Saturday, December 24, 2016




என்
தலையை கூட
எடுத்து வைத்து
முகம் நோக்கி
உள்வாங்கிக் கொள்ளும்
அசதி உலாவில்

மழை என்பது குறிப்பு
மேகம் என்பது குறிப்பு
மழை மேகம் என்பது
மற்றோரு கணிப்பின் குறிப்பல்லவா
தங்கம்?

பீல் பண்ணாம
அந்தாண்ட போ..



Wednesday, December 7, 2016






காதல் அல்ல
காம வசப்பட்டு விடுவது
அல்ல

திரிசங்கு சொர்க்கத்தில் மலைப்பது
யுகாந்திரமாய் மலைகள் எழும்பி வந்த
ஒழுக்கத்தை வெறிப்பது
நல்லவர்களின் நாவில் திமிறும் சவுக்கை
ஓர்மை கொள்ளுவது
தப்பிக்க யத்தனிப்பது
திக்குகளில், திறந்திருக்கும் அத்தனை
கதவுகளின் அருகேயும்
ஓட்டமெடுக்க தயாராவது
பொய்களை பூத்தொடுத்து
மாலைகளை பிய்த்துப் போடுவது
நிற்பது நடப்பது படுப்பது புரள்வது
கற்பனை கொள்ளவும் கற்பனை
வறண்டது

எல்லாம்
நகம் வளர்ந்திருக்கிறதா என்று
பார்த்துக் கொள்ளுவது போல்
சீட்டு பிடித்து வைத்துக் கொள்ளுவது போல்
என் முகத்தில் வேறொன்றை கண்டடைய முடியுமா
என்றென்னை கை தவற விட்டு
கைகளை பிசைவது போல்

காதல் அல்ல
காம வசப்பட்டு விடுவது
அல்ல.

சும்மா
ஜித்துமா.

 

Tuesday, November 29, 2016






இதெல்லாம் இப்போதில்லை
சூரியனின் முள் குத்தாத பின் தெருக்களில்
சுடுகின்ற சாராயத்தை நக்கிக் குடிக்கின்ற
திமிரின்  நாளில்

சொல் சுழற்றி
கண்ணீரில் ததும்பினவளை
தட்டி வனைந்து
சாயந்திர முத்தத்தை உறுதி செய்து
பஸ் ஏறி சென்று பார்த்தது
சுனைனாவை
நான்கு வயது அவளுக்கு
நண்பன் இஸ்மாயிலின் சோதரி மகள்
தலைக்குள் முற்றிய புற்றோடு சிரிக்கும் சவுந்தர்யம்
பலரும் பார்த்திருக்க மாட்டார்கள்
அவள் வரைந்து சுவரில் ஒட்டப்பட்டிருந்த கிதாரில்
மரணத்தை மீட்டிக் கொண்டே
உறுதி செய்திருந்த முத்தம் பிடுங்கினேன்
ஒரு கொலைகாரன் போல

இப்போதெல்லாம் அப்படியில்லை
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
சுனைனா சாவுக்கு அர்த்தம் கற்பிக்க தெரியும்
கடவுளைக் காப்பாற்றிக் கொள்ள தெரியும்
ஏன், வம்பு சண்டை வாங்காமல் வரும் கண்ணீரை கவனிக்காமல்
முத்தம் வாங்கியும் போகத் தெரியும்.

சூரிய முள் மட்டும் குத்தியவாறிருக்கிறது.  

 
  

Wednesday, November 16, 2016





பெரு வெடிப்பில்
பரவியவாறு சென்ற புடவை,
அடையாளம் சொல்ல முடிகிற
நட்ஷத்திர ஜிகினா-
வலியில் மின்னும் போது என்னவும் செய்தவாறிருக்கிறேன்
இன்னும் ஒரு மீனப் போட்டேன்
என்று கூட.

எனக்கு தெரிகிறது இது அல்ல
தெரியாமலிருக்கிற அதுவும் அல்ல
அகதியும் அபலையும் அனாதையும் முழங்கக் கிழிந்த
கடவுளின் இதயமே போதுமானதல்ல
ஒரு யாழின் நரம்பை துழாவும் போதும்
ஒரு யோனியின் மதுவில் துடிதுடிக்கும்போதும்
வெறுமனே முழித்துப் பார்க்கிற
ஒரு ஆகாயம்,சிறு கணைப்பு,
ஒரு ஓகே ஓகே

சிக்கிய மீன் குழம்பில் கொதிக்க
நழுவிய மீன் பரிகசிப்பது
நிலவரம்
வேட்டி அவிழாமல் பார்த்துக் கொள்ளுகிற சர்க்கஸ்
அப்ப அப்ப ஷேவ் அப்ப அப்ப சேவை
எப்பவும் சோறு எப்பவும் ட்டூ பாத்ரூம்

யாருக்கும் தெரியாமல்
மடியில் இருத்தி மகனுக்கு சொல்லிப் பார்க்க வேண்டும்
நெற்றிப் பொட்டினுள் மின்னிக் கொண்டிருக்கும்
அழைப்பை பற்றி.          

















 
   

Sunday, October 9, 2016





நம்மை நாமே அனுமதித்துக் கொள்ள
தயங்கும் தருணங்களை
பிழைப்பின் வாள் கண்காணித்திருக்கும்
நூறு நாற்காலிகளில் அமரும் அசுரம்
இன்று போய் நாளை வா என்கும்
உனது பல்லை தந்தால் குருதி ருசி அறிவேன்
என்று சோறு காட்டும்
சந்துகள் பூராவிலும் தேர் தள்ளி
சன்னதம் வந்தது போலவே குத்தாட்டம்
போடும்.
ஒன்று சொல்ல விரும்புகிறேன்
முகமழிந்த ஆத்மாக்களுடன் பைத்தியம் பேசி
சொட்டுக்களாய் நிறைந்த
சுயம்
மேலும் பைத்தியங்களின் நரம்பு நுழைய
இருக்கும்.
உனக்கு வளையாத லிபிகளுடன் எழுதாத கவிதை
இருந்தவாறிருக்கிறது.

Thursday, September 29, 2016





1


பூண்டு ஊறுகாய் இல்லாமல் எப்படி பார்ட்டியை துவங்க முடியும் என்று திவாகர் விசனப்பட்டு விட்டான். அதற்கு மேல் என்ன செய்ய முடியும். முதலில் அவன் மாப்பிள்ளை. அடுத்தது பார்ட்டிக்கு  பணம் கொடுத்தவன் அவன். மட்டன் ஃப்ரையோ சிக்கன் 65 யோ எனக்கு ஒரு பொருட்டில்லை என்பதாய் திவாகர் நெற்றியை பிசையவே கதிர் முருகனிடம் வண்டி சாவியை வாங்கிக் கொண்டு லாட்ஜை விட்டு இறங்கி வந்தான். பூண்டு ஊறுகாய் நாலு கடை தாண்டிப் போனால் கிடக்கும் தான்.ஜங்க்ஷனுக்கு வந்தான் புயல் மாதிரி.

செல்லில் நேரம் என்ன என்று ஒரு தடவை பார்த்துக் கொண்டு நம்பரைப் போட்டான்.

"எங்க ? "

சார்  என்று தலையாட்டி விட்டு வண்டியைக் கிளப்பி சிமரன் ஃபேன்சிக்கு பக்கமாய் பம்மிக் கொண்டு காத்திருந்தான்.

அக்கம் பக்கம் பார்த்தவாறே சித்ரா வந்தாள். இன்று தலையை ஒரு மாதிரியாய் சிலுப்பி விட்டுக் கொண்டிருக்கிறாள். எந்தப் பக்கம் நின்று பாத்தாலும் அழகி என்பது முக்கியம். வழக்கமான ஜில்லில் சிரிப்பு. கவரை கொடுத்தாள்.

"வரவா?"

" ம். பார்ட்டி எங்க? "

"செந்தில் ஆண்டவர்ல "

" பாத்து ! என்ன ? "

உண்மையில் சித்ராவிற்கு இருப்பது பெரிய மனசு. அவளது முலைகளைப் போலவே. அப்புறம் எப்பவுமே அக்கறை கொட்டும். லீ யில் மெரூன் கலர் சட்டை எடுக்க கவரில் இருந்த பணம் சரியாய் இருந்தது. எடுத்த சட்டையை பத்திரமாய் எடுத்துக் கொண்டு போய் வீட்டில் வைத்து விட்டு ஜங்க்ஷனுக்கு வந்த போது எதை வாங்க வந்தோம் என்பது நினைவில் இல்லை. எதற்கும் ஒரு பூண்டு ஊறுகாய் வாங்கி வைத்துக் கொள்ளுவோம்.
 
லாட்ஜில் ரூமுக்கு வந்த போது எல்லோரும் ரெண்டு பெக்கை முடித்து விட்டிருந்தார்கள். ஒரு பார்ட்டிக்கு இவ்வளவு லேட்டாய் வரலாமா என்பது போல திவாகர் என்னமோ கேட்டான். முதலில் நான் ஒன்று போட்டுக் கொள்கிறேன். மெரூன் சட்டை நன்றாய் தான் இருக்கும் இல்லயா. இந்த திவாகருக்கெல்லாம் கல்யாணம். என்ன பண்ணப் போகிறானோ? சரி, போகட்டும். எனக்கு ஒரு சட்டை எடுத்துக் கொடுத்திருக்கலாமே. இன்னொரு பெக் போனவுடன் யாரிடமாவது இதைப் பற்றி நியாயம் பேச வேண்டும் என்று முணுமுணுப்பதற்குள் பேச்சுலர் பார்ட்டி கல்சுரல் துவங்கி விட்டது.

"ஏய், மாப்ள பேசட்டும், மாப்ள பேசட்டும் ! "

திவாகர் டைட். இன்னொரு பெக் கேட்டான். யாரோ வேண்டாம் என்று சொல்லவே ஏன் வேண்டாம் என்று கேட்டான் அவன். அவன் கொஞ்சம் புரட்சியாளன். உலகின் நெறி முறைகளை மதிப்பது கிடையாது.



திவாகர் ஸ்பீச் :
எப்பவுமே முழ்காத ஷிப் ஃப்ரெண்ட் ஷிப் தான். நம்மளயெல்லாம் பிரிக்க முடியும்னு யாராவது கனவு கண்டா அவங்களுக்கு நான் ஒண்ணு சொல்லிக்கிக்கறேன். டோன்ட் வேஸ்ட் யுவர் டைம், ஓகே?

கைதட்டல்.

எல்லாரும் ஒண்ணா இருக்கானுங்கன்னு ஊருல பல பேருக்கு எரிச்சல். ஊர்மிளா கிட்டயே போட்டு குடுத்துட்டு இருக்காங்க. எதாவது பிரச்சின வரும், உன் புர்ஷன பாத்துக்கோன்னு சொல்லியிருக்கானுங்க. என்னைய்யா பிரச்சின வரும்? வரட்டுமே? பிரச்சின வரட்டும். போலீசு வரட்டும். சி ஐ டி போலீசு, சி பி ஐ போலீசு வரட்டும். ரா போலீசுக்கு தாத்தா ராணுவ பெட்டாலியனே வரட்டும். நாம பிரிஞ்சிருவோமா? பிரிஞ்சிருவோமான்னு கேக்கறேன்?

அப்டி போடு மாமு, அப்டி போடு மாமு.

சுற்றமும் நட்பும் சூழ, நல்ல நாளில் பெரிய நாளில்  கல்யாணத்தை பெரியவர்கள் நிச்சயித்திருந்தார்கள். எனவே மாப்பிள்ளைக்கு என்ன வேலை, காலம் பூராவும் பொண்ணை வைத்துக் கொள்ளுவதற்கு எவ்வளவு வரதட்சிணை போன்ற எல்லவற்றையும் பேசி முடித்திருப்பார்கள் என்று கொள்ளலாம். திவாகர் வீட்டில் தான் கல்யாணம். அது மரபு என்று சொல்லிக் கொண்டார்கள். மரபுப்படி சீரியல் பல்புகள். மரபுப்படி கூச்சல் போடும் ஹாரன். மரபுப்படி வாழை மரம். மரபுப்படி வெல்கம். மெருன் கலர் சட்டையை மாட்டிக் கொண்டு கதிர் கொஞ்சம் சீக்கிரமாகவே வந்து சேர்ந்து விட்டான்.

அவன் ஒவ்வொருத்தனாய் வந்து சேர்ந்த நண்பர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது திவாகருக்கு பெருமிதமாயிருந்தது. நண்பர்களும் மலர்ந்தார்கள். இவன் டென்ஷனாயிருந்தான். ஒரு வழியாய் அந்தி மயங்கி இரவு கூடிவிட்ட போது வந்த சித்ராவோ அலைகடலென வீற்றிருந்த தாய்குலத்தின் மத்தியிலேயே இருந்து கொண்டிருந்தாள். கோவிலில் வந்து இருந்த மணப் பெண்ணை அழைத்து வரக் கிளம்பிப் போனவர்களோடு பம்மிக் கொண்டு சென்று ஒரு சந்தின் சந்தில் சித்ராவின் முகத்தை பார்த்த போது அவள் தெம்பளிக்கும் ஒரு சைகையை செய்தாள். பதினொன்று என்று வாயை அசைத்தது தெளிவாய் பு¡¢ந்தது.

அவள் வாய் ரொம்ப அழகாய் இருக்கிறது என்கிற மின்னல் சுமார் ஏழு எட்டு நிமிடத்துக்கு வெட்டிக் கொண்டிருந்தது.

மிதந்து கொண்டே கல்யாண வீட்டின் பின் பக்கமிருந்த நண்பர்களுக்கு நடுவே நின்று கொண்டான். ஒரு வேளை இந்த நிமிடம் திவாகர் செத்துப் போனால் அடிக்க வேண்டிய தண்ணியைத் தான் அவன் மணவாழ்வின் சந்தோஷத்துக்காக அடித்துக் கொண்டிருந்தார்கள். இவனை குடி, குடி என்றார்கள். அவன் குடிக்காமல் சாகசம் செய்து கொண்டிருப்பதை ஒருத்தனும் கவனிக்கவில்லை. தடியன் ரவி எடுக்க வேண்டிய லெக் பீசை அவன் துழாவி முடிப்பதற்குள் லவுட்டிக் கொண்டு வந்து கடித்து இழுத்துக் கொண்டிருக்கும் போது விறகெடுக்க சன்னாசி வந்தான்.இவனை பார்த்தான்.

" எல்லாரும் என்ன பண்றாங்க? " என்றான்.

" மாத்தி மாத்தி புடிச்சிகிட்டுருக்காங்க "

அவன் பாட்டுக்கு விறகுகளை எடுத்துக் கொண்டு செல்லுகிறான். அவனுக்கு தெரியாதது எதுவும் இல்லை. இருந்தாலும் இந்த மாதிரி  கேள்விகள் தான் கேட்பான். பதில் சொல்லுவது நம் இஷ்டம் தான். என்னவென்றால் அவன் வெறும் சொம்பு. வினாயகம் கழட்டி போடுகிற கோமணத்தை அலசி போட முந்துகிறவன். அவனது அம்மா கூட வினாயகத்தின் வீட்டு புறக்கடையில் புழங்குகிறவள் தான். பத்து பாத்திரம் தேய்த்து முடித்தவுடன் அவர்கள் தருகிற எச்சில் சோற்றில் உயிர் வளர்க்கிற ஒரு வேலைக்காரி. அப்புறம் அந்தம்மா வினாயகத்தின் கூட பிறந்த தங்கையும் தான் என்பதை பொதுவில் வெளியே சொல்லுவது கிடையாது.

கதிர் நழுவினான். பதினொன்று அடிக்க சில நொடிகளே உள்ளன.

தோட்டத்தின் மற்றொரு பக்கத்தில் ஷெட்டுக்கு கல்யாண ரகளைகள் வந்து முட்டாது. அங்கு தான் வாயில் சிக்லட்டை போட்டு மென்று துப்பி கதிர் தயாராய் இருந்தான். சித்ரா வந்தாள்.  இருட்டை துழாவி விழிக்கிற அவளை நோக்கி தம்ஸ் அப் செய்ய அவளும் கவனித்து அதையே செய்தாள். வருகிறேன் என்பது போல செய்தவள் மறைகிறாள்.

அந்த இடத்தில் வந்து நிற்கிறவள் தான் சுந்தரி.

இவனை நோக்கி வந்து நெருங்கி நிற்கிறாள்.

அவன் ஒரு தீர்க்கதரிசி போல இரண்டு கைகளையும் தூக்குவதற்குள் அவள் புகுந்து கொண்டு நின்று முகத்தை ஏந்தினாள். அழகி. பேரழகி. உதடுகள் பிரிந்திருந்தன. அவன் குனிந்தான். வெகு நாள் பழக்கத்தாலும் மேலே என்ன செய்வது என்கிற கற்பனையோடு வந்திருந்ததாலும் பணி சீராய் நடந்தது. தோளின் மேலே இருந்த கதிரின் கரம் மெல்ல இறங்கி பக்கவாட்டில் இடுப்பை பற்றி மெதுவாய் மேலே ஏற ஆரம்பித்து முன்னேறி சட்டென்று முலையை பிடித்து விட உதட்டை பிடுங்கிக் கொண்டு சுந்தரி அவனைப் பார்க்கிறாள். வேறு வழி இல்லை, கையை வாபஸ் வாங்கியாயிற்று.

சிரிக்க முயன்றான்.

பளாரென்று ஒரே அறை.

வாழ்வு ஒரு கனவு என்றால் காதல் வாழ்வு ஒரு கோழிக் கனவு என்றெல்லாம் இந்த நேரத்தில் பாடினால் பொருத்தம்.

கதிர் தாகத்துடன் ஒடி பிடுங்கியும், தந்திரம் செய்தும், மோசடி பண்ணியும் குடித்தான். விழுந்து தூங்கினான். எத்தனை குளித்து க்ரீம் போட்டும் முகம் புன்னகைக்கவில்லை. இப்போது ஒரு விதத்திலும் எழுப்புதலே இல்லாத மெருன் சட்டை அவள் வாங்கிக் கொடுத்தது என்பதால் கழட்ட முடியாமல் கல்யாண வீட்டில் அப்படியே வலம் வர வேண்டியிருந்தது. அப்புறம் எங்கு நின்று பார்த்தாலும் சரியாய் தெரியாத அளவிற்கு அவள் எப்படி மறைந்து கொள்கிறாள் என்கிற சயின்ஸ் பிடிபடாமல் சோர்வுடன் தாலி கட்டுவதை பார்க்கப் போவது மாதிரி ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். சே, மணமேடையில் உட்கார்ந்து கொண்டு இடைவெளியில்லாமல் ஒரு மாப்பிள்ளை இப்படி புன்னகைத்துக் கொண்டிருப்பானா? வெறுப்புடன் திரும்பிய போது முருகன் சரளாவிடம் ஈ இசிகொல்ட்டு எம் வி ஸ்கொயர் என்று சொல்லிக் கொண்டிருந்தான். படிப்பை பற்றி பேசுகிறான் போல. இந்தப் பக்கம் திரும்பினால் அடுத்த நாற்காலியில் வினாயகம் வந்து உட்காருகிறார். சன்னாசி அவரது செல்லை தூக்கிக் கொண்டு முதுகு வளைத்திருந்தான். எப்படி சட்டென்று எழுந்து போவது? வினாயகத்துக்கு கோவம் வந்தால் யானை மாதிரி. தும்பிக்கையால் சுருட்டி மேலே தூக்கி தரையில் அடித்து காலால் நசுக்குகிற சுபாவம். அவர் இவனை ஒரு பார்வை பார்க்க சிரித்து வைத்தான். எதற்கும் சிரிப்பு நல்லது என்பதினால் மட்டும் அல்ல, அவர் சுந்தரியின் தகப்பனாரும் அல்லவா? ஓகே, இனி அந்தப் பக்கம் பார்க்க வேண்டாம்- அட்லீஸ்ட் இந்த சித்ரா எங்கே போனாள்?
     
