Saturday, September 10, 2016




உடன்படிக்கை
ஒரு சிறுகதை.



ராஜி கவனித்து விட்டான், அருள் வருவதை. கையில் குப்பியை வைத்துக் கொண்டு உட்காருவதற்கு தோதான இடத்தை தேடுகிறான். எப்படியும் தன்னை பார்க்காமல் இருக்கப் போவதில்லை. ராஜி சரக்கு இருந்த கிளாசையே பார்த்துக் கொண்டிருப்பதாய் பேர் பண்ணினாலும் தன்னை மீறி விழிகள் அவனை பார்க்கத் தான் செய்தது. ம்ம், அதுதான், கவனித்து விட்டான். ஒரு கணம் திகைக்கிறவன் உடனடியாய் எதிர்பக்கத்துக்கு விருட்டென்று சென்று விடுகிறான். உடனடியாய் தேர்வு செய்து அவன் அமர்ந்து விட்ட இடமும் இங்கிருந்து பார்க்கக் கூடியது தான் என்று அந்த முட்டாளுக்கு தொ¢யவில்லையா? சொல்ல முடியாது. திட்டம் போட்டு வந்திருக்கலாம். ராஜி எழுந்து போய் விடலாமா என்று யோசிக்கும் போதே அது முடியாது என்பதையும் அறிந்து கொண்டான். பாய்ந்து வருவானா?

பிச்சுவா வைத்திருக்கலாம்.

பாரில் கூட்டம் அதிகமென்றோ குறைவென்றோ சொல்லிக் கொண்டிருப்பது வீண். இந்த நகரம் கழித்துக் கட்டுவதையும், ஒழித்துக் கட்டுவதையும் செய்தவாறு தான் இருக்கும். ஒரு பையன் சொடக்கு போட்டு தான் யாரென்று காட்டுவதாய் இன்டெர்வெல் பன்ச் சொல்லி கூச்சலிடுவதை பலரும் வேடிக்கை பார்த்திருந்தார்கள். தனியாய் அமர்ந்து குடிக்கிறவர்களுக்கு தொலைக்காட்சியை கவனிக்க விருப்பமில்லையென்றால் இந்த வேடிக்கைகள் முக்கியம். அருளும் கூட அந்தப் பையனை பார்ப்பது போல அவனைக் கடந்து தூரத்தில் மிகவும் கடமையுணர்ச்சியுடன் குடித்தவாறிருக்கும் ராஜியை அப்ப அப்ப பார்த்துக் கொண்டான். இந்தக் கூச்சல் எல்லாம் சும்மா. பையன் வெறும் பசும்பால். கொட்டினால் அண்ணே என்று மண்டி போட்டு விடுவான். அருள் அப்படியா? நர்மதாவை டாவடிக்கும் போது நாலு கெணறு ஹவ்சிங்க் போர்டுக்கு போயி ரோட்டுக்கு நடு செண்டரில் நின்று ங்கோத்தா மாசா என்று மொத்த ஜனத்திடமும் சீறியிருக்கிறான்.

ஒரு தடவை கையில் கெரசின் கேன்.

" ஏ, நர்மதா வெளிய வாடி. உங்கொம்மா பருப்புன்னா நான் அத விட பெரிய பருப்பு. எறங்கி வாடி. காலங்காத்தால மாங்காட்டு தாயி முன்னால நிக்க வெச்சு உன் கழுத்துல தாலி கட்டுறேனா இல்லியா பாரு! "

பொதுவாய் குடிக்காத நேரங்களில் நாய் குட்டிகளை வருடி கொஞ்சி விட்டு போவது உள்பட ஊரில் உள்ள அத்தனை பேரையும் குசலம் விசாரிக்காமல் போகாத அருள் எழுத்தில் வர முடியாத கெட்ட வார்த்தைகளை நர்மதா வீட்டு வாசலில் நின்று வீறிட்டால் தான் என்ன. அதெல்லாம் அந்த மக்களின் வாழ்வில் ஒரு பகுதி. கடந்து போவார்கள். அல்லது வசதியாய் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார்கள். சிலர் பக்கத்தில் சென்று அவனை உபதேசிப்பதுண்டு. சில சினேகிதக்காரங்க வேறு மாதிரி.

