Monday, July 25, 2011

சகல சீரழிவுகளுடன் கூடிய ஒரு பிரம்மச்சாரியின் அறை. ஒட்டப்பட்டிருந்த காகித பெண்களின் முளைகளும், தொடைகளும் முண்டுகின்ற பின்னணியில் இளைஞன் அவசர அவசரமாய் பணத்தை எண்ணி பரபரப்புடன் சட்டை மாற்றுகிறான்.

மாயமாய் தோன்றுகிறார் ஒரு ஆசாமி.

இளைஞன் ரொம்ப தற்செயலாய் கவனிக்க.

"நான் கடவுள் வந்திருக்கிறேன் !" என்றார்.

இவன் சரியாய் கவனிக்காமல் "ஆங்? " என்று கேட்கிறான்.

"கடவுள் வந்திருக்கிறேன் !".

இது என்ன குழப்பம் என்பது போல இளைஞன் ஒரு கணம் யோசித்து நிற்கிறான். குழப்பமாய் "கந்தசாமி பிள்ளைய பாத்துட்டு போன கடவுளா ?" என்கிறான்.

அவர் தலை குனிகிறார்.

"எதுக்கு இப்ப இந்த பிரத்தட்ஷ்யம் ? அவசரமா வெளியே கெளம்பிட்ருக்கேன் !"

"உன் கூட ஒரு நாள் ".

இளைஞன் விழுந்து விழுந்து சிரித்து விட்டு சட்டென்று அடங்கி " ஓகே.. ப்ராபளம் என்னன்னா நான் ஒரு பிராஸ்டிட்யுட்  வீட்டுக்கு கெளம்பிட்ருக்கேன்.. சரிப்பட்டு வருமா உனக்கு? " என்கிறான்.

கடவுள் ஒரு திருட்டு குழந்தையை போல அசட்டு சிரிப்பு சிரித்து வைக்கிறார்.

கண்டிப்பு குரலில் இவன் " யெஸ் ஆர் நோ " என்கிறான்.

"யெஸ்".

"இப்படியே தான மெயின்டேயின் பண்ணப் போற?.

"ஆமா". 

"கீரிடம், ஆயுதங்க, சீரியல் பல்புங்கள எல்லாம் வெளிய கட்டிராத ஏடாகூடமாயிரும்".

மாலை நேர பரபரப்பு. குளிர்பான வண்டியில் அடிபட்டு விடாமல் கடவுளைக் காப்பாற்றுகிறான் இளைஞன்.  ஒரு பிஸ்ஸா கடையை கடக்கும் போது அவரது வேடிக்கையால் ஆட்கள் இடித்து விட்டுச் செல்கிறார்கள். பிதுங்குகிற அவரை நிலைப்படுத்தி சற்று அதட்டலுடன் " கடவுள்னா ஒரு லாவகம் கெடையாதா?. மூளவளர்ச்சி இல்லாத பய்யன  மாதிரி அநியாயத்துக்கு ஸ்லோமோஷன் !" என்கிறான்.

 வருத்தத்துடன் கடவுள் " ஸாரி" என்கிறார்.

" வா. வா !".

நடக்கிறார்கள்.

காரியாத்தமாய் நடக்கிற அவனை ஊடுருவியவாறே தயக்கக் குரலில் "கல்யாணம் பண்ணிக்கலாமே ?" என்கிறார்.

"சாதிக்கணும். சம்பாதிக்கணும். செட்டிலாகனும்... நெறைய இருக்கு.. !' என்று பெருமூச்சு விடுகிறவன் சட்டென்று ஒரு ரகசியக் குரலில் "அதுமட்டுமில்ல. நான் இன்னும் வயசுக்கே வரலன்னு நெனைகிறாங்க எங்க வீட்ல!. என்கிறான்.

"ஓஹோ ?"

நடக்கிறார்கள்.

இன்னமும் அதிகமான தயக்கத்துடன் " புலனடக்கம் கொள்ளலாமே ?. என்கிறார்.

அவன் நடப்பதை நிறுத்தி விறைப்பாய் அவரை நோக்கி முறைக்கிறான். பிறகு வேறு ஒரு பக்கம் பார்கிறான்.

அவன் பார்க்கிற திசையை அவரும் பார்கிறார்.

சுவர்கள் முழுக்க பெண்கள். பிதுங்கி வழிகிற உடற்பகுதிகள்.

நாக்கைக் கடித்துக் கொண்டு மிகவும் வருத்தத்துடன் மறுபடியும் "ஸாரி" என்று சொல்கிறார்.