" கதிர், இது உனக்கே அடுக்குமா? "

" அடுக்காது தான்! "

" பேசிக்கிட்டே இருக்கும் போது கைய புடிச்சிட்டியாமே? "

" நான் கைய புடிக்கல.. " மேலே சொல்ல முடியவில்லை.

நெஞ்சில் தீ கொண்டு காத்திருந்து, பார்த்திருந்து அந்தப் பேய் மவள் தன் குடும்பத்தோடு காரில் ஏறிப் போனாள். விவரம் தெரிந்த வயதில் இருந்து பல இடங்களிலும் இவன் இப்படி பல இடங்களிலும் நின்று கொண்டே இருந்திருக்கிறான். அவள் காரில் ஏறிப் போனவாறு இருந்திருக்கிறாள். மன்னிக்க வேண்டும், அவனுக்கு சில புரட்சி முழக்கங்கள் தோன்றுகின்றன. அவனுக்கு அது சரியாய் புரியவில்லை தான், சமத்துவமே இல்லாத இந்த உலகை அவன் அடித்து நொறுக்க விரும்புகிறான். ஒடுகிற காருக்கு பின்னால் சைக்கிளை மிதித்துக் கொண்டு ஓடுகிற சன்னாசியை தூ, தூ என்றான்.

சுந்தரி பின்னால் ஓடிக் கொண்டிருப்பது எதில் சேர்த்தி என்கிற யோசனை வருவதற்கு முன் அவனை பளாரென்று அறைந்த சுந்தா¢யின் பெண்மையின் கண்டிப்பு நினைவில் வந்தது. சே, இந்த நிமிடம் கதிர் எந்த அளவிற்கு சுந்தரியை விரும்புகிறான் என்பது அவளுக்கு தெரியாமல் போயிற்றே?


*****

2


நண்பர்கள் சுவரில் சாய்ந்து ஜட்டியுடன் உட்கார்ந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு முன் காக்கி பேன்ட் பூட்ஸ் போட்ட இரண்டு கால்கள் நடக்கின்றன. இன்ஸ்பெக்டர் தான். தனது பொண்டாட்டிக்கு பட்டுபுடவை வாங்கிக் கொடுத்தால் மட்டுமே உன்னோடு கொடைக்கானல் வர முடியும் என்று கூத்தியாளுக்கு கண்டிஷன் போட்டுக் கொண்டிருந்தார். மலையில் கும்மியடித்தால் எக்கோ உண்டு என்று சொல்லியும் படியவில்லை என்பதால் பையங்களை எழுப்பி நிறுத்தி சரியான அடி.

" எங்கடா பொண்ணு? எப்போ அவன் கூட அனுப்பி வெச்சீங்க? "

வினாயகம் ம், ம், ம் என்று உறும டிரைவர் காரை பறக்க வைக்கிறார். காரின் உள்ளே ஒரு கூட்டமே பிதுங்கிக் கொண்டிருக்கிறது. எல்லோருமே டென்ஷனாயிருக்கிறார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா தான். பஸ்ஸை மடக்கி நிறுத்தும் போது பார்த்து விட்ட கதிர் சீட்டுக்கு அடியில் ஒளிந்து கொண்டு விட்டான். பொது மக்கள் காட்டிக் கொடுக்கவில்லை. ஆனால் சரளாவும், அவளை கூட்டி வந்த முருகனும் மாட்டிக் கொண்டு விட்டார்கள். பஞ்சாயத்து. சரளாவிற்கு மூன்று மாதம், எனவே கல்யாணம் பண்ணிக்க ஓடினோம் என்றான் முருகன் சிம்பிளாய். ட்ரைவர் வினாயகத்தை பார்த்தார். அவர் தான் சரளாவின் அப்பா. வினாயகம் நல்ல வேளை பையன் வேறு சாதியாய் இருந்தால் செத்திருப்பான் என்கிற புன்முறுவலோடு பெருந்தன்மையாய் ஒரு தீர்ப்பு வழங்கினார்.

வினாயகம்
ஸ்பீச்
ஏதோ இளசுங்க. வயசுக் கோளாறு. தப்பு பண்ணிடுச்சுங்க. அப்புறம் இது அந்தக் காலம் மாதி¡¢யா? ஆம்பள ஆம்பளய கட்டிக்கிறான். பொம்பள பொம்பளய கட்டிக்கறா! மனசு விட்டு காதலிச்ச ஒரு பையனும் பொண்ணும் கட்டிக்கக் கூடாதா?

( கை தட்டல். )

இந்த விஷயதில் தப்பித்து விட்டான் கதிர்.  சித்ராவிடம் இருந்து சுந்தரியைப் பற்றி எதையும் பிடுங்க முடியவில்லை. கோபமாயிருக்கிறாள். அவ்வளவு தான். ஆனால் ஒவ்வொரு முறையும் சித்ரா, நீ சுந்தரியின் கையைப் பிடித்து இழுத்தது தர்மமே அல்ல என்ற போது குத்தலாம் போல இருந்தது. என்றாலும் அதற்கு நான் எந்த பிராய சித்தமும் செய்ய தயார் என்கிற பதிலை சொல்லி அனுப்பாமல் இருக்கவில்லை.ஒரு நாள் சுந்தரி  அவள் வீட்டில் அவள் தனியாய் இருப்பது அறிந்து எஸ் எம் எஸ்ஸில் நான் ஒரு மிருகம், என்னை மன்னித்து விடு என்று எழுதி, கூடவே அழுகை சிம்பல் போட்டான். சரளா முருகன் கல்யாணத்தில் ஜெனரேட்டர் அறைக்கு பின்னால் நீ வந்தாய் என்றால் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். நேரம் அதே பதினோரு மணி !

ஒரு தடவை பழமுதிர் சோலைக்கு கூப்பிட்டாளே என்று போனால் தனியாய் உட்கார்ந்து கசாட்டாவை நக்கிக் கொண்டு எதற்கு மெசேஜ் போட்டு சுந்தரியை டார்ச்சர் பண்ணுகிறாய் என்று சீறினாள் சித்ரா. கல்யாணத்தில் நீ எந்த விதமான எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது, புரிகிறதா? உனது கை பிடித்த இடத்தில் இப்போ கூட அவளுக்கு என்னவோ மாதிரி இருக்கிறதாம் !

முருகனின் கல்யாணத்துக்கு கதிர் ரொம்ப லேட்டாகத் தான் கிளம்பினான்.

மண்டபத்துக்கு எதிரே சன்னாசி மூன்று நான்கு பேருடன் நின்றிருந்தான்.

" சார், இவரு மிஸ்டர் கதிர். கதிர், இவுரு சோமு, இவரு பத்ரி , இவரு ராம்ஜி, இவரு கண்ணைய்யா! "

இவனுக்கு இருந்த குழப்பத்தில் அந்த ரியல் எஸ்டேட் பிரச்சினைகள் ஒன்றும் புரியவில்லை. பசங்க தண்ணி அடிக்கிற இடத்துக்கு தான் போக வேண்டும். தேடினான். யாரும் மாட்டவில்லை. டிரைவர் வீட்டு கல்யாணத்தை தன் வீட்டு கல்யாணமாய் வினாயகம் எடுத்து நடத்தவே குடி கொஞ்சம் தூரமாய் இருந்தது. கதிர் மூன்று பெக் போட்டான். ரெண்டு ஆப்பிள் சாப்பிட்டான். அரை துண்டு ஆம்லேட் கிடைத்தது. கொட்டையை தவற விட்ட அணிலை போல மந்தமாய் இருந்து கொண்டிருக்கும் போது திவாகர் அத்தனை பேரையும் கேவலமாய் பார்த்து விட்டு போனான். போதும் என்று தோன்றியது, விட்டு விட்டேன் என்று குடியை கேவலப்படுத்தியதற்கு அத்தனை பேரும் கொதித்து போய் பேசிக் கொன்டிருந்தார்கள். அந்தப் பெண் ஊர்மிளா உட்காரு என்பதற்குள் இவன் படுத்து விடுகிறான் என்றார்கள். கதிருக்கு எதுவும் சுவாரஸ்யப்படவில்லை. நேரம் நெருங்குகிறது. ஜெனரேட்டர் ரூம் பக்கம் போவதா, வேண்டாமா. வேண்டாம் என்று முடிவு செய்து, வீட்டுக்கு கிளம்பினான். அதற்குள் வயிறு பசிக்கவே தனியாய் போய் மண்டபத்தில் பந்தியில் உட்கார்ந்தான். திடுக்கிட்டான். மக்களுக்கு பந்தி பரிமாறுவதில் சுந்தரி. ஐயோ, தாவணியெல்லாம் அணிந்து கொண்டு காவியத் தலைவி மாதிரி . நெஞ்சை அடைத்தது. அவள் வைத்த லட்டை மட்டும் எடுத்துக் கொண்டு ஜெனரேட்டர் ரூமுக்கு பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான். மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.

பதினோரு மணிக்கு சா¢யாய் வந்தாள் சுந்தரி.

முட்டிக் கால் போட்டு பாதத்தை தொட வேண்டுமா, அப்படியே வீழ்ந்து விடுவதா என்றே யோசிக்கவில்லை. அவன் குனிவதற்குள் அவள் அவன் மார்பில் சாய்ந்து விட்டாள். முகத்தை ஏந்தி விட்டாள். முத்தத்தை தொடங்கி விட்டாள்.  அவளது உடல் மீது பட்டு விடக் கூடாது என்று முதுகுக்கு பின்னால் வைத்திருந்த கரங்களில் ஒன்றை அவளது கரம் தேடிப் பற்றியது. முன் பக்கம் கொண்டு வந்தது. மார்பில் வைத்து, முந்தானையை விலக்க ஏற்கனவே பட்டன்ஸ் அவிழ்க்கப்பட்டிருந்தன. அவன் முகத்தை தனக்குள் புதைத்துக் கொள்ளுகிறாள் அவள்.

கதிர் இந்த இடத்தில் ஒரு பாட்டை விரும்புவான். அப்படியே தெறிக்க வேண்டும்.

முருகன் தாலி கட்டும் போது சரளாவின் மேடிட்டிருந்த வயிறை பலரும் பார்த்தார்கள்.

கதிர் மண்டபத்தின் எந்தப் பக்கத்தில் நின்று பார்த்தாலும் சுந்தரி தெரிந்தது என்ன மாதிரி  ஜியாகரபி என்று தெரியவில்லை. ஒரு இடுக்கில் அவர்கள் எதிரும் புதிருமாய் கடந்த போது வாயில் ஒரு மசால் வடையை திணித்து விட்டு போனாள். அது கூட பரவாயில்லை, அவசரமாய் பால்கனி பக்கம் கூப்பிட்டு சப்பிக் கொண்டிருந்த சாக்லெட்டை இவன் வாயில் உமிழ்ந்து விட்டுப் போனாள். நண்பர்களோடு இருக்கும் போது அவளது கண்கள் தன்னை விழுங்கிக் கொண்டிருப்பது பார்த்து அவனுக்குள் அழுகை புரண்டது. திவாகர் எங்கே பொண்டாட்டி ஓடிப் போய் விடுவாளோ என்கிற மாதிரி அவள் கையை பிடித்துக் கொண்டு ஒரு ஓரமாய் இருப்பதை அனைவரும் ஓட்டுகிறார்கள். காதலுக்கு பிரதி நிதியாய் இவன் அதை கண்டித்தான். காதலை புரிந்து கொள்ள மாட்டீர்களா என்று வினாவெழுப்பினான். ஒரு நல்ல காதலின் அடையாளம் அது என்று மேஜையைக் குத்தினான். காதலின் மகத்துவத்தில் விம்மி பெருத்திருக்கும் இந்த நல்ல நாளைப் பற்றின  நல்ல செய்தியை சொல்லலாம் என்று பார்த்தால் சித்ரா தான் கண்ணில் படவே இல்லை.

இந்த முறையும் சுந்தரி காரில் ஏறித் தான் வீட்டுக்கு போனாள் என்றாலும் போகும்போது விட்டு சென்ற அந்தப் பார்வையை எப்படி மறக்க முடியும்?

வந்த விருந்தாளிகள் எல்லாம் போய்க் கொண்டிருந்தார்கள். திவாகர் ஊர்மிளாவின் அதட்டலை செவி மடுத்தவாறு போனதில் இவன் சரி  போயிட்டு வாடா என்று பத்து தடவை சொன்னதை கேட்கவே இல்லை. இதை காதல் என்று எடுத்துக் கொள்ளலாமா என குழம்பினாலும் சுந்தரி சுற்றி வந்த இடங்களை சுற்றி வந்தான். சொந்தக்காரர்களெல்லாம் கூட போன பிறகு எனக்கு இங்கே என்ன வேலை என்று உறைத்து முருகனிடம் சரளாவிடமும் விடை சொல்ல சென்ற போது முருகன் ஈ இசிகொல்டு எம் வி ஸ்கொயர் என்று சரளாவிடம் சொல்லிக்  கொண்டிருந்தான். நடுவில் எப்படி தான் அவளுக்கு கர்ப்பம் ஆயிற்றோ? மண்டபம் விட்டு தாண்டும் போது சீதனப் பொருட்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த சன்னாசி ஒரு நிமிஷம் என்றான் கதிரைப் பார்த்து.

" நான் எப்பவுமே இப்படி எடுப்பாவே இருப்பேன்னு நெனைக்கறாங்க கதிர். அப்டி இல்ல. கொஞ்ச நாள்ல வேற லெவல்ல ஆயிடுவேன். நீ முடியாதுன்னு சொல்றியா? "

" வீட்டுக்கு போவணும், நீ பிரச்சின என்னன்னு மட்டும் சொல்லு. "

" பிரச்சின என்ன பிரச்சின? என் மாமா பொண்ணு சுந்தரி என்ன லவ் பண்ணணும். அவ்ளவு தான். அவள நான் கல்யாணம் பண்ணணும். அவ்வளவே தான் ! "

எங்கேயும் இடி இடிக்காமல் அலைகள் குமுறாமல் ஒரு ஆட்டுக் குட்டி கூட திரும்பாமல் உலகம் இயங்குவதை கதிர் பார்த்து நின்றான்.


-இப்போ இடைவேளை சார்-




3

ஆரம்பிச்சிருவோமா?

ஒரு திரி  நெருப்பு கொளுத்தப்பட்டு அது விருவிருவென நகருகிறது. அதை கொளுத்தின பையனின் முகம். சரம் பற்றி டபடபவென வெடிக்கிறது. அதை தாண்டுவோம்.

தவில் நாதஸ்வரம் வாசிக்கிறவர்கள் செயின் மோதிரம் போட்டிருக்கிறார்கள் என்பதை கவனிக்க. ரிச் பாய்ஸ். வாசித்தவாறு நடக்கிறார்கள். சீர் செனத்தி தாம்பாளங்களுடனும், பட்டுப் புடவை நெக்லஸ் பெருமிதத்துடனும், மற்றும் பல குறுகுறுப்புக்களுடனும் முன்னேறி வருகிற பெண்கள். அவர்களில் பலரையும் நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாய் மூன்று வயது பெண் குழந்தையை கரம் பற்றிக் கூட்டி வரும் சரளாவை. ஒரு வயது பெண் குழந்தையை தூக்கி வரும் ஊர்மிளாவை. அப்புறம் சுந்தரியின் அம்மா. அவர்கள் இந்த ஊர்வலத்தில் நடந்து வருவதில் நடந்து வருவது என்ன வியப்பு? மணப்பெண் சுந்தரியல்லவா? அலங்கரித்த  பிரம்மாண்டக் காரில் சுந்தரியோடு தோழிப் பெண்ணாய் சித்ரா. இருவர் முகமும் வர்ண விளக்குகளில் தத்தளாங்கி அப்படி ஜொலிக்கிறது. அட, அப்படி ஒரு சந்தோஷம் அவர்கள் முகங்களில்!

ஊர்வலம் மண்டபத்தை நெருங்குகிறது. ஜஸ்ட் டங்க் ஸ்லிப். கல்யாண மாளிகை.  

ஆரத்தி எடுக்கும் போது சுந்தரி சலனமின்றி நிற்கிறாள்.

எஸ்டீம் க்ளோசப்பில் விசும்புகிறாள். சத்தம் இல்லாமல். உடலே கூட ஒரு முறை குலுங்குகிறது. அப்புறம் நிமிர்ந்து நாசூக்காய் கண்ணீரை துடைத்துக் கொண்டு மேக்கப் கலைந்திருக்கிறதா என்று ஜரூராகி, கக்கூசில் ஃப்ளெஷ்ஷை திறந்து விட்டு வருகிறாள். மணமகளை அழைத்துச் செல்லுகிறார்கள். கைதட்டல்கள் கேட்க படியேறுகிறாள். ரிசப்ஷன் மேடையில் கோட்டு சூட்டு போட்டு நிற்கும் சன்னாசிக்கு அருகே நின்று கொள்கிறாள் சுந்தரி. உய் உய் உய் என்று எவரோ சிலர் விசில் கூட அடிக்கிறார்கள். அனேகமாய் வாரித் தரும் பாரி வள்ளல் சன்னாசி நற்பணி மன்றத்தின் எழுச்சிமிகு இளையவர் பட்டாளமாயிருக்கலாம். சன்னாசியின் செல்லை தூக்கிக் கொண்டு முதுகு வளைத்து நின்றிருக்கிறார் வினாயகம். ஒரு செகண்ட்டை கூட விட்டு வைக்காமல் ஃபிளாஷ்கள் மின்னுகின்றன. மாண்புமிகு மந்தி¡¢கள், மானமிகு அரசியல் தலைவர்கள், மற்றும் பல நாட்டிற்கு உழைக்கும் நல்லவர்களுடன், அதிகாரிகள் சன்னாசியுடன் படம் எடுத்துக் கொள்ள போட்டி போடும் திருக்காட்சியை ரொம்ப அலட்ஷியமாய் பார்த்திருக்கிறாள் மீனாம்பா. சன்னாசியை பத்து மாதம் கருவில் சுமந்து ஈன்றெடுத்த அன்னை. சன்னாசியின் தாய்.

பத்து ப்ளாஸ்டிக் கிளாசுகள். அதில் சரசரவென சரக்கு ஊற்றப்படுகிறது. குளிர்பானம் பீய்ச்சப்படுகிறது. இறுதியாய் நிறையும் வரை தண்ணீர். மின்னற்பொழுதில் இந்த வேலைகளை செய்து முடித்த உழைக்கும் கரங்களுக்கு சொந்தமானவன் திவாகர். எல்லோருக்கும் எடுத்துக் கொடுக்கிறான். வாங்குகிற பத்து பேரில் கதிரும், முருகனும் இருக்கிறார்கள். சீயர்ஸ்டா. எல்லோரும் சரக்கை விழுங்குகிற அமைதியில் தூரத்தில் இருந்து கேட்கிறது சன்னாசி வாழ்க முழக்கம். கதிர் என்கிற ஒரு ஆளைத் தவிர மற்ற எவரும் அதை பொருட்படுத்தவே இல்லை என்பது நுட்பமாய் பார்த்தால் தொ¢யும்.

