Friday, March 9, 2012

சர்வைவல் ட்டூ பிட்டஸ்ட்




ஜமுனா ராணி

இப்டி எல்லாம் நடக்கும்ன்னு நான் நெனைக்கவே இல்ல. இப்ப இருக்கறது சந்தோஷமா பயமா. ஸ்டீபனுக்கு எவ்ளோ தைரியம் பாருங்க. ஆனா அவர பத்தி ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சம் தெரியும். எப்பவாவது திரேசா ஆன்டி கிட்ட கடுகு பருப்பு கேட்டு வாங்கறதுக்காக போறப்ப ஆண்டிக்கு தெரியாம என்ன ஒரு மாதிரியா பாப்பார். அப்படியே நோண்டறா மாதிரி இருக்கும். அதிகம் போனா ஆண்டியோட குடும்பம் இங்க குடி வந்து ஒரு வருஷம் இருக்குமா. ஸ்டீபனோட அப்பா, அப்பா மாதிரி இல்லாம தாத்தா மாதிரி இருப்பார். வாம்மா ஜமுனா ராணி, இன்னும் நீ வேலைக்கு கெளம்பலையான்னு ரொம்ப கரகரப்பா இழுத்துகிட்டே பேசுவார். திரேசா ஆன்டி மாதிரி இருக்கற திம்சுகட்டய எப்டி தான் சமாளிக்கிறாரோ. மூத்த சம்சாரத்து பையன்னா கூட நீங்க ஸ்டீபன் மேல ரொம்ப அன்பா தான் இருக்கீங்கன்னு நான் ஆன்டி கிட்ட சொல்லியிருந்தாலும், பாவம் தாயில்லா புள்ளையின்னு நான் ஸ்டீபன நெனைச்சுக்குவேன். ஆனா அவரா பாவம்? ஏற்கனவே ஒரு தடவ அவங்க வீட்டுக்கு போனப்ப அங்க யாரும் இல்லையா, அப்பவே தைரியமா என்கிட்டே உள்ள வா, உள்ள வான்னாரு.

"ஆண்டி எங்க ?"

"ஏன், ஆன்டி இருந்தா தான் வருவியா, இந்த மாதிரி சந்தர்ப்பம் கெடைக்காதும்மா. உள்ள வா"

"எதுக்கு?"

"எதுக்கா ? பச்ச புள்ள மாதிரி நடிக்காத" ன்னு ஸ்ட்ரையிட்டா என் மார பிடிக்கறா மாதிரி வரவே, சட்டுன்னு ஓடி வந்துட்டேன். அப்புறம் எப்பவாச்சும் ரோட்ல என்ன க்ராஸ் பண்ணி போறப்ப, "கழுத்தறுத்துட்ட பாத்தியா, நம்ப வச்சு ஏமாத்திட்ட பாத்தியா" ன்னு சைடுல மொனகிகிட்டே போவார். அய், நல்லா இருக்கே இந்த கத, நான் எப்ப நம்ப வச்சேன். நான் எப்ப ஏமாத்தினேன்னு நெனைச்சுப்பேன். இருந்தாலும் அவர பாக்கறப்ப எல்லாம் ஜிவ்வுன்னு ஆயிகிட்டே தான் இருந்திச்சு.




"ஒரு நாளு மத்தியானம் லீவு போட்டுட்டு வீட்டுக்கு வந்துரு " ன்னாரு.

"ஏன்?"

"எல்லாரும் வெளிய போறாங்க. வீடு காலி. ஒரு ரெண்டு மணி வாக்குல உள்ள வந்துரு"

"ஆங், ஆச தோச! "
"அப்ப வர மாட்டியா ?"

"இங்க பாருங்க. நீங்க இப்டி எல்லாம் என்கிட்டே தப்பு தப்பா பேசாதீங்க. லீவு போட்டுட்டு வந்தா எங்க வீட்ல என்னதுன்னு கேக்க மாட்டாங்க ?"

