Saturday, February 18, 2017




நுழைந்தும் அமர்ந்தும்
திணித்தும் தணிந்தும்
முறைக்குள் பிதுங்கும்
ஒன்றை
பாறை மீது மோதி பிளந்து
குளிரில் விறைக்க வைத்தேன்


ஒரு தேநீர் சாப்பிடும் நேரம்
வனத்தின் துல்லியத்தில் திடுக்கிட்டு பறக்கும்
ஒற்றைப் பறவை கிழித்த காற்றை கேட்டிருத்தல்
கண்ணியமான தோழி அறியாமல்
முலை முனையில் ஒரு சிந்தனை
மற்றும் பல தாள்களில் எனது பெயரை எழுதி
அதன் வசீகரத்தை நிலை நிறுத்த
கொழா சண்டை


அவ்வப்போது
உறக்கத்தில் நடந்து
மந்திரம் பிதற்றி
ஆணியை பிடுங்கி
அந்த ஓநாயை தழுவிக் கொள்ளும் போது
கழுத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் குருதி
கிணுங்கென்று விழும் மின்னாமினுங்கி
தங்க நாணயம்.


அறிவாயா என் கிளிக்குஞ்சே
அது நான் செல்வழிக்காத சொல்.

Wednesday, February 15, 2017








தொட்டால் பூ மலரும்.
ஒரு சிறுகதை.







தொடட்டுமா என்று கேட்டேன்.

தொடு என்று சொல்லலாம். தொடாதே என்று சொல்லலாம். அவள் அங்கிருந்து நகர்ந்து சென்று யாராவது நான் சொன்னதை கவனித்திருப்பார்களா என்று பார்த்தாள். சந்தேகம் தீராமல் பார்த்தவாறே இருந்து கிளர்ச்சியுடன் என்னை நோக்கி திரும்புவதற்குள் ஆட்கள் வந்து விட்டார்கள். எனக்குள் டிரம்ஸ் முழங்கி கொண்டிருந்தது. அதே இதய துடிப்பு முகத்தில் முழங்குவதை யாரும் கவனித்து விடக் கூடாது என்பதற்காக அவள் பாத்ரூம் சைடு போவதை பார்த்திருந்தேன்.

இன்று முடியாது.

வந்து, என் எதிரில் உட்கார்ந்திருந்தவன் " எனக்கு ஜே ஜே புரியல " என்றான்.

ஒரு பிடி மூச்சுக் காற்றைக் கைப்பற்றினால் தான் பேசவே முடியும். அப்புறம் அதில் தங்கி சகஜம் பண்ணிக் கொண்டால் இலக்கியம் பேசலாம். அந்த தர்ம சங்கடம் தொடங்குவதற்குள் தம்பி வந்தான். அப்பாவிற்கு உடல் நலமில்லை என்பது செய்தி. நான் யாருக்கும் எதையும் சொல்லவில்லை. அவனையும் அழைத்துக் கொண்டு விறுவிறுவென்று நடந்தேன்.

பிரச்சினை வயிற்று போக்கு. நிறைய தடவை போயிருக்கிறது. டிகாஷன் டீ குடித்து வைத்திருக்கிறாராம். கேட்ட போதெல்லாம் போட்டு கொடுத்திருக்கிறேன் என்று அம்மா திருப்தியாய் சொன்னாள். படுத்திருந்தவரை வலுக்கட்டாயமாய் எழுப்பி ஒரு ஆட்டோ வைத்து அழைத்துப் போனேன். அட்மிட் பண்ண சொன்னார்கள். மனசு பயம் கொள்ள துவங்கியது.

கேள்விப்பட்டு சிலர் வருவார்கள். யாரிடமெல்லாம் காசு கேட்க முடியும்?