" திவா, ஒண்ணு கேக்கணும்! "

" என்ன பாசு? தெனமும் குடிக்கறனே, அதப் பத்தியா? "

" இல்ல திவா "

" அப்ப அப்ப பொண்டாட்டிய போட்டு அடிக்கறனே, அதப் பத்தியா? "

" இல்ல திவா "

" ஆஃபிஸ் ஃபிகர கரக்ட் பண்ணி செட்டப் பண்ணிகிட்டனே, அது? "

" இல்ல திவா "

" ஊர்மிளவ டைவர்ஸ் பண்ணலாம்னு ஒரு யோசன. அதப் பத்தி கேள்விபட்டிருப்ப? "
"    
" இல்ல திவா "

" தினம் ஒரு புதுமை. தினம் ஒரு புரட்சி. இதப் பத்தியா?'

" இல்ல திவா  "

" வேற என்ன எழவு மயிரு? நீயே சொல்லித் தொல ! "

" ஒண்ணும் இல்ல. சிம்பிள். நீ எப்ப சாவ? "

கதிரைத் தவிர மற்ற எல்லோரும் சிரித்தார்கள்.  அப்படி கூட சொல்ல முடியாது. அவன் சிரிப்பதைப் போல ஒன்று செய்ய வேண்டியிருந்தது. சிவாஜி மாதிரி. ஏனெனில் பால்யம் முதல் அவர்களில் ஓடிய மின்சாரத்தை யாரும் பார்த்திருக்க முடியாது. அதைப் பற்றி ஒருவரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. கதிர் தன் காதல் தோல்வியை தனியாய் தான் கொண்டாட முடியும். என்ன நடந்தது என்று அவனிடம் அவனே தான் கேட்டுக் கொள்ள முடியும். அப்படி கேட்டு அதில் என்ன பதில் கிடைக்கும் பெரிதாய்? சுந்தரி படி, படி என்றாள். இவன் ஒரே நேரத்தில் நாலு பக்கம் படித்துக் கொண்டிருந்த போதே சன்னாசி கோடீஸ்வரனாகி விட்டானே? ( இந்தக் காலத்தில் ஒருத்தன் கோடீஸ்வரன் ஆவதற்கெல்லாம் லாஜிக் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம், இல்லயா?) வினாயகம் மாதிரி ஆள் படிப்பாளியை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்? படிப்பாளியே என்ன செய்யப் போகிறான்? லோன் போட்டு வீட்டைக் கட்டி புல்ள குட்டிகள படிக்க வைப்பானாக்கும்? நோ, நோ இது வேறு ஆட்களின் காலம். அங்கே இருந்து சன்னாசி வாழ்க என்கிற இடிமுழக்கம் கேட்கிறது இல்லயா? அவனை ஒரு பெக்கு போட வைப்பதற்கு நம்ம ஊரு மாண்புமிகு நாலு பெக்கை போட்டு உருண்டதை யாரிடம் கேட்டாலும் சொல்லுவார்கள். எல்லாம் இருந்தாலும், சுந்தரி கொஞ்சம் விஷப் பிரயோகம் செய்து ஆஸ்பிட்டலில் படுத்து டிஸ்சார்ஜ் ஆகிப் போயிருந்தால் கூட கதிர் தனக்குத் தானே சமாதானம் சொல்லியிருந்திருப்பான். இப்படியா ஒருத்தி கழுத்தறுப்பாள்?

துரோகி !    

அவனுக்கு வெறியேறிப் போயிருந்தாலும் ஒரு கண்ணாடி கிளாசை மட்டுமே தரையில் அடித்து உடைக்க முடிந்தது. என்ன என்ன என்று சூழ்ந்தவர்களிடம் ஒரு ஃபக் ஆஃப் சொல்லிவிட்டு கிளம்பும் போது சித்ரா எதிர்பட்டாள்.

" லெவனோ க்ளாக். ஆஃபீஸ் ரூம், சைடு படிக்கட்டு ! " என்றாள்.

என்னடா இது?

ரிசப்ஷன் மேடை பக்கமே பாராமல் நண்பர்களுடன் லைட் ம்யூசிக்கின் கடைசி குத்து பாட்டுக்கு கதிர் ஆடினான் தான். மப்பு இறங்கட்டும் என்றும் ஒரு ஐடியா. ஆனால் அதற்குள் எவரோ சில பிக்காரிகள் சன்னாசியையும், சுந்தரியையும் இழுத்துக் கொண்டு வந்து நடுவில் விட்டார்கள். கல்யாணம் என்றால் மகிழ்ச்சியை வலுக்கட்டாயமாகவாவது பிழிய துடிக்கிறவர்கள் பையனையும் பெண்ணையும் நடனமாடத் தூண்டுகிறார்கள். என்ன ஒரு அவமானம்? டிரவுசர் கழண்டது போல சன்னாசி ஆட ஆடவே கூடாத அந்த சுந்தரி  தலை நிமிராமல் பொங்கி வரும் சி¡¢ப்பை அடக்கிக் கொண்டு ஆடுகிறாள். உண்மையில் நல்ல ஸ்டெப்ஸ். சுழன்றாடுகிறாள். உய், உய், உய். அதான், அதான், அதே தான் ! அமுக்கு, அமுக்கு, அமுக்கு. குமுக்கு, குமுக்கு, குமுக்கு. ஏய். இவங்கள் எல்லாம் என்னை வேண்டுமென்றே இடிக்கிறார்களா? இந்த திசைப் பக்கமே திரும்பக் கூடாதென்று கதிர் நகர்ந்தான். நூற்றியெட்டு பதார்த்தங்களுடன் தலைவாழை இலை சாப்பாடு. கழுத்து முட்ட சாப்பிட்டு இரண்டு பீடா மென்று குழாயில் வெகு நேரம் வாய் கழுவி, முகமும் கழுவி நேரம் பார்த்தான்.மணமகள் அறை என்பதை படித்தவாறு படியேறி, அடுத்த மூன்றாம் மாடியில் ஆஃபீஸ் ரூம் சைடு படிக்கட்டு எப்படி இருக்கிறது என்று பார்த்துக் கொண்டு மொட்டை மாடியில் வானத்தை பார்த்தவாறு படுத்தான். நிலா இருந்தது. மேற்கொண்டு அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. ஒரே நேரத்தில் பல பாடல்கள் முட்டியது. சினிமா பாடல்கள் தான். அதை பாடிப் பார்ப்பதால் ஒரு பயனும் இல்லயே என்று சந்தேகம் வந்து விட்டது. கவிதைகளை பற்றிய யோசனையும் கூடவே மான் மயில் குயில் வண்ணத்துப் பூச்சி மலை கடல் நதி பூ மலர் முள் நெஞ்சம் தஞ்சம் போன்ற வார்தைகளும் புரண்டு ஒரு வழியாய் மேகத்தில் மறைந்த நிலா என்கிற வரியைப் பிடித்து கண்ணீர் சிந்தினான். ஒரு கணம் விம்மி வாய் விட்டு அழுது விடவே முடிந்தது. இதயத்தை பிசைந்திருந்தவர்கள் நிறுத்தி விட்டார்கள் போல ஆசுவாசம். ஒரு சின்ன பூனைக் குட்டி எழுந்து வருவது போல வந்தது துணிச்சல். பெருத்து புலியாய் உறுமியது. என்ன இப்போ? என்ன நடந்திடும்? நடக்கறது நடந்து தான் ஆகும்னு இருந்தா கூட சரி, விடு, பாத்துப்போம்!

சுந்தரியால் நிமிர்ந்து பார்க்க முடியாது. குனிந்து தேம்புகிறாள்.

" எனக்கு தெரியும் சுந்தரி.  கல்யாணம் வேணாம்னு நீ அடம் புடிச்சிருப்ப. உங்கப்பா விட்டிருக்க மாட்டார். சன்னாசி விட்டிருக்க மாட்டான். நீ யாரையாவது லவ் பண்றதா இருந்தா அவன் தலய வெட்டி தண்டவாளத்துல போடணும்னு பேசி இருப்பாங்க. என் உயிர காப்பாத்தறதுக்காக நீ இந்த தியாகத்த செஞ்சிருக்க. இல்லயா? "

" கக், கக், கக், கக், கக்.."

" சா¢. போ. எங்க இருந்தாலும் நல்லா இரு "

ஏதோ ஒரு திருப்தி. அவளை விட்டு நடந்த போது தெம்பாயிருந்தது.

" கதிர் "

" ம்? "

" நான் நாளைக்கு மேல தான் இன்னொருத்தரோட பொண்டாட்டி. இன்னைக்கு இல்ல "

“ அதுக்கு? "

நிமிர்ந்து கண்ணடிக்கிறாள். வா என்பது போல முகத்தில் காட்டிய சைகை ஒரு மாதிரியாய் இருந்தாலும் ருசி கண்டவன் சும்மா இருக்க முடியுமா. மற்றும் உரிமையை வேறு நிலை நாட்ட வேண்டும்.

முத்தம் சற்று ஆழமாகவே போயிற்று என்பதை மட்டும் சொல்லி விட்டு விடுவோம்.

இதழ்களை மீட்டுக் கொண்டு விலகியவள் இப்போது ஆவேசத்துடன் சொன்னாள்.

" ஏய், நீ என்ன மறந்து உடனடியா ஒரு கல்யாணம் பண்ணணும். அதுக்கு அப்பறம் தான் என் ஃபஸ்ட் நைட்டே நடக்கும். ஞாபகம் வச்சுக்க. "

ஆறாத துயருடன் அவள் கண்களை துடைத்துக் கொண்டு போனது கண்களிலேயே நின்றது.

அவள் மணமேடையில் கண்ணீரும் கம்பலையுமாய் அமர்ந்திருக்கிற காட்சி உண்டாக்கிய குறுகுறுப்பில் தாலி கட்டப் போனதை பார்க்கப் போனால் அப்படி ஒரு பிட்டு இல்லை. சிரித்துக் கொண்டிருந்தாள். வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள். சன்னாசியின் கரங்களை கோர்த்துக் கொண்டிருந்தாள். இன்னும் சொன்னால் ஜோக்கு சொல்லி சும்மாவேனும் சன்னாசியையே சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாள். தாலி கட்டி சடங்குகள் ஓய்ந்த பிறகு கதிர், திவாகர், முருகன், பாசு உள்ளிட்ட நண்பர்களுக்கிடையே வந்து உட்கார்ந்த பிறகு சன்னாசி சிகரட்டு கிடைக்குமா என்று கேட்டான். பணம் வந்ததால எல்லாத்தையும் பழகிகிட்டேன் என்கிற மாதிரி கூறி புகை விட்டான்.

" சொல்லுங்கப்பா. எப்டி என் சம்சாரம் சுந்தரி ? சூப்பரா? "

எல்லோரும் அவளைப் பற்றி புகழ்ந்தார்கள். தலை நிமிராமல் போய் தலை நிமிராமல் திரும்பி வருவாளாம். காதல் விவகாரங்களே தெரியாத கற்புக்கனல் என்றான் ஒருவன். இந்த மாதிரி ஒரு குணவதி கிடைக்க சன்னாசி கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

வாயெல்லாம் பல்லாய் சன்னாசி சீன் போட்டாலும் உள்ளுக்குள் ஒரு டொய்ங்க் இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.  .

" இன்னைக்கு கன்னி கழிக்கிற வேல. பூ மாதிரி இருக்கறவ கிட்ட மொரட்டுத்தனமா நடந்துக்க கூடாது. நான் அப்படியே எனக்குள்ள ஒரு கடமை, கண்ணியம்,கட்டுப்பாட வர வெச்சுகிட்டிருக்கேன், யா ! "



*****






இறுதி


அவர்கள் நான்கு பேர் இருந்தார்கள். குடித்திருந்தார்கள். இறுக்கமாய் இருந்தார்கள். காத்திருந்தார்கள். அலுவலகம் முடிந்து சரியான நேரத்தில் திவாகர் வந்தான். அவனுக்கு அவர்கள் வழி மறித்தது பிடிக்கவில்லை. அவ்வப்போது அவர்களுடன் இருந்திருக்கிறான். குடித்திருக்கிறான். எவ்வளவோ பணம் செலவு பண்ணியிருக்கிறான். அவர்களும் இவன் காட்டி தருகிற ஆட்களை அடித்திருக்கிறார்கள். இந்த காலமே அப்படிதானே? அதற்காக அடிக்கடி பணம் கேட்பதும், கண்ட இடத்தில் வந்து நின்று தொல்லை செய்வதையும் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? ஸ்டேட்டஸ் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அப்புறம் பேசுவோம் என்று நகர முயன்றான். அவர்கள் சம்மதிக்கவில்லை.

" என்னம்மா நீ. ஃப்ரெண்ட்ஸ மதிக்க மாட்டியா? "

" யாரு ஃப்ரெண்ட்ஸு? பழகிட்டா ஃப்ரெண்ட்ஸா? எங்கிட்ட பணம் எல்லாம் இல்ல. குடுக்க முடியாது "

" இங்க பாரு திவாகர். நான் உன்ன என் உயிர் நண்பனா தான் நெனச்சேன். டெலிவரி டைமுல காசு தரேன்னு சொல்லியிருந்தியா, இல்லயா? அவள ஹாஸ்பிட்டல்ல கூட விட்டேம்பா. கஷ்டம். அதான் கேக்கறேன். "

" ஏய், ஊர்ல இருக்கறவன் கஷ்டத்துக்கெல்லாம் நான் என் மடிய அவுக்க முடியாது "

அவ்வளவு தான் தெரியும். அவன் திவாகா¢ன் வயிற்றில் கத்தியை இறக்கினான். வண்டியிலிருந்து திவாகர் சரிவதற்குள் அவர்கள் ஓடிப் போனார்கள். ஆட்கள் பார்த்து ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போவதற்குள் திவாகர் இறந்திருந்தான்.

கதிர் சென்னை வேளச்சேரியில் இருந்தான். விஷயம் தெரிந்தவுடன் அலுவலகத்தில் லீவு சொல்லி ஒரு காரை பிடித்துக் கொண்டு ஊருக்கு வந்தான். எல்லா நண்பர்களும் இருந்தார்கள். ஒரு வார்த்தை பேசாமல் சடலத்துக்கு அருகே உட்கார்ந்திருந்த ஊர்மிளாவை பார்த்தார்கள். குழந்தை நிறைய ஜனங்களைப் பார்க்கிற சந்தோஷத்தில் உற்சாகமாய் விளயாடிக் கொண்டிருந்த்தது. சவ அடக்கம் முடிந்து மனசு கனத்து துக்கம் கொப்புளிக்கும் இந்த நேரத்தில் குடி அர்த்தமுள்ளதாயிருந்தது. ஆனால் இறந்தவனை பற்றி பேசி பேசி என்ன அறிந்து கொள்கிறோம் என்பது தெரியவில்லை. ஊர்மிளா மட்டும் தெளிவாய் சொன்னாளாம். எப்படி இருந்து தன்னை நிரூபிப்பது என்கிற சவால் தான் திவாகரை கொன்றது என்றாளாம். ஒரு விதத்தில் எனக்கு விடுதலை என்று அவள் சொன்னதாய் கேள்விப்பட்டதை மட்டும் அப்படி சொல்லி இருக்க மாட்டாள் என்று சொல்லிக் கொண்டார்கள்.

கதிர் இரண்டு நாள் வீட்டில் இருந்தான்.

அவனுடைய அப்பா மெதுவாய் நல்லுசாமி நம்ம வீட்டுக்கு வந்திருந்தார் என்றார். இவனுக்கு புரியவில்லை. அவரோட பொண்ணு உன்னத் தான் கட்டிக்கப் போறேன்னு அடம் புடிக்குதாம். உனக்கு அந்தப் பொண்ண புடிக்குமா? போய் பாத்து நிச்சயம் பண்ணுவோமா? தூக்கி வாரி  போடாமல் என்ன செய்யும்? நல்லுசாமியின் மகள், வேறு யார்? சித்ரா. துண்டு துண்டு துண்டாய் ஏராளமான படங்களை ஓட்டிப் பார்த்தான். சந்தேகமே இல்லாமல் எல்லாமும் இனித்துத் தான் கிடந்தது.

போன் பண்ணினான்.

" நெஜமாவா? "

" ஏ, சீ, போன வை "

" இல்லடி. உனக்கு என் மேல லவ்வா. பொண்ணு பாக்க வர்ரதுக்காகத் தான் கேக்கறேன்? "

" ஆ, இவுரு பெரிய புடுங்கி. வரார், வரார்னு நான் வழி மேல விழி வெச்சு காத்துகிட்டிருக்கேன். போடா "

ஆனால் குடும்ப சகிதம் பெண் பார்க்க போன போது அவள் நாணத்துடன் காப்பி கொடுத்ததை யாரும் சொன்னால் நம்ப மாட்டார்கள். வெட்கத்தால் அவள் அவனை ஏறிட்டும் பார்க்கவில்லை.

மறுபடியும் போன் செய்தான்.

" நீ எனக்கு போன் பண்றத விட்டுரு "

" ஏன்? "

" கண்டவளுக்கும் கொஞ்சல குடுத்த அந்த போன்ல நீ எனக்கு எழவெடுக்க வேணா. கல்யாணத்துக்கு அப்றம் பேசிக்கலாம். வை. "

கதிர் வீட்டில் தான் கல்யாணம். எல்லோரும் விரும்பிக் கேட்ட மில்டரி  சரக்கை ஏற்பாடு செய்தான். சில சடங்குகள் முடிந்து வந்து 45 + 45 போட்டான். இந்தக் கல்யாணத்தில் தான் பதினோரு மணி விசேஷம் எதுவும் இல்லை என்று நினைப்பதற்குள் ஒரு எட்டு வயசு ஜாக்குலின் ஒன்று வந்து சித்ரா அக்கா கூப்பிடறாள் என்றது. பேசவே மாட்டேன் என்றாளே ? மணமகள் அறையை தட்ட படீரென கதவு திறந்து, எட்டிப் பார்க்கிற சித்ரா பார்க்கிறாள்.

" என்னடி? "

" உன் திலோத்தமா அதில இருக்கா. 11 ஆயிருச்சில்ல? போயி பாரு. "

"ம்? "

கதவு அடைக்கப்பட்டு விட்டது. அதே நேரம் அந்த அறையின் எதிர் கதவு திறந்தது. சன்னாசி வெளிப்படுகிறான். இவனை வா வா என்று அழைக்கிறான். அவனை நெருங்கி செல்லுகிறான்.

