Monday, September 26, 2011

பிலிம் காட்டியவர்கள் தொகுதி ஒன்று



கஞ்சிக்கே வகையற்ற மக்கள் திரள் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் விரவி இருக்கும்போது உலகமே கிராமமாய் சுருங்கிவிட்டது எனும் பெருமிதத்தை எப்படி எடுத்துகொள்வது. சினிமாவும் அப்படித்தான். நெருப்பு பற்றி எரிகிற இடத்தில் நின்று மேனாமினுக்கியாய் ஒய்யாரம் பண்ணிக்கொண்டு இருக்கும். ஏனெனில் எதிர்காலத்துக்காக பேசுகிற திராணி அதற்கு கிடையாது. வரலாற்று பிரங்ஜை கிடையாது. நேற்று நடந்ததென்ன என்பதை அறியாதவன் நாளை செய்ய வேண்டியதை பற்றி உணர்வானா?.

ஹரிச்சந்திராச்சி பாக்டரி (2010) மராத்திய படத்தில் 'பிலிம் காட்டிய' தாதாசாகிப் பால்கேவின் ஆரம்ப கால சினிமா முயற்சிகள் சொல்லப்படுகிறது. செய்வதற்கரிய காரியங்களை செய்து முடிக்கிற பால்கேவின் துணிகரங்களை மிகவும் எளிமையாய் சொல்லியிருக்கிறார்கள். சினிமாவை கவனிக்கிற எண்ணம் இருக்கிற எவனுக்கும் இந்த படம் ஒரு விருந்து தான்.  காரணம் இரண்டு மணி நேரம் நாம் கடந்த கால வரலாற்றை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

'பிலிம் காட்டியவர்கள்' புத்தகமும் அந்த மாதிரி ஒரு உணர்வை எழுப்புகிறது. 




உலகாயுதா தேவைகளுக்கு பொருந்துகிறது என்று நினைக்கிறேன். ஜனநாதன் தமிழ் சினிமாவில் முக்கியமானவர். வரலாற்று உணர்வு இருக்கிற ஒரு இயக்குனர். அவரது நல்ல முயற்ச்சிக்கு யோகானந்த் ஓரளவிற்கு பலன் சேர்த்து இருக்கிறார். மகேஷின் டிஜிட்டல் ஓவியங்கள் உயிரோடு இருக்கின்றன. ஒவ்வொரு முகமும் நம்முடன் பேசுகிறது. புத்தக வடிவமைப்பும் சந்தேகமின்றி கச்சிதம். 




ராஜாசாண்டோ, கே. சுப்பிரமணியம், எல்லீஸ் ஆர் டங்கன், கே. ராம்நாத் போன்றவர்கள் இயக்கிய படங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஒரு தலை ராகம் போன்ற பல படங்களை பார்த்த ராக்சி தியேட்டர் பற்றின குறிப்பை பார்த்த போது ஏதோ இழப்புணர்ச்சி. பால்கேவின்  சினிமா  ஆசைக்கே  காரணமாய்  இருந்த     'ஏசுவின்கதை' யை  திரையிட்ட வின்சென்ட் சாமிக்கண்ணுவை பற்றி அறியும் போது பெருமிதம்.

புத்தகம் சிறியது தான்.

முன்னுரைகளில் சொல்லப்படுவது போல இது ஆரம்பமும் தான். 



எனினும் புத்தகத்தின் நோக்கம் விளைவுகளை ஏற்படுத்துகிறது. 'மரியாதை கொடுத்து மரியாதை பெறவும்' என்று டி. ஆர். சுந்தரத்துக்கு சீட்டு எழுதி கொடுத்த பட்டுக்கோட்டையை பற்றி கொஞ்ச நேரமேனும் சிந்திக்காமல் இருக்க முடியாது. அதை போலவே பல பேருடைய குறிப்புகள் இருந்திருக்க வேண்டும். அதாவது அவை குறிப்புகளாகவே நின்று இருந்திருக்க கூடாது.

எப்படியாயினும் சினிமாவை பற்றி அறிய விரும்பும் இந்த தலைமுறைக்கு சில அடிப்படைகளை கோடிட்டு காட்டியிருக்கிறார்கள்.

Wednesday, September 21, 2011

சுழலுகின்ற சில காதல் கதைகள் - 2




ஏரியாவை சேர்ந்த கழக கண்மணிகள் ஒரு டேபிள், குத்து விளக்கு, தோரணங்களையும், அண்ணாவின் புகைப்படத்தையும் எடுத்து கொண்டு வந்து ஒரு ஸ்பாட்டை தேர்வு செய்து பயபக்தியுடன்  ஒரு பூஜை செட்அப் செய்யும் போது சற்று தள்ளி செத்து கிடந்த இளங்கோவை பார்த்தார்கள். அப்புறம் என்ன நடந்திருக்கும். அந்த வருடம் மரியாவால் தன் பிறந்தநாளை கொண்டாட முடியவில்லை. அதற்கு அடுத்த வருடம் டேவிட்டின் மகளும் தனது கணவனுமான மைக்கேலுடன் பிரமாண்டமான ஒரு கேக்கை வெட்டி முதல் துண்டை மேரியின் வாயில் செருகினாள். மேரி யார் ?. உண்மையில் கதை இங்கேதான் துவங்கியிருக்க வேண்டும் . ஏனெனில் நான் திரையில் சொல்ல போவது இளங்கோ மரியாவின் காதல் காவியத்தை அல்ல. மரியாவும் மேரியும் காதலித்தார்கள். நான் சொல்வது சரிதானா ?. மரியா தன் உயிர் வரைக்கும் மேரியை மோகித்தாள், கோபால் சின்னானை மோகித்தது போல.

விளக்குகள் எரிந்தன. நம் மக்கள் தேனை குடித்த நரி மாதிரி இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டேன். அந்த மாதிரி இருந்துவிட கூடாது என்கிற சிரமத்துடன் புனிதா (இறுக்கத்துடன்) சென்று எனக்காக பாப்காரன் வாங்கி வந்தாள். நான் சமரசமாய் படத்தை பற்றி ஏதேனும் முனக பார்த்து அது சரியாய் வரவில்லை. எனவே "பாப்காரன் அருமையாய் இருக்கிறது" என்றேன் தயக்கமில்லாமல்.

"விஷயம் தெரியுமா "

"என்ன?"

"உன் நண்பர் வந்திருக்கிறார் படத்துக்கு".

"யார்? "

"இந்த படத்தின் இயக்குனர். அருள். மக்களோடு மக்களாய் அமர்ந்து படம் பார்த்து அவர்களுடைய மன நிலையை கணிக்க வந்திருக்கிறார்".

"பேசினாயா?"

"வேறு வழி ?"



அருளை பற்றி சொல்லலாம். அதற்கு இங்கே இடமில்லை. ஏதோ பாடல் காட்சியை படம் பிடிக்கிற நேரத்தில் சுவிட்சர்லாந்திலிருந்து எனக்கு தொலை பேசினது தான் கடைசி. படத்தின் கதையை பற்றி கொஞ்சம் பேசினான். அவனுக்கு நக்சலைட்டுகளை பிடிக்கவில்லையாம். அவர்கள் இந்த தேசத்துக்கு அச்சுறுத்தலாய் மாறிக்கொண்டு இருக்கிறார்கள் என்றது உள்துறை அமைச்சர் சொல்லுவது மாதிரியே இருந்தது. இந்த தேசத்துக்கு எனது பங்கு என்ன என்று அவன் யோசித்திருக்கிறான். அப்போதுதான் இந்த படைப்பு அவனது மூளையில் பொறி தட்டி இருக்கிறது. நீ ஏன் வலைதளத்தில் காந்தியை பற்றியும், அகிம்சையை பற்றியும் எழுத கூடாது என்று கேட்டான். படம் விட்டு போகும் போது இருவரும் சந்தித்து கொள்வோம் என்று நினைக்கிறேன். குறைந்த பட்சம் புனிதாவிடமாவது கருத்து கேட்க வேண்டாமா?.

திரையில் இப்போது ஹீரோ சொற்பொழிவை ஆரம்பித்தான்.

