Saturday, December 31, 2011

வாய்மையே வெல்லும் என்றால் என்ன ?




பெல் எப்போது அடிக்கும் என்று காத்திருப்பதே ஒரு கிறுகிறுப்பு தான். மிஸ் போன பிறகு மற்றவர்களெல்லாம் ஓடின மாதிரி பாசு ஓட வேண்டியிருக்கவில்லை. ஏன் என்றால் அவனாக வீட்டுக்கு ஓடிவிட முடியாது. குறைந்தது மூன்று நான்கு அறைகளாவது பெருக்கி முடித்து விட்டு தான் ஸ்கூல் ஆயா 'என்னப்பா எல்லோரும் வந்தூட்டீங்களா ?' என்று தயாராகி வரும். தேன்மொழி, கல்யாண சுந்தரம், நூருன்னிசா ஆகியோரை அவரவர் வீடுகளில் சேர்ப்பித்து விட்டு கடைசி கடைசியாய் தான் இவன் வீடு வந்து சேர முடியும்.

ஒரு தடவை நாளைக்கு செய்ய வேண்டிய வீட்டுப்பாடம் என்னவென்று நினைவுப்படுத்திக் கொண்டே பாசு நிதானமாய் தன் 'பெட்டி' யில் புத்தகங்களை அடுக்கினான். ஸ்கேலை பென்சிலை பத்திரப்படுத்தும் போது காலையில் கடித்து விட்டு வைத்த நெல்லிக்காய் அகப்பட்டது. அதை எடுத்து ஒரு கடி கடித்து விட்டு வைத்தான். மென்று கொண்டே தண்ணீர் பற்றி நினைத்தவாறே பெட்டியை மூடினான். பெரிய பசங்க படிக்கும் அஞ்சாங்கிளாசுக்கு பக்கத்தில் தான் தண்ணீர் குடிக்கிற குழாய் இருக்கிறது. நாக்கில் சின்ன அரிப்போடு பெட்டியுடன் எழுந்தவனுக்கு ஒரு திகைப்பு. உற்று பார்த்தான்.

ப்ரௌன் பென்சில். புதுசு. ஒரு பக்கம் ரப்பர் இருக்கும்.

அது யாருடையது என்று அவனுக்கு தெரியும்




ஒரு கணம் யோசித்து நின்றான். முறைப்படி அதை மறுநாள் காலையில் மிஸ்ஸிடம் ஒப்படைப்பது போல் அவனது மனசுக்குள் ஒரு காட்சி ஓடியது. அடுத்த நொடியிலேயே வேறு ஏதோ ஒன்று அவனுக்குள் சில்லிட்டது. அதை  விளங்கி கொள்வதற்குள் அவன் அதை சட்டென எடுத்துக் கொண்டு ட்ரவுசர் ஜேபிக்குள் வைத்துக் கொண்டு விட்டான்.

அக்கம் பக்கம் பார்க்க தோன்றவில்லை. எழுந்து நடந்தான். குழாயின் அருகே பெட்டியுடன் நின்றவனுக்கு தண்ணீர் வேண்டுமா என்று புரியவில்லை. நெல்லிக்காயின் துவர்ப்பு உறுத்தினால் தானே. ஸ்கூல் ஆயா வருவதற்குள் அவன் நூறு முறை தன் டிரௌசர் பாக்கெட்டை தொட்டுப் பார்த்து கொண்டான். வழக்கமாய் கேட் மீது ஏறிக் கொண்டு வண்டியோட்டுவான். இப்போது அதை யோசிப்பது கூட அபத்தமாய் பட்டது.

வீட்டுக்கு போகிற வழியில் நூருன்னிசா உன் பெட்டியில் நெல்லிக்காய் வைத்திருக்கிறாய் தானே என்பது போல எதையோ கேட்டாள்.

பதற்றமாய் இருந்தது.

சுவர் மீது வரையப்பட்ட ராட்டை சின்னத்தை பார்க்கிற மாதிரி அமைதி காத்து நடந்தான். நூருன்னிசா ஞாயிற்று கெழமை வரப்போகிற அப்பாவை பற்றியும் அவரது மிலிட்டரி டிரஸ் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தாள்.பென்சில் ஜேபிக்குள் பத்திரமாய் இருந்தது என்றாலும் இவன் அதை கையால் அமுக்கி பாதுகாத்துக் கொண்டே வந்ததால் அதன் முனை அவ்வப்போது தொடையை குத்திக் கொண்டிருந்தது.

உண்மையை சொல்வது என்றால் பாதுகாப்பு எங்கேயுமே இல்லை.

வீட்டில் பல்வேறு பகுதிகளையும் அவன் ஆராய்ந்தான். அம்மாவோ அப்பாவோ மாமாவோ புழங்குகிற இடங்களே எல்லாம். இந்த பென்சில் எங்கிருந்து வந்தது என்று கேட்க ஆரம்பித்து கடைசியில் இவனை தானே குடைவார்கள். ச்சே, எவ்வளவு பேஜாராயிருக்கிறது இதெல்லாம் ? காலையில் பென்சிலை கொண்டு போய் மிஸ்ஸிடம் கொடுத்து விட வேண்டியது தான்.

நிம்மதி.

பெட்டியில் ரொம்ப சகஜமாய் அதை போட்டு விட்டு தெருவுக்கு வந்தான். பக்கத்து கட்டை தொட்டியில் கை வண்டி இழுக்கிற முருகன் மாமாவின் பிள்ளைகள் இருவரும் இவனுக்கு சிநேகிதக்காரர்கள். பாசு என்று ஆனந்த கூச்சலிட்டார்கள். இவன் போய் ஜோதியில் அமிழ்ந்தான். ஒரு கட்டத்தில் விளையாட்டு உச்சத்துக்கு போய் எதற்கோ வாய் விட்டு சிரித்துக் கொண்டிருக்கும் போது பென்சில் ஞாபகம் வந்து விடவே மூச்சு ஒரு கணம் நின்றது.

எவ்வளவு அழகான பென்சில். நிச்சயமாய் அந்த பென்சிலால் எழுதினால் முத்து முத்தாய் கையெழுத்து வரும். அதை ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும்?

பென்சிலின் மேல்பகுதி எங்கும் ஒரு துண்டு பிளேடால் சீவினான். ப்ரௌன் கலர் கொஞ்ச கொஞ்சமாய் போய் கொண்டிருந்தது. கையில் வைத்து உருட்டி பார்த்தான். சற்று தூரமாய் அதை பிடித்து நிறுத்தி பார்த்தான். பென்சிலையே முனையில் வெட்டி சிறிதாக்கி விட்டால் என்ன. அது தான் சரி. ஒருவராலும் கண்டுபிடிக்க முடியாது. கோலம் கலைந்த பென்சிலுடன் மறுபடி அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்தான். அவர்களுக்கு தெரியாமல் அவன் அந்த பென்சிலை 'பழசாக்க' ஆரம்பித்தான். அழுக்கு மண்ணில் நுழைத்து அமுக்கி அமுக்கி எடுத்து விட்டால் அது புதுசாய் இருக்க முடியாதே. பையன்களோடு விளையாடுகிற மாதிரியே பாவனை பண்ணிக் கொண்டு அவன் பென்சிலை வதம் பண்ணியவாறு இருந்த போது வேறு ஒரு சந்து வழியாய் மாமா வீட்டுக்கு போய் கொண்டிருந்தது தெரிந்தது.

ஒரு மின்னல் தான்.

பாசு ஓடினான் அவரை நோக்கி.

"டேய், டேய், டேய், ஓடாத, மெதுவா மெதுவா"

" மாமா, எனக்கு அங்க இருந்து பென்சில் கெடச்சிச்சு" என்று குதித்தான்.

அவர் அந்த பென்சிலை பார்த்தார். குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா? களிப்புடன் இருக்கிற அவனது முகத்தை பார்த்து அன்பு சுரந்தது. சரி என்பது போல தலையை அசைத்து விட்டு அவனது கரத்தை பற்றிக் கொண்டார். "கை, கால எல்லாம் அலம்பிட்டு வீட்டு பாடம் எழுது. தமிழ், இங்கிலீஷ் ரெண்டும் கொடுத்திருக்காங்க இல்ல? "

அன்று இரவு புதுசாய் இருந்து பழசாய்  மாறின பென்சில் இருந்ததால் மிஸ்ஸுங்க கொடுத்த வீட்டு பாடம் மறக்கவில்லை. ரைட் போட்ட மிஸ் அவனது தலையை தட்டி கொடுத்து நோட்டில் வி குட் போட்டார்கள்.

தண்ணி குடிப்பதற்காக பெல் அடிக்கும். அப்போது வகுப்பில் மிஸ் இல்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த விஜயாவிடம் அவன் "எனக்கு கட்ட தொட்டியாண்ட ஒரு பென்சில் கெடச்சிச்சே" என்றான்.

அவள் அவனையே பார்க்க.

பெட்டியிலிருந்து அதை எடுத்து காட்டினான்.

அவள் அதிர்ச்சியுடன் "ஏய் இது என் பென்சில்" என்றாள்.

அது அவனுக்கு மட்டும் தெரியாதா என்ன. என்னென்னவோ நடந்தது.

பாசுவுடன் மாமாவே பள்ளிக்கு கிளம்பி வந்தார். ஏழெட்டு மிஸ்ஸுகள் நின்றிருக்க, மாமா கொதிப்புடன் பேசுவதை இவன் பார்த்திருந்தான்.

