Monday, December 3, 2018




அது ஒரு இடம்
அது இருக்கையிட்ட
ஏகாந்தத்தில் லயித்திருந்து
விடுபட்ட போது
முதுகு அரித்தது
அவள் அதை சொறிவதற்காக
சற்றே திரும்புவதற்குள்
முன்னுறு பேர் அதைப் பார்த்தனர்
முப்பது பேர் கண்காணித்தனர்
மூன்று பேர் விவாதித்தனர்
ஒருவர் கட்டுரை எழுதி விட்டார்
என்றால்
எப்படி காதல் சொல்லுவது அல்லது எப்படி
முத்தமிடுவது, முலையூட்டுவது, சாய்வு நாற்காலியில் இருந்திருந்து இறுதி மூச்சைக் கூட
விடுவதெப்படி?

அது கூட பரவாயில்லை

இந்த ஸ்டேஷனில்
இறந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்குமாக
இரண்டு புகை வண்டிகள்,
எதில் ஏறிக் கொண்டு தப்பிக்கலாம்?
எதில் ஏறிக் கொள்ளாமல் தப்பிக்கலாம்?

Thursday, November 29, 2018

இதெல்லாம் இப்போதில்லை
சூரியனின் முள் குத்தாத பின் தெருக்களில்
சுடுகின்ற சாராயத்தை நக்கிக் குடிக்கின்ற
திமிரின் நாளில்

சொல் சுழற்றி
கண்ணீரில் ததும்பினவளை
தட்டி வனைந்து
சாயந்திர முத்தத்தை உறுதி செய்து
பஸ் ஏறி சென்று பார்த்தது
சுனைனாவை
நான்கு வயது அவளுக்கு
நண்பன் இஸ்மாயிலின் சோதரி மகள்
தலைக்குள் முற்றிய புற்றோடு சிரிக்கும் சவுந்தர்யம்
பலரும் பார்த்திருக்க மாட்டார்கள்
அவள் வரைந்து சுவரில் ஒட்டப்பட்டிருந்த கிதாரில்
மரணத்தை மீட்டிக் கொண்டே
உறுதி செய்திருந்த முத்தம் பிடுங்கினேன்
ஒரு கொலைகாரன் போல

இப்போதெல்லாம் அப்படியில்லை
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
சுனைனா சாவுக்கு அர்த்தம் கற்பிக்க தெரியும்
கடவுளைக் காப்பாற்றிக் கொள்ள தெரியும்
ஏன், வம்பு சண்டை வாங்காமல் வரும் கண்ணீரை கவனிக்காமல்
முத்தம் வாங்கியும் போகத் தெரியும்.

சூரிய முள் மட்டும் குத்தியவாறிருக்கிறது.

Sunday, November 18, 2018





கரி நிறம்
மூங்கில் புதரில் அசைகிறது
இந்த சாயந்திரத்தின் நிறம்
அது என்னைக் குறி வைக்கிறதா
அதை அறிய முடியாது
வீறிட்டு அழைக்க வேண்டுமோ
யாரையும்
அதுவும் ஐயமே
நின்ற இடத்தில் இருந்து ஊர்கிறேன்
கீழே வீழாதிருக்க இருதயத்தைப்
பிடித்துக் கொண்டு
ஒரு தும்பிக்கை எனது முதுகில்
நிரந்தரம் வரும் தொட்டு விடாமல்

சோறு ரொம்ப முக்கியம்
மானம் ரொம்ப முக்கியம்
அதில் ஆனை ஒளிய ஆகாது
இல்லையா?

Monday, October 22, 2018





நீங்கள் வலி நிவாரணியின் ஆள் தானா
என்று நான் கேட்டுக் கொள்வதில்லை
ஒரு பார்வையில்
ஒரு மனிதக் கணிப்பில்
ஒரு அகங்காரத்தில்
நானும் அப்படி பட்டு விட மாட்டேன்
காலைச்சூரியன், நடைபயிற்சி, பச்சை தேயிலை,
கோபுர தரிசனம் எதுவுமில்லை
இருந்தா இரு போனா போ
ஒரு நாளைக்கு கஞ்சி, ஒரு நாளைக்கு கரிமீனு
எல்லாம் சரிதான்
இஸ்கி புஸ்கி இல்லை அஸ்கு புஸ்கு இல்லை
என்னை எங்கேயாவது விற்று எங்கேயாவது
மீட்டுக் கொள்வேன்
என்றாலும் ஏதேனும் கடைகோடி முட்டு சந்துகளில்
சிக்கும்போது
ஒரு வேளை என்னைப்பற்றி
ஒருவேளை உன்னைப்பற்றி
தப்பிக்க முடியாத போது வலிக்கும்.
பொதுப்படையாய் சந்தேகமில்லாமல்
நான் வலி நிவாரணியின் ஆள். 






