Monday, August 26, 2019






ஒன்லைன். 
A short story
Mani mk mani.



அது, கொஞ்ச காலம் முன்னே, அப்படி தொடங்கி வளர்ந்து பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது மழை. இரவு எட்டு மணி இருக்கலாம். மூன்று நாட்களாய் தொடர்ந்து ஒரே மாதிரி பெய்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது சிறு இடைவெளிகள் உண்டு. ரோட்டில் இடுப்பளவு நீர். எல்லா கடைகளும் அடைத்துக் கிடந்தன. ஒரு விதமான அமைதி. பயமாய் இருந்தது. செருப்பு தவறிவிடாமல் இழுத்துக் கொண்டு போன போக்குக்கு போய் ஒரு டிபன் கடையில் அடித்துக் கொண்டு இட்லி கறி வாங்கிக் கொண்டு சிகரெட்டை தேடிப் போனேன். சிகரெட்டுடன் ஒரு பீடிக்கட்டும். அறையை பூட்டுகிற வழக்கம் கிடையாது. திரும்பிய போது சிவா இருந்தான். பரோட்டா குருமா வாங்கி வந்திருந்தான். அவனது அறையில் தண்ணீர் புகுந்திருக்கும்.

கை கால்களை கழுவிக் கொண்டு, ஈர சட்டையை மாற்றினேன். குளிர் அதிகமாகிக் கொண்டே செல்லுவது தெரிந்திருந்தது.

அதே போல மழை சத்தம் பழகி விட்டது.

மின்சாரம் இரண்டு நாட்களாகவே இல்லை. டிவி இருந்த மேஜை, புத்தகங்கள், மற்ற இதரவைகள்  எல்லாம் ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டு புழங்குவதற்கு வேறு ஒரு மூலை மிச்சமிருந்தது. பேரு தான் மூன்றாவது மாடி. விவரம் கெட்ட சன்னலின் வழியே வீசுகிற தண்ணீரை தேங்குவதற்குள் துடைத்தவாறு இருந்திருக்கிறேன். வேறு ஒரு மெழுகு வத்தியை பற்ற வைத்துக் கொண்டு அதிகமாகவே சாப்பிட்டோம். அதே மூலையில் பாய் போட்டு பெட்ஷீட் விரித்துக் கொண்டு வேறு ஒரு பெட்ஷீட்டால் போத்திக் கொண்டு உட்கார்ந்தாலும் ஈரமாக இருப்பது போலவே இருந்தது. முதலில் சிகரெட்டை பற்ற வைத்து அடித்துக் கொண்டு எவைகளையோ பேசிக் கொண்டிருந்தோம். அவைகளில் ஒன்றும் கிடையாது. கடமைக்கு பேசுவது உண்டல்லவா, அது. பொழுது விடிந்தால் டீ குடிக்கவும் காசில்லை. மழையில் யாரை பார்ப்பது யாரை கேட்பது- நூறு சில்லறை கவலைகள். பெரிய கவலைகளை பற்றி சொல்லவே போவதில்லை. பின்னர் பீடிகளை அடித்து தள்ளியவாறு இருந்த போது பேச்சுடன் வந்த அந்தக் கதையை சொல்ல வேண்டியதாயிற்று.

முன்பொரு காலத்தில் கேரளத்தில் மழை வேறு.

முழங்கும். மக்கள் வெளியே இறங்க மாட்டார்கள். செம்மண் ரோடுகளில் பறம்புகளில் பாடங்களில் தோடுகளில் மழை எதிரொலிப்பதை பார்க்கவே முடியாது, புகை பறக்கும். காடு பிடித்துக் கிடந்த பெரிய தோட்டங்களுக்கு நடுவே எங்கேயாவது ஒரு வீடு வரும். அனைத்தும் மூடிக் கிடந்தன. பகல் தான் என்றாலும் எங்கிருந்தும் வெளிச்சம் இல்லை. சம்மந்தமே இல்லாத ஓன்று போல மழை வைராக்கியத்துடன் கொட்டிக் கொண்டிருந்தது. நீலி தனது தோளில் பொதியப்பட்டு படுக்க வைக்கப்பட்டிருந்த மூன்று மாத சிசு இறந்திருக்காது என்று நம்பினாள். அதே நேரம் அது இறந்து போகவும் வேண்டும் என்று தனது அடிமனது தன்னையே வதை செய்து கொள்ளுவதையும் உணர்ந்தவாறிருந்தாள். அவளுக்கு வேகமாய் நடக்க வேண்டும் என்று தோன்றவில்லை. சர்வ நிதானத்துடன் நடக்கிற தன்னை சாயாக்கடை ஆட்கள் வியப்பதை அறிய முடிந்தது. அவர்கள் குடையை விரித்துக் கொண்டு தொடர்கிறார்கள். நடக்க நடக்க மனம் முறுகிற்று. 