"நான் பென்சிலுக்காக வரல. இவுளுண்டு அழுக்கு பென்சில். ஆனா நீங்க எங்க கொழந்தைய திருடனாக்கிட்டிங்க பாருங்க - அதத்தான் என்னால பொறுத்துக்கவே முடியல. ஏங்க, இந்த பென்சில கட்ட தொட்டியாண்ட இருந்து எடுத்து குடுத்ததே நான் தான்! தெரியுமா?".




எல்லோருமாய் சேர்ந்து விஜயாவிடம் இருந்து அந்த பென்சிலை வாங்கி பாசுவிடம் கொடுத்தார்கள். மாமாவிடம் சாரி சொன்னார்கள்.

பாசு அதற்கு அப்புறம் அடிக்கடி விஜயாவை சைடில் பார்த்து கொள்வது வழக்கம். அவனது திருட்டு கண்களை நேரிடும் போதெல்லாம் அவளுக்கு ஒரு மாதிரியான முழிப்பு வந்தது. அவள் தன்னை தானே ஒரு திருடி என்று நினைத்து கொள்கிற மாதிரிதான் அது இருந்தது.

* * *

"உங்க பேரு?"

"ரமா தேவி"

"எதாவது படத்துல நடிச்சிருக்கீங்களா?:"

"ஆங், பத்து பதினஞ்சி இருக்கும்".

"போட்டோ கொண்டுவந்து இருக்கீங்கல்ல? அதுக்கு பின்னால எல்லாத்தையும் எழுதுங்க. அப்படியே காண்டக்ட் நம்பரையும் எழுதிடுங்க".

நான் சற்று வேலை மும்முரத்தில் இருந்தேன். இருபது நாள் படபிடிப்பு. புதன் கிழமை ஷெடியூல் துவங்குகிறது. இனி செய்து முடிக்க வேண்டிய காரியங்களை வரிசையாய் நினைத்து பார்த்தால் தலையை சுற்றுகிறது. அசிஸ்டெண்ட் என்னிடம் தூக்கிபோட்ட ரமாதேவியின் போட்டோவை பார்த்தேன்.

"டேய், அவங்களை கூப்பிடுறா"

"ஏங்க, ஏங்க இங்க வாங்க".

அவளை நான் ஆழமாய் பார்த்தேன். ஒரு சினிமாக்காரி எப்படி தளுக்காக சிரிக்க வேண்டுமோ அப்படி சிரித்தாள்.  

"ஏங்க உங்க பேரு ரமா தேவிதானா, இல்ல சினிமாவுக்காக வெச்சிக்கிட்டிங்களா ?"

"எல்லாம் வச்சிகிட்டது தான் சார். நல்லதா ஒரு வாய்ப்பு குடுங்க. அம்மா கேரக்டர் குடுத்தா சூப்பரா அழுவேன்".

அவளை அனுப்பி வைத்து விட்டு புகைப்படத்தை பார்க்க அதில் இருந்தது விஜயா தான். அவன் ஏன் என்னை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்? சாகும் வரை மறக்க முடியாமல் நினைத்து கொண்டிருக்க வேண்டியவன் நான் தான். வாய்மையே வெல்லும் என்கிற எனது படத்தின் டைட்டிலை குறிப்பு புத்தகத்தில் நான் திரும்ப திரும்ப எழுதி கொண்டிருந்தது உணர்ந்து திடுக்கிடுகிறேன்.

செல் அடிக்கிறது.

எனது மகன் தான். தனது ப்ளே ஸ்டேஷன் காணோம் என்கிறான். யாரோ திருடிவிட்டார்கள் என்று ஆங்கிலத்தில் விளக்கி கொண்டிருக்கிறான். புகைப்படத்தில் எனக்கு இரண்டாம் கிளாஸ் விஜயா புலப்பட ஆரம்பிக்கிறாள்.

  





  

  

 


 

Wednesday, November 30, 2011

"நவம்பர், இன்று மழை தினம் !"








இது
மழை தினம்.

ஜன்னலுக்கு அந்த பக்கம்
உற்சவம்.
இருப்பினும் எனது வெறிப்பை
சுற்றிச் சூழ்ந்து
சாம்பல் பூக்கிறது

என்ன வேண்டும்
ஒரு கப் தேனீர்,
அல்லது ஒரு கோப்பை விஸ்கி?

எதிர்பாராத தொலைபேசியில் இருந்து
நம்பிக்கையூட்டும் ஒரு அழைப்பு ?

ஒரு பெண்ணின் வம்பளப்பு ?

அடுத்த நிமிடத்தை கூட
புதிராய் வைத்திருக்குமாமே
அந்த வாழ்வின்
ரகசியம் ?

இறந்து போகக்கூடிய தேதி ?

இல்லை
தெரியவில்லை.

குளிர்ந்த மரக்கட்டை மீது
ஊர்ந்து கொண்டிருக்கிறது
அந்த மரவட்டை
மழையின்
ஒரு பகுதியாகவே

மனசுக்கும்
மழைக்கும் இருக்கிற தூரத்தை
அளக்கும் போது
எத்தனை சிறியவன் என்று
வியக்கிறேன்.

கனம்
குறைகிறது.

இப்போது இந்த கவிதையை எழுதி முடித்து
என்னை நான் ஏமாற்றிக் கொள்ள முடியும்.






Wednesday, November 16, 2011

"சிகரங்களின் தனிமை !"




அபரா தூங்கி கொண்டிருந்தாள்.

விஸ்வன் எழுந்தான். அபராவினால் அவிழ்த்துவிடப்பட்டிருந்த தலைமுடியை ஒழுங்கு செய்து சுருக்கமாக முடிச்சிட்டான். வளர்பிறை சந்திரனின் தண்ணோளியில் மினுங்கிக் கிடந்த சாளரத்தின் அருகே வந்து விஸ்வன் நின்ற போது, வியர்வை நனைந்த பின்னங்கழுத்து வெகு நிதானமாயும் ஆனால் ஆழமாயும் பரவியிருந்த காற்றை உணர்ந்தது. அபராவின் கைவிரல் நகங்கள் கூர்மையானவை. அவள் உண்டாக்கின கீறல்கள் இப்போது எரிய ஆரம்பித்தன. வியர்வை ஆறிக்கொண்டிருந்த பகுதிகளில் காற்றின் குளுமை தேகத்தை ஊடுருவதாக இருந்தது. தன்னுடைய நிர்வாணம் தன்னை சிறிதும் கூச்சபடுத்தவில்லை என்பதை தீர்மானம் செய்து கொண்டபின் அவனுக்கு ஆசுவாசமாயிற்று.

கண்கள் தொலைவில் லயித்தன.

மலை முழுக்க நிலவில் தோய்ந்திருந்தது. மரங்கள் தங்கள் விளிம்புகளில் பொன் கோர்த்திருந்தன. அடிவாரம் வெண்பஞ்சாய்  இருக்கிறது. ஆம்.  வெறுமனே பார்த்தால் அகப்பட்டுவிடாத நுட்பமான வர்ண கோடுகள் இரைந்து கிடக்கிறது. கண்மூடி தங்கள் மேனிகளுக்குள் எழுகின்ற நாதத்தை தாங்களே கேட்டவாறு மயங்கியிருக்கும் பரவச நிலை. விஸ்வன் திரும்பி தூங்குகிற அபராவை பார்த்தான். எல்லா கச்சைகளும் அவிழ்ந்த நிலையில் நிர்வாணமாய் கிடந்த உடல் ஒரு சிற்பம் போலவே இருந்தது. சோர்வு. மனிதர்களுக்கு வயிற்று பசி போன்றே உடல் வேட்கையும். வாரி விழுங்குவதுதான். இளைப்பாற தெரியாது. படபடப்பு இல்லாமல் நாதத்தில் லயித்து ஆத்மா நோக்கி பயணிக்க தெரியாது. அடி பெண்ணே. உன் ஆசையும் அதன் முடிவும் அத்தனை சீக்கிரம் முடிந்துபோய் விடுகிறது. கை கோர்த்து, ஆக்கிரமித்து ஒரு விரோதியின் வன்மம் கொண்ட முகத்துடன் மேலேறி வெறியூஞ்சலாடி யோனியால் உறிஞ்சியவள் இதோ அடுத்த நிமிடம் பால்வடியும் சிசுவாய் தூங்கிக்கொண்டிருக்கிறாள்.

விஸ்வன் எழுந்து பெருமூச்செறிந்தான்.

மறந்து போனவை போலிருந்த நினைவுகளெல்லாம் எழுந்து வருகின்றன. இன்னும் எவ்வளவு மதுவை குடிக்க வேண்டும். எவ்வளவு போகத்தில் ஈடுபடவேண்டும்.

எப்போதும் விட்டு விலகாத தனிமை சூழ்ந்தது நெஞ்சில். அடுத்த கணத்தில் அவன் வெறுமையை உணர்ந்தான். இது வழக்கம் தான். பாரம் ஏறியது. கண்கள் அலைபாய்ந்தன. பட்டு தெறிக்கிற எதுவும் உள்ளில் பதியாமல் இவை எல்லாம் என்ன என்கிற துயரம் பொங்கிற்று. எரிந்து எழும்புகின்ற ஒரு நெருப்பு நாவில் வறண்டு மதுவின் ருசியை தேடிற்று. விஸ்வன் தான் அலைகழிக்கபடுகின்ற நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்து லகரிக்கான துடிப்பை சந்தித்தான். என்ன அபத்தம் ?. என்ன குடித்து எதுவாகிவிடும். தனக்குள் எழுந்த இளக்காரத்தில் தானே வெட்கமுறுவதை அறிந்தான். எத்தனை பகுதிகளாக துண்டுபட முடியும் ஒரு மனிதன். வியப்பு தோன்றியது அவனுக்கு. விழுந்து கிடந்த கரும்பாறையில் ஒரு உளியால் தன் தகப்பன் ஒரு உயிரை செய்து கொண்டிருக்க அதை வேடிக்கை பார்த்து நின்ற நிகழ்ச்சி நினைவு வருகிறது.

