Wednesday, September 29, 2021

 


நுங்கை அடித்து இளநீரில் இறக்கி 

பனித்துண்டுகள் மிதக்கும் போது 

ஒரு அறுபது மில்லி ஓட்கா கலக்கும் 

கைக்கு அடக்கமான குளத்தில் 

நான் எனது முகம் பார்ப்பேன் 


என்னை வெறித்திருந்த காலத்தின் புன்னகையை 

ஏந்தி நின்றவளின் மனம் பார்ப்பேன் 


நாங்கள் பாவிக்காத கத்திகளின் கூர்மை பளிச்சிடும்போது 

அக்குளத்தில் கண்ணீர் அலையடிப்பது 

பார்ப்பேன் 


நார்சிசம் அவமானத்தில் விலகி இருப்பதையும் 

கூட


பார்ப்பேன்.

Sunday, September 5, 2021

 


மலைகளின் உச்சிகளில் இருந்து 

ஒரு கருடப் பார்வையில் 

அந்த மாயநதி தட்டுப்பட்டால் 

கடவுளைக் கொல்லும் சீற்றத்துடன்

அவன் விரட்டுவதில்

அந்நதியை   

கீறிப் பாயுமொரு தோணி,

அது 

கிழக்கு முடிந்து மேற்குக்கு திரும்பும் போது

ஆற்றை வருடிக்கொண்டு வரும் 

இளைஞனின் கண்ணாட்டியும் கற்கண்டுப் பிள்ளைகளும் 

கொண்டு சென்று நட வேண்டிய கடவுளை 

கையில் வைத்து விளையாடுவர் 

அஸ்தமன சிவப்பு மூடுகிற நதியை கனலாக்கி 

இந்த சுருட்டை உறிஞ்சும் போது

ஞானத் தங்கம்  

சுகத்தை தாங்க முடியவில்லை. 

  

   

 


பலாதர் படத்தின் குதிரை 

கணைத்தது

மண்டியிட்டு சமமாக நாயுடன்

குரைத்தான் அந்த ஹீரோ 

கறுப்பு வெள்ளையில் புன்னகைத்த 

பால்யசகிக்கு 

கலரில் முலைகள் வளர்ந்திருக்க

கண்களுக்குள் கண்கள் சந்திக்காமல்  

ஒரு இடறல்

இரண்டாவது குறுக்கு சந்திலிருந்து

ஓரிரு திருப்பங்களுக்குள் 

அவள் தனது மகளின் மஞ்சள் நீராட்டை 

சொல்கிறாள் 

நான் குரைப்பதற்கு போகாமல்

தத்துவம் சொல்ல தாடி கோதினால் 

முறைத்துப் பார்க்கிறது 

மறுபடி கறுப்பு வெளுப்பில்   

பலாதரின் குதிரை 


அட, என்ன தொல்லைகள் பார் 

இவையெல்லாம், ச்சை.


நான் அடுத்த பெக் விஸ்கியைக் கவுத்துக் கொண்டு 

சரியாகப் படுத்தேன்.