விசாரிக்க முற்படுகிறார்கள். ஒரு மேடேறி நீண்டு அது சரிவுக்கு இறங்கும் போது அவள் தனக்குப் பின்னால் பெண்களின் சப்தங்களையும் கேட்டாள். அவளுக்கு அந்த வீடு தெரிய ஆரம்பித்த போது சாமி ஏறிக் கொண்டது. வேகமாய் நடந்தாள். ஒரு கட்டத்தில் ஓடினது போலவும் இருந்தது.

ஆளுயரத்துக்கு மதில் சுவரும் முறைத்துக் கொண்டிருக்கிற மாதிரியான இரும்பு கேட்டும். ஆயினும் கொட்டாரம் போன்ற அந்த வீடு எல்லோருக்கும் தெரியும். மழை புகை போல பரவி காட்சிகளை கலைக்கும் போதும் கொட்டாரத்தின் நனைந்த ஓடுகள் சிவப்பை மினுக்கின. மூன்றாம் நிலையின் மீது ஒரு ஜன்னல் மிக இலேசாக திறந்திருந்தது. மழையை வெறித்தவாறு அமர்ந்திருக்கிற ஒரு மூதாட்டி தென்பட்டாள். நூறு குடைகள் வாசலுக்கு முன்னே விரிந்திருப்பது அவளை சலனப்படுத்தியது. ஒருவேளை அவளது கண்களுக்கு நீலியே கூட தெரிந்திருக்கலாம். அவளது விறைப்பு கவனிக்க முடிவதாய் இருந்திருக்கும். நகர்ந்து மறைந்தாள் கிழவி. மழை நூறு திசைக்கு நடனமாடியது.

அந்த கொடுங்காற்றின் கடும் மழையின் பெரும் சப்தங்களை எல்லாம் மீறி அவள், நீலி முழு வாயையும் திறந்து கூச்சலிட்டதை திடுக்கிடலுடன் மக்கள் கேட்டார்கள்.

ஏமானே !

என்ட ஏமானே !

அந்த அலறலுக்கு சரியாய் சொன்னால் ஜனக்கூட்டத்தின் வட்டம் பின்னுக்கு நகர்ந்தது. கனவு போல மேலும் ஜனம் ஓடி வந்தது. சிறுவர்களும் சிறுமிகளுமெல்லாம் வந்தது எப்படி. இதெல்லாம் அவளுக்கு தெரியவில்லை. அவள் அதே வார்த்தைகளை அதே மூர்க்கத்துடன் தாளம் பிசகாமல் கூவிக் கொண்டிருந்தாள். சில பிரமுகர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்களோ என்னமோ கேட்டை திறந்து கொண்டு உள்ளே போயினர்.

அவர்கள் வெளியே வரும் போது அவர்களுடன் கிழவர் இருந்தார்.

சற்று தாமதமாய் யாரையும் ஏறிடாமல் அச்சுதன் வந்தான். 

என்ன நடக்கிறது இங்கே?