ஹோட்டலுக்கு புதிதாய் வந்து சேர்ந்த தியாகராஜன் கூட ஒரு ஹீரோதான். ஏறக்குறைய பல விஷயங்களை தெரிந்து வைத்திருந்தான். அத்தனை பேரும் ஈர்க்கபட்டார்கள். முக்கியமாய் சின்னான். அது மட்டுமில்லாமல் இருவருக்கும் சமவயது. சின்னானுக்கு தியாகுவின் பெண் அனுபவங்கள் பிரமிப்பாய் இருந்தன. கோபால் தற்கொலை செய்து கொள்கிற அன்று நடந்தது என்ன. எழுதும் போது கவனமாய் இருக்க வேண்டும். கொஞ்சம் வரிசைப் படுத்தி பார்க்கலாம். கோபால் நெக்குருகின நிலையில் இருக்கிறான். ஊரிலிருந்து வந்த கடிதம் மனதின் சம நிலையை குலைத்திருக்கிறது. அமைதியாய் உட்கார முடியவில்லை. கொஞ்சம் வேதனையுடனும், கொஞ்சம் கிளர்ச்சியுடனும் வானொலி கேட்டு கொண்டு இருக்கிறவர்களை கடந்து கச்சடாவாய் கிடந்த சமையலறை பகுதிக்கு வந்தான். அதனை பேரும் இருக்க தியாகு அண்ணா எழுதிய ஓர் இரவு படத்தின் கதையை கொக்கரிப்புடன் சொல்லி கொண்டு இருக்கிறான். கோபால் கவனிப்பது சின்னானை. அவன் முகத்தில் தான் எவ்வளவு ஆர்வம் ?. ஏதோ வழிபாடு செய்கிறவனை போல அல்லவா தியாகு முகத்தை பார்த்திருக்கிறான்?. இயலாமை நெம்பியது. இந்த உலகில் ஒற்றை மனிதனாய் தனித்து நிற்பது சரேலென்று தலையில் அடிக்க, நிற்கிற பூமி கால்களுக்கடியில் நழுவிற்றோ? சம்பந்தமில்லாமல் டேய் என்று கத்தினான். அனைவரும் பார்த்தார்கள். பாத்திரங்களை கழிவி வைக்காமல் என்ன வெட்டி பேச்சு  மயிரு என்று அவன் வாய் கேட்டது. அனைவரும் சிரிக்கிறார்கள். ஏன் ?.சின்னான் அந்த லவடேகபாலிடம் என்ன புரு புருக்கிறான்?. இவன் என்னவென்றே புரியாத வார்த்தைகளை துப்பி ஆடும் போது நெருங்கி வந்த சரக்கு மாஸ்டர் தேவடியா மகனே என்று எட்டி உதைத்த போது வேறு உலகத்தில் வந்து விழுந்த மாதிரி இருந்தது. சின்னான் உள்பட அத்தனை பேரும் சரக்கு மாஸ்டரை போலவே தென்பட்டார்கள். ஒரு கணத்தில் கோபால் தன் அம்மாவை நினைத்து கொண்டான். அடிபாவி நீ மட்டும் ஏகாம்பரத்துக்கு வைப்பாட்டியை இல்லாமல் இருந்து, ஒருவேளை ஒரே ஒருவேளை ஒழுங்காக சாப்பாடு போட்டு இருந்தால் மெட்ராஸ்க்கு வண்டி ஏறி இருப்பேனா? இப்படி கண்டவனிடம் அடி வாங்கி இருக்க வேண்டி வருமா. போடா அந்தாண்ட என்றான் சரக்கு மாஸ்டர். இவன் உறைந்து சிந்தனையே இன்றி வெறித்து கொண்டு நிற்க "நீ கதய சொல்லு தியாகு" என்று சின்னான் கேட்பது இடி இடித்தது. நகர்ந்து போய் ஒரு பெஞ்சு மீது படுத்து கொண்டான். கண்களை இருக்க மூடி கொள்ள வர்ணங்கள் சுழன்றன. தூக்கமா அது? மயக்கமா? சற்று நேரத்தில் யாரும் இல்லை. சுவரின் மீது கொழுத்த பல்லி ஒன்று தலையை தூக்கி பார்த்தது. யாரையாவது கொல்ல வேண்டும் என்பது போல முறுக்கேறி விருட்டென எழுந்தான். ஓடிச் சென்று கத்திகளை பரப்பினான். இதில் எது சரி என்று ஒவ்வொன்றையும் எடுத்து பார்க்கும் போதே மனசின் ஒரு ஓரத்தில் தளர்ச்சியாயிற்று. பல்லை கடித்து கொண்டு திரும்பி வந்தான். நின்றான். பார்த்தான். ஒரு பரவச சிரிப்புடன் நீ சாவனுண்டா என்றான். அவன் பாத்துக் கொண்டு நின்றது கிணற்றில் தெரிந்த தனது நிழலை. சரசரவென கயிறை உருவிக் கொண்டு கம்பிகளுக்கு அப்பால் தெரிந்த வானத்தை பார்த்து சவால் விடுவது மாதிரி சொடக்கு போட்டான்.

மாட்டிக் கொண்டு செத்துப் போனான்.

நான் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டேன். 



மரியா இளங்கோவை விரும்பினாளா?. கிடையாது. தன்னை பார்த்தாலே விருவிருப்படைந்து,உதடுகள் துடிக்க, செயலற்று நிற்கும் இளைஞன். பேசும் போது வார்த்தைகள் உடைந்து மூச்சு திணறுகிறது. அது ஒரு பெருமிதம் அல்லவா? எப்போதேனும் அவன் இயல்பாய் இருப்பது போல தெரிந்தால் இவளுக்கு ஏதோ திகு திகுவென எரியும். அவனுக்கு அந்த துணிச்சல் வரக்கூடாதே என்று பட படத்து போவாள். உடனடியாய் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொண்டு அவனை நுட்பமாய் கொத்துவாள். ஒரு மரவட்டை மாதிரி அவன் சுருளும் போது உண்டாகிற ஜிலு ஜிலுப்பை  யாரிடமும் சொல்ல முடியாது. ஆனால் ஆக்னஸ் மேரி வந்து இவளை தலை கீழாக்கிய பிறகு இளங்கோவை பற்றி மாற்றி யோசித்திருக்கலாம். என்னவென்றால், டேவிட்டின் குடும்பம் பெரும் பகுதி நேரத்தை இவள் வீட்டில் தான் கழித்தார்கள். மைக்கேலுக்கு மரியாவை கட்டுவது என்று பெரிய மட்டத்தில் பேச்சு முடிந்து, அந்த விஷயம் குஞ்சு குளுவான்களுக்கெல்லாம் தெரிந்து இருந்தது. தனது தமையனை மணமுடிக்க போகிற பெண்ணாயிற்றே என்கிற வாத்சல்யத்தால் ஆக்னஸ் தன்னை அடிக்கடி வருடிக் கொடுப்பதாய் மரியா நினைத்தாள். ஒரு முறை ஏதோ பேசும் போது தலை அசைத்து கேட்டிருந்தவள் இவளை தன்னோடு அணைத்து தலையை அழுத்தி கொண்ட போது அவளின் முலை காம்பு விறைத்திருந்ததை அறிந்தாள். மரியா ஆக்னசின் கண்களை ஏறிட்டு பார்க்கும் போதெல்லாம் திடுக்கிட்டு, தொடைகளுக்கிடையே குளிர் ஏற்படுவதை நம்ப முடியாமல் திகைத்தாள். சில நேரம் மற்றவருடன் இணைந்துக் கொண்டு வீட்டுக்கு வராமல் ஆக்னஸ் தவிர்க்கும் போது மரியாவுக்கு அவள் தன்னை பழிவாங்குவதாகவே தோன்றும். ஜப்பானிய முதலாளிகளின் பெருமைகளை பற்றி வள வளவென்று கதை சொல்கிற மைகேலின் முகத்தில் ஆக்னசுடைய ஜாடைகளைத்தான் இவள் துழாவிக் கொண்டிருப்பாள். இறுதியில் அந்த இரவு வந்தது.

"தூங்கலையா? "

"ம், தூங்கணும்."

"அப்புறம் எதுக்கு என்னையே பாத்துக்கிட்டுருக்கே?. நான் ஒன்னும் மைகேல் இல்ல. ஹ, ஹ."

