Thursday, August 25, 2011

நான் என் அம்மாவிற்கு கடிதம் எழுதியதில்லை.

அப்போது எல்லாம் நிறைய ஆர்வகோளாறு. நாடகம் நாடகம் என்று பத்து பேரோடு கும்மாளி. எங்களுக்கு நடுவே ஒரு தனசேகர் இருந்தான். சாது. பிற்பாடு அவனுக்கு திருமணமாகி கொஞ்சம் நாளில் மாரடைப்பில் இறந்து போனான். ஒரு வெளிச்சம் குறைந்த மது விடுதியில் அன்று கிளம்பி வந்த கதைகள் ஆயிரம். அது முக்கியமாக அவன் மனைவியையும் தம்பியையும் பற்றியது. நரபோதையில் அநீதியின் பாரம் அழுத்தியதில் சகா சொன்னான் "மச்சான் துக்கத்த தாங்கிக்க முடியாம நெஞ்சு வெடிச்சிடிச்சி".

* * *
தனசேகரை அத்தனை பேரும் மறந்து விட்டார்கள். நானும்தான். என்னென்றால் ஆயிரம் விஷயத்தில் அது ஒரு காரியம். ஆனால் இந்த விஷயத்தை ஒரு திரைகதையாக்கி அதில் சிவா ஜி கணேசனை ஹீரோவாக போட்டால் ? சோதனை மேல் சோதனை என்று படிக்கட்டில் இறங்கி பாட்டு பாடுகிற அவரை நினைத்து கொள்ளுங்கள். சரி, பழைய கதை எதற்கு ? இது வேறு ஒரு காலம் அல்லவா. இப்ப எல்லாம் எதார்த்தம் பதார்த்தம் தான் முக்கியம். லாஜிக் லாஜிக் என்று ரத்த குசு விடும் சினிமாகாரர்களுக்காக சேரன் ஹீரோ. என்ன ஆகிவிட போகிறது. எல்லாம் ஒன்றுதான். தனசேகரின் கதையை போல அமுங்கி விடாமல் இது ஒரு காவியமாக விஸ்வரூபமெடுத்து உலகத்தை வலம் வரும். ஆ சினிமா என்பது கூட்டு முயற்சி அல்லவா ?. நூறு பேர்  சேர்ந்து பிலாக்கணம் வைத்தால் ஒரு வேளை படம் சூப்பர் பம்பர் ஹிட்.

இது தமிழ் சினிமா மட்டும் அல்ல. சராசரி இந்திய சினிமாக்கள் அனைத்துக்குமே உரியது. இவைகளை சுண்டு விரலால் புறமொதுக்கி காரி துப்புவதற்கு நான் யார் ?. அனால் சினிமா என்கிற காட்சி கலையின் சாத்தியகூறுகள் அவ்வளவு தானா. அது ஏன் தெய்வதிருமகள் விக்ரம் மாதிரி இருக்க வேண்டும். நூறு வருஷமாக ஒரே மாதிரி தத்தக்கா பித்தக்கா தானா. விதி விலக்கான இந்திய தமிழ் படைப்பாளிகள் பலரும் மூச்சு திணறும் இந்த கொடிய விஷ சூழலில் ஜாணை பற்றி பேச வேண்டும். முக்கியமாக அவனது அம்ம அறியான் படத்தை பற்றி.





ஜாண் ஒடியனை போல எளிமையான ஒரு மந்திரக்காரன்.

தன்னை ஒரு கலைஞனாய் அல்டாப்பு பண்ணி கொள்ளாமல் வெறும் சினிமாக்காரனாய் ஒரு ஒரிஜினல் சினிமாவை படைத்து காட்டுகிறான்.

ஒருபோதும் சினிமாவாய் இல்லாத அந்த சினிமாவிற்குள் ஒரு கதை வேண்டும் அல்லவா ?.

டெல்லிக்கு கிளம்புகிற மகனிடம் அம்மா லெட்டர் போடு என்கிறாள். (அந்த அம்மா பண்டரிபாயோ, பாத்திமா பாபுவோ, பாபிலோனாவோ இல்லை. சத்தியமாய் கவியூர் பொன்னம்மாவும் இல்லை) அவனுக்கு அதெல்லாம் பழக்கமில்லை. கிளம்புகிறான். வழியில் ஒரு இளைஞனின் பிணத்தை பார்க்க வேண்டி வருகிறது. தற்கொலை. யார் அவன் ?. விசாரிக்க ஆரம்பித்து பிறகு அடையாளம் தெரிந்து கொண்டு மற்றும் பலருடன் இறந்தவனின் அம்மாவுக்கு சாவு சேதி சொல்ல போகிறான். டெல்லிக்கு போகவில்லை. அந்த கூட்டம் பல அம்மாக்களை பார்க்கிறது. தன்னை அறியாமல் தன் அம்மாவுக்கு மானசீகமாய் கடிதம் எழுத ஆரம்பிக்கிறான். அதுதான் படம்.

ஸ்நேகிப்பதை தவிர வேறொன்றும் தெரியாத குடும்பத்து அம்மாக்களுக்கு இளைஞனின் தற்கொலை பற்றியும் விஷமாய் முறுகி வரும் அரசியல் பற்றியும் புரட்சிகள் பற்றியும் மக்கள் பெற்ற வெற்றிகள் பற்றியும் அவன் மனசு சொல்லிக்கொண்டே இருக்கிறது. நாம் கடந்து போகும் எந்த பாதைகளுக்கும் வரலாறு இருக்கிறது. அதை சொல்ல தத்தளிக்கிறான் அவன். ஒரு அம்மாவில் இருந்து துவங்கிய படம் இன்னொரு அம்மாவின் முகத்தில் முடிகிறது.

 உண்மையில் நம் அம்மாக்களுக்கு எழுதி சொல்லாத கடிதம் தான் இந்த திரைப்படம் என்று சொல்லலாமா ?.

கருப்பு வெளுப்பில் நிஜ மனிதர்கள். அவர்களுடைய முகங்களுக்கு பெரிய அடையாளங்களே இல்லை. எப்படி பார்த்தாலும் அது நீ, நான், அவன், இவன், அவர்கள், இவர்கள் தான். ஒன்று இரண்டாகி, இரண்டு பனிரெண்டாகி பல்கி பெருகியவாறு இறந்தவனின் அம்மாவை தேடி செல்லும் கூட்டத்தில் நாம் இணைந்து கொள்ளுகிறோம். இது ஒன்றும் சும்மா பேச்சில்லை. படத்தை பாருங்கள். ஒரு ஒளிபதிவாளனும், ஒரு இசையமைப்பாளனும், ஒரு எடிட்டரும் ஜாணோடு சேர்ந்து நம்மை அந்த அம்மா முன்னாள் நிறுத்தி உங்கள் மகன் இறந்து விட்டான் என்பதை சொல்ல திணற  வைக்கிறார்கள். துளி கூட மசாலா மிதக்காத ஒரு கலப்படமற்ற அனுபவம்.