" உன் தங்கச்சி உன்ன பாக்கணும்ன்னு சொன்னாப்பா "

" யாரு, தங்கச்சி? "

" என் பொண்டாட்டி சுந்தரி தான் உன் தங்கச்சி. ப்ரதர் சிஸ்டர் மாதிரி பழகுவீங்களாமே? "

" ஓ. ஆள் இண்டியன்ஸ் ஆர் மை ப்ரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் "

" அதான். போயி பாரு "

சன்னாசி செல்ல சுந்தரி வருகிறாள். நகைக்கடை தான். சொக்குப் பொடி பார்வையுடன் நிற்கிறாள். சொக்குப் பொடி பார்வையுடன் நிற்கிறாள். நிறை மாத கர்ப்பிணி. வயிற்றை தடவிக் கொண்டே

" நல்லா இருக்கியா? "

" ம். நீ எப்டி இருக்கே? "

" இதோ ! "

நகைக்கடையை காட்டுகிறாள், ஸ்டைலாய்.

" அவரு என்ன கண்ணுக்குள்ள வெச்சுப் பாத்துக்கறார். உன்ன மாதிரி இல்ல. நான் அப்டி போன உடனேயே இளிச்சிகிட்டு கல்யாணம் கட்டிக்க ரெடியாயிட்டியே? ஆமா, நீ என்ன உண்மையா தான் லவ் பண்ணியா, இல்ல நடிச்சுகிட்டிருந்தியா? கேவலம் எனக்காக ஒரு ஆறு மாசம் தாடி கூட வளக்காதவன் நீ. உன்ன இனிமேல் நான் நெனைக்கவே மாட்டேன்னு சொல்லத் தான் கூப்பிட்டேன். போயும் போயும் ஒருத்திய கட்டறான் பார். அவளும், அவ மொகரையும். போ ! "

கதவு மூடிக் கொண்டது.

இந்தப் பக்கம் கதவு திறந்து அதில் சித்ரா.

" என்ன சொன்னா? "

" சித்ராவும் நானும் உயிரு. அவள நல்லபடி வெச்சு பாத்துக்கணும்னு சொன்னா "

" அவ அப்ப்டி மந்தரம் ஒதலன்னா நீ என்ன நல்லா வெச்சுக்க மாட்டியா? "

" ஹி ஹி "

" மூணாங்க்ளாசு படிக்கறதுல இருந்து நான் உன் சூ பின்னால வந்துகிட்டுருந்தா நீ அவளையே மோப்பம் புடிச்சிகிட்டு இருந்தல்ல? நல்லா மாட்னடி எங்கிட்ட. ஃபஸ்ட் நைட்லயே உன்ன என்ன பண்றேன் பாரு ! "

" ஹி ஹி "

" சீ, ஓடிப் போ ! "

காலை முகூர்த்த நேரத்தில் ஊர்மிளா குழந்தையுடன் வந்தது எவ்வளவு பேருக்கு பிடித்தது, பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. உறுதியோடு கூடிய சீக்கிரம் மறுமணம் செய்யப் போகிறேன் என்றது கதிருக்கு நிம்மதியாய் இருந்தது. சித்ரா நாணத்தில் படுத்தே விட்டது போல நடித்துக் கொண்டிருந்தது தப்பாய் தெரியவில்லை. ஒரு வழியாய் எழுப்பி நிறுத்தி மூன்று முடிச்சைப் போட்டான். காதில் அடிக்கடி எதையோ சொல்லிக் கொன்டிருந்தாள். ஒரு முறையும் கேட்கவில்லை. ஆள் அரவம் குறைந்த நேரத்தில் " நைட்டு எட்டு மணிக்கெல்லாம் படுக்கப் போயிடலாம் " என்றாள். அவன் அவளை பார்த்தான். சரியாய் சொன்னால் இப்போது தான் அவளை முழுசாய் பார்க்கிறான். ஆங்காங்கே அவ்வப்போது அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று அவளை பார்க்கவே பார்க்காமல் ஒருவேளை பார்த்தால் அவளில் விழுந்து விடுவோமா என்று பயந்தவாறிருந்திருக்கிறான். ஓ, இந்த கண்கள், இந்த இதழ்கள், இந்த கழுத்து. முலைகள் பெரிசென்று முன்னமே தெரியும். இன்னைக்கு உன்ன என்ன பண்ணப் போறேன் பார் என்று மனசில் நினைத்தது எப்படி முகத்தில் வந்ததோ?

" நான் ரெடி " என்றாள் அவள்.





முற்றும்.




சரி , விடு, பாத்துப்போம் !
ஒரு பெரிய சிறுகதை.

மணி எம் கே மணி.


Saturday, September 10, 2016




உடன்படிக்கை
ஒரு சிறுகதை.



ராஜி கவனித்து விட்டான், அருள் வருவதை. கையில் குப்பியை வைத்துக் கொண்டு உட்காருவதற்கு தோதான இடத்தை தேடுகிறான். எப்படியும் தன்னை பார்க்காமல் இருக்கப் போவதில்லை. ராஜி சரக்கு இருந்த கிளாசையே பார்த்துக் கொண்டிருப்பதாய் பேர் பண்ணினாலும் தன்னை மீறி விழிகள் அவனை பார்க்கத் தான் செய்தது. ம்ம், அதுதான், கவனித்து விட்டான். ஒரு கணம் திகைக்கிறவன் உடனடியாய் எதிர்பக்கத்துக்கு விருட்டென்று சென்று விடுகிறான். உடனடியாய் தேர்வு செய்து அவன் அமர்ந்து விட்ட இடமும் இங்கிருந்து பார்க்கக் கூடியது தான் என்று அந்த முட்டாளுக்கு தொ¢யவில்லையா? சொல்ல முடியாது. திட்டம் போட்டு வந்திருக்கலாம். ராஜி எழுந்து போய் விடலாமா என்று யோசிக்கும் போதே அது முடியாது என்பதையும் அறிந்து கொண்டான். பாய்ந்து வருவானா?

பிச்சுவா வைத்திருக்கலாம்.

பாரில் கூட்டம் அதிகமென்றோ குறைவென்றோ சொல்லிக் கொண்டிருப்பது வீண். இந்த நகரம் கழித்துக் கட்டுவதையும், ஒழித்துக் கட்டுவதையும் செய்தவாறு தான் இருக்கும். ஒரு பையன் சொடக்கு போட்டு தான் யாரென்று காட்டுவதாய் இன்டெர்வெல் பன்ச் சொல்லி கூச்சலிடுவதை பலரும் வேடிக்கை பார்த்திருந்தார்கள். தனியாய் அமர்ந்து குடிக்கிறவர்களுக்கு தொலைக்காட்சியை கவனிக்க விருப்பமில்லையென்றால் இந்த வேடிக்கைகள் முக்கியம். அருளும் கூட அந்தப் பையனை பார்ப்பது போல அவனைக் கடந்து தூரத்தில் மிகவும் கடமையுணர்ச்சியுடன் குடித்தவாறிருக்கும் ராஜியை அப்ப அப்ப பார்த்துக் கொண்டான். இந்தக் கூச்சல் எல்லாம் சும்மா. பையன் வெறும் பசும்பால். கொட்டினால் அண்ணே என்று மண்டி போட்டு விடுவான். அருள் அப்படியா? நர்மதாவை டாவடிக்கும் போது நாலு கெணறு ஹவ்சிங்க் போர்டுக்கு போயி ரோட்டுக்கு நடு செண்டரில் நின்று ங்கோத்தா மாசா என்று மொத்த ஜனத்திடமும் சீறியிருக்கிறான்.

ஒரு தடவை கையில் கெரசின் கேன்.

" ஏ, நர்மதா வெளிய வாடி. உங்கொம்மா பருப்புன்னா நான் அத விட பெரிய பருப்பு. எறங்கி வாடி. காலங்காத்தால மாங்காட்டு தாயி முன்னால நிக்க வெச்சு உன் கழுத்துல தாலி கட்டுறேனா இல்லியா பாரு! "

பொதுவாய் குடிக்காத நேரங்களில் நாய் குட்டிகளை வருடி கொஞ்சி விட்டு போவது உள்பட ஊரில் உள்ள அத்தனை பேரையும் குசலம் விசாரிக்காமல் போகாத அருள் எழுத்தில் வர முடியாத கெட்ட வார்த்தைகளை நர்மதா வீட்டு வாசலில் நின்று வீறிட்டால் தான் என்ன. அதெல்லாம் அந்த மக்களின் வாழ்வில் ஒரு பகுதி. கடந்து போவார்கள். அல்லது வசதியாய் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார்கள். சிலர் பக்கத்தில் சென்று அவனை உபதேசிப்பதுண்டு. சில சினேகிதக்காரங்க வேறு மாதிரி.

" என்ன மச்சான், டெமோ காமிச்சுகினு இருக்க ? டின்ல என்னா, கஞ்சித் தண்ணியா? “

" ஏ, லவ்டேகபால். இது க்ருஷ்னாயில்டா. இத பார். அவ வரலன்னா இப்ப ஊத்திக்கறேன் பாக்கறியா ? "

மாங்காட்டுத் தாய் பச்சை சேலை உடுத்தியிருந்தாள். நர்மதாவின் கழுத்தில் தாலி கட்டும் போது எல்லாமே மங்களகரமாயிருந்தது. மாங்கல்யம் தந்துதானே சொன்ன அய்யிரு மனசார வாழ்த்தியதில் கூட கொறை சொல்ல முடியாது. கிழக்கு பார்த்த வீட்டை கொடக்கூலிக்கு எடுத்துக் கொண்டு, குபேர மூலையில் வெளக்கு பத்த வச்சு, சுப முகூர்த்ததில் பால் பொங்கி வர இல்லறமென்பது நல்லறமாய் தான் துவங்கி நகர்ந்த்தது. ஒரு வேளை நர்மதாவின் மினுங்கல் குழப்பமாகவே இருந்ததோ? அவளை தொடுவதற்கு குடி கொஞ்சம் வசதியாய் இருந்தது. பழகி விட்டால் பாயாசத்தையும் தான் விட முடியாது. இரவு நேரங்களில் அருள் பெரும்பாலும் குடித்திருந்தான். இரண்டு குழந்தைகளுக்கு அப்புறம் சாரி உன் பேரென்ன நர்மதா தான என்று வேறு அடிக்கடி கேட்டான். காசு கணக்கு வழக்கு தகராறில் பார் பையனை அடித்து விட்ட ராஜியை தட்டிக் கேட்கப் போய் ரத்தம் வழிய வந்து படுத்த அவனை கட்டிக் கொண்டு அழுத நர்மதாவை இப்போது நினைத்துக் கொள்கிறான். அவளது உடல் வாளிப்பை மறக்க முடிவதில்லை. காய்ச்சல் வருவதைப் போல உணர்ந்தான். ஒரு பெக்கை அப்படியே விழுங்கி விட்டு மிச்சம் இருந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு எழுந்தான். இவனையே பார்த்துக் கொண்டிருந்த ராஜியை நோக்கி நகர்ந்தான். ஒரு சிறிய பேனாக் கத்தி தான் இருக்கிறது. ஒரு ஆள் அடங்கிப் போக தாராளமாய் போதும்.

" வணக்கம் ! "

" ஆங்க், வணக்கம் ! "

அருள் ராஜிக்கு எதிரே உட்கார்ந்தான். ஒரு பெக்கை ஊற்றிக் கொண்டான்.

" நீயும் ஊத்திக்க ராஜி ! "

" சர்தான் ! "

" சீர்ஸ் ! "

" சீர்ஸ் ! "

ராஜி அய்யனார் சிவாவின் ஆள். சிவா என்றால் அந்தப் பகுதியின் ஆல் இன் ஆல் இல்லயா? கிட்டத்தட்ட பனிரெண்டு வைன் ஷாப்புகள். ஹார்ட் வேர் கடைகள். லாரி சர்வீஸ். எல்லா தொழிலிலும் கொஞ்சம் தில்லாலங்கடி இருந்தால் மட்டுமே பணம் கொட்டும் என்பதை தலைமுறையாகவே நம்பிக் கொண்டு வந்ததால் போலீசாரை ரவுடிகளாகவும், ரவுடிகளை போலீசாராகவும் கையாண்டு பொது மக்களையெல்லாம் வெறும் பீப்பிகளாக ஊதுகிற பிரமுகர். கட்சிகளின் கழகங்களின் அள்ளக் கைகள் எல்லாம் ஒரு கட்டத்தில் ராஜிக்கே வணக்கம் வைக்க ஆரம்பித்த போது தான் அவன் பல பேரை அடித்தது போல பார் பையனை அடித்தான். தட்டிக் கேட்ட அருளை அடித்தான். வானுலகம் என்னும் மாளிகையில் மின்னும் பூமகள் ஒருத்தி மறு நாள் வந்து ஏண்டா என் புருஷன அடிச்சே என்று கேட்டதை நம்ப முடியவில்லை. அவள் திட்டுவதை எல்லாம் கேட்டிராமல் அவளது கண்கள் விரிவதை, கன்னம் சிவந்திருப்பதை, உதடுகள் திறந்து மூடும் போது பற்கள் சிப்பி போலிருப்பதை பார்த்திருந்தான். நீ செவுடா என்று கேட்டு விட்டு அவள் ஒரு சி¡¢ப்புடன் போனது மனதில் சித்திரம் போல விழுந்து விட்டது, என்ன செய்ய? மறு நாளே காத்திருந்து சாலையில் பார்த்தான்.

" என்னா? "

" ஒன்ணும் இல்ல "

" இல்ல, நீ பாக்குற லட்ஷணத்த பாத்தா என்னவோ இருக்கு போலருக்கே? "

அவன் வெட்கப்பட்டு விட்டான். அவள் அவனை வினோதமான சிரிப்புடன் பார்த்துக் கொண்டு போனாள்.
அடுத்த முறை அவன் ¨தைரியமாகக் கேட்டு விட்டான்.

" வரட்டா? "

அருளிடம் சிலர் சொன்னார்கள். வீட்டுப் பக்கமோ, ரோட்டுப் பக்கமோ அவன் வருகிறானா என்று சாதாரணமாய் கேட்டான். அப்புறம் சில நாட்கள் கழித்து வலுவாய் கேட்ட போது அவள் என்னையா சந்தேகப்படுகிறாய் என்று கதறினாள். பின்னர் வழக்கம் போல ஒரு போதையில் ததும்பின கறுத்த பின்னரவில் வீட்டுக்கு வந்து கதவை தட்டிய போது ராஜி தான் வந்து கதவைத் திறந்தான். மேலுடம்பில் சட்டை இல்லை. இனிமேல் இந்தப் பக்கம் வராதே என்றான். குரல் மிகவும் கண்ணியமாயிருந்தது. அதே நேரம் அவன் கையில் பெரிய கத்தியும் இருந்தது.
மிகக் குறைந்த பட்ஷம் இதெல்லாம் நியாயமா, அடுக்குமா என்று நர்மதாவிடம் கேட்க விரும்பினான் அருள். இல்லை. அது முடியாது. அக்கம்பக்கத்தில் குடும்பங்கள் இருக்கின்றன என்று ராஜி கவனப்படுத்தினான். அதை விட ராஜி கத்தியை ஆட்டிக் கொண்டே பேசினது முக்கியம்.

எவ்வளவோ கலாட்டா. பஞ்சாயத்துக்கள். புகார் மனுக்கள்.

கடைசியில் அந்தத் தெருவின் முனையில் புட்டு இடியாப்பம் விற்கிற புஷ்பா அக்காவே சொன்னாள். " ஏம்பா, அவன் தான் அவள நல்லா வெச்சு பாத்துக்கறான் இல்ல? கொழந்தைங்களும் சந்தோஷமா தான் இருக்கு. நீ எதுக்கு வந்து தொல்ல குடுத்துனு இருக்க? எல்லாத்துக்கும் ஒரு நியாயம் வேணா? " என்ன சொல்லுவது. எறங்கி வாடி, வாடி என்று கெரசினை ஊற்றிப் பற்ற வைத்துக் கொண்டவன் இன்று உயிரோடு இருப்பது தெய்வாதீனம்.
உடலில் தீக்காயங்கள். முகத்திலும் கூட கொஞ்சம் இருக்கிறது. டுபாகூர் கான்வென்டில் திருடன் போல சென்று பிள்ளைகளை பார்க்கும் போது சிறியவன் அலறியே விட்டான். எப்படியும் ராஜிக்கு ஒரு நல்ல மனசு இருக்கவே தான் ஸ்கூல் பக்கம் போகவே முடிந்தது. அது மட்டும் அல்ல, அவர்கள் வீட்டு முன் நின்று கடை வைக்கிற நேரத்தில் அடித்த சரக்கு போதாது போலிருக்கும். இவன் ராஜியிடமே நூறு இருனூறு கேட்டு வாங்கிக் கொள்ளுவது தான். எப்போதும் இருக்கிற கூச்சலைத் தவிர்த்து அடங்கிய குரலில் அவர்களை கேலி செய்ய ஆரம்பித்தவன் காலப் போக்கில் தன்னைத் தானே கேலி செய்து கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பது ரசிக்கக் கூடியதாயிருந்தது.

" சைட் டிஷ் ஏதாவது சொல்லலாம். என்ன சாப்பிடறே ? " ராஜி கேட்கிறான்.

" எதுன்னா சொல்லு. "

" முட்ட போட்டி? அது இங்க நல்லா இருக்கும். "

" சரி , சொல்லு. "

சிவா தனது வைன் ஷாப்புகளுக்கு பக்கத்திலேயே போலி சரக்கு செய்யும் கிடங்குகளை வைத்திருப்பான். அதை பகிரங்கமாக தனது கடையில் வைத்து வியாபாரம் செய்வதை குடிகாரர்கள் பார்க்காமலா இருந்திருப்பார்கள்? இரவு பனிரெண்டுக்கு மேல் மும்முரமாய் வியாபாரம் நடந்து பணம் குவியும். ஒரு தடவை மார்ச்சுலரி ஸ்பிரிட்டில் எதுவோ கலந்து குழப்பமாகி நாலு பேர் மண்டையைப் போட்டு விட்டார்கள். போலீசுக்கு ஏதோ ரெண்டு பேராவது கேசுக்கு தேவைப்பட சிவா ராஜியை போடா என்றார். நோ. வாய்ப்பே இல்லை என்றான் அவன். எத்தனை பிரச்சினைகளுக்கு நடுவில் அவன் நர்மதாவை பாதுகாத்துக் கொண்டிருக்கிறான்? விளையாட்டா. சொன்ன பேச்சைக் கேட்காத ராஜியை அவர் பார்த்தார். அந்த சாம்ராஜியத்தில் அந்த மாதிரி ஆட்களுக்கு இடமே இல்லை. ஒரு நாள் இரவு சுற்றி வளைத்த போலீசு அவனை கஞ்சா கடத்தி வைத்து இருந்ததற்கு சிறை பிடித்தார்கள். வெளியே வந்த பிறகு வேலை இல்லை. நர்மதா ஒண்டியாய் வேலைக்குப் போய் பிள்ளைகளை காப்பாற்ற ஆரம்பித்தாள். அலுப்போடு தள்ளிப் படுத்து தூங்கினாள். ராஜி ஆட்டோ கீட்டோ ஒட்டி தான் குடிக்கவே முடிந்தது. சிவாவின் ஆள் இல்லை என்பதால் மதிப்பு மரியாதை இல்லை. சிலர் என்னடா என்று உறுமி அடிக்கவே வந்தார்கள். எதுவும் பிடிக்கவில்லை. நர்மதாவையும் குழந்தைகளையும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவள் தான் இப்போது வாழ்கிற வாழ்க்கையை கேவலமாக கருதுவதாகவும் தன்னை புழுவாக பார்ப்பதாகவும் அவன் புகார் செய்தான். அதில் பாதிக்கு பாதி உண்மையாகவும் இருந்தது.
ஒரு நாள் அவள் முகத்தை உடைக்க வேண்டும் என்று முடிவு செய்து, முஷ்டியை வீசிய போது நம்பவே முடியாத அளவு மூர்க்கத்துடன் அவள் அருவாள்மனையை தூக்கிக் கொண்டு வெட்ட வந்தாள்.
மானம் கெட்ட வாழ்க்கை வேண்டாம் என்று வெளியேறி வந்தாயிற்று.