மரியாவுக்கு சோகமாயிருந்தது. நாகரிகமாய் விலகி படுத்து கண்களை மூடி கொண்டாள். எனக்கு என்ன வேண்டும்? மனசை முன்னகர்த்த சிரமமாயிருந்தது. நிற்கும் இடத்தில் வட்டம் போடுவதால் சீக்கிரமே தூக்கம் மூடியது. ஒரு கட்டத்தில் இனம் தெரியாத ஒரு இழுப்பில் ஒன்றுக்கு பெய்து விட்டதை போல திடுக்கிட்டு விழிக்க ஆக்னஸ் தன் நாவால் இவள் வாயில் துழாவிக் கொண்டிருந்தாள். உடல் பூராவும் புல்லரிக்க, தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது தாமரை. ஒடுங்கினாள். குறுக்கிகொண்டாள். கண்ணீர் விட்டாள். ஆனால் ஆக்னஸ் ஒரு சூறாவளி. ஓத்தா, ஒரு ஆம்பளைய போல மரியத்தை பிரித்து மேய்ந்தாள். பொங்கி பெருகிய தேனடையை ஒருத்தியால் இப்படி ருசித்து சாப்பிட முடியுமா. அணையுடைந்து போய் வியர்வை வெள்ளத்தில் இடிக்கிற சுவாசத்துடன் அம்மணக்கட்டையாய் தன்னை பரப்பிக்கொண்டு கிடந்தாள் மரியா. ஆக்னசுக்காக நான் செத்து கூட போவேன் என்று அப்போது மனசில் பட்டது. கடைசி வரை மரியா அதை மாற்றிக் கொள்ளவில்லை. ஒரு வேளை இந்த ஆராதனை அவள் மனசுக்குள் ஏறவில்லையென்றால் இளங்கோவுக்கு இப்போது அவள் மனைவியாக கூட இருந்து இருக்கலாம். அந்த படுபாவி பயல் தெருவில் கிடந்தது செத்து ஒரு வருடத்துக்கு அப்புறம் மைக்கேலை திருமணம் செய்ய வேண்டியதாயிற்று. மொத்தம் நாலு தடவையோ, ஐந்து தடவையோ மரியம் மன்றாடி கேட்டும், கதறி அழுத பிறகும் தான் ஆக்னஸ் படுக்கைக்கு வந்தாள். சே,சே செய்த பாவத்தை திரும்ப திரும்ப செய்து பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்வது நியாமா? மைக்கேல் அவளுக்குள் ஒரு தோல் குடுவையை நுழைத்து அசைத்து கொண்டிருந்தபோதும் பக்கத்து அறையில் படுத்திருக்கிற ஆக்னசுக்காக அவள் மனம் ஏங்கியது. ஆக்னஸ் தான் காதலித்த பையனை வீட்டுக்கு கொண்டு வந்த போதும், அவனையே திருமணம் செய்து கொண்ட போதும் இவள் அலைக்கழிந்தாள். நறு நெய்ப் பூசி குளித்துக், உடம்பை ஓடுகின்ற நதிநீர் போல பரிசுத்தத்துடன் வைத்திருந்து நான் ஈரத்தோடிருக்கிறேன் என்று  சொல்லாமல் சொன்ன போதும் ஆக்னஸ் ஏன் பாறாங்கல்லாய் இருக்கிறாள்?. இல்லை, அதுகூட இல்லை. புருஷனாய் வந்த அந்த நாயிடம் கொஞ்சி கொண்டு, தோல் குடுவையை உள்வாங்கி சந்தோஷப்பட்டு கொண்டு.......   என்ன வாழ்கை இது?. இளங்கோவை போலவே மரியமும் பேச்சிழந்தாள். மரக்கட்டைகளுக்கு கர்ப்பம் உண்டாகுமா. மலடி என்ற பேச்சு வலுத்தது. மைக்கேல் இந்த சாக்கை வைத்து நிறைய ராத்திரிகளில் வெளித் தங்கினான். நிர்பந்தம் ஏற்பட்ட போது குடித்து விட்டு கற்பழித்தான். ஒரு சவம் கரை ஒதுங்குவதை போல மரியா தாய் வீடு போய் சேர்ந்தது வரை இக்கதையை விவரிக்க முடியாது. எனெனில் ஒரு திரைக்கதை அதை தாங்காது. எனினும் வேறு ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். மரியாவின் கண்களில் தட்டுப்படுகிற மாதிரி ஆக்னஸ் ஒரு இடத்துக்கும் வரவில்லை. இரண்டு பிள்ளைகளை பெற்று அதற்கு சோறுட்டி, சூத்து கழுவி, ஸ்கூலுக்கு அனுப்பி, வீட்டில் உள்ள ஆம்பளை கழுதைக்கு எல்லா சேவைகளையும் செய்து  கொண்டிருக்கிற பல பெண்களில் அவளும் ஒருத்தியாக ஆகி விட்டிருக்கலாமில்லையா?.



இங்கே கதாநாயகன் தேசத்தின் பிரச்னையை தனியொரு ஆளாய் நின்று தீர்த்துக்கொண்டு இருக்கிறான். க்ளைமாக்ஸ் பைட்! நிமிர்ந்து நெட்டு முறித்து கொண்டு எழுந்து கொள்ள தயாரானேன். திரையில் இருந்து இறங்கி வந்து என்னை போட்டு ஒதைத்து விடுவானோ என்று கூட பயமாயிருக்கிறது. கூடவே நானும் ரொம்ப பண்ணிக் கொள்கிறேனா என்று சந்தேகமாகவும் இருக்கிறது.

இரண்டு கதைகளையும் கோர்க்க வேண்டும். நிறைய பேருக்கு ஆபாசம் என்றால் குமட்டல் வரும் அல்லவா. எது ஆபாசமென்கிற வரையறை பல கோணங்களிலும் தெளிவாகாமல் இருக்கிறது. எனவே சற்று எச்சரிக்கையுடன் செயற்படுவது உத்தமம். மரியா மனநல விடுதியில் சில நாள் சிகிச்சை பெற்றதுக்கு பின்னர் அவளை சகஜமாக்குகிற முயற்சிக்காக வெளியே அழைத்து வந்து பராக்கு  காட்டி கொண்டு இருக்கும்போது வீட்டார் எதிர்பாக்காத விதத்தில் அந்த சம்பவம் நடந்தது.

பத்து பேரை பிடித்து தள்ளாமல் ஒரு அடி முன்னகர முடியாத அந்த மனித கடலில், இடுப்புக்கு கீழே இருந்த துணியை அவிழ்த்து ஜனங்களுக்கு தன் குறியை சுட்டி காண்பித்தவாறு அவள் அல்லேலூயா சொன்னது எதற்க்காக? மனித மூளைக்கு இதை விளக்கி சொல்கிறா மாதிரி நான் எதையெல்லாம் எழுத வேண்டும்? யாராவது ஒரு கதாநாயகன் இதை எல்லாம் முடித்து வைத்து விடுவானா?



நானும் புனிதாவும் தப்பித்து போக முடியவில்லை. அருள் மிக சரியாய் என்னை வழிமறித்தான்.

"எப்படி இருக்கிறது என் படம்?"

"ம்"

"இடைவேளையில் புனிதாவை பார்த்தேன். சொன்னீர்களா? என்று கேட்டு விட்டு "பாதி படத்துக்கே என்னை உச்சி குளிர்ந்து பாராட்டினார்கள். இதோ பாருங்கள். மக்களும் கூட அதைதான் பிரதிபலிக்கிறார்கள். ஒரு வழியாய் வெற்றியை அடைந்து விட்டேன்" என்றான்.

"நல்லது"

"நீ ஏதோ திரைகதை முயற்ச்சியில் இருப்பதாக கேள்விபட்டேன். என்ன கதை?"

நான் ஒரு கணம் திகைத்தேன். என்னை அறியாமல் என் வாய் "காதல் கதை தான்" என்றது. "ஆனால் அது காதல் கதைதானா என்றும் தெரியவில்லை" என்றேன்.

தலையில் அடித்து கொண்டு "ஏன் இப்படி இருக்கிறீர்கள்?" என்றான்.

நான் புனிதாவை பார்த்து சிரிக்க முயன்றேன். அது ரொம்ப பரிதாபமாய் இருந்திருக்க வேண்டும்.


 









 

Tuesday, September 20, 2011

சுழலுகின்ற சில காதல் கதைகள்



எனக்கு இரண்டு கதைகள் தெரியும். இரண்டு பேரை பற்றியது. அவர்களுக்குள் எந்த சம்மந்தமும் இல்லையென்றாலும், இரு கதைகளுக்கும் பொதுவான ஒரு சரடு இருக்கிறது. ஆனால் எழுத வேண்டிய என் திரைக்கதையை எங்கே இருந்து துவங்குவது. அதற்கு என்ன நோக்கம்? சில நேரங்களில் நமக்கு எழுத்தாளனின் பம்மாத்து தெரியும். நிலைக்கண்ணாடியில் நான் என்னை கூர்ந்து பார்ப்பேன். உன்னை நீ என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? சரி, சரி, என்னிடம் இருக்கிற சரக்கு ஒரு பிடி மாற்று குறைந்ததாக இருந்தாலும் கோபாலுடைய கதை திரையில் வந்தாக வேண்டும். வரிசையில்  நின்று கொடி குத்தி கொள்ளுகிற பிணங்களை காறி துப்ப வேண்டுமென்றால் ஒழுங்கு மரியாதையாய் எழுது. மரியாவின் பாத்திரத்தில் ஒழுங்குபடுத்தக்கூடிய ஏதேனும் நடிகையை பற்றி யோசித்திருக்கிறாயா?. ஏனென்றால் காணும் பொங்கலன்று வர்த்தகப் பொருட்காட்சியில் நின்று இடுப்புக்கு கிழே இருந்த துணியை அவுத்து போட்டவள் அவள்.