* *  *
     
படத்தை பற்றின மேலதிக குறிப்புகளை எழுதவில்லை. அதற்கு அவசியமுமில்லை. எங்கேயாவது நின்று என்சைக்ளோபீடியாவாக முந்திரிகொட்டை வேலை செய்யும் ஜென்மங்கள் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளட்டும். நான் சொல்ல வருவது இந்த படத்தை குப்பை என்று சொல்லி போனார்களே அவர்கள் எப்படி பட்டவர்கள். அவர்களுக்கு என்ன வேண்டும். திரையில் மனிதனின் தலை க்ளோஸ் - அப்பாய் வந்த போது ஜனங்கள் வெருண்ட சரித்திரம் சினிமாவுக்கு இருக்கிறது. எதுவுமே பழக்கப்பட்டால் தான். இரண்டு வயசு குழந்தை மொபைலின் சகல தொழில் நுட்பங்களையும் அறிந்து விளையாடுகிறது என்றால் நான்கு வயது கழுதைகளுக்கு சினிமா மட்டும் பழக்கப்படாதா.

ஜாணை பற்றிய ஆவண படத்தை எடுத்த சரத்சந்திரன் இறப்பை பற்றி படப் பெட்டியில் வாசித்த போது தவிர்க்க முடியாமல் அம்ம அறியான் நினைவுக்கு வருகிறது.

வாழ்நாள் முழுக்க இப்படத்தை மறக்க முடியாது.

Saturday, August 20, 2011

என் பொண்டாட்டியோட பேரு ஆதிலட்சுமி. என் பிரண்டு கதிரோட பொண்டாட்டி பேரு சந்தானலட்சுமி. ரெண்டு லெட்சுமிங்களும் அவன் வீட்டு கிச்சன்ல நின்னு கிசுகிசுத்து, கடசியா  இந்த ஞாயித்துக் கெழம அவுட்டிங் போறதா முடிவு எடுக்கப்பட்டது. பசங்களுக்கு செம்ம ஜாலி. ஒரு கார வாடகைக்கு எடுத்துகிட்டோம்.

வேறங்கே போறது. ஜனங்களுக்கு சாப்பாடு போடாம வேலைவெட்டி இல்லாத ராஜாங்க செதுக்கி வச்ச மஹாபலிபுரத்துல கொஞ்ச நேரம் முழிச்சிகிட்டு நின்னுகிட்டிருந்துட்டு கால நனைக்க பீச்சுக்கு போனோம். அங்க ஒண்ணு ரெண்டு மீன்கார பசங்க சூத்து கழுவறதயும், வெள்ளக்கார ஜோடிங்க மவுத் கிஸ் அடிக்கறதயும் பாக்க வேண்டி வந்ததுல ரெண்டு லட்சுமிங்களுக்கும் மகா கோபம். பசங்க நல்லபடி வளர வேணாமான்னு அவங்க நியாயம் கேட்டப்போ சரி, தீம் பார்க்குக்கு போவலாம்னு முடிவாச்சு.

வெய்யில்ல ஒர்த்தர் கோட்டு சூட்டு போட்டுகிட்டு கறுப்பா வேர்த்து வழிஞ்சிகிட்டு எல்லாருக்கும் வெல்கம் சொல்லிக்கிட்டிருந்தார். ரொம்ப பாவம்ன்னா என் பொண்டாட்டி. அவர சுத்தி கேமராங்க ரவுண்ட் அடிச்சிக்கிட்டிருந்திச்சி. அவர் தான் இந்த தீம் பார்க்குக்கே ஒணர்ன்னு சொன்னா இவ கொழம்பிப் போயிடுவான்னு நான் ஒண்ணும் சொல்லிக்கலை. அது மட்டும் இல்ல, பொம்பளைக்கு எதுக்கு ஜெனரல் நாளேஜ்? கொழந்தைங்க கூட சேந்துகிட்டு இதுங்களும் குரங்காவ ஆரம்பிச்சி அதுக்கு மேலேயும் இதுக்கு மேலேயும் தாவி சறுக்க ஆரம்பிச்ச பெறகு நானும் கதிரும் தனியா ஆனோம்.

சரக்கு ஏதாவது கெடைக்குமான்னான்.

எப்டிடா, இது குடும்பங்க குதூகலப்படறதுக்காக கட்டப்பட்ட இடம்ன்னேன்.

'
டயர்டா இருக்கு!'

"
ராத்திரி ஓவர்டைம் பாத்தியா ?"

"
ஆமா. டிவி ல பழய படம் ஒண்ணு.  பார்பரா இலியான்னு ஒர்த்தி. டெம்ட்டாயிட்டேன். இப்ப முதுகு வலி !'

லக்ஷ்மி
ஒத்துழைப்பாங்களா ?"

"பஞ்சு முட்டாய தின்ன தெரியாம முழிச்சாளே, அதுக்காக பாவம்னு நெனைச்சியா. பிசாசுடா. நம்ம பழய சரஸ்வதிய ஞாபகம் இருக்கா, அவளே தேவல !"

* * *


சரஸ்வதி மிகவும் மென்மையான முறையில் எனக்கு உத்தரவிடுவதுண்டு. அதன்படியே இறுதிக் கட்டத்தில் முழுமையாய் அவள் மீது படுத்து எலும்புகள் நொறுங்கிப் போகிற வண்ணம் நசுக்க வேண்டும். உடலசைவை நிறுத்தி விடக் கூடாது. ஒரு மிருகம் போல அவளுடைய கன்னத்தையும் மூக்கையும் கடித்து உறுமவும் வேண்டும். அப்படியெல்லாம் செய்து கனத்தை இழந்தவனாக தளர்ந்து மல்லாந்த போது 'நீ எனது தெய்வம் !" என்றாள்.

"சரி "

"தூக்கம் வருதா ?"

" ம் "

"ரெண்டு தடவ ஆச்சில்ல, அதான் !"

" அதான் ! அதான் !" எனக்கு கண்கள் செருகிக் கொண்டு போகும் போது அவள் பகுதி திறந்த திரைச்சீலையை அவசரமாய் மூடி கடவுள்களிடம் இருந்து தப்பிப்பது தெரிந்தது. புத்தி போட்டுக் கொண்டாள். தண்ணீர் குடித்து விட்டு என்பக்கம் நீட்டினாள். "குடிச்சிட்டு போ. போய் கதிர அனுப்பு !'

நான் தயங்க அவள் எங்கேயிருந்தோ தேடி இரண்டு பெரிய கரன்சிகளை தந்தாள். 

" வச்சுக்க !"

நான் சென்று புதரில் பதுங்கி நிற்கிற வேங்கை போல காத்திருந்த கதிரை அனுப்பினேன். பிறகு சுகமான தூக்கம். கதிர் எப்படியும் விடிகிற நேரத்தில் தான் வர முடியும்.

இப்படி கழிகிற தினங்களில் சில நேரம் நாங்கள் அண்ணாச்சியை வீட்டின் கேட்டிலோ, ரோட்டிலோ சந்திப்பதுண்டு.

"சாப்ட்டாச்சா பிரதர் ?"

"சாப்ட்டாச்சு அண்ணாச்சி !"

