Thursday, September 29, 2016





1


பூண்டு ஊறுகாய் இல்லாமல் எப்படி பார்ட்டியை துவங்க முடியும் என்று திவாகர் விசனப்பட்டு விட்டான். அதற்கு மேல் என்ன செய்ய முடியும். முதலில் அவன் மாப்பிள்ளை. அடுத்தது பார்ட்டிக்கு  பணம் கொடுத்தவன் அவன். மட்டன் ஃப்ரையோ சிக்கன் 65 யோ எனக்கு ஒரு பொருட்டில்லை என்பதாய் திவாகர் நெற்றியை பிசையவே கதிர் முருகனிடம் வண்டி சாவியை வாங்கிக் கொண்டு லாட்ஜை விட்டு இறங்கி வந்தான். பூண்டு ஊறுகாய் நாலு கடை தாண்டிப் போனால் கிடக்கும் தான்.ஜங்க்ஷனுக்கு வந்தான் புயல் மாதிரி.

செல்லில் நேரம் என்ன என்று ஒரு தடவை பார்த்துக் கொண்டு நம்பரைப் போட்டான்.

"எங்க ? "

சார்  என்று தலையாட்டி விட்டு வண்டியைக் கிளப்பி சிமரன் ஃபேன்சிக்கு பக்கமாய் பம்மிக் கொண்டு காத்திருந்தான்.

அக்கம் பக்கம் பார்த்தவாறே சித்ரா வந்தாள். இன்று தலையை ஒரு மாதிரியாய் சிலுப்பி விட்டுக் கொண்டிருக்கிறாள். எந்தப் பக்கம் நின்று பாத்தாலும் அழகி என்பது முக்கியம். வழக்கமான ஜில்லில் சிரிப்பு. கவரை கொடுத்தாள்.

"வரவா?"

" ம். பார்ட்டி எங்க? "

"செந்தில் ஆண்டவர்ல "

" பாத்து ! என்ன ? "

உண்மையில் சித்ராவிற்கு இருப்பது பெரிய மனசு. அவளது முலைகளைப் போலவே. அப்புறம் எப்பவுமே அக்கறை கொட்டும். லீ யில் மெரூன் கலர் சட்டை எடுக்க கவரில் இருந்த பணம் சரியாய் இருந்தது. எடுத்த சட்டையை பத்திரமாய் எடுத்துக் கொண்டு போய் வீட்டில் வைத்து விட்டு ஜங்க்ஷனுக்கு வந்த போது எதை வாங்க வந்தோம் என்பது நினைவில் இல்லை. எதற்கும் ஒரு பூண்டு ஊறுகாய் வாங்கி வைத்துக் கொள்ளுவோம்.
 
லாட்ஜில் ரூமுக்கு வந்த போது எல்லோரும் ரெண்டு பெக்கை முடித்து விட்டிருந்தார்கள். ஒரு பார்ட்டிக்கு இவ்வளவு லேட்டாய் வரலாமா என்பது போல திவாகர் என்னமோ கேட்டான். முதலில் நான் ஒன்று போட்டுக் கொள்கிறேன். மெரூன் சட்டை நன்றாய் தான் இருக்கும் இல்லயா. இந்த திவாகருக்கெல்லாம் கல்யாணம். என்ன பண்ணப் போகிறானோ? சரி, போகட்டும். எனக்கு ஒரு சட்டை எடுத்துக் கொடுத்திருக்கலாமே. இன்னொரு பெக் போனவுடன் யாரிடமாவது இதைப் பற்றி நியாயம் பேச வேண்டும் என்று முணுமுணுப்பதற்குள் பேச்சுலர் பார்ட்டி கல்சுரல் துவங்கி விட்டது.

"ஏய், மாப்ள பேசட்டும், மாப்ள பேசட்டும் ! "

திவாகர் டைட். இன்னொரு பெக் கேட்டான். யாரோ வேண்டாம் என்று சொல்லவே ஏன் வேண்டாம் என்று கேட்டான் அவன். அவன் கொஞ்சம் புரட்சியாளன். உலகின் நெறி முறைகளை மதிப்பது கிடையாது.



திவாகர் ஸ்பீச் :
எப்பவுமே முழ்காத ஷிப் ஃப்ரெண்ட் ஷிப் தான். நம்மளயெல்லாம் பிரிக்க முடியும்னு யாராவது கனவு கண்டா அவங்களுக்கு நான் ஒண்ணு சொல்லிக்கிக்கறேன். டோன்ட் வேஸ்ட் யுவர் டைம், ஓகே?

கைதட்டல்.

எல்லாரும் ஒண்ணா இருக்கானுங்கன்னு ஊருல பல பேருக்கு எரிச்சல். ஊர்மிளா கிட்டயே போட்டு குடுத்துட்டு இருக்காங்க. எதாவது பிரச்சின வரும், உன் புர்ஷன பாத்துக்கோன்னு சொல்லியிருக்கானுங்க. என்னைய்யா பிரச்சின வரும்? வரட்டுமே? பிரச்சின வரட்டும். போலீசு வரட்டும். சி ஐ டி போலீசு, சி பி ஐ போலீசு வரட்டும். ரா போலீசுக்கு தாத்தா ராணுவ பெட்டாலியனே வரட்டும். நாம பிரிஞ்சிருவோமா? பிரிஞ்சிருவோமான்னு கேக்கறேன்?

அப்டி போடு மாமு, அப்டி போடு மாமு.

சுற்றமும் நட்பும் சூழ, நல்ல நாளில் பெரிய நாளில்  கல்யாணத்தை பெரியவர்கள் நிச்சயித்திருந்தார்கள். எனவே மாப்பிள்ளைக்கு என்ன வேலை, காலம் பூராவும் பொண்ணை வைத்துக் கொள்ளுவதற்கு எவ்வளவு வரதட்சிணை போன்ற எல்லவற்றையும் பேசி முடித்திருப்பார்கள் என்று கொள்ளலாம். திவாகர் வீட்டில் தான் கல்யாணம். அது மரபு என்று சொல்லிக் கொண்டார்கள். மரபுப்படி சீரியல் பல்புகள். மரபுப்படி கூச்சல் போடும் ஹாரன். மரபுப்படி வாழை மரம். மரபுப்படி வெல்கம். மெருன் கலர் சட்டையை மாட்டிக் கொண்டு கதிர் கொஞ்சம் சீக்கிரமாகவே வந்து சேர்ந்து விட்டான்.

அவன் ஒவ்வொருத்தனாய் வந்து சேர்ந்த நண்பர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது திவாகருக்கு பெருமிதமாயிருந்தது. நண்பர்களும் மலர்ந்தார்கள். இவன் டென்ஷனாயிருந்தான். ஒரு வழியாய் அந்தி மயங்கி இரவு கூடிவிட்ட போது வந்த சித்ராவோ அலைகடலென வீற்றிருந்த தாய்குலத்தின் மத்தியிலேயே இருந்து கொண்டிருந்தாள். கோவிலில் வந்து இருந்த மணப் பெண்ணை அழைத்து வரக் கிளம்பிப் போனவர்களோடு பம்மிக் கொண்டு சென்று ஒரு சந்தின் சந்தில் சித்ராவின் முகத்தை பார்த்த போது அவள் தெம்பளிக்கும் ஒரு சைகையை செய்தாள். பதினொன்று என்று வாயை அசைத்தது தெளிவாய் பு¡¢ந்தது.

அவள் வாய் ரொம்ப அழகாய் இருக்கிறது என்கிற மின்னல் சுமார் ஏழு எட்டு நிமிடத்துக்கு வெட்டிக் கொண்டிருந்தது.

மிதந்து கொண்டே கல்யாண வீட்டின் பின் பக்கமிருந்த நண்பர்களுக்கு நடுவே நின்று கொண்டான். ஒரு வேளை இந்த நிமிடம் திவாகர் செத்துப் போனால் அடிக்க வேண்டிய தண்ணியைத் தான் அவன் மணவாழ்வின் சந்தோஷத்துக்காக அடித்துக் கொண்டிருந்தார்கள். இவனை குடி, குடி என்றார்கள். அவன் குடிக்காமல் சாகசம் செய்து கொண்டிருப்பதை ஒருத்தனும் கவனிக்கவில்லை. தடியன் ரவி எடுக்க வேண்டிய லெக் பீசை அவன் துழாவி முடிப்பதற்குள் லவுட்டிக் கொண்டு வந்து கடித்து இழுத்துக் கொண்டிருக்கும் போது விறகெடுக்க சன்னாசி வந்தான்.இவனை பார்த்தான்.

" எல்லாரும் என்ன பண்றாங்க? " என்றான்.

" மாத்தி மாத்தி புடிச்சிகிட்டுருக்காங்க "

அவன் பாட்டுக்கு விறகுகளை எடுத்துக் கொண்டு செல்லுகிறான். அவனுக்கு தெரியாதது எதுவும் இல்லை. இருந்தாலும் இந்த மாதிரி  கேள்விகள் தான் கேட்பான். பதில் சொல்லுவது நம் இஷ்டம் தான். என்னவென்றால் அவன் வெறும் சொம்பு. வினாயகம் கழட்டி போடுகிற கோமணத்தை அலசி போட முந்துகிறவன். அவனது அம்மா கூட வினாயகத்தின் வீட்டு புறக்கடையில் புழங்குகிறவள் தான். பத்து பாத்திரம் தேய்த்து முடித்தவுடன் அவர்கள் தருகிற எச்சில் சோற்றில் உயிர் வளர்க்கிற ஒரு வேலைக்காரி. அப்புறம் அந்தம்மா வினாயகத்தின் கூட பிறந்த தங்கையும் தான் என்பதை பொதுவில் வெளியே சொல்லுவது கிடையாது.