"ஏய், எதையாவது புளுவி உடு"

"ஆங், எனக்கு பொய்யெல்லாம் வராது. ரெண்டு மணிக்கு மேல லீவு போட்டுட்டு வந்தவ எங்கன்னு அம்மா தேட மாட்டாங்க?" ன்னு சொல்லிக்கிட்டே நான் வந்துட்டேன். மறுநாள் கம்பெனியில துணி தச்சிகிட்டே என்னத்த செய்றதுன்னு புரியாம தான் இருந்தேன். நூறு பொண்ணுங்களுக்கு நடுலயே அவரு வந்து என் துணிய எல்லாம் அவுக்கற மாதிரி நெனப்பு வந்து பயமாய் போச்சு. அம்பாள  மனசுல நெனைச்சுக்கிட்டு தாக்கு புடிச்சுட்டேன். மறுநாள் என்ன பார்த்த போது அவுரு பேசல. மூஞ்ச தூக்கி வச்சுகிட்டு விருட்டுன்னு போயிட்டார். நான் அன்னைக்கு ராத்திரியெல்லாம் தூங்காம தான் விழிச்சு கெடந்தேன்.  அப்புறம் நைசா எழுந்து போயி கொஞ்சம் தூரத்துல இருந்த அப்பாவோட மேஜை மேல தொழாவி பாகவதத்துக்கு அடில இருந்து அந்த குட்டி பொஸ்தகத்த கொண்டு வந்து படிக்க ஆரம்பிச்சேன். இது புதுசு தான். இன்னைக்கு காலைல வாங்கியிருப்பாரு போல. ஏழெட்டு கதைல 'பக்கத்துக்கு வீட்டு பருவ  சிட்டு' தான் எனக்கு புடிச்சு இருந்துச்சு. ஏதோ கதிர்வேல்ன்னு ஒரு அண்ணன் ஒரு வாரத்துக்கு முன்னால வயசு வந்த சித்ராவ எல்லாமே பண்றாரு. நான் வயசுக்கு வந்து மூணு வருஷத்துக்கு மேலே இருக்கும். கதிர்வேல் அண்ணனை விட எனக்கு தெரிஞ்சி ஸ்டீபன் ரொம்ப மோசம். அவுரு பார்வையே கற்பழிக்கறா  மாதிரி இருக்குன்னா நேர்ல போனா என்னவெல்லாம் செய்வாரு?

காலைலயும் பாக்காத மாதிரி அவர் போவவே 'ஏங்க' ன்னு நானே கூப்பிட்டேன்.

நின்னாரு.

என்ன பேசறது? "நேத்து உங்க வீட்டுக்கு ராணி புக்கு வந்துருச்சா?"

"ஏ, இனிமே உன் கூட பேசறதா இல்ல. ஏதோ புடிச்சி போச்சேன்னு கால்ல விழுந்தா ரொம்ப தான் பண்ணிக்கறியே" ன்னு போயிட்டார்.

எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா போச்சு. பாவம் நம்ப மேல லவ்வாயிட்ட ஒர்த்தர இப்படி நான் அலைகழிக்கறது தப்பு தான். ஆனா உஷாவோ, ரமணியோ, நூர்ஜகானோ வேற மாதிரி இல்ல லவ் பண்றாங்க?. ஹான்ட் பாக்ல மூணு பேருமே லெட்டர்ஸ் வச்சுருக்காளுங்க. எல்லாத்துலேயுமே தவறாம ஐ லவ் யூ ன்னு இருக்கு. அந்த பாஷா கிஸ் மீ ன்னு கூட எழுதியிருந்தான். அப்ப அப்ப  பீச்சுக்கெல்லாம் கூட போவாங்க தான். உஷாவோட ஆளு நான் உன் வெரல தொட்டு பாக்கட்டுமான்னு அழுதுகிட்டே கேட்டானாமே?

ரோடு மொனைக்கு போனா ஸ்டீபன் ஒரு பைக்குல எதிர வர்றார். நான் சிரிக்கலாமான்னு யோசிச்சு அழுவறா மாதிரி ஆயிடவே சட்டுன்னு போவ பாத்தேன்.



"போறியா, போ"

"என்னன்னு சொல்லுங்க"

நீ நல்ல பொண்ணு, எனக்கு தெரியும். என்ன மாதிரி உனக்கும் ஆச இருக்காதா?. ஆனா ரெண்டு பேருக்கும் நம்ம வீடு ராசி இல்ல" 

" .........  "

"வர்ற திங்ககெழம லீவு போட்டு வெளிய போலாம்"

" ................"

