Thursday, December 23, 2021

 


மாசறு பொன்

கடைசியாக மறையும்போது 

மின்னிய ஒளி 

ஒரு ஆயுளுக்கு தங்கியது 

அது பூவிதழ் பாதமா 

புன்னகை இதழ்களா 

தலை கீழ் கருஞ்சுடரா 

நிழல் பொழியும் 

நிலா சிதறும் 

கண்கள் தானா, அவற்றின் 

கருமணிகளா


பாம்பா 

கயிறா


ஒரு பெரு வெடிப்புக்கு அப்புறம் 

வாழ்வின் வெளி விரிந்தவாறிருக்கிறது 

 

Wednesday, September 29, 2021

 


நுங்கை அடித்து இளநீரில் இறக்கி 

பனித்துண்டுகள் மிதக்கும் போது 

ஒரு அறுபது மில்லி ஓட்கா கலக்கும் 

கைக்கு அடக்கமான குளத்தில் 

நான் எனது முகம் பார்ப்பேன் 


என்னை வெறித்திருந்த காலத்தின் புன்னகையை 

ஏந்தி நின்றவளின் மனம் பார்ப்பேன் 


நாங்கள் பாவிக்காத கத்திகளின் கூர்மை பளிச்சிடும்போது 

அக்குளத்தில் கண்ணீர் அலையடிப்பது 

பார்ப்பேன் 


நார்சிசம் அவமானத்தில் விலகி இருப்பதையும் 

கூட


பார்ப்பேன்.

Sunday, September 5, 2021

 


மலைகளின் உச்சிகளில் இருந்து 

ஒரு கருடப் பார்வையில் 

அந்த மாயநதி தட்டுப்பட்டால் 

கடவுளைக் கொல்லும் சீற்றத்துடன்

அவன் விரட்டுவதில்

அந்நதியை   

கீறிப் பாயுமொரு தோணி,

அது 

கிழக்கு முடிந்து மேற்குக்கு திரும்பும் போது

ஆற்றை வருடிக்கொண்டு வரும் 

இளைஞனின் கண்ணாட்டியும் கற்கண்டுப் பிள்ளைகளும் 

கொண்டு சென்று நட வேண்டிய கடவுளை 

கையில் வைத்து விளையாடுவர் 

அஸ்தமன சிவப்பு மூடுகிற நதியை கனலாக்கி 

இந்த சுருட்டை உறிஞ்சும் போது

ஞானத் தங்கம்  

சுகத்தை தாங்க முடியவில்லை. 

  

   

 


பலாதர் படத்தின் குதிரை 

கணைத்தது

மண்டியிட்டு சமமாக நாயுடன்

குரைத்தான் அந்த ஹீரோ 

கறுப்பு வெள்ளையில் புன்னகைத்த 

பால்யசகிக்கு 

கலரில் முலைகள் வளர்ந்திருக்க

கண்களுக்குள் கண்கள் சந்திக்காமல்  

ஒரு இடறல்

இரண்டாவது குறுக்கு சந்திலிருந்து

ஓரிரு திருப்பங்களுக்குள் 

அவள் தனது மகளின் மஞ்சள் நீராட்டை 

சொல்கிறாள் 

நான் குரைப்பதற்கு போகாமல்

தத்துவம் சொல்ல தாடி கோதினால் 

முறைத்துப் பார்க்கிறது 

மறுபடி கறுப்பு வெளுப்பில்   

பலாதரின் குதிரை 


அட, என்ன தொல்லைகள் பார் 

இவையெல்லாம், ச்சை.


நான் அடுத்த பெக் விஸ்கியைக் கவுத்துக் கொண்டு 

சரியாகப் படுத்தேன்.  

 

     

Tuesday, August 10, 2021

 


ஒரு மாவிலை நரம்பை இந்தக் குழந்தை 

நிரடிக் கொண்டிருப்பது போலவே 

மலையில் இருந்து நகரும் மூடுபனியில் 

அவள் துழாவுகிறாள் 

வாழையிலையை பிரிக்கும்போது ஆவி மணக்க 

அடையின் நறுமணத்துடன்

ஒளி குறைந்த அடுக்களையில்     

கட்டியணைத்து முத்தமிடும் அம்மாவுக்கு

ஒரு மனம், அதற்கு ஒரு மணம், அதைக் கடந்தால் அங்கே 

தோட்டம் முழுக்க விடியலின் மணம் பிடித்து 

காளான்கள் நிற்க, மரவட்டைகள் 

ஊரும் 

கிணற்றின் நீர் கவிழும் வாய்க்கால்களில்  

சலசலக்கிறது, அவள் தனது பாதங்களின் வடிவை 

பெருமிதித்து முன்னேறுகையில்

ஒரு யுகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கையில்  

கருத்த தென்னையின் பக்கவாட்டிருந்து 

ஒரு பயலின் புன்னகை, 

பால் ஊற்றுவதை நிறுத்துகிறார்கள்

ஷைலஜாவின் மூச்சு நின்றதை பார்த்தேன் 


குழிக்குள் இறக்கி மண்ணள்ளிப் போடும் போது கூட 

அந்த சிரித்த முகத்துக்கு வியந்திருந்தார்கள்.