அவளை எழுதியாயிற்று
அதை படமாக்கி அவளது கதை என்றாயிற்று
நானும் இதோவென்று ஒரு திரைக்கதைக்கு
கிளர்ந்ததுண்டு
நெருங்கும் போதெல்லாம் நகர வேண்டியிருந்தது
அவள் அழகி
வந்ததை வாரி சுருட்டி விழுங்கி
நெருப்பு போல புன்னகைத்தவள்
அவள் திரைக்குப் பின்னே நின்று
சொரிந்திருந்தாள் என்கிற நம்பிக்கையில்
கண்ணீர் தடம் தொடர்ந்து எத்தனைக் காதம் நடக்க முடியும்
மேலும் நமது கற்பனைகள்
சோம்பலான நம்முடைய குடிலின் முற்றத்தில்
நாம் பிளந்து தந்த தென்னோலைகளை
அசைபோடும் யானை.

யாருடைய சரிதமும் நமது கையிடுக்கில் இறங்கும் தண்ணீர் என்று வந்து விடுகிறது செல்லம்,
ஏனென்றால் வாழ்வு.
அது நொடிக்கு தாவும் பட்டாம்பூச்சி
அல்லவா?

Wednesday, September 26, 2018





யாருமே
கொதிக்கிற பாலில் விழுந்து சக்கரையுடன் கலந்த
தேநீர் மும்முரம் மட்டும் தான்
நாவில் சுட்டுத் தொண்டைக்குள் இறங்கி
வயிற்றுள் மினுங்கி
மூளைக்கு வெப்பம் அனுப்புகிற
ஒரு குட்டி செய்தி
ஆனால் பாருங்கள்
யாருமே
எலும்பை தொடுகிற குளிரில்
இரண்டு அல்லது மூன்று வேளை
உணவைத் தவற விட்ட
பரிதாபதிற்குரியவர்களாக இருந்து
கை நீட்டுகிறோம்.

ஆத்மா பிச்சை பாத்திரம்
அதனால் உலகு எரியாதிருக்கிறது.

Monday, July 16, 2018




உலகை புரிந்து கொள்வது ஒரு
நல்ல செயல். அதற்கு ஒரு நெடிய
பயணம் போதும். ஒரு இரவும், சற்றே
குவிந்து கிடக்கிற நட்ஷத்திரங்களும்,
மதுக்குப்பிகளும் போதும். தன்னை
அவிழ்த்து மல்லாத்தி புன்முறுவலுடன்
சவால் வைக்கிற காமம் போதும்.
வங்கியில் பணம், சட்டைப் பையில் அதன்
அட்டைகள் இருக்க எங்கு நழுவிப் போகும்
அது புரிந்து கொள்ளப்படாமல்?

ஆயினும் இன அழிப்பில் கருகிய
மகளின் சடலத்தில் கொப்புளிக்கிற
புகையை ஆக்ரோஷமாக ஊதும் ஒரு
தகப்பனின் இதயம் இருப்பின் ஆஹா உலகம்
அழகியது, தங்கம் கொண்டு மெழுகியது.



அவனுக்கு அது தெரிகிறது
இவளுக்கு இது தெரிகிறது
என்னைப் போலவே தான்
அவ்வப்போது எல்லோருக்கும்
எல்லாமும் தெரிகிறது
அம்மாவின் பிறப்பறுத்து அனுப்பி
கவுச்சி தின்ற பிறகு
பட்டினத்தார் படிப்பதா
பிட்டுப் படம் பார்ப்பதா
தெரியாதது இப்போதைக்கு
இதுமட்டும் தான்
சகலரும் முழக்கி
சங்கம் வைத்து ஸ்பீக்கர் போட்டாலும்
வாழும் வரை அன்பு செய்ய ஆகாமல்
நழுவி செல்வது என்ன என்பதெப்போதும்.