"வா" என்றான் வாத்சல்யமாக மகனிடம்.

உளியை சின்ன கரங்கள் கொண்டு பற்ற வைத்தான். "ம்" என்றான்.

அதுதான் துவக்கம்.

" விதி" என்று முனகிற்று விஸ்வனின் உதடுகள். ஏதோ அரவம் கேட்டு திரும்பி நோக்கியபோது படுக்கையில் அபரா தன்னை தேடி தூழாவுவதை பார்த்தான். ஒரு சில நிமிடங்களுக்குள் எழுந்து அமர்ந்தாள். "நன்றாக தூங்கிவிட்டிருக்கிறேன். உனக்கு என்ன?" என்றாள்.

"... .... .... "

விஸ்வன் படுக்கையில் அமர்ந்தான். குத்துவிளக்குக்கு முன் சுடர்விடுகின்ற உலோக சிற்பத்தை போலிருந்தாள் அவள். கண்கள் ஒளிர்ந்தன. அவளை ஒரு குழந்தையாய் பார்கின்ற அகங்காரத்தின் பாவத்தை விஸ்வனால் உணர்ந்துக்கொள்ள முடியும். அவன் தன்னை இளக்கி கொள்ள விரும்பவில்லை. இளகினால் ஒரு வேளை தகர்ந்து போய் விடலாம். அவளுக்கும் அச்சம் உண்டாகிவிடும். அவளது கரம் நெற்றியை வருட வரும் போது அதை பற்றி கொண்டு "நீ இன்னும் சற்று உறங்க வேண்டியதுதானே" என்றான்.

"உனக்கு என்ன என்று கேட்டேன்"

"வெளியே நல்ல நிலவு !" 

"குளிர்கிறது" என்றாள். அவனது தோள்களில் சாய்ந்து இறுக்கிக் கொண்டு நிம்மதியற்ற கண்களைப் பார்த்தாள். "இனி நீ ஒரு கலைஞன் அல்ல. மறுபடி மறுபடி மனதிற்கு அதை சொல்லி கொடு. ஞாபகப்படுத்தியவாறு இரு. உனக்கு சிற்பங்கள் செதுக்கத் தெரியாது. ஒரு பாமரன்".

" ஒரு காதலன் என்றும் சேர்த்துக் கொள்".

"குற்றமில்லை. காதலிப்பது கூட மிகப்பெரிய காரியம். சிற்பிக்கு என்ன தெரியும் அதைப் பற்றி ?.  கல்லோடு வாழ்ந்தவனுக்கு வலிகள் பற்றி தெரியாது!".

"ம்"

"என்ன. ம் ?"

இருவரும் பேசவில்லை. மின்மினிகளின் ரீங்காரம் கேட்டது. அவள் பிளந்து தந்த உதடுகளை கவ்வி நிதானமாக இழைந்தான். உறிந்து குடித்தான். அன்பின் குளிர் மிகுந்த நிழலை மனசு உணர்ந்த கணத்தில் அவனுக்கு எதிர்விளைவு உண்டாயிற்று. கனத்துப் போகிற மனம். எத்தனை தளர்ச்சி.

அபராவின் கண்களைப் பார்த்தான். "அவர்கள் நம்மை பிடித்து விடுவார்கள் அபரா !"  என்றான்.

"இங்கிருந்தும் போய் விடுவோம்" .

" எங்கே போனாலும்.......  அபரா. உனக்குப் புரியவில்லை....... ஆலயப் பணியை பகுதியில் விட்டு விட்டு ஓடிவந்தமைக்காக நான் வருத்தப்படவில்லை. நீ யார் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது உள்ளில் ஒரு குரல். என்ன உன் கலை என்று கேட்கிறது அது !.  ஒருவன் தன்னை பாமரனாக மாற்றிக் கொள்ள முடியாது அபரா !.

".... .... .... "

"இவர்கள் செதுக்கச் சொல்லும் சிற்பங்களில் எனக்குள் திமிறுகின்ற ஏதோவொன்றுக்கு பதில் இல்லை! முட்டாள்களுடன் குலாவிக் கொண்டிருக்க முடியாமல் அடிவாரத்திலிருந்து சிகரத்துக்கு வந்த பிறகும் அந்தக் குரல் எனக்குள் உறுமுகிறது அபரா !. நீ யார் ? உன் கலை என்ன ?."






விஸ்வனின் கண்கள் எங்கோ வெறித்தன. கண்களுக்குப் புலப்படாத நச்சு உருவங்கள் அவனெதிரே சதிராடுகிரார்கள். உறக்கத்தில் கையும் காலும் அசைத்து எதற்கோ போராடும் ஒருத்தனின் முகம் போல இருக்கிறது. அவனுடைய முகம். நிறைவு செய்யப்படாத ஆலயத்தின் சூன்யத்தன்மை மிகவும் பயமூட்டியிருக்கும் அரண்மனையை. தெய்வத்தின் பெயரால் சர்வ வல்லமையோடு வாழ விரும்பும் பிராமணர்களுக்கு தலைமைச் சிற்பி ஓடி போய் விட்டான் என்பது அதிர்ச்சியாய் இருந்திருக்கும். அவர்களுக்குப் புரியாது. அந்த சிற்பி கல்லை கனிய வைத்துக் கொண்டிருந்த போது அவனுக்குள் என்ன நிகழ்ந்ததென்று. அவர்கள் அவனுக்குள்ளே காலங்காலமாய் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு குரலை. அறிந்திருக்க முடியுமா.  கூட்டத்தின் கற்பனைகளை பாதுகாக்க, கூட்டத்தின் களிப்புகளை திருப்பதிப்படுத்த அவர்கள் நிறுவும் பொய்யில் கலைஞனுக்கு ஏது முகம் ?. அவர்களால்  கோபப்படுவதைத் தவிர்த்து வேறொரு மார்க்கத்தை கண்டடைய முடியாது. தேடிக் கொண்டிருப்பார்கள். பிடிப்பட்டால் அவனை பணிய வைக்க அவர்களால் முடியும்.

அவர்களால் யாரையும் பணிய வைக்க முடியும்.

எத்தனையோ பேர் பணிந்தும் போயிருக்கிறார்கள்.

"அபரா. அவர்கள் நம்மை பிடிக்க வந்தால் நீ என்ன செய்ய வேண்டுமென்று சொன்னேன் ? ஞாபகமிருக்கிறதா ?"

அபரா அவனது கைவிரல்களை வருடினாள். "விஸ்வா நாம் இங்கிருந்து போய் விடுவோம்! எங்கயாவது !. வெகு தூரத்திற்கு. !"

"நான் சொன்னதை மறந்து விடாதே. நீ என் மீது எவ்வளவு காதல் கொண்டிருக்கிறாய் என்பதற்கான நிரூபணம் அது!"

அபரா பளார் என அறைந்தாள் அவனது கன்னத்தில்.

அவனை விட்டு விலகி குப்புற படுத்து கொண்டாள். அப்புறம் போர்வையை இழுத்து உடம்பில் சுற்றி கொண்டாள். விஸ்வன் தனது அங்கியை தேடி எடுத்து உடுத்திக் கொண்டு வெளியே வந்தான்.

காற்று கூடியிருந்தது. எலும்பை தொடுகின்ற குளிர். இருளின் தடிமன் குறைந்து கொண்டிருக்கிறது. ஒன்றிரண்டு பட்சிகள் சீழ்கையடிக்கின்றன. குழிந்த அடிவாரம் கடந்து மறுபடி எதிர்புறத்தில் மலைகளாக நிற்கிற கிழக்கு வினோத வர்ணங்களை புனைந்திருக்கிறது. எங்கோ அருவி விழுகின்ற ஒலி. சப்தத்தை கவனித்து நடந்தான்.

விடிந்து விட்டது.

சூர்யனின் இளங்காலைக் கதிர்களை வெள்ளியாய் பிரதிபலித்தபடி பிரவாகிக்கிறது அருவி. பாறையில் பட்டு சிதறும் நீர்த்துளிகள் மாயாஜாலம் பண்ணின. இடைவிடாத சிந்தனைகள் அறுபட்டு வெறுமையோடு விரிந்த மனம் இயற்கையை பிரமிப்புடன் அள்ளி விழுங்கியது. விஸ்வனின் கண்களில் கண்ணீர் ததும்பியது. புகுந்து நனைந்தான் அவசரமாக. சில்லென அமிர்து! அவனது அழுகையையும் அது அடித்து கொண்டு போயிற்று. காலம் நகர்ந்து கொண்டே இருந்தது. விஸ்வன் விலகி நடந்தான். குளிர் நழுவிப் போயிருந்தது. வெய்யில் நல்ல இதம். எங்கும் பனி புகையாய் எழும்பியிருந்தது. விஸ்வன் தன் உள்ளே துணிவை உணர்ந்தான்.




