Sunday, February 15, 2015





யுகங்களின்
ஆழத்தில்
எங்கோ துளிரிட்டு
பச்சை பொசுங்காதிருக்கும்
பார்வை தொடுகிறது
என்னை
குன்றின் உச்சியில் இருந்து பார்க்கிற
புகைவண்டிப் பாம்பாய்
என் வாழ்வை
மனங்கூடாத சந்தையில்
ஓரம் ஒதுங்கின கழைக்கூத்தாடியின்
பசி வெறிப்பை
.
இல்லை, என்னால் முடியவில்லை தான்
காணாத இந்தக் காட்சிகளுக்கெல்லாம்
அர்த்தம் சொல்லு
நீ.

Tuesday, February 10, 2015





நாளொன்றுக்கு பத்து தரம்
சோரம் போகாதிருக்கும் போது
நினைப்பதுண்டு.

சரோஜாதேவி கொத்தில்
ஒளித்த கவிதை கைக்கு வரும்,
நினைப்பதுண்டு.


வேஷத்தை சுரண்டி எடுத்த நாளில்
ஆற்றில் முங்கி எழுந்தால்
கோஷத்தை கொஞ்சம் நிறுத்தி
வார்த்தைகளை துப்பி வெறுத்திருந்தால்
நினைப்பதுண்டு

கண்ணீரும் புன்னகையும் கனத்த
கானகம் கடந்து
எல்லைகளுக்கு எல்லையில்
உன்னிடமிருந்து பிடுங்கிய
ருசியும் மணமும் என்னிடமுண்டு
என்பதை அறிவாயா என்று
நினைத்தவாறிருப்பதுண்டு.

ஆனா
இப்போ
தீவட்டியைப் பற்ற வைத்துக் கொண்டு
கிளம்ப வேண்டும்.

எரிகிறதா தசை
எப்போதும் பார்த்துக் கொள்ளுவது

வயித்துக்காக கயித்திலாடும்
சிறுமியை பார்த்திருக்கிற தகப்பனுக்கு
முறுகும் மனசல்லவோ கண்ணே
எப்போதும் அதன் முரண் விசை

இரு

இருப்பது முக்கியம்

என்னை வைத்துக் கொண்டு தான்
எங்கே போவது தெரியாது
கை விட்டு போனால்
கரம் குலுக்க பத்து பேர்
கழுத்துக்கு பூமாலை
முக்கியமாய் கேட்டாயா,

முழங்குவதற்கு ஒரு மைக் .