அண்ணாச்சி சரஸ்வதியின் வீட்டுக்கு ரெண்டு நாட்களுக்கு ஒரு தடவை வருவார். அந்தி சாயும் நேரம் தான் அவருக்கு பிடிக்கும். ஒரு அரை பாட்டில் பிராந்தியில் பாதியை அவர் குடித்து விட்டு சரஸ்வதிக்கு சிக்ஸ்ட்டி எம்.எல். அப்புறம் இரண்டு  பேரும் பிரியாணி சாப்பிடுவார்கள். அதற்கு பின் அவர் வீடியோ போடுவார். சரஸ்வதி அதை பார்க்க வேண்டும். அவளுடைய முகத்தில் உணர்ச்சிகள் ஏறுகிறதா என்று கூர்மையாய் பார்த்துக் கொண்டிருந்து விட்டு ஏறிய பின் டெக்கை அணைப்பார். இப்போது நம் சரஸ்வதி அரை நிர்வாணத்துடன் ஏதேனும் ஒரு சினிமா பாட்டு பாடியவாறு டான்ஸ் ஆடிக்காட்ட வேண்டும். அவருக்கு மூடு இருந்தால் சிலநேரம் கைதட்டி உற்சாகப்படுத்துவதும் உண்டு. பிறகு  க்ளைமாக்ஸ் நெருங்குகிறது. உண்மையிலேயே இந்த அலுவல் சரஸ்வதிக்கு மிகவும் சவாலாய் இருக்கிற ஒன்றாகும். என்ன சோர்வு ஏற்பட்டாலும் அவள் உயிர்க்கிற இடமும் இதுதான். ஆகவே பதுங்கி பதுங்கி இருளில் நான் நுழையும் போது அவள் தயாராய் இருப்பாள். நான் வெளியேறிய பிறகு கதிருக்காகவும் தயாராய் இருப்பாள். "அவ என்ன தெய்வமா  நெனைச்சுகிட்டிருக்காடா !" என்று கதிர் கூறும் போது நான் மறுப்பதில்லை.

எங்கள் இருவருக்கும் எப்போதேனும் சற்று குற்ற உணர்ச்சி வருவதுண்டு. அப்பாவும் அம்மாவும் இருக்கிற வீட்டின் கதவு பூட்டப்பட்டிருக்க வெளியே ரோட்டில் அலையும் அந்த சிறுவனுக்கு ஐஸ்க்ரீமோ, கேக்கோ வற்புறுத்தி வாங்கித் தருவோம். மிகவும் களையான பயல். பள்ளியில் முதல் ரேங்க் வாங்கி புத்திசாலி என்று பேரெடுத்தவனாம். தேங்க்ஸ் அங்கிள் என்ற அவனது மழலைக்குரல் மிகவும் இனிமையானது. சரஸ்வதியின் பிளந்த கால்களுக்கு நடுவே இயங்கும் போது தூங்காமல் என்னைப் பார்க்கிற இவனது இரண்டு கண்களை எனக்கு தெரியும். நான் சற்று தயங்கினால் சரஸ்வதி அவனது தோளில் தட்டி திரும்பிப் படு என்று அதட்டுவாள். பையன் மிகவும் நல்லமாதிரி. உடனே அம்மா சொல்வதை கேட்டுக் கொள்வான். " இன்னொரு கேக் சாப்டறியா ராஜா ?"

"வேணா அங்கிள், வயிறு புள்ளாயிருச்சி !"

* * *

தன் குடும்பத்தாருக்கும், என் பிள்ளைகளுக்கும், லக்ஷ்மிக்கும் கதிர் பாப்கார்ன் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் எதையோ கூற என் மனைவி வாய் விட்டு சிரிப்பது தெரிகிறது.

நான் இங்கேயிருந்து எழ முயல்வதற்குள் "அங்கயே இரு. வரேன் " என்றபடி எனக்கு அருகே கதிர் வந்து விட்டான்.

"என்ன யோசனை ?" என்றான்.

" காருக்கு எவ்வளவு ஆகும் ?" என்றேன். 

எனக்கே தெரியாமல்.

"அதுக்கா கவலப்படற ? விடு. நான் குடுத்துடறேன் !"

உண்மையிலேயே கதிர் எனது உயிருக்கு உயிரான நண்பன். சின்ன வயதிலிருந்தே நாங்கள் இருவரும் தோழர்கள். ஷோலே படத்தில் தர்மேந்திராவும், அமிதாப் பக்சனும் ஏ, தோஸ்துஹி என்று லொக்கடா வண்டியில் பாடிக் கொண்டு போவார்களில்லையா. அதைப் போல நாங்களும் பாடி பார்த்திருக்கிறோம். அதெல்லாம் எதற்கு, நீங்கள் இருவரும் சகோதர்களா என்று கூட சில ஜனங்கள் கேட்டிருக்கின்றன. இன்னொரு நண்பன் நீங்கள் இருவரும் ஹோமோ செக்சுவல்சா என்று கூட கேட்டிருகின்றான். அதெல்லாம் கிடையாது. ஒரே நேரத்தில் நீங்கள் இருவரும் இருங்களேன் என்று சரஸ்வதி வற்புறுத்தி கேட்ட போது கூட இருவருமே அதை மறுத்திருக்கிறோம்.

* * *


ஆனால் இதற்கு முன்பிருந்து சென்று விட்ட நான்கு பேச்சுலர்ஸ் பையன்களோடு ஒரே நேரத்தில் இருந்திருக்கிறேன் என்றாள் சரஸ்வதி ஒரு நாள்.

எனக்கு வயிறெரிந்தது.

மிகுந்த தயக்கத்துடன் இதுவரை நடந்தது எல்லாம் சரி, இனிமேல் ஒழுக்கமாய் வாழ முயற்சி செய்யலாமே என்கிற ரீதியில் எதை எதையோ உளறி அன்றிரவு அவளை தவிக்க வைத்தேன்.

நான் கெட்டவளா, கெட்டவளா என்று நூறு தடவை அவள் கேட்ட கேள்விக்கு எனக்கு என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை. மாற்றி பேசி சமாதானப்படுத்தி விடவும் முடியாது என்பதால் காம வசப்பட்டவன் போல நடித்து அவளைத் தூண்டி விட ஆரம்பித்தது வெற்றி பெற்றது. அவள் என் கேள்விகளையும், தன்னையும் மறந்தாள். எனக்கு புரிந்தது கொஞ்சங் கொஞ்சமாய். அவளுடைய இந்த உல்லாசங்கள் அனைத்துக்கும் காரணம் நடந்து கொண்டிருக்கிற பலவற்றையும் மறக்க வேண்டும் என்பதற்காகத் தான். அவளே வாரி விழுங்கித் தின்னுகிறாள். அது செரிப்பதற்காக அவளே சிரசாசனம் செய்கிறாள்.

பதினாறு வயசாம் அப்போது. அங்கிருந்தே அவளது இடறல்கள் தொடங்கி விட்டன.

