சட்டிக்கு கழுத்து வனையும் விரல்களின்
மனம் அறியாதது போல தான், கவிதையின்
நாபியில் முத்தி விட முடியாதது போல தான்
ஆகாயப் பந்தல்களின் பொன்னுஞ்சல்கள் இருக்கின்றன,
அவனன்றி அவர்கள் அறிய முடியாதிருக்கும் ஒரு
கத்தி.
மனம் தித்திக்கையில் நெய் மணக்கிறது, முந்திரிகள்
புன்முறுவலிக்கின்றன. நானிருக்கும் காட்டில் ஒவ்வொரு பூவிலும்
அந்த திராவகம் சவால் வைக்கிறது, இப்போது ஒரே ஒரு சொல்லுக்கும் அஞ்சுகிறேன். நீ ஒரு அழகி என்றால் முடியுமா. உன்னோடு படுக்க வேண்டும் என்றால் முடியுமா.உன்னை கொலை புரிந்து நீ கண்கள் பிதுங்க விடுபட்டு போவது மூச்சை சகஜமாக்குமா
புரிந்து கொண்டு விட்டேன் ஒரு அளவில். தீ எங்கும் உள்ளது.
ஒரு சதையை ருசிக்கும் போதமாகவே தீயை வாழ முடியும்.
நாமறியாத ஒருவன் நாமறியாத திசைக்கு நடக்க தேடும் போது
அவனது நாகரீகம் நாம் ஒளித்த தீயில்
துவங்கும்
ஆமாம், இப்படி ஒரு பிரார்த்தனை கிடையாது.
இதைக் காட்டிலும் ஒரு தண்டனையும் கிடையாது.