" என்ன ராஜி யோசிக்கறே? "

" நீ என்ன யோசிக்கற? "

" இப்ப கூட நெனச்சா நான் உன்ன போடுவேன்! "

" சும்மா இரு அருளு "

" டேய், போடுவண்டா ! "

" தூ! "

பேனா கத்தி சரி தான். ஆனால் அதை ராஜி பிடுங்கி எறிந்து விட்டான். இருவரும் கட்டிக் கொண்டு உருண்டார்கள். இரண்டு பேருக்குமே ரத்தம் வந்தது. லாக்கப்பில் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு காயிதம் பொறுக்கியிடம் பீடி வாங்கிப் புகைத்தார்கள்.

" ஏ அருளு. உன்ன மாதிரி ஒரு நல்லப் புருஷன் எவளுக்கு கெடைப்பான்? இருந்தாளா. உன்ன விட்டுட்டு என் கூட ஒடி வரல? சரி , என் கூடயாவது இருக்கணுமே? இருக்க மாட்டா. அவளால நீயும் நல்லால்ல. நானும் நல்லால்ல. எப்டி இது? "

இன்ஸ்பெக்டர் வந்ததும் எல்லோரையும் வெளியே துரத்தி விட அய்யனாருக்கு வந்து சைடில் சரக்கு வாங்கிக் குடித்து ஆவேசத்துடன் பேசியவாறிருந்தார்கள். இறுதியில் அவர்கள் இருவருமாய் சேர்ந்து அவளது கழுத்தை நெருக்கிக் கொன்று தொங்க விடுவதாய் முடிவாயிற்று.

நடக்க ஆரம்பித்திருந்தார்கள்.

" நடவடிக்கை சரியில்லாத பொம்பளைங்களுக்கு இது ஒரு பாடமா இருக்கணும் ! " இதை இருவரில் யார் சொன்னது என்பது கேட்கவில்லை.

Friday, August 26, 2016



எனது மொழி
எனது சாதி
எனது இனம்
எனது நாடு
தேசம்
எதன் கீழே பூமி பிளக்கும்
சொல்ல முடியாது
எந்த சுட்டு விரலில் கத்தி முளைக்கும்
எவரது நாவு அரவமாகி படம் காட்டும்
ஒரு கரத்தால் எனது மகனுக்கு சோறூட்டி
மறு கரத்தில் எச்சரிக்கையாய் வைத்திருக்கிறேன்
ஒரு கோஷப் பலகை
அப்படியே
வாழையடி வாழையாய்
தழைத்து வரும்
ஹிட்லர்கள் அனைவருக்கும்
வணக்கம் வந்தனம் நமஸ்தே நமஸ்காரம்


கடைசியாய்
சாந்தி மற்றும் சமாதானம் சார்.
உலகு சிந்தனையால் துலங்கியது
தத்துவங்களுக்கு நூறு மரபு
கைக்கருகில் மலர்கிறது ஒரு மலர்
கடவுளுக்கு பல்லாயிரம் புன்னகை
கவிதைகளில் துடிக்கும் பிரபஞ்சம்
உறவுகளில் மினுங்கும் கண்ணீர்
உண்மைகளை துழாவும் கோஷம்
கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும்
லட்ஷியங்களின் மாமழை
தோளில் கரங்கள்
கன்னங்களில் முத்தம்
வாள் வீச்சு
வாக்குறுதி

ஒண்ணே ஒண்ணு சார்
கையில காசு. வாயில தோச.

Wednesday, August 17, 2016




சற்று
பிசகி சிரிக்க முடிகிற  மனம்
சற்று
விலகி திரிந்து நுழைகிற விழி
சற்று
வங்கி கணக்கை சப்பாத  வாய்
சற்று
லாஜிக்கை விட்டு
அவிழ்த்துக் காட்டும்
நிஜம்.

நான் சோக்கு சூ குடுப்பேன்
நீ குடுக்காதது ஏதாவது சொல்லு.
   




ஜரதுஷ்டிரன் அல்லது
நாரணத்து பிராந்தன்

ஏன் மலையேறினார்கள் என்றால்
ஏறினார்கள் அவ்வளவுதான்
ஏன் கல்லையுருட்டினார்களென்றால்
உருட்டினார்கள் அவ்வளவுதான்

கிருஷ்ணன் எதற்கு மண்ணை தின்றான்
கிறிஸ்து ஏன் சிலுவைக்கு போனான்
அற்ப சாரு செய்த தாசி ஒருத்தி
எழுத்தின் மேல் ஏன் மூத்திரம் பெய்தாள் ?

உனக்கு வாய்க்காத சந்தின் சந்தில்
நீ திருடாமல் இருந்தது
சரி.

நீ ஏன் திருடினாயென்று லாஜிக் துழாவாதே.

ஷட் அப்
மேன்.  

Friday, August 5, 2016








இருக்கும்
இடத்தில்
இல்லாமல் இருக்கிறோம் என்பதில்
இருக்கிறது
எல்லாம்
என்பதால்
இருக்கக் கூடாதது எங்கென்று
எப்படியும் முடிவாகி விடும்
தெரியுமா

இருக்கும்
இடத்தில்
இருக்கிறோம் என்பதில்
இருக்கிறது
எல்லாம்
என்பதால்
இருக்க வேண்டியது எங்கென்று
எப்படியும் முடிவாகி விடும்.
தெரியுமா ?

Monday, August 1, 2016

ஜீ
ஒரு சிறுகதை.




ஜீ அந்தப் படபிடிப்பின் முதல் நாள் அன்று தன்னோடு நடித்த தன்யாவின் கண்களை ஏறிட்டுப் பார்க்கவில்லை. மறு நாளும் தான். இத்தனைக்கும் கட்டிப்புடி காட்சி எல்லாம் இருந்தது. அப்போதும் பார்க்கவில்லை. அவளோடு அமர்ந்து சாப்பிட வேண்டிய தருணத்தை உருவாக்கி விடுவார்கள் என்பதால் இயற்கை காட்சிகளை ரசிக்க கூடிய கோணங்கள் இருந்த வாழை தோப்புக்கு சாப்பாட்டை கொண்டு வர சொல் என்று மணியிடம் சொல்லி விட்டார். மூன்று நாட்களாக அப்படியாய் போய் கொண்டிருந்தது. ஜீக்கு இப்போது அவள் மீதிருந்து வரும் எல்லா வாடைகளும் அத்துப்படி. அதை தன் ஓர்மையில் வைத்து காப்பாற்றியிருந்தவாறே இணையத்தில் அவளது எல்லா புகைப்படங்களையும் எவ்வப்போதும் பார்த்தவாறிருந்தார். உள்ளில் வழக்கம் போல என்னவோ எரிந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் அவள் அவருடைய முதுகை தான் பார்க்க வேண்டும். இவர் தனது நகைச்சுவை திறனை வெளிப்படுத்தி மொத்த செட்டையும் சிரிக்க வைக்கும் போது அவளது சிரிப்பின் கன பரிமாணங்களை காதுகளை கூர்மை செய்து கண்காணிக்க வேண்டியிருந்தது. தனிமையில் அதைப் பற்றி மிகவும் நுட்பமாய் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. ஜீ ஒரு நடிகர்,மட்டுமல்ல, அவர் ஒரு சிந்தனையாளர் என்கிற ஒரு கருத்தை தமிழ் கூறும் நல்லுலகம் கிசுகிசுத்தவாறிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே ? ஒரு காலத்தில் ஹீரோவாயிருந்து இப்ப எல்லாம் குணசித்திரம் பண்ணிக் கொண்டிருக்கும் நடிகர் வித்யாதரன் இந்தப் படத்தில் நடிப்பதால் அவர் ஜீயுடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ள முனைய ஜீ அதை கூட தவிர்த்தது மிகவும் நாசூக்காயிருந்த்தது.

" மணி "

" சார்? "

" நம்ம கிட்ட இப்போ ஆல்பம் காப்பி இருக்கா ? "

" லாப் டாப்ல இருக்கு சார். "

தன்யா காட்சி பிரகாரம் அழுது கொண்டு ஜீயின் மார்பில் சாய வேண்டும். ஒரிரு வசனங்களை சொல்லி முடிக்கும் ஜீ அவளது தலையை கோதுகிறார். இயக்குனர் கட் எனும் போதே விலகி செல்லும் ஜீ சட்டென திரும்பி, " ஜெயம் கொள் சென்னை பாத்தாச்சா? " என்று கேட்டு விட்டுப் போனார்.

அது ஒரு ஆல்பம். ஜீ பாடியிருக்கிறார். மழை சூழ்ந்து தத்தளித்த மக்களை இயல்பு வாழ்வுக்கு அழைக்கும் ஒரு தன்னம்பிக்கை பாடல் அது. நடித்திருக்கிறார். நாற்புறமும் பெருக்கெடுத்து பாய்ந்த வெள்ளத்தின் மூர்க்கமும், கண்களைக் குளமாக்கும் மக்களின் இன்னல்களும் அதில் இணைக்கப்பட்டிருக்கின்றன. எந்த மிகையும் இல்லாமல் நாசூக்காய் ஆட்காட்டி விரலால் ஜீ தனது கண்ணீரை ஒற்றி சுண்டி எறியும் பகுதி பற்றி பலரும் பாராட்டி இருக்கிறார்கள். அதே மாதிரி  கடவுளே உனக்கு கண்ணில்லையா என்கிற வரி வரும் போது ஒரு லுக். எப்போதும் தன்னை ஒரு மனிதாபிமானியாகவே வைத்துக் கொள்ள விரும்பும் இரண்டு பேர், இயக்குனர் சடகோபனும், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜும் ஜீயுடன் சேர்ந்து உருவாக்கிய ஒரு படைப்பல்லவா. யாரும் குற்றம் சொல்லி விட முடியாது. மேலும் மனிதாபிமானத்தை பழித்து விட்டு ஒருத்தன் இருந்து விட முடியுமா. நாம் அத்தனை பேரும் இந்த விஷயத்தில் கண்டிப்பானவர்கள் என்பது ரொம்ப முக்கியம். ஆனால் என்ன திமிர் பாருங்கள் இந்தக் கேரளக்குட்டிக்கு. ஆல்பம் பார்த்தாயிற்றா என்று இரண்டிரண்டு நாள் விட்டு இரண்டு முறை ஜீ கேட்டும் இல்லை பார்க்கவில்லை என்று சொன்னது எந்த நியாயத்தில் சேர்த்தி?

ஜீ மழை வெள்ளத்தின் போது ஜனங்களை நேரிலுமே சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பணிகளை செய்தவர். அவரோடு எப்பவும் டச்சில் இருக்கிற டப்பு கைகளை எல்லாம் அழைத்து கருணையோடு இருக்க வேண்டிய அவசியத்தை உபதேசித்து முடிந்த வரை ப்ளீச்சிங்க் பவுடர், கொசுவத்தி, தீப்பெட்டி, பாய், போர்வைகள் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்தார்.  
கொஞ்சம் வேட்டி, புடவை எல்லாம் கூட கொடுத்தார்கள். முந்திரிப் பருப்பை புகைப்படம் எடுத்துக் கொள்ளுகிற அளவிற்கு தயிர் சாதம், சாம்பார் சாதம் எல்லாம் தரமாக வழங்கப்பட்டன. வியாசர்பாடி பக்கம் ஒரு கூட்டம் உட்கார்ந்து கொண்டு பிரியாணியாய் இருந்தால் கொடுத்து விட்டுப் போங்கள் மற்ற எதுவும் வேண்டாம் என்றபோது மனசு கொஞ்சம் புண்பட்டு விட்டது தான். எனினும் கொதித்து போன தன் அள்ளக்கைகளை அடக்கினார். இந்த தேவடியாப் பசங்களுக்கு பாவம் பாத்தது நம்ம தப்பு சார் என்று சொன்ன சிஷ்யனைக் கட்டுப்படுத்தி அவனுக்கு பதேர் பாஞ்சாலியின் கதையை பாதி சொன்னார். மறு நாள் சப்ளை நிறுத்தப்பட்டது வேறு விஷயம். பொதுவாகவே ஏழைகள் என்றால் இரக்கப்பட வேண்டும் என்பது உண்மையா, பொய்யா? ஜீ அந்த ஏழைகளோடு வாஞ்சையாய் இருப்பதை இவள் பார்க்க வேண்டும் என்பது எளிமையான ஒரு காரியம் தானே?

" தன்யா "

" ஆ. பறையூ சார் "

" ஜெயம் கொள் சென்னை இன்னும் பாக்கலையா ? "

" மழா ! வெள்ளம் ! மக்கள் கஷ்டப்பட்டதே காணான் வைய்யா சார்! "

" ஓ. நீ அந்த டைப்பா ? "

" எந்த டைப் சார் ? "

" லீவ் இட் பேபி. உன் வீட்டில எந்த விஷயத்துக்காகவும் தேன் வாங்க மாட்டீங்க. சரியா? "

" தேன் வாங்க மாட்டமா ? ஏன் வாங்க மாட்டோம் ? "

" உன் கொரல்லயே அது இருக்கே ? "

சட்டென்று காளை கட் பண்ணினார் ஜீ. இதற்கு மேல் பேசக் கூடாது. அவள் யோசிக்க வேண்டும். நிறைய. இது மட்டும் அல்ல. மறு நாள் படபிடிப்பு தளத்தில் அத்தனை பேரும் ஜீயை சூழ்ந்தார்கள். தன்யாவும் தான். கை தட்டினார்கள். ஜீ யாரும் நம்ப முடியாத ஒரு அசாத்தியமான காரியத்தை பண்ணியிருந்தார். வெள்ளத்தில் தனக்கென ஒரே ஒரு உறவாயிருந்த தாயை பறிகொடுத்த சிறுவனை தத்தெடுத்துக் கொண்டிருந்தார்.
எட்டு வயதிருக்குமா? ஏதோ பொதுசேவை நிறுவனத்தின் ஆட்கள் இப்போது தான் ஒப்படைத்து விட்டு போனார்கள். ஒரு கூட்டமே சுற்றி நின்று வெறிப்பதை அவன் மனசு எப்படி எடுத்துக் கொண்டது என்பதை சொல்ல முடியாது. ஆனால் அவன் ஒரு அட்டை காகிதத்தை மடிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவ்வப்போது விழிகள் எழும்பி, யாரையும் சந்திக்காமல் பக்கவாட்டில் பார்த்தன. அட்டையை மடித்தும் பிரித்தும் ஏதோ குறிகோளில் இருந்தான்.

ஜீயே விளக்கினார்.

" அவன் செய்ய நெனைக்கறது ஒரு போட்டு. நான் செஞ்சு தரேன்னா வேணான்னு சொல்லிட்டான். அவங்கம்மா அடிக்கடி அத செஞ்சு தந்துருக்காங்க. அதப் பாத்துருக்கான். எப்படியாவது செஞ்சுட முடியும்னு டிரை பண்ணிகிட்டிருக்கான். "

எல்லோரும் உச்சு கொட்டினார்கள்.

" அட்டப் படகுல அவன் தேடறது அவன் அம்மாவத்தான். அந்த அம்மாவா நான் தான் இருக்கப் போறேன். "

எல்லோரும் கவனித்து தான் ஆக வேண்டும் என்பது தெரியாதா, என்ன. சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டார் ஜீ. இதற்கு மேல் பேசக் கூடாது.

அப்புறம் தன்யா பேசினாள்.

" சார், நீங்க நல்லவர் ! "

" இல்லை, தன்யா. மனுஷனா பொறந்த ஒவ்வொருத்தனும் செய்ய வேண்டிய கடமை ! "

" மனசு வேணுமே ? ஈ காலத்து அதொக்கே யார்டடுத்து இருக்கு ? "

" தன்யா "

" ம்? "

" யாராவது பாராட்ட நான் எதுவும் செய்யறது இல்ல. ஆனா நீ பாராட்டும் போது அது விசேஷம். ஆமா, நீ நீ வேற ஏதோ. யார்கிட்டயும் இருக்க முடியாத எது எல்லாமோ உங்கிட்ட இருக்கு. "

" அய்யோ, இதெந்தா ? "

" நெஜத்த சொல்றதுல எதுக்கு தயக்கம்? தன்யா, நான் உங்கிட்ட பேசணும். பால் போல இருக்கற மொகத்த பாத்துகிட்டு. பவழ மல்லியா விரியற அந்த சிரிப்ப பாத்துகிட்டு. அந்த ஒரு நாள் எப்ப வேணுன்னா வரட்டும். ஆனா அந்த நாள நீ தான் சொல்லணும். "

ஜீ ஒரு மலையாளப் பையனை கூப்பிட்டு சில மலையாள சொற்களைக் கற்றுக் கொண்டார். பிரயோகித்தார். அவளது உருவத்தை ஒரு ஆர்ட் டிப்பார்ட்மென்ட் ஆள் வரைந்து கொடுத்தான். வேறு ஒரு படம் வரவே இவர் சிபாரிசில் தன்யா அதில் கதா நாயகியாய் ஒப்பந்தம் செய்யப்பட்டாள். படபிடிப்பு துவங்கியும் கூட இவர் ஒன்றும் அவசரப்பட்டு விடவில்லை. அதே நேரம் அவள் புரிந்து கொள்ள முடியாதபடி முற்றுகையிடுவதையும் நிறுத்தவில்லை. இவருக்கு பெண்கள் முட்டாள்கள் என்று தெரியும். இந்த மாதிரி  ஒரு ஆடு புலி ஆட்டத்தின் சுவாரஸ்யம் அன்றாடத் தினங்களின் குளுக்கோஸ் போல. இதெல்லாம் இல்லாமல் ஜீயால் இருக்க முடியாது. அவரால் சகித்துக் கொள்ள முடியாத ஒரே பெண்மணி எப்போதோ பேசுவதை நிறுத்தி விட்டு தன் வேலையை பார்க்கும் அவரது மனைவியை தான். மற்றபடி எல்லா பெண்களும் அவரை காதலித்தவாறு இருக்க வேண்டும். அப்படித்தான் தாங்கவே முடியாமல் ஒரு நாள் தன்யாவே பால் போல் இருக்கிற முகத்தை பார்க்க வேண்டாமா, பவழ மல்லியாய் விரிகிற சிரிப்பை பார்க்க வேண்டாமா என்று ஆர்வத்துடன் கேட்டு விட்டாள்.

தன்யாவின் உடம்பு பற்றி சொல்ல வேண்டாம். வேரில் பழுத்த பலா. சுளைகளாயிருந்தாள். சுனைகளோடிருந்தாள். அவரது கண்ணியத்தை மீறி நல்ல இறைச்சி என்கிற எண்ணம் கூட வந்து விட்டது. சமூகத்துக்கு சாரி  சொல்லிக் கொண்டார். ஆனால் இது என்ன கருமம்? வேலை முடிந்ததும் தன் பாட்டுக்கு தூங்குகிறவளின் டிசைன் பிடிபடவில்லை. அப்ப அப்ப குறட்டை வேறு வந்து போயிற்று. மன்னிக்கிற பெருந்தன்மையை முகத்தில் பொருத்திக் கொண்டு அவளை தட்டி எழுப்பினார்.

