Friday, July 1, 2016



இறுதி நடனம் முடிந்து பிராண்டோ குடிக்கிறான். அந்தப் பெண்ணுடன் நடந்து உன் பெயர் என்ன என்றே கேட்டு விடுகிறான். கதையின் ஒரு வளைவில் அவனை சுட்டு முடித்து விட்டு போலீசாரிடம் அவன் பெயர் தெரியாது என்கிறாள் இல்லையா, மூன்றாவது பெக்கில் அதற்காக சிவதாசன் தன் தாடையை சொறிந்தவாறு பேச்சிழக்க குடிக்கவும் பேசவும் தெரியாத பரத் என்று அழைக்கப்படுகிற லூயிஸ் வயிற்றுக்கு நாலு இட்டிலி,  ஒரு முட்டை தோசை, ஒரு மாட்டுக் கறி சாப்பிட்டு விட்டு அப்படி இப்படி நடந்து அவனே எதிர்பாராத வகையில் ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டு டிக்கெட்டை வாங்கிக் கொண்டு தூங்கி விட்டான். காலையில் கோயம்பத்தூரில் மூத்திரம் கழித்த பிறகு மறுபடியும் சென்னைக்கு திரும்புகிற வண்டியை தேடிக் கொண்டு போய் அதில் சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு சிகரெட்டு பிடிக்க இறங்கி அதைக் கொளுத்தாமல் தலையை சொறிந்து விறுவிறுவென நடந்து வேறு ஒரு வண்டியில் ஏறி அதிலும் டிக்கெட் எடுத்து தூங்கினான். ஒரு முறை கண்களை விழித்துப் பார்த்த போது திருச்சூர் தாண்டி இருந்தது. அடுத்த தடவை விழித்து பத்தனம்திட்டாவிற்கும் வந்து சேர்ந்து ஒரு அறையை தேர்ந்து கொண்டு தூங்காமல் சன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு வெள்ளப்பமும் கடலையும் சாப்பிட்டான்.

நல்ல மழை.

மழை பற்றியும்,  மழை கவிதைகள் பற்றியும், மழை வந்தால் கவிதை எழுதியே ஆக வேண்டியவர்கள் பற்றியும் யோசித்து சினிமாவில் மழை வந்தால் கட்டிக் கொண்டு தவறு செய்து விடும் ஜோடிகளைப் பற்றியும் யோசனை செய்து இருந்த போது தூங்கி சிவதாசன் டாங்கோ ஆடுவதற்கு திடுக்கிட்டான். சற்று வெட்கத்துடன் அவர் கவனித்து விடாமல் மெல்ல நகர்ந்த போது அவனிடம் யாரோ ஆட சொல்லுகிறார்கள். இன்னது என்று சொல்ல முடியாத இரைச்சல்கள் பரவி குவிந்திருந்தாலும் காசு கிடைக்கும் என்கிற கிசுகிசுப்பு உரக்கக் கேட்டது. யாருடைய குரல் அது?அதை தேடி நடந்து ஒரு பாம்பை மிதித்து படிக்கட்டில் உருண்ட போது முழித்து, சில்லிட்டிருந்த சன்னலை திறந்து மீண்டும் மழையை பார்த்தவாறிருந்தான். ஜீப்பில் கொஞ்ச பேரை தான் ஏற்றினார்கள். அடக்க ஒடுக்கமாய் இருக்கிற தன்னை ஒரு வேற்றாளாய் கருதிக் கொண்டாலும் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதில் ஆசுவாசம் பெற்று மழையை வெறித்த போது எப்படியோ இந்த நிமிடம் திரும்பிப் போய் விடுவோம் என்கிற நம்பிக்கை புரியவில்லை. நாலு பேர் நசுக்கிக் கொண்டிருக்க வளைவிலும் திரிவிலும் தெறித்த மழைத் துளிகளில் நனைந்து நடுங்கியவாறு இருந்தது மேலும் கொடுமை ஆயிற்று,  மாதவனின் வீட்டுக்கு போகிற முக்கில் இருந்த சாயா கடையில் ஒதுங்கியது. காற்று சாட்டை போல வீறியது. சிகரெட்டின் கங்கு மின்னுவதை பார்த்தவாறு புகையை நெஞ்சுக்கு இழுத்து மிகவும் தாமதித்து புகையை வெளியேற்றும் போது இவன் குளிரால் நடுங்குவதை பார்த்திருந்த கடை ஆள் வழக்கம் போன்ற மலையாளி உரிமையுடன் சாயா போடுகிறேன் என்ற போது மறுத்தான்.  