"என்ன யோசிக்கிறாய்?."

"ம்?"

படம் போடுகிற நேரமாகி விட்டது. உள்ளே செல்லலாமா?"

"வா !"

புனிதா படம் பார்ப்பதை கொஞ்ச நேரம் வெறித்திருந்து விட்டு திரையில் கண்களை வைத்தேன். கமிஷனர் நகரில் பரவுகின்ற தீவிரவாதம் பற்றி சொல்லி கொண்டிருந்தார். வேறு நடிகரை போட்டிருக்கலாம். இந்த ஆள் கூட்டி கொடுப்பவனை போலவோ, எச்சிலை தின்கிறவனைப் போலவோ இருகிறார். இல்லை, ஒரு விதத்தில் வேஷ பொருத்தம் சரிதான். பல்வேறு அசௌகரியங்கள் இடைவிடாமல் தொந்தரவு செய்ய நெளிந்து கொண்டிருந்தேன். திரையில் முதல் காட்சி என்ன? ஒரு வெள்ளைப் பேப்பரில் பிள்ளையார் சுழி போடுவது போல வந்தது. மக்கி போன பொருட்கள் நிறைந்த ஒரு அறையில் சில்லாய் இருக்கிற ஒரு கண்ணாடியை பார்த்து கோபால் தன் முகத்தில் பவுடர் போட்டுக் கொள்கிறான். அது ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமாயிருக்கிறது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியாது. வாயை இரு பக்கமுமாய் இளிக்கிறான். பற்கள் சுத்தமாக இருக்கின்றன. ஆனால் உமிக்கரி ஈறுகளை கிழித்திருக்கிறது. நடு நெற்றியில் விபூதியை வைக்கும் போது மன்றாடுகிறது மனம். பாரம் கூடி தொங்குவது போல என்னது நெஞ்சுக்குள் ?. ஆனால் பயப்பட கூடாது. உரத்துடன் இரு. கண்களை நேருக்கு நேராய் பார். மீசை வைத்த ஆண் மகனாய் இரண்டொரு வார்த்தைகள். சின்னான் சிரிக்க வேண்டும். அவனது சிரிப்பை நினைத்த மாத்திரத்திலேயே கோபால் நடுக்கமுற்றான். அந்த நடுக்கம் போகாது. அவனுக்கு தெரியும். தளர்த்தும். வயிறெரிய செய்யும்.  கேண கூதியானை போல மூலையில் நிறுத்தி படபடப்பை உண்டாக்கி அடி வயிற்றில் மூத்திரம் முட்ட வைக்கும்.

முருகா.

புனிதா கைகுட்டையால் கண்களை ஒற்றிகொள்கிறாள். நாயகி காதலின் பெருமையை பாடி சொல்வது புரிகிறது. சினிமா என்பது கூட்டு முயற்சி ஆதலால் நிறைய பேர் கண்ணா பின்னாவென்று உழைத்திருக்கிறார்கள். ஒளி ஓவியம் ஜம்ப் கட் எல்லாம் இருக்கின்றன. படத்தின் காஸ்ட்யும் டிசைனைர் வெளிநாட்டை சேர்ந்தவர் அல்லவா? ஏதோ தினசரியில் அந்த செய்தி வந்திருந்தது.

"படம் பார்கிறாயா ? "

"ம்"

விதியென்னும் நூலாலே விளையாடும் பெண்மை விஷமாகி போனாலே எது வாழ்வில் உண்மை ? நல்ல வரி. இல்ல? 



"ம், ம்."

அது ஒரு சின்ன ஓட்டல். ஆனால் அக்காலத்தைய மன நிலை வேறு. என்னதான் நகரமாய் இருந்தாலும் வெளியில் சாப்பிடுவது என்றால் கொஞ்சம் பம்மல் தான். அதனால் சின்ன ஹோட்டலையே பெரிய ஹோட்டலாய் சொல்ல வேண்டும். அது போல அங்கே சாப்பிட வருகிறவர்கள் சற்று உல்லாசக்காரர்களாய் தான் இருக்க முடியும். ஒரு சர்வர் என்பவன் மிகுந்த மரியாதையுடன் பிழைப்பு பண்ண கடமைப்பட்டவன். ஆயினும் கோபால் விறைப்பாய் இருக்கிறான். சாப்பிட வருகிறவர்களுக்கு அவன் கண்டிப்பு பிடிக்கவில்லை. முதலாளி அவனது நடத்தையை ஓரக் கண்களால் சேகரித்து கொண்டிருக்கிறார். ஒரு கண இடைவேளைக்கு தவித்து அது கிடைத்ததும் எச்சிலைகளை குழியில் போட வருகிற சின்னானிடம் "பசி எடுக்கிறா மாதிரி இருந்துச்னா மாஸ்டர் கிட்ட சொல்லி ஒரு காபி குடிச்சிக்கோ" என்கிறான்.
 
சின்னானாக நடிக்க வருகிறவன் பதினான்கு வயதை தாண்டக்கூடாது. மூக்குக்கு கீழே மஞ்சளித்த சிறு ரோம வரிசை. ஒரு தெற்றுப்பல் ?. கண்டிப்பாய் ஓரிரு முகப்பரு. முகத்தில் வழிகிற எண்ணையை, அழுக்கு திட்டுக்களை ஊடுருவினால் அறிந்து கொள்ள கூடிய யவ்வனத்தின் குஜால். அசட்டை. முதன் முதலாக கோபால் உன் பெயரென்ன என்று சாதாரணமாய் கேட்ட போது கூட சின்னான் தனது பெயரை சிரிப்போடு சொல்லுகிறான். அந்த சிரிப்பு ராவிக்கொண்டே இருக்கிறது. அது வாழ்வை சாபமாக வரம் வாங்கி வந்த கோபாலை யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும். அது அவனது ஊரை, சாதியை, கூடபிறந்தவர்களை, இதுவரையிலும் நாய் போல வாழ்ந்த வாழ்க்கையை உருட்டிக் கொண்டே இருக்கிறது. சின்னானுடன் மல்லுகட்ட முடியாமல் அவனை வெறுத்து வெறுத்து இறுதியாய் அவனது புறக்கணிப்பையே சுகமாய் எடுத்து கொள்ள ஆரம்பித்தவுடன் வாழ்க்கை மீதே கூட கவனம் இன்றி போயிற்று. முதலாளி திட்டினால் பதிலுக்கு கேள்வி கேட்டான். கோபாலுக்கு என்ன ஆச்சென்று பல்வேறு வதந்திகள் உலாவிய போது உள்ளுக்குள்ளே அவன் செத்து பிழைத்தவாறு இருந்தது ஒரு ஆளும் அறியாத ரகசியம். ஆனால் தியாகராஜன் வேலைக்கு வந்து சேர்ந்து அத்தனை பயல்களுக்கும் சினிமா கதை சொல்ல ஆரம்பித்து சின்னானை தன் படைத்தளபதி மாதிரி வைத்து கொண்டதும் கோபால் உடைந்தான். விதியென்னும் நூலாலே விளையாடும் பெண்மை விஷமாகி போனாலே எது வாழ்வில் உண்மை. இது என்ன பாட்டு ? இதுக்கு என்ன அர்த்தம் ? இப்படியெல்லாம் எதற்கு பாட்டு எழுதுகிறான்கள் ?.

அட,

அடுத்த பாட்டு ஓடி கொண்டிருக்கிறது.

திரையில் இரண்டு கால்களையும் விரித்து தனது மேடிட்ட சாமானை நம் முகத்தின் மீது ஒற்றி எடுப்பது போல ஆடி செல்கிற பெண்ணை மரியா பாத்திரத்துக்கு கேட்க முடியாது. கதை கேட்டு முகம் சிவந்து விடுவாள். தமிழ் ரசிகர்களை அவமானப் படுத்த நான் தயார் இல்லை என்று அவள் பொருமக் கூடும். சமரசத்துக்கு உட்பட்டு கீழே இறங்கி வருகிறவளாய் இருந்தால் ஒரு பெரிய தொகையை கேட்பாள். அந்த தொகையில் மரியா மாதிரி நான்கு பெண்களை பற்றி படம் எடுக்கலாம்.