" என்ன மச்சான், டெமோ காமிச்சுகினு இருக்க ? டின்ல என்னா, கஞ்சித் தண்ணியா? “

" ஏ, லவ்டேகபால். இது க்ருஷ்னாயில்டா. இத பார். அவ வரலன்னா இப்ப ஊத்திக்கறேன் பாக்கறியா ? "

மாங்காட்டுத் தாய் பச்சை சேலை உடுத்தியிருந்தாள். நர்மதாவின் கழுத்தில் தாலி கட்டும் போது எல்லாமே மங்களகரமாயிருந்தது. மாங்கல்யம் தந்துதானே சொன்ன அய்யிரு மனசார வாழ்த்தியதில் கூட கொறை சொல்ல முடியாது. கிழக்கு பார்த்த வீட்டை கொடக்கூலிக்கு எடுத்துக் கொண்டு, குபேர மூலையில் வெளக்கு பத்த வச்சு, சுப முகூர்த்ததில் பால் பொங்கி வர இல்லறமென்பது நல்லறமாய் தான் துவங்கி நகர்ந்த்தது. ஒரு வேளை நர்மதாவின் மினுங்கல் குழப்பமாகவே இருந்ததோ? அவளை தொடுவதற்கு குடி கொஞ்சம் வசதியாய் இருந்தது. பழகி விட்டால் பாயாசத்தையும் தான் விட முடியாது. இரவு நேரங்களில் அருள் பெரும்பாலும் குடித்திருந்தான். இரண்டு குழந்தைகளுக்கு அப்புறம் சாரி உன் பேரென்ன நர்மதா தான என்று வேறு அடிக்கடி கேட்டான். காசு கணக்கு வழக்கு தகராறில் பார் பையனை அடித்து விட்ட ராஜியை தட்டிக் கேட்கப் போய் ரத்தம் வழிய வந்து படுத்த அவனை கட்டிக் கொண்டு அழுத நர்மதாவை இப்போது நினைத்துக் கொள்கிறான். அவளது உடல் வாளிப்பை மறக்க முடிவதில்லை. காய்ச்சல் வருவதைப் போல உணர்ந்தான். ஒரு பெக்கை அப்படியே விழுங்கி விட்டு மிச்சம் இருந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு எழுந்தான். இவனையே பார்த்துக் கொண்டிருந்த ராஜியை நோக்கி நகர்ந்தான். ஒரு சிறிய பேனாக் கத்தி தான் இருக்கிறது. ஒரு ஆள் அடங்கிப் போக தாராளமாய் போதும்.

" வணக்கம் ! "

" ஆங்க், வணக்கம் ! "

அருள் ராஜிக்கு எதிரே உட்கார்ந்தான். ஒரு பெக்கை ஊற்றிக் கொண்டான்.

" நீயும் ஊத்திக்க ராஜி ! "

" சர்தான் ! "

" சீர்ஸ் ! "

" சீர்ஸ் ! "

ராஜி அய்யனார் சிவாவின் ஆள். சிவா என்றால் அந்தப் பகுதியின் ஆல் இன் ஆல் இல்லயா? கிட்டத்தட்ட பனிரெண்டு வைன் ஷாப்புகள். ஹார்ட் வேர் கடைகள். லாரி சர்வீஸ். எல்லா தொழிலிலும் கொஞ்சம் தில்லாலங்கடி இருந்தால் மட்டுமே பணம் கொட்டும் என்பதை தலைமுறையாகவே நம்பிக் கொண்டு வந்ததால் போலீசாரை ரவுடிகளாகவும், ரவுடிகளை போலீசாராகவும் கையாண்டு பொது மக்களையெல்லாம் வெறும் பீப்பிகளாக ஊதுகிற பிரமுகர். கட்சிகளின் கழகங்களின் அள்ளக் கைகள் எல்லாம் ஒரு கட்டத்தில் ராஜிக்கே வணக்கம் வைக்க ஆரம்பித்த போது தான் அவன் பல பேரை அடித்தது போல பார் பையனை அடித்தான். தட்டிக் கேட்ட அருளை அடித்தான். வானுலகம் என்னும் மாளிகையில் மின்னும் பூமகள் ஒருத்தி மறு நாள் வந்து ஏண்டா என் புருஷன அடிச்சே என்று கேட்டதை நம்ப முடியவில்லை. அவள் திட்டுவதை எல்லாம் கேட்டிராமல் அவளது கண்கள் விரிவதை, கன்னம் சிவந்திருப்பதை, உதடுகள் திறந்து மூடும் போது பற்கள் சிப்பி போலிருப்பதை பார்த்திருந்தான். நீ செவுடா என்று கேட்டு விட்டு அவள் ஒரு சி¡¢ப்புடன் போனது மனதில் சித்திரம் போல விழுந்து விட்டது, என்ன செய்ய? மறு நாளே காத்திருந்து சாலையில் பார்த்தான்.

