Tuesday, May 29, 2012

யார்..?





எங்கோ எங்கோ எங்கேயோ
தூரத்தில் தூரத்தில் வெகு தூரத்தில்
அழைத்துக் கொண்டிருக்கிறது
அந்த குரல்

நேற்று கழிவறையில் இருந்த போது
கேட்டேன்
வருஷங்களுக்கு முன்னொரு நாள்
கருவறையில் மிதக்கும்போது
கேட்டேன்
உள்ளாடைகளை கூட  சரியாய் அவிழ்க்காமல்
ஒரு வேசியின் யோனியில்
அசைகையிலும்
தான் கேட்டேன்

பசிக்கும் குடல் வெறியின் வழியே
பரிதவித்து பார்த்த பருவத்தின் வழியே
தூங்காமல் செய்த காதலின் வழியே
துக்கித்து அடைந்த பொருட்களின் வழியே
தேடி தேடி வெளியேறினேன்
தேடாத குகைகளில்
கேட்கிறது குரல்

எங்கோ எங்கோ எங்கேயோ
தூரத்தில் தூரத்தில் வெகு தூரத்தில்
அழைத்துக் கொண்டிருக்கிறது
அந்த குரல்





  

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு!




இல்லை,
இல்லயடி என் கண்ணே
நீ மனப்பாடம் பண்ணுவது போல்
அவன் கண்டுபிடித்தது
அமெரிக்காவையல்ல.

பூனைகுட்டிகளோடு
பூனைகுட்டியாகிற
உன்னிடம்
துப்பாக்கிகள் பற்றி
சாட்டைகள் பற்றி
வலி மற்றும் குருதியை பற்றி
சொல்ல அறியேன்

உனக்கு மிகவும் விருப்பமான
அந்த நோஞ்சான் பூனையின் வர்ணம்
எல்லா கடை கோடிகளுக்கும் துரத்தப்பட்டு
காரி உமிழப்பட்ட முகங்களுடன்
இருளில் முடக்கப்பட்ட அரசியல்
புரிந்து கொள்ள முடிவது தானா?

அவன்  கண்டுபிடித்தது
வேறு கண்ணம்மா
வெளுத்த பூனைக்கு
தனியாய் சோறு வைக்காத வரை
உனக்கு எதுவும் தெரிய வேண்டாம்

படித்து கொள்-

ஆம், அந்த தேவடியாள் மகன் தான்
அமெரிக்காவை கண்டு பிடித்தான்.



ஏகாந்தம்.

இரு விழிகளென விரிந்த
இவ்வுலகின் எதுவொன்றும்
இதுவென்று தெரியாத
ஏகாந்தம்.

குளிர்முலை கிடைக்காத சிசு
பசி கொண்டழுத பின்னர்
இருள்படியிறங்கியதில்
இதமாக உறங்கும்
ஏகாந்தம்.

நிழலென ஒரு விரல்முனை
நீறுதற்கொரு நீர்த்துளி
வாயுவை புரவி பண்ணி சாடாமல்
காத்திருந்து காத்திருந்து
கரைந்த பின்
ஏகாந்தம்.

பூக்குமொரு மலரின்
புள்ளியை பற்றியேறி
காய்க்கிற புதிரை காதில் பேசும்
நீ என்ன
என் ஏகாந்தத்தின்
எதிரியாகிறாய்,
என் கண்ணே, கண்ணம்மா
நீயேன் எனது கண்ணீராகிறாய்?

Wednesday, May 23, 2012



' தெய்வத்திண்டே விகிர்திகள் ' என்று ஒரு மலையாள படம். லெனின் ராஜேந்திரன் இயக்கியது. ரகுவரன் என்கிற கலைஞன் நடிக்க பின்னணியில்  மதுசூதனன் நாயரின் கவிதை. அதன் அர்த்தத்தை மற்றவருக்கு சொல்ல முடியுமா என்ற ஆற்றாமையில் மொழியாக்கம் செய்திருக்கிறேன்.  மற்றபடி இதில் பாண்டியத்துவமும் இல்லை. செய்த காரியத்தை நிறைவாய் செய்ய முடியவும் இல்லை. மலையாளம் தெரிந்தவர்கள் மன்னிக்கவும்.



இருளின் மஹா நித்திரையில்
இருந்து எழுப்பி நீ
நிறமுள்ள ஜீவித பீலி தந்தாய்
எனது சிறகிற்கோர் ஆகாயம்
நீ தந்தாய்
நின் ஆத்ம சிகரத்தில் ஒரு
கூடு தந்தாய்

ஒரு குட்டி பூவிலும்
கடல் காற்றிலும்
நீ நீயாய் மணப்பது
எங்கு வேறு
உயிர் உருகுகையில்
ஒரு துளி தவறாமல்
நீயாகவே நகரும் நதி
எங்கு வேறு
கனவின் இதழாய்
உன்னை பரப்பி
நீ விரிய வைத்த ஒரு ஆகாயம்
எங்கு வேறு

ஒரு குட்டி ராப்பறவை
அழுகிற போதும்
முன்பிருந்த அருவியொன்றின்
தாலாட்டு தளரும் போதும்
கனிவினால் ஒரு கல்
கனி மதுரம் ஆகும் போதும்
உன் இதயத்தில் நான் எனது இதயத்தை
பொருத்தி இருக்கிறேன்
உன்னில் அபயம் தேடி போகிறேன்

முடியாது விலக

முடியாது விலக
உன் இதயத்தில் இருந்து என்னை
எந்த சொர்க்கம் அழைத்தாலும்
உருகி நின் ஆத்மாவின் ஆழங்களில்
வீழ்ந்து ஒளிரும் போது தான் சொர்க்கம்
உன்னில் கரைந்து அழிவது என்
நித்ய சத்தியம்






Tuesday, May 15, 2012

kavthai....kavithai?

சரி சரி
மலைகள்  நிமிராமல் 
பூக்கள்  மலராமல் 
அலைகள் குமுறாமல் 
நிலவு  பொழியாமல் 
எப்படி இது?

ஒரு புன்முறுவலை  தட்டி  விடும்
நகைச்சுவை  திருப்பம் 
இல்லனா அறிவியல் துணுக்கு 
மினிமம் 
விடுகதை  கூட 
இல்லாம?

பெண்  சிரிக்கவில்லை 
இதயம் பிளக்கவில்லை 
எப்டிம்மா?

என்னை 
அஜீரணத்தில்  நெளிய வச்சு 
உன்னை
பசியிலே  இருக்க  வச்சு
அந்த வரிகள்  செல்வது  தான் 
எங்கே?

அடுத்த  யுகத்துக்கா?
நீ உதிர்த்த ஒற்றை சொல்லின் முலை குடித்து தூங்காதிருந்து தூங்கி போன அந்த தினங்களுக்கு திரும்ப விரும்புகிறேன். மயில் பீலி கற்பனை முடிந்திராத அந்த பளிங்கு தினங்களுக்கு.கசடு கலவா கண்ணீர் ஸ்படிகம் தித்தித்த தினங்களுக்கு.வாழ்வின் வீதியில் புருஷனோடும் குழந்தைகளோடும் சலிப்பு வாங்கி திரும்பும் உன்னை சந்திப்பதற்கு முன்னே.