Monday, December 4, 2017






வாயிலில் வந்து நின்று
கரகரப்பான குரலில் கதவை இடிக்கிறது
திகுதிகுவென பெருகும் சிரிப்பை
உருட்டி விளையாடுகிறது நித்தமிந்த
அசுரம். ஒரு சிட்டிகையில் புறாக்கள்
எழுவது போல
பயம். ஒரு இமைப்பில் கண்ணுள்
மின்னிட்ட நிறம். ஒரு கனவில் வெளிறிட்ட
வாழ்வு. ஒரு ரோகியில் வெளியேறிய
தெய்வம். ஒரு சிசுவின் புன்முறுவல்
துப்பாக்கி.


தம்பி, பரோட்டாவை திருப்பிப் போடு.


நாலு நாள் பேப்பர் படிக்கல
மொத்தத்தையும் கொண்டாந்து வை.


வண்டிய தொடச்சியா.


பத்து அஞ்சுக்கு அந்த கட் அவுட் முதுகு
எதிர வரும்.




அவர் நடுத்தரம்
ஐரிஷ் தொப்பி அணிந்திருக்கிறார்
தொப்பையுண்டு, வழுக்கையும்
இருக்கலாம்
முறுக்கின மீசையில் புன்னகை
தெரியாது
முச்சந்திப் பிள்ளையாரின் முன்பு
கலகப் பிரங்ஞையின்றி தோப்புக்கரணம்
போடுகிறார்
கடன் தொல்லை?
உப்பு புளி மிளகாய்?
அலுவலக நெருக்கடி ?
உறவுகளின் இளக்காரம்?
சொல்ல முடியாது, கள்ளக் காதலி
நெக்லஸ் கேட்டிருக்கலாம்
மனைவியின் காதலன் தள்ளிப் படு
என்றிருக்கலாம்
அட விடு, நல்லவனாய் இருக்க முடியாத
தளர்வுமாகலாம்,
அநீதிக்கு கைவேலை செய்ய முடியாத
பிரமிப்பாயிருக்கலாம்.

கேட்டாயா சகா
நான் சொல்ல வரும் நீதி 
ரத்தத்துக்கு மட்டுமில்லை
நிறம், துக்கத்துக்கும் ஓன்று தான்.