Thursday, November 29, 2018

இதெல்லாம் இப்போதில்லை
சூரியனின் முள் குத்தாத பின் தெருக்களில்
சுடுகின்ற சாராயத்தை நக்கிக் குடிக்கின்ற
திமிரின் நாளில்

சொல் சுழற்றி
கண்ணீரில் ததும்பினவளை
தட்டி வனைந்து
சாயந்திர முத்தத்தை உறுதி செய்து
பஸ் ஏறி சென்று பார்த்தது
சுனைனாவை
நான்கு வயது அவளுக்கு
நண்பன் இஸ்மாயிலின் சோதரி மகள்
தலைக்குள் முற்றிய புற்றோடு சிரிக்கும் சவுந்தர்யம்
பலரும் பார்த்திருக்க மாட்டார்கள்
அவள் வரைந்து சுவரில் ஒட்டப்பட்டிருந்த கிதாரில்
மரணத்தை மீட்டிக் கொண்டே
உறுதி செய்திருந்த முத்தம் பிடுங்கினேன்
ஒரு கொலைகாரன் போல

இப்போதெல்லாம் அப்படியில்லை
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
சுனைனா சாவுக்கு அர்த்தம் கற்பிக்க தெரியும்
கடவுளைக் காப்பாற்றிக் கொள்ள தெரியும்
ஏன், வம்பு சண்டை வாங்காமல் வரும் கண்ணீரை கவனிக்காமல்
முத்தம் வாங்கியும் போகத் தெரியும்.

சூரிய முள் மட்டும் குத்தியவாறிருக்கிறது.

No comments:

Post a Comment