மைசூர் பக்கம் எங்கேயோ ஒரு கிராமத்தில் பகுதியில் நின்று போன படிப்புடன் சாணி மிதிக்கும் போது அவளுக்குள் இனந்தெரியாத துடிப்புகளிருந்தன. வாய் விட்டு கத்தி பாடுவதற்கு விரும்பினாள்.  நடனமாட விரும்பினாள். எங்கோ காடு மேடு ரோடுகளை தாண்டி புகைவண்டிகளும் விமானங்களும் போய் சேரும் சொர்க்க வெளியில் அவள் விரும்பக் கூடிய மனிதர்கள் இருந்து அவளை புரிந்து கொள்வார்கள் என்று நித்தம் தத்தளித்தாள். இளமையும் துடிதுடிப்புமான இயற்கை அவளுக்குள் நின்று ஊழியாடிய போது அதை பயன்படுத்திக் கொண்டவர்கள் வேறு ஆட்களாயிருந்தனர். வறுமை சௌகரியம் செய்து கொடுத்ததில் தான் விலை கொடுத்து வாங்கப் பட்டோமா திருமணம் செய்து கொடுக்கப் பட்டோமா என்பது அவளுக்கே அறியாத புதிர். அண்ணாச்சியை பொறுத்தவரை அவருக்கு இன்னும் ஒரு வீடு. இவளுக்கோ சோறு. அண்ணாச்சி பத்தினிகளை மட்டுமே விரும்புகிற ஆளாயிருந்த போதும் இவளது சன்னல்களில் வேடிக்கைகள் தெரிந்தன. சோற்றை தின்றவாறு அவள் சுவாரஸ்யங்களுக்கு அலைந்தாள். என்னைப் போன்ற எத்தனையோ ஆண்களின் சாதுர்யங்களை அவள் நம்புகிறாள். அதே நேரம் அடிமைத் தனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வேறொரு இடத்தில் அரசியாகவும் அவளால் முடியும்.

ஒரு நாள் குடிபோதையில் கதிர் அழுதான். 

என்னவென்றேன்.

அடுத்த வீட்டில் விருந்தாளியாய் வந்திருக்கிற ஒரு சினிமாக்காரனுக்கு வலை வீசிக் கொண்டு இருக்கிறாள். எனக்குள் பெருத்த ஆசுவாசம் ஏற்பட்டது. நான் நல்ல பிள்ளையாவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த காலம் அது. 'விடுடா ' என்றேன். கள்ளப்புருஷன்களுக்கெல்லாம் எதற்கு டென்ஷன் என்பது என் தரப்பு. அவன் நோட்டு புத்தகங்களில் சரஸ்வதி சரஸ்வதி என்று எழுதி விட்டு அன்று ராத்திரி பளார் பளாரென அறைந்திருக்கிறான். மறுநாள் அவள் அடி வாங்கின சுகத்தைப் பற்றி விவரித்து சொல்லி உனக்காக நான் சாகவும் தயார் என்று கண்ணீர் விட்டிருக்கிறாள். கதிர் அவளை கல்யாணம் செய்து கொண்டு விடுவானோ என்கிற பயம் என்னை பற்றியது.

ஒரு நாள் பொழுது விடிந்த போது அவளை காணவில்லை.

கதிர் ஆவேசமாய் சென்று பார்த்த போது வழக்கப்படி அந்த சினிமாக்காரன் உட்கார்ந்து ஏதோ நடிகனை சுற்றி ஒளிவட்டம் வரைந்தவாறு டிசைன் போட்டுக் கொண்டிருந்தான். 

அண்ணாச்சி இந்த திசைக்கே வரவில்லை.

பையனையும் ஒரு நாள் காணவில்லை. எங்கேனும் கோவில் நகரங்களில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கலாம்.

இரண்டு நாள் குடியில் கதிரை சமாதானம் செய்ய முடிந்தது. இப்போது எல்லாம் வெறும் சம்பவங்கள் தான், சரஸ்வதி போனால் என்ன லஷ்மி வந்து விட்டாளே !

* * *

என் மனைவியின் மார்புகளை விட  இந்த லஷ்மியின் முலைகள் சற்று கடினமானவையாய் இருக்கும் என்று திரும்ப திரும்ப தோன்றுகிறது. பிசாசாமே அவ்விஷயத்தில் ! நான் கதிரை பின்பற்றி அவளிடம் ஒன்றிரண்டு ஜோக்குகளை சொல்லிப் பார்க்கிறேன். நமுட்டு சிரிப்புகள் கூட சிலவற்றின் சமிங்ஞைகள் தான் என்று தோன்றுகிறது. இந்தக் காரியம் வேண்டுமா வேண்டாமா என்று தெரியவில்லை.

எனது லக்ஷ்மி அவனிடம் சிரித்து கொண்டிருக்கிறாள் என்பதால் நட்பை அறுத்து விட்டு மனநிம்மதியாய் இருக்கலாமோ என்பது தான் என் முதல் சாய்ஸ். இருப்பினும் ...... லக்ஷ்மி, அதாவது கதிரின் லக்ஷ்மி எனது கற்பனைகளில் சரஸ்வதி போலவே டான்சாடுவதைத் தடுக்க முடியவில்லை. (சொல்ல மறந்து விட்டேனே, அண்ணாச்சி இப்போது வைத்துக் கொண்டிருக்கிற பெண்ணின் பெயர் வீரலட்சுமி.) இத்தனைக்கும் சினிமாவில் கூட எனக்கு டான்ஸ் பிடிக்காது. மனசு நொந்த ஒரு ராத்திரியில் மரக்கட்டை போல நான் படுத்து கிடந்தபோது ஜட்டி பாடியுடன் எழுந்த சரஸ்வதி மியாவ் மியாவ் பூனைக்குட்டி, வீட்ட சுத்தும் பூனைக்குட்டி என்று ஆட ஆரம்பித்த போது எனக்கென்னவோ கண்ணீர் தான் வந்தது. நிறுத்து என்று கூச்சலிட்டு அவளை அணைத்துக் கொண்டேன். ஆனால் இந்த லக்ஷ்மி ஆடினால் பிரம்மாதமாயிருக்கும் என்று தோன்றுகிறது. இதில் உள்ள சாதகமான கற்பனை என்னவென்றால், நிச்சயமாய் கூச்சம் இல்லாமல் இவள் ஆட சம்மதிப்பாள். 

ஆசைகள் திரள்கின்றன.

நான் எப்படி இதற்கு வழியுண்டாக்குவது என்று சிந்திக்கையில் இவன் முந்திக்கொண்டு விட்டான். "டேய், குடும்பத்தோட வந்து என் வீட்டுல ரெண்டு நாள் தங்கேண்டா !'  என்றவனின் கண்களில் கபடத்தை தேடியவாறு "நான் வேலைக்கு போவ வேணாமா ?" என்றேன். 

"சரி, உன் மிஸ்சஸ்சயும் கொழந்தைகளையும் மட்டும் அனுப்பி வை !"

கெட்ட வார்த்தைகளால் நான் திட்டியது என் மனைவியை. இரவில். அவள் பச்சை குழந்தை மாதிரி முகத்தை வைத்து கொண்டு எதுக்கு எதுக்கு இந்த கோபம் என்று திணறுவது போல நடித்தாள்.

மறுநாள் கூட எனக்கு வேலைகள் ஓடவில்லை. வைன் ஷாப்புகள் காந்தி பிறந்த நாளை கொண்டாடியவாறிருந்ததால் ஸ்ரீலஸ்ரீ ராமகிருஷ்ண ஆச்சார்ய பகவானின் உரை கேட்க போனேன். அவர் தேவிகளை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். சமஸ்கிருத மழை. என் மனசில் ராமநாராயணன் படத்தில் வரும் தேவிகள் கிராபிக்சோடு கலக்க பப்ளிக் கக்கூசுக்கு சென்று அவஸ்தையை தீர்த்துக் கொண்டு சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் போனேன்.
எங்கே போகலாம் ?

சாமுண்டி, மூகாம்பிகா, விசாலாட்சி..யார் எனக்கு ஆறுதல் தரக்கூடிய தேவி?
பஞ்சு பஞ்சாய் பறக்கிற சேலை கட்டி ஹாண்ட் பேக்கோடு ஒரு தேவி என்னிடம் டைம் கேட்டது.