தண்ணீரைத் தவிர எதுவும் குடிப்பதில்லை.

நெல்லிக்காய்,  இஞ்சி,  சுக்கு, திப்பிலி, கடுக்காய் போன்ற சாறுகளை பிரயோகம் செய்து அடைந்த பேறுகளை மக்கள் சேவையின் பொருட்டு ஒரு காட்சியாக்கி படத்தில் வைக்க எழுதும் போது தன் இருமலின் நடுவே சுவர் இருந்தால் தான் சித்திரம் என்று இயக்குனர் சொன்னதை பொருந்தாத இடத்தில் நின்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவன் சற்று நேரம் தசை பயிற்சி செய்து பார்த்து அப்புறம் தான் மாதவன் முன் நின்று சிரித்தான், நல்லவேளை. அப்படியும் அது பாதி தான் வந்தது.  மாதவன் எதற்கு வந்தாய் என்று கேட்கவில்லை. அவருடைய மனைவி,  மகள், மகன் யாருமே இவன் யார் என்றும் ஒரு சொல் கேளாத நிலையில் தேங்காய் பாலில் ஊறின பத்திரியில் ஆட்டுக்கறியை சுருட்டி விழுங்கினது வழுக்கிப் போகாமல் இருந்ததற்குக் காரணம் சிஜி. அவனது பால்யத்தில் எட்டும் பொட்டும் தெரியாத பாவாடைக்காரியாய் இருந்து மாங்காய்க்கு அடி வாங்கி மிரட்டலுக்கு மண்ணை தின்று யாரும் இல்லாத நேரத்தில் காட்டுகிறானே என்கிற அனுதாபத்தாலும் ஆர்வத்தினாலும் குஞ்சை பார்த்து பதிலுக்கு தனது பொக்கிஷத்தைக் காட்டி இந்த பத்திரியை தேங்காய்ப்பாலை ஆட்டுக்கறியை விரும்பியவள்.    மாதவனின் மகள் வாயைக் கோணிக்கொள்ளுவதும், மனைவி தலையை வெட்டிக் கொண்டு கூந்தலை பின்னுக்கு ஒதுக்குவதும் , மகன் ஏதோ பத்திரிக்கையை புரட்டியவாறு கொறிப்பதும் போனில் கூப்பாடு போட்டு பேசிக் கொண்டிருக்கிற மாதவனை சீண்டுவதற்கா அல்லது தன்னை துரத்துவதற்கா என்கிற தன்மானத்தின் நீர்க்கோடு நகர்ந்தவாவாறு இருக்க சிஜி பாடத் துவங்கும் போதெல்லாம் இவனது சுவாசக் காற்றைப் பிடுங்கிக் கொண்டு அவளது இதழ்கள் பிரியும் பிரம்மாண்டமான கணம் பெரும்யுகமாய் விரிந்து பரவியிருந்தது. ஒரு முறை கண்களை மூடித் திறந்து தன்னை இழுத்து வெளியே தள்ளும் போது அவர்களிடம் இவன் பரத் என்கிறார். சினிமா பண்ண காசு கேட்டு வந்திருக்கிறான் என்று தொடர்கிறார். ஏற்கனவே படம் பண்ண ஒருத்தன் பணம் கேட்டு வந்து இருக்கிறான் என்று இரண்டு மூன்று பேரிடம் தொலைபேசியில் சொல்லியாயிற்று. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்கிற காரணத்தினால் நகைச்சுவை குண்டானில் நல்ல கருத்துக்களை போட்டு அடித்து மிக்ஸ் பண்ணி விதரணம் பண்ணப் போனால் பணம் கொட்டி விட்டுப் போகிறது என்பதை சற்று தள்ளி இருந்த ஒரு ரப்பர் தோப்பில் புகை விடும் போது கமறினான்.  உடனடியாய் கிளம்புவது என்று முடிவெடுத்தான்.

