Friday, August 26, 2016



எனது மொழி
எனது சாதி
எனது இனம்
எனது நாடு
தேசம்
எதன் கீழே பூமி பிளக்கும்
சொல்ல முடியாது
எந்த சுட்டு விரலில் கத்தி முளைக்கும்
எவரது நாவு அரவமாகி படம் காட்டும்
ஒரு கரத்தால் எனது மகனுக்கு சோறூட்டி
மறு கரத்தில் எச்சரிக்கையாய் வைத்திருக்கிறேன்
ஒரு கோஷப் பலகை
அப்படியே
வாழையடி வாழையாய்
தழைத்து வரும்
ஹிட்லர்கள் அனைவருக்கும்
வணக்கம் வந்தனம் நமஸ்தே நமஸ்காரம்


கடைசியாய்
சாந்தி மற்றும் சமாதானம் சார்.
உலகு சிந்தனையால் துலங்கியது
தத்துவங்களுக்கு நூறு மரபு
கைக்கருகில் மலர்கிறது ஒரு மலர்
கடவுளுக்கு பல்லாயிரம் புன்னகை
கவிதைகளில் துடிக்கும் பிரபஞ்சம்
உறவுகளில் மினுங்கும் கண்ணீர்
உண்மைகளை துழாவும் கோஷம்
கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும்
லட்ஷியங்களின் மாமழை
தோளில் கரங்கள்
கன்னங்களில் முத்தம்
வாள் வீச்சு
வாக்குறுதி

ஒண்ணே ஒண்ணு சார்
கையில காசு. வாயில தோச.

Wednesday, August 17, 2016




சற்று
பிசகி சிரிக்க முடிகிற  மனம்
சற்று
விலகி திரிந்து நுழைகிற விழி
சற்று
வங்கி கணக்கை சப்பாத  வாய்
சற்று
லாஜிக்கை விட்டு
அவிழ்த்துக் காட்டும்
நிஜம்.

நான் சோக்கு சூ குடுப்பேன்
நீ குடுக்காதது ஏதாவது சொல்லு.
   




ஜரதுஷ்டிரன் அல்லது
நாரணத்து பிராந்தன்

ஏன் மலையேறினார்கள் என்றால்
ஏறினார்கள் அவ்வளவுதான்
ஏன் கல்லையுருட்டினார்களென்றால்
உருட்டினார்கள் அவ்வளவுதான்

கிருஷ்ணன் எதற்கு மண்ணை தின்றான்
கிறிஸ்து ஏன் சிலுவைக்கு போனான்
அற்ப சாரு செய்த தாசி ஒருத்தி
எழுத்தின் மேல் ஏன் மூத்திரம் பெய்தாள் ?

உனக்கு வாய்க்காத சந்தின் சந்தில்
நீ திருடாமல் இருந்தது
சரி.

நீ ஏன் திருடினாயென்று லாஜிக் துழாவாதே.

ஷட் அப்
மேன்.  

Friday, August 5, 2016








இருக்கும்
இடத்தில்
இல்லாமல் இருக்கிறோம் என்பதில்
இருக்கிறது
எல்லாம்
என்பதால்
இருக்கக் கூடாதது எங்கென்று
எப்படியும் முடிவாகி விடும்
தெரியுமா

இருக்கும்
இடத்தில்
இருக்கிறோம் என்பதில்
இருக்கிறது
எல்லாம்
என்பதால்
இருக்க வேண்டியது எங்கென்று
எப்படியும் முடிவாகி விடும்.
தெரியுமா ?

Monday, August 1, 2016

ஜீ
ஒரு சிறுகதை.