அவள் கிழவரை பார்க்கவேயில்லை. பின்னால் வந்த அச்சுதனை நோக்கி பாய்ந்தாள். அவன் சுதாரிப்பதற்குள் அவனது காலடியில் சிசுவை வைத்து விட்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தாள். அந்த ஏமானே, என்ட ஏமானே வடியவில்லை. ஆனால் இப்போது அபயம் கேட்பதாயிருந்தது. பொதி விலகி மழை சகிக்காமல் வீறிட்ட சிசுவைக்  காட்டினாள். நம்முட உண்ணி நம்முட உண்ணி நம்முட உண்ணி என்று கேவினாள். அங்கும் ஒன்றாய் இங்கும் ஒன்றாய் கேவலுக்கிடையே பலதும் சொன்னாள். தமிழ் தான். அவனுக்காக ஆங்காங்கே சின்ன மலையாளம். சொந்த பந்தம் எல்லாம் சேர்ந்து அடித்து விரட்டி விட்டது. சர்க்கார் ஆஸ்பத்திரியில் ஏச்சுக்கும் பேச்சுக்குமிடையே இந்த இளவரசனைப் பெற்றேன். பிச்சைக்காரியைப் போல ஊர் ஊராய் நடந்து உன் வாசலை தட்டியிருக்கிறேன். எந்தக் காலமும் நான் வழிபட்ட என் தெய்வமே. என்னை தள்ளி விட்டு விடாதே. எனக்கு எந்த நாதியுமில்லை.

கிழவர் நிறைய பார்த்தவராய் இருக்க வேண்டும். ஒரு காலத்தில் அவர் பார்த்த எஸ்டேட்டை தானே மகன் பார்த்தான். முகம் சிவக்க முன்னேறி வந்து தனது கைத்தடியை அவள் முதுகின் மீது இடைவிடாமல் வீசினார். மகனை நோக்கி உள்ளே போடா நாயின் மகனே என்று உறுமிய பின்னர் மேலும் மேலும் அவளது அலறலை பொருட்படுத்தாமல் விளாறினார். சந்தடி சாக்கில் அவரது தடி அந்த சிசுவைக் கொல்லும் நோக்கிலும் பாய்ந்தது. பெண்களெல்லாம் ஹோவென்றார்கள். நீலியின் முதுகில் இருந்து ரத்தம் தெறித்தது. உள்ளே போக முயன்ற அச்சுதனை வாரியெடுத்த குழந்தையுடன் பற்றப் போன போது அவன் அவளை அறைந்தான்.

யாரடி நீ அவலட்ஷணம்?

அவள் கரம் அவனது சட்டையை பற்றியது. அந்த சட்டை கிழிந்து அவள் மேலும் பற்ற அவளை மேலும் அறைந்து ஒருவழியாய் அவன் தப்பித்து உள்ளே ஒடும் வரை கிழவர் அவளை அடித்துக் கொண்டே இருந்தார். ஓடுகிற மழைக் கோடுகளில் அந்த பெண்ணின் குருதி மறைதோடிற்று. அவள் மூர்ச்சையடைந்தாள். வீறிக் கொண்டிருந்த அந்த சிசு அவளது மார்பில் இருந்தது. சூழ்ந்து நின்றிருந்தோர் அவளை எட்டியெடுத்து விடுவர் என்று நெருங்கிய போது கிழவர் கூச்சலிட்டார். எல்லோரையும் போங்கடா நாய்களா என்று சொல்ல அவருக்கு அதிகாரமிருக்கிறது. பெண்கள் கொஞ்சம் முறைத்துக் கொள்ள முண்டுவது போலிருந்தது. ஒரு பெண் கீச்சிட்டது கேட்கவில்லை. அவர் அவர்களோடு மல்லுக்கட்ட நின்ற இடைவெளியில் நீலி வீட்டுக்குள் புகுந்தாள். மறைவாய் நின்றிருந்த பெண்கள் அடித்தார்கள். ஒரு பலா மரத்தின் பின்னால் ஒளிந்தே நின்றிருந்த அச்சுதன் ஓடி வந்து வயிற்றில் எட்டி உதைத்தான். விழுந்தவளை குழந்தையோடு இழுத்து வந்து வெளியே போட்டு விட்டு திரும்பும் போது நீலி அலறினாள்.

அச்சுதா

அவன் திடுக்கிட்டு நின்றான்.

அது வானத்தில் இருந்து கேட்டது போலிருக்கவே அத்தனை பேரும் உறைந்திருந்தார்கள்.

அவளது அடிவயிற்றில் இருந்து இறங்கிய குருதி கால்கள் வழியே நீரில் இறங்கியது.