" என்னா? "

" ஒன்ணும் இல்ல "

" இல்ல, நீ பாக்குற லட்ஷணத்த பாத்தா என்னவோ இருக்கு போலருக்கே? "

அவன் வெட்கப்பட்டு விட்டான். அவள் அவனை வினோதமான சிரிப்புடன் பார்த்துக் கொண்டு போனாள்.
அடுத்த முறை அவன் ¨தைரியமாகக் கேட்டு விட்டான்.

" வரட்டா? "

அருளிடம் சிலர் சொன்னார்கள். வீட்டுப் பக்கமோ, ரோட்டுப் பக்கமோ அவன் வருகிறானா என்று சாதாரணமாய் கேட்டான். அப்புறம் சில நாட்கள் கழித்து வலுவாய் கேட்ட போது அவள் என்னையா சந்தேகப்படுகிறாய் என்று கதறினாள். பின்னர் வழக்கம் போல ஒரு போதையில் ததும்பின கறுத்த பின்னரவில் வீட்டுக்கு வந்து கதவை தட்டிய போது ராஜி தான் வந்து கதவைத் திறந்தான். மேலுடம்பில் சட்டை இல்லை. இனிமேல் இந்தப் பக்கம் வராதே என்றான். குரல் மிகவும் கண்ணியமாயிருந்தது. அதே நேரம் அவன் கையில் பெரிய கத்தியும் இருந்தது.
மிகக் குறைந்த பட்ஷம் இதெல்லாம் நியாயமா, அடுக்குமா என்று நர்மதாவிடம் கேட்க விரும்பினான் அருள். இல்லை. அது முடியாது. அக்கம்பக்கத்தில் குடும்பங்கள் இருக்கின்றன என்று ராஜி கவனப்படுத்தினான். அதை விட ராஜி கத்தியை ஆட்டிக் கொண்டே பேசினது முக்கியம்.

எவ்வளவோ கலாட்டா. பஞ்சாயத்துக்கள். புகார் மனுக்கள்.

கடைசியில் அந்தத் தெருவின் முனையில் புட்டு இடியாப்பம் விற்கிற புஷ்பா அக்காவே சொன்னாள். " ஏம்பா, அவன் தான் அவள நல்லா வெச்சு பாத்துக்கறான் இல்ல? கொழந்தைங்களும் சந்தோஷமா தான் இருக்கு. நீ எதுக்கு வந்து தொல்ல குடுத்துனு இருக்க? எல்லாத்துக்கும் ஒரு நியாயம் வேணா? " என்ன சொல்லுவது. எறங்கி வாடி, வாடி என்று கெரசினை ஊற்றிப் பற்ற வைத்துக் கொண்டவன் இன்று உயிரோடு இருப்பது தெய்வாதீனம்.
உடலில் தீக்காயங்கள். முகத்திலும் கூட கொஞ்சம் இருக்கிறது. டுபாகூர் கான்வென்டில் திருடன் போல சென்று பிள்ளைகளை பார்க்கும் போது சிறியவன் அலறியே விட்டான். எப்படியும் ராஜிக்கு ஒரு நல்ல மனசு இருக்கவே தான் ஸ்கூல் பக்கம் போகவே முடிந்தது. அது மட்டும் அல்ல, அவர்கள் வீட்டு முன் நின்று கடை வைக்கிற நேரத்தில் அடித்த சரக்கு போதாது போலிருக்கும். இவன் ராஜியிடமே நூறு இருனூறு கேட்டு வாங்கிக் கொள்ளுவது தான். எப்போதும் இருக்கிற கூச்சலைத் தவிர்த்து அடங்கிய குரலில் அவர்களை கேலி செய்ய ஆரம்பித்தவன் காலப் போக்கில் தன்னைத் தானே கேலி செய்து கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பது ரசிக்கக் கூடியதாயிருந்தது.

" சைட் டிஷ் ஏதாவது சொல்லலாம். என்ன சாப்பிடறே ? " ராஜி கேட்கிறான்.

