Saturday, October 29, 2022

 



கொஞ்சம் குடி 

கொஞ்சம் கூட நிற்காத '

பேச்சு 

தேங்கின மழைநீரை 

ஒலிக்க செய்து சிரித்து நடந்தே 

அக்கடையில் பலூடா சொன்னோம் 

அரட்டைக்கு கவனம் திரும்பாமல் 

காப்பிக் கோப்பையை வெறித்துக் கொண்டு 

ஒருத்தி 

பத்து வருடங்கள் போனபிறகு வந்த ஒரு மழைநாளில் 

நீரஜா என்கிற பெயரில் அவளை நினைத்துக் கொண்டேன் 

அவளுக்கு மகள் பிறந்தாள் 

நான் பார்த்திராத அவள் வளர்ந்து விட்டாள் 

ஒரு பருவப்பெண் அழகாக இருந்தால் 

அவள் வாய் விட்டு சிரிப்பதாக இருந்தால் 

அவள் நீரஜாவின் மகள் தான்,

எனக்கு சொல்லுங்கள்.     

Friday, October 28, 2022

 



பார்த்தீர்களா ?

அதோ அந்த புல்வெளியில் 

ஊர்ந்து கொண்டு போயிற்று 

ஒரு பாம்பைப் போல 

என்றான்.


அவன் இசையை கண்ணால் பார்த்தாக 

சொல்லுகிறான், மன்னிக்கலாம்.


கடைசி வரை காதில் விழவில்லை என்பதில் துயர்.

அடுத்தது அவன் தன்னுடைய காதலைப் பற்றி 

சொல்லுவான் இல்லையா, யார் காதில் விழும்?

Friday, September 16, 2022

 



ஒருவேளை நகர்ந்தால் மட்டுமே

துலங்கும் சூரியோதயம் போல

சில கண்கள்

உள்ளுக்குள் பேசும்போதும்

உள்ளாடை மாற்றும் போதும்

அடித்துப் பார்த்தவாறு இருக்கின்றன

ரகசியங்களை பரிகசிக்கின்றன

கீழே, கீழ்மையின் சுழிதலை

பெற்றெடுத்த மக்கள் போலும்

சகிக்கின்றன, சகஜமாக்குகின்றன

ஒரு மின்னல் வெட்டின் இடைவெளியில்

வேறு கண்களுடன் சென்றுவிட்டவர்

பற்றி எந்த செய்தியும்

இல்லை.

Thursday, August 11, 2022

 

அட்டப்பாடிக்கு அருகே

சிறிய குன்றின் மீது

அந்தி இறங்கியதும்

பெட்ரோமாக்ஸ் தெரிந்த

இடுக்குகளில் இறங்கினோம்

 

புளித்தாலும் பொழுதின் நரம்பில்

பித்து நுழைத்த கள்ளு

 

இம்முறை குன்றின் மீதிருந்து தெரிந்த விண்மீன்கள் ஒரு அதிர்ச்சி சம்பவம்

 

அவைகள் முற்றுகையிட்டதில்

நான் விரும்பியிருந்த பெண்ணை நினைத்துக் கொண்டதுடன்

அதை அவளிடம் சொல்லவும் செய்தேன்

 

இப்போதெல்லாம் பேசும்போது

என்னை நினைத்துக் கொள்கிறாயா என்பதற்கு பதில்

அட்டப்பாடிக்கு போவதில்லையா என்றுதான்

வினவுகிறாள்.      

Friday, June 24, 2022

 


அடிவயிற்றில் இறங்கின கத்தி 

திரும்ப இழுக்கப்படுவது 

போன்ற கொந்தளிப்புடன் ஒரு 

புன்னகை,

ஒற்றை முலையில் முகிழ்ந்த 

நூறு காம்புகளால் பீயச்சபடும் 

கருணையில் நனையும் ஒரு 

துள்ளாட்டம் 

என்று சிதறியவாறு இருந்ததால் 

அழைத்தேன்.


தொகுக்க கிடைக்கிறேனா 

பார்.

Monday, May 2, 2022

 இரவில் உறங்க செல்லலாம் 

இரவை உறங்க சொல்ல முடியாது 

அல்லியோ மல்லியோ 

ஆயிரம் பூத்து வைத்தாலும் 

திருடன் தேட வேண்டியிருப்பது 

எதுவோ 

யோக்கியர் சுற்றுவது எதுவோ 

அதைத்தேடி வாழ்க்கை 

நூறுமுகம் தரிக்கும்

நூறுநூறு முகம் தரிக்கும் 

நீங்கள் காணாத காட்டில் 

நிலவுண்டு 

நீங்கள் எழுதாத பாட்டில் 

கண்ணீருண்டு 

பகலை தனியாய் கண் கொண்டு அறிவதில் 

பெருமை என்ன ஞானத் தங்கம்?

Monday, March 28, 2022

 தத்தை திரும்பி வந்து விட்டதாம் 

முப்பாட்டன் காலத்தில் 

பாட்டன் காலத்தில் 

அப்பன் காலத்தில் 

வெவ்வேறு தத்தைகள் இருந்திருந்தன

இதே கூண்டில் 

அக்கா சோறு வை 

என்று கிரீச்சிட்டுக் கொண்டு 

கூண்டை சுத்தம் செய்ய திறந்ததில் பறந்து 

நான்கு நாளில் திரும்பியிருக்கிறது 

வேடிக்கை பார்க்க வந்தவர்கள் 

திரும்பிப் போனார்கள் 

சமத்தாக கூண்டில் அமர்ந்த அது 

சமத்தாக சாப்பிடவும் செய்தது 

அக்கா சோறு வை மட்டும் 

சொல்வதில்லை.