின்று நடித்த பாலாக முடியாத பட்ஷம், பரத்தை விலக்கி லூயிஸ் எனும் சொந்த பெயரிலேயே ஒரு சுமாரான படம் பண்ணினான். கல்யாணம்பண்ணினான். இவன் வந்து போன ஒரு மாதத்தில் சிஜி தேனீரில் விஷம் கலந்து கொடுத்து மாதவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு போனதை அறிந்து இவன் பார்க்கப் போனபோது அவள் முடியாது என்று மறுத்து விட இனி எப்போதும் அவளை பார்க்கவே இயலாதென்று முற்றும் முழுதுமாய் உணர்ந்து கயிறை அறுத்து விட்டாயிற்று. எந்த எதிர்பார்ப்பும் இல்லை. புகார்கள்இல்லை. வாழ்க்கைபோகிறது.

ஒரே ஒரு விஷயம்.

லுயிஸ் இப்போது தேனீர் குடிக்கிறான். காப்பி குடிக்கிறான். இளனீர் மற்றும் குளிர்பானம் போன்றவற்றை குடிக்கிறான். விஸ்கி பிராண்டி ரம் ஒட்கா எல்லாவற்றையுமே குடிக்கிறான். காசு இல்லாத போது நகரத்தை தாண்டி சற்று தூரமாய் போய் பூண்டு ஊறுகாயை நக்கிக் கொண்டு பட்டை சாரயத்தைக் கூட குடிக்கிறான்.


என்ன செய்வது என்று தான் தெரியவில்லை, குடிக்க, குடிக்க, குடிக்க இந்தத் தாகம் அதிகரித்தவாறு இருக்கிறது.




Sunday, February 15, 2015





யுகங்களின்
ஆழத்தில்
எங்கோ துளிரிட்டு
பச்சை பொசுங்காதிருக்கும்
பார்வை தொடுகிறது
என்னை
குன்றின் உச்சியில் இருந்து பார்க்கிற
புகைவண்டிப் பாம்பாய்
என் வாழ்வை
மனங்கூடாத சந்தையில்
ஓரம் ஒதுங்கின கழைக்கூத்தாடியின்
பசி வெறிப்பை
.
இல்லை, என்னால் முடியவில்லை தான்
காணாத இந்தக் காட்சிகளுக்கெல்லாம்
அர்த்தம் சொல்லு
நீ.

Tuesday, February 10, 2015





நாளொன்றுக்கு பத்து தரம்
சோரம் போகாதிருக்கும் போது
நினைப்பதுண்டு.

சரோஜாதேவி கொத்தில்
ஒளித்த கவிதை கைக்கு வரும்,
நினைப்பதுண்டு.


வேஷத்தை சுரண்டி எடுத்த நாளில்
ஆற்றில் முங்கி எழுந்தால்
கோஷத்தை கொஞ்சம் நிறுத்தி
வார்த்தைகளை துப்பி வெறுத்திருந்தால்
நினைப்பதுண்டு

கண்ணீரும் புன்னகையும் கனத்த
கானகம் கடந்து
எல்லைகளுக்கு எல்லையில்
உன்னிடமிருந்து பிடுங்கிய
ருசியும் மணமும் என்னிடமுண்டு
என்பதை அறிவாயா என்று
நினைத்தவாறிருப்பதுண்டு.

ஆனா
இப்போ
தீவட்டியைப் பற்ற வைத்துக் கொண்டு
கிளம்ப வேண்டும்.

எரிகிறதா தசை
எப்போதும் பார்த்துக் கொள்ளுவது

வயித்துக்காக கயித்திலாடும்
சிறுமியை பார்த்திருக்கிற தகப்பனுக்கு
முறுகும் மனசல்லவோ கண்ணே
எப்போதும் அதன் முரண் விசை

இரு

இருப்பது முக்கியம்

என்னை வைத்துக் கொண்டு தான்
எங்கே போவது தெரியாது
கை விட்டு போனால்
கரம் குலுக்க பத்து பேர்
கழுத்துக்கு பூமாலை
முக்கியமாய் கேட்டாயா,

முழங்குவதற்கு ஒரு மைக் .