அவள் அவரைப் பற்றி பேச வேண்டியிருக்கிறதல்லவா?

குறைந்த பட்ஷம் அனாதை சிறுவனை தத்தெடுத்த தயாள குணம் பற்றி?

" ம்..ம்..என்ன. நீங்களும் படுத்துத் தூங்குங்களேன், ஜீ ! "

" அடச்சீ. இதுக்குள்ள என்ன தூக்கம் ? எழுந்துரு தன்னு ! "

" வெறுத கெடக்கடா ! "

அது ஒன்றுமில்லை. சரசம் துவங்கி அவள் துவளும் அழகை அதன் எல்லை வரை காண விரும்பி, ஜீ ஐ லவ் யு என்றெல்லாம் சொன்னதோடு மட்டுமல்லாமல் நான் உன்னை வாடி போடி தான் சொல்லுவேன், நீ என்னை வாடா போடா தான் சொல்ல வேண்டும் என்றும் உளறி விட்டார் தான் ஒரு அரைக்கிழம் என்பதை மறந்து. டா என்கிறாளே ? சொன்னாளா, இல்லயா - எனக்கு தான் அப்படி கேட்டு விட்டதா?

" டேய், படுடா ! "

இதெல்லாம் பரவாயில்லை. இரண்டு மணி நேரம் கும்பகர்ணத் தூக்கம் தூங்கி ஜொல்லு மூஞ்சோடு எழுந்து ஒன்று சொன்னாள்

" வித்யாதரன் உன்ன போல அல்லா. ஜோலி கழிஞ்சா செம்ம ஒறக்கம் ! "

வாரி போட்டு விட்டது. அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அலட்ஷியமாய் நடிக்க முடியவில்லை. அவளிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை. பதட்டம் சுழன்று தத்தளித்துக் கேட்டார். " யாரு அந்தக் கெழ பாடா ? அவன் உன்னப் போட்டுட்டானா ? "

" ம். ம். " என்கிறவள் அதற்கென்ன என்பது போல " ம்? " என்று கேட்கிறாள்.

ஜி பாவம். அவருக்கு மயக்கமாய் வந்து கொண்டிருந்தது.

" வித்யாதரன் சூப்பராணு, கேட்டோ ? என்னே பஸ்ட் கண்டுச்சி. அப்பவே கேட்டுச்சி ! "

" என்ன கேட்டுச்சி ? "

" ஓக்கலாமான்னு தான் ! "

மணி, ஜீ சொல்லியிருந்த தொகையை எண்ணிக் கொடுத்தான்.

பொது சேவை ஆட்களுக்கு ஊட்டியில் ஒரு ஆசரமமிருந்தது. பணத்தை வாங்கிக் கொண்ட இரண்டு ஆசாமிகள் சிறுவனை கலக்ட் பண்ணிக் கொண்டு சென்னையில் இருந்து கிளம்பினார்கள். காரில் கோவை போகிற வழியில் பையனை கே வீ சீயில் கோழியைக் கடிக்க சொல்லிவிட்டு வெளியே போய் நாலு கட்டிங்க் போட்டு திரும்பி வந்து பார்த்தால் அவனைக் காணவில்லை. நடந்து விட்டான். அப்படி நடந்தே போகுமிடம் தெரியாமல் ஒரு நகரத்துக்கு வந்து சேர்ந்து, அங்கே இருந்த ஒரு மலையின் மீது ஏறிக் கொண்டு விட்டான்.

உட்கார்ந்து குறிகோளுடன் அட்டையை பிரித்து மடக்க ஆரம்பித்தான்.

எந்தப் பக்கமும் திரும்பவில்லை.

சிறு வியப்பு.

பார்க்கிறான்.

அவன் கரத்தில் இப்போது ஒரு படகு இருந்தது. ஒரு கணம் தான். அவன் மனசில் என்ன ஒடியது என்பதை தான் சொல்ல முடியாதே? அதை முடிந்த வரை கிழித்துப் போட்டான்.

எழுந்து நின்று முக சுழிப்புடன் பார்க்க, ஒளிப்புள்ளிகளால் தூரத்தில் ஒரு நகரம்.

கையில் இருந்த கல்லை அந்த வெளிச்சத்திற்கு வீசுகிறான்.

Saturday, July 30, 2016

தில்ருபா.
ஒரு சிறுகதை.





எனக்கு இந்தக் கதையை சொல்லுவதில் பெரிய விருப்பமெல்லாம் கிடையாது. எல்லோரும் எப்படியாவது இருந்து ஒழியுங்கள் என்பது என் முடிவு. ஆனால் நிதின் அழைத்தான். கதைக்கு உதவ வேண்டும் என்றான். சரி. வேறு வழியில்லை. அவன் தங்கமணியின் மகன். நான் சினிமாவில் இருந்து விலகி ஒரு பிம்பாகவும் இருந்து பிழைக்கலாம் என்று பல காலமாக நினைத்துக் கொண்டிருந்தாலும் குண்டுசட்டியைத் தாண்டி குதிக்க ஆகவில்லை என்பதால் அதன் தொடர்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அப்புறம் பொல்லாத இந்த வயிற்றுப் பிழைப்பு. வாங்க சார். வணக்கம் சார். குட் மாணிங்க், குட் நைட் அண்ட் ஸ்வீட் ட்ரீம்ஸ்  சார். மூளையை திருடிக் குடிக்கும் பத்தாயிரம் அட்டைகள் முன் படுத்துக் கிடந்த பிறகு எப்ப திருந்தப் போறனோ என்று இன்னும் விசனம் பாடிக் கொண்டிருக்கிறேன். என்ன செய்ய? அதுகளோ வீசி எறிந்த எலும்புத் துண்டுகளின் கணக்கு பேசிக் கொண்டிருக்கின்றன.

" அங்கிள், எதாவது சொல்லுங்க ! "

" இர்றா ! "

பரத்தும் சந்தியாவும் காதலர்கள். எப்பவும் அடிதடி. ஒருவரை மற்றவர் வெறுப்பேற்றிக் கொள்ளுவதில் அவன் எல்லை தாண்டி விடுகிறான். வேறு ஒரு பெண்ணுடன் படுத்து விடுகிறான். குற்றம் ! அவளும் விட்டு விடுவதில்லை. அவன் நொந்து போகிற மாதிரி ஒரு இமாலய தவறை செய்து விடுகிறாள். அது என்ன தவறாய் இருக்க வேண்டும் என்று தான் என்னை குடைந்து கொண்டிருக்கிறான். அவளும் வேறு ஒருவனோடு படுத்து விட வேண்டியது தானே என்றால் அது இடிக்கிறதாம். மக்களுக்கு பிடிக்காது என்கிறான் கனத்த குரலில். லவ் மீ இஃப் யு டேர் போன்ற படங்களை பாருடா என்றால் தலையை சொறிகிறான். சோம்பேறி. படம் போட்டாலே தூங்கி விடுவான்.  பொதுவாகவே தின்னுவதும், தூங்குவதும் தான். தடியன். எஞ்சினீயரிங்க் முடித்த பிறகு சினிமா என்றிருக்கிறான். அதுவும் தமிழ் சினிமா. அதில் அவனால் எதையும் செய்ய முடியும் என்று ஒரு பிடிவாதம்.

எப்படியும் இவன் தன் அப்பனைத்தான் கொண்டிருப்பான்.

ஒரு நாள் போனில் " அவனுக்கு ஒரு மயிரும் தெரியாது ரவி ! " என்று தங்கமணியாய் என்னிடம் சொன்னாள்.

அப்படிதான் நானும் நினைக்கிறேன். ஆயினும் அதை வெளியில் சொல்லுவது அபவாதங்களை தான் சேர்க்கும். அது மட்டுமல்லாமல் என் வயதுக்கு, அனுபவத்துக்கு இளைய தலைமுறையை நோக்கி உதடு பிதுக்குவதில் பெருமை என்ன. ஆத்மார்த்தமாவே நான் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பது ஒரு இது.

எது.

79- 80 தான். வெங்காய விலை எல்லாம் கூடி மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து எம் ஜி ஆர் அரசை டிஸ்மிஸ் செய்தார்கள். அப்போது நான் கேரளத்தில் இருந்தேன். இங்கே இருந்து நீ பிடுங்க வேண்டியது எதுவும் இல்லை என்று அப்பா துரத்தி விட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடம். போதாதா? மூன்று மாதம் மொழி கைகூடாமல் பிதுங்கி, அப்புறம் ஜித்தனாகி தங்கமணியை காதலிக்க ஆரம்பித்தேன். எனக்கு பதினெட்டு. அவளுக்கு பதினேழு. எழுத்துக் கூட்டி போபனும் மோளியும் படித்து டிஸ்கஷன் செய்தேன். மாமாவே எனது கண்கள் விரிந்து மூடாததை கவனித்து என்னடா என்றார். அம்மம்மா ம் ம் என்று முனகிக் கொண்டு எழுந்து போனாள். எதிர் வீடு தான். அவளது அம்மா நான் சிகரெட்டு பற்ற வைக்க தீப்பெட்டி தருவதுண்டு.

ஒரு நாள் ஐ லவ் யூ சொல்லியாக வேண்டும்.

தங்கமணியைப் பற்றி நிறைய சொல்லலாம். ஏதோ கொஞ்சமாய் பேசுவது போலிருக்கும். பத்து நாள் முகம் பார்க்க முடியாது போனாலும் சொல்லி விட்டுப் போன பிரபஞ்ச ரகசியத்துடன் நான் பாட்டுக்கு சல்லாபித்திருப்பேன். அம்மாவிடமும், தம்பியுடனும் வரும் சம்பாஷணையில் அவள் சொல்லுவதெல்லாம் பொய். அப்படிதான் அவள் எல்லோருடனும் இருப்பது போலவும் இல்லாதது போலவுமிருந்த்தது. மிகவும் யோசித்து வைத்து நான் சொல்லும் ஜோக்குக்கு யாருமே சிரிக்க முடியாது. அவளும் சிரிக்க மாட்டாள். ஒரு கால் அரைக்கால் புன்னகை தென்பட இலேசாய் ஒரு கிள்ளு கிள்ளிவிட்டுப் போவாள். அது உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை போலிருக்கும். இப்போது கூட நான் ஒரு நாளை நினைத்துக் கொள்கிறேன். சிவராத்திரி பூரம். யானைகள் அணிவகுத்து நிற்க பஞ்சவாத்தியத்தின் கிறக்கத்துடன் தாளப்பொலியில் தீபம் ஏந்தி நின்ற தங்கமணியின் முகத்தில் நான் நெருப்பை பார்த்தேன். அல்லது விட்டு விடலாம், அதன் எதிரொளிப்பை பார்த்தேன். அன்று நடு இரவு பூரப் பறம்பின் பின்னால் ஒடும் நதிக்கரையில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு நட்ஷத்திரங்களில் கண்ணீர் விட்டது ஆர்வக் கோளாறாய் தான் இருந்திருக்கும். அதன் துல்லியத்தை நான் எந்தக் காலத்திலும் ஐயமுற மாட்டேன். இந்தத் தருணங்கள் தான் உயிராசையை போற்றுகிறது என்பதையெல்லாம் இன்று சொல்ல முடிவதாயிருந்தாலும் மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் வேறு.

நிலை கொள்ளாமல் தவித்திருந்த ஒரு நாளில் அவள் கல்லூரி விட்டு வரவில்லை. ப்ரீ டிகிரிக்காரி. ஏதாவது இருக்குமல்லவா. காத்து கண்கள் பூத்த அந்த நேரத்தில் இருந்த வில்ஸ் பாக்கெட் வேறு தீர்ந்து விட்டது. கிளம்பும் போது மாமி சக்கரையும் சோப் பவுடரையும் வாங்க முடியுமா என்றாள். அப்படியே முட்டை கோசு கிடைத்தாலும் வாங்கிக் கொள் என்று பையை கொடுத்தாள். ஒன்றரை கி மீ நடக்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே நடக்கிற கடை. பராக்கு பார்த்துக் கொண்டு வளைவில் ஒரு மேடு ஏறும்போது என் எதிரே ஒரு பெண். ஜீன்ஸ் பேன்ட் போட்டு கறுப்பு முழுக்கை சட்டை மடித்து, முட்டை கண்ணாடி போட்டுக் கொண்டு அசாதாரணமாய். எப்படி இது? வியப்போடு அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே கடக்க என் கண்களை அடித்துப் பார்த்துக் கொண்டு தாண்டி சென்றாள். யோசனையுடன் பத்தடி நடந்து திரும்பிப் பார்க்க அவளும் அந்த கணத்தில் திரும்பிப் பார்க்கிறாள். கண்கள் சந்தித்தன என்றால் அதை சொல்லித் தானே ஆக வேண்டும்? என்ன நடக்கிறது? கடையில் இருந்து முதலில் ஒரு சிகரட்டை வாங்கிப் புகைத்து விட்டு பொருட்களுடன் திரும்பினேன். மாமா, மாமி, குழந்தைகளுடன் அந்தப் பெண்ணும் வீட்டு முற்றத்தில் இருந்தாள். என்னைப் பார்த்ததும் எல்லோரும் சி¡¢த்தார்கள்.

அவள் மீரா. என் சகோதரி . பெரியம்மா மகள். பம்பாயில் உறவினர் வீட்டில் தங்கி படிக்கப் போயிருந்தாள். பத்து வருடங்களுக்கு முன்னே தப்பிதவறி மாமா கல்யாணத்துக்கு வந்த போது விளையாடின குழந்தைகளில் அவளும் ஒருத்தியாய் இருந்திருப்பாள்.

" ஏண்டா, என்ன அப்படிப் பாத்த? "

" நீ கூடத் தான் பாத்த ! "

ரத்தம் என்கிறார் மாமா. இருக்கலாம். சாவியை வாங்கிக் கொண்டு மாமாவின் புதிய பறம்பை பார்க்கப் போய் பேசி கொண்டிருந்தோம். நால் ரெண்டு எட்டு சிகரட்டை காலி பண்ணி விட்டு, மிச்சமிருந்த கடைசி சிகரட்டை மாறி மாறி புகைத்தோம். மறுபடியும் ஒன்றரை கி மீ நடந்து வில்ஸ் பாக்கெட் வாங்கிக் கொண்டோம். திரும்பி வீட்டிற்கு போகிறோம் என்று பார்த்தால் எதிர் வீட்டுக்குள் என்னொடு நுழைந்தாள். தங்கமணியும் அவளது அம்மாவும் மீராவை விமரிசையாய் வரவேற்றார்கள். பேச்சு வாக்கில் மீரா டீ வேண்டும் என்றாள். நான் தங்கமணியை மட்டுமே பூலோகத்தில் இருப்பவளாய் பார்த்துக் கொண்டிருக்க, அவள் அம்மா நகர்ந்ததும் நடந்தது தான் சம்பவம்.

மீராவை நோக்கி பாய்ந்து அவளைக் கட்டிக் கொண்ட தங்கமணி தன் இதழ்களை ஏந்த- செம்ம கிஸ். வாய்ப்பே இல்லை. நடப்பது என்ன என்றே புரியாத நிலையில் குறைந்த பட்ஷம் நான் திரும்பிக் கொள்ளக் கூட இல்லை.

தங்கமணி ஒரு சதி லீலாவதியல்லவா?

நரேந்திரனை கல்யாணம் பண்ணிக் கொண்டாள். அவனோடு ஒட்டிப் பிறந்த சுரேந்திரனை மீராவுக்கு புடித்துப் போட்டாள். பேசி பேசி வழிவகை செய்து எர்ணாகுளத்தில் இரண்டு குடும்பங்களும் ஒரே பிளாட்டில் சேர்ந்து வசிக்க செய்தாள். மீராவும், தங்கமணியும் வாழ்ந்தனர். பழங்குடிகளுக்கான போராட்டங்களில் பல நேரம் மீராவுடன் தங்கமணியும் இருந்தாள். ஒரு நாள் அடையாளம் தெரியாத நபர்களால் மீரா கொல்லப்பட்ட போது சவ அடக்கத்துக்கு போயிருந்தேன். தனிமையில் தங்கமணி மீராவின் விதவையாய் தன்னை நினைத்துக் கொள்ளும் போது பெருமையாய் இருக்கிறது என்றாள். மறுக்க ஒன்றுமில்லை. என்னிடம் இருந்து வில்ஸை பிடுங்கி பற்ற வைத்து நீ யாரையாவது காதலிக்கிறாயா என்று மாமாவின் பறம்பில் கேட்ட போது நான் பதில் சொல்லாமல் விட்டது ஒரு விதமான விதி. ஆனால் அந்த நிமிடத்திலிருந்து மீராவை மதித்தேன். அவள் என் தங்கமணியை முத்தமிட்டது கூட எனக்கு பெருமையாய் தான் இருந்தது.  சோர்வூட்டும் இந்த அடிபிடி சர்க்கஸ் வாழ்க்கையில் ஏதாவது பத்திரிக்கையில்  மீராவின் புகைப்படத்தை காண நேரும் போது வாரிப் போடும். காலம் முழுக்க மீராவின் சுனையாய் இருந்த தங்கமணியை மெச்சிக் கொள்ளுவேன், காதலுடன். இன்னும் சொல்லப் போனால் வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதோ இந்தப் பயலின் எதிரே அமர்ந்து கொண்டிருப்பதும் அவளுக்காகத் தான்.

என்ன நடந்ததோ. இவன் ஒரு விதத்தில் தனது குடும்பத்திலிருந்து அன்னியப்பட்டிருந்தான் என்பதில் மாற்றில்லை. கவலைகள் திரண்டு விடும் என்று தோன்றும் போதெல்லாம் சாப்பிட ஆரம்பித்து விடுவது. அத்தனை பேரையும் வெறுக்கும் முனைப்பு பட்டவர்த்தனம். கூட உதவியாய் வேலை செய்கிறவர்களுக்கு பணம் கொடுக்காமல் அவர்களது தரித்திரத்தை ரசிப்பது கூட புரிகிறது. இன்னும் நெருக்கத்தில் சொல்லுவது என்றால் சுரண்ட வேண்டியவர்களை சுரண்டித்தான் ஆவேன் என்பது போல என்னை அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறான்.

ஒரு நாள் பல பேச்சுக்கு நடுவில் மிகவும் இங்கிதமான ஒரு பாவனையில் கேட்டேன். " உனக்கு உன் அம்மாவை மிகவும் பிடிக்குமில்லையா? "

" பிடிக்காது. அம்மான்னு இல்ல. எவளையும். தேவடியாளுங்க ! "

பார்த்திருந்தேன், எந்த வித முக பாவனையையும் காட்டி விடாமல்.

" அதனால தான் சொல்றேன். இனிமே பொண்ணுங்க சீன பேசறப்ப அது கண்ணியமா வரணும். அங்கிள், அவங்க எப்படி ஒழுக்கமா வாழணும்னு நாம கத்துக் குடுக்கணும். புரியுதா ?”
என்றான்.