காத்திருந்த அபரா இவனை பார்த்ததும் ஓடி வந்தாள். " உன்னை நான் காப்பாற்றுவேன், என் கண்ணே" என செவியோரம் முனகிற்று அவள் இதழ்கள். ஒருவர் மேனியில் ஒருவர் லயித்து நாதம் அறியும் போது  விஸ்வன் இரவைப் பற்றி நினைத்துக் கொண்டான். என் பெண்ணே. எப்படிப்பட்டவள் தெரியுமா நீ. மனம் பெருமித்தாலும் கர்வத்தாலும் நிறைந்தது. குனிந்தவன் அவளது நெஞ்சுக்குள் அமிழ்ந்த போது அவள் சீலையை விலக்கி கொடுத்தாள். ஒன்றை முலையை சூப்பிக் கொண்டிருந்தவனின் சிரத்தை வருடிக் கொண்டு நின்றவள் நிமிர்ந்தாள்.

புரவிகளின் குளம்பொலிகள்.

"விஸ்வா "

அவன் இன்னமும் முண்டிக் குடித்தான். நிதானமாக அவளது உடையைப் பூட்டி மார்புகளை மறைத்தான். கன்னத்தை இருகரங்களாலும் பற்றி வலுவாக உதடுகளில் முத்தமிட்டான். நகர்ந்து படுக்கைக்கு அருகே கிடந்த மூட்டையில் இருந்து அந்த கூரிய வாளை உருவினான்

சப்தங்கள் நெருங்கி விட்டன.

"சிற்பியாய் அல்லாத நரகம் எப்படியென்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த நிமிடம் தொட்டு நான் சிற்பியல்ல". வாளை அவளிடம் கொடுக்க. அவளது கண்கள் உறைந்திருந்தது.

கரத்தை நீட்டிக் காட்டினான். " துண்டித்து விடு"

புரவியில் நெருங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு காட்சி புரிந்து விட்டது. பெரும் கூச்சலுடன் முன்னேறினார்கள்.

வாள் எழும்பிற்று.

நீட்டப்பட்ட கரமோ விரல்களோ துண்டிக்கப்படவில்லை. ஆழமாக வாள் இறங்கிற்று நடுநெஞ்சில்.

விஸ்வன் சரிந்தான். விழிகள் இமைக்காமல் நிலை குத்திப் போய் இருந்தன. ஏன் என்று கேட்டன.

"நீ நினைத்திருப்பதை விட நான் உன்னை அதிகமாக காதலிக்கிறேன்! அதனால் தான்!" என்றாள். " நீ சிற்பி தான்"

விஸ்வன் புன்னகைக்கிறானோ?. இருக்கலாம். 

எல்லோரும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

விஸ்வன் அடங்கியதும்  " சிகரத்துக்கு கீழே அடிவாரத்திற்கு கொண்டு செல்ல ஒரு சிற்பியின் சடலமும் ஒரு கைதியும் !" என்றாள் அபரா அவர்களிடம் ஏளனத்தோடு.












Friday, November 4, 2011

வேட்டையாடு விளையாடு







நெகடிவ்
பாசிடிவ்
என்கிறார்கள்

நல்லவன்
கெட்டவன்
என்கிறார்கள்

என்கரேஜ்
டிஸ்கரேஜ்
என்கிறார்கள்

முற்போக்கு
பிற்போக்கு
என்கிறார்கள்
 
ஆண் பெண்
இரவு பகல்
நன்றி துரோகம்
நாத்தம் வாசம்
சந்தர்ப்பத்துக்கு எது சௌகரியமோ
குறி பார்த்து அடித்து விட வேண்டியதுதான்

எனக்கு என்னவென்றால்
நித்தம் நூறு புள்ளிகளை
சிருஷ்டி பண்ணி கொண்டிருக்கிறோம்
நிற்க வேண்டிய புள்ளி எது
புரிய மாட்டேன் என்கிறது





நூற்றாண்டுகளாய் தேடப்படும் ஒருவன்










மனிதன்

எத்தனை மனோகரமான
பதம்
என்றான் ஒருவன்

மனிதன்,
மகத்தான சல்லிப்பயல்
என்று நொடித்தான்
அனுபவத்தில்
மற்றொருத்தன்

உனக்கு தெரிந்திருக்குமே
மனிதனை காணும்போது
கண்ணீர்
முட்டுகிறது
காணாதிருக்கையில்
திடுக்கிட்டு தளர்கிறோம்

நிலைக்கண்ணாடியில்
ஒரு நாள் ஓநாயும், ஒரு நாள் கடவுளும்
வந்து போனால் கூட
மனிதன் தெரிகிற நாள்
மறந்து போகிறது
என்பது ஒரு
புதிர்,

அவன் ஏன் ஒரு இடத்தில் தங்குவதில்லை

அறைகூவல்களில் வாழ்கிற
புழுத்த வேசியின் வீட்டில்
அவன் வந்து போகலாம் என்றாலும்
பல்லக்கு வைத்து காத்திருந்தால்
ஏற வருவது
ஒரு ரத்தக் காட்டேரியாய்
இருக்கிறது

நான் நினைக்கிறேன்,
கடவுளுக்கு தந்தை மனிதன் தான்
நெறி புரண்ட தன் தாயை வைதபடி
ஒரு வேளை அந்த கடவுள்
கத்தியோடு அலைந்து கொண்டிருக்கலாம்

உன் வீட்டிலோ
என் வீட்டிலோ
மனிதன் ஒளிந்து கொள்ள
வாய்ப்பில்லையென்றால்
யார் வீட்டில்
இருப்பான்
அவன்
 



 

Tuesday, October 18, 2011

சினிமா சினிமா சினிமா











அன்புள்ள விஜி,

நலமா
. இந்த அவசர யுகத்தில் நமக்குள்ளே கடிதம் எழுதிக் கொள்வது விசித்திரம்தான். எழுதும்  ஆசை துரத்துகிறது. நமது குழுவில் நீயும் நானும் எதையாவது எழுத ஒரு சாக்கு கிடைக்குமா என்று பார்த்தவர்கள். ஆனால் விஜி, திரைகதையில் ஈடுபடுவதை தவிர மற்ற எல்லாவற்றிலும் இப்போது சலிப்பு. எனினும் பார் இதோ உனக்கு கடிதம் எழுதி கொண்டிருக்கிறேன். இரவு கறுத்துக் கொ ண் டிருக்கிறது. மிகவும் கறாரான பாஷையில் ரேட்டு பேசி அறைக்கு வந்த மீனலோசனி அயர்ச்சியுடன் தூங்கி கொண்டியிருக்கிறாள்.

நீ
யோசிப்பது போல இப்போது இந்த கடிதம் எழுத காரணம் இருக்கிறது.

இன்று
காலையில் தான் 'மோதிப் பார்' பார்த்தேன். ரொம்ப கஷ்டமாயிருந்தது. இதை கோபி என்கிற ஒரு ஆள் உண்டாக்கினான் என்று  சொல்ல முடியுமா ? ஒரு காட்சி பாக்கியில்லாமல் அத்தனை காட்சிகளும் மொத்தமாய் திருடப்பட்டவை. ஒரிஜினல் படத்தின் பெயர் என்ன என்று உனக்கு தெரிந்திருக்குமே. ஒரு சந்திப்பில் அவன் இரண்டு கைகளையும் விரித்து, புஜத்தை திரட்டி சினிமா தான் எனக்கு சுவாசம் என்று பல்லை கடித்து கொண்டது ஞாபகம்  வருகிறது. போகட்டும், படம் எனக்கு இரண்டு பேருடைய  ஞாபகங்களை கிளறியது.

ஒன்று சண்முகத்தை (ஏனென்றால் சண்முகமும் கோபியும் இனி இரண்டில்லை) அடுத்தது சண்முகத்தின் படத்தில் நடித்த நமது ரம்யா. நான் அவளை மனமுருகி காதலித்தேன் தெரியுமா? சிரிக்காதே. நான் சொல்வது நிஜம்.  




டேய்
, அவளது கன்ன கதுப்புகளும், சிரிக்கும் போது அதில் விழுகிற குழிகளும், பல் வரிசையும் ஒரு தாக்குதல் தானே? பக்கத்தில் நின்றவர்கள் உதை வாங்கியது போல இருப்பார்கள். இப்போது யோசித்து பார்த்தால் புரிகிறது. நீ உள்பட நாம் ஆறு பேருமே அவளை காதலித்தோம். நமக்கு தனித்தனியாய் எதோ விசேஷங்கள் இருப்பதாகவும் அவள் அதை கண்டு பிடித்து உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லி விடுவாளோ என்றும் கனவு காணுகிற தனித்த இனம் அல்லவா அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ்?

உனது
தமக்கையின் கல்யாணம் நிமித்தமாய் உன்னால் பாண்டிச்சேரி ஷெட்யூலுக்கு  வர முடியவில்லை. சண்முகம் வைத்திருந்த கழிசடை திரைக்கதையில் முத்தக் காட்சி ஒன்றிருந்தது. நினைவிருக்கிறதா. கடற்கரையில் கேமரா வைப்பதற்கு முன்னாலேயே டாபர்மாமா வாயில் எல்லாம் ஸ்ப்ரே பண்ணிக்கொண்டு, ஒரு தடவை தன் ஆணுறுப்பை அழுத்தி விட்டுக் கொண்டான். நான் அவன் போட வேண்டிய காஸ்ட்யூமை சுமந்து கொண்டு நின்றிருந்தேன். சட்டையை வாங்காமல் என்னை காக்க வைப்பதில் அவனுக்கு ஒரு திருப்தி வரும். நான் மட்டும் என்ன. ஒரு டாபரை எப்படி பார்க்க வேண்டுமோ அப்படி தான் அவனை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன்.  வழக்கம் போலவே என் மீது இருக்கிற விரோதத்தால் மாடு சூத்து மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு " ரம்யா ரெடியா ? " என்று கேட்டான்.