ஜீ அந்தப் படபிடிப்பின் முதல் நாள் அன்று தன்னோடு நடித்த தன்யாவின் கண்களை ஏறிட்டுப் பார்க்கவில்லை. மறு நாளும் தான். இத்தனைக்கும் கட்டிப்புடி காட்சி எல்லாம் இருந்தது. அப்போதும் பார்க்கவில்லை. அவளோடு அமர்ந்து சாப்பிட வேண்டிய தருணத்தை உருவாக்கி விடுவார்கள் என்பதால் இயற்கை காட்சிகளை ரசிக்க கூடிய கோணங்கள் இருந்த வாழை தோப்புக்கு சாப்பாட்டை கொண்டு வர சொல் என்று மணியிடம் சொல்லி விட்டார். மூன்று நாட்களாக அப்படியாய் போய் கொண்டிருந்தது. ஜீக்கு இப்போது அவள் மீதிருந்து வரும் எல்லா வாடைகளும் அத்துப்படி. அதை தன் ஓர்மையில் வைத்து காப்பாற்றியிருந்தவாறே இணையத்தில் அவளது எல்லா புகைப்படங்களையும் எவ்வப்போதும் பார்த்தவாறிருந்தார். உள்ளில் வழக்கம் போல என்னவோ எரிந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் அவள் அவருடைய முதுகை தான் பார்க்க வேண்டும். இவர் தனது நகைச்சுவை திறனை வெளிப்படுத்தி மொத்த செட்டையும் சிரிக்க வைக்கும் போது அவளது சிரிப்பின் கன பரிமாணங்களை காதுகளை கூர்மை செய்து கண்காணிக்க வேண்டியிருந்தது. தனிமையில் அதைப் பற்றி மிகவும் நுட்பமாய் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. ஜீ ஒரு நடிகர்,மட்டுமல்ல, அவர் ஒரு சிந்தனையாளர் என்கிற ஒரு கருத்தை தமிழ் கூறும் நல்லுலகம் கிசுகிசுத்தவாறிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே ? ஒரு காலத்தில் ஹீரோவாயிருந்து இப்ப எல்லாம் குணசித்திரம் பண்ணிக் கொண்டிருக்கும் நடிகர் வித்யாதரன் இந்தப் படத்தில் நடிப்பதால் அவர் ஜீயுடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ள முனைய ஜீ அதை கூட தவிர்த்தது மிகவும் நாசூக்காயிருந்த்தது.

" மணி "

" சார்? "

" நம்ம கிட்ட இப்போ ஆல்பம் காப்பி இருக்கா ? "

" லாப் டாப்ல இருக்கு சார். "

தன்யா காட்சி பிரகாரம் அழுது கொண்டு ஜீயின் மார்பில் சாய வேண்டும். ஒரிரு வசனங்களை சொல்லி முடிக்கும் ஜீ அவளது தலையை கோதுகிறார். இயக்குனர் கட் எனும் போதே விலகி செல்லும் ஜீ சட்டென திரும்பி, " ஜெயம் கொள் சென்னை பாத்தாச்சா? " என்று கேட்டு விட்டுப் போனார்.

அது ஒரு ஆல்பம். ஜீ பாடியிருக்கிறார். மழை சூழ்ந்து தத்தளித்த மக்களை இயல்பு வாழ்வுக்கு அழைக்கும் ஒரு தன்னம்பிக்கை பாடல் அது. நடித்திருக்கிறார். நாற்புறமும் பெருக்கெடுத்து பாய்ந்த வெள்ளத்தின் மூர்க்கமும், கண்களைக் குளமாக்கும் மக்களின் இன்னல்களும் அதில் இணைக்கப்பட்டிருக்கின்றன. எந்த மிகையும் இல்லாமல் நாசூக்காய் ஆட்காட்டி விரலால் ஜீ தனது கண்ணீரை ஒற்றி சுண்டி எறியும் பகுதி பற்றி பலரும் பாராட்டி இருக்கிறார்கள். அதே மாதிரி  கடவுளே உனக்கு கண்ணில்லையா என்கிற வரி வரும் போது ஒரு லுக். எப்போதும் தன்னை ஒரு மனிதாபிமானியாகவே வைத்துக் கொள்ள விரும்பும் இரண்டு பேர், இயக்குனர் சடகோபனும், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜும் ஜீயுடன் சேர்ந்து உருவாக்கிய ஒரு படைப்பல்லவா. யாரும் குற்றம் சொல்லி விட முடியாது. மேலும் மனிதாபிமானத்தை பழித்து விட்டு ஒருத்தன் இருந்து விட முடியுமா. நாம் அத்தனை பேரும் இந்த விஷயத்தில் கண்டிப்பானவர்கள் என்பது ரொம்ப முக்கியம். ஆனால் என்ன திமிர் பாருங்கள் இந்தக் கேரளக்குட்டிக்கு. ஆல்பம் பார்த்தாயிற்றா என்று இரண்டிரண்டு நாள் விட்டு இரண்டு முறை ஜீ கேட்டும் இல்லை பார்க்கவில்லை என்று சொன்னது எந்த நியாயத்தில் சேர்த்தி?