கதிர் நழுவினான். பதினொன்று அடிக்க சில நொடிகளே உள்ளன.

தோட்டத்தின் மற்றொரு பக்கத்தில் ஷெட்டுக்கு கல்யாண ரகளைகள் வந்து முட்டாது. அங்கு தான் வாயில் சிக்லட்டை போட்டு மென்று துப்பி கதிர் தயாராய் இருந்தான். சித்ரா வந்தாள்.  இருட்டை துழாவி விழிக்கிற அவளை நோக்கி தம்ஸ் அப் செய்ய அவளும் கவனித்து அதையே செய்தாள். வருகிறேன் என்பது போல செய்தவள் மறைகிறாள்.

அந்த இடத்தில் வந்து நிற்கிறவள் தான் சுந்தரி.

இவனை நோக்கி வந்து நெருங்கி நிற்கிறாள்.

அவன் ஒரு தீர்க்கதரிசி போல இரண்டு கைகளையும் தூக்குவதற்குள் அவள் புகுந்து கொண்டு நின்று முகத்தை ஏந்தினாள். அழகி. பேரழகி. உதடுகள் பிரிந்திருந்தன. அவன் குனிந்தான். வெகு நாள் பழக்கத்தாலும் மேலே என்ன செய்வது என்கிற கற்பனையோடு வந்திருந்ததாலும் பணி சீராய் நடந்தது. தோளின் மேலே இருந்த கதிரின் கரம் மெல்ல இறங்கி பக்கவாட்டில் இடுப்பை பற்றி மெதுவாய் மேலே ஏற ஆரம்பித்து முன்னேறி சட்டென்று முலையை பிடித்து விட உதட்டை பிடுங்கிக் கொண்டு சுந்தரி அவனைப் பார்க்கிறாள். வேறு வழி இல்லை, கையை வாபஸ் வாங்கியாயிற்று.

சிரிக்க முயன்றான்.

பளாரென்று ஒரே அறை.

வாழ்வு ஒரு கனவு என்றால் காதல் வாழ்வு ஒரு கோழிக் கனவு என்றெல்லாம் இந்த நேரத்தில் பாடினால் பொருத்தம்.

கதிர் தாகத்துடன் ஒடி பிடுங்கியும், தந்திரம் செய்தும், மோசடி பண்ணியும் குடித்தான். விழுந்து தூங்கினான். எத்தனை குளித்து க்ரீம் போட்டும் முகம் புன்னகைக்கவில்லை. இப்போது ஒரு விதத்திலும் எழுப்புதலே இல்லாத மெருன் சட்டை அவள் வாங்கிக் கொடுத்தது என்பதால் கழட்ட முடியாமல் கல்யாண வீட்டில் அப்படியே வலம் வர வேண்டியிருந்தது. அப்புறம் எங்கு நின்று பார்த்தாலும் சரியாய் தெரியாத அளவிற்கு அவள் எப்படி மறைந்து கொள்கிறாள் என்கிற சயின்ஸ் பிடிபடாமல் சோர்வுடன் தாலி கட்டுவதை பார்க்கப் போவது மாதிரி ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். சே, மணமேடையில் உட்கார்ந்து கொண்டு இடைவெளியில்லாமல் ஒரு மாப்பிள்ளை இப்படி புன்னகைத்துக் கொண்டிருப்பானா? வெறுப்புடன் திரும்பிய போது முருகன் சரளாவிடம் ஈ இசிகொல்ட்டு எம் வி ஸ்கொயர் என்று சொல்லிக் கொண்டிருந்தான். படிப்பை பற்றி பேசுகிறான் போல. இந்தப் பக்கம் திரும்பினால் அடுத்த நாற்காலியில் வினாயகம் வந்து உட்காருகிறார். சன்னாசி அவரது செல்லை தூக்கிக் கொண்டு முதுகு வளைத்திருந்தான். எப்படி சட்டென்று எழுந்து போவது? வினாயகத்துக்கு கோவம் வந்தால் யானை மாதிரி. தும்பிக்கையால் சுருட்டி மேலே தூக்கி தரையில் அடித்து காலால் நசுக்குகிற சுபாவம். அவர் இவனை ஒரு பார்வை பார்க்க சிரித்து வைத்தான். எதற்கும் சிரிப்பு நல்லது என்பதினால் மட்டும் அல்ல, அவர் சுந்தரியின் தகப்பனாரும் அல்லவா? ஓகே, இனி அந்தப் பக்கம் பார்க்க வேண்டாம்- அட்லீஸ்ட் இந்த சித்ரா எங்கே போனாள்?
     
" கதிர், இது உனக்கே அடுக்குமா? "

" அடுக்காது தான்! "

" பேசிக்கிட்டே இருக்கும் போது கைய புடிச்சிட்டியாமே? "

" நான் கைய புடிக்கல.. " மேலே சொல்ல முடியவில்லை.

நெஞ்சில் தீ கொண்டு காத்திருந்து, பார்த்திருந்து அந்தப் பேய் மவள் தன் குடும்பத்தோடு காரில் ஏறிப் போனாள். விவரம் தெரிந்த வயதில் இருந்து பல இடங்களிலும் இவன் இப்படி பல இடங்களிலும் நின்று கொண்டே இருந்திருக்கிறான். அவள் காரில் ஏறிப் போனவாறு இருந்திருக்கிறாள். மன்னிக்க வேண்டும், அவனுக்கு சில புரட்சி முழக்கங்கள் தோன்றுகின்றன. அவனுக்கு அது சரியாய் புரியவில்லை தான், சமத்துவமே இல்லாத இந்த உலகை அவன் அடித்து நொறுக்க விரும்புகிறான். ஒடுகிற காருக்கு பின்னால் சைக்கிளை மிதித்துக் கொண்டு ஓடுகிற சன்னாசியை தூ, தூ என்றான்.

சுந்தரி பின்னால் ஓடிக் கொண்டிருப்பது எதில் சேர்த்தி என்கிற யோசனை வருவதற்கு முன் அவனை பளாரென்று அறைந்த சுந்தா¢யின் பெண்மையின் கண்டிப்பு நினைவில் வந்தது. சே, இந்த நிமிடம் கதிர் எந்த அளவிற்கு சுந்தரியை விரும்புகிறான் என்பது அவளுக்கு தெரியாமல் போயிற்றே?


*****

2


நண்பர்கள் சுவரில் சாய்ந்து ஜட்டியுடன் உட்கார்ந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு முன் காக்கி பேன்ட் பூட்ஸ் போட்ட இரண்டு கால்கள் நடக்கின்றன. இன்ஸ்பெக்டர் தான். தனது பொண்டாட்டிக்கு பட்டுபுடவை வாங்கிக் கொடுத்தால் மட்டுமே உன்னோடு கொடைக்கானல் வர முடியும் என்று கூத்தியாளுக்கு கண்டிஷன் போட்டுக் கொண்டிருந்தார். மலையில் கும்மியடித்தால் எக்கோ உண்டு என்று சொல்லியும் படியவில்லை என்பதால் பையங்களை எழுப்பி நிறுத்தி சரியான அடி.

" எங்கடா பொண்ணு? எப்போ அவன் கூட அனுப்பி வெச்சீங்க? "

வினாயகம் ம், ம், ம் என்று உறும டிரைவர் காரை பறக்க வைக்கிறார். காரின் உள்ளே ஒரு கூட்டமே பிதுங்கிக் கொண்டிருக்கிறது. எல்லோருமே டென்ஷனாயிருக்கிறார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா தான். பஸ்ஸை மடக்கி நிறுத்தும் போது பார்த்து விட்ட கதிர் சீட்டுக்கு அடியில் ஒளிந்து கொண்டு விட்டான். பொது மக்கள் காட்டிக் கொடுக்கவில்லை. ஆனால் சரளாவும், அவளை கூட்டி வந்த முருகனும் மாட்டிக் கொண்டு விட்டார்கள். பஞ்சாயத்து. சரளாவிற்கு மூன்று மாதம், எனவே கல்யாணம் பண்ணிக்க ஓடினோம் என்றான் முருகன் சிம்பிளாய். ட்ரைவர் வினாயகத்தை பார்த்தார். அவர் தான் சரளாவின் அப்பா. வினாயகம் நல்ல வேளை பையன் வேறு சாதியாய் இருந்தால் செத்திருப்பான் என்கிற புன்முறுவலோடு பெருந்தன்மையாய் ஒரு தீர்ப்பு வழங்கினார்.

வினாயகம்
ஸ்பீச்
ஏதோ இளசுங்க. வயசுக் கோளாறு. தப்பு பண்ணிடுச்சுங்க. அப்புறம் இது அந்தக் காலம் மாதி¡¢யா? ஆம்பள ஆம்பளய கட்டிக்கிறான். பொம்பள பொம்பளய கட்டிக்கறா! மனசு விட்டு காதலிச்ச ஒரு பையனும் பொண்ணும் கட்டிக்கக் கூடாதா?