இரண்டு கரத்திலும் க்ளுக்கோஸ் டியூப் பொருத்தப்பட்டது. பொதுவாய் எந்த வியாதியும் வராமல், அப்படி வந்தால் எந்த ஹாஸ்ப்பிட்டலுக்கும் போகாமல் டிமிக்கி கொடுத்து வந்தவர். படுக்கை மற்றும் சூழ்ந்து பார்க்கிற மருத்துவர்கள், தாதிகள், இன்ன பிற செட்டப்ஸ் அவரை மிரள வைக்கும். அவர் மூர்க்கமாய் பல விஷயங்களுக்கும் ஒத்துழைக்கவில்லை. ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அதட்டினேன்.

அவர் என்னை பார்த்தார்.

அது ஒரு வெளிறிய பார்வை.

எனக்கு அவர் மனசு தெரியும். அது மிகவும் இலேசானது. பாசத்தின் கனம் தாங்க முடியாமல் இருக்க, அவரை அப்பட்டமான பச்சை வாழ்க்கை துரத்திக் கொண்டிருந்தது. எங்கே பிள்ளைகளை கவனிக்க யாரும் இல்லாமல் போய் விடுவார்களோ என்று பயந்தவாறே இருக்கிறவர். சும்மா படுய்யா என்று கத்தி அவர் பார்வைக்கு நான் பின்னடைந்த கணத்தில் ஒரு நாள் நடுஇரவில் தெரு முனையில் நின்று கொண்டிருந்த அவரின் உருவம் மனதில் வந்து போயிற்று. மவுண்ட் ரோட்டில் உள்ள மிட்லண்டில் அதர் சைட் ஆப் மிட் நைட் பார்த்து முடித்து சைக்கிளில் ட்ரிபிள்ஸ் வந்து முரளி கிருஷ்ணா அருகே மலாய் பால் குடித்து, காஜா புகைத்து திரும்பும் போது வீட்டின் தெரு முனையில் இவர். கடந்தேன். பேசவில்லை. தூங்கி கொண்டு இருந்தவர்களை தாண்டி சென்று தட்டில் சோற்றைப் போட்டுக் கொண்டு சாப்பிட்டேன். விளக்கை அணைத்துக் கொண்டு படுத்தேன். பிறகு மெல்ல எட்டிப் பார்த்தேன். மார்பைத் தடவிக் கொண்டு தளர்வாய் சாய்ந்தார். அது பற்றி யோசித்து அடுத்த கணம் தாவினேன். Noelle ஒரு ஆங்கரால் பாத் டப்பில் உட்கார்ந்து கொண்டு தனது கருவை உருவியெடுத்து ரத்தக் களரி செய்யும் காட்சிக்கு திகைத்திருந்து, அதுவும் தாங்காமல் காதலில் ஈடுபடும்போது அவள் முகம் அவிழ்த்த பாவனைகளை தொகுத்தேன். அப்புறம் நேரம் போனதும் தூக்கம் வந்து விட்டதும் எல்லாம் வழக்கமான நடைமுறை தான். காலையில் அவரது முகம் கஷ்டப்படுத்தியது. அவரை சரி செய்ய முடிகிற ஒரு சமாதானம் மட்டும் எப்படி நழுவுகிறது என்பதே பிடிபடுவதில்லை. அவரே வாரம் ஒரு முறை படம் பார்க்க பணம் தருவதாகவும் இனிமேல் இரவுக்காட்சிகள் வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அப்படி கேட்கும் போதே இதெல்லாம் நடக்கப் போவதில்லை என்று உணர்ந்து உலர்ந்தவாறே தனது வீழ்ச்சியை அவர் வரவேற்றிருக்க வேண்டும்.

தூக்கம் நிற்கவில்லை. அவ்வப்போது திடுக்கிட்ட விழிகள் திறக்கும் போதெல்லாம் பிள்ளைகளை அதனுள்ளே அள்ளிக் கொள்ள விழைந்த பேராசை தெரிந்தது.