அதை அங்கிகரித்தவாறு "விவரந் தெரியாத பொண்ணுங்க கிட்ட மூவ் பண்ணா லவ் பன்னலாம்ங்கிறாங்க. பாப்கார்ன் கொறிச்சு சினிமா பார்த்து சரி விவரந் தெரிஞ்சவங்க கிட்ட மூவ் பண்ணா அப்படி இப்படின்னு டெவலப் பண்ணி கடைசில 'ஆ. எங்க கற்பு என்ன ஆவறதுன்னு ' நியாயம் கேக்றாங்க !".

கடவுள் அவன் கூறுவதற்கு தலையசைத்தது ஒப்பு கொள்கிறார். மானசீகமான குரலில் "செரமம் தான் !" என்கிறார்.

ஒரு இருண்மை பகுதி.

நிழல் முகங்களின் நடமாட்டம். வழக்கமான மர்ம சூழல்.

இளைஞன் ஒரு அலங்காரியுடன் தனி அறைக்குள் செல்கிறான். இவரிடம் கையசைத்து விடை பெற்று விட்டு.

விழித்தவாறு நின்றிருக்கிறார் கடவுள்.

டாபர் மாமி வெற்றிலைச் சிரிப்புடன் தந்திரக் குரலோடு பெரியவரே, "நீங்க செலக்ட் பன்றீங்களா?. என்றாள்.

அவர் பதில் சொல்ல தெரியாமல் பாமரத்தனமாய் குருகுகிறார்.

காட்சியில் இப்போது முப்பது வயதில் இரண்டு மூன்று பெண்கள் சந்தேகமின்றி அவர்கள் தம் முழு திறமையோடு சங்கேத அழைப்பை விரித்து வைக்கிறார்கள். முலைகளும், தொப்புளும், எச்சிலால் நனைக்கப்பட்ட உதடுகளின் கோணல்களும் கடவுளை நெளிய வைக்கிறது.

அப்பெண்கள் நகர ஒரு தாவணிப்பெண். அவளும் நகர பாவாடைச் சட்டையில் ஒரு சிறுமி. சிறுமி நகர எட்டு வயதில் ஒரு சிறுவன். சிறுவன் நகர ஒரு தூய வெள்ளைக் கன்று குட்டி.

ஏதோ ஒரு தெய்வத்துக்கான வழிப்பாட்டு ஊர்வலம் ஒன்று செல்கிறது.

தலையில் துண்டு போட்டுக் கொண்டு ஒரு ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கிறார் கடவுள். ஆக்ரோஷமான வழிபாடாயிருக்கிறது அது. காறித் துப்பியவாறே வந்து சேருகிறான் நம் இளைஞன்.

நடக்க ஆரம்பிக்கிறார்கள்.

கடவுளின் அமைதியைக் கண்டு இளைஞன் "என்ன ஆச்சு ?" என்கிறான்.

கடவுள் ஒன்றும் கூறவில்லை.

அவருக்கு எதிர்ப்படுகிறாள் ஒரு பெண். அவள் பெண்ணில்லை. அழுக்கு மூட்டை. குருபீ. வெறும் எலும்புக் கூடாயிருக்கிறாள். அவளோடு பொருந்தாத சீலைகள் காற்றில் பறக்க அவளோடு இணைந்து வருகிறது ஒரு புழுத்த நாய். பின்னாலே ஓடி வரும் இளைஞன் ஒருவன் அவளை இழுத்துக் கொண்டு இடிந்து நிற்கிற கட்டிடமொன்றில் நுழைகிறான். இரண்டு கால்களையும் பிளந்தவாறு அவள் நடக்கிற நடை உறைக்கிறது.

கடவுள் விதிர்த்து நிற்கிறார்.

இவன் சிரிக்கிறான். "கூட்டத்துல தவறி இங்க வந்துட்டா. அப்புறம் என்ன ? சீரழிவுதான். சீக்கு பிடிச்சிருச்சு. அஞ்சுக்கும், பத்துக்கும் அலையறா!. என்று கூறுகிறான். "சாப்பிடவோ தூங்கவோ அவளால முடியாது. பாதி பைத்தியம் !. கஸ்டமருங்க குடுக்கிற பணத்துல நாய்க்கு பன்ன வாங்கி போட்டுட்டு மிச்சம் பிடிச்சுக்குவா. எதுக்கு தெரியுமா? ". அவனது விபரீத சிரிப்பை பொருட்படுத்தாமல் கடவுள் அவர்கள் ஒதுங்கிய பகுதிக்குள் ஓடுகிறார்.

இவன் வேறு வழியின்றி தொடர்ந்து ஓடுகிறான்.

அவள் மீது படுத்திருந்தவன் பயத்துடன் எழுந்து விலகிச் செல்ல, மல்லாந்திருந்த கால்களோடு இவரைப் பார்க்கிறாள். அவள் வாயிலிருந்து உமிழ்நீர் வடிகிறது. கண்களுக்கு தெரிகிற அம்மனத்திலிருந்து நாற்றம் எழ, கடவுள் மூக்கை பொத்திகொள்கிறார்.