ஜீ மழை வெள்ளத்தின் போது ஜனங்களை நேரிலுமே சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பணிகளை செய்தவர். அவரோடு எப்பவும் டச்சில் இருக்கிற டப்பு கைகளை எல்லாம் அழைத்து கருணையோடு இருக்க வேண்டிய அவசியத்தை உபதேசித்து முடிந்த வரை ப்ளீச்சிங்க் பவுடர், கொசுவத்தி, தீப்பெட்டி, பாய், போர்வைகள் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்தார்.  
கொஞ்சம் வேட்டி, புடவை எல்லாம் கூட கொடுத்தார்கள். முந்திரிப் பருப்பை புகைப்படம் எடுத்துக் கொள்ளுகிற அளவிற்கு தயிர் சாதம், சாம்பார் சாதம் எல்லாம் தரமாக வழங்கப்பட்டன. வியாசர்பாடி பக்கம் ஒரு கூட்டம் உட்கார்ந்து கொண்டு பிரியாணியாய் இருந்தால் கொடுத்து விட்டுப் போங்கள் மற்ற எதுவும் வேண்டாம் என்றபோது மனசு கொஞ்சம் புண்பட்டு விட்டது தான். எனினும் கொதித்து போன தன் அள்ளக்கைகளை அடக்கினார். இந்த தேவடியாப் பசங்களுக்கு பாவம் பாத்தது நம்ம தப்பு சார் என்று சொன்ன சிஷ்யனைக் கட்டுப்படுத்தி அவனுக்கு பதேர் பாஞ்சாலியின் கதையை பாதி சொன்னார். மறு நாள் சப்ளை நிறுத்தப்பட்டது வேறு விஷயம். பொதுவாகவே ஏழைகள் என்றால் இரக்கப்பட வேண்டும் என்பது உண்மையா, பொய்யா? ஜீ அந்த ஏழைகளோடு வாஞ்சையாய் இருப்பதை இவள் பார்க்க வேண்டும் என்பது எளிமையான ஒரு காரியம் தானே?

" தன்யா "

" ஆ. பறையூ சார் "

" ஜெயம் கொள் சென்னை இன்னும் பாக்கலையா ? "

" மழா ! வெள்ளம் ! மக்கள் கஷ்டப்பட்டதே காணான் வைய்யா சார்! "

" ஓ. நீ அந்த டைப்பா ? "

" எந்த டைப் சார் ? "

" லீவ் இட் பேபி. உன் வீட்டில எந்த விஷயத்துக்காகவும் தேன் வாங்க மாட்டீங்க. சரியா? "

" தேன் வாங்க மாட்டமா ? ஏன் வாங்க மாட்டோம் ? "

" உன் கொரல்லயே அது இருக்கே ? "

சட்டென்று காளை கட் பண்ணினார் ஜீ. இதற்கு மேல் பேசக் கூடாது. அவள் யோசிக்க வேண்டும். நிறைய. இது மட்டும் அல்ல. மறு நாள் படபிடிப்பு தளத்தில் அத்தனை பேரும் ஜீயை சூழ்ந்தார்கள். தன்யாவும் தான். கை தட்டினார்கள். ஜீ யாரும் நம்ப முடியாத ஒரு அசாத்தியமான காரியத்தை பண்ணியிருந்தார். வெள்ளத்தில் தனக்கென ஒரே ஒரு உறவாயிருந்த தாயை பறிகொடுத்த சிறுவனை தத்தெடுத்துக் கொண்டிருந்தார்.
எட்டு வயதிருக்குமா? ஏதோ பொதுசேவை நிறுவனத்தின் ஆட்கள் இப்போது தான் ஒப்படைத்து விட்டு போனார்கள். ஒரு கூட்டமே சுற்றி நின்று வெறிப்பதை அவன் மனசு எப்படி எடுத்துக் கொண்டது என்பதை சொல்ல முடியாது. ஆனால் அவன் ஒரு அட்டை காகிதத்தை மடிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவ்வப்போது விழிகள் எழும்பி, யாரையும் சந்திக்காமல் பக்கவாட்டில் பார்த்தன. அட்டையை மடித்தும் பிரித்தும் ஏதோ குறிகோளில் இருந்தான்.

ஜீயே விளக்கினார்.