போகலாமா என்று யோசித்து எய்ட்ஸ் பயம் வரவே அவசரமாய் வீடு திரும்பி லக்ஷ்மியை மல்லாத்தினேன்.

எல்லாம் முடிந்து விச்ராந்தியாய் படுத்து கிடக்கும் போது "கதிர் போன் பண்ணி இருந்தார். நீங்களும், கொழந்தைகளும் எப்ப வீட்டுக்கு வர்றீங்கன்னு கேட்டார் " என்றாள்.

எனக்கு மறுபடியும் வயிற்றை கலக்கியது. இப்படி தொடர்ந்து ஆறு ஏழு தடவை பின் பக்கம் அவிழ்ந்து உடம்பு தளர்ந்ததில் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டேன். குளுகோஸ் ஏறிக்கொண்டிருந்தது.

மங்கலாய் எனக்கு முன்னே என் மனைவியும் கதிரும் தெரிகிறார்கள். என்னவோ ஒரு ஜோக் சொல்லியிருக்கிறான். லக்ஷ்மி கிணுங்குவது கேட்கிறது. 

எனக்குள் எங்கோ ரொம்ப தூரத்தில் நான் பற்களைக் கடித்துக் கொண்ட போது சரஸ்வதி வந்தாள். நீ என் தெய்வம் என்றாள். சரஸ்வதி என் சரஸ்வதீ. எங்கே இருக்கிறாய் நீ. நான் உன்னை காதலிக்கிறேன். நான் உன்னை காதலிக்கிறேன். நான் உன்னை .....


                                  

                                                                                "இதனால், அறியவரும் நீதி ?"

                                                                                                                                                                                  









 

 

Tuesday, August 16, 2011

டூயல்







முலை பற்றி முண்டும் போதே
பாலன்றி என்னவோ வேண்டியிருக்கிறது
குழந்தைக்கு

எத்தனை துயர் இது.

சட்டையை மாற்றிப் பார்த்து
சட்டங்களை மீறி பார்த்து
காதலில் ஊறி பார்த்து
கடவுளை தேடி பார்த்து
நாம் பார்க்க விரும்புவது
நம்மைத் தானோ
ஒருவேளை
வாழ்வின் தெரு முடிந்து
இறுதியின் இறுதியில்
நான் சந்திக்க முடியுமா
என்னை

நானறியாத திருப்பத்தில்
எனக்காகக் காத்திருக்கும்
எனக்கென்ன அடையாளம்,
எப்படி அறிவேன்
என்னை ?

Friday, August 12, 2011

மொதல்ல நான் ஒரு விஷயத்த தெளிவுபடுத்திடறேன். இது காதல் கதை கிடையாது. ஆனா நான் அங்கிருந்து தான் தொடங்கியும் ஆகணும். உன்னைப் போல, அவனப் போல நான் தொடங்கினதே அங்கருந்து தான்னு நெனைக்கறேன். அதுக்கு முன்னால வாழ்ந்ததெல்லாம் யாரு, யாருன்னு தன்னையே தேடிகிட்ருந்த ஒரு தத்தளிப்பு மட்டும் தான்.

பதிமூணு வயசு, திடீர்னு ஒரு நாள் குடும்ப ஆட்களோட, அந்த வயசுக்கே 
உரிய திருவிழா சந்தோஷத்துல நெறய உறவுக்கார ஜனங்கள பாக்க வேண்டி வந்தப்ப, ஒரு ஓரமா அவ. நான் பாத்தப்ப அவ என்ன பாத்துகிட்ருந்தா. திரும்பிகிட்டேன். மின்னி அணையற அலங்கார விளக்குங்கள, குட ராட்டினத்த, யானைங்க தென்னங்கீற்றக்  கிழிக்கறத பாத்துகிட்டேயிருக்கேன். மனசு எரிஞ்சிகிட்ருந்தது. வீட்டுக்கு போய் படுக்கணும் போலருந்தது.  

சீக்கிரமா படுத்துட்டேன். படுத்தது சீக்கிரமா உறங்கறதுக்கு இல்ல. போர்வைய உடல் முழுக்க போத்திகிட்டு யாரோ படுக்க என் பக்கத்துல கொஞ்சம் எடம் வெச்சுகிட்டு தலையண மேல கன்னத்த ஒத்தி எடுத்துகிட்ருந்தேன். இதுவர எனக்கு இப்படி மனசுக்   கஷ்டம் இருந்ததே இல்ல. சன்னல் வழி நெலா பாத்துக் குறுகுறுத்தப்ப கொஞ்சம் தப்பு தோணிச்சி. இது வேணா, அறுத்துகிட்டு வெளியே வரணும்னு பலவீனமா தான் முயற்சி செஞ்சேன். ஏன்னா அதவிட வலுவா எனக்குள்ளே அது கெட்டியா பிடிக்க ஆரம்பிச்சது.

மீச மொளச்ச நாள்ன்னு ஒண்ணு  இருக்காது. ஆனா அன்னைலேருந்து தான் மீசய பாக்க ஆரம்பிச்சேன். முகப்பருக்கள  ஒடைச்சு பவுடர் நிரப்பி கண்ணாடிய வெறுத்தேன். அவள பாக்கற சந்தர்பத்துல எல்லாம் காலுக்கு கீழே நிலம் நழுவிச்சி. பெரிய காரியக்காரியா பாவன பண்ணிக்கிட்டு, எல்லாருக்கும் நல்லவளா இருந்துகிட்டு மில்லிமீட்டர் இடைவெளில அவ கண்ணு என்ன அள்ளும். அந்த அநியாயம் ஒருத்தருக்கு கூட தெரியாது. அத மாதிரியே எடத்த விட்டு போறப்ப ஒரே ஒரு தடவன்னு என் மொத்த ஜீவனும் எரந்து நிக்கும் போது கல்லு மாதிரி தெடமா திரும்பியே பாக்காம போவா.

போடி தேவடியா.

என்னோட கோவம் பல தினுசுல வெடிச்சது. விடியற பொழுது நல்ல படியா முடியணும்ன்னு எந்த மாத்தத்தயுமே விரும்பாமே எப்பவுமே பயத்தோட நகர்ந்துகிட்ருந்த என் குடும்பம் என் சேஷ்டைகளை பாத்து நெளிய, இன்னும் இன்னும் நான் நிமிர்ந்தேன். பாவம் அப்பா. அவர் கொஞ்சங் கொஞ்சமா எப்படி தகர்ந்துகிட்ருந்துருப்பார்னு யோசிச்சா அத நாவலா எழுதலாம்.

அவ எங்கயோ இருந்தா. நான் எங்கயோ இருந்தேன்.

அவள மறக்கறதுக்காக என் கண் முன்னால பட்ட எல்லாத்லேயும் ஈடுபட்டேன். இல்ல.. அவள ஜெயிக்கணும்ங்கறதுக்காக கூட இருக்கலாம். இருபத்தி நாலு மணி நேரமும் ஒரு ஆவி மாதிரி எங்கயோ இருந்து என்ன பாத்துகிட்டேயிருந்தா. நடுராத்திரி ரெண்டு மணிக்கு மேல ஒரு போலீஸ்காரன் என்னப் போட்டு நொறுக்கிட்டு போனதுக்கு அப்புறம் நான் 'ஓ' ன்னு அழுததுக்கு காரணம் அதுதான். என் முட்டாள் பிரெண்ட்ஸ் நெனச்சது போல தாங்க முடியாத வலி இல்ல.