அவள் வாஞ்சையோடு அவரை நோக்கி சிரித்து ரூபாய் நோட்டை எறிகிறாள்.

ஆபாசமான ஒரு அபிநயத்துடன் "வா ! வந்து செய்" என்கிறாள்.

"கடவுளே" என்று வீரிடுகிறார் கடவுள்.

                                                                                      "ஈசாவஸ்யம் இதம் சர்வம் !"
                                                                                                 (A short film's script )




Thursday, July 7, 2011

ருது





தனிமையென்பது ஒரு வெற்றுசொல்
அதற்குள் தீ மூண்டெரிவதில்லை

நிழல் நோக்கி களிப்புறும்
துக்கத்தின் பறவைகள்
அங்கு சிறகடிக்குமா
உலர்ந்த ஊற்று அடைபட்டிருக்க
கண்ணீருக்கும் அனுமதியில்லை

தனிமையென்பது
குழந்தை மீது ஏறும் நாகம்
நூறு சந்தியா ஒன்றாய் முறுகும்
மந்திர வான்
மிதந்தலைந்து மலை சுமக்கும்
பிதுங்கல்
சொந்த ரத்தத்தில் வந்த சகோதரம்
ஒரு தேனியின் ரீங்கரிப்பும் கேட்காத
கானகம்

பூக்கள் இதழ் விரிக்க
அந்த மலை முகட்டில் சூரியன் வரக்காத்திரு
ஒரு வேளை வந்து சேருவது
                                           கடவுளாயிருக்கலாம்                                                





வெட்டவெளி 
 
 
நிஜமாகவே
மிக பெரிய தூக்கம்
இது.

துக்கம்
துக்கமல்ல என்பது

துக்கம்
தன்னையன்றி வேறொரு ஆள்
உணரவே முடியாது என்பதில்
எழுவதே துக்கம்
தட்டிலிருக்கும் அத்தனை பருக்கைகளும்
பகிர்ந்தளிக்கப்பட முடியாதது
துக்கம்
விழுங்க வேண்டிய
குரூரமான
அவமானம் தான்
துக்கம்

அத்தனை கடந்தும்
அது கசிந்து
விளம்பரப்பட்டு விடுவதில்
துக்கம்

எனக்கே  எனக்கென
துக்கமும் இல்லையா என்பது
துக்கம்

Wednesday, July 6, 2011

Is this Cinema ?.




ஜேம்ஸ்பாண்ட் கிளம்பிவிட்டார்.

ஏகப்பட்ட தாகங்களுடன் இருளில் வாய்பிளந்து காத்திருக்கின்ற ரசிகப் பெருமக்களுக்கு பொங்கி வரும் புது நதியாக முலைகள் காட்டி நடனமாடும் அழகிகளின் பின்னணியோடு துப்பாக்கியை சுழற்றிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

'பாண்ட் " என்கிறார் கண்டிப்புடன். " ஜேம்ஸ்பாண்ட்"

பூஜ்யம்,  பூஜ்யம், ஏழின் சிகரெட் ஸ்டைலாயிருக்கிறது. அது எந்த பெண்ணையும்  அசத்திவிடும். வாயில் சிகரெட் தொங்க, ஊடுருவல் பார்வை ஒன்றை உபயோகப்படுத்தியவாறு ப்ரா கழற்றும் லாவகம் உலகின் பிரமிப்பாகிறது.

பளபளக்கும் கார்கள் உலகின் எல்லா வீதிகளிலும் ஓடுகின்றன. உடம்பை அசைத்துக் கொண்டு அசிங்கம் பண்ணி விடாத வெள்ளை கனவான்கள் உலாவும் நட்ஷத்திர சோற்றுக் கடைகளில் அமைந்த நீச்சல்குளங்களில் ஒரு டால்பினின் நேர்த்தி. குற்றங்களை தேடி அலைகிறார் அவர். கோடிகளால் டாலர்கள் உருட்டப்பட்டு நடக்கின்ற சூதாட்டம் அவரை இன்னும் அழகாக்குகிறது. யாராலும் அவர்  இன்னும் எட்ட முடியாத கனவு. அதனால் அவர் அனைவருக்கும் வழிக்காட்டியாகிறார்.

குரூரமான எதிரிகள் வருகிறார்கள்.

விசித்திர வர்ணங்களுடன், வினோத அசைவுகளுடன், அதியச இணைப்புகளுடன் அவர்கள் அடையளம் காட்டப்படுகிறார்கள். அந்த மனிதர்கள் துடிப்பு மிக்க இந்த உலகத்தை எத்தனை அலட்சியமாய் பாவித்து குற்றங்கள் புரியத் துணிகின்றனர் என்பது புரியவைக்கப்படுகிறது.

விடுவாரா நம்ம ஆள் ?