எவ்வளவு சிம்பிளான விஷயம் தெரியுமா? என் மரியா ஒரு அழகி. அழகிகளுக்கு இருக்க கூடிய குழப்பங்கள் சாதாரணமானது இல்லை. அவளை எல்லா பையன்களும் காதலிக்க விழைந்தார்கள். அதனால் அவளுக்கு மினுக்கவும், குலுக்கவும், தளுக்கலாக இருக்கவும் தெரிந்தது. யாராவது ஒரு ஆள் சற்றே அடக்கி வைக்க இருந்திருக்க வேண்டும். இல்லை. அவளது அம்மாவும் அப்பாவும் அவளை கிளி கிளி என்று அழைத்தார்கள். கிளியோபட்ராவின் சுருக்கமாம் அது. அல்லேலுயா !. கிளி உலகத்தை புரிந்து கொள்ளாமல் தத்தி தத்தி தன்னையே ரசித்து கொண்டிருந்த போது சர்ச்சுக்குள் வந்து இளங்கோ குட் மார்னிங் என்றான். அவனது இதயம் இடித்து கொள்வது இவளுக்கு கேட்டது. பாவம் என்று அனுதாபப்பட்டு இவள் எல்லோருக்குமான ஒரு புன்னகையை கட்டவிழ்த்து விட அவன் அதை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு இவளது சகோதரனுடன் போனான். அதற்கு பிறகு அவனுடன் வீட்டுக்கு வந்தான். மரியாவின் அம்மா கொஞ்சலுடன் ஐஸ்கிரீம் கேட்டாள். அவன் பண்டல் பண்டலாக நொறுக்கு தீனிகளையும் விருந்து பொருட்களையும் கொண்டு வர ஆரம்பித்தான். இதல்லாம் பல இடங்களில் நடக்கிற கதைதான் இல்லையா? அந்த பயல் இளங்கோ ஒரு கால் பந்தாட்டகாரன். அதனால் ஊர் மெச்சும் வேலை கிடைத்து ரொம்ப செழிப்பாய் இருந்தான். சம்பளமாய் வந்த பணத்தில் பாதிக்கு பாதி மரியாவின் வீட்டில் கொட்டி விட்டு கொந்தளிக்கிற லவ்வை தாக்கு பிடிக்க ஆகாமல் குடிக்க கற்றுக்கொண்டான். நிம்மதியை கண்ணால் பார்த்தால் போதும் என்று ஏங்க வேண்டி வந்ததால், கூட சேர்ந்து குடிப்பதற்கு பத்து பேர். இளங்கோவின் வீட்டில் பெரியார் படம் மாட்டி வைத்திருந்தாலும் அவனது அம்மா தன் பக்கத்து வீட்டுக்காரியை தீர்த்துக்கட்ட பாஷா பாயை பார்க்க போகிறவள். அவரால் அவளும் பேய் பிசாசு, சைத்தான், சூனியம் போன்ற பல பிராந்தியங்களில் உலவினாள். வீட்டில் அதை தன் மகன்களுடனும் பரிமாறி கொள்ள தவறுவதில்லை. இளங்கோ மாச சம்பளத்தை ஏதோ வேதக்காரிகள் குடும்பத்திற்கு படியளந்து கொடிருக்கிறான் என்று கேள்விப்பட, "அடேய் படுபாவி !. அவுங்க உனக்கு மருந்து குடுத்திட்டாங்கடா" என்று பிலாக்கணம் வைக்க ஆரம்பித்தாள் . இவளும்  தன் பங்குக்கு நடு வீட்டில் குழி தோண்டி சக்கரங்களை புதைக்க ஆரம்பிக்க இளங்கோ திகிலுடன் தன் லவ்வை தீவிரமாக்கினான். காற்று வேறு பக்கம் வீச ஆரம்பித்தது. புயல் போல் நுழைந்தது டேவிட்டின் குடும்பம். அவர்கள் பத்து பேருக்கும் அதிகமானவர்கள். தினம் தினம் ஆட்டுக்கறியுடன் விருந்து. ஒரு நாள் இந்த பய்யன் யார் என்று ஒரு கிழம் கேட்க மரியாவின் அம்மா "இனிமே எதுக்கும் வீட்டு பக்கம் வராமயே இரு" என்று கிசு கிசுத்தாள். இவன் மரியாவிடம் நடக்கிற அநீதியை பற்றி சொல்லலாம் என்று பார்த்தால் அவளோ மைக்கேலுடன் நடனமாடிக்கொண்டிருந்தாள். யாரும் இவன் வாங்கி வந்த கேக்கை பிரித்து பார்க்கவே இல்லை.

இளங்கோ வழுக்கி கொண்டு வெளியே வந்தான். நடக்கிறோமா, ஸ்கேட்டிங் செய்கிறோமா என்று அவனுக்கே சந்தேகமாக இருந்தது. ஒலிப்பெருக்கியில் அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா பாடிகொண்டிருந்தது. பின்னால் வருகிறவரை எல்லாம் கும்பல் சேர்த்து கொண்டு குடி வாங்கினான். மூழ்கி குளித்தும், யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை. அதற்கு அப்புறமும் பேசவில்லை. வேலைக்கு போகவில்லை. நேராய் சென்று குடித்து விட்டு மரியா வீட்டு தெருவில் எப்போதும் அவன் இருந்தான். நின்று, உட்கார்ந்து, இறுதியாய் படுத்து கிடக்கிற நிலமைக்கு ஆளானான். அவனது வீட்டார் கடத்தி சென்று பராமரித்தாலும் அவனை கட்டுபடுத்த தோதுபடவில்லை. விட்டு விட்டார்கள். அநேகமாய் அவர்கள் அவனை மறந்தே போனார்கள். இளங்கோவை தாண்டி மரியாவின் குடும்பம் டேவிட்டின் குடும்பத்தோடு சர்ச்சுக்கு, சினிமாவுக்கு, கோவாவுக்கு, கோடம்பாக்கத்துக்கு போயிற்று. அவன் இமை கொட்டாமல் பார்த்து கொண்டு நின்றானே தவிர எவ்விதமான வன்முறையையும் பிரயோகிக்கவில்லை. என்னிடமே ஒரு முறை உள்ளங்கையால் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்பது போல செய்தது ஞாபகம் இருக்கிறது. அதிர்ச்சி தாங்காமல் நான் ஐந்து ரூபாவை கொடுத்து விட்டு ஓடி வந்திருக்கிறேன்.
 
ஒன்றிரண்டு வருடங்கள் போயிற்று.

ஒரு நாள் இரவு உடம்பெல்லாம் வெடவெடக்க இளங்கோ தன் வீட்டு கதவை தட்டி இருக்கிறான். வீட்டில் உள்ளோர் பீதியுடன் பார்த்திருக்க "அம்மா என் உடம்புள்ள அஞ்சாறு பேய் ஏறி இருக்குமா. என்ன எப்பிடியாவது பாய் கிட்ட சொல்லி காப்பாத்தும்மா" என்று கதறியிருக்கிறான். விடியட்டும் என்று சொல்லி ஒரு பிடி சோறை சாப்பிட வைத்து, கம்பளியால் போர்த்தி, அவன் தூங்குவது போல இருக்கவே  விளக்கை அனைத்து விட்டு எல்லோரும் படுத்து இருக்கிறார்கள். நடு இரவில் அவன் வளர்த்த பேய்கள் அவனை எழுப்பி இருக்கின்றன. என்னடா இளங்கோ படுத்து கிடக்கிறாய் என்று கேட்டிருக்கின்றன. உள்ளோடுங்குவது போல் பம்மாத்து பண்ணியிருந்த கடல் பொங்கியது. மட்டமான ஒரு மூட்டை பூச்சி மருந்து டப்பாவை இடுப்பில் எடுத்து மறைத்துக் கொண்டு அவன் தன் சாம்ராஜ்ஜியத்துக்கு திரும்பி வந்தான். ஒரு வேளை கொஞ்சம் சாராயமோ, சப்பியோ, வார்னிஷோ கிடைத்திருந்தால் அவன் அந்த கன்றாவியை குடித்திருக்க போவதில்லை. நெஞ்சிலிருந்து, அடிநாக்கிலிருந்து  ஆத்மா வரைக்கும் வரண்டு கொண்டே போகும் போது வேறு எதை கொண்டு நனைப்பது. அவன் அந்த சனியனை குடித்தான்.

வெட்டி வெட்டி துடிக்கும் போது ஒன்றிரண்டு நாய்கள் பார்த்துகொண்டு நிற்க, விடிந்தது.