"திங்ககெழம வரல வச்சுக்க, அத்தோட நான் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன்"

அதுக்கு மேல நான் தான் என்ன பண்ண முடியும்?

நேத்து ஞாயித்து கெழம பூரா இருப்பே கொள்ளல. வழக்கமா நடக்கற மாதிரியே அப்பா கறி எடுத்துகினு வந்தார். தலைல எண்ண தேச்சு விட்டுட்டு, கொஞ்சம் அம்மாவுக்கு கிச்சன்ல ஒத்தாசையா இருந்துதுட்டு மதியம் tv பாத்துகிட்டே, கறி சோற ஒரு கட்டு கட்டறது தான். ஆனா நேத்து முடியவே இல்ல. சாப்டறதெல்லாம் ரிட்டன் வந்துடறா மாதிரி ஒரு பீலிங். அதே மாதிரி நைட்டும் தூக்கம் இல்ல.

இப்ப முடிய கட்டி போட்டு பாதியா கெடக்கற கண்ணாடில மூஞ்சிய பாத்து பொட்டு வைக்கறப்ப அம்மா டிபன் பாக்ஸ கொண்டு வந்து தர்றா. அத ஹேண்ட் பேக்குக்குள்ள வைக்கறப்ப ஒரு நடுக்கம். சந்தேகமா நான் அம்மாவ ஒரு தடவ பாக்கறதுக்குள்ள அவ பாட்டுக்கு போய்கிட்டுருந்தா. இருந்தாலும் என் மனசு ஆறுதலுக்காக 'யம்மா, இந்த மாசம் சீட்டு பைசாவ நாலாம் தேதியே குடுத்துரலாம்' ன்னு சொல்லி வச்சேன். வெளிய வர்றப்ப அவுஸ் ஓனர் பொம்பள தான் உஷாரா கேட்டுச்சு. "என்னாடி, வேலைக்கு போறதுக்கு போன வாரம் எடுத்த டிரெஸ்ஸ போட்டுக்கிட்டு போற? வெளிய எங்காச்சும் போறீங்களா?"

சனியனுக்காக ஒரு சிரிப்ப காட்டிட்டு ஒரு வழியா படி எறங்கறப்ப ஏதோ டட்டடயின்னு மீயுசிக் கேட்ட மாதிரி இருந்திச்சு.

* * *

தரணி


அப்பா அம்மா ரெண்டு தங்கச்சிங்கன்னு மொத்த குடும்பமா தான் ஏரியாவுல இருக்கற முருகன் கோவிலுக்கு வந்தோம். அய்யரு  பாலாபிஷேகம் பண்ண பால அம்மா கிட்ட குடுத்தார். மூணு மாசத்துக்கு ஒரு தடவ முருகன குளிர பண்ணனும்ங்கறது எங்க குறிக்கோள். அப்பாவும் நானும் சாஷ்டாங்கமா விழுந்து கும்பிட்டதுக்கு பெறகு அத்தன பேரையும் கார்ல ஏத்தி வுட்டேன்.

டைம் என்ன?

ம், இன்னும் பத்து நிமிஷத்துல நான் அண்ணாநகர் ரவுண்டானால இருந்தாவணும். இன்னைக்கு பாக்டரிக்கு வர மாட்டேன்னு அப்பா கிட்ட நேத்தே சொல்லியாச்சு.

பைக்க எடுக்கறதுக்கு முன்னால பாக்கெட்டுல பணம் எவ்ளோ இருக்குன்னு பாத்துகிட்டேன். இவ்ளோ காசு இருக்குதுன்னு வெளிய காட்டிக்க முடியாது. முக்காவாசி அமௌன்ட்ட டிக்கெட் பாக்கெட்ல பதுக்கி வெச்சுகிட்டேன். கெளம்ப வேண்டியதுதான்.

