Monday, November 6, 2023

 



மூன்று 



அவளை எனக்கு தெரியும் 

உலகின் நியாயங்கள் 

கணக்கற்றுத் திரளும் போது

கவனிக்க ஆகாத விஷம்

நாம் வெளிச்சம் பாய்ச்சாத 

இடுக்குகளில் தங்குகிறது

சாமனின் மேல் அம்பு எய்யப்பட்டதற்கு

முட்டுக்கட்டப்பட்ட லாஜிக்கில்

இருந்து வந்தவர்கள் 

எப்போதும் எனக்கு ஆறுதல் கூறுகிறார்கள் 

நானிருப்பது உள்ளேயா, வெளியேவா 

பார்த்து சொல்லு என்கிறாள். 


அவள் நான் உருவாக்கிய ஒரு 

கதாபாத்திரம் தான்

 


நான்கு
பரணில் இருந்தோ
பாதாளத்தில் இருந்தோ
ஒரு சரளைக்கல்லை
நான் எடுத்துக் கொடுத்து அவர்கள்
அதை விற்று
சாப்பிட்டதில்லை
ஏதேதோ வாழ்வுகளின் திருப்பங்களில்
நானறியாமல் புகை போல இருந்து மறைந்ததற்கு
கோப்புகள் பாராமரிக்கிற மரபில்லை
என்றாள்
அவளை எனக்கு தெரியும்
அவள் நான் உருவாக்கிய ஒரு கதாபாத்திரம் தான்
தனிமை பற்றின பேச்சில்
அத்தி மரத்தின் உச்சியில்
தேன் மினுங்கும் ஒரு கனியைக் காட்டியபோது
ஸ்கூல் பையன் எட்டி உதைத்த காலி குளிர்பான டப்பாவை
பார்த்திருந்தாள் அவள்.
All reactions:
Kaveri Ganesh, Cecilia Joseph and 8 others

Tuesday, October 17, 2023

 


இரண்டு 



நான் இறந்து போவது போல 

ஒரு செய்தி உலவிற்று 

என்றாள் 

அனைவரும் கிளர்ச்சியடைந்தார்கள்

உலகின் மகத்தான சொற்கள் அனைத்தும் 

அங்கே உருட்டப்பட்டன 

இனி சாகிற அந்த தினத்தில் தான் அவர்களால் 

விறுவிறுப்படைய முடியும்

அது வரையில் துக்க சொற்களுக்கு 

துழாவிக் கொண்டிருப்பார்கள்   

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே 

வாழ்வாக ஒன்று அறியப்படுகிறது தானே 

அது ஒரு லெங்க்த் ஷாட்,       

கட் செய்ய முடியுமா என்பது 

அவளுடைய கேள்வி 


அவளை எனக்கு தெரியும் 

அவள் நான் உருவாக்கிய ஒரு கதாபாத்திரம் தான்.  

 அவளை எனக்கு தெரியும் 

மிகுந்த பழக்கம் இல்லை

பழக்கம் இல்லாமலுமில்லை 

ஓரிரு புன்னகைகளில் பரஸ்பரம் 

பேச வந்தவை ஏதும் புரிந்து விடும் 

நான் உலகைப் பற்றி பேச விரும்பினேன் 

அல்லது அதன் தடித்த சருமன பற்றி 

புலம்ப விரும்பினேன் 

ஒரு கணைப்பில் அவளால் சப்ஜெக்ட்டை 

மாற்ற முடியும் 

எனவே நான் சொல்ல முடிவது 

எனது காதலைப் பற்றி மட்டுமே 

பதிலாக கொஞ்சம் கண்ணீர் எப்போதுமுண்டு 

அவளை எனக்கு தெரியும் 

அவள் நான் உருவாக்கிய ஒரு கதாபாத்திரம் தான்.      

Sunday, July 9, 2023

 


காடுகளைச் சுற்றி வந்த காலம் 

ஒருநாள் தன்னை முடித்துக் கொண்ட போதும் 

நினைவு தன் பொத்தானை அழுத்தும் போதெல்லாம் 

கண்களுக்குள் பச்சையம் 

உருள்வதோ  நகர்வதோ தெரியாமல் இறங்கிக் கொண்டு 

நெஞ்சுக்குள் கொதிக்கும் 

பசுங்குருதி 


நீ காட்டிலேயே இருப்பவள் என்றாலுமே 

உனக்கு இவைகளைக் காட்ட முடியாது.


Friday, July 7, 2023

 மூச்சு முட்டக் குடித்துத் தூங்கி

ஒரு பாய்ச்சலில் குறுகிய இரவைக் கடந்து

அடிவயிற்றின் மூத்திர முட்டலில்

கழிவறைக் கதவை அதிரடியில் திறந்தால்

உறுமிக் கொண்டு ஒரு புலி

ஹேங்ஓவர் பாச்சுலர்ஸ் போல

ஹா வாழ்வு எத்தனை புதுமை

இப்போது நாம் மைக் டைசனை அடிக்கலாம்

நிலைக்கண்ணாடி நோக்கி சுத்தியலால்

பெயர்த்துக் கொள்ளலாம் நமது முன் பற்களை

ஹா, வாழ்வு எவ்வளவு புதுமை?

நான் என் பொன்னுங்கட்டிப் புலியை

நறுநெய் பூசிக் குளிப்பாட்டி பவுடர் போட்டு

பொட்டிட்டு பட்டுடுத்தி பல்லில் ஓன்று போட்டு

சிரித்தவாறு ஹீட்டரிடுகையில் அது

ஒன்றைக் கரத்தில் எடுத்துக் கொண்டது,

துப்பாக்கி, ஹாண்ட்ஸ் அப்.

ஹா, வாழ்வு எவ்வளவு புதுமை?

வாழத்தான் ஆகவில்லை.


Monday, June 19, 2023

 அன்று அது சாம்பல் நிறமுள்ள

சாயந்திரம், மேகங்கள்

குளத்துப் புழைக்கே இறங்கும்

போலிருந்தன


மழை எங்கோ தூரத்திலிருந்து

வெறித்திருப்பது தெரிந்தே தானோ

இடுப்புக்கு கீழே தன்னை சில்லென வைத்துக் கொண்டது நதி


முழ்கும் போதும் எழுந்து விடுவித்துக்

கொள்ளும் போதும்

நான் நெஞ்சுக் குழியில் ஒரு

பாறையோடிருந்தேன்

விபத்து போல

தொட்டு விடும் தூரத்திலிருந்தும்

எட்டியே இருக்க வேண்டிய மானுட தருணங்களை

வியந்தவாறு.


கருமீன்கள் துள்ளியவாறிருந்து தண்ணீரை

நடுங்க வைத்திருந்த போது

நீ புன்னகைத்த காலத்தின் நொறுங்கின கண்ணாடி சில்லைத் தேடினேன்.


அது உலகு பூராவையும் மினுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காண்.