( கை தட்டல். )

இந்த விஷயதில் தப்பித்து விட்டான் கதிர்.  சித்ராவிடம் இருந்து சுந்தரியைப் பற்றி எதையும் பிடுங்க முடியவில்லை. கோபமாயிருக்கிறாள். அவ்வளவு தான். ஆனால் ஒவ்வொரு முறையும் சித்ரா, நீ சுந்தரியின் கையைப் பிடித்து இழுத்தது தர்மமே அல்ல என்ற போது குத்தலாம் போல இருந்தது. என்றாலும் அதற்கு நான் எந்த பிராய சித்தமும் செய்ய தயார் என்கிற பதிலை சொல்லி அனுப்பாமல் இருக்கவில்லை.ஒரு நாள் சுந்தரி  அவள் வீட்டில் அவள் தனியாய் இருப்பது அறிந்து எஸ் எம் எஸ்ஸில் நான் ஒரு மிருகம், என்னை மன்னித்து விடு என்று எழுதி, கூடவே அழுகை சிம்பல் போட்டான். சரளா முருகன் கல்யாணத்தில் ஜெனரேட்டர் அறைக்கு பின்னால் நீ வந்தாய் என்றால் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். நேரம் அதே பதினோரு மணி !

ஒரு தடவை பழமுதிர் சோலைக்கு கூப்பிட்டாளே என்று போனால் தனியாய் உட்கார்ந்து கசாட்டாவை நக்கிக் கொண்டு எதற்கு மெசேஜ் போட்டு சுந்தரியை டார்ச்சர் பண்ணுகிறாய் என்று சீறினாள் சித்ரா. கல்யாணத்தில் நீ எந்த விதமான எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது, புரிகிறதா? உனது கை பிடித்த இடத்தில் இப்போ கூட அவளுக்கு என்னவோ மாதிரி இருக்கிறதாம் !

முருகனின் கல்யாணத்துக்கு கதிர் ரொம்ப லேட்டாகத் தான் கிளம்பினான்.

மண்டபத்துக்கு எதிரே சன்னாசி மூன்று நான்கு பேருடன் நின்றிருந்தான்.

" சார், இவரு மிஸ்டர் கதிர். கதிர், இவுரு சோமு, இவரு பத்ரி , இவரு ராம்ஜி, இவரு கண்ணைய்யா! "

இவனுக்கு இருந்த குழப்பத்தில் அந்த ரியல் எஸ்டேட் பிரச்சினைகள் ஒன்றும் புரியவில்லை. பசங்க தண்ணி அடிக்கிற இடத்துக்கு தான் போக வேண்டும். தேடினான். யாரும் மாட்டவில்லை. டிரைவர் வீட்டு கல்யாணத்தை தன் வீட்டு கல்யாணமாய் வினாயகம் எடுத்து நடத்தவே குடி கொஞ்சம் தூரமாய் இருந்தது. கதிர் மூன்று பெக் போட்டான். ரெண்டு ஆப்பிள் சாப்பிட்டான். அரை துண்டு ஆம்லேட் கிடைத்தது. கொட்டையை தவற விட்ட அணிலை போல மந்தமாய் இருந்து கொண்டிருக்கும் போது திவாகர் அத்தனை பேரையும் கேவலமாய் பார்த்து விட்டு போனான். போதும் என்று தோன்றியது, விட்டு விட்டேன் என்று குடியை கேவலப்படுத்தியதற்கு அத்தனை பேரும் கொதித்து போய் பேசிக் கொன்டிருந்தார்கள். அந்தப் பெண் ஊர்மிளா உட்காரு என்பதற்குள் இவன் படுத்து விடுகிறான் என்றார்கள். கதிருக்கு எதுவும் சுவாரஸ்யப்படவில்லை. நேரம் நெருங்குகிறது. ஜெனரேட்டர் ரூம் பக்கம் போவதா, வேண்டாமா. வேண்டாம் என்று முடிவு செய்து, வீட்டுக்கு கிளம்பினான். அதற்குள் வயிறு பசிக்கவே தனியாய் போய் மண்டபத்தில் பந்தியில் உட்கார்ந்தான். திடுக்கிட்டான். மக்களுக்கு பந்தி பரிமாறுவதில் சுந்தரி. ஐயோ, தாவணியெல்லாம் அணிந்து கொண்டு காவியத் தலைவி மாதிரி . நெஞ்சை அடைத்தது. அவள் வைத்த லட்டை மட்டும் எடுத்துக் கொண்டு ஜெனரேட்டர் ரூமுக்கு பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான். மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.

பதினோரு மணிக்கு சா¢யாய் வந்தாள் சுந்தரி.

முட்டிக் கால் போட்டு பாதத்தை தொட வேண்டுமா, அப்படியே வீழ்ந்து விடுவதா என்றே யோசிக்கவில்லை. அவன் குனிவதற்குள் அவள் அவன் மார்பில் சாய்ந்து விட்டாள். முகத்தை ஏந்தி விட்டாள். முத்தத்தை தொடங்கி விட்டாள்.  அவளது உடல் மீது பட்டு விடக் கூடாது என்று முதுகுக்கு பின்னால் வைத்திருந்த கரங்களில் ஒன்றை அவளது கரம் தேடிப் பற்றியது. முன் பக்கம் கொண்டு வந்தது. மார்பில் வைத்து, முந்தானையை விலக்க ஏற்கனவே பட்டன்ஸ் அவிழ்க்கப்பட்டிருந்தன. அவன் முகத்தை தனக்குள் புதைத்துக் கொள்ளுகிறாள் அவள்.

கதிர் இந்த இடத்தில் ஒரு பாட்டை விரும்புவான். அப்படியே தெறிக்க வேண்டும்.

முருகன் தாலி கட்டும் போது சரளாவின் மேடிட்டிருந்த வயிறை பலரும் பார்த்தார்கள்.

கதிர் மண்டபத்தின் எந்தப் பக்கத்தில் நின்று பார்த்தாலும் சுந்தரி தெரிந்தது என்ன மாதிரி  ஜியாகரபி என்று தெரியவில்லை. ஒரு இடுக்கில் அவர்கள் எதிரும் புதிருமாய் கடந்த போது வாயில் ஒரு மசால் வடையை திணித்து விட்டு போனாள். அது கூட பரவாயில்லை, அவசரமாய் பால்கனி பக்கம் கூப்பிட்டு சப்பிக் கொண்டிருந்த சாக்லெட்டை இவன் வாயில் உமிழ்ந்து விட்டுப் போனாள். நண்பர்களோடு இருக்கும் போது அவளது கண்கள் தன்னை விழுங்கிக் கொண்டிருப்பது பார்த்து அவனுக்குள் அழுகை புரண்டது. திவாகர் எங்கே பொண்டாட்டி ஓடிப் போய் விடுவாளோ என்கிற மாதிரி அவள் கையை பிடித்துக் கொண்டு ஒரு ஓரமாய் இருப்பதை அனைவரும் ஓட்டுகிறார்கள். காதலுக்கு பிரதி நிதியாய் இவன் அதை கண்டித்தான். காதலை புரிந்து கொள்ள மாட்டீர்களா என்று வினாவெழுப்பினான். ஒரு நல்ல காதலின் அடையாளம் அது என்று மேஜையைக் குத்தினான். காதலின் மகத்துவத்தில் விம்மி பெருத்திருக்கும் இந்த நல்ல நாளைப் பற்றின  நல்ல செய்தியை சொல்லலாம் என்று பார்த்தால் சித்ரா தான் கண்ணில் படவே இல்லை.

இந்த முறையும் சுந்தரி காரில் ஏறித் தான் வீட்டுக்கு போனாள் என்றாலும் போகும்போது விட்டு சென்ற அந்தப் பார்வையை எப்படி மறக்க முடியும்?

வந்த விருந்தாளிகள் எல்லாம் போய்க் கொண்டிருந்தார்கள். திவாகர் ஊர்மிளாவின் அதட்டலை செவி மடுத்தவாறு போனதில் இவன் சரி  போயிட்டு வாடா என்று பத்து தடவை சொன்னதை கேட்கவே இல்லை. இதை காதல் என்று எடுத்துக் கொள்ளலாமா என குழம்பினாலும் சுந்தரி சுற்றி வந்த இடங்களை சுற்றி வந்தான். சொந்தக்காரர்களெல்லாம் கூட போன பிறகு எனக்கு இங்கே என்ன வேலை என்று உறைத்து முருகனிடம் சரளாவிடமும் விடை சொல்ல சென்ற போது முருகன் ஈ இசிகொல்டு எம் வி ஸ்கொயர் என்று சரளாவிடம் சொல்லிக்  கொண்டிருந்தான். நடுவில் எப்படி தான் அவளுக்கு கர்ப்பம் ஆயிற்றோ? மண்டபம் விட்டு தாண்டும் போது சீதனப் பொருட்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த சன்னாசி ஒரு நிமிஷம் என்றான் கதிரைப் பார்த்து.