பைக்குல போறப்ப ஒரே சிந்தனை. வளர்மதிய பிக்கப் பண்ணி கூட்டிகிட்டு வரேன்னு ஒரு வார்த்த சொன்னது உண்மைதான். ஆனா அத நான் சும்மா தான் சொன்னேன். ஏன்னா வளர்மதிய தேவைக்கு அதிகமாவே அனுபவிச்சுட்டேன். எள்ளுன்னா எண்ணையா நிக்கறதுக்கு அவ ரெடிதான். புருஷன்காரனுக்கு டேக்கா குடுத்துட்டு நான் எங்க கூப்பிட்டாலும் வந்துருவா. ஆனா சும்மா சும்மா அவ கிட்டேயே போறதுல என்ன இருக்கு. ஏதாவது குட்டி கத சொல்லி கூட்டிட்டு வர முடியலன்னு சொல்லிற வேண்டியது தான்.



இந்த ப்ரோக்ராம் பிக்சாயி நாலு நாள் ஆச்சுன்னு நெனைக்கறேன். போலிஸ் கோட்டர்சாண்ட மொத்த கும்பலும் உட்கார்ந்து தண்ணி போட்டுகிட்டிருந்தோம். போன கத, வந்த கத, சினிமா கதைன்னு நெறைய பேசி லாஸ்டா பெரிய தம்மு அடிக்க ஆரம்பிச்ச பெறகு ஒவ்வொருத்தனா மயக்கத்தோட கெளம்பி போனானுங்க.  கடைசியா மிஞ்சினது நானும் அவனும் தான். வளர்மதி யாருன்னு தெரியாட்டாலும் அப்பப்ப விசாரிக்கறது அவன் வேல. நானும் கொஞ்சம் ஓவராவே அளந்து விடுவேன். அப்டியே செவந்து போய் தலையாட்டிகிட்டு இருந்தவன பாக்க பாக்க நான் பாட்டுக்கு நாங்க ரெண்டு பேரும் எந்த மாதிரியெல்லாம் சர்க்கஸ் பண்ணி இன்பத்தை அனுபவிப்போன்னு தொரட்டி போட்டுகிட்ருந்தேன். பயலுக்கு கடசியா ஒண்ணும் முடியல.

ஏதாவது எட வசதி பண்ணி தர முடியுமான்னு கெஞ்ச ஆரம்பிச்சான்.

"ஏய், மொதல்ல பிகரு யாருன்னு சொல்லு" ரொம்ப நேரத்துக்கு அப்புறம் தான் அது விட்டாண்ட இருக்கற பொண்ணுன்னு சொன்னான்.

"என்ன வயசு இருக்கும்?"

"16 , 17 , 18  அதிகமா போனா பத்தொம்பது. அதுக்கு மேல இருக்காது"

எனக்கு அந்த போதைலயும் நச்சுக்கா ன்னு வந்துச்சு. வெட குட்டி தான் அப்ப. கன்னி கழிக்க போறானா?. கொல்லி மலைல ஒரு சித்தரு - இல்ல அவன் சித்தரா - ஒரு பரதேசின்னு வச்சுக்கலாம். வெட குட்டிங்கள பத்தி பக்காவா ஒரு மேட்டர் சொன்னது ஞாபகம் வந்துச்சு.

கடுப்புல கெளம்ப பாத்தாக்கா ரொம்பவே கெஞ்ச ஆரம்பிச்சான்.

"மச்சான், நான் என் வீட்டாண்ட சிச்சுவேஷன்க்கு ஏத்தா மாதிரி தோது பண்ணிப்பேன். நீ அவ கூட அங்க வர முடியாதுடா" என்று யோசித்துவிட்டு " திருத்தணியில நெறைய லாட்ஜ் இருக்கு, கெளம்பி போயிருவோமா?" ன்னேன்.

அவன் யோசனை பண்ணும் போதே "நீ பிரகாஷ் பைக்க வாங்கிக்கோ. நான் என் பைக்க எடுத்துட்டு வரேன். அவ வருவாளா?"