திரைகதையில் இந்த நாள் ஒரு முக்கியமான நாள். 



அறிஞர் அண்ணாவை தெரியுமில்லையா,   அவருடைய நினைவு நாள். திரைக்கதை எப்படி போகுமோ தெரியாது. ஆனால் அண்ணா இறந்த அன்று நான் சிறுவன். வானொலியின் நேரடி வர்ணனையை கேட்டு நானும் கூட ரகசியமாய் அழுது கொண்டிருந்தேன். பெரியவர்கள் மட்டும் பகிரங்கமாய் அழுதார்கள். அப்படித்தான் சற்றுநேரம் நின்று அழுது விட்டு ஹோட்டலில் முதலாளியான என் அப்பாவிடம் "எனக்கொரு பொண்ணு பொறந்திருக்குப்பா, நான் ஆஸ்பிட்டலுக்கு போறேன்" என்று சொல்லி விட்டு ஜான் போனார். அந்த பெண் குழந்தைதான் மரியா. {அப்புறம் அன்றைக்கே வேறு ஒரு சம்பவமும் நடந்தது. ஒரு மாபெரும் தலைவரை பறிகொடுத்த சோகத்தில் ஊரே வெறிச்சோடி போயிருக்க, மற்ற பணியாளர்கள் இறுதி சடங்குக்கு போனார்கள். கோபாலை மட்டும் விட்டு விட்டு நானும் அப்பாவும் வீட்டுக்கு போகவே உள்ளே, சமையல் அறையில் கோபால் தூக்கு மாட்டி செத்து போனான். } சரி அதை விடுங்கள். விடிந்தது என்று முடித்தேனா ...

                                                                                                                (தொடரும்)






 


Thursday, September 15, 2011

வாழ்வெனும் நகைச்சுவை


சட்டென்று விழித்துக்கொண்டான் அவன்.

வழக்கத்துக்கு மாறான சந்தடிகளை நுட்பமாக உணர்ந்து கொள்ளக்கூடியவன் தான். ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. ஏன் விளக்குகள் எரிகின்றன. ஆட்கள் கூட அதிகமாக. சட்டென்று புரிந்துவிட்டது. அழுகை சப்தம். ஆமாம், சப்தமாக அலறும் அந்தக் குரல் கோபியின் அம்மாவினுடையது தான். கடவுளே, என்ன ஆயிற்று. கமலிக்குட்டி செத்துப் போய்விட்டாளா ?

இவன் கோபியைத் தொட்டு பார்த்தான். அடப்பாவி, உன் தங்கைக்கு என்னவோ ஆகிவிட்டிருக்கிறது. நல்ல உறக்கம். மனசில் உறைந்த அதிர்ச்சியுடன் கோபியை உலுக்கிப் பார்த்தான். வலுவில்லை. உடம்பில் ஏதோ ஒரு தளர்ச்சி வந்துவிட்டிருந்தது. இப்போது என்ன தான் செய்வது. முணுமுணுப்புடன் ஆண்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். என்ன பேசுகிறார்கள் என்பது சரிவர புரியவில்லை. 'பெரம்பூருக்கு யாரையாவது அனுப்பிவைக்க வேண்டும்' என்று கோபியின் அப்பா சொல்வது கேட்டது. அங்கே சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். இவனுக்கு தெரியும். அப்படியென்றால் ... ?

கமலிக்குட்டி பிறந்து நான்கு மாதங்களாகிறது. அவள் பிறக்கும்போதே நோயைக் கொண்டு வந்திருந்தாள். பூஞ்சையாயிருந்தாள் . தினமும் ரிக் ஷா  வைத்து டாக்டர் வீட்டுக்குப் போய் வருகிறார்கள். கோபியும், இவனும் ஒன்றிரண்டு தடவை கூட போயிருக்கிறார்கள். அவ்வளவு சிறிய உடம்பில் எத்தனை ஊசிகள். கமலிக்குட்டி தன்னுடைய சிறிய வாயை முழுவதுமாய் திறந்து அடிவயிற்றுக்குள்ளேயிருந்து அலறுவாள். கண்ணீர் கொப்புளிக்கும். இவன் அதை மிகவும் நடுக்கத்தோடு பார்த்து நிற்பான். எப்படி சிவந்து போகிறது குழந்தையின் முகம். வலி, அழுகையை சமாதானப்படுத்தி பாலையெல்லாம் புகட்டிய பிறகு கூட திடீர் திடீர் என அவளது உதடுகள் துக்கத்துடன் கோணலாகும். கண்களுக்குள் நீர் ததும்பும். பக்கத்தில் கவனிக்க யாரும் இல்லையென்றால் இவன் மெதுவான குரலில் அந்தக் குட்டிக் காதுகளுக்கு குனிந்து கனிவாய் ஏதேனும் சொல்வான். புரியுமா அவளுக்கு, கமலிக்குட்டிக்கு காலை நேரங்கள் மிகவும் பிடித்தமானவை போலும். நோய்களின் சமிங்ஞை இல்லாத கூர்மைமிகுந்த முகமாயிருக்கும். கண்களை விரித்து நாலாபுறமும் பார்த்துக் கொண்டிருப்பாள். யாராவது சேட்டையுடன் கொஞ்சும் போது சிக்கனமாக சிரிப்பாள் . சிரிக்கும் நேரத்தில் சந்தேகமில்லாமல் பேரழகி அவள். இவனுக்கு கை துருதுருக்கும். எப்படி தன் ஆசையை வெளிப்படுத்துவது என்பதில் நிறைய சந்தேகங்கள் இருக்க, எப்போதும் உறைந்தே இருந்தான். கோபியோ பெருங்கிழவனைப் போல் வெட்கமின்றி ஏதேதோ சப்தங்களால் தன் தங்கையை சிரிக்க வைக்கிறவன். இப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதே இவனுக்கு போதுமானதாயிருந்தது. அப்புறம் கொஞ்சம் அந்தரங்கமாக, கமலிக்குட்டி தன்னை அடிக்கடி ஆழ்ந்து கவனிப்பதாகவும், அங்கசேஷ்டை செய்து வினோத குரல் எழுப்பி அவளை சிரிக்க வைக்கவில்லை என்றாலும் கூட அவளுக்கு தன் மீது விசேஷமான அன்பிருக்கிறதென்றும் அவன் நினைத்தான். தன்னைப் பற்றி கமலிக்குட்டிக்கு தெரியும் என்கிற நினைப்பே பெரும்பாலும் அவனை மௌனமாக்கி நிற்க வைத்தது.
 
அவன் படிக்கிற பள்ளியில் மூன்றாம் வகுப்பின் ஆசிரியைக்கு உட்கார்ந்து தூங்கும் பழக்கமுண்டு. எல்லோரும் அது பற்றி அறிந்துவைத்திருந்தார்கள்.    தூங்குகிற ஆளை எழுப்பி, அது அதிர்ச்சியோடு குச்சியை தூக்கி அடிக்க வந்து விடாமல் கிசுகிசுப்பாய் பேச கற்று வைத்திருந்தார்கள் எல்லோரும். இவன் தன்னுடைய கமலிக்குட்டியை பற்றி வரதராஜபெருமாளிடம் சொல்வான். எப்போதும் கோவிலில் கிடைக்கிற சுண்டல் கடலையைப் பற்றி பேசும் பெருமாள் இவன் சொல்வதை சரிவர காதுகொடுத்து கேட்பதில்லை. அதனால் என்ன, இவன் தான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி விடுகிறவன் தான். இந்த பெருமாளுக்கு ஏன் கமலிக்குட்டியினுடைய சிரிப்பு விளங்கமாட்டேன்கிறது. ஒரே ஒரு தடவை என்னோடு வந்து பார். அப்போ தெரியும். இந்த உலகத்தில் சுண்டல் என்பது அவ்வளவு பெரிய விஷயமா.