தலையசைத்தார்.

மழை வலுத்திருந்தது. மனசின் எல்லா மூலைகளையும் சிதறடித்துக் கொண்டிருந்தது. எந்தக் கேள்விகளும் இல்லை. இருந்தால் அர்த்தமில்லை. பிறப்புக்கு பக்கத்தில் எங்கேயோ சேகரம் ஆனதை திரட்டிக் கொண்டு மார்பை நிமிர்த்திய கோளாறு ஆடுகிற பெரு நடனத்தை சொல்ல வேண்டும். ஒரு தாய் பறவையின் சிறகு போல உலகு வெறும் மனிதாபிமானத்தால் நெய்யப்பட்டிருப்பதால் எரியும் போதெல்லாம் களித்து சுற்றி சூழ்ந்து போகி மேளம் அடிப்பவர்களோடு ஒரு காலம் ஒரே தட்டில் சாப்பிட்டிருந்தான். சிறிய காரணம் கூட இல்லாமல் சிஜியை தவற விட்டிருந்தான். உயிர் பிழைப்பின் மலினமான பொய்களில் தோய்ந்து ஊறிக் கிடந்த பழக்கம் தான் கேவலம் ஒரு தலையசைப்புக்கு அடித்துக் கொட்டுகிற மழையில் இப்படி ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி எல்லாவற்றையும் வாங்கி முடித்து தொப்பலாய் அவனை காரில் ஏற்றுகிறது. மாதவன் புன்னகையில் கார் உறுமிக் கிளம்பி நகர்ந்தது. பத்து ஊர் திருவிழா போல மத்தளம் கொட்டும் மழை காருக்கு வெளியே வெறும் புகை. ஜன சந்தடி இல்லாது காடு பிடித்துக் கிடக்கும் குன்றில் ஏறுவதை ஊகித்துக் கொண்டான். ஒரு பாலத்தைக் கடக்கும் போது எதோ கடலுக்குள் இறங்குவது போல மனசில் திடுக்கிட்டது அப்படியே அங்கேயே இருந்து கொண்டிருந்தது ஏன் என்று அவனுக்கு தெரியும் என்றாலும் அவன் அந்தப் புதிர் பிராந்தியத்தில் காலடி வைக்கவில்லை. சம்மந்தம் இல்லாமல் மூச்சை பிடித்துக் கொண்டிருந்தான். "டீராதே"  என்று பாறை போல இறுகியிருந்த கதவை தட்டி அவள் வந்த போது கூட. 

டிரைவரும் அவனுமாய் வாங்கி வந்த பொருட்களை முற்றத்தில் வைத்தார்கள். ஒரு முறை நிமிர்ந்த போது "ஆங்" என்ற மாதிரி கேட்டது.  அது நீயா- வாங்க-  இருக்கிறாயா- ஓகே,  சரி, விடு என்று ஏதேதோ அர்த்தமாகிற சப்தம். துல்லியமாய் மலையாளிகளுடையது. மாதவன் தனது அடிபொளி பிஸ்னஸ் மகாத்மியங்களை மிடறு மிடறாய் அடித்து ஏற்றின ஒட்காவினால் சத்தம் கூட்டியவாறு போனது அவளுக்காகவேதான். மழையில் கேட்டிருக்காது. வறுத்த சாளை மீன்களையும் வேக வைத்த முட்டைகளையும் கொண்டு வந்து வைத்து சாட்சாத் ஒரு வேலைக்காரியைப் போலவே வேறென்ன வேண்டும் பாணியில் நின்றவள் இப்ப தான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவள் போல சட்டென்று திரும்பி ஒரே ஒரு பார்வை மட்டும் பார்த்தாள், மழையின் குளிர் வந்து தொட்டு பற்களில் கூசி அவனது கொட்டைகளுக்குள் இருந்த நரம்பு கூட அசைந்தது. ஒ, நீ குடிக்க மாட்டாயா என்று அவள் கேட்டதாகவே நினைத்தான். எல்லோரும் ஆளைப் போட்டால் நிழலைத் தள்ளிக் கொண்டு போய் போடும் மாதவன் என்று தன்னைப் பற்றி கொஞ்சம் நேரம் முன்னால் சொல்லியிருந்த அந்த ஆள்  தனது முகத்தில் ஒரு ஓநாயின் பார்வையைக் கொண்டு வந்து அவளிடம் இவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையா என்று சிரித்தார். 