அவன் பறுபடி யோசனை பண்ணிகிட்ருக்க, "நீ உன் பைக்குல அவள ஏத்திக்கோ. நான் என் பைக்குல வளர்மதிய உட்கார வச்சினு வரேன்"

அதுக்கு அப்புறம் கட கடன்னு ஸ்கெட்ச் ஓடிச்சு. எப்பவும் பண விஷயத்துல கறாரா இருக்கணும். எங்க தாத்தா, அப்பா,  இப்ப நான் எல்லாருமே அப்படி தான். எதையுமே ப்ளான் பண்ணி பக்காவா செய்யறது. பத்து பைசா வெரயமாவாம பாத்துக்கறது. கடசியா ஒரு அமௌன்ட்ட  சமாளிச்சு கொண்டு வர்றதா அவன் ஒப்புக்கிட்டான்.

ரவுண்டானா பக்கத்துல வந்த உடனே ஸ்டீபன் கொழம்பி, "என்னடா, வளர்மதி எங்க" ன்னு அவசரப்பட்டான்.

நான் சிரிச்சேன். ஏன்னா ஒரு கதயயே சொல்லி ஆவணுமே " அது சின்ன பிராப்ளம் மச்சான். அவ புருஷனுக்கு தம்பி ஒர்த்தன் ராணிப்பேட்டைல இருக்கான். அந்த நாயோட பொண்டாட்டிக்கு காலைல தான் டெலிவரியாயிட்டுருக்கு. இவ அவங்களுக்கு தொணையா இருக்க நேத்து நைட்டே கெளம்பி போயிட்டிருக்கா. " ன்னு சொல்லி முடிச்ச கையோட " அந்த பொண்ணு பேரு என்ன சொன்ன, ஜமுனா, ஆங், அவ வரல?" ன்னு கேட்டேன்.




என் படபடப்பு அவனுக்கு பிடிக்கலன்னு நல்லா தெரியுது. கொஞ்சம் ராங்கித்தனமா " அவ ஆர்ச்சாண்ட வெயிட் பண்ணுவா. நீ கெளம்பு. திருத்தணி போறதுக்கு எனக்கு வழி தெரியும்" ன்னான்.

"என்னடா, இப்டி வுட்டு போற?"

"அப்புறம்? உன்ன கூட்டினு போயி நான் என்னா பண்றது?  நாங்க லாட்ஜ காலி பண்ணிட்டு வர்ற வர நீ கோயில்ல இருக்கிறியா?"

"மச்சான், என்ன சொல்ற மச்சான்?"

"ஏ, வேற என்னடா சொல்லுவாங்க. போ. போ. நான் கெளம்பறேன்"

அவன் வண்டியை ஸ்டாட் பண்ணிட்டு போவ, ஒரு செகண்டு நின்னுட்டு நானும் வண்டிய எடுத்தேன். அவன் பின்னாலயே போனேன். ஸ்பீடா எல்லாம் ஓட்டி டிமிக்கி குடுக்க பாத்தான். நான் வுடல. அப்புறம் என் பக்கமே திரும்பாம கடசியா அந்த பொண்ணு இருக்கற எடத்துக்கு போயிட்டான். நான் தூரமாவே நின்னேன்.

என்ன கவனிக்காத மாதிரி அவள ஏத்திகிட்டு வண்டி கெளம்ப, நானும் பின்னாலயே போனேன். ஒரு கட்டத்துல வண்டிய நிறுத்திட்டு, அவ கிட்ட எதையோ சொல்லிட்டு ஆத்தர அத்தரமா என் பக்கத்துல வந்தான்.

"டேய், மயிராண்டி, அறிவில்ல உனக்கு? எதுக்கு நாய் மாதிரி பின்னால வந்துனு இருக்கற நீ?"

"மச்சான், ரெண்டு பேரும் சேந்து தானே ப்ரோக்ராம் போட்டோம்?"

"அதுக்கு? ங்கோத்தா, என்னா சொல்ல வரே நீ ? அவ என்ன லவ் பண்ற பொண்ணுடா!. நானும் அவள லவ் பண்றேன்!. காதல் புனிதமானதுன்னு தெரியாதா உனக்கு?"

"டேய் அதெல்லாம் விட்றா. எப்படியும் கோவில் பக்கத்துல இருந்து நான் ஒரு மேட்டர புடிச்சிடறேன்."

"கெடைக்குமா ?"

"ஏன் கெடைக்காது ?"