அவள் அங்கே மாஸ்தியின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வந்த சிறுகதைகளை படித்து கொண்டிருந்தாள். தூக்க முகத்தை கழுவ கூட இல்லை. சண்முகத்தின் ஆணையை நான் போய் சொன்ன போது ரம்யாவின் அத்தை ஒரு ஏளன சிரிப்பு சிரித்தது எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஷாட் வைக்கிற நேரத்தில் ரம்யா அங்கே இருப்பாள். சண்முகமோ, இந்த டாபரோ எதையும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கவில்லை.

"
என்ன?"

"என்ன?"

"
ரம்யா ரெடியான்னு கேட்டனே ?"

"
தெரியாது"

"
என்னாது, தெரியாதா? ஏய், நான் இந்த படத்தோட ஹீரோடா. ஹீரோயின் ரெடியான்னு கேட்டா தெரியாதுன்னு சொல்ற ?"

"
சார், இந்த ஷேட்ட வாங்கிக்கறீங்களா? எனக்கு நெறைய வேல இருக்கு"

ஜார்ஜ்
பதினோரு மணிக்கு கோணம் அமைத்தார். டாபர் சண்முகத்திடம் கைகளை பிசைந்து தனது டென்ஷனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போது சர்வ அலட்சியத்துடன், பயங்கர திமிராய் ரம்யா தன் அத்தையோடு வந்தாள். ஆம், அப்படித்தான், அவளுக்கென்று ஒரு பிரத்யேக நாற்காலி இருக்கும் அல்லவா, அதில் உட்காரவும் செய்தாள். டாபர் இளித்துக் கொண்டு மொக்கையாய் ஒரு ஹாய் சொன்னதை அவள் எறிடவில்லை . நான் அந்த நேரத்தில் டாபருடைய முகத்தை பார்க்காமல் இருந்திருப்பேனா? சந்தோஷத்தில் என் மனசு கும்மாளி போட்டது. டாபர் ஓரமாய் ஒரு தடவை என்னை பொசுக்குவது போல என்னை பார்த்துக் கொண்டான்.

கோபி ஸ்க்ரிப்ட் பைலை தூக்கிக் கொண்டு நிற்க, சண்முகம் புகைப்படத்துக்கு தோதாயிருக்கிற வகையில் ஒரு டைரக்டர் போலவே நின்று கொண்டு   ரம்யாவுக்கு காட்சியை விளக்க ஆரம்பித்தான். 




கதையில்
இது மிகவும் குறிப்பிடத்  தகுந்த இடம். அது என்ன, ஆங், திருப்பு முனை. காதலர்கள் இருவரும் காதலர் தின பரிசுகளை பரிமாறிக்கொண்டு  பிறகு ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வார்கள். அப்புறம் காதலனாய் இருக்கிறவன் ஸ்மார்ட் அண்ட் கியூட் அல்லவா? குறும்புடன் காதலியிடம் முத்தம் கேட்கிறான். அவள் வெட்கப்படுகிறாளா, இல்லை. ஓகே என்று மிக நேரடியாய் உணர்ச்சியின் வெள்ளத்தில் இறங்கி நின்றுக் கொண்டு அவனை அணைத்துக்கொள்ள, டாபர் அவள் இதழ் தேனை பருகவேண்டும்.

"
ரெடியா ரம்யா ?"

"
ரெடி சார் "

"
விக்னேஷ் நீங்க ரெடியா?"

"
ரெடி சார் ,  ஒரு டௌட்"

"
என்ன டௌட் ?"

"
நான் ஒரு கைய அவங்க தோள்ள போட்டு புடிச்சிகறேன். இன்னொரு கையால தாடைய நிமுத்துட்டுமா ? அப்பத்தான் நான் அவங்க வாய உறிய முடியும்".

"
யார் வாய சார் ? "

யூனிட்டே
இப்போது ரம்யாவை பார்த்தது. அவள் மிக தெளிவாய் சொன்னாள். ட்ராலியில் காமிரா வட்டம் அடிக்கும் போது இருவரும் எதிரும் புதிருமாய் தலையை சாய்த்து கொள்ளலாம். காட்சி காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதை போலவே இருக்கும். இந்த டாபர்மாமா என் முகத்தை தன் முகத்தை தன் விரலால் கூட டச் பண்ண கூடாது. கதையின் நியாயப்படி காதலர்கள் முத்தமிட்டுக் கொள்கிறார்கள் சார், என் உதட்டின் வழியே எவனோ எச்சிலை உறிவதா முக்கியம்?.

தயாரிப்பாளரின்
ட்ரம்பட்டுகள்  சமாதான புறாக்களாய் சிறகடித்து தங்கள் முக்கியத்துவத்தை காட்டிக்கொண்டார்கள். ரம்யா தன் பாட்டுக்கு உட்கார்ந்து ப்ராப்பர்டியான 'காலேஜ்' நோட்டில் சும்மாவேனும் கிறுக்கி கொண்டிருந்தாள். அது எப்போதுமே அவள் வழக்கம் தான்.

சண்முகம் நெற்றி பொட்டை கசக்க, பக்கத்தில் நின்றிருந்த கோபி  துயரமடைந்திருப்பது தெரிந்தது. டாபர் ரேபோக் காலணி மணலில் புதைந்து போகிற அளவுக்கு காலை தூக்கி இடித்து,  "நடிக்கணும்னு வந்தாச்சு  இல்ல, காசு   வாங்கியாச்சுல்ல, எதுக்கு இப்போ இவ பெரிய பத்தினி மாதிரி பண்ணிக்கிறா ? ஷண்முகம் சார், உங்களுக்கே தெரியும் ஒரு சோள் இந்த உலகத்திலேயே கிடையாது. என்னவோ இவ கோயிலுக்குள்ள இருந்து எறங்கி வந்தா மாதிரி பண்ணிக்கிறாளே. நீங்கதான் சார் கேப்டன் ஆப் தி ஷிப். கிஸ் பண்ணிதான் ஆவணும்னு சொல்லுங்க" என்றான்.

ஜார்ஜ்
குறுக்கே வந்து தன் தரப்பை சொன்னார். ரம்யா சொல்வது போல ஷாட்டை எடுத்து முடிக்க முடியும். காதலர்கள் முத்தமிட்டு கொள்கிறார்கள் என்பது தானே கதை. அதை நான் எடுத்து தருகிறேன். யாரு யாரையும் உறிய தேவையில்லை.

"
சாரி ஜார்ஜ், சினிமால எனக்கு பிடிக்காத ஒரே ஒரு வார்த்தை, காம்ப்ரமைஸ்".

சண்முகம்
  சொன்னதை யாரும் சீரியசாய் எடுத்து கொள்ள மாட்டார்கள். அவனால் முடிந்த அரைமணி நேரத்திற்கு ஒரு கலககாரனை போலவே விறைப்பு காட்டி விட்டு அப்புறம் டாபரிடம் "ஓகே, ஷாட்டுக்கு போலாம்" என்று தன் பாட்டுக்கு பட பிடிப்பை ஆரம்பித்து நடத்தினான். ரம்யா சொன்னது போலவே காட்சி வந்தது. டாபரால் ரம்யாவை உறிய முடியவில்லை. நான் அடிக்கடி டாபரின் முன்னாள் போய் நின்றபோதும் அவன் என் பக்கம் திரும்பவே இல்லை. எனக்குள்ளே மிக மிக அதிகமாகவே நான் குதூகலித்துக் கொண்டேன்.





படபிடிப்பு எப்படியோ நடந்து கொண்டிருந்தது. நீயெல்லாம் திரும்பி வந்து விட்டாய். பொள்ளாச்சி ஷெட்யூலுக்கு தயாராகி கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் தான் ரம்யா ஒரு திரைப்படத்தில் தங்கை பாத்திரத்துக்கு ஒப்பந்தம் ஆனாள். அது வல்லூறுகளின் படம். ஒவ்வொரு இரவுக்கும் மப்பு போட்டுக் கொண்டு, எவளையாவது பிய்த்து தின்னாவிட்டால் அவன்களால் முடியாது.பேருக்கு காமா சோமாவென்று எடுத்து தள்ளுகிற குப்பைகளை பிரமாதமாய் மார்கெட்டில் விற்று இன்றும் சினிமாவில் ஜாம்பவான்களாகவே அவர்கள் நீடிப்பது உனக்கு தெரிந்த கதைதான். இவர்களுடைய படத்தில் தன் பங்கை முடித்து கொடுத்து விட்டுதான் ரம்யா நம் லொகேஷனுக்கு வந்து சேர்ந்தாள்.

கவனித்திருந்தாயா.

தெறித்து விழத் துடித்திருக்கும் அந்த விழிகளின் தீ அணைந்து போயிருந்தது.