மணியடித்து, பள்ளியை விட்டு வீட்டுக்கு வருகிற வழியில் அன்று ஒரு நாகலிங்க மலர் கிடைத்தது. அளவில் மிகப் பெரியது. கம்பீரமாக மணத்தது. இப்போது தான் மரத்தில் இருந்து உதிர்ந்திருக்க வேண்டும். நல்லவேளை, யாரும் மிதிக்கவில்லை. அவனுக்கு கமலிகுட்டியின்  ஞாபகம் வந்துவிட்டது. அவளுக்கு இதை இப்படி சுற்றி சுற்றி காட்டினால் சிரிப்பாளோ. மர நிழலில் உட்கார்ந்து கிழங்கு விற்கும் அந்த பாட்டி இவனிடம் தனது வழக்கமான  பல்லவியை பாடினாள். 'போட்ரு, வீட்டுக்கு கொண்டு போனியானா நாகம் ஒன்னத்தேடி ஒன் வீட்டுக்கே வந்துரும். 'பொய், பொய். அப்படியெல்லாம் கிடையாது. எத்தனையோ தடவை வீட்டுக்கு கொண்டு போய் விளையாடி இருக்கிறான். எதுவும் வரவில்லை. ஆனால், இப்போது சற்று பயமாய் இருந்தது. கமலிக்குட்டி தன் கையில் நாகலிங்க பூ வைத்து விளையாடிக் கொண்டிருப்பதும், பக்கத்தில் ஒரு நாகம் படமெடுத்து நிற்பதும் ஒரு காட்சியாய் வந்தது. சின்ன நடுக்கம் ஏற்பட்டது. வராது தான். நிச்சயமாக வராது. இருந்தாலும், இருந்தாலும் அவன் பூவை தூக்கி எறிந்து விட்டான். கமலிக்குட்டியின் முன்னால்  நின்று மெளனமாக தனது முட்டாள்தனம் பற்றி யோசித்து புன்னகை செய்தான். அவளுக்கு விளையாட்டுக் காட்ட என்னென்னவோ பொருட்கள் இருந்தன. யாரிடமும் நாகலிங்கம் பூவைப் பற்றி சொல்ல முடியும் என தோன்றவில்லை. மனசு எதெற்கோ கஷ்டப்பட்டது.

கமலிக்குட்டியின் கண்கள் அவனுக்கு ரொம்பவும் பிடித்து போயிற்று. அவள் எல்லோரையும் போல அல்லாமல் உள்ளே இருக்கிற கருமணிகளைப் போட்டு எப்போதும் உருட்டுகிறாள்.

அவளுக்கு பால் வேண்டுமென்றால் அந்த குட்டிக் கண்கள் தா, தா என்று பேசுகிறது. வாயால் பேசுகிற வயது தான் இன்னும் வரவில்லையே. கண்கள் பே சுகின்றவை தாம். நிஜமாகவே அவன் தன் அம்மாவை அறிவாள். அப்பாவை, அண்ணனை அறிவாள். இவன் தன்னைப் பற்றி அவள் நன்றாக அறிவாள் என்பதை அந்த கண்களுக்குள் புகுந்து பார்ப்பதன் மூலமாகவே நம்பிக்கொண்டிருந்தான். சாயந்திரமாவதற்குள்  குளிப்பாட்டி, பவுடர் அப்பி, பொட்டிட்டு, கண்களிலும் மை தீட்டி வைத்திருப்பார்கள். தூக்கம் போட்டு அழுத்துகின்ற நேரம் அவளுக்கு அது, மூக்கு கொர், கொர்ரென்று உறுமும். எப்போதேனும் திடுக்கிட்டு முழித்துப் பார்க்கிற அந்த கண்களில் மிகுந்த சோர்வு தெரியும்.  தூங்காமல் இருந்தால் எரிச்சலோடு இருப்பாள். விளையாட்டு காட்டுகிற கோபியை பார்த்த உடன் கிரீச்சிட்டு கத்தி தன் எதிர்ப்பை தெரிவிப்பாள். பால் கூட குடிக்கமாட்டாள் போல. அவளுடைய அம்மா உடனே தனது முலைகளை ரவிக்கைக்குள் திணித்து கொள்ளுவதை இவன் பார்த்திருக்கிறான். அவளுடைய நோயை புரிந்து கொண்டு இடைஞ்சல் செய்யாமல் தான் பார்த்துக் கொண்டு இருப்பது அவளுக்கு எப்போதும் தெரிந்திருக்கலாம். ஒரு தைரியம் கூட கிடைத்திருக்கலாம்.

யாரிடம் சொல்லுவது இதையெல்லாம். மூத்திரமோ, மலமோ வெளியேறி ஈரமாகும் போது பயங்கர எரிச்சல் வந்துவிடும் அவளுக்கு. எல்லாம் துடைக்கப்பட்டு சுத்தமாகி உலருகிற வரை அந்தக் கண்களில் பாவம், நிம்மதியே இருக்காது. சீக்கிரம், சீக்கிரம் என்று மனசுக்குள் படபடத்துப் போவான் இவன். யாருக்கு தெரியும் அது. சுத்தம் செய்கிறவர்கள் மிகவும் சாவகாசமாக செய்வார்கள். அவளுடைய கஷ்டத்தை புரிந்து கொள்ளமாட்டார்கள். அவளுக்கு சட்டென்று நிம்மதியை கொடுத்து விடமாட்டார்கள். அவன் எப்போதும் தனது மனசில் பெரியவர்களை சபித்தான். அவளை அழவைத்து, சுரனை இல்லாமல் பொறுமையாயிருக்கிற அவளுடைய பெற்றோர்களைக் கூட பெரும்பாலும் வெறுத்தான், சே, எப்படிப்பட்ட ஆட்கள் இவர்களெல்லாம்.

அவன் தனது கற்பனையில் வெகுதூரம் போவதுண்டு. அவனது மார்பில் காம்புகள் முளைத்து பால் வழிந்தது. கமலிக்குட்டியின் எச்சிலில் குழைந்து பெருகின அவை. அவளை தனது மடியை விட்டு இறக்க முடிவதில்லை. அவளது உடலெங்கும் அவன் வருடிக் கொடுத்தான். கமலிக்குட்டி, கமலிக்குட்டி என்கிற ஒரே உச்சாடனத்தில் அவன் தான் சொல்ல வேண்டியிருப்பது அனைத்தையும் சொல்ல அவளுக்கு எல்லாம் புரிந்து கொண்டிருந்தது. அவனுக்கு இவையெல்லாம் மிகுந்த ஆசுவாசத்தைக் கொடுத்தன. சுற்றி கேட்கின்ற குறட்டைச் சத்தங்களுக்கு நடுவே தூங்காத இரவுகள் இனித்தன. பள்ளியில் இருக்கும் போது நேருகின்ற பிரிவு சற்று பெருமையாகவே இருந்ததோ.

நேற்று இரண்டு மூன்று தடவை ஹாஸ்பிட்டலுக்கு போய் வந்தார்கள். காலையில் கூட அவள் சோர்வாக தான் இருந்தாள். சிரிக்கவே இல்லை. கண்கள் நொந்து போயிருந்தன. எனினும் அவை என்னவோ சொல்லின. என்ன ஆயிற்று கமலிக்குட்டிக்கு. தெரியும். அதுதான். அவளுடைய  அம்மா ஏன் அழ வேண்டும். ஏன் இவ்வளவு ஆண்கள் கூட்டம். எல்லோருக்கும் இது பற்றி தெரியுமா. அதனால் தான் அவனுடைய அம்மா அவள் இருக்கின்ற அறையில் ராத்திரி படுத்து கொண்டார்களோ. எப்படி தூங்கி போனேன். எப்போது இப்படி ஆயிற்று. ஐயோ, செத்துதான் போய் விட்டாளா கமலிக்குட்டி..
 
இவன் எழுந்து உட்கார்ந்தான். இப்போதே அவளைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையை அடக்கி தூக்கத்தில் இருந்து விழித்த சின்னப் பையனாகவே நடந்து கொள்ள வேண்டியிருந்தது. இவன் கண்களைக் கசக்கி நடிப்பை துவங்கிய அடுத்த கணத்திலேயே யாரோ படுத்துக்கோ தம்பி, தூங்கு என்றார்கள். அடப்பாவி, எனக்கு தெரியும் என்னால் தூங்க முடியாது. என் கமலிக்குட்டி செத்துப் போய்விட்டாள். நான் படுக்க மாட்டேன். அவனுடைய அப்பா வந்து அருகே குனிந்து 'என்னடா, படுத்துக்கறது தானே' என்றார். 'கோபி தூங்கறான் பார் படுத்துக்க' என்றார். அவன் மூர்க்கமாக முடியாது என்று தலையை அசைத்தான். அவனுடைய அப்பா அவனை உற்றுப் பார்க்க அவனுக்கு தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்தது. "மூத்திரம் வருது" என்றான். "சரி எழுந்துரு"