கஞ்சா குடிக்கலாம். அப்பா அதை குடித்தவன் இல்லை. கலை என்கிற சாமானை தலையில் சுமந்து கொண்டு நடக்கிறவன் கரையில் உட்கார்ந்து கொண்டு ஒடுகிற கால நதியை ஒடுகிறதே என்று பார்ப்பான். அந்த இடத்தை விட்டு பெயராமல் தானும் நசித்து பிறரையும் சிதறடிக்கவைக்க அவன் படைக்கப்பட்டிருப்பதால் அம்மா மூச்சுக் காற்றுக்கு அல்லாடி எவனோ ஒருவனுடன் ஓடிப் போனாள்.  வேறென்ன. திரும்பிய திக்கெல்லாம் பசி. லட்ஷம் பேர் சமையத்துக்கு மணமாகவும் ருசியாகவும் கண்ணியமாகவும் தின்று கொண்டிருப்பதை திடுக்கிட்டுப் பார்தவாறு வளரும் சிறுவனின் வயிற்றில் உலவிய மிருகம் உலகில் இருக்கிற ஒவ்வொருவனும் ஒவ்வொரு வஞ்சகன் என்று முடிவு செய்த பிறகு மாதவன் காசுகாரனானான். உச்சி முதல் பாதம் வரை முனைந்து ஒவ்வொரு அசைவிலும் ரத்தம் கரைத்த துயர் அறியாமல் அதே வஞ்சக உலகம் இதே மாதவனை காசு மரமாய் கற்பனை செய்து கை தொழுகிறது,  காலை நக்கவோ கழுத்தைப் பிடிக்கவோ அலைபாய்கிறது.

இவன். ஹ ஹ ஹ ஹ.  என் காசில் தான் சினிமா எடுக்க வேண்டுமாம்.

அவள் பண்டொரு ஆட்கள் சொன்ன மாதிரி பல்லாயிரம் கல் தொலைவில் இருந்தது போல இருக்கவே இவனுக்கு சற்று பரவாயில்லை போல இருந்தது. மாதவன் தன்னை குறி வைத்து இழிவு செய்வதெல்லாம் எடுபடாமல் போனதற்கு அவனளவில் பலரும் பல வழி எடுத்து பலரை அவமதிப்பதன் மூலமாய் தான் தனது இருப்பை உறுதி செய்து கொள்கிறார்கள் என்பதை அறிந்து வைத்திருந்ததுதான். இதையெல்லாம் பழகி வந்த காலம் உள்ளில் ஒரு மரவட்டையாய் ஊர்வதும் நிற்காது. அவளை ஏறிட்டு பார்ப்பதற்குள் உள்ளே சென்றவள் சற்றைக்குள் விறுவிறுவென வந்து அந்தத் தேனீரை வைத்தாள்.

“ஹஹஹஹ. எதையும் கேட்டு விட்டு செய்ய மாட்டாயா ராதா. அவன் எதையும் குடிப்பது இல்லை. தேனீரையும் தான். எடுத்துப் போ“  என்று சுழிந்தவரை பார்க்காதவளே போல இவனிடம் வெறுமனே ஆணையிட்டாள்.

“குடிக்கி.”

இல்லை.இதை மறுத்துப் பேச முடியாது. சினிமா ஆள் இல்லையா, காட்சிகளின் ஓட்டத்தில் இதோ பால் கொதிக்கிறது. தேயிலை கலக்கிறது. சக்கரையை சேர்க்கிறாள். அப்படி இப்படி என இரண்டு முறை சிக்கனமாய் ஆற்றி விட்டு கிளாசில் ஊற்றுகிறாள். பார்க்கிறாள். பின்னர் அதை எடுத்துக் குடிக்கிறாள். ஒரு கணம் அப்படியே நிற்கிறாள். அந்தத் தேனீரை தொண்டைக்குள் இறக்கவில்லை. தன் வாய் முழுவதிலும் அதன் சுவையை அறிந்து கொண்டு அப்படியே மீண்டும் கிளாசில் அதை உமிழ்கிறாள். துயருடன் பார்த்திருந்தாள். விருட்டென கிளம்பி வந்து இவன் முன்னே வைக்கிறாள்.