அவ வளந்துகிட்டேயிருந்தா. வயசுக்கு வந்து என் கோவத்த அதிகப்படுத்தன அந்த வளர்ச்சிய சொல்லல. வேற விதத்துல. படிப்பு, அழகு, நாகரிகம், நாசூக்கு. இப்ப எல்லாம் அவ பார்வ  ரொம்ப பயங்கரமானதா இருக்க, நான் ஒரு வேட்ட நாயா எப்பவும் பாய்ச்சல்லயே இருந்தேன். நிரூபிக்கணுமே. என்னென்னவோ செஞ்சதுல அவ பார்வைக்கு பெரிசா எதுவும் கெடைக்கல. என் தலையில ஊர்காருங்க வச்ச க்ரீடம் பத்தி தெரிஞ்சுகிட்டருக்கலாம். காறி துப்பட்டும்னு நெனச்சுகிட்டு அதிலேயும் சந்தோஷப்பட்டுக்குவேன். ஒரு தடவ என் வீட்டுக்கு வந்தவ எங்க வீட்டு சொவர பாத்துகிட்டு நின்னா.

அது ஒரு தில்லாலங்கடி விஷயம் தான்.

வயிறு வீங்கிய  ஓணான் உருவத்திலிருக்கும் ஒரு பிள்ளையை ஏந்திக் கொண்டு உலகின் கருணையை பசியுடன் எதிர்பார்க்கிற பெண் ஒருத்தியின் புகைப்படம் அது. வதை செய்கிற வாழ்வை சகித்துக் கொண்டு பின்வருகிற காலத்தை சந்திக்க நிற்கும் அந்தப் பெண் என்னை எந்த அளவுக்கு பாதித்திருந்தாள் என்பது ரொம்பவும் சந்தேகத்திற்கிடமானது. பெரிய வேதாந்தி கூறுகிற சமரசமாக ' எங்கே துயரம் இருக்கிறதோ அது புனித பூமி !' என்று புகைப்படத்துக்குக் கீழே என் கையெழுத்தில் எழுதியிருந்தேன்.அந்த சோமாலியா பெண்ணுக்கும், மேற் சொன்ன வரியைச் சொன்ன ஆஸ்கார் ஒயில்டுக்கும்   சம்மந்தம் இல்லாததைப் போல ஒருவிதத்தில் அவள் பார்த்திருந்த விஷயத்துக்கும் எனக்கும் கூட சம்மந்தமில்லை தான். எனது அப்போதைய பிரச்சனை சுலபமானது. இதை ஒட்டி வைத்தவன் நான், கையெழுத்து என்னுடையது. அதை புரிந்துகொள்வாளா ?.

அவள் என்னை புரிந்து கொள்ளாதவளாகவே இருந்ததில் எனது பயணங்கள் வெகு மும்முரப்பட்டன. எல்லோரையும் எதிர்த்து கொண்டிருப்பதில்   நாட்கள் செலவாகி களைத்துக் கொண்டிருந்தேன். யாரும் எதுவும் பேசாமல் இருந்து விட மிக இலகுவாக அவள் கனவான் ஒருவனுக்கு மனைவியாகி போனாள்.

அழாமல் பார்த்துக் கொண்டேன். அறிவு இதற்கு ஆயிரம் பதில்களை வைத்துக்  கொண்டிருந்தது. எத்தனை பெரிய பிரபஞ்சம், அதன் கால வெளிக் கணக்கில் எத்தனையோ நிகழ்வுகள்... என்று.

ஓ. போதை. இரு. ஒதறிக்கிறேன். இலக்கணமா பேச ஆரம்பிச்சுட்டனா. வேணா. அவ்ளோ சீரியஸ் தேவயில்ல. சுருக்கமா வரேன். நாளுங்க போன பெறகு நானும் தனியாவ ஆரம்பிச்சேன். தனியாவ ஆரம்பிச்சேன்னு சொல்ற அந்த வரில விவரிக்க முடியாத பயங்கரங்கள் இருக்கு. அந்நியப்பட்டு தனிமப்பட்டு போய் நின்ன ஒருத்தன் மட்டுமே புரிஞ்சுக்கக் கூடிய பயங்கரங்க. பசி. அவமானங்க. வலி. அப்படி நெறய.

பாதுகாப்பா இருந்துகிட்டா பைத்தியக்கார ஆஸ்பத்தரிக்கு போவாம தப்பிச்சுக்க முடியமானு யோசிச்சேன். வேல, வீடு, குடும்பம்ன்னு கொஞ்சம் விஷயங்கள மேல இழுத்து போட்டுகிட்டு நாமளும் அதுக்குள்ள சுருண்டுக்கலாமேன்னு வந்துச்சு. திரும்பி வந்த ஆடு மரியாதைக்குரியது இல்லயா. இப்ப என்கிட்ட அதெல்லாம் இருக்கு. என் மூத்த பையன் ' பின் நவீனத்துவம்ங்கறது ஒரு வடிவம் இல்லப்பா, கலகம் !' ங்கறான். யாரயாவது லவ் பண்றானோ என்னமோ.

நான் கத சொல்ல ஆரம்பிச்சது அவளப் பத்தி. இல்லயா. அதுக்கு வரேன். பாதுகாப்பு கருதி நான் ஜனக்கூட்டத்துல கரைஞ்சதுக்கு அப்புறம் அவளப் பத்தி நெனச்சுப் பாக்கவே எனக்கு வெக்கம் வர ஆரம்பிச்சது. கோழைத்தனமான அந்த அவமானமான நாட்கள மறக்கணும்னு நெனைச்சேன். அவள சந்திக்க விரும்பல.

அவள சந்திக்க முடியற எடங்கள நான் தவிர்த்தேன்னு சொல்லணும்.

பொம்பளையா பொறந்துருந்தா நாலு பேரு கூட படுத்து சம்பாதிச்சிருக்க வேண்டிய காசை இப்ப ஒரு வேலையில இருந்து சம்பாதிக்கறனா, ஒரு அந்தஸ்து வேற வந்துருச்சி. நெறய பேரு கை குலுக்கிட்டு முதுக தட்டிக் குடுத்துட்டு போறான். செல நேரம் தொண்ட முட்ட குடிச்சிட்டு வாந்தி வந்துடறா மாதிரி வேற என்னென்னவோ விஷயங்க போட்டு அமுக்கும். காலைலயே குளிச்சி கிளிச்சி பொண்டாட்டி கூட கோவிலுக்கு எங்கயாச்சும் போயிட்டு யாராவது ரெண்டு பேருக்கு ' அன்னதானம்' போட்டு சாந்தியாயிடறேன்.

  உத்தமமான இந்த காலம் முழுக்க நான் அவள சந்திக்கவே இல்ல. பொய்யாய், கனவாய், பழங்கதையாய் போனதுவேன்னு முடிஞ்சிருக்கணும்.  ஆனா எதிர்பாராத ஒரு எடத்துல விலகிப் போயிர முடியாத ஒரு சூழல்ல மொகத்துக்கு மொகம் இன்னைக்கு காலைல பாத்துகிட்டோம். ப்ஸ. விதி.