குளிரில் தடதடத்தவாறு ஒரு முறை அடிவயிற்றை பிடித்துக் கொண்டு குனிந்தாள்.

மழை பிசாசு போல மாய்ந்து கொண்டு அலறியது.

நிமிர்ந்தாள்.

அச்சுதா- இப்போது நடந்ததை தெய்வம் பார்த்தது. தெய்வம் பார்த்ததை நான் பார்த்தேன் அச்சுதா. அவன் நாய்க்கு பிறக்கவில்லையென்றால் உனது கண்கள் தெறிக்கும். எந்த ஒரு பெண்ணின் முகத்தையோ முலைகளையோ உன்னால் பார்க்கவே முடியாது. நீ சேர்த்த சம்பத்து உன் வாரிசுக்கு உதவாது. குல நாசம் அச்சுதா, நீ வேரோடும் வேரடி மண்ணோடும் பூண்டற்றுப் போவாய் !

அவள் இதற்கு பின் ஒரு வார்த்தை பேசாமல் போனாள்.

அந்த மேடேறி நடந்து சரிவுக்கு இறங்கும் வரை  தெரிந்தவாறிருந்தாள்.

பின்னர் யாரும் அவளைப் பார்க்கவில்லை. 

சரிதான். அப்புறம் என்ன தான் நடந்தது?

என்ன நடந்திருக்கும்? அந்த சிசு உயிரை விட்டிருக்கும். அவளால் தனது இனத்துடனும் சேர்ந்து கொள்ள முடிந்திருக்காது. பசி விரட்டியிருந்தால் உயிரை தக்க வைத்துக் கொள்ள அந்த காலத்தில் ஒரே ஒரு மார்க்கம் தானிருந்தது. சல்லடையாய் துளைக்கப்பட்டிருப்பாள். நோய் உருக்குலைத்த பின் நாய் போல திரிந்தலைந்து ஒரு நாள் தெருவில் பிணமாய் கிடந்திருப்பாள். அள்ளிப் போட்டு எரித்திருப்பார்கள்.

அந்த சாபம் என்னாயிற்று? அவ்வளவு தானா?

சொன்னேனே, அந்தப் பகுதியின் மழை மிகப் பொல்லாதது. ஒருநாள் அச்சுதனின் வீட்டில் நள்ளிரவாகியும் ஒருவர் கூட தூங்காமலிருந்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு இடிகள் முழங்கிக் கொண்டிருந்தன. பிள்ளைக் குட்டிகளை அணைத்துப் பிடித்துக் கொண்டு பெண்களும், பெண்களுக்கு பாதுகாப்பாய் ஆண்களும் ஒரே அறையில் இருந்து கொண்டிருந்தார்கள். அப்போது வீடே குலுங்கும் அளவிற்கு ஒரு பெரிய இடி. கண்டிப்பாக அக்கம் பக்கத்தில் தான் விழுந்திருக்க வேண்டும் என்று கிழவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது கூரை மீது தங்கம் ஜொலிப்பதை அனைவரும் பார்த்தார்கள். என்ன சொல்லுவது? கிழவர் ஓடினார்.வீட்டின் நடு முற்றத்தில் அந்த இடி விழுந்திருந்தது. அப்படியே தரை குழிந்து இறங்கி அதற்குள் அந்த நெருப்பு பாளங்கள் தகதகத்தன. ஒரு சந்தேகத்தில் எல்லோரும் மாடிக்கு ஓடினார்கள்.

அச்சுதன் தரை மீது குப்புறக் கிடந்தான். மயக்கம் தெளிவித்த பின்னர் அவனது பார்வையை மின்னல் பறித்துக் கொண்டு போய் விட்டதை அறிந்தார்கள்.

நம்ப முடியவில்லை.

நம்ப முடியாதது வேறொன்றிருக்கிறது.

என்ன?