விடுறா
லூலகோ.

Monday, June 25, 2018





அரிச்சந்திரன்
வெறித்திருக்கக்கூடிய
எரிகிற சடலம்
புரியக்கூடுகையில்
அந்த மழைக்காடு மணத்து
நீரிலிருந்து எழுந்து பறந்த ஒரு குமிழாகவே
காதோர மயிர்களை நீவிய காற்றில்
தாயின் இதயத்தைத் தட்டில் வைத்துக்
கொண்டு வந்தது போல் இருந்து விட்ட
ஒரு ஜென்மாந்திரப் பிழம்பு
பாயைப் போட்டு பக்கத்தில் கொசுவத்தி வைத்து
காண்டத்தில் பொத்தலுண்டா
என்று பார்க்கும்போது
நாம் வெறிப்பதற்கும் இரண்டு சடலம்.

என்னா ஜூஜூப்பிடா நம்ம கொக்கரிப்பெல்லாம்

Wednesday, June 20, 2018







அவசரம்
அடுப்புக்கு நின்று திரும்பி
அஞ்சறைப் பெட்டியை
நகர்த்திய போது
தூணுக்கு அருகிலிருந்து
பார்க்க முடிந்த
ஒரு துணுக்கைப் போன்ற
அந்த ஒற்றைப் பார்வையில்
தண்ணீர் வேண்டுமா என்று கேட்க சென்று
விரலறிந்து
வீட்டை விட்டு வந்து விவரமறிந்து
பெற்ற குழந்தையின் கழுத்தை நெறிக்கத் துணியும்
காதலில் ஒரு துளி தான்
மரம் சுற்றும் பிப்பிலிப்பி, எனவே மாக்காள்
அலட்ட வேண்டாம்.
அலப்பறை வேண்டாம்.
நாங்கள் சினிமா எடுக்கிறோம்
நீங்கள் மேதைகளாயிருங்கள்  


Sunday, May 27, 2018





கனவின் இடுக்கோ கள்ளின் இடுக்கோ
அது பள்ளத்தாக்கிலிருந்து எழுந்த நிலவு போலிருந்தது
அந்தத் தனிமை என்றான்
நிராகரிப்பின் கூர்மையுள்ள ஒரு கத்தி கொண்டு
எல்லா காயங்களையும் கீறி
அதற்குள் எட்டிப்பார்த்துக் கூச்சலிட்டு
எதிரொலிகளை கவனப்படுத்திக் காட்டியிருக்கிறது
அது.
சீலை விலக்கி முலையருந்தின துல்லியம் தவிர்த்து
மனசெல்லாம் மேகங்களில் நகரவே
இருந்திருந்ததாம்
முஷ்டி மடக்கித் தாக்குதல், முதுகில் குத்துதல்
இதிலெல்லாம் ஒன்றுமில்லை என்றான், கைவிட்டு போகும் போது ஒரு சொல்லை வைக்காமல் போவது
கத்திகுத்து என்றான்.

எதிர்ப்படுவோரின் விழுப்புண்களை எண்ணுவதே
இப்போ வாழ்க்கையாச்சு.

என்றான்.

Sunday, February 4, 2018






நரம்பில் நடக்கும் பித்தில்
எது வெள்ளப் பெருக்கு, எது
தீ சிற்றடி வைத்து நடக்கிற ஆறு
மரங்களை எரித்து செல்லும் குளிர்
பறவைகளின் சிறகிடுக்கில் தேங்கும் நெருப்பு
பால்ய பெயரில் இருந்து இறங்கி செல்லும் கிழவன்
இடுகாட்டில் இருந்து எழுந்து வரும் சிறுவன்

இதில் தான் வெறுத்திருக்கிறோம் தவிர்த்திருக்கிறோம்
என்பதில் தெளிந்தெழுந்து திடுக்கிட மிதக்கிறது
ஒரு சவத்தைப் போல, காதல்
கண் மலர்ந்து பார்க்கிறது கூட.

ஹலோ என்கிறது.

இந்த அசட்டு சிரிப்பை நாமெல்லாம் வாழ்க்கையென்று
குறிக்கிறோம், நமச்சிவாயா. நமது ஆணவத்தில் நாம்
நின்று நிலைக்கிற ஜித் எத்தனை ரசம்,
ருசி?