“குடிக்கி”

குடித்தான்.

அவளைப் பார்க்கிற அவரை பாராதிருந்து அவள் தன்னை பார்த்திருப்பதை இவன் பார்க்காமல் அறிந்து அதை குடித்தான். என்ன மழை? காற்றில் இருந்த ஈரம் விசிறியது. நனைய வைத்து கேலி செய்வது போல ஒரு பிரமை. அது வளர்ந்து, பையன்களோடு குளிக்கப் போய் ஒரு தடவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது போல ரத்ததில் சத்தம் கேட்கிறது. இந்தக் கணம் அப்படியே சாய்ந்து கண் மூட வேண்டும் என எண்ணிய போது மாதவன் காரை எடுக்க சொன்னார்.

காரில் ஏறப் போகும் போது மழையின் பொழிவினூடே ஒரு சாயம் போன ஒவியம் போல பாதியாய் தெரிந்தவளிடம்  “வரட்டே சிஜி?”  என்றான்.

”சிஜி என்ன சிஜி? வப்பாடியா இருந்தாலும் பேரு கேட்டா மரியாதை வரணும். ராதா. அதுதான் அவளோட பேரு!”

அந்தக் கடுமையான மழை இரவில், புகைவண்டிகள் வராமல் ஆள் அரவமில்லாமல் வெறிச்சோடி மழையை ஏற்று அள்ளி கொண்டிருந்த ஒரு பேயைப் போல இருந்த ஸ்டேஷனில் தனியாய் படுத்திருந்து சென்னை வந்து சேர்ந்து என்னவும் செய்யவில்லை. டான்கோ ஹாலை தேடவில்லை. அப்படி இருந்தால் கூட ஜெண்டில் மேன்களின் சபையில் தாறுமாறாய் சுழன்றாடி பேண்டை அவிழ்த்து மக்களுக்கு குண்டியைக் காட்ட முடியாது. ஒரு போதும் பிராண்டோ நின்று நடித்த பாலாக முடியாத பட்ஷம், பரத்தை விலக்கி லூயிஸ் எனும் சொந்தப் பெயரிலேயே ஒரு சுமாரான படம் பண்ணினான். கல்யாணம் பண்ணினான். இவன் வந்து போன ஒரு மாதத்தில் சிஜி தேனீரில் விஷம் கலந்து கொடுத்து மாதவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு போனதை அறிந்து இவன் பார்க்கப் போன போது அவள் முடியாது என்று மறுத்து விட இனி எப்போதும் அவளை பார்க்கவே இயலாதென்று முற்றும் முழுதுமாய் உணர்ந்து கயிறை அறுத்து விட்டாயிற்று.  எந்த எதிர்பார்ப்பும் இல்லை. புகார்கள் இல்லை. வாழ்க்கை போகிறது.

ஒரே ஒரு விஷயம்.

லுயிஸ் இப்போது தேனீர் குடிக்கிறான். காப்பி குடிக்கிறான். இளனீர் மற்றும் குளிர் பானம் போன்றவற்றை குடிக்கிறான். விஸ்கி பிராண்டி ரம் ஒட்கா எல்லாவற்றையுமே குடிக்கிறான். காசு இல்லாத போது நகரத்தை தாண்டி சற்று தூரமாய் போய் பூண்டு ஊறுகாயை நக்கிக் கொண்டு பட்டை சாரயத்தைக் கூட குடிக்கிறான்.

 குடிக்க,  குடிக்க,  குடிக்க தாகம் அதிகரித்தவாறு இருக்கிறது.



ராதா மாதவம் 
ஒரு சிறுகதை.



No comments:

Post a Comment