Tuesday, May 25, 2021

 


நலமாயிருக்கிறேன் என்பதைக் கேட்டு அதிர்வதற்கு

நலமாயிருக்கிறாயா என்று கேட்பது வழக்கம்

அவளுக்கு

பக்கத்தில் தான் இருக்கிறாள்

எனக்கு வாகாக பக்கத்தில் தான் மனதையும்

எடுத்து வைத்திருக்கிறாள்

கண்களும், கண்களின் வாஞ்சையும்

காது மடல்களும், கன்னக் கதுப்புகளும்

இதழ்களும் எடுக்க நான் தட்டப் பொத்தான்களுண்டு

அவள் பறக்க விரும்புகிறாள் ஆழத்தின் ஆழத்தில்

அது ஆப்டரால் யோனியெல்லாம் கடந்து பறந்து 

ஜீவனின் மொட்டு கசக்கி அதன் தேன்துளி எடுத்து 

ருசிக்கக் கொடுத்து

நீ ஒளிர்வதை பார்க்க வேணும்

என்கிறாள்

ஒளிர்வது தாங்காமல் நீ ஒழிவதைப்

பார்க்க வேணும்

பரஸ்பரம் குத்திக் கொள்ள

இரண்டு கத்திகள் கூட இல்லாமல்

இது என்ன காதல்

என்கிறாள்.

 

கண்ராவி, காதல் கவிதைகளையெல்லாம்

இந்த மக்கள் எப்படி எழுதுகிறார்கள்

என்று கேட்கிறாள்.  

  

 

 


Friday, April 23, 2021

 


மரண வீட்டின் சிறிய அறையிலும் கூட 

நாடு நகரம் தோன்றுவதற்கு முந்தைய 

ஒரு பழைய மூப்பன் அமர்ந்து சுருட்டு 

புகைத்துக் கொண்டிருக்கிறான்.

ஒவ்வொரு இழுப்பும் கச்சிதம்.

அதிகமில்லை,குறைவில்லை 

நடுநிலையால் இருமல் போன்றவை இல்லை  

அந்தப் புகை எல்லோரையும் அணைந்து  

ஒன்றிருக்கிறது என்பதாக தொட்டுக்

கொண்டிருக்கிறது 

அனைவருமே தொண்டையைக் கணைத்துக் 

கொண்டிருப்பார்கள் 

சுயம் கடந்த கண்ணீரை துணுக்குறுவார்கள்

ஈடு இணையற்ற நஷ்டமடைந்த யாரோ 

தனது இணைக்காக கதறும்போது 

தம்புராவாட்டம் கூட இழைந்து 

குரலில் வீரியம் ஏற்றுகிறது 

புகை 


நான் பார்த்தேன்,

கூட்டத்தப் பெண்கள் ஒருத்தியின் 

முலையில் இருந்து நிமிர்ந்த சிசு 

யாருமற்ற தெற்கு மூலை பார்த்து சிரிக்கிறது.


புகைப்பதை நிறுத்தி புன்னகைத்திருப்பானோ 

மூப்பன்?

 

 

Saturday, March 27, 2021

 சிலும்பியில் கனன்று 

சுற்றி வந்த சிவனை 

ஆதி முனி பிரான்டுக்கு

அப்புறம் அருந்தியதால்

அந்த போலீஸ் கோட்டர்சில்

அரை கிலோ ஜாங்கிரி மிட்டாவில்   

அந்த மார்கழிக் குட்டையில் 

புகை பறந்தது 

அவுட் ஆப் போகஸில் ததும்பிய 

புராதான் நிலவில் 

நான் காலையில் முடிந்த முத்தத்தில் 

அசைந்தேன் 

அவள் பாத்திரம் கழுவுகிற சத்தம் கேட்டது

பல்லாண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறது 

இன்றைய விஸ்கிக் கோப்பையில் எழும்புகிற 

ஆவியிலும்   

   

Tuesday, February 2, 2021

 


மனம் தொட முடியாத 

அடிவானம்

பொன்னைப் பிழியும் போதிலும் 

அதை நோக்கி செல்லும்  

மறதியின் சாலையில் 

பெயர் தெரியாத மரங்களும் 

பெயர் தெரியாத பறவைகளும்

மயக்கத்தையே நிலை குத்துகின்றன 

உள்ளத்தைத் தொட்டு சென்ற கானத்தின்   

ஓரிரு வரிகள் பாசி விலகும்போது 

உதடுகளைத் தொட்டுச் சென்ற உதடுகளின்

மேலடுக்கில் 

குழிந்து கூர்ந்த விழிகளை பார்த்த கணம் 

நெஞ்சில் உதைக்கிறது, 

அதற்கு என்ன பொருள்,

அந்த உண்மை எதற்கு மலைச்சரிவில் 

வழுக்க வேண்டும்?

அள்ளிக்குடித்து முகம் கழுவ 

கேள்விகள் எப்போதும் காணாசுனையாக 

இருக்க வேண்டும் என்றில்லை,

அது ஒருவேளை 

ஆடம்பர உணவகத்தின் முன்னே நின்று 

கரம் நீட்டுகிற எதோ சிறுமியின் 

தரித்திரம்.