Saturday, September 23, 2017




மிக சாதாரணமாய் பூனையொன்று
நம்மை பார்த்தவாறு கண்களை மூடித் திறப்பது போலவே
அது படியேறி வந்து முற்றத்து நாற்காலியில்
அமரும், தலைவரின் சிலையில் செருப்பு மாலை போட்டு
ஊரை எரிய செய்கிற திட்டம் மாதிரி
அது யாருடனும் தெருவில் அலையும்
ஒரு துண்டு ரொட்டிக்காக ஆனான தேசமெல்லாம்
நொறுங்கிய கதையை சொல்லவே வேண்டுமா
ஆங்காங்கே கிழித்தது போக
எல்லாவற்றிலும் பட்டு தெறிக்கிறது
பகை. உள்ளோடியொளிந்த
பெருச்சாளிகளாயிற்று நிஜம். இடையே
நாகரீகத்தை இஸ்திரி போடுகிற பிழைப்பு.

ச்சை- வரியான்னு உன்ன கேக்கறதுக்கு நடுல
பல்லாயிரம் வருஷ பள்ளம்.







Friday, September 22, 2017




சன்னலுக்கு வெளியே அங்கே
ஒரு பறவை கிரீச்சிட்டு தேய்ந்து
மறைந்தவாறு இருக்கும் போது
இன்று அருவிக்கு செல்வதில்லை, விவாகரத்து
ஹியரிங் பற்றி கேட்க வேண்டும், ஷேவிங் லோஷன்
இல்லை, மீரா போனில் என்னவோ கிசுகிசுத்தாளே, இந்த விஸ்கியும்
மறதியும் என்ன சொல்ல, அடுத்த முறை
வனாந்திரத்துக்கு இப்படி தனியே வரக்கூடாது,
ஜூட் இருந்தால் சண்டை இழுத்து பொழுது போகும், ஆம்,
அடுத்த முறை நீ ரொம்ப நேரம் செய்ய வேண்டும்
என்று சொன்னாள், புது ஷூ ஓன்று வாங்கிக் கொள்வோமா,
மின்சாரம் தடைபடாவிட்டால் மின்மினிகள்
மினுங்கி பறக்கா விட்டால் அவள் இதழ்களிலேயே
இருக்க முடியுமே அரை மணி நேரம், மகளே
லாலிம்மா என்ன செய்து கொண்டிருக்கிறாய்

ஷட் அப் .

பள்ளத்தாக்கின் அமைதியெங்கிலும் விம்முகிறது
நூறாயிரம் பறவைகளின் ஹோ.

Monday, September 18, 2017




காலம் மரவட்டைக் கால்களில் நடந்தாலும்
திருப்பத்தில் மறிக்கிற பாறைக்கு முன்
திகைக்கும், அடியே முடிந்ததெல்லாம் சொப்பனமா
நேற்று கடலில் இறங்கிய சூரியன் தானே
இப்போ உச்சந்தலையில் முள் குத்துகிறது
உனது மகளுக்கு என்ன பெயர்
உனது பெயரின் எழுத்துக்களின் எதிரொலி
முடியும் முன்னே யாருக்கு பூ மலர்த்தி
எப்போது இவளை சறுக்கலில் இறக்கினாய்
சரிதான், இந்த மயங்கலில் ஒளிவருடங்கள்
பொடிக்கின்றன
கடவுளே அதோ காட்டுப் பன்றி போல
புழுதி கிளப்பிப் பறக்கிறான்
நல்லாள் நீ நூறு முறை சோரம் போய்
தகித்த தங்கத்தில்
நான் உலகடைந்திருக்கிறேன்
ஐ லவ் யூ பேபி என்பதாகவே திரும்பவும்
துவங்கவா.