தூங்கி வழிந்தாள். கையில் கிடைத்ததெல்லாம் தின்றாள். படித்த புத்தகத்தை பற்றியோ, பார்த்த சினிமாவைப் பற்றியோ, நீ ஏதாவது பேசியிருந்தால் அவள் அதற்கு எந்த ஆமோதிப்பையும் கொடுத்திருக்க மாட்டாள். அதெல்லாம் ஏன். உச்சக்கட்ட காட்சியை படம் பண்ணி கொண்டிருக்கிற நேரத்தில் சுமார் ஆயிரம் பேராவது நம்மை சுற்றி இருந்திருக்கமாட்டார்கள்?. சேலை விலகி கிடந்தது. இரண்டு பக்க முலைகளையும் தர்ம தரிசனம் பார்த்துக் கொண்டிருக்கிற கூட்டத்தை சட்டை செய்யாமல் அவள் கரும்பு கடித்துக் கொண்டிருந்தாள். இதற்கு எல்லாம் உச்சமாக நமது டாபர் மாமா பயல் அடித்த ஒரு சப்பை ஜோக்குக்கு அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். ஒரு சந்தர்பத்தில் டாபர் அவளிடம் குசு குசு என்று சீரியசாய் ஏதோ விஷயத்தை பேசிக்கொண்டிருப்பதை பார்த்தேன். பிசினஸ் பேசினானா ? ஒரு மாஜி ஜனாதிபதியின் மகனெல்லாம் இந்த டாபருக்கு கஸ்டமர்  ஆயிற்றே. மனைவியை பக்கத்து அறைக்கு அனுப்பிவைத்து விட்டு தன் அறையில் அவன் ஹாயாய் தூங்குவான்.

தசையினை தீச்சுடுவது போல நான் அந்த நேரத்தில் அப்நார்மலாய் உலவிக் கொண்டிருந்தேன். சண்முகம் தனது எல்லையை விட்டு கடந்து வந்து என்னிடம் அதிகாரத்தை காட்டியபோது என்னடா என்றே கேட்டுவிட்டேன். அதைவிடு. இறுதியில் ஒரு நாள் மிகுந்த துணிச்சலுடன் ரம்யாவை நெருங்கி நான் கேட்க நினைத்ததை கேட்டு தொலைத்தேன்.

"ஏதாவது மனசு கஷ்டமா?"

"ஆங்?"

"முன்னமாதிரி இல்ல நீங்க.  எதையோ பீல் பண்ணிகிட்டுருக்கீங்க".

"ஹ, ஹ, ஹ நீ போய் உன் வேலய பாரு அரவிந்த். இன்னொரு தடவ இப்படி நீ ஓவரா பேசினா சண்முகம் சார் கிட்ட சொல்லிடுவேன்".

எனக்கு கோவம் வந்தது.

அதை தீர்த்து கொள்ள வழியும் இருந்தது. எனக்கு பழக்கப்பட்ட எல்லா தமிழ் படங்களினுடைய கற்பழிப்பு கோணங்களையும் ஒரு முகப்படுத்திக் கொண்டு  அவளை கற்பழித்தேன். கதற கதற என்பதை சேர்த்துக் கொள். இது பற்றி நான் விளக்க தேவை இல்லை. எல்லாம் கற்பனையில் தான். ஒன்றிரண்டு முஷ்டிமைதுனங்களுக்கு பிறகு அவளை ஒரு வேசியாய் கருதிக் கொண்டு நான் என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன். பூசணிக்காய் உடைக்கிற நாளில் என்னிடம் ஏதோ சொல்ல வந்தாளோ. நான் அப்போது டாபர் ஏவின ஏதோ எடுப்பு வேலையை சாக்கில் நகர்ந்து போக வேண்டி வந்தது.

நான் சொல்ல வருகிற விஷயம் என்ன தெரியுமா ?

இங்க பெங்களூரில் நான்கு நாட்களாக அவள் பெயர் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

முன்பு ஒரு தொழிலதிபரை கல்யாணம் செய்து கொண்டாள் அல்லவா. அவன் ஓடி போன பிறகு வேறு ஒரு ரியல் எஸ்டேட் ஆசாமி தான் அவளோடு இருந்தான். இருவருக்கும் பிறந்த மகனை பிடுங்கி கொண்டு சென்ற வாரம் ஒரு நடு இரவில் அவன் அவளை ரோட்டுக்கு தள்ளி விட்டிருக்கிறான். தடித்து பெருத்து ஒரு காண்டாமிருகத்தைப் போல இருக்கிற ரம்யா சரியான குடி போதையுடன் எச்சில் தெறிக்க பேசுவதை கன்னட சானல்களில் போட்டுக்கொண்டே இருந்தார்கள். கண்ட மேனிக்கு அவள் யார் யாரையோ திட்டி கொண்டிருக்கிறாள். அவள் போட்டிருக்கிற கூலிங் கிளாசும், மாட்டிக்கொண்டிருக்கிற நகை நட்டுகளும் ஏதோ சாராயம் விற்கிற வில்லியை போல காட்டுகிறது. தாங்காமல் நான் தொலைக்காட்சியை அனைத்து வைத்தேன். இன்று கோபி டைரக் ஷன் பண்ணி விட்ட படத்தை பார்த்ததில் இருந்து மறுபடியும் ஒரு குமைச்சல்.






நாலு பெக்கை போட்டு, உடல் வேட்கையை தணித்து என்னை நான் பாலன்ஸ் செய்து கொண்டு நிதானமாய் எழுதினது வரை எல்லாம் சரிதான்.

கதையை, அல்லது கடிதத்தை முடிக்க வேண்டியிருக்கிறது அல்லவா.

நம் படம் முடிந்து எல்லோரும் பிரிந்து போன பிறகும் என்னிடம் சில பிராப்பர்டிகள் இருந்தன. அதில் 'காலேஜ்' நோட்டும் ஒன்று. ரம்யா பொழுது போக்குவது போல் அந்த நோட்டில் கிறுக்குவது வழக்கமாயிற்றே. பார்த்தபோது மொத்தமும் கன்னடம். அப்புறம் இங்கே எனது பட வேலை சம்மந்தமாய் வெகு நாட்கள் இருக்க வேண்டி வரவே சுதீஷ் எனக்கு உதவியாளன் ஆனான். அவனக்கு கன்னடம் தாய் மொழி.  படித்து சொன்னான்.

சாம்பிளுக்கு மூன்று வரிகளை மட்டும் சொல்கிறேன்.

பயமாய் இருக்கிறது, கடவுளே என்னை காப்பாற்று.
பயமாய் இருக்கிறது, கடவுளே என்னை காப்பாற்று.
பயமாய் இருக்கிறது, கடவுளே என்னை காப்பாற்று.



Wednesday, October 5, 2011

அழையா விருந்தாளி







 

கடவுள்
வந்திருந்தான்

கனவில் தான் என்றாலும்
அவன் கடவுள் தான் என்பதில்
சந்தேகமில்லை

துயரங்களால் பழுத்த
எனது கண்கள் அவனது கண்களுக்குள்ளே
நுழையும் போது
அவன் வேறு திசை பார்த்தான்
பறந்திருந்த தும்பியின் வாலில்
கல்லைக்  கட்டி
துள்ளி குதிக்கிற ஒரு வாண்டுப் பையன்
கண்டிப்புப் மிகுந்த ஆசிரியரிடம் பிடிபட்டது போல்

விழிக்கிறது
அவனுடைய காருண்யம்
கற்பூரக் கரியை தாண்ட முடியாமல்
அடைப்பட்டு விட்ட புன்னகை
திணறுகிறது
பாவம்

சரி, போய் வா
என்றேன்.







கனவும் காயங்களும்






வருத்தம் கொள்ளுவதற்கு
எதிலேயும் எதுவும் இருப்பது இல்லை
என்றாலும் எப்படியோ
எல்லாவற்றிலும் வருத்தம்
உண்டாகி விடுகிறது

நிலவு
அலைகடலில் முகம் பார்ப்பது போல்
நாமெல்லாம்
யாரிடமோ எதிர்பார்க்கும் போது
வெறுமை பள்லிளிக்கிறது
யாரிடமும் குற்றமில்லை
வாழ்வின் சமுத்ரம் ஒருபோதும் மற்றவருக்காக
பொங்குவதில்லை

மற்றும்
புரிந்த கொள்வது என்பதும் பேதமையே
ஆணியறைவது போல்
புரிய வைக்க திராணியற்றவரின்
வலி அது

ஆக
வலியும்
வருத்தமும் எல்லாம்
வார்த்தைகள் தான்
ரணமுற்றவன்
ஊதிக் கொள்வதே
வாழ்கை


Sunday, October 2, 2011




காலையில் சொப்பனத்திலிருந்து திடுக்கிட்டெழுந்து, வெகு நேரம் யோசனையிலிருந்து, காலைக் கடன்கள் எல்லாம் நடந்து  கொண்டிருக்கையிலும் சிந்தனை அறுபடாமல் தொடர்ந்து சோர்வு அவனை தளர்த்திய போதே இன்றைக்கு வேலைக்கு போகவில்லையென்று முடிவு செய்து விட்டான். ஒரு நாள் கூலி போச்சு.எப்படியும் அடுத்த வாரம் ஒன்றிரண்டு வேளைக்கு சாப்பாடு கிடையாது. இந்த நினைப்பையும் மீறி மேற்கொண்டு இன்று எங்கே போக வேண்டும் என்பதை மூளை தீர்மானம் செய்து விட்டது. வேறு வழி இல்லை. கனவு அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தோன்றும் போது உடனே செய்து விடுவதுதான் சரி. ஒருவேளை, போகிற வாய்ப்புகளே இருக்காது.

