Wednesday, November 30, 2011

"நவம்பர், இன்று மழை தினம் !"








இது
மழை தினம்.

ஜன்னலுக்கு அந்த பக்கம்
உற்சவம்.
இருப்பினும் எனது வெறிப்பை
சுற்றிச் சூழ்ந்து
சாம்பல் பூக்கிறது

என்ன வேண்டும்
ஒரு கப் தேனீர்,
அல்லது ஒரு கோப்பை விஸ்கி?

எதிர்பாராத தொலைபேசியில் இருந்து
நம்பிக்கையூட்டும் ஒரு அழைப்பு ?

ஒரு பெண்ணின் வம்பளப்பு ?

அடுத்த நிமிடத்தை கூட
புதிராய் வைத்திருக்குமாமே
அந்த வாழ்வின்
ரகசியம் ?

இறந்து போகக்கூடிய தேதி ?

இல்லை
தெரியவில்லை.

குளிர்ந்த மரக்கட்டை மீது
ஊர்ந்து கொண்டிருக்கிறது
அந்த மரவட்டை
மழையின்
ஒரு பகுதியாகவே

மனசுக்கும்
மழைக்கும் இருக்கிற தூரத்தை
அளக்கும் போது
எத்தனை சிறியவன் என்று
வியக்கிறேன்.

கனம்
குறைகிறது.

இப்போது இந்த கவிதையை எழுதி முடித்து
என்னை நான் ஏமாற்றிக் கொள்ள முடியும்.






No comments:

Post a Comment