" அவன் செய்ய நெனைக்கறது ஒரு போட்டு. நான் செஞ்சு தரேன்னா வேணான்னு சொல்லிட்டான். அவங்கம்மா அடிக்கடி அத செஞ்சு தந்துருக்காங்க. அதப் பாத்துருக்கான். எப்படியாவது செஞ்சுட முடியும்னு டிரை பண்ணிகிட்டிருக்கான். "

எல்லோரும் உச்சு கொட்டினார்கள்.

" அட்டப் படகுல அவன் தேடறது அவன் அம்மாவத்தான். அந்த அம்மாவா நான் தான் இருக்கப் போறேன். "

எல்லோரும் கவனித்து தான் ஆக வேண்டும் என்பது தெரியாதா, என்ன. சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டார் ஜீ. இதற்கு மேல் பேசக் கூடாது.

அப்புறம் தன்யா பேசினாள்.

" சார், நீங்க நல்லவர் ! "

" இல்லை, தன்யா. மனுஷனா பொறந்த ஒவ்வொருத்தனும் செய்ய வேண்டிய கடமை ! "

" மனசு வேணுமே ? ஈ காலத்து அதொக்கே யார்டடுத்து இருக்கு ? "

" தன்யா "

" ம்? "

" யாராவது பாராட்ட நான் எதுவும் செய்யறது இல்ல. ஆனா நீ பாராட்டும் போது அது விசேஷம். ஆமா, நீ நீ வேற ஏதோ. யார்கிட்டயும் இருக்க முடியாத எது எல்லாமோ உங்கிட்ட இருக்கு. "

" அய்யோ, இதெந்தா ? "

" நெஜத்த சொல்றதுல எதுக்கு தயக்கம்? தன்யா, நான் உங்கிட்ட பேசணும். பால் போல இருக்கற மொகத்த பாத்துகிட்டு. பவழ மல்லியா விரியற அந்த சிரிப்ப பாத்துகிட்டு. அந்த ஒரு நாள் எப்ப வேணுன்னா வரட்டும். ஆனா அந்த நாள நீ தான் சொல்லணும். "

ஜீ ஒரு மலையாளப் பையனை கூப்பிட்டு சில மலையாள சொற்களைக் கற்றுக் கொண்டார். பிரயோகித்தார். அவளது உருவத்தை ஒரு ஆர்ட் டிப்பார்ட்மென்ட் ஆள் வரைந்து கொடுத்தான். வேறு ஒரு படம் வரவே இவர் சிபாரிசில் தன்யா அதில் கதா நாயகியாய் ஒப்பந்தம் செய்யப்பட்டாள். படபிடிப்பு துவங்கியும் கூட இவர் ஒன்றும் அவசரப்பட்டு விடவில்லை. அதே நேரம் அவள் புரிந்து கொள்ள முடியாதபடி முற்றுகையிடுவதையும் நிறுத்தவில்லை. இவருக்கு பெண்கள் முட்டாள்கள் என்று தெரியும். இந்த மாதிரி  ஒரு ஆடு புலி ஆட்டத்தின் சுவாரஸ்யம் அன்றாடத் தினங்களின் குளுக்கோஸ் போல. இதெல்லாம் இல்லாமல் ஜீயால் இருக்க முடியாது. அவரால் சகித்துக் கொள்ள முடியாத ஒரே பெண்மணி எப்போதோ பேசுவதை நிறுத்தி விட்டு தன் வேலையை பார்க்கும் அவரது மனைவியை தான். மற்றபடி எல்லா பெண்களும் அவரை காதலித்தவாறு இருக்க வேண்டும். அப்படித்தான் தாங்கவே முடியாமல் ஒரு நாள் தன்யாவே பால் போல் இருக்கிற முகத்தை பார்க்க வேண்டாமா, பவழ மல்லியாய் விரிகிற சிரிப்பை பார்க்க வேண்டாமா என்று ஆர்வத்துடன் கேட்டு விட்டாள்.

தன்யாவின் உடம்பு பற்றி சொல்ல வேண்டாம். வேரில் பழுத்த பலா. சுளைகளாயிருந்தாள். சுனைகளோடிருந்தாள். அவரது கண்ணியத்தை மீறி நல்ல இறைச்சி என்கிற எண்ணம் கூட வந்து விட்டது. சமூகத்துக்கு சாரி  சொல்லிக் கொண்டார். ஆனால் இது என்ன கருமம்? வேலை முடிந்ததும் தன் பாட்டுக்கு தூங்குகிறவளின் டிசைன் பிடிபடவில்லை. அப்ப அப்ப குறட்டை வேறு வந்து போயிற்று. மன்னிக்கிற பெருந்தன்மையை முகத்தில் பொருத்திக் கொண்டு அவளை தட்டி எழுப்பினார்.

