Sunday, February 19, 2012

" நமது கால இயந்திரம்"




இசையை பற்றி எழுத வேண்டுமானால் அந்த துறையை சார்ந்த தீவிரவாதியாய் தான் இருக்க வேண்டும் என்றில்லை. இந்த 'ஜனநாயக' யுகத்தில் மனசில் பட்டதை எல்லாம் சொல்லலாம், யாரும். அப்படி மனசில் இருப்பதையெல்லாம் வரிசைப்படுத்தி பொறுமையாய் பக்குவமாக சொல்ல ஒரு திறன் தேவைப்படுகிறது அல்லவா? நான்கு பேர் அதை கேட்கும் போது நான் பேச நினைத்து பேச முடியாமற் போனதை இவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்று உணர்ச்சிவசப்படுவது எப்போதும் நிகழும் காரியம் அல்ல. நிஜமாகவே 'உயிர் எழுத்து' இதழில் 'என் கால இயந்திரம்' படித்த போது சொல்லவொண்ணா ஆற்றாமையும் பொறாமையும் எழுந்தது.

கட்டுரை என்றா சொல்வது? 



எனக்கு அதை இன்னதென்று நினைத்து பார்க்கவே பிடிக்கவில்லை. இளையராஜாவை பற்றி எழுதி இருப்பவர் செழியன். எனக்கு மிகவும் பிடித்த ஒளிபதிவாளர். தான் இருக்கிற இடத்தை காட்டிக் கொள்ளாமல் இரண்டாம் திரைக்கதை எழுதுபவர். 'காதல்' படத்தை விட 'கல்லூரி' முக்கியமான படம்  என்பது என் நம்பிக்கையெனில் இலக்கியம் தெரிந்த செழியனால் அந்த படம் பண்பட்டிருந்தது என்பதையும் நம்ப தலைப்படுவேன். இன்னும் சில படங்களில் கூட அவர் உண்டாக்கிய படிமங்கள் பல இடங்களில் தெரிந்திருந்தது. மற்றும் அவர் ஒரு எழுத்தாளரும் கூட. இல்லையா?

ஆனால் இந்த தகுதிகளை நினைத்து பார்க்கவே தேவையில்லாமல் வேறு ஒரு தடத்தில் அவர் ராஜாவின் பாடல்களை பற்றி சொல்லியிருக்கிறார். என்னைப் போல ஆயிரக்கணக்கானவர்களில் வாழ்வு ராஜாவின் இசையோடு கூடி நடந்த கதையை, அவர் தனது அனுபவமாக மட்டும் சொல்லியிருப்பது தெரியும். நகரத்திலேயே பிறந்து வளர்ந்த நானும் கூட செழியனோடு வித்தியாசப்படவில்லை என்று புரிந்து கொள்கிறேன். நிலக்காட்சிகள் வேறாய் இருக்கலாம்.  ஞாபகங்களும் கற்பனைகளும் வேறு கோணத்தில் இருக்கலாம். ஆனால் எங்குமே கண்ணீரின் சுவை ஒன்று.




ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட் பற்றியெல்லாம் என்ன சொல்வது? செழியன் எழுதிய வரிகளையெல்லாம் தான் நான் திருப்பி எழுத வேண்டும். என்னைப் போல ஆயிரம் பேர் கூட இருப்பார்கள். இன்று இருக்கிற இடத்தில் இருந்து ஒரு கணம் திரும்பி பார்த்தால் நாம் எப்போதும் நினைத்து கொண்டிருக்க முடியாத மூச்சு காற்று போல் இருந்திருக்கிறாரா ராஜா? அப்படி தான். அதனால் தான் இப்போதைய டக்கு முக்கு டிக்கு தாளங்களை சகித்து கொள்ள ஆகாமல் பலரும் பொருமுகிறார்கள். காலம் அணிந்து கொள்கிற புது புது கோலங்களுக்கு முன்னே மூச்சு வாங்க பேசி திக்கி திணறி தோற்கிறார்கள். இளையராஜா தனக்குள் திகழ்த்தியதைப் பற்றி அவர்களால் சொல்ல முடியவில்லை. பழசு போய் புதுசு வரும் என்கிற விதிக்கு இளையராஜாவுமா என்பது திகைப்பாய் வருகிறது. ஆன்லைன் அப்டேட்  முற்போக்கு ரைட்டர்ஸ் எல்லாம் காலம் மாறி போச்சு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே?

செழியன் எழுதியதில் இருந்து நான் யோசித்தது கொஞ்சம்.

இளையராஜா இறுதி வரையில் ஒரு சினிமாக்காரர் அல்ல. அவர் பணி புரிந்த படங்கள் இருக்கும், போகும். சாகா வரம் பெற்ற திரைப்படங்கள் நம்மிடம் ஏது? ஆனால் எந்த கான்கிரிட் வனங்களாயினும் அதில் உலவுகிற இரும்பு மனிதர்களின் இதயம் ஒரு கணம் தளர்த்தப்படுமானால் அதை நெகிழ்த்துவதற்க்கு ராஜாவால் முடியும். விற்பன்னர்களின் வீதியில் பாமரர்களை இயக்கியவர் அவர். கம்பனையோ இளங்கோவையோ  ஷேக்ஸ்பியரையோ தஸ்தவேஸ்கியையோ நீங்கள் அடையாளம் கண்டு கொண்டு உங்களுக்குள் இளகியதுண்டா?  அந்த இளக்கத்திற்கு எது காரணமோ அது இளையராஜாவை அறிந்து கொண்டு சிலிர்த்து கொள்ளும். எவ்வளவோ டக்கு முக்கு தாளங்களை தாண்டி அது நடக்கும்.

செழியனுக்கு நன்றி!

No comments:

Post a Comment