 குமாரின் கடையில் நிறைய வாடிக்கையாளர்கள் காத்து இருந்தார்கள். பொறுமையில்லாமல் 'தினத்தந்தி' யைப் புரட்டிக் கொண்டு. குமார் யாரோ ஒரு ஆளுக்கு முகம் வழித்து கொண்டிருந்தான். இவன் வருவதைப் பார்த்தான். பேசமாட்டான் என்றும் தெரிகிறது. கொஞ்சம் தயங்கி ஒரு ஓரமாக உட்கார்த்து கொண்டான். எல்லோரும் தன்னையே பார்க்கிற மாதிரி இருந்தது. தன் முகத்தில் இருக்கிற தாடியை வைத்துக் கொண்டு ஒரு வாடிக்கையாளர் என்று யாராலும் எண்ணி விட முடியும். ஏதாவது ஒரு பழைய புத்தகத்தை எடுத்து பார்க்கலாமா என்று யோசிக்கும் போது கண்கள் தன்னை அறியாமல் சுவர் கடிகாரத்தை பார்த்தது. எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

 எதிரே கண்ணாடியில் முகம் தெரிந்தது. அதிகாலை இப்படி ஒரு ஞானோதயம் ஏற்படும் என்று தெரிந்திருந்தால் நேற்று ராத்திரி குமார் ஓய்வாக இருந்த போது ஷேவ் பண்ணியிருக்கலாம். தாடி இருப்பதால் ஒன்றும் இல்லை, முக லட்ஷணம் எல்லாம் சரிதான், அனால் அது மோசமான யூகங்களை ஏற்படுத்திவிடுகிறது. எதற்கும் பரிதாபபடக் கூட லாயக்கற்றவர்கள் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். எந்த அனுதாபம் சொட்டும் வார்த்தையையும் இவனால் சகிக்க முடியவில்லை. அதற்காக நல்ல பிள்ளைகள் கணக்காய் சவரம் பண்ணுகிற காரியத்தையும் ஒப்புகொள்ள முடியவில்லை.

நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது.

போகட்டும். அதனால் என்ன. சாயந்திரம் வரை நேரம் இருக்கிறது. வாழ்க்கையில் எல்லா விஷயங்களுக்கும் பொறுமையைத் தான் கடைப்பிடித்து இருக்கிறான். காரியங்கள் தோற்றுப் போகிற வரை கூட பொறுமை நீடித்திருக்கிறது. மேலே வந்து விழுந்த பாரங்களை எல்லாம் பொறுமையின்றி தள்ளி விட்டதில்லையே, மனசுக்குள் ஒரு சிரிப்பு வந்தது. கூடவே ஒரு பெருமூச்சும். எல்லோரையும் பார்த்தான். யாரும் தன்னை கவனிக்க வில்லை. கவனிக்க மாட்டார்கள். இவன் குமாரையே பார்க்க ஆரம்பித்தான். அதற்கு பலன் இருந்தது. ஷேவிங் முடிகிற நேரத்தில் கண்ணாடி வழியாக குமார் இவனை பார்த்தான். கண்கள் சந்தித்தவுடன் வேறு வழியில்லாமல் புன்னகை செய்ய வேண்டி இருந்தது, இவனுடைய புன்னகைக்கு பதிலாக. அந்த ஆள் எழுந்து தன்னை உதறிக் கொண்டு, காலரை சரி பண்ணிக் கொண்டு, கண்ணாடியை பிரிய முடியாத மனசுடன் ஒரு முறை ஊன்றி பார்த்துக் கொண்டு பணத்தை எடுத்து குமாரிடம் கொடுத்தான். குமார் அதை மேஜையின் இழுப்பறைக்குள் திணிக்கும் போது இவன் எழுந்தான்.

 "குமார் கொஞ்சம் வெளிய வாயேன். ஒரு விஷயம்"

"என்ன?"

"வாயேன். சொல்றேன்"

"டேய், வேலை இருக்குடா, பாக்கற இல்ல?"

"ஒரு நிமிஷம்பா"

"சே" என்று சலித்துக் கொண்டு இவனுக்கு பின்னால் வெளியே வந்தான் அவன். இளம் சூரியன் கண்களுக்குள் வந்து முட்டி கூசியது. பகுதி திறந்த கண்களுடன் வெளிச்சத்தை பார்க்க விரும்பாதவன் போல தலையை குனிந்து கொண்டு மெதுவாக பேசினான். "சனி கெழம தரேன். அவசரமா எனக்கு கொஞ்சம் பணம் வேணும்.

"டேய்".

இல்ல. முக்கியமான விஷயம்..." என்று தயங்கினவனுக்கு சட்டென்று  பயம் ஏற்பட்டது. வேலைக்குக் கூட போகவில்லை. பணம் கிடைக்கவில்லை என்றால் அவ்வளவுதான். எல்லாம் நஷ்டம். "ப்ளீஸ்" என்றான். "இல்லேன்னு மட்டும் சொல்லிடாத. சத்தியமா சனி கெழம தந்துடுறேன்"

ஒரு முறை தலையை சொறிந்து விட்டு ஏதோ முனகிக் கொண்டு குமார் உள்ளே ஓடினான். ஏறக்குறைய அவனது முனகலுக்கு அர்த்தம் தெரிந்துக் கொண்டிருந்த இவனால் அதை பற்றி சிந்திக்க முடியவில்லை. அதே வேகத்துடன் வெளியே வந்த குமார் "இவ்வளவுதான் இருக்கு. இங்க பார். சனி கெழம. அப்புறம் மறந்துட்டேன்னு சொல்லிடாத". என்று பணத்தை திணித்தான். பிரித்து பார்பதற்குள் அவன் போயாயிற்று. எவ்வளவு கேட்க நினைத்தானோ அவ்வளவு இல்லை.

இவன் இறங்கி நடந்தான்.

வழக்கம் போன்ற காலை நேரம். வேலைக்கு போவதாக இருந்தால் இதோ இவர்களையெல்லாம் போல ஓடவேண்டும். சற்று நிம்மதியாக தோன்றிற்று. இன்னும் சொன்னால் மற்றவர்களுடைய வேகங்களை, நிதானமின்மையை கவனிக்க கூடிய அளவில் தோன்றின நிம்மதி. மொட்டை மாடியில் படுத்து கொண்டு ராத்திரிகளில் பார்க்கக் கூடிய வானம் பற்றி ஞாபகம் வந்தது. பார்த்தான். மனசுகளுக்கு ஆகாசம் ஒத்து வர வேண்டிய கட்டாயம் ஒன்றும் கிடையாது. கண்களில் திராணி இல்லை. கண்களுக்கு தட்டுபட்டு விட்ட மேகங்களால் மனசில் ஏதோ அர்த்தமற்ற வரிகள் ஓடின. அது முழுமை பெறாதது என்பது தெரியும். குமாரின் கடையில் உட்கார்ந்து இருந்தவர்களுக்கு இந்த கடன் விவகாரம் தெரிய வந்திருக்கலாம் என்பது திடீரென்று கிளம்பி வந்தது. அது உண்மைதான். குமார் தன்னுடைய தலைவிதியை பற்றி சத்தமாக பேசுவான். அவனுக்கு அப்படி பல பெருமைகள் வேண்டி இருக்கிறது


பஸ் ஸ்டாப்பில் ஏகப்பட்ட ஜனம். பெண்கள் தான் அதிகம். ஏறக்குறைய எல்லாருமே வேலைக்குப் போகிறவர்கள் தான். பள்ளிகூடங்களில் நேரம் முடிந்துவிட்டது. நாம் கண்டுபிடிக்க கூடிய சோர்வான முகங்கள் மற்றும் சவலை பேச்சுகள். அப்புறம் வளைந்த முதுகுகள். காலை மாறி மாறி தாங்கிக் கொண்டு நிற்பதில் கசிகின்ற முதுமை. இவன் மாநகராட்சி வளர்ப்பு மரத்தில் சாய்ந்து கொண்டு எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு அறுவெறுப்பு வந்தது. கொஞ்ச நேரத்தில் அது தன்னைப் பற்றியதுதான்  என்று கண்டுபிடித்தான். எல்லா கனவுகளையும் விட்டு விட்டு சனிகிழமை சம்பள லட்சியத்துக்காக ஒரு சைக்கிளில் காலை சவாரி போவதை நினைவில் கொண்டு வந்தான். எங்கேயாவது நிமிர்ந்து பார்ப்பதுண்டா இப்போதெல்லாம். சத்தங்கள் ஏதாவது காதில் விழுவதுண்டா.

எதற்கு.

அது சரி, எதற்கு. எல்லோரும் அப்படிதான் கேட்கிறார்கள். நாமும் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டியது தான். இனி என்ன செய்ய வேண்டும். ஒரு வீட்டுக்கு செல்லும் போது எதையாவது வாங்கிக் கொண்டு போவதுதான் மரியாதை. வீட்டில் ஒரு பெண்குழந்தை வேறு இருக்கிறது. குமார் கொடுத்த பணத்துடன் கொஞ்சம் சில்லறையும் இருக்கிறது. இவன் பஸ் ஏறுகிற எண்ணத்தை தவிர்த்து விட்டு சாலையை கடந்து எதிர்பக்கத்துக்கு நடந்தான். பிறகு தான் அப்படி தனக்கு வேண்டிய பொருள் இருக்கிற கடை ஒன்றும் பக்கத்தில் இல்லை என்பது உறைத்தது. ஏனோ திரும்பி நடக்க மனம் வரவில்லை. நடப்பதும் நிற்கவில்லை. அதெற்கென்ன. அடுத்த ஸ்டாப்பில் ஏறிவிட்டால் போகிறது. ஆனால் மனசு சாந்தமடையவில்லை. தேவையில்லாமல் இப்படி நடக்க வேண்டுமா என்று இடித்தது. செல்ல வேண்டி இருந்த இடத்தில் இறங்கி அங்கேயிருந்து எதையாவது வாங்கி இருக்கலாமில்லையா. இடதுபுறத்து நடைபாதையிலிருந்து வலதுபுறத்தில் சில கடைகள் இருப்பதை பார்க்க முடிந்தது. பிசாசுகள் போல பாய்ந்து கொண்டிருக்கும் வாகனங்களுக்கு இடையே சர்க்கஸ் பண்ணுகிற காரியம் கசப்பாய் இருந்தது. இந்த பக்கத்தில் ஏதாவது ஒரு கடை வந்தால் சரி. இல்லையென்றால் இறங்கிய பின்னர் பார்த்து கொள்ளலாம்.