அவள் அவரைப் பற்றி பேச வேண்டியிருக்கிறதல்லவா?

குறைந்த பட்ஷம் அனாதை சிறுவனை தத்தெடுத்த தயாள குணம் பற்றி?

" ம்..ம்..என்ன. நீங்களும் படுத்துத் தூங்குங்களேன், ஜீ ! "

" அடச்சீ. இதுக்குள்ள என்ன தூக்கம் ? எழுந்துரு தன்னு ! "

" வெறுத கெடக்கடா ! "

அது ஒன்றுமில்லை. சரசம் துவங்கி அவள் துவளும் அழகை அதன் எல்லை வரை காண விரும்பி, ஜீ ஐ லவ் யு என்றெல்லாம் சொன்னதோடு மட்டுமல்லாமல் நான் உன்னை வாடி போடி தான் சொல்லுவேன், நீ என்னை வாடா போடா தான் சொல்ல வேண்டும் என்றும் உளறி விட்டார் தான் ஒரு அரைக்கிழம் என்பதை மறந்து. டா என்கிறாளே ? சொன்னாளா, இல்லயா - எனக்கு தான் அப்படி கேட்டு விட்டதா?

" டேய், படுடா ! "

இதெல்லாம் பரவாயில்லை. இரண்டு மணி நேரம் கும்பகர்ணத் தூக்கம் தூங்கி ஜொல்லு மூஞ்சோடு எழுந்து ஒன்று சொன்னாள்

" வித்யாதரன் உன்ன போல அல்லா. ஜோலி கழிஞ்சா செம்ம ஒறக்கம் ! "

வாரி போட்டு விட்டது. அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அலட்ஷியமாய் நடிக்க முடியவில்லை. அவளிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை. பதட்டம் சுழன்று தத்தளித்துக் கேட்டார். " யாரு அந்தக் கெழ பாடா ? அவன் உன்னப் போட்டுட்டானா ? "

" ம். ம். " என்கிறவள் அதற்கென்ன என்பது போல " ம்? " என்று கேட்கிறாள்.

ஜி பாவம். அவருக்கு மயக்கமாய் வந்து கொண்டிருந்தது.

" வித்யாதரன் சூப்பராணு, கேட்டோ ? என்னே பஸ்ட் கண்டுச்சி. அப்பவே கேட்டுச்சி ! "

" என்ன கேட்டுச்சி ? "

" ஓக்கலாமான்னு தான் ! "

மணி, ஜீ சொல்லியிருந்த தொகையை எண்ணிக் கொடுத்தான்.

பொது சேவை ஆட்களுக்கு ஊட்டியில் ஒரு ஆசரமமிருந்தது. பணத்தை வாங்கிக் கொண்ட இரண்டு ஆசாமிகள் சிறுவனை கலக்ட் பண்ணிக் கொண்டு சென்னையில் இருந்து கிளம்பினார்கள். காரில் கோவை போகிற வழியில் பையனை கே வீ சீயில் கோழியைக் கடிக்க சொல்லிவிட்டு வெளியே போய் நாலு கட்டிங்க் போட்டு திரும்பி வந்து பார்த்தால் அவனைக் காணவில்லை. நடந்து விட்டான். அப்படி நடந்தே போகுமிடம் தெரியாமல் ஒரு நகரத்துக்கு வந்து சேர்ந்து, அங்கே இருந்த ஒரு மலையின் மீது ஏறிக் கொண்டு விட்டான்.

உட்கார்ந்து குறிகோளுடன் அட்டையை பிரித்து மடக்க ஆரம்பித்தான்.

எந்தப் பக்கமும் திரும்பவில்லை.

சிறு வியப்பு.

பார்க்கிறான்.

அவன் கரத்தில் இப்போது ஒரு படகு இருந்தது. ஒரு கணம் தான். அவன் மனசில் என்ன ஒடியது என்பதை தான் சொல்ல முடியாதே? அதை முடிந்த வரை கிழித்துப் போட்டான்.

எழுந்து நின்று முக சுழிப்புடன் பார்க்க, ஒளிப்புள்ளிகளால் தூரத்தில் ஒரு நகரம்.

கையில் இருந்த கல்லை அந்த வெளிச்சத்திற்கு வீசுகிறான்.