" புரியுதுடா ! " என்றேன்.


Saturday, July 9, 2016





பாலில் புளிப்பேறும்
காலமற்ற கானகத்தின்
நிலவொளியில்
மண்ணில் விழுந்து புரள்கிறது
விண்ணை நோக்கி பாடுகிறது
ஒளிவில் இருக்கும்
ஓநாய்.

ஷட் அப்
வை லைக் திஸ் மேன்

சூ சூ

சன்னதமில்லை
சாகசமில்லை
சரசமோ, சாமர்த்தியமோ
இல்லை
குத்துவதோ, குத்துப்படுவதோ
இல்லவே இல்லை.

பொறுப்பாய் பொறுக்கி தின்னும் வாழ்க்கை.   

Friday, July 1, 2016



இறுதி நடனம் முடிந்து பிராண்டோ குடிக்கிறான். அந்தப் பெண்ணுடன் நடந்து உன் பெயர் என்ன என்றே கேட்டு விடுகிறான். கதையின் ஒரு வளைவில் அவனை சுட்டு முடித்து விட்டு போலீசாரிடம் அவன் பெயர் தெரியாது என்கிறாள் இல்லையா, மூன்றாவது பெக்கில் அதற்காக சிவதாசன் தன் தாடையை சொறிந்தவாறு பேச்சிழக்க குடிக்கவும் பேசவும் தெரியாத பரத் என்று அழைக்கப்படுகிற லூயிஸ் வயிற்றுக்கு நாலு இட்டிலி,  ஒரு முட்டை தோசை, ஒரு மாட்டுக் கறி சாப்பிட்டு விட்டு அப்படி இப்படி நடந்து அவனே எதிர்பாராத வகையில் ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டு டிக்கெட்டை வாங்கிக் கொண்டு தூங்கி விட்டான். காலையில் கோயம்பத்தூரில் மூத்திரம் கழித்த பிறகு மறுபடியும் சென்னைக்கு திரும்புகிற வண்டியை தேடிக் கொண்டு போய் அதில் சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு சிகரெட்டு பிடிக்க இறங்கி அதைக் கொளுத்தாமல் தலையை சொறிந்து விறுவிறுவென நடந்து வேறு ஒரு வண்டியில் ஏறி அதிலும் டிக்கெட் எடுத்து தூங்கினான். ஒரு முறை கண்களை விழித்துப் பார்த்த போது திருச்சூர் தாண்டி இருந்தது. அடுத்த தடவை விழித்து பத்தனம்திட்டாவிற்கும் வந்து சேர்ந்து ஒரு அறையை தேர்ந்து கொண்டு தூங்காமல் சன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு வெள்ளப்பமும் கடலையும் சாப்பிட்டான்.

நல்ல மழை.

மழை பற்றியும்,  மழை கவிதைகள் பற்றியும், மழை வந்தால் கவிதை எழுதியே ஆக வேண்டியவர்கள் பற்றியும் யோசித்து சினிமாவில் மழை வந்தால் கட்டிக் கொண்டு தவறு செய்து விடும் ஜோடிகளைப் பற்றியும் யோசனை செய்து இருந்த போது தூங்கி சிவதாசன் டாங்கோ ஆடுவதற்கு திடுக்கிட்டான். சற்று வெட்கத்துடன் அவர் கவனித்து விடாமல் மெல்ல நகர்ந்த போது அவனிடம் யாரோ ஆட சொல்லுகிறார்கள். இன்னது என்று சொல்ல முடியாத இரைச்சல்கள் பரவி குவிந்திருந்தாலும் காசு கிடைக்கும் என்கிற கிசுகிசுப்பு உரக்கக் கேட்டது. யாருடைய குரல் அது?அதை தேடி நடந்து ஒரு பாம்பை மிதித்து படிக்கட்டில் உருண்ட போது முழித்து, சில்லிட்டிருந்த சன்னலை திறந்து மீண்டும் மழையை பார்த்தவாறிருந்தான். ஜீப்பில் கொஞ்ச பேரை தான் ஏற்றினார்கள். அடக்க ஒடுக்கமாய் இருக்கிற தன்னை ஒரு வேற்றாளாய் கருதிக் கொண்டாலும் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதில் ஆசுவாசம் பெற்று மழையை வெறித்த போது எப்படியோ இந்த நிமிடம் திரும்பிப் போய் விடுவோம் என்கிற நம்பிக்கை புரியவில்லை. நாலு பேர் நசுக்கிக் கொண்டிருக்க வளைவிலும் திரிவிலும் தெறித்த மழைத் துளிகளில் நனைந்து நடுங்கியவாறு இருந்தது மேலும் கொடுமை ஆயிற்று,  மாதவனின் வீட்டுக்கு போகிற முக்கில் இருந்த சாயா கடையில் ஒதுங்கியது. காற்று சாட்டை போல வீறியது. சிகரெட்டின் கங்கு மின்னுவதை பார்த்தவாறு புகையை நெஞ்சுக்கு இழுத்து மிகவும் தாமதித்து புகையை வெளியேற்றும் போது இவன் குளிரால் நடுங்குவதை பார்த்திருந்த கடை ஆள் வழக்கம் போன்ற மலையாளி உரிமையுடன் சாயா போடுகிறேன் என்ற போது மறுத்தான்.  

தண்ணீரைத் தவிர எதுவும் குடிப்பதில்லை.

நெல்லிக்காய்,  இஞ்சி,  சுக்கு, திப்பிலி, கடுக்காய் போன்ற சாறுகளை பிரயோகம் செய்து அடைந்த பேறுகளை மக்கள் சேவையின் பொருட்டு ஒரு காட்சியாக்கி படத்தில் வைக்க எழுதும் போது தன் இருமலின் நடுவே சுவர் இருந்தால் தான் சித்திரம் என்று இயக்குனர் சொன்னதை பொருந்தாத இடத்தில் நின்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவன் சற்று நேரம் தசை பயிற்சி செய்து பார்த்து அப்புறம் தான் மாதவன் முன் நின்று சிரித்தான், நல்லவேளை. அப்படியும் அது பாதி தான் வந்தது.  மாதவன் எதற்கு வந்தாய் என்று கேட்கவில்லை. அவருடைய மனைவி,  மகள், மகன் யாருமே இவன் யார் என்றும் ஒரு சொல் கேளாத நிலையில் தேங்காய் பாலில் ஊறின பத்திரியில் ஆட்டுக்கறியை சுருட்டி விழுங்கினது வழுக்கிப் போகாமல் இருந்ததற்குக் காரணம் சிஜி. அவனது பால்யத்தில் எட்டும் பொட்டும் தெரியாத பாவாடைக்காரியாய் இருந்து மாங்காய்க்கு அடி வாங்கி மிரட்டலுக்கு மண்ணை தின்று யாரும் இல்லாத நேரத்தில் காட்டுகிறானே என்கிற அனுதாபத்தாலும் ஆர்வத்தினாலும் குஞ்சை பார்த்து பதிலுக்கு தனது பொக்கிஷத்தைக் காட்டி இந்த பத்திரியை தேங்காய்ப்பாலை ஆட்டுக்கறியை விரும்பியவள்.    மாதவனின் மகள் வாயைக் கோணிக்கொள்ளுவதும், மனைவி தலையை வெட்டிக் கொண்டு கூந்தலை பின்னுக்கு ஒதுக்குவதும் , மகன் ஏதோ பத்திரிக்கையை புரட்டியவாறு கொறிப்பதும் போனில் கூப்பாடு போட்டு பேசிக் கொண்டிருக்கிற மாதவனை சீண்டுவதற்கா அல்லது தன்னை துரத்துவதற்கா என்கிற தன்மானத்தின் நீர்க்கோடு நகர்ந்தவாவாறு இருக்க சிஜி பாடத் துவங்கும் போதெல்லாம் இவனது சுவாசக் காற்றைப் பிடுங்கிக் கொண்டு அவளது இதழ்கள் பிரியும் பிரம்மாண்டமான கணம் பெரும்யுகமாய் விரிந்து பரவியிருந்தது. ஒரு முறை கண்களை மூடித் திறந்து தன்னை இழுத்து வெளியே தள்ளும் போது அவர்களிடம் இவன் பரத் என்கிறார். சினிமா பண்ண காசு கேட்டு வந்திருக்கிறான் என்று தொடர்கிறார். ஏற்கனவே படம் பண்ண ஒருத்தன் பணம் கேட்டு வந்து இருக்கிறான் என்று இரண்டு மூன்று பேரிடம் தொலைபேசியில் சொல்லியாயிற்று. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்கிற காரணத்தினால் நகைச்சுவை குண்டானில் நல்ல கருத்துக்களை போட்டு அடித்து மிக்ஸ் பண்ணி விதரணம் பண்ணப் போனால் பணம் கொட்டி விட்டுப் போகிறது என்பதை சற்று தள்ளி இருந்த ஒரு ரப்பர் தோப்பில் புகை விடும் போது கமறினான்.  உடனடியாய் கிளம்புவது என்று முடிவெடுத்தான்.

தலையசைத்தார்.

மழை வலுத்திருந்தது. மனசின் எல்லா மூலைகளையும் சிதறடித்துக் கொண்டிருந்தது. எந்தக் கேள்விகளும் இல்லை. இருந்தால் அர்த்தமில்லை. பிறப்புக்கு பக்கத்தில் எங்கேயோ சேகரம் ஆனதை திரட்டிக் கொண்டு மார்பை நிமிர்த்திய கோளாறு ஆடுகிற பெரு நடனத்தை சொல்ல வேண்டும். ஒரு தாய் பறவையின் சிறகு போல உலகு வெறும் மனிதாபிமானத்தால் நெய்யப்பட்டிருப்பதால் எரியும் போதெல்லாம் களித்து சுற்றி சூழ்ந்து போகி மேளம் அடிப்பவர்களோடு ஒரு காலம் ஒரே தட்டில் சாப்பிட்டிருந்தான். சிறிய காரணம் கூட இல்லாமல் சிஜியை தவற விட்டிருந்தான். உயிர் பிழைப்பின் மலினமான பொய்களில் தோய்ந்து ஊறிக் கிடந்த பழக்கம் தான் கேவலம் ஒரு தலையசைப்புக்கு அடித்துக் கொட்டுகிற மழையில் இப்படி ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி எல்லாவற்றையும் வாங்கி முடித்து தொப்பலாய் அவனை காரில் ஏற்றுகிறது. மாதவன் புன்னகையில் கார் உறுமிக் கிளம்பி நகர்ந்தது. பத்து ஊர் திருவிழா போல மத்தளம் கொட்டும் மழை காருக்கு வெளியே வெறும் புகை. ஜன சந்தடி இல்லாது காடு பிடித்துக் கிடக்கும் குன்றில் ஏறுவதை ஊகித்துக் கொண்டான். ஒரு பாலத்தைக் கடக்கும் போது எதோ கடலுக்குள் இறங்குவது போல மனசில் திடுக்கிட்டது அப்படியே அங்கேயே இருந்து கொண்டிருந்தது ஏன் என்று அவனுக்கு தெரியும் என்றாலும் அவன் அந்தப் புதிர் பிராந்தியத்தில் காலடி வைக்கவில்லை. சம்மந்தம் இல்லாமல் மூச்சை பிடித்துக் கொண்டிருந்தான். "டீராதே"  என்று பாறை போல இறுகியிருந்த கதவை தட்டி அவள் வந்த போது கூட. 

டிரைவரும் அவனுமாய் வாங்கி வந்த பொருட்களை முற்றத்தில் வைத்தார்கள். ஒரு முறை நிமிர்ந்த போது "ஆங்" என்ற மாதிரி கேட்டது.  அது நீயா- வாங்க-  இருக்கிறாயா- ஓகே,  சரி, விடு என்று ஏதேதோ அர்த்தமாகிற சப்தம். துல்லியமாய் மலையாளிகளுடையது. மாதவன் தனது அடிபொளி பிஸ்னஸ் மகாத்மியங்களை மிடறு மிடறாய் அடித்து ஏற்றின ஒட்காவினால் சத்தம் கூட்டியவாறு போனது அவளுக்காகவேதான். மழையில் கேட்டிருக்காது. வறுத்த சாளை மீன்களையும் வேக வைத்த முட்டைகளையும் கொண்டு வந்து வைத்து சாட்சாத் ஒரு வேலைக்காரியைப் போலவே வேறென்ன வேண்டும் பாணியில் நின்றவள் இப்ப தான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவள் போல சட்டென்று திரும்பி ஒரே ஒரு பார்வை மட்டும் பார்த்தாள், மழையின் குளிர் வந்து தொட்டு பற்களில் கூசி அவனது கொட்டைகளுக்குள் இருந்த நரம்பு கூட அசைந்தது. ஒ, நீ குடிக்க மாட்டாயா என்று அவள் கேட்டதாகவே நினைத்தான். எல்லோரும் ஆளைப் போட்டால் நிழலைத் தள்ளிக் கொண்டு போய் போடும் மாதவன் என்று தன்னைப் பற்றி கொஞ்சம் நேரம் முன்னால் சொல்லியிருந்த அந்த ஆள்  தனது முகத்தில் ஒரு ஓநாயின் பார்வையைக் கொண்டு வந்து அவளிடம் இவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையா என்று சிரித்தார். 

கஞ்சா குடிக்கலாம். அப்பா அதை குடித்தவன் இல்லை. கலை என்கிற சாமானை தலையில் சுமந்து கொண்டு நடக்கிறவன் கரையில் உட்கார்ந்து கொண்டு ஒடுகிற கால நதியை ஒடுகிறதே என்று பார்ப்பான். அந்த இடத்தை விட்டு பெயராமல் தானும் நசித்து பிறரையும் சிதறடிக்கவைக்க அவன் படைக்கப்பட்டிருப்பதால் அம்மா மூச்சுக் காற்றுக்கு அல்லாடி எவனோ ஒருவனுடன் ஓடிப் போனாள்.  வேறென்ன. திரும்பிய திக்கெல்லாம் பசி. லட்ஷம் பேர் சமையத்துக்கு மணமாகவும் ருசியாகவும் கண்ணியமாகவும் தின்று கொண்டிருப்பதை திடுக்கிட்டுப் பார்தவாறு வளரும் சிறுவனின் வயிற்றில் உலவிய மிருகம் உலகில் இருக்கிற ஒவ்வொருவனும் ஒவ்வொரு வஞ்சகன் என்று முடிவு செய்த பிறகு மாதவன் காசுகாரனானான். உச்சி முதல் பாதம் வரை முனைந்து ஒவ்வொரு அசைவிலும் ரத்தம் கரைத்த துயர் அறியாமல் அதே வஞ்சக உலகம் இதே மாதவனை காசு மரமாய் கற்பனை செய்து கை தொழுகிறது,  காலை நக்கவோ கழுத்தைப் பிடிக்கவோ அலைபாய்கிறது.

இவன். ஹ ஹ ஹ ஹ.  என் காசில் தான் சினிமா எடுக்க வேண்டுமாம்.

அவள் பண்டொரு ஆட்கள் சொன்ன மாதிரி பல்லாயிரம் கல் தொலைவில் இருந்தது போல இருக்கவே இவனுக்கு சற்று பரவாயில்லை போல இருந்தது. மாதவன் தன்னை குறி வைத்து இழிவு செய்வதெல்லாம் எடுபடாமல் போனதற்கு அவனளவில் பலரும் பல வழி எடுத்து பலரை அவமதிப்பதன் மூலமாய் தான் தனது இருப்பை உறுதி செய்து கொள்கிறார்கள் என்பதை அறிந்து வைத்திருந்ததுதான். இதையெல்லாம் பழகி வந்த காலம் உள்ளில் ஒரு மரவட்டையாய் ஊர்வதும் நிற்காது. அவளை ஏறிட்டு பார்ப்பதற்குள் உள்ளே சென்றவள் சற்றைக்குள் விறுவிறுவென வந்து அந்தத் தேனீரை வைத்தாள்.

“ஹஹஹஹ. எதையும் கேட்டு விட்டு செய்ய மாட்டாயா ராதா. அவன் எதையும் குடிப்பது இல்லை. தேனீரையும் தான். எடுத்துப் போ“  என்று சுழிந்தவரை பார்க்காதவளே போல இவனிடம் வெறுமனே ஆணையிட்டாள்.

“குடிக்கி.”

இல்லை.இதை மறுத்துப் பேச முடியாது. சினிமா ஆள் இல்லையா, காட்சிகளின் ஓட்டத்தில் இதோ பால் கொதிக்கிறது. தேயிலை கலக்கிறது. சக்கரையை சேர்க்கிறாள். அப்படி இப்படி என இரண்டு முறை சிக்கனமாய் ஆற்றி விட்டு கிளாசில் ஊற்றுகிறாள். பார்க்கிறாள். பின்னர் அதை எடுத்துக் குடிக்கிறாள். ஒரு கணம் அப்படியே நிற்கிறாள். அந்தத் தேனீரை தொண்டைக்குள் இறக்கவில்லை. தன் வாய் முழுவதிலும் அதன் சுவையை அறிந்து கொண்டு அப்படியே மீண்டும் கிளாசில் அதை உமிழ்கிறாள். துயருடன் பார்த்திருந்தாள். விருட்டென கிளம்பி வந்து இவன் முன்னே வைக்கிறாள்.

“குடிக்கி”

குடித்தான்.

அவளைப் பார்க்கிற அவரை பாராதிருந்து அவள் தன்னை பார்த்திருப்பதை இவன் பார்க்காமல் அறிந்து அதை குடித்தான். என்ன மழை? காற்றில் இருந்த ஈரம் விசிறியது. நனைய வைத்து கேலி செய்வது போல ஒரு பிரமை. அது வளர்ந்து, பையன்களோடு குளிக்கப் போய் ஒரு தடவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது போல ரத்ததில் சத்தம் கேட்கிறது. இந்தக் கணம் அப்படியே சாய்ந்து கண் மூட வேண்டும் என எண்ணிய போது மாதவன் காரை எடுக்க சொன்னார்.

காரில் ஏறப் போகும் போது மழையின் பொழிவினூடே ஒரு சாயம் போன ஒவியம் போல பாதியாய் தெரிந்தவளிடம்  “வரட்டே சிஜி?”  என்றான்.

”சிஜி என்ன சிஜி? வப்பாடியா இருந்தாலும் பேரு கேட்டா மரியாதை வரணும். ராதா. அதுதான் அவளோட பேரு!”

அந்தக் கடுமையான மழை இரவில், புகைவண்டிகள் வராமல் ஆள் அரவமில்லாமல் வெறிச்சோடி மழையை ஏற்று அள்ளி கொண்டிருந்த ஒரு பேயைப் போல இருந்த ஸ்டேஷனில் தனியாய் படுத்திருந்து சென்னை வந்து சேர்ந்து என்னவும் செய்யவில்லை. டான்கோ ஹாலை தேடவில்லை. அப்படி இருந்தால் கூட ஜெண்டில் மேன்களின் சபையில் தாறுமாறாய் சுழன்றாடி பேண்டை அவிழ்த்து மக்களுக்கு குண்டியைக் காட்ட முடியாது. ஒரு போதும் பிராண்டோ நின்று நடித்த பாலாக முடியாத பட்ஷம், பரத்தை விலக்கி லூயிஸ் எனும் சொந்தப் பெயரிலேயே ஒரு சுமாரான படம் பண்ணினான். கல்யாணம் பண்ணினான். இவன் வந்து போன ஒரு மாதத்தில் சிஜி தேனீரில் விஷம் கலந்து கொடுத்து மாதவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு போனதை அறிந்து இவன் பார்க்கப் போன போது அவள் முடியாது என்று மறுத்து விட இனி எப்போதும் அவளை பார்க்கவே இயலாதென்று முற்றும் முழுதுமாய் உணர்ந்து கயிறை அறுத்து விட்டாயிற்று.  எந்த எதிர்பார்ப்பும் இல்லை. புகார்கள் இல்லை. வாழ்க்கை போகிறது.