அருகிலேயே இருந்தேன். இமைகள் அயரவோ உறக்கத்திற்கு விருப்பப்படவோ இல்லை. காலையில் நிலைமை இன்னும் மோசம். டாக்டர்கள் குழுமி கிசுகிசுத்தார்கள். கடன் பெற்ற காசுடன் மருந்துகள் வாங்க ஓடினேன். ஊசிகளை ஏற்றினார்கள். மருந்துகளை ஊற்றினார்கள். திணறிக் கொண்டிருந்த போது கவனித்த தம்பி என்னை வீட்டுக்கு போக சொன்னான். விழித்தேன். குளித்து பிரெஷ்ஷாகி வர வேண்டுமாம். அதற்கென்ன. அப்பனுக்கு எதிராய் எப்பவும் நான் புரிந்த நற்செயல்களை தொகுத்தவாறு நடந்தேன். வீட்டுக்குள் நுழைந்த மறுநிமிடம் ஆளற்ற அந்த வீட்டில் படுக்கையில் விழவே தோன்றியது.

முதலில் என்னை தொடுவதற்கு பயமா என்று கேட்டவள் அவள் தான். பிள்ளைகளை தள்ளிப் போய் விளையாடும்படி சொல்லிவிட்டு அவள் இதைக் கேட்டாள்.

அப்போது அந்த முகத்தின் மீது சாயந்திரத்தின் வெயில் கடந்து போயிற்று. ஒளி வெள்ளத்தில் ஈரம் படர்ந்த உதடுகள் ஒரு முறை மடிந்து நிமிர்ந்தன.

நான் ஒருக்களித்தேன். தொட்டால் பூ மலருகிற வேலையை துவங்கினேன்.

குளித்து துதித்து எல்லாவற்றையும் சரி பண்ணிவிடலாம் என்று அங்கே போகும் போது அப்பா செத்துப் போயிருந்தார்.

மண்ணள்ளிப் போட்டோம்.

ஜே ஜே புரியவில்லை என்றவன், ஜே ஜே என்னை ஒரு எழுத்தாளனாக்க உந்துகிறது என்றான். இப்போ,ஜே ஜே ஒரு நான்சென்ஸ் காலத்துக்கு வந்து விட்டேன்.

நிறைய பேரை தொட்டேன். அது வேண்டியிருந்தது. ஒரு காரியக்காரனுக்கு தெரியும், அதில் கபடங்கள் எதுவும் வேண்டியிருப்பதில்லை.

இன்று என்னைத் தழுவி முத்தமிடும் எனது மகனின் ஸ்பரிசத்தில் ஒரு பெத்த மனசின் துடிதுடிப்பை அறிந்தாலும் மனிதனின் காரியங்கள் எதைப் பற்றியும் சொல்ல முடியாது என்பதை அவரிடம், என் அப்பாவிடம் சொல்ல விரும்பினேன். உயிர் பிரிந்த மறுநிமிடம் அவர் வீட்டுக்கு வந்து நான் செய்து கொண்டிருந்த தொட்டால் பூ மலரும் காரியத்தை பார்த்திருப்பார் என்கிற திடுக்கிடல் இன்றுவரை எனக்குள் ஓடுகிறது.
அதில் என்னை வதைக்கக் கூடிய ஒரு கஷ்டம் என்னவென்றால் அவர் அதை புரிந்து கொண்டிருக்கவே மாட்டார் என்பதை இன்று நான் நேரிடும் உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது.


*********

Saturday, February 11, 2017










வாகனங்கள் வந்திருக்காத
குடசாத்ரியில் பண்டொரு நாள்
மலைப் பிரசங்கம் செய்தேன்

கேட்டிருந்தார்கள்
நாலே பேராயிருந்தாலும்
நண்பர்களாயிருந்ததாலும்

ஆர்டர் செய்த வைனில் கொஞ்சமும்
சாலமன் மீனை பேர்பகுதியும் வைத்து விட்டு
எழுந்து போகிறவனில் வராத பசி தான்
பொன்னகரத்து அம்மாளுவை இருட்டுக்கு
அனுப்புகிறது என்றெல்லாம் உரை வீச்சு

இப்போதும் மலைகளில் ஏறும்போது
மூச்சிரைப்பிடையே கவனிக்கிறேன்

எவனாவது பேசிக் கொண்டிருக்கிறானா
பைத்தியம் மாதிரி.