என்ன செய்யறது.

அவள நான் காலமெல்லாம் பாக்காம இருந்துட்டனே தவிர, அவ வாழ்க்கயெல்லாம் தெரியும். அவளோட புருஷன் உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச ஆள் தான். (கரெக்ட், மூணு வருஷம் முன்ன அவன்தான் அந்த நடிகய வெச்சுகிட்ருந்தான்.) மூணு பொம்பளப் பசங்கன்னும் தெரியும். 

'எப்படி இருக்கே ' ன்னு கேட்டேன்.

புருஷன் இப்ப வேற ஒரு நடிகய வெச்சுக்கிட்ருக்கானாம். மொத பொண்ணு சூயிசைட்  பண்ணிகிட்டாளாம். ரெண்டாவது பொண்ணு போத பழக்கமாயி ரொம்ப காலமா ஆஸ்பிட்ட ல்லே தான் இருந்துகிட்ருக்கா. அவள பாக்கதான் போய்கிட்டிருக்கேன்னா.   மூணாவது பொண்ணு சின்னது. காருக்குள்ள உக்காந்து என்னை மொறைச்சிகிட்ருந்தா.

நெறைய நேரம் என்னால பேச முடியல. ரெண்டு மார்க்கு கம்மியா போட்டுட்டா டீச்சர், ஜொரமடிச்சிருக்கு இவளுக்கு. காலத்த பத்தி கொஞ்ச நேரம் யோசிச்சுகிட்டு நின்னேன். அவளோட கண்ணுகள பாத்து என்னால கேட்காம இருக்க முடியல. "எப்படி சமாளிக்கற ?"

" எங்கே துயரம் இருக்கிறதோ அது புனித பூமி !" ன்னா.

தம்பீ, இன்னும் ஒரு பெக்க கொண்டு வாப்பா. லார்ஜ்.




                                                                   " ஒரு வாக்கியம், ஒரு வாழ்க்கை "
    



Thursday, August 4, 2011

இயக்குனர் என்ன விரும்புகிறார் என்பது எனக்கு தெளிவாயிற்று. சக தோழர்களெல்லாம் மண்டைக்கடியில் இருந்தார்கள். பிரச்சனை மிகவும் சுலபமான ஒன்று. கதையில் வரும் ஹீரோ ஹீரோயினை ஒரு இடத்தில் சந்திக்க வேண்டும். அந்த சந்திப்பு பவர்புல்லாக இருப்பது அவசியம். இயக்குனர் நெற்றிப் பொட்டை கசக்கி பிழிந்து துயரப்படுவது அத்தனை பேரையும் குற்ற உணர்ச்சி கொள்ள வைத்தது. அனைவரும் அவரது உழைப்பை பகிர்ந்து கொள்ள விரும்பினார்கள்.

இயக்குனரின் சமூக பார்வை புரிந்து கொண்டு விட்டதாய் நம்புகிற ஒருத்தன். "சார் ஹீரோ வந்துகிட்டே இருக்கான். எதையோ பார்த்து ஷாக். அங்க டர்ன்  பண்ணா ஒரு கண்ணு தெரியாத தாத்தா ரோட்ட கிராஸ் பண்றாரு. இரண்டு பக்கமும் வண்டி. ஹீரோயின் பாய்ஞ்சி வந்து உயிருக்கு பயப்படாம அவர காப்பாத்திகிட்டு நின்னுடறா. ஒரு வண்டி மேல இன்னொரு வண்டி. இன்னொரு வண்டி மேல இன்னொரு வண்டி இடிச்சி ஹாலிவுட் ரேஞ்சுல பிக் பேங்க். அந்த நகரமே ஸ்தம்பிச்சுப் போயி அங்கேயே பாத்துகிட்டு நிக்க. அவ எதையும் துளி கூட கேர் பண்ணாம அந்த தாத்தாவோட போயிகிட்டேயிருக்கா".

இயக்குனர் தனது உதவியாளனை கூர்ந்து பார்த்தவாருயிருக்க. அவன் புல்லரிப்புடன் "ஹீரோ மனசு நெகிழ்ந்து போயி இலேசா ஸ்மைல் பண்ணிடறார் சார். பின்னால கோரஸா ஒரு தீம் மியூசிக் போட்டு விட்டுரலாம்" என்று விட்டு அவரை தத்தளிப்போடு பார்க்க அவர் முகம் சுருக்கினார். முகமெங்கும் வேறு அமைதி.

என்னை தூக்கம் வந்து மெல்ல தட்டியது. சுதாரிக்க முயலுகையில் கொட்டாவி வந்தது. மிகுந்த அயர்ச்சியை உணர்ந்தேன். ரத்த புற்று நோய் வளர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற பயம் ஒரு உலுக்கு உலுக்கியது.  எதாவது உளறி கொட்ட ஆரம்பிக்கலாமா என்று முன்னகர்ந்து பிறகு பம்மினேன். என்ன எழவை சொல்லி தொலைப்பது. நான் அடங்கி நாலு மாத வாடகை பாக்கி பற்றியும், வீட்டுக்காரனுக்கு என்ன சாக்கு சொல்ல முடியும் என்பது பற்றியும் தீவிரமாய் யோசித்து கொண்டிருக்கையில் இயக்குனர் என்னை பெயர் சொல்லி அழைத்தார்.

நான் நிகழ் உலகுக்கு ஒரு திடுக்கலுடன் வந்து விழ.

அவர் "பேசாம இருந்தா என்ன அர்த்தம் !" என்றார்.

நான் ஒரு சிரிப்பு சிரித்து வைத்தேன்.

"ஏதாவது சொல்லு".

"சொல்றேன் சார்".

"எப்ப ! ட்டூ அவர்சா நாம இதே சீன்லயே இருக்கிறோம் !".

"யோசிச்சிட்டு தான் இருக்கிறேன்".

"சீக்கிரம்".

பிரமிளாவுக்கு அப்போது வயது பதிமூன்று. எனக்கு வயது பதினான்கு. அவளுடைய வீட்டில் ஐயப்பன் பூஜை நடந்து கொண்டிருந்தது. மார்கழி மாதத்தினுடைய இரவின் குளிர் இலேசாய் உறைத்து கொண்டிருக்க கும்பலோடு சேர்ந்து நடுக்கத்துடன் பாடிக் கொண்டிருக்கிறேன். என் கண்கள் அடிக்கடி ஒரு திசையை கவனமாய் பார்த்துக் கொள்கின்றன. ஹார்மொனியத்தில் பதிந்து விலகுகின்ற அவள் கைகள்தான் எவ்வளவு அழகியவை?. அவள் ஐயப்பனை நேசிக்கிறவள். அவளுக்குள்ளே என்னவோ ஊறி ததும்புகின்றன. வழிந்தோடுகிறாள். விவரித்துக் கூற முடியாத ஒரு பேரமைதி அந்த கண்களில் நிரம்பி நிற்க அவளுடைய பாட்டு சத்தம் எனக்கு தனியாய் கேட்கிறது. என் கடவுளே நான் விரும்புவதென்ன? எங்கே கரைந்து மறைந்து காணாமல் போக விரும்புகிறேன். நெகிழ்வால் என் குரல் ஆழமாகிறது. உச்சத்தில் சஞ்சரித்து உருகுகிறேன். கண்ணீரை மறைக்க வேண்டி வருகிறது. பஜனை ஒரு கட்டத்தில் அதன் முடிவை எட்ட அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது.