நடப்பது எனக்கு மிகவும் பிடித்தமான காரியம் என்று தான் ஒரு நினைவு. ஆனால் அதற்கு உகந்த நேரம் இது கிடையாது. கொஞ்சமும் கூட சுரணையில்லாமல் அல்லது மரியாதையோ நாகரீகமோ இல்லாமல் (அப்படியெல்லாம் ஏதாவது இருக்கிறதா என்ன?) உடம்பின் மேல்  இடித்துக் கொண்டு தாண்டிப் போகின்ற ஆசாமிகளை திட்டித் தீர்க்க வேண்டும் போலிருந்தது.  அது முடியாது. வாகனங்களின் சப்தமோ.... அவைகள் மண்டைக்குள்ளேயே ஓடுகிற மாதிரி பிரமை. விவஸ்தை கெட்ட  பூக்காரி. என்னை பார்த்தால் சாமந்தி பூவை வாங்குகிறவன் போலவா தெரிகிறேன். இருக்கலாம். ஒரு குடும்பஸ்தன். வீட்டில் பொண்டாட்டிக்கோ சந்திரிகா பீடி காலண்டர் விநாயகருக்கோ பூ வாங்கி போகிறவன். சிரித்துக் கொண்டான். வியர்த்து வழிந்து கொண்டிருந்தது. கைகுட்டை எடுத்து துடைக்க வேண்டும் என்றோ, நிழலில் நடக்க வேண்டும் என்றோ தோன்றவில்லை. என்ன இருக்கிறது இந்த முகத்தில். எல்லாம் பார்த்ததுதான். புதுசாக பார்க்க அவளுக்கு எதுவும் இருக்காது. அப்படியும் சொல்ல முடியாததுதான். கண்களுக்கு கீழே வளையங்கள் விழுந்து இருக்கின்றன. கருமை கூடி விட்டது. ஞாபகங்கள் என்பது கொஞ்சமேனும் இருந்து உற்று கவனிக்க முடிந்தால் இதெல்லாம் தெரியவரலாம். தாடியை வழித்திருக்கலாம் என்பது மீண்டும் வந்தது. சோகமாய் இருப்பதாக நான் காட்டி கொள்ள முயலுவதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?

பஸ் ஸ்டாப்பை நெருங்கிய போது தான் சோர்வாயிருப்பது குறித்து அறிந்து கொண்டான். சாயாக் கடையில் இவனது சைகைகளும், குரலும் எடுபடாமற் போகவே, வெகுநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. மனசுக்குள் கருவிக் கொண்டு இருந்த போது தேனீர் வந்தது. நெஞ்சை ஆற்றிக்  கொள்வது போல விழுங்கினான். சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக் கொண்டு வந்து நின்றான். அவன் ஏறிப் போக வேண்டிய பேருந்துகள் வந்து போயின. எதிலும் தொங்கிக் கொண்டு போவதில் சம்மதம்மில்லை என்பது மட்டுமில்லை. காசு கொடுத்து வாங்கின சிகரெட்டை எறிய மனம் வரவில்லை. ஆழ்ந்து புகைத்தான். அவளுடைய முகம் ஞாபகத்துக்கு வந்தது. என்ன நினைப்பாள்?. இப்படியே திரும்பிப் போய் அறையில் படுத்து தூங்கி விட்டால் தான் என்ன. 


எக்கச்சக்கமாக நெருங்கிய போராட்டங்களுடன் கழித்து, கடைசியாக பஸ் வந்து சேர்ந்தவுடன் ஏறிக் கொண்டான். இதோ ஒருத்தன் காலை நசுக்க ஆரம்பித்து விட்டான். ஏதோ ஒருவனுடைய கை எலும்பு நடுமுதுகை துளைத்துக் கொண்டிருக்கிறது. நடத்துனர் தனது சிம்மாசனத்தை விட்டு அசையாது டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். சில்லறையை நீட்டிக் கொண்டு நின்றது கையை வலித்தது. பலம் மிக்க பாக்கியவான்கள் எங்கோ தூரத்திலெல்லாம் நின்று கொண்டு சீட்டை வாங்கிக் கொள்ளும் போது உரசிக் கொண்டு நின்று இருப்பவனால் வாங்க முடியவில்லை. உத்தியோகத்தை சலித்துக் கொள்பவராக இருந்த கண்டக்டர் இவனிடம் காசைப் பெற்றுக் கொள்ளும் போது "சத்தமா தான் சொல்லேன், கலையில சாப்பிடலையா?" என்றார். இவன் தன்னைப் பார்க்கிற ஆட்களைப் பார்த்தான். எல்லோரும் சாப்பிட்டு விட்டு வந்து இருக்கிறவர்களாகவே தென்பட்டார்கள். பெண்களின் பக்கமாக திரும்பிய முகம் தானாகவே கவிழ்ந்து கொண்டது. யோசிக்க விஷயங்களிருந்தன. அவனுக்கு பெண்களைப் பற்றி நன்றாக தெரியும். அது ஒருத்தியின் மூலமாக இருக்கலாம். ஆனால் மிக நன்றாக தெரியும். ஏதோ ஒரு கெட்ட வார்த்தை வாயில் வந்தது. இப்போது இவர்களெல்லாம் பொருட்படுத்தக் கூடியவர்களாய் தோன்றவில்லை.

ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். வீடுகள், மரங்கள், கடைகள் என்று எல்லாம் கடந்து சென்று கொண்டிருந்தன. அடையாளமற்ற முகங்கள் தத்தம் காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டு. வாழ்க்கை முழுவதும் இப்படி ஒரு பார்வையாளனாகத் தான் இருக்க வேண்டியிருந்தது. கடந்து செல்கின்ற எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு. ஒரு நாள் அவள் வந்து கூர்மையான வருத்தம் தோய்ந்த முகத்துடன் 'எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு' என்று சொன்னபோது அந்த முகத்தை பார்த்து பேசாமல் தான் நின்றான். இப்படிப்பட்ட நேரங்களில் பலரும் பலவிதமாக நடந்து கொள்வார்கள் என்பதைப் பற்றி அறிந்திருந்த போதிலும். ' காம்பில் வைத்து ரோஜாவை முகர்ந்ததுண்டா, துப்பாக்கியின்றி பறவையை ரசித்ததுண்டா' என்கிற கொட்டேஷனுடன் இவன் வரைந்து கொடுத்த பென்சில் ஓவியம் திரும்பி வந்தது. சரி, இவனும் தன் பங்குக்கு கொஞ்சம் கடிதங்களையும், புகைப்படங்களையும் கிழிக்க வேண்டியிருந்தது. கிழிந்து போய் விடாத விஷயங்கள் உலகில் இருக்கின்றன என்பது தனக்குப் புரிந்தது போல் அவளுக்கு இப்போதாவது புரிந்திருக்குமா என்கிற சந்தேகம் இப்போதெல்லாம்.

இறங்க  வேண்டிய இடம் வந்து விட்டது. நடத்துனர் மிகவும் கண்டிப்பானவர். அவர் கொடுக்கிற சிக்கனமான நேரத்தில் உயிருக்கு பயந்து பரபரப்புடன் இறங்க வேண்டியதாயிற்று. நடந்தான். இனி சிவன் கோவிலை தேட வேண்டும். யாரிடம் கேட்பது. நேர சிக்கனம் பற்றி தெரியாமல் தன்னைப் போல ஆசுவாசமாயிருக்கிற ஏதாவது ஒரு முகம் வேண்டுமே. நல்லவேளை. அப்படிப்பட்ட சிரமத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கவில்லை. அங்கே தெரிகிற கோபுரம் நிச்சயமாக சிவன் கோவில் கோபுரமாகத் தான் இருக்கும். ஒரு கடையில் பிஸ்கட் பொட்டலம் ஒன்று வாங்கிக் கொண்டு பாக்கெட்டில் திணித்துக் கொண்டாயிற்று.

தேர்வு எழுதப் போகின்ற மக்குப் பையனைப் போல 13 ம் எண்ணுக்கு வந்து சேர்ந்த போது அவளும், குழந்தையும், அவளுடைய புருஷனும் வெளியே இருந்தார்கள். புருஷன் சிரத்தையாக வீட்டைப் பூட்டி கொண்டிருக்க அவள் தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"வா" என்றாள். "வெளிய கெளம்பறோம். பரவால்ல. பூட்ட தெறங்க"

"வேண்டா" என்றான் இவன். அவள் தன் பட்டு சேலையை கவனத்துடன் சரி செய்வதைப் பார்த்துக் கொண்டு " ஒரு பிரெண்ட பாக்கறதுக்காக இந்தப் பக்கம் வந்தேன். நானும் அவசரமா போயாகணும்" என்றான்.

அம்மாவை உரித்து வைத்திருந்த குழந்தை பொறுமையற்ற முகத்துடன் "சீக்கிரம் போலாம்" என்றது.

                                                                                                        "அவசரம்"
                                                                                                       (A  short story )