"ஜமுனா யாருன்னு கேப்பாளே ?'

"அப்படியா?"

"சரி விடு. ஏதாவது சொல்லி நான் அவள சரிக்கட்டிக்கறேன். டேய் தரணி!"

"என்ன ?"

"என் கூட வர்றவ ஒரு குடும்பத்து பொண்ணு. வற்புறுத்தி கெஞ்சி கூத்தாடி அப்றம் அவ அர கொற மனசோட தான் என் கூட வந்திருக்கா. மச்சான் காண்டு பண்ணிடாதடா. என் லவ்வ ஸ்பாயில் பண்ணிடாத, புரியுதா?"

டேய், நானும் ஒரு குடுபத்துல இருந்து வந்தவன் தாண்டா. எங்களுக்கெல்லாம் அக்கா தங்கச்சிங்க இல்லையா?"

 * * *


ஜமுனா ராணி


இது ஆந்திராவா இருக்குமா ? அது எப்டி?. திருத்தணிக்கு போற வழில ஆந்திரா எப்படி வரும்? வெயிலு ரொம்ப பச்சையா அடிச்சிட்டிருந்துச்சு. அங்க ஒரு ஒடைஞ்ச கோபுரம். மதில் சொவர சுத்தி ஒரே பொதரு. கண்ணு மண்ணு இல்லாத ஸ்பீடுல வண்டிங்க போவுது. T கடையில இருக்கவங்க ஒரு மாதிரி தான் பாக்கறாங்கன்னு நல்லா புரியுது.

ஸ்டீபனுக்கு  என்ன ஆச்சு . ரொம்ப வெறச்சுகிட்டு  சிடுசிடுப்பா  இருந்தாரு . "உனக்கும் T சொல்லட்டா?" ன்னு கேட்டதே வேண்டா வெறுப்பா இருந்திச்சு.

நான் சரின்னு சொல்றதுக்குள்ள தூரமா போயி ஒண்ணுக்கு அடிச்சுட்டு வந்த அவரோட பிரெண்டு " T ஆவாதுன்னா காபி சாப்புடும்மா, இல்லன்னா சைனா T சொல்றேன்" ன்னார்.

"டேய், நீ கொஞ்சம் சும்மா இர்றா. உனக்கு நான் T  யே சொல்றன்".

"அது வந்து... " ன்னு ஸ்டீபன் காதுல "பாத்ரூம் போவணும்" ன்னு இழுத்தப்ப அவுருக்கு கொஞ்சம் ஷாக்கு. அப்டி இப்டி பாத்துட்டு தலைய சொறிஞ்சார். எப்டியும் இதுக்கு மேல கூட வண்டில உட்கார்ந்து கிட்டு தான் போவணும். அடிவயிறு பேஜாரா இருந்துச்சு. எங்க முடியாதுன்னு ஆயிடுமோன்னு நான் கொஞ்சம் பயந்துட்டேன் போல.

"என்னம்மா பிரச்சனை?" பிரெண்ட் கேட்டார். அதுக்குள்ளே "இன்னும் கொஞ்ச தூரம் தான். அங்க ரூம்ல பாத்ரூம் இருக்கும்." ஸ்டீபன் பல்ல கடிச்சாரு. பிரெண்ட் அப்டிக்கா போயிட்டார். இவரு தெக்கால போயி எதுவும் சரியில்லங்கறா மாதிரி வர்றதுக்குள்ள பிரெண்ட் திரும்பி வந்து "கடக்காரன் கிட்ட பேசிட்டம்மா ஜமுனா. பின்னால சைடு ஒரு பாத்ரூம் இருக்காம், வா !" ன்னார். நான் முழிச்சேன் ஸ்டீபன பாத்து.




அவர் ஏதோ சொல்றதுக்குள்ள " நீ அந்த கடைல ரெண்டு தம்மை வாங்கிகிட்டு மூணு  டீ சொல்லு. வாமா ஜமுனா, டேய் பொம்பளைங்க செரமத்த புரிஞ்சிக்கமாட்டியா?" ன்னும் போதே ஸ்டீபன் போய்ட்டார்.

நான் பிரெண்டு கூட போனேன்.