" நான் எப்பவுமே இப்படி எடுப்பாவே இருப்பேன்னு நெனைக்கறாங்க கதிர். அப்டி இல்ல. கொஞ்ச நாள்ல வேற லெவல்ல ஆயிடுவேன். நீ முடியாதுன்னு சொல்றியா? "

" வீட்டுக்கு போவணும், நீ பிரச்சின என்னன்னு மட்டும் சொல்லு. "

" பிரச்சின என்ன பிரச்சின? என் மாமா பொண்ணு சுந்தரி என்ன லவ் பண்ணணும். அவ்ளவு தான். அவள நான் கல்யாணம் பண்ணணும். அவ்வளவே தான் ! "

எங்கேயும் இடி இடிக்காமல் அலைகள் குமுறாமல் ஒரு ஆட்டுக் குட்டி கூட திரும்பாமல் உலகம் இயங்குவதை கதிர் பார்த்து நின்றான்.


-இப்போ இடைவேளை சார்-




3

ஆரம்பிச்சிருவோமா?

ஒரு திரி  நெருப்பு கொளுத்தப்பட்டு அது விருவிருவென நகருகிறது. அதை கொளுத்தின பையனின் முகம். சரம் பற்றி டபடபவென வெடிக்கிறது. அதை தாண்டுவோம்.

தவில் நாதஸ்வரம் வாசிக்கிறவர்கள் செயின் மோதிரம் போட்டிருக்கிறார்கள் என்பதை கவனிக்க. ரிச் பாய்ஸ். வாசித்தவாறு நடக்கிறார்கள். சீர் செனத்தி தாம்பாளங்களுடனும், பட்டுப் புடவை நெக்லஸ் பெருமிதத்துடனும், மற்றும் பல குறுகுறுப்புக்களுடனும் முன்னேறி வருகிற பெண்கள். அவர்களில் பலரையும் நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாய் மூன்று வயது பெண் குழந்தையை கரம் பற்றிக் கூட்டி வரும் சரளாவை. ஒரு வயது பெண் குழந்தையை தூக்கி வரும் ஊர்மிளாவை. அப்புறம் சுந்தரியின் அம்மா. அவர்கள் இந்த ஊர்வலத்தில் நடந்து வருவதில் நடந்து வருவது என்ன வியப்பு? மணப்பெண் சுந்தரியல்லவா? அலங்கரித்த  பிரம்மாண்டக் காரில் சுந்தரியோடு தோழிப் பெண்ணாய் சித்ரா. இருவர் முகமும் வர்ண விளக்குகளில் தத்தளாங்கி அப்படி ஜொலிக்கிறது. அட, அப்படி ஒரு சந்தோஷம் அவர்கள் முகங்களில்!

ஊர்வலம் மண்டபத்தை நெருங்குகிறது. ஜஸ்ட் டங்க் ஸ்லிப். கல்யாண மாளிகை.  

ஆரத்தி எடுக்கும் போது சுந்தரி சலனமின்றி நிற்கிறாள்.

எஸ்டீம் க்ளோசப்பில் விசும்புகிறாள். சத்தம் இல்லாமல். உடலே கூட ஒரு முறை குலுங்குகிறது. அப்புறம் நிமிர்ந்து நாசூக்காய் கண்ணீரை துடைத்துக் கொண்டு மேக்கப் கலைந்திருக்கிறதா என்று ஜரூராகி, கக்கூசில் ஃப்ளெஷ்ஷை திறந்து விட்டு வருகிறாள். மணமகளை அழைத்துச் செல்லுகிறார்கள். கைதட்டல்கள் கேட்க படியேறுகிறாள். ரிசப்ஷன் மேடையில் கோட்டு சூட்டு போட்டு நிற்கும் சன்னாசிக்கு அருகே நின்று கொள்கிறாள் சுந்தரி. உய் உய் உய் என்று எவரோ சிலர் விசில் கூட அடிக்கிறார்கள். அனேகமாய் வாரித் தரும் பாரி வள்ளல் சன்னாசி நற்பணி மன்றத்தின் எழுச்சிமிகு இளையவர் பட்டாளமாயிருக்கலாம். சன்னாசியின் செல்லை தூக்கிக் கொண்டு முதுகு வளைத்து நின்றிருக்கிறார் வினாயகம். ஒரு செகண்ட்டை கூட விட்டு வைக்காமல் ஃபிளாஷ்கள் மின்னுகின்றன. மாண்புமிகு மந்தி¡¢கள், மானமிகு அரசியல் தலைவர்கள், மற்றும் பல நாட்டிற்கு உழைக்கும் நல்லவர்களுடன், அதிகாரிகள் சன்னாசியுடன் படம் எடுத்துக் கொள்ள போட்டி போடும் திருக்காட்சியை ரொம்ப அலட்ஷியமாய் பார்த்திருக்கிறாள் மீனாம்பா. சன்னாசியை பத்து மாதம் கருவில் சுமந்து ஈன்றெடுத்த அன்னை. சன்னாசியின் தாய்.

பத்து ப்ளாஸ்டிக் கிளாசுகள். அதில் சரசரவென சரக்கு ஊற்றப்படுகிறது. குளிர்பானம் பீய்ச்சப்படுகிறது. இறுதியாய் நிறையும் வரை தண்ணீர். மின்னற்பொழுதில் இந்த வேலைகளை செய்து முடித்த உழைக்கும் கரங்களுக்கு சொந்தமானவன் திவாகர். எல்லோருக்கும் எடுத்துக் கொடுக்கிறான். வாங்குகிற பத்து பேரில் கதிரும், முருகனும் இருக்கிறார்கள். சீயர்ஸ்டா. எல்லோரும் சரக்கை விழுங்குகிற அமைதியில் தூரத்தில் இருந்து கேட்கிறது சன்னாசி வாழ்க முழக்கம். கதிர் என்கிற ஒரு ஆளைத் தவிர மற்ற எவரும் அதை பொருட்படுத்தவே இல்லை என்பது நுட்பமாய் பார்த்தால் தொ¢யும்.

" திவா, ஒண்ணு கேக்கணும்! "

" என்ன பாசு? தெனமும் குடிக்கறனே, அதப் பத்தியா? "

" இல்ல திவா "

" அப்ப அப்ப பொண்டாட்டிய போட்டு அடிக்கறனே, அதப் பத்தியா? "

" இல்ல திவா "

" ஆஃபிஸ் ஃபிகர கரக்ட் பண்ணி செட்டப் பண்ணிகிட்டனே, அது? "

" இல்ல திவா "

" ஊர்மிளவ டைவர்ஸ் பண்ணலாம்னு ஒரு யோசன. அதப் பத்தி கேள்விபட்டிருப்ப? "
"    
" இல்ல திவா "

" தினம் ஒரு புதுமை. தினம் ஒரு புரட்சி. இதப் பத்தியா?'

" இல்ல திவா  "

" வேற என்ன எழவு மயிரு? நீயே சொல்லித் தொல ! "

" ஒண்ணும் இல்ல. சிம்பிள். நீ எப்ப சாவ? "

கதிரைத் தவிர மற்ற எல்லோரும் சிரித்தார்கள்.  அப்படி கூட சொல்ல முடியாது. அவன் சிரிப்பதைப் போல ஒன்று செய்ய வேண்டியிருந்தது. சிவாஜி மாதிரி. ஏனெனில் பால்யம் முதல் அவர்களில் ஓடிய மின்சாரத்தை யாரும் பார்த்திருக்க முடியாது. அதைப் பற்றி ஒருவரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. கதிர் தன் காதல் தோல்வியை தனியாய் தான் கொண்டாட முடியும். என்ன நடந்தது என்று அவனிடம் அவனே தான் கேட்டுக் கொள்ள முடியும். அப்படி கேட்டு அதில் என்ன பதில் கிடைக்கும் பெரிதாய்? சுந்தரி படி, படி என்றாள். இவன் ஒரே நேரத்தில் நாலு பக்கம் படித்துக் கொண்டிருந்த போதே சன்னாசி கோடீஸ்வரனாகி விட்டானே? ( இந்தக் காலத்தில் ஒருத்தன் கோடீஸ்வரன் ஆவதற்கெல்லாம் லாஜிக் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம், இல்லயா?) வினாயகம் மாதிரி ஆள் படிப்பாளியை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்? படிப்பாளியே என்ன செய்யப் போகிறான்? லோன் போட்டு வீட்டைக் கட்டி புல்ள குட்டிகள படிக்க வைப்பானாக்கும்? நோ, நோ இது வேறு ஆட்களின் காலம். அங்கே இருந்து சன்னாசி வாழ்க என்கிற இடிமுழக்கம் கேட்கிறது இல்லயா? அவனை ஒரு பெக்கு போட வைப்பதற்கு நம்ம ஊரு மாண்புமிகு நாலு பெக்கை போட்டு உருண்டதை யாரிடம் கேட்டாலும் சொல்லுவார்கள். எல்லாம் இருந்தாலும், சுந்தரி கொஞ்சம் விஷப் பிரயோகம் செய்து ஆஸ்பிட்டலில் படுத்து டிஸ்சார்ஜ் ஆகிப் போயிருந்தால் கூட கதிர் தனக்குத் தானே சமாதானம் சொல்லியிருந்திருப்பான். இப்படியா ஒருத்தி கழுத்தறுப்பாள்?

துரோகி !    

அவனுக்கு வெறியேறிப் போயிருந்தாலும் ஒரு கண்ணாடி கிளாசை மட்டுமே தரையில் அடித்து உடைக்க முடிந்தது. என்ன என்ன என்று சூழ்ந்தவர்களிடம் ஒரு ஃபக் ஆஃப் சொல்லிவிட்டு கிளம்பும் போது சித்ரா எதிர்பட்டாள்.

" லெவனோ க்ளாக். ஆஃபீஸ் ரூம், சைடு படிக்கட்டு ! " என்றாள்.

என்னடா இது?

ரிசப்ஷன் மேடை பக்கமே பாராமல் நண்பர்களுடன் லைட் ம்யூசிக்கின் கடைசி குத்து பாட்டுக்கு கதிர் ஆடினான் தான். மப்பு இறங்கட்டும் என்றும் ஒரு ஐடியா. ஆனால் அதற்குள் எவரோ சில பிக்காரிகள் சன்னாசியையும், சுந்தரியையும் இழுத்துக் கொண்டு வந்து நடுவில் விட்டார்கள். கல்யாணம் என்றால் மகிழ்ச்சியை வலுக்கட்டாயமாகவாவது பிழிய துடிக்கிறவர்கள் பையனையும் பெண்ணையும் நடனமாடத் தூண்டுகிறார்கள். என்ன ஒரு அவமானம்? டிரவுசர் கழண்டது போல சன்னாசி ஆட ஆடவே கூடாத அந்த சுந்தரி  தலை நிமிராமல் பொங்கி வரும் சி¡¢ப்பை அடக்கிக் கொண்டு ஆடுகிறாள். உண்மையில் நல்ல ஸ்டெப்ஸ். சுழன்றாடுகிறாள். உய், உய், உய். அதான், அதான், அதே தான் ! அமுக்கு, அமுக்கு, அமுக்கு. குமுக்கு, குமுக்கு, குமுக்கு. ஏய். இவங்கள் எல்லாம் என்னை வேண்டுமென்றே இடிக்கிறார்களா? இந்த திசைப் பக்கமே திரும்பக் கூடாதென்று கதிர் நகர்ந்தான். நூற்றியெட்டு பதார்த்தங்களுடன் தலைவாழை இலை சாப்பாடு. கழுத்து முட்ட சாப்பிட்டு இரண்டு பீடா மென்று குழாயில் வெகு நேரம் வாய் கழுவி, முகமும் கழுவி நேரம் பார்த்தான்.மணமகள் அறை என்பதை படித்தவாறு படியேறி, அடுத்த மூன்றாம் மாடியில் ஆஃபீஸ் ரூம் சைடு படிக்கட்டு எப்படி இருக்கிறது என்று பார்த்துக் கொண்டு மொட்டை மாடியில் வானத்தை பார்த்தவாறு படுத்தான். நிலா இருந்தது. மேற்கொண்டு அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. ஒரே நேரத்தில் பல பாடல்கள் முட்டியது. சினிமா பாடல்கள் தான். அதை பாடிப் பார்ப்பதால் ஒரு பயனும் இல்லயே என்று சந்தேகம் வந்து விட்டது. கவிதைகளை பற்றிய யோசனையும் கூடவே மான் மயில் குயில் வண்ணத்துப் பூச்சி மலை கடல் நதி பூ மலர் முள் நெஞ்சம் தஞ்சம் போன்ற வார்தைகளும் புரண்டு ஒரு வழியாய் மேகத்தில் மறைந்த நிலா என்கிற வரியைப் பிடித்து கண்ணீர் சிந்தினான். ஒரு கணம் விம்மி வாய் விட்டு அழுது விடவே முடிந்தது. இதயத்தை பிசைந்திருந்தவர்கள் நிறுத்தி விட்டார்கள் போல ஆசுவாசம். ஒரு சின்ன பூனைக் குட்டி எழுந்து வருவது போல வந்தது துணிச்சல். பெருத்து புலியாய் உறுமியது. என்ன இப்போ? என்ன நடந்திடும்? நடக்கறது நடந்து தான் ஆகும்னு இருந்தா கூட சரி, விடு, பாத்துப்போம்!

சுந்தரியால் நிமிர்ந்து பார்க்க முடியாது. குனிந்து தேம்புகிறாள்.

" எனக்கு தெரியும் சுந்தரி.  கல்யாணம் வேணாம்னு நீ அடம் புடிச்சிருப்ப. உங்கப்பா விட்டிருக்க மாட்டார். சன்னாசி விட்டிருக்க மாட்டான். நீ யாரையாவது லவ் பண்றதா இருந்தா அவன் தலய வெட்டி தண்டவாளத்துல போடணும்னு பேசி இருப்பாங்க. என் உயிர காப்பாத்தறதுக்காக நீ இந்த தியாகத்த செஞ்சிருக்க. இல்லயா? "

" கக், கக், கக், கக், கக்.."

" சா¢. போ. எங்க இருந்தாலும் நல்லா இரு "

ஏதோ ஒரு திருப்தி. அவளை விட்டு நடந்த போது தெம்பாயிருந்தது.

" கதிர் "

" ம்? "

" நான் நாளைக்கு மேல தான் இன்னொருத்தரோட பொண்டாட்டி. இன்னைக்கு இல்ல "

“ அதுக்கு? "

நிமிர்ந்து கண்ணடிக்கிறாள். வா என்பது போல முகத்தில் காட்டிய சைகை ஒரு மாதிரியாய் இருந்தாலும் ருசி கண்டவன் சும்மா இருக்க முடியுமா. மற்றும் உரிமையை வேறு நிலை நாட்ட வேண்டும்.

முத்தம் சற்று ஆழமாகவே போயிற்று என்பதை மட்டும் சொல்லி விட்டு விடுவோம்.

இதழ்களை மீட்டுக் கொண்டு விலகியவள் இப்போது ஆவேசத்துடன் சொன்னாள்.

" ஏய், நீ என்ன மறந்து உடனடியா ஒரு கல்யாணம் பண்ணணும். அதுக்கு அப்பறம் தான் என் ஃபஸ்ட் நைட்டே நடக்கும். ஞாபகம் வச்சுக்க. "

ஆறாத துயருடன் அவள் கண்களை துடைத்துக் கொண்டு போனது கண்களிலேயே நின்றது.

அவள் மணமேடையில் கண்ணீரும் கம்பலையுமாய் அமர்ந்திருக்கிற காட்சி உண்டாக்கிய குறுகுறுப்பில் தாலி கட்டப் போனதை பார்க்கப் போனால் அப்படி ஒரு பிட்டு இல்லை. சிரித்துக் கொண்டிருந்தாள். வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள். சன்னாசியின் கரங்களை கோர்த்துக் கொண்டிருந்தாள். இன்னும் சொன்னால் ஜோக்கு சொல்லி சும்மாவேனும் சன்னாசியையே சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாள். தாலி கட்டி சடங்குகள் ஓய்ந்த பிறகு கதிர், திவாகர், முருகன், பாசு உள்ளிட்ட நண்பர்களுக்கிடையே வந்து உட்கார்ந்த பிறகு சன்னாசி சிகரட்டு கிடைக்குமா என்று கேட்டான். பணம் வந்ததால எல்லாத்தையும் பழகிகிட்டேன் என்கிற மாதிரி கூறி புகை விட்டான்.

" சொல்லுங்கப்பா. எப்டி என் சம்சாரம் சுந்தரி ? சூப்பரா? "

எல்லோரும் அவளைப் பற்றி புகழ்ந்தார்கள். தலை நிமிராமல் போய் தலை நிமிராமல் திரும்பி வருவாளாம். காதல் விவகாரங்களே தெரியாத கற்புக்கனல் என்றான் ஒருவன். இந்த மாதிரி ஒரு குணவதி கிடைக்க சன்னாசி கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

வாயெல்லாம் பல்லாய் சன்னாசி சீன் போட்டாலும் உள்ளுக்குள் ஒரு டொய்ங்க் இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.  .

" இன்னைக்கு கன்னி கழிக்கிற வேல. பூ மாதிரி இருக்கறவ கிட்ட மொரட்டுத்தனமா நடந்துக்க கூடாது. நான் அப்படியே எனக்குள்ள ஒரு கடமை, கண்ணியம்,கட்டுப்பாட வர வெச்சுகிட்டிருக்கேன், யா ! "



*****






இறுதி


அவர்கள் நான்கு பேர் இருந்தார்கள். குடித்திருந்தார்கள். இறுக்கமாய் இருந்தார்கள். காத்திருந்தார்கள். அலுவலகம் முடிந்து சரியான நேரத்தில் திவாகர் வந்தான். அவனுக்கு அவர்கள் வழி மறித்தது பிடிக்கவில்லை. அவ்வப்போது அவர்களுடன் இருந்திருக்கிறான். குடித்திருக்கிறான். எவ்வளவோ பணம் செலவு பண்ணியிருக்கிறான். அவர்களும் இவன் காட்டி தருகிற ஆட்களை அடித்திருக்கிறார்கள். இந்த காலமே அப்படிதானே? அதற்காக அடிக்கடி பணம் கேட்பதும், கண்ட இடத்தில் வந்து நின்று தொல்லை செய்வதையும் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? ஸ்டேட்டஸ் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அப்புறம் பேசுவோம் என்று நகர முயன்றான். அவர்கள் சம்மதிக்கவில்லை.

" என்னம்மா நீ. ஃப்ரெண்ட்ஸ மதிக்க மாட்டியா? "

" யாரு ஃப்ரெண்ட்ஸு? பழகிட்டா ஃப்ரெண்ட்ஸா? எங்கிட்ட பணம் எல்லாம் இல்ல. குடுக்க முடியாது "

" இங்க பாரு திவாகர். நான் உன்ன என் உயிர் நண்பனா தான் நெனச்சேன். டெலிவரி டைமுல காசு தரேன்னு சொல்லியிருந்தியா, இல்லயா? அவள ஹாஸ்பிட்டல்ல கூட விட்டேம்பா. கஷ்டம். அதான் கேக்கறேன். "

" ஏய், ஊர்ல இருக்கறவன் கஷ்டத்துக்கெல்லாம் நான் என் மடிய அவுக்க முடியாது "

அவ்வளவு தான் தெரியும். அவன் திவாகா¢ன் வயிற்றில் கத்தியை இறக்கினான். வண்டியிலிருந்து திவாகர் சரிவதற்குள் அவர்கள் ஓடிப் போனார்கள். ஆட்கள் பார்த்து ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போவதற்குள் திவாகர் இறந்திருந்தான்.

கதிர் சென்னை வேளச்சேரியில் இருந்தான். விஷயம் தெரிந்தவுடன் அலுவலகத்தில் லீவு சொல்லி ஒரு காரை பிடித்துக் கொண்டு ஊருக்கு வந்தான். எல்லா நண்பர்களும் இருந்தார்கள். ஒரு வார்த்தை பேசாமல் சடலத்துக்கு அருகே உட்கார்ந்திருந்த ஊர்மிளாவை பார்த்தார்கள். குழந்தை நிறைய ஜனங்களைப் பார்க்கிற சந்தோஷத்தில் உற்சாகமாய் விளயாடிக் கொண்டிருந்த்தது. சவ அடக்கம் முடிந்து மனசு கனத்து துக்கம் கொப்புளிக்கும் இந்த நேரத்தில் குடி அர்த்தமுள்ளதாயிருந்தது. ஆனால் இறந்தவனை பற்றி பேசி பேசி என்ன அறிந்து கொள்கிறோம் என்பது தெரியவில்லை. ஊர்மிளா மட்டும் தெளிவாய் சொன்னாளாம். எப்படி இருந்து தன்னை நிரூபிப்பது என்கிற சவால் தான் திவாகரை கொன்றது என்றாளாம். ஒரு விதத்தில் எனக்கு விடுதலை என்று அவள் சொன்னதாய் கேள்விப்பட்டதை மட்டும் அப்படி சொல்லி இருக்க மாட்டாள் என்று சொல்லிக் கொண்டார்கள்.

கதிர் இரண்டு நாள் வீட்டில் இருந்தான்.

அவனுடைய அப்பா மெதுவாய் நல்லுசாமி நம்ம வீட்டுக்கு வந்திருந்தார் என்றார். இவனுக்கு புரியவில்லை. அவரோட பொண்ணு உன்னத் தான் கட்டிக்கப் போறேன்னு அடம் புடிக்குதாம். உனக்கு அந்தப் பொண்ண புடிக்குமா? போய் பாத்து நிச்சயம் பண்ணுவோமா? தூக்கி வாரி  போடாமல் என்ன செய்யும்? நல்லுசாமியின் மகள், வேறு யார்? சித்ரா. துண்டு துண்டு துண்டாய் ஏராளமான படங்களை ஓட்டிப் பார்த்தான். சந்தேகமே இல்லாமல் எல்லாமும் இனித்துத் தான் கிடந்தது.

போன் பண்ணினான்.

" நெஜமாவா? "

" ஏ, சீ, போன வை "

" இல்லடி. உனக்கு என் மேல லவ்வா. பொண்ணு பாக்க வர்ரதுக்காகத் தான் கேக்கறேன்? "

" ஆ, இவுரு பெரிய புடுங்கி. வரார், வரார்னு நான் வழி மேல விழி வெச்சு காத்துகிட்டிருக்கேன். போடா "

ஆனால் குடும்ப சகிதம் பெண் பார்க்க போன போது அவள் நாணத்துடன் காப்பி கொடுத்ததை யாரும் சொன்னால் நம்ப மாட்டார்கள். வெட்கத்தால் அவள் அவனை ஏறிட்டும் பார்க்கவில்லை.

மறுபடியும் போன் செய்தான்.

" நீ எனக்கு போன் பண்றத விட்டுரு "

" ஏன்? "

" கண்டவளுக்கும் கொஞ்சல குடுத்த அந்த போன்ல நீ எனக்கு எழவெடுக்க வேணா. கல்யாணத்துக்கு அப்றம் பேசிக்கலாம். வை. "

கதிர் வீட்டில் தான் கல்யாணம். எல்லோரும் விரும்பிக் கேட்ட மில்டரி  சரக்கை ஏற்பாடு செய்தான். சில சடங்குகள் முடிந்து வந்து 45 + 45 போட்டான். இந்தக் கல்யாணத்தில் தான் பதினோரு மணி விசேஷம் எதுவும் இல்லை என்று நினைப்பதற்குள் ஒரு எட்டு வயசு ஜாக்குலின் ஒன்று வந்து சித்ரா அக்கா கூப்பிடறாள் என்றது. பேசவே மாட்டேன் என்றாளே ? மணமகள் அறையை தட்ட படீரென கதவு திறந்து, எட்டிப் பார்க்கிற சித்ரா பார்க்கிறாள்.

" என்னடி? "

" உன் திலோத்தமா அதில இருக்கா. 11 ஆயிருச்சில்ல? போயி பாரு. "

"ம்? "

கதவு அடைக்கப்பட்டு விட்டது. அதே நேரம் அந்த அறையின் எதிர் கதவு திறந்தது. சன்னாசி வெளிப்படுகிறான். இவனை வா வா என்று அழைக்கிறான். அவனை நெருங்கி செல்லுகிறான்.

" உன் தங்கச்சி உன்ன பாக்கணும்ன்னு சொன்னாப்பா "

" யாரு, தங்கச்சி? "

" என் பொண்டாட்டி சுந்தரி தான் உன் தங்கச்சி. ப்ரதர் சிஸ்டர் மாதிரி பழகுவீங்களாமே? "

" ஓ. ஆள் இண்டியன்ஸ் ஆர் மை ப்ரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் "

" அதான். போயி பாரு "

சன்னாசி செல்ல சுந்தரி வருகிறாள். நகைக்கடை தான். சொக்குப் பொடி பார்வையுடன் நிற்கிறாள். சொக்குப் பொடி பார்வையுடன் நிற்கிறாள். நிறை மாத கர்ப்பிணி. வயிற்றை தடவிக் கொண்டே

" நல்லா இருக்கியா? "

" ம். நீ எப்டி இருக்கே? "

" இதோ ! "

நகைக்கடையை காட்டுகிறாள், ஸ்டைலாய்.

" அவரு என்ன கண்ணுக்குள்ள வெச்சுப் பாத்துக்கறார். உன்ன மாதிரி இல்ல. நான் அப்டி போன உடனேயே இளிச்சிகிட்டு கல்யாணம் கட்டிக்க ரெடியாயிட்டியே? ஆமா, நீ என்ன உண்மையா தான் லவ் பண்ணியா, இல்ல நடிச்சுகிட்டிருந்தியா? கேவலம் எனக்காக ஒரு ஆறு மாசம் தாடி கூட வளக்காதவன் நீ. உன்ன இனிமேல் நான் நெனைக்கவே மாட்டேன்னு சொல்லத் தான் கூப்பிட்டேன். போயும் போயும் ஒருத்திய கட்டறான் பார். அவளும், அவ மொகரையும். போ ! "

கதவு மூடிக் கொண்டது.

இந்தப் பக்கம் கதவு திறந்து அதில் சித்ரா.

" என்ன சொன்னா? "

" சித்ராவும் நானும் உயிரு. அவள நல்லபடி வெச்சு பாத்துக்கணும்னு சொன்னா "

" அவ அப்ப்டி மந்தரம் ஒதலன்னா நீ என்ன நல்லா வெச்சுக்க மாட்டியா? "

" ஹி ஹி "

" மூணாங்க்ளாசு படிக்கறதுல இருந்து நான் உன் சூ பின்னால வந்துகிட்டுருந்தா நீ அவளையே மோப்பம் புடிச்சிகிட்டு இருந்தல்ல? நல்லா மாட்னடி எங்கிட்ட. ஃபஸ்ட் நைட்லயே உன்ன என்ன பண்றேன் பாரு ! "

" ஹி ஹி "

" சீ, ஓடிப் போ ! "

காலை முகூர்த்த நேரத்தில் ஊர்மிளா குழந்தையுடன் வந்தது எவ்வளவு பேருக்கு பிடித்தது, பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. உறுதியோடு கூடிய சீக்கிரம் மறுமணம் செய்யப் போகிறேன் என்றது கதிருக்கு நிம்மதியாய் இருந்தது. சித்ரா நாணத்தில் படுத்தே விட்டது போல நடித்துக் கொண்டிருந்தது தப்பாய் தெரியவில்லை. ஒரு வழியாய் எழுப்பி நிறுத்தி மூன்று முடிச்சைப் போட்டான். காதில் அடிக்கடி எதையோ சொல்லிக் கொன்டிருந்தாள். ஒரு முறையும் கேட்கவில்லை. ஆள் அரவம் குறைந்த நேரத்தில் " நைட்டு எட்டு மணிக்கெல்லாம் படுக்கப் போயிடலாம் " என்றாள். அவன் அவளை பார்த்தான். சரியாய் சொன்னால் இப்போது தான் அவளை முழுசாய் பார்க்கிறான். ஆங்காங்கே அவ்வப்போது அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று அவளை பார்க்கவே பார்க்காமல் ஒருவேளை பார்த்தால் அவளில் விழுந்து விடுவோமா என்று பயந்தவாறிருந்திருக்கிறான். ஓ, இந்த கண்கள், இந்த இதழ்கள், இந்த கழுத்து. முலைகள் பெரிசென்று முன்னமே தெரியும். இன்னைக்கு உன்ன என்ன பண்ணப் போறேன் பார் என்று மனசில் நினைத்தது எப்படி முகத்தில் வந்ததோ?

" நான் ரெடி " என்றாள் அவள்.





முற்றும்.




சரி , விடு, பாத்துப்போம் !
ஒரு பெரிய சிறுகதை.

மணி எம் கே மணி.


Saturday, September 10, 2016




உடன்படிக்கை
ஒரு சிறுகதை.



ராஜி கவனித்து விட்டான், அருள் வருவதை. கையில் குப்பியை வைத்துக் கொண்டு உட்காருவதற்கு தோதான இடத்தை தேடுகிறான். எப்படியும் தன்னை பார்க்காமல் இருக்கப் போவதில்லை. ராஜி சரக்கு இருந்த கிளாசையே பார்த்துக் கொண்டிருப்பதாய் பேர் பண்ணினாலும் தன்னை மீறி விழிகள் அவனை பார்க்கத் தான் செய்தது. ம்ம், அதுதான், கவனித்து விட்டான். ஒரு கணம் திகைக்கிறவன் உடனடியாய் எதிர்பக்கத்துக்கு விருட்டென்று சென்று விடுகிறான். உடனடியாய் தேர்வு செய்து அவன் அமர்ந்து விட்ட இடமும் இங்கிருந்து பார்க்கக் கூடியது தான் என்று அந்த முட்டாளுக்கு தொ¢யவில்லையா? சொல்ல முடியாது. திட்டம் போட்டு வந்திருக்கலாம். ராஜி எழுந்து போய் விடலாமா என்று யோசிக்கும் போதே அது முடியாது என்பதையும் அறிந்து கொண்டான். பாய்ந்து வருவானா?

பிச்சுவா வைத்திருக்கலாம்.

பாரில் கூட்டம் அதிகமென்றோ குறைவென்றோ சொல்லிக் கொண்டிருப்பது வீண். இந்த நகரம் கழித்துக் கட்டுவதையும், ஒழித்துக் கட்டுவதையும் செய்தவாறு தான் இருக்கும். ஒரு பையன் சொடக்கு போட்டு தான் யாரென்று காட்டுவதாய் இன்டெர்வெல் பன்ச் சொல்லி கூச்சலிடுவதை பலரும் வேடிக்கை பார்த்திருந்தார்கள். தனியாய் அமர்ந்து குடிக்கிறவர்களுக்கு தொலைக்காட்சியை கவனிக்க விருப்பமில்லையென்றால் இந்த வேடிக்கைகள் முக்கியம். அருளும் கூட அந்தப் பையனை பார்ப்பது போல அவனைக் கடந்து தூரத்தில் மிகவும் கடமையுணர்ச்சியுடன் குடித்தவாறிருக்கும் ராஜியை அப்ப அப்ப பார்த்துக் கொண்டான். இந்தக் கூச்சல் எல்லாம் சும்மா. பையன் வெறும் பசும்பால். கொட்டினால் அண்ணே என்று மண்டி போட்டு விடுவான். அருள் அப்படியா? நர்மதாவை டாவடிக்கும் போது நாலு கெணறு ஹவ்சிங்க் போர்டுக்கு போயி ரோட்டுக்கு நடு செண்டரில் நின்று ங்கோத்தா மாசா என்று மொத்த ஜனத்திடமும் சீறியிருக்கிறான்.

ஒரு தடவை கையில் கெரசின் கேன்.

" ஏ, நர்மதா வெளிய வாடி. உங்கொம்மா பருப்புன்னா நான் அத விட பெரிய பருப்பு. எறங்கி வாடி. காலங்காத்தால மாங்காட்டு தாயி முன்னால நிக்க வெச்சு உன் கழுத்துல தாலி கட்டுறேனா இல்லியா பாரு! "

பொதுவாய் குடிக்காத நேரங்களில் நாய் குட்டிகளை வருடி கொஞ்சி விட்டு போவது உள்பட ஊரில் உள்ள அத்தனை பேரையும் குசலம் விசாரிக்காமல் போகாத அருள் எழுத்தில் வர முடியாத கெட்ட வார்த்தைகளை நர்மதா வீட்டு வாசலில் நின்று வீறிட்டால் தான் என்ன. அதெல்லாம் அந்த மக்களின் வாழ்வில் ஒரு பகுதி. கடந்து போவார்கள். அல்லது வசதியாய் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார்கள். சிலர் பக்கத்தில் சென்று அவனை உபதேசிப்பதுண்டு. சில சினேகிதக்காரங்க வேறு மாதிரி.

" என்ன மச்சான், டெமோ காமிச்சுகினு இருக்க ? டின்ல என்னா, கஞ்சித் தண்ணியா? “

" ஏ, லவ்டேகபால். இது க்ருஷ்னாயில்டா. இத பார். அவ வரலன்னா இப்ப ஊத்திக்கறேன் பாக்கறியா ? "

மாங்காட்டுத் தாய் பச்சை சேலை உடுத்தியிருந்தாள். நர்மதாவின் கழுத்தில் தாலி கட்டும் போது எல்லாமே மங்களகரமாயிருந்தது. மாங்கல்யம் தந்துதானே சொன்ன அய்யிரு மனசார வாழ்த்தியதில் கூட கொறை சொல்ல முடியாது. கிழக்கு பார்த்த வீட்டை கொடக்கூலிக்கு எடுத்துக் கொண்டு, குபேர மூலையில் வெளக்கு பத்த வச்சு, சுப முகூர்த்ததில் பால் பொங்கி வர இல்லறமென்பது நல்லறமாய் தான் துவங்கி நகர்ந்த்தது. ஒரு வேளை நர்மதாவின் மினுங்கல் குழப்பமாகவே இருந்ததோ? அவளை தொடுவதற்கு குடி கொஞ்சம் வசதியாய் இருந்தது. பழகி விட்டால் பாயாசத்தையும் தான் விட முடியாது. இரவு நேரங்களில் அருள் பெரும்பாலும் குடித்திருந்தான். இரண்டு குழந்தைகளுக்கு அப்புறம் சாரி உன் பேரென்ன நர்மதா தான என்று வேறு அடிக்கடி கேட்டான். காசு கணக்கு வழக்கு தகராறில் பார் பையனை அடித்து விட்ட ராஜியை தட்டிக் கேட்கப் போய் ரத்தம் வழிய வந்து படுத்த அவனை கட்டிக் கொண்டு அழுத நர்மதாவை இப்போது நினைத்துக் கொள்கிறான். அவளது உடல் வாளிப்பை மறக்க முடிவதில்லை. காய்ச்சல் வருவதைப் போல உணர்ந்தான். ஒரு பெக்கை அப்படியே விழுங்கி விட்டு மிச்சம் இருந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு எழுந்தான். இவனையே பார்த்துக் கொண்டிருந்த ராஜியை நோக்கி நகர்ந்தான். ஒரு சிறிய பேனாக் கத்தி தான் இருக்கிறது. ஒரு ஆள் அடங்கிப் போக தாராளமாய் போதும்.

" வணக்கம் ! "

" ஆங்க், வணக்கம் ! "

அருள் ராஜிக்கு எதிரே உட்கார்ந்தான். ஒரு பெக்கை ஊற்றிக் கொண்டான்.

" நீயும் ஊத்திக்க ராஜி ! "

" சர்தான் ! "

" சீர்ஸ் ! "

" சீர்ஸ் ! "

ராஜி அய்யனார் சிவாவின் ஆள். சிவா என்றால் அந்தப் பகுதியின் ஆல் இன் ஆல் இல்லயா? கிட்டத்தட்ட பனிரெண்டு வைன் ஷாப்புகள். ஹார்ட் வேர் கடைகள். லாரி சர்வீஸ். எல்லா தொழிலிலும் கொஞ்சம் தில்லாலங்கடி இருந்தால் மட்டுமே பணம் கொட்டும் என்பதை தலைமுறையாகவே நம்பிக் கொண்டு வந்ததால் போலீசாரை ரவுடிகளாகவும், ரவுடிகளை போலீசாராகவும் கையாண்டு பொது மக்களையெல்லாம் வெறும் பீப்பிகளாக ஊதுகிற பிரமுகர். கட்சிகளின் கழகங்களின் அள்ளக் கைகள் எல்லாம் ஒரு கட்டத்தில் ராஜிக்கே வணக்கம் வைக்க ஆரம்பித்த போது தான் அவன் பல பேரை அடித்தது போல பார் பையனை அடித்தான். தட்டிக் கேட்ட அருளை அடித்தான். வானுலகம் என்னும் மாளிகையில் மின்னும் பூமகள் ஒருத்தி மறு நாள் வந்து ஏண்டா என் புருஷன அடிச்சே என்று கேட்டதை நம்ப முடியவில்லை. அவள் திட்டுவதை எல்லாம் கேட்டிராமல் அவளது கண்கள் விரிவதை, கன்னம் சிவந்திருப்பதை, உதடுகள் திறந்து மூடும் போது பற்கள் சிப்பி போலிருப்பதை பார்த்திருந்தான். நீ செவுடா என்று கேட்டு விட்டு அவள் ஒரு சி¡¢ப்புடன் போனது மனதில் சித்திரம் போல விழுந்து விட்டது, என்ன செய்ய? மறு நாளே காத்திருந்து சாலையில் பார்த்தான்.

" என்னா? "

" ஒன்ணும் இல்ல "

" இல்ல, நீ பாக்குற லட்ஷணத்த பாத்தா என்னவோ இருக்கு போலருக்கே? "

அவன் வெட்கப்பட்டு விட்டான். அவள் அவனை வினோதமான சிரிப்புடன் பார்த்துக் கொண்டு போனாள்.
அடுத்த முறை அவன் ¨தைரியமாகக் கேட்டு விட்டான்.

" வரட்டா? "

அருளிடம் சிலர் சொன்னார்கள். வீட்டுப் பக்கமோ, ரோட்டுப் பக்கமோ அவன் வருகிறானா என்று சாதாரணமாய் கேட்டான். அப்புறம் சில நாட்கள் கழித்து வலுவாய் கேட்ட போது அவள் என்னையா சந்தேகப்படுகிறாய் என்று கதறினாள். பின்னர் வழக்கம் போல ஒரு போதையில் ததும்பின கறுத்த பின்னரவில் வீட்டுக்கு வந்து கதவை தட்டிய போது ராஜி தான் வந்து கதவைத் திறந்தான். மேலுடம்பில் சட்டை இல்லை. இனிமேல் இந்தப் பக்கம் வராதே என்றான். குரல் மிகவும் கண்ணியமாயிருந்தது. அதே நேரம் அவன் கையில் பெரிய கத்தியும் இருந்தது.
மிகக் குறைந்த பட்ஷம் இதெல்லாம் நியாயமா, அடுக்குமா என்று நர்மதாவிடம் கேட்க விரும்பினான் அருள். இல்லை. அது முடியாது. அக்கம்பக்கத்தில் குடும்பங்கள் இருக்கின்றன என்று ராஜி கவனப்படுத்தினான். அதை விட ராஜி கத்தியை ஆட்டிக் கொண்டே பேசினது முக்கியம்.

எவ்வளவோ கலாட்டா. பஞ்சாயத்துக்கள். புகார் மனுக்கள்.

கடைசியில் அந்தத் தெருவின் முனையில் புட்டு இடியாப்பம் விற்கிற புஷ்பா அக்காவே சொன்னாள். " ஏம்பா, அவன் தான் அவள நல்லா வெச்சு பாத்துக்கறான் இல்ல? கொழந்தைங்களும் சந்தோஷமா தான் இருக்கு. நீ எதுக்கு வந்து தொல்ல குடுத்துனு இருக்க? எல்லாத்துக்கும் ஒரு நியாயம் வேணா? " என்ன சொல்லுவது. எறங்கி வாடி, வாடி என்று கெரசினை ஊற்றிப் பற்ற வைத்துக் கொண்டவன் இன்று உயிரோடு இருப்பது தெய்வாதீனம்.
உடலில் தீக்காயங்கள். முகத்திலும் கூட கொஞ்சம் இருக்கிறது. டுபாகூர் கான்வென்டில் திருடன் போல சென்று பிள்ளைகளை பார்க்கும் போது சிறியவன் அலறியே விட்டான். எப்படியும் ராஜிக்கு ஒரு நல்ல மனசு இருக்கவே தான் ஸ்கூல் பக்கம் போகவே முடிந்தது. அது மட்டும் அல்ல, அவர்கள் வீட்டு முன் நின்று கடை வைக்கிற நேரத்தில் அடித்த சரக்கு போதாது போலிருக்கும். இவன் ராஜியிடமே நூறு இருனூறு கேட்டு வாங்கிக் கொள்ளுவது தான். எப்போதும் இருக்கிற கூச்சலைத் தவிர்த்து அடங்கிய குரலில் அவர்களை கேலி செய்ய ஆரம்பித்தவன் காலப் போக்கில் தன்னைத் தானே கேலி செய்து கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பது ரசிக்கக் கூடியதாயிருந்தது.

" சைட் டிஷ் ஏதாவது சொல்லலாம். என்ன சாப்பிடறே ? " ராஜி கேட்கிறான்.

" எதுன்னா சொல்லு. "

" முட்ட போட்டி? அது இங்க நல்லா இருக்கும். "

" சரி , சொல்லு. "

சிவா தனது வைன் ஷாப்புகளுக்கு பக்கத்திலேயே போலி சரக்கு செய்யும் கிடங்குகளை வைத்திருப்பான். அதை பகிரங்கமாக தனது கடையில் வைத்து வியாபாரம் செய்வதை குடிகாரர்கள் பார்க்காமலா இருந்திருப்பார்கள்? இரவு பனிரெண்டுக்கு மேல் மும்முரமாய் வியாபாரம் நடந்து பணம் குவியும். ஒரு தடவை மார்ச்சுலரி ஸ்பிரிட்டில் எதுவோ கலந்து குழப்பமாகி நாலு பேர் மண்டையைப் போட்டு விட்டார்கள். போலீசுக்கு ஏதோ ரெண்டு பேராவது கேசுக்கு தேவைப்பட சிவா ராஜியை போடா என்றார். நோ. வாய்ப்பே இல்லை என்றான் அவன். எத்தனை பிரச்சினைகளுக்கு நடுவில் அவன் நர்மதாவை பாதுகாத்துக் கொண்டிருக்கிறான்? விளையாட்டா. சொன்ன பேச்சைக் கேட்காத ராஜியை அவர் பார்த்தார். அந்த சாம்ராஜியத்தில் அந்த மாதிரி ஆட்களுக்கு இடமே இல்லை. ஒரு நாள் இரவு சுற்றி வளைத்த போலீசு அவனை கஞ்சா கடத்தி வைத்து இருந்ததற்கு சிறை பிடித்தார்கள். வெளியே வந்த பிறகு வேலை இல்லை. நர்மதா ஒண்டியாய் வேலைக்குப் போய் பிள்ளைகளை காப்பாற்ற ஆரம்பித்தாள். அலுப்போடு தள்ளிப் படுத்து தூங்கினாள். ராஜி ஆட்டோ கீட்டோ ஒட்டி தான் குடிக்கவே முடிந்தது. சிவாவின் ஆள் இல்லை என்பதால் மதிப்பு மரியாதை இல்லை. சிலர் என்னடா என்று உறுமி அடிக்கவே வந்தார்கள். எதுவும் பிடிக்கவில்லை. நர்மதாவையும் குழந்தைகளையும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவள் தான் இப்போது வாழ்கிற வாழ்க்கையை கேவலமாக கருதுவதாகவும் தன்னை புழுவாக பார்ப்பதாகவும் அவன் புகார் செய்தான். அதில் பாதிக்கு பாதி உண்மையாகவும் இருந்தது.
ஒரு நாள் அவள் முகத்தை உடைக்க வேண்டும் என்று முடிவு செய்து, முஷ்டியை வீசிய போது நம்பவே முடியாத அளவு மூர்க்கத்துடன் அவள் அருவாள்மனையை தூக்கிக் கொண்டு வெட்ட வந்தாள்.
மானம் கெட்ட வாழ்க்கை வேண்டாம் என்று வெளியேறி வந்தாயிற்று.

" என்ன ராஜி யோசிக்கறே? "

" நீ என்ன யோசிக்கற? "

" இப்ப கூட நெனச்சா நான் உன்ன போடுவேன்! "

" சும்மா இரு அருளு "

" டேய், போடுவண்டா ! "

" தூ! "

பேனா கத்தி சரி தான். ஆனால் அதை ராஜி பிடுங்கி எறிந்து விட்டான். இருவரும் கட்டிக் கொண்டு உருண்டார்கள். இரண்டு பேருக்குமே ரத்தம் வந்தது. லாக்கப்பில் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு காயிதம் பொறுக்கியிடம் பீடி வாங்கிப் புகைத்தார்கள்.

" ஏ அருளு. உன்ன மாதிரி ஒரு நல்லப் புருஷன் எவளுக்கு கெடைப்பான்? இருந்தாளா. உன்ன விட்டுட்டு என் கூட ஒடி வரல? சரி , என் கூடயாவது இருக்கணுமே? இருக்க மாட்டா. அவளால நீயும் நல்லால்ல. நானும் நல்லால்ல. எப்டி இது? "

இன்ஸ்பெக்டர் வந்ததும் எல்லோரையும் வெளியே துரத்தி விட அய்யனாருக்கு வந்து சைடில் சரக்கு வாங்கிக் குடித்து ஆவேசத்துடன் பேசியவாறிருந்தார்கள். இறுதியில் அவர்கள் இருவருமாய் சேர்ந்து அவளது கழுத்தை நெருக்கிக் கொன்று தொங்க விடுவதாய் முடிவாயிற்று.

நடக்க ஆரம்பித்திருந்தார்கள்.

" நடவடிக்கை சரியில்லாத பொம்பளைங்களுக்கு இது ஒரு பாடமா இருக்கணும் ! " இதை இருவரில் யார் சொன்னது என்பது கேட்கவில்லை.