விருவிருப்படைந்த குரல்கள் முறுக்கி ஆவேசம் அடைந்து அனைவரும் கிளர்ச்சியடைந்த அந்த தருணத்தில் ஒருத்தன் தனது கட்டுபாட்டை இழந்தான். சாமி வந்துவிட்டது என்கிற முணுமுணுப்பு பரவியது. அனைவரும் அடங்கி நிற்க அவன் மூச்சிறைப்புடன் என்னென்னவோ பிதற்றியபடி சாமியாடினான். தடித்த உருவமுடைய அவனது மீசையும், தாடியும் அலங்கோலப்பட்டு, வியர்வையில் நிறம் மாறின குங்குமக் குழம்பு முகத்துடன் அவன் நறநறக்க எனக்குள்ளே ஜில்லிப்பு தட்டியது. ஜனங்கள் ஏதேனும் குறையிருக்கிறதா என்று அவனிடம் வினவ ஆரம்பித்தார்கள். அவன் பிரமிளாவினுடைய அப்பாவின் தலைமுடியை பிடித்து கொண்டு ஆட ஆரம்பித்தான். தேம்பியவாறு அவன் துப்புகிற சொற்கள் பிடிபடவில்லை. பிடிப்பட்டிருந்த அவர்  மிகுந்த வலியுடனும், தர்ம சங்கடத்துடனும் அல்லாட சாமி ஏதோ ஏதோ கேட்டவாறிருந்தது. ஆட்களினுடைய நடுவில் நான் வேறொன்றை மெதுவாக அறிந்தேன்.

வாரிப் போட்டது.

அது எனது பிரமிளாவின் விசும்பல் சத்தம்.

அப்பா அப்பா என்ற ஈனத்தில் கசிந்து கொண்டிருந்தாள். விழிகளில் கண்ணீர் துளிகள் துடித்து நின்றன. பயமும் துயரும் ஆட்களுடைய நெரிசலும் அவளை கலைத்து விட்டிருந்தன. நான் எப்போதும் நிறைவெய்துகிற அந்த எழிற்கோலம் இப்போது இல்லை. எந்த பிடிப்புமின்றி பரிதாபகரமாய் அழுதாள். எனக்குள்ளே என்னமோ நொறுங்கியது. அதை போலவே வேறேதோ பொங்கியது. அழாதே அழாதே என்றேன். அது எனக்கே கேட்கவில்லை. அவள் எனது மன்றாடலை கவனிக்கவுமில்லை. மிகவும் நெருங்கி ஆறுதல் கூற தத்தளித்தவாறிருந்தேன். அவளது அழுகை எனக்குள்ளே மிக பயங்கரமாய் எதிரொலிக்க துவங்கி என்னையும் அது அழ வைத்து விடும் என்கிற கட்டத்தில் தாங்க முடியாமல் அவளது கரங்களைப் பற்றினேன். வியர்த்து குளிர்ந்து போயிருந்தது. நன்றாக அழுத்தி "பிரமீ !" என்றேன், ஆதுரத்துடன். ஏதோவென பரபரப்பில் அவள் என்னைப் பார்க்க "ப்ளீஸ் அழாதேப்பா !" என்றேன். "ஒண்ணும் ஆகாது !" என்று சொல்ல முயன்றேன் ஒரு பெரிய மனுஷ தோரனையில். அவள் ஒரு கணம் புரியாதிருந்துவிட்டு புரிந்தவுடன் இன்னும் வேகத்துடன் ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

இந்நிமிடம், இதோ எழுதுகிறேன். இப்போது வரை மறக்க முடியாமல் வதைபட்டிருந்த கணங்கள் அவை.

ஒரு வழியாய் எல்லாம் முடிந்து கூட்டத்துடன் அமர்ந்து சாப்பிடும் போது கூட எனக்குள்ளே அந்த துக்கம் என் நெஞ்சை போட்டு பிசைந்தவாறிருந்தது.

எங்கேயாவது சென்று சத்தம் போட்டு அழ விரும்பினேன்.

வீட்டுக்குக் கிளம்பும் போது, அத்தனை பேரிடமும் விடைபெறும் போது மின்னல் போல அங்கே தோன்றினாள்.

"போயிட்டு வர்ரேன் !" என்று தினறினேன்.

அவளது முகத்தில் அப்போது உண்டான பாவத்தை எப்படி சொல்வேன் இந்த பாழாய்ப்போன வார்த்தைகளால். அவளை முழுவதுமாய் அறிந்த எனக்காக அவள் கண்கள் விரிந்தன. வேறு ஒரு மனிதன் புரிந்து கொள்ள முடியாத கொந்தளிப்புடன் "சரி !' என்றாள். முகத்தில் நிறைவு பெருகி நின்றது.
 
நகரும் போது இன்னும் ஒரு தடவை நான் பார்த்துக் கொண்ட அந்த கண்கள் தான் இன்று என்னுடைய வாழ்க்கை.

ஆதாரம்.

எல்லாமே.

எவனையோ ஒருவனை கட்டி இரண்டு பிள்ளைகளின் தாய் இப்போது. நானும் பல பேரை காதலித்து பலபேரோடு படுத்துமாயிற்று. அவள் இருக்கிற திசைக்கே செல்வதில்லை என்றாலும் அவளது கண்கள் அந்நிமிடம் முதல் என்னை பார்த்துக் கொண்டே இருக்கின்றன. அதன் வெம்மையில் தான் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

என்னையறியாமல் ஒரு பெருமூச்சு வெளியேற சகா " என்ன யோசிக்கிறாய் ? என்றான்.

"ப்ஸ ஒண்ணும் இல்ல !"

இயக்குனர் என்னவோ சொல்வேன் என்று என்னையே பார்க்க இப்போது எதையாவது பேசியாக வேண்டும். என்ன சொல்வது. ஒருவன் வாழ்கை முழுக்க காதலிக்க கண்கள் மட்டும் போதுமென்றா. அதற்கு குருட்டு கிழவர்கள் உதவி செய்ய தேவை இல்லை என்றா.

"சொல்லுப்பா !"

"சார் - தாத்தாங்கள விட்டுட்டு ஒரு குருட்டு பொண்ணு சார் ! பதினாறு வயசு பொண்ணு. நடந்து நடந்து .... அப்படியே தொறந்து வச்ச ஒரு பாதாள சாக்கடைல விழுந்துடறா சார் ... ! என்றேன்.

"மேல சொல்லு ".

"ஹீரோயின் ஓடி  வர்றா. பதறிப் போறா ".

"யோசிச்சு யோசிச்சு  கடசில தன் பொடவைய அவுக்றா சார் !".

அத்தனை பேரும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

"தன்னோட ரெண்டு மொலயும் அப்படியே வெளிய தெரியறது பத்தி கவலையே படாம சாக்கட உள்ளே தன் முந்தானைய வீசி எரியறா !"..

மீதி கதை என்னவாயிருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். அப்படி தெரியாவிட்டால் கூட வெளிவரப் போகிற அந்த திரைப்படத்தில் அந்த காட்சியை நீங்கள் பார்க்கத்தானே போகிறீர்கள்.

                                                                                                                                                                                                                                                         "பார்வை"                                                                                                                                                                                                                                                      ( A  short  story )