கொஞ்ச காலத்துக்கு முன்னே ஊருக்கு போயிருந்த போது நான் அந்த ஆளைப் பார்த்தேன். அவர்கள் வீட்டில் நானும் அம்மாவும் கள்ளப்பம் தின்று கருப்பு சாயா குடிக்கும் போது அவர் அந்த அறைக்கு வந்தார். அண்ணாந்து பார்த்துக் கொண்டு எங்கள் குரல்களை கவனித்தார். யார் என்று குடும்பத்தாரிடம் விசாரித்துக் கொண்டு உள்ளே போனார். நான் கொஞ்ச நேரம் பிரமிப்பில் இருந்து விட்டு எங்கள் வீட்டுக்கு திரும்பும் போது அம்மாவிடம் கேட்டேன். நீலியின் சாபம் பலித்து விட்டதே என்றேன். அம்மா எந்த நீலி என்றாள். வயதானவர்கள் இல்லையா? கதை முழுவதையும் சொல்லி நினைவூட்டினேன். வீட்டில் இடி விழுந்து மின்னல் வெட்டி அவருடைய கண்கள் போனது உண்மை தான். அல்லாமல், நீலி பூலி எதுவும் கிடையாது. அப்படியெல்லாம் நடக்கவுமில்லை. நடக்கிற வாய்ப்புமில்லை. அதனால் நீ சொல்கிற இந்த புளுவடியை நான் சொல்லவுமில்லை என்று விட்டாள்.

அடக் கண்ராவியே !

கண்ராவி தான். எல்லாம் நானே உண்டாக்கின கதையோ என்னமோ?

நீ தான் உண்டாக்கியிருப்பாய். உண்மையை சொல்லவா? இந்தக் கதை பாதியில் கை விடப்பட்டிருக்கிறது. நல்ல ஒரு முடிவில்லை.

இருவரும் பேசாமலிருந்து பீடியை புகைத்தோம். மழை இரைச்சலிட்டது. அந்த காலத்தில் நீலி என்று ஒருத்தி இல்லாமல் இருந்திருக்கவே முடியாது.

சிவா, செம்மீன் படம் பார்த்திருக்கிறாயா?

ஆமாம்.

படத்தின் கதை ஒரு நம்பிக்கையை பற்றி பேசும். மக்கள் அதை செய்து காட்டுவார்கள். அதைப் போல தான். எனது நீலி பரிதவித்து செத்துப் போனாள். ஆனால் அவளது மகள் இருந்தாள். அவள் இறந்து போயிருக்கவில்லை. அவள் அச்சுதனை சந்தித்தாள். அவள் தான் அவரை குருடாக்கினாள். அவரது குடும்பத்தை நிர்மூலம் செய்தாள். வேரோடும் வேரடி மண்ணோடும் அந்த தலைமுறையை பிடுங்கிப் போட்டாள். நீலியின் சாபத்தை நிறைவேற்றிக் காட்டினாள் !

என்ன சொல்கிறாய்?

நான் எழுதப் போகிற திரைக்கதை !



**********     

Saturday, August 3, 2019

அவள் அவளை
அலம்பும் போதெல்லாம்
அந்தக் கலவி நினைவு வரும்
அவனது கண்கள் நினைவு வரும்
அவை என்னை கை விட்டு விடாதே என்பதாய்
அத்து மீறியது கொதிப்பாய் வரும்
முகத்தில் தாடையில்
இதழ்கள் என்பார்களே அதனோரத்தில்
குறுஞ்சிரி வருவது தான்
இயங்கும் எவனையும் தளர்த்தும்
மந்திரம்.

ஒரு நாடகத்தின் வசனம் போலவே,
உலகின் நெஞ்சினுள் எரியும் தீக்கொழுந்து
நான் !

அவள் அவளை
அணுகும் போதெல்லாம்
அதே மணம் எழுந்து வரும்
அவனது பித்து கிளர்ந்து வரும்
அடுப்பில் இருக்கிற கறிக்குழம்பை
அவன் சப்பு கொட்டுகிற சப்தம் வரும்
முகத்தில் தாடையில்
இதழ்கள் என்பார்களே அதனோரத்தில்
குறுஞ்சிரி வருவது தான்
இயங்கும் எவனையும் தளர்த்தும்
மந்திரம்

ஒரு நாடகத்திலும் இல்லாத வசனம்,
எல்லோரும் இறந்தொழியுங்கள்.