எதிரிகளை பந்தாடிவிட்டு தர்மத்தை காப்பாற்றி விட்ட புன்முறுவலுடன் , மேலும் பந்தாடவேண்டிய க்ளைமாக்ஸ் எதிரியை பற்றின தேடலுடன் ஏதோ சில தேவடியாள்களின் உதட்டைப்பற்றி துப்பு துலக்கலை உறியும்போது  உலகம் தன் தொடைஇடுக்கை வருடிக் கொடுக்கிறது. தர்மத்தை பற்றின பெருமிதம்தான். எப்படிப்பட்டவர் இந்த அமெரிக்க அங்கிள் என்று நம்முடைய குழந்தைகளின் மண்டைக் கோணுகிறது. கிடைத்த பருப்பையும் தயிரையும் மட்டுமே தின்று, மனப்பாடம் பண்ணி தேர்வுகளைத் தாண்டிக் குதித்து ஒரு பிரெஞ்சு கலர் முழுக்கைச் சட்டை மற்றும் கழுத்துப் பட்டையுடன் சோடாப் பாட்டில் மூக்கு கண்ணாடியுடன் நமது அர்ச்சகரின் சீமந்த புத்திரன் சுப்ரமணி மானிட்டரில் முள் கரண்டியால் துழாவி பன்றிகறியையோ, ஒட்டககறியையோ  மெல்லுகிறான்.

தீமையின் மொத்த உருவமாய்  ஒருத்தன். துரியோதனை போல,இராவணனைப் போல.

ஜேம்ஸ்பாண்ட் நெருங்குகிறார்.

கிளைமாக்ஸ்க்கு முன்னால் ஒரு உறுத்தல்.

அந்த விதூஷகன். தெருவில் வாழ்கிறவன். தெருவிலேயே தூங்குகிறவன். சர்க்கஸ்களில் பிதுங்குகிறவன். நட்சத்திர கடைகளுக்கு முன்னே ஒரு காயிதம் பொறுக்கி. கார்களுக்கு குறுக்கே வந்து விழும் சனியன். பசியால் குழிந்த மூஞ்சியையும், தந்திரமான கண்களும் கொண்ட ஜீவி. எவளையாவது காதலிக்க கூட வக்கில்லாமல் எவனுக்காவது கூட்டி குடுத்துவிட்டு போவான்.

சாப்ளின், சார்லி சாப்ளின்.
 
" என்ன செய்வது சார் ? " என்று கேட்கிறார் ஜேம்ஸ்பாண்ட் அமைப்பிடம்.

"உயிர் வாழ வேண்டியது இரண்டு மட்டும் தான். ஒன்று, நன்மை. மற்றொன்று தீமை..."

"ஆம்"

"இதற்கு நடுவில் உண்மை என்ற ஒன்று நமக்கு தேவை கிடையாது" சார் அர்த்தம் மிக்க இடைவெளி விடுகிறார்.

"நீ சூப்பர் ஸ்டார். வளர்ந்து கொண்டேயிருக்கும் தீமைகளை அழித்து கொண்டேயிருப்பாய். நடுவில் எது செய்தாலும் யாரும் கண்டு கொள்ள போவது இல்லை ... "

"ஸோ ? "

" fuck off . kill that basturd !".


 
 

  
 

 


Tuesday, July 5, 2011

விபத்து

 
ஹமீத் வந்திருந்தான்
நன்றாய் இருக்கிறேன்  என்றான்
எத்தனை வருடங்கள் ஆயிற்று
என் பிள்ளைகளிடம் உன்னைப்பற்றி
பேசுவதுண்டு என்றான்

உன்னோடு படித்த  ரசியா
மகள்களை விட்டுவிட்டு
மருந்து குடித்து செத்துப்போனாள்
தம்பி நாயக்கர் பெண்ணோடு போய்
தனியாய்  இருக்கிறான்
ஹயுப்  இப்போ கோடிஸ்வரன்
அம்மாவிடம் உன்னைப்பற்றி சொன்னால் 
சந்தோஷப்படுவார்கள்

அய்யப்பன் மலைக்கு போவதுண்டா
கல்யாணம் செய்யல்லையே கடைசி காலத்தில்
என்ன செய்வாய்
அடேய் காக்காப்பூக்களை அடித்து
எவனோ ஒருவனின் மண்டை கிழிந்ததே
ஞாபகம் இருக்கா
நரைச்சுப் போச்சுடா எனக்கும்
இனி என்ன இருக்கு
வாழ்க்கைல என்னத்தடா கண்டோம்
இப்பவும் நீ அப்படியே தாண்டா இருக்கே

ஆம் ஹமீது
ஆனால் அப்படி இருந்துவிட்டது
விபத்து
வா வந்து கோவிலை கட்டென்று
ஏனோ என்னை கூப்பிடவில்லை
ராமன்