Friday, November 4, 2011

நூற்றாண்டுகளாய் தேடப்படும் ஒருவன்










மனிதன்

எத்தனை மனோகரமான
பதம்
என்றான் ஒருவன்

மனிதன்,
மகத்தான சல்லிப்பயல்
என்று நொடித்தான்
அனுபவத்தில்
மற்றொருத்தன்

உனக்கு தெரிந்திருக்குமே
மனிதனை காணும்போது
கண்ணீர்
முட்டுகிறது
காணாதிருக்கையில்
திடுக்கிட்டு தளர்கிறோம்

நிலைக்கண்ணாடியில்
ஒரு நாள் ஓநாயும், ஒரு நாள் கடவுளும்
வந்து போனால் கூட
மனிதன் தெரிகிற நாள்
மறந்து போகிறது
என்பது ஒரு
புதிர்,

அவன் ஏன் ஒரு இடத்தில் தங்குவதில்லை

அறைகூவல்களில் வாழ்கிற
புழுத்த வேசியின் வீட்டில்
அவன் வந்து போகலாம் என்றாலும்
பல்லக்கு வைத்து காத்திருந்தால்
ஏற வருவது
ஒரு ரத்தக் காட்டேரியாய்
இருக்கிறது

நான் நினைக்கிறேன்,
கடவுளுக்கு தந்தை மனிதன் தான்
நெறி புரண்ட தன் தாயை வைதபடி
ஒரு வேளை அந்த கடவுள்
கத்தியோடு அலைந்து கொண்டிருக்கலாம்

உன் வீட்டிலோ
என் வீட்டிலோ
மனிதன் ஒளிந்து கொள்ள
வாய்ப்பில்லையென்றால்
யார் வீட்டில்
இருப்பான்
அவன்
 



 

No comments:

Post a Comment