" எதுன்னா சொல்லு. "

" முட்ட போட்டி? அது இங்க நல்லா இருக்கும். "

" சரி , சொல்லு. "

சிவா தனது வைன் ஷாப்புகளுக்கு பக்கத்திலேயே போலி சரக்கு செய்யும் கிடங்குகளை வைத்திருப்பான். அதை பகிரங்கமாக தனது கடையில் வைத்து வியாபாரம் செய்வதை குடிகாரர்கள் பார்க்காமலா இருந்திருப்பார்கள்? இரவு பனிரெண்டுக்கு மேல் மும்முரமாய் வியாபாரம் நடந்து பணம் குவியும். ஒரு தடவை மார்ச்சுலரி ஸ்பிரிட்டில் எதுவோ கலந்து குழப்பமாகி நாலு பேர் மண்டையைப் போட்டு விட்டார்கள். போலீசுக்கு ஏதோ ரெண்டு பேராவது கேசுக்கு தேவைப்பட சிவா ராஜியை போடா என்றார். நோ. வாய்ப்பே இல்லை என்றான் அவன். எத்தனை பிரச்சினைகளுக்கு நடுவில் அவன் நர்மதாவை பாதுகாத்துக் கொண்டிருக்கிறான்? விளையாட்டா. சொன்ன பேச்சைக் கேட்காத ராஜியை அவர் பார்த்தார். அந்த சாம்ராஜியத்தில் அந்த மாதிரி ஆட்களுக்கு இடமே இல்லை. ஒரு நாள் இரவு சுற்றி வளைத்த போலீசு அவனை கஞ்சா கடத்தி வைத்து இருந்ததற்கு சிறை பிடித்தார்கள். வெளியே வந்த பிறகு வேலை இல்லை. நர்மதா ஒண்டியாய் வேலைக்குப் போய் பிள்ளைகளை காப்பாற்ற ஆரம்பித்தாள். அலுப்போடு தள்ளிப் படுத்து தூங்கினாள். ராஜி ஆட்டோ கீட்டோ ஒட்டி தான் குடிக்கவே முடிந்தது. சிவாவின் ஆள் இல்லை என்பதால் மதிப்பு மரியாதை இல்லை. சிலர் என்னடா என்று உறுமி அடிக்கவே வந்தார்கள். எதுவும் பிடிக்கவில்லை. நர்மதாவையும் குழந்தைகளையும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவள் தான் இப்போது வாழ்கிற வாழ்க்கையை கேவலமாக கருதுவதாகவும் தன்னை புழுவாக பார்ப்பதாகவும் அவன் புகார் செய்தான். அதில் பாதிக்கு பாதி உண்மையாகவும் இருந்தது.
ஒரு நாள் அவள் முகத்தை உடைக்க வேண்டும் என்று முடிவு செய்து, முஷ்டியை வீசிய போது நம்பவே முடியாத அளவு மூர்க்கத்துடன் அவள் அருவாள்மனையை தூக்கிக் கொண்டு வெட்ட வந்தாள்.
மானம் கெட்ட வாழ்க்கை வேண்டாம் என்று வெளியேறி வந்தாயிற்று.

" என்ன ராஜி யோசிக்கறே? "

" நீ என்ன யோசிக்கற? "

" இப்ப கூட நெனச்சா நான் உன்ன போடுவேன்! "

" சும்மா இரு அருளு "

" டேய், போடுவண்டா ! "

" தூ! "

பேனா கத்தி சரி தான். ஆனால் அதை ராஜி பிடுங்கி எறிந்து விட்டான். இருவரும் கட்டிக் கொண்டு உருண்டார்கள். இரண்டு பேருக்குமே ரத்தம் வந்தது. லாக்கப்பில் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு காயிதம் பொறுக்கியிடம் பீடி வாங்கிப் புகைத்தார்கள்.

" ஏ அருளு. உன்ன மாதிரி ஒரு நல்லப் புருஷன் எவளுக்கு கெடைப்பான்? இருந்தாளா. உன்ன விட்டுட்டு என் கூட ஒடி வரல? சரி , என் கூடயாவது இருக்கணுமே? இருக்க மாட்டா. அவளால நீயும் நல்லால்ல. நானும் நல்லால்ல. எப்டி இது? "

இன்ஸ்பெக்டர் வந்ததும் எல்லோரையும் வெளியே துரத்தி விட அய்யனாருக்கு வந்து சைடில் சரக்கு வாங்கிக் குடித்து ஆவேசத்துடன் பேசியவாறிருந்தார்கள். இறுதியில் அவர்கள் இருவருமாய் சேர்ந்து அவளது கழுத்தை நெருக்கிக் கொன்று தொங்க விடுவதாய் முடிவாயிற்று.

நடக்க ஆரம்பித்திருந்தார்கள்.

" நடவடிக்கை சரியில்லாத பொம்பளைங்களுக்கு இது ஒரு பாடமா இருக்கணும் ! " இதை இருவரில் யார் சொன்னது என்பது கேட்கவில்லை.

No comments:

Post a Comment