அந்த ஊர்கார பொம்பள ஒருத்தி கிட்ட என்ன கொண்டு போய் விட, அந்த அம்மா காட்ன எடத்துக்கு போய் நான் திருப்தியா வந்தப்ப பிரெண்டு எனக்காக இன்னும் வெய்ட் பண்ணிக்கிட்ருந்தார்.

"ஓகேவாம்மா?"

"ஓகே சார்"

"ஐய்யய்ய, நான் சார் எல்லாம் கெடையாது. என் பேரு தரணி. "

ரெண்டு பேரும் வந்து சேந்தப்ப ஸ்டீபன் காட்டுத்தனமா சிகரெட் பொகைய மூக்குலயும், வாயிலயும் உட்டாரு. நான் அவுரு கண்ண பாக்க  அவுரு வேற பக்கம் திரும்பிகிட்டாரு. தரணி ஜென்டிலா சிகரெட்ட வாங்கிட்டு, "நான் அந்த பக்கம் போய் புடிச்சிட்டு வந்திடறன். ஏன்னா நான் உடற பொகைய நீ சுவாசிக்க வேணாம்." ன்னு போனபெறகு ஸ்டீபன் என்ன பாத்தார்.

நான் அவுர பாத்தேன்.

"அந்த நாய்க்கு பொறந்தவன பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?"

"என்ன சொல்றீங்க ஸ்டீபன்?"

'என்னவோ கொஞ்சறான்!. நீயும் அப்படியே அவனுக்காக சாவற?"

"சீ, சீ, என்ன ஸ்டீபன், என்ன பேச்சி பேசறீங்க நீங்க?"

"ஆங்,  லவடா  பேச்ச பேசறேன்."

"இங்க பாருங்க அவர பாத்தாலே எனக்கு புடிக்கல." ஸ்டீபன் என்னையே பாக்க "இப்படியா ஒர்த்தர் குண்டா, தடியா இருப்பாங்க ? அவுரு நடக்கறதே ஆணக்குட்டி நடக்ற மாதிரி இருக்கு." ன்னு சொன்னேன். ஸ்டீபன் கண்ணு இன்னும் விரியவே எனக்கு ரொம்ப சந்தோஷம். "இவரையெல்லாம் ஏதாவது ஒரு பொண்ணு கட்டிக்குவாளா?"

நம்பலாமான்னு ஒரு பார்வ.




"கொஞ்சம் உற்சாகம் ஜாஸ்தியாய் போய், "ரொம்ப அசிங்கமா இருக்காருல்ல?" ன்னு கூட சொல்லிவச்சிட்டேன். ஸ்டீபன் தரணி இருக்கிற எடத்துக்கு சந்தோஷமா போவவே, ஸ்டீபன் முதுக பாக்கறா மாதிரி அவர பாத்தேன். ஐயோ, அவரு என்னையே தான் பாத்துகிட்டு இருந்திருக்காரா?

* * *


ஸ்டீபன்

மலைமேல இருக்கிற வேல் எல்லாம் தெரியுது. அங்கதான் இருந்திச்சி அந்த லாட்ஜ். ரெண்டு ரூம் போட்டோம். பாவம் ஜமுனா ராணி கொஞ்சம் பயந்து போய் நின்னுட்டுருந்தா. அவள சமாதானமா தட்டி குடுத்து ரூம் உள்ள உட்டுட்டு நான் வெளிய வந்து தரணிகிட்ட "போ" ன்னேன்.

"எங்க?"

"பிகர் கெடைக்குதா பார்ரா."

"கெடைக்கும்ங்கற ?"

"நீ தான கெடைக்கும்ன்னே?"

அவன் என்னை பாக்க, நான் அவனையே பாக்க சட்டுன்னு போனான்.

நான் பாத்துகிட்டு நிக்க, திரும்பி பாத்து, " கெடச்சா பாப்பேன் மச்சான், இல்லன்னா ஷேர் தான்" ன்னு சொல்லிட்டு மறைஞ்சான். எனக்கு தகதகன்னு எரிஞ்சுது. எதுக்கு இவள கூட்டிகிட்டு வந்தேன். இவன எப்படி இதுக்கு நடுