அன்று அது சாம்பல் நிறமுள்ள
சாயந்திரம், மேகங்கள்
குளத்துப் புழைக்கே இறங்கும்
போலிருந்தன
மழை எங்கோ தூரத்திலிருந்து
வெறித்திருப்பது தெரிந்தே தானோ
இடுப்புக்கு கீழே தன்னை சில்லென வைத்துக் கொண்டது நதி
முழ்கும் போதும் எழுந்து விடுவித்துக்
கொள்ளும் போதும்
நான் நெஞ்சுக் குழியில் ஒரு
பாறையோடிருந்தேன்
விபத்து போல
தொட்டு விடும் தூரத்திலிருந்தும்
எட்டியே இருக்க வேண்டிய மானுட தருணங்களை
வியந்தவாறு.
கருமீன்கள் துள்ளியவாறிருந்து தண்ணீரை
நடுங்க வைத்திருந்த போது
நீ புன்னகைத்த காலத்தின் நொறுங்கின கண்ணாடி சில்லைத் தேடினேன்.
அது உலகு பூராவையும் மினுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காண்.