ஒரே ஒரு விஷயம்.

லுயிஸ் இப்போது தேனீர் குடிக்கிறான். காப்பி குடிக்கிறான். இளனீர் மற்றும் குளிர் பானம் போன்றவற்றை குடிக்கிறான். விஸ்கி பிராண்டி ரம் ஒட்கா எல்லாவற்றையுமே குடிக்கிறான். காசு இல்லாத போது நகரத்தை தாண்டி சற்று தூரமாய் போய் பூண்டு ஊறுகாயை நக்கிக் கொண்டு பட்டை சாரயத்தைக் கூட குடிக்கிறான்.

 குடிக்க,  குடிக்க,  குடிக்க தாகம் அதிகரித்தவாறு இருக்கிறது.



ராதா மாதவம் 
ஒரு சிறுகதை.



விஜயா என்கிற பெயர் சாதாரணமாய் இருக்கிறது அல்லவா?

அவளே அப்படி இருந்தாள். பேசுவது சாதாரணம்,  பேசுவதோ அசாதாரணம். அவள் ஒரு இடத்துக்கு வந்து இருந்து கடந்து சென்றால் பலரும் கவனித்திருக்க முடியாது தான். ஆனால் அவளை சற்றே கூர்மையாய் கவனித்து இருந்தால், கருத்த கண்கள். அப்புறம் அவை பெரிதாய் விரிந்திருக்கும். அதில் சுறா மீன் ஒன்று வாயைத் திறந்து கொண்டு மேலெழுவது போல கற்பனை செய்யலாம். யாருக்கும் பிடி கொடுக்காத அந்தக் கண்களால் அவள் எப்போதும் மேனகாவை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பாள்.

அப்படியா. இன்னும் இருக்கிறது.

அலுவலகம் ஓயும் நேரம் உண்டு. ஆண் ஊழியர்கள் வந்து மொய்க்காத,  பெண் ஊழியைகள் வந்து வளவளக்காத, அவள் பிரார்த்தித்துக் காத்திருந்த இடைவெளியில் மேஜை மீது தலையை சாய்த்துக் கொள்ளும் மேனகாவின் முதுகு அல்லது தோளில் தன்னை படர்த்திக் கொண்டு பின்னங்கழுத்தை முகர்ந்து கொள்வது உண்டு. முலைகளை அழுத்தியதில்லை. பயம். சில நிமிஷங்கள் கூட நீடிக்காத அந்த வதை பொழுதில் நெஞ்சு இடிப்பதை அறிந்து கொள்ளக் கூடாது. இரவெல்லாம் இரக்கமற்ற உலகை நினைத்து கண்ணீர் பெருக்குவாள். காலையில் சொல்ல வேண்டும் என்று கருதியதெல்லாம் மறந்து போகும். ஒருநாள் வரும் என்று காத்திருப்பது பெருகும் துயரில் அலை பாய்வது தான் என்றாலும் அந்த நாள் வராமல் போகவில்லை. மேனகாவிற்கு வீடு மாற்ற பணம் தேவைப்பட்ட போது மேனகாவிற்கே கூட சொல்லாமல் வளையல்களை வைத்து பணம் கொடுத்த மறுநாள் அவள் இவளது டயரியை தற்செயலாக பார்த்து விட்டாள். அதன் நூறு பக்கங்களில் தனது பெயர் வரிசையாய் எழுதப்பட்டிருப்பதை அவளால் நம்பவே முடியவில்லை .மறுநாள் கும்பல் கூடி கிளம்பிப் போன வேடந்தாங்கலில் ஆயிரம் பறவைகள் ஒரே நேரத்தில் சுழன்று தெற்கு திக்கில் ஒரு விரிந்த மேகம் போல மறைந்தவாறிருந்த போது மற்றவர்களுடன் சேர்ந்து கை தட்டி விட்டு அவர்களுடன் இறங்காமல் மேனகாவை தடுத்து நிறுத்தினாள். பக்கத்திலேயே ஒரு பறவை மீது மற்றொன்று வழுக்கிக் கொண்டிருக்கும் போக்கில் வெறித்தவாறு "மேனு" என்றாள்.

"ம்?"

"சாவலாமானு இருக்குடி. ஐலவ்யூ"

"ஏ சீய்"

"எனக்கு ஒண்ணும் வேணா. ஒரே ஒரு தடவ உன் வாய்ல முத்தம் குடுக்கவா? ஒரு தடவ தான். அப்றம் நான் கேக்கவே மாட்டேன்."

மேனகா ஆடாமல் அசையாமல் பார்த்தாள்.

அழுகை போல பரவி வந்த ஒன்று உதடுகளில் துடிக்க "ப்ளீஸ்"  என்றாள்.

பேசாமல் வாவென்று கூட்டிப் போனாள் மேனகா. இவள் தொடர்ந்தாள். நாளுக்கு நாள் நெஞ்சு வலி கூடிக் கொண்டிருப்பதாய் சுய இரக்கம் தோன்றிக் கொண்டிருந்தது. முறுக்கிப் பிடித்துக் கொண்டு அவள் ஏவுவதை எல்லாம் செய்து கொண்டு, அவளிடம் வழிந்தவாறு இருந்த ஆம்பிளைக் கழுதைகளை சபித்தவாறு காத்திருந்தாள். அலுவலகத்தில் தனிமை கூடும் போது, அல்லது லிப்டில், ஸ்டோர்ரூமில், டாய்லெட்டில் இருவர் மட்டுமே இருக்கும் போது இதோ, இதோ என்றிருக்கும். இந்த நொடியில் மேனகா இவளைப் பற்றி இழுத்து இதழ்களைப் பிளந்து தருவாள் என்று திரண்டு முட்டி பால் திரியும் போதெல்லாம் சோர்வு சுருட்டியது. மேனகா அவ்வப்போது சிரித்துக் கொண்டிருப்பது சரியாய் இல்லை. சில நேரம் சில பெண்களிடம் அவள் கிசுகிசுப்பதையும் நெருங்கி செல்லும் போது அவள் மாற்றி பேசுவதையும் அறிந்தாள். வீட்டில் கூடின சபையில் இவள் கலக்கத்துடன் நின்றதை வேறு ஒரு நினைப்பில் பார்த்து அனைவருக்கும் பிடித்துப் போகவே, தவிர்க்க முடியாத நிச்சய நாளின் முன் நாள் விஜயா மேனகாவின் காலில் விழுந்தாள். விம்மி அழுதவாறு எழுந்து கொண்டு மேனகாவின் உதடுகளில் முத்தப் போன போது சீ யென்று முகம் சுழிந்து விலகிப் போனது அவளது முகம். அதை எப்போதும் யோசித்தவாறிருந்தாள், "நீங்க பாடுவீங்களா?" என்று காசிவிஸ்வநாதன் கேட்கும் போது கூட.

பாச்சுலர் பார்ட்டியில் இருந்து விடை பெற்றுக் கொண்டு முதலிரவு அறைக்கு வந்து இலேசான பிராந்தி மணத்துடன் இவள் பக்கத்தில் அமர்ந்த அவன் பாடட்டுமா என்று ஒரு வார்த்தை கேட்கவே இல்லை. டிஎம்எஸ் அல்லது சிவாஜி கணேசன் மாதிரி தலையால் வட்டம் போட்டுக் கொண்டு "அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்"  என்று பெருமிதத்துடன் பாடி விட்டு "உனக்குஎன்னென்னபிடிக்கும்" என்று கேட்டு விட்டு அவள் பதில் சொல்லுவதற்குள் தனக்கு என்னென்ன பிடிக்கும் என்று பாதியை சொல்லியவாறு அவளுடைய மொத்த துணிகளையும் அவிழ்த்து விட்டான். இவளது ஒத்துழைப்பு தேவைப்படாத நிலையில் தனுஷ்கோடி சாம்பியன் மாதிரி ஒற்றையாய் நீந்தி முடித்து மூச்சு வாங்கியவாறு "தூங்கிக்கோ" என்று எழுந்து போனான். விடிகிற ஒளி கண்ணைக் குத்தியதில் கோபமாய் புரண்டு படுத்த போது அவன் பக்கத்தில் இருந்தான், குறட்டை மாதிரி எதுவும் இல்லை. எழுந்து அமர்ந்து வெகு நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்த போது வாழ்க்கை புரிந்து விட்ட மாதிரி இருந்தது. வேறென்ன. மாமியார் வேலைக்கு அனுப்பவில்லை. குடும்ப விளக்காக இருக்க சொன்னாள். உடலில் சக்கரை முற்றி கால் வெட்டப்பட்டு கிடந்தவளின் பீ மூத்திரத்தை அள்ள வேண்டியிருந்தது. அன்றாடம் நாற்றம் பிய்க்கிற அம்மணத்தை பார்க்க வேண்டியிருந்தது. எங்கேயாவது சிதறி விடுவோமோ என்று பயந்து கடுகளவேனும் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு வருவதற்கு அவள் மேனகாவை தான் நினைத்துக் கொள்ளுவாள். அவளது உடலை கற்பனை செய்து அவளையே ஒரு பானமாக்கி அருந்துவது போல உணர்ச்சியுடன் தன்னை தானே பிழிந்து போட்டு தூங்கி எழுந்து அன்றாடம் பெற்று விட முடியும் கையகல நம்பிக்கையை. இருட்டு. தனிமை. நூல் பிடிக்காத ஒரு சிறிய கதை. எல்லாம் அவளுடையது. அந்த அந்தரங்கத்தில் லட்ஷம் பறவைகள் எல்லா திக்கிலும் பறந்தன.

"என்னோட கேரக்டரப் பத்தி நான் சொல்லணும்னா எனக்கு எப்பவும் பிராண்டி தான் பிடிக்கும்" என்றான் காசிவிஸ்வநாதன்.

"எனக்கு ரம்மு" என்றான் நீலமேகம்.

விஜயாவும், மேனகாவும் சிரித்துக் கொண்டார்கள். இன்ன மாதிரி என்று சொல்ல முடியாத சிரிப்பு. சிம்பனி மாதிரிஉயர்ந்து கொண்டே வந்தது கோழி பொரிகிற மணம். சமையலறையை குறை சொல்ல முடியாது. என்றாலும் பொருட்களை எடுக்கிற சாக்கில் இவள் மீது பட்டுக் கொண்டே இருந்தாள் மேனகா. விஜயாவுக்கு எல்லா கதைகளும் தெரியும். தனக்கு எல்லா கதைகளும் தெரியும் என்பது மேனகாவுக்கு தெரியுமா என்பது தான் தெரியாது. விஜயாவிற்கு கல்யாணம் முடிந்த அந்த நேரத்தில் மேனகாவின் காதலன் என்று உறுதி செய்யப்பட்டிருந்தவன் யுவராஜ். மோசமில்லை. காதல் கிளிகள் சுதந்திரமாய் வானில் சிறகடித்துப் பறந்திருக்கின்றன. ஒரு தடவை திருப்பதிப் பக்கம் ரெய்ட் செய்யப்பட்ட லாட்ஜில் இருவரும் பிடிபட அதற்கு அப்புறம் யாரோ சொல்வார் பேச்சைக் கேட்டு தான்
திருந்தி விட்டதாய் அறிவிப்பு பண்ணி மேனகா பக்கமே திரும்பாமல் இருந்திருக்கிறான் அவன். பக்கத்து வீட்டில் இருந்த நீல மேகத்திடம் தான் மேனகா கண்ணீர் கடிதங்களை கொடுத்து அனுப்பியவாறு இருந்திருக்கிறாள். யுவராஜின் கல் மனசு கரையவில்லை. வேலைக்கு போவதை எல்லாம் நிறுத்தி விட்டு மேனகாவிற்கு ஆறுதல் சொல்லுவதையே தன் முழு நேரப் பணியாய் எடுத்துக் கொண்டு விட்ட நீல மேகத்தை ஒரு நாள் விடியற்காலை தனது கழுத்தில் தாலி கட்ட வைத்து அவனுடன் இல்லற வாழ்வில் புகுந்து விட்டாள் அவள். பத்தே நாளில் தாடி வளர்த்து யுவராஜ் இவர்கள் எடுத்த புது வீட்டுப் பக்கம் சுற்றவே "நான்அவனோடுபோய்விடவா?" என்று ஒரு சலனத்தில் மேனகா கேட்கப் போய் நீலமேகம் மின் விசிறியில் மாட்டிக் கொள்ளப் போய் காப்பாற்றினார்கள். அப்புறம் அவன் பல முறை அப்படி காப்பாற்றப்பட்டிருக்கிறான். இவளும் பல ஆண்களுடன் தத்தளிப்போடு இருந்து, மீண்டு வந்திருக்கிறாள். விஜயாவைப் போலவே மேனகாவிற்கும் இரண்டு குழந்தைகள்.

"இல்ல,  இல்ல,  இல்ல நீலமேகம். காசி,  நீ சரி இல்லனு என்னப் பாத்து சொல்லுங்க. நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன். அதில ஏதாவது ஒரு உண்மை இருக்கலாமுன்னு நினைச்சுப்பேன். ஆனா நீங்க இப்படி சொன்னது தப்பு. பிராண்டியை தப்பு சொன்னது தப்பு. எத்தன வருஷமா நான் இத குடிச்சிக்கிட்டிருக்கேன் தெரியுமா, இதனோட அரும பெருமய புரிஞ்சுக்காம வாய விட்டுட்டீங்களே,  எனக்கு அப்பிடியே வலிக்குது நீலமேகம்."

நீலமேகம் வருத்தத்துடன் கைகளைப் பிசைந்தான். "தப்புசெஞ்சிட்டேன்,  ஓகே. மன்னிச்சுக்கோங்க. இதுக்கு இப்பவே நான் ஒரு பிராயசித்தம் பண்ணிடறேன்,  சரியா?"

"என்ன பிராயசித்தம்?"

"நான் இது வரைக்கும் ரம்மு தானே குடிச்சேன்? பாத்தீங்க இல்ல? இப்ப உங்க கையால 90 போடுங்க. என்னது?"

"என்னது?"

"பிராண்டி சார்,  பிராண்டி"  என்றுவிட்டு "அத குடிச்சிட்ட பெறகு என் லைஃப்ல இனிமே பிராண்டி தான் குடிப்பேன்னு பிராமிஸ் பண்ணிடறேன் சார்"  என்கிறான் நீலமேகம்.

அங்கே இருந்து ஒதுக்குப்புறமாய் இருந்த படுக்கையறைக்கு விஜயாவை உந்திக் கொண்டு சென்றது மேனகா தான். அவளே பேஸ்ட் மாதிரி ஒட்டி கொண்டும் உட்கார்ந்தாள். "எப்பிடி இருந்தோம் இல்ல?எப்பவும் உன்ன நினைச்சுக்கிட்டு இருப்பேன் தெரியுமா?" என்று கிசுகிசுத்த போது அவளது மூச்சுக் காற்று பட்டு காதோரத்தில் மயிர்கள் நிமிர்ந்தன. ஓண்ணுக்கு வருவது போல தோன்றியது. மேனகா ஒரு முறை வெளியே எட்டிப் பார்த்து விட்டு விஜயாவின் கன்னங்களைப் பற்றி நோக்கம் தெரியாமல் அடித்துக் கொண்டு போகிற வேகத்துடன் உதடுகளைக் கவ்வி நுழைய யத்தனித்து கடித்து முடித்தாள். வாய் மீது ஈரமாய் உறுத்தின எச்சிலை துடைத்துக் கொண்டு விஜயா மெல்ல எழுந்து போனாள் ஒரு புன்னகையுடன். மேனகா முகம் பேயடித்தது போல இருந்தாலும் சற்று நேரத்தில் அதை சரி பண்ண முடிந்தது.

நீலமேகம் காசியுடன் உட்கார்ந்து வெளுத்துக் கட்டினான். விஜயாவும் பிள்ளைகளும் மேனகாவும் சாப்பிட்டார்கள். அதற்கு முன்னேயே விஜயா ஒரு நெக்லஸ்ஸை எடுத்துக் கொடுத்து விற்று எடுத்துக் கொள்ள சொல்லி விட்டாள். இதை திருப்பிக் கொடுக்க சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் மறுபடியும் ஏதாவது கஷ்டம் என்றால் வெட்கம் கொள்ளாமல் கேளு என்றும் பல வார்த்தைகளில் சொன்னாள். மேனகாவின் விழிகளில் ஈரம் படருவதற்குள் சாப்பாட்டில் உட்கார வைத்து விட்டாள். நீலமேகமும் காசியும் குழறலோடு கடைசியாய் பிராண்டியைப் பற்றி பேசி அணைத்துக் கொள்ள மேனகாவிடம் நான் இப்போது முன்பு போல இல்லை என்பதை மட்டும் சற்று அழுத்தமாகவே சொல்லி விடை கொடுத்தாள் இவள்.

காசி படுத்து விட்டான். குழந்தைகளும் தூங்கி விட்டன. என்ன என்று தெரியாத ஒரு படபடப்பு. ஏதோ ஒரு மாதிரி. செத்து போன மாமியாரின் மல நாற்றம் எட்டி பார்த்து அவளுக்குள் நிரம்ப துவங்கியது.  "எருமை" என்று மேனகாவை திரும்ப திரும்ப திட்டிக் கொண்டே ஈறுகளில் ரத்தம் வருகிற வரை பல் தேய்த்தாள். திருப்தி வருகிற வரை சுடுநீரால் கொப்புளித்துக் கொண்டிருந்து விட்டு ஆன்லைனில் வந்து உட்கார்ந்தாள்.

மீண்டும் உள் பெட்டியில் பிரதீபாவின் செய்தி இருந்தது. வழக்கம் போல தான். விஜயா உன் குளுமையை என்னால் உணர முடிகிறது என்று ஆங்கிலத்தில். அவளது பக்கத்தில் இருந்த ஒரு புகைப்படத்தை சற்று நேரம் பார்த்த விஜயா இனி காலம் தாழ்த்துவதில்லை என்று நினைத்த போது எழும்பி வந்த கோபத்தில் முகங்கள் இல்லை. யாரை எல்லாமோ போட்டு வெட்டுவது போல ஒரு சினிமா கணத்தில் ஓடி முடிந்தது. மேனகாவை விட ஆங்கிலத்தில் புலமை கொண்ட விஜயா சரசரவென டைப் பண்ணினாள். இருபத்தி ஐந்தை தாண்டாத பிரதீபாவின் புன்னகையை துடித்தவாறு.

"எனக்கு உன்னை தெரியும். பேசி பேசி சொல்லாமல் இருந்தால் எப்படி? நகராமல் இருந்தால் எப்படி?.எப்போது சந்தித்துக் கொள்ளப் போகிறோம்?"

பால்வீதி
ஒருசிறுகதை.