Monday, August 28, 2017



தனிமை
அவன் அதை கனம் பண்ணிக் கேட்டதில்லை
யாரோ கைவிட்டு செல்வதில்லை
யாரோடும் இல்லாமல் இருப்பதில்லை
துண்டுபட்ட கண்டங்கள் மீது
வெண்பனி நழுவும்
விஸ்கி கோப்பையை தான்
வெறித்துக் கொண்டிருப்பதுமில்லை
நெஞ்சில் இருந்து ஏறி
தொண்டையடைத்து
வெடிக்காத குமிழி மச்சான்
என்பான்

ஆயுளுக்கும் ஆவியுலர காத்திருந்த
பொன்னுங்கட்டி முத்தமிடும் போது
துடைத்துக் கொள்ளுவது
தனிமை

அது கடவுள் நகர்த்தி உக்காரு என்ற
நாற்காலி.

Monday, August 7, 2017




ஒருவேளை நகர்ந்தால் மட்டுமே
துலங்கும் சூரியோதயம் போல
சில கண்கள்
உள்ளுக்குள் பேசும்போதும்
உள்ளாடை மாற்றும் போதும்
அடித்துப் பார்த்தவாறு இருக்கின்றன
ரகசியங்களை பரிகசிக்கின்றன
கீழே, கீழ்மையின் சுழிதலை
பெற்றெடுத்த மக்கள் போலும்
சகிக்கின்றன, சகஜமாக்குகின்றன
ஒரு மின்னல் வெட்டின் இடைவெளியில்
வேறு கண்களுடன் சென்றுவிட்டவர்
பற்றி எந்த செய்தியும்
இல்லை.


Thursday, August 3, 2017





அவள் அவளை
அணுகும் போதெல்லாம்
அதே மணம் எழுந்து வரும்
அவனது பித்து கிளர்ந்து வரும்
அடுப்பில் இருக்கிற கறிக்குழம்பை
அவன் சப்பு கொட்டுகிற சப்தம் வரும்
முகத்தில் தாடையில்
இதழ்கள் என்பார்களே அதனோரத்தில்
குறுஞ்சிரி வருவது தான்
இயங்கும் எவனையும் தளர்த்தும்
மந்திரம்


ஒரு நாடகத்திலும் இல்லாத வசனம்,
எல்லோரும் இறந்தொழியுங்கள்.




அவள் அவளை
அலம்பும் போதெல்லாம்
அந்தக் கலவி நினைவு வரும்
அவனது கண்கள் நினைவு வரும்
அவை என்னை கை விட்டு விடாதே என்பதாய்
அத்து மீறியது கொதிப்பாய் வரும்
முகத்தில் தாடையில்
இதழ்கள் என்பார்களே அதனோரத்தில்
குறுஞ்சிரி வருவது தான்
இயங்கும் எவனையும் தளர்த்தும்
மந்திரம்.

ஒரு நாடகத்தின் வசனம் போலவே,
உலகின் நெஞ்சினுள் எரியும் தீக்கொழுந்து
நான் !