எழுந்தவன், அழுகைகள் பீறிட்டு வெளியேறும் அறையை பார்க்க முற்பட்ட போது அப்பாவின் வலுவான கைகள் அதை தடுத்து விட்டன. அனைத்துக் கொண்டிருக்கிற மாதிரியான வன்முறையோடு கூடிய ஒரு நெம்புதலில் இவன் வெளியேற்றப்பட்டு விட்டான். "பெய்டா" என்கிறார் அப்பா. உணர்வுகளை மறைத்துக் கொண்டு உடலின் நடுக்கத்தை அவர் பார்த்து விடக் கூடாது என்று தோன்றியதில் அண்ணாந்து வானத்தைப் பார்த்தவாறே தன் அரைடிராயரை விலக்கினான். வெட்டி எடுத்ததைப் போல துண்டாய் அம்புலியும், கொஞ்சம் நட்ஷத்திரங்களும். " நாயே எங்கே வேடிக்கை பாக்கறே நீ "

மனசு, அழுகையுடன் கூறப்படுகின்ற வார்த்தைகளை மிகக் கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்தது. செத்துப் போய்விட்டாள் என்பதில் சந்தேகமே இல்லை. இனி என்ன செய்ய முடியும். இனி அவ்வளவு தானா. எதுவுமே இல்லையா. தன்னை எதோ ஒன்று வந்து சூழ்ந்து கொண்டு நெருக்கிக் கொண்டிருப்பதை அவனால் அறிந்து கொள்ள முடிந்தது. மூத்திரம் பெய்வதை நிறுத்திக் கொண்டு ஒரு காலடி எடுத்து வைத்து நடப்பதில் கூட ஒரு அர்த்தமும் இல்லையென்று தோன்றிற்று. ஓடிப்போய் ஆவேசமாக கமலிக்குட்டியை வாரி எடுத்துக் கொண்டு அழ விரும்பினான்.

"அப்பா, கமலிக்குட்டி..... "

"என்னது?" அவர் கொஞ்ச நேரம் அந்த திசையைப் பார்த்து கொண்டு யோசித்தார். "வா, நம்ப ரெண்டு பேரும் ஜாலியா போயி பால் குடிச்சிட்டு வரலாம். "

தெருவுக்கு வந்தாயிற்று. எல்லாக் கடைகளும் அடைத்து கிடந்தன. அப்பா எந்த கடைக்கு அழைத்து போவார் என்பது தெரியும். " அப்பா, எனக்கு பால் வேணாம்பா" என்றான். சரி வா சாப்பிடறத்துக்கு ஏதாச்சும் வாங்கி தரேன். நடந்தார்கள். கமலிக்குட்டியினுடைய கண்கள் அடைந்து போயிருக்கும். உருளாது என்றைக்குமே. இனி நாகலிங்கப் பூவை தைரியமாக கொண்டு வர வேண்டியது இல்லை.

அவர்கள் திரும்பிய போது வாசலில் கோபியின் அப்பா கோபியோடு நின்றிருந்தார். இரண்டு அப்பாக்களும் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டார்கள். கண்ணையன் வந்தவுடன்  சதி புரிந்தது. "வாடா புள்ளைங்களா, எங்க வீட்டுக்கு போலாம்" என்றார் அவர்.

கண்ணைய்யனின் வீட்டுக்கு போகிற வழியில் கோபி தன் நண்பனிடம் முகத்தை ஒரு மாதிரியாக வைத்து கொண்டு சொன்னான். " நீ பாத்தியா, எங்க கமலிக்குட்டி செத்து போயிருச்சாம்".

இவன் பேசவில்லை.

கண்ணையா சேரிப்பகுதியை சேர்ந்தவர். பொம்மைகள் விற்கிறவர். கொஞ்சம் இங்கிலீஷ் எல்லாம் கூட பேசுவார். இவனுக்கும் கோபிக்கும் அவர் மீது பிரியம் தான். அவரது வீட்டுக்கு செல்ல கிடைக்கின்ற தருணங்கள் மிகவும் எதிர்பார்த்திருந்தவை ஆனால் ........

"என்னடா எதுவுமே பேசாம வரே ?"

கண்ணையன் தள்ளிக்  கொண்டு வருகின்ற பொம்மை வண்டியில் ஏகப்பட்ட அற்புதங்கள். ஒரு நாள் இவனுடைய கேள்விக்கு கண்ணையன் சொன்னார். அது கொழந்தைடா கிளின்னா என்னன்னு தெரியாது. மோட்டார் சைக்கிள்னா தெரியாது. கொஞ்ச நாள் போவட்டும் அப்புறம் எல்லா பொம்மையும் நம்ம கமலிக்குட்டி வெளயாடறதுக்கு தான். அவனுக்கு ஒன்று தெரிந்தது. இனி மேல் பொம்மைகளோட விளையாட முடியாது.

சூரியன் வந்து விட்டது. ஆட்கள் கண்ணயனிடம் விசாரிப்பது பற்றி புரிகிறது. விதி. ஒரு வார்த்தை மறுபடி மறுபடி அதை சொல்லிக் கொண்டிருந்தான். மனதிற்குள் மனனம் ஆகி வெளியேறாமல் பிடிவாதம் பிடித்தது. விதி எல்லாமே விதி தானோ. கோபி இரண்டு பையன்களுடன் வந்து விளையாடக் கூப்பிட்டபோது கண்ணையனின் மனைவி கொடுத்த இட்லிகளை வழியற்று விழுங்கிய போது, மதியத்தில் பாயை விரித்துக் கொடுத்து தூங்குங்கள் என்று இருவரையும் படுக்க வைத்த போது, விதியால் செத்துப் போன அவனது கமலிக்குட்டியின் பிணம் அவனோடிருந்தது. இனி எதுவும் யாரிடமும் சொல்ல வேண்டியிருக்கவில்லை. உண்மையிலேயே எதுவும் இல்லை. எல்லாம் புரிந்து விட்ட மாதிரி கூட மிகவும் நுட்பமாய் வந்து அணைந்தது உறக்கம்.

சாயந்திரத்துக்கு மேல் அப்பா வந்தார். எதையுமே அறியாத தனது அப்பாவின் வரவுக்கு அவனால் சந்தோஷப்பட முடியவில்லை. தெரியும். அங்கே எதுவும் இருக்காது. கடைசியாக கமலிக்குட்டி மறைந்து விட்டாள். பிணத்தைப் பார்த்த சித்தார்த்தன் கௌதம புத்தனாக ஆன கதை பாடபுத்தகச் சித்திரங்களுடன் யோசனைகளாக ஒரு வார்த்தை பேசாமல் நடந்தான்.

கமலிக்குட்டியின் அறையில் ஒரு தீபம் மட்டும் தான் எரிகிறது.
 
இரவில் அவன் குமுறி குமுறி அழுதான். அது கமலிக்குட்டிக்காக மட்டுந்தானா.

****
நான் புத்தனாகவில்லை.

கமலிக்குட்டிக்காக கடவுளிடம் பிராத்தித்த நான் இன்று பெரியவன். வயது ஆகி விட்டது. கண்ட மாத்திரைகளை விழுங்கி கருவிலேயே அவளது அழிவை எதிர்பார்த்தவர்கள் பற்றித் தெரிந்து கொள்ளாமல் பூமிக்கு வந்து நான்கே மாதங்கள் தங்கி கிளம்பிப் போனவளுக்காக அழுத நான் இன்று எதற்கும் பிரார்த்திப்பதோ அழுவதோ இல்லை. அப்படி அழுவதாகவோ, பிரார்த்திப்பதாகவோ இருந்தால் எதிர்பார்க்கிற மரணம் என்னை வந்து சேர வேண்டுமென்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இருக்கும். வேறு என்ன சொல்வது. இப்போதும் உங்களிடமெல்லாம் சொல்ல எனக்கு எதுவுமேயில்லை.






 

Tuesday, September 13, 2011

காதலென்பது பெருமிதமாய் சொல்லபட்டிருக்கிறது அல்லவா ?




நான் என்னை வைத்துக் கொண்டு
எதையும் கடக்கவில்லை.

விஸ்கி கிண்ணத்தின்
ஆயிரம் மைல் ஆழத்தில்
இரும்பை போல அசைகின்ற
பேரலைகளின் நிசப்த கோஷமா
வாழ்வு ?

தனிமையை  பொத்தலிட்டு
ஒரு பாம்பை போல
ஏறி வருகின்ற இரவு
படுக்கையில் படமெடுத்து
அமர்ந்திருக்க
இந்த வெட்ட வெளியில்
என் கண்ணே
எப்படி நான் உறங்குவேன்?

நீ
தலைகோதி விடுகிற
ஒரு கனிவின் கனவில்
கரு நிழல்களை கலைத்தவாறு அணையும்
மெல்லிசையின் தாலாட்டுக்கு
நான் என்னை தந்திருக்கிறேன்
என்னை காப்பாற்றிக் கொள்ள

உனக்கு வசப்படுகிற பெருமிதத்தை
கைப்பற்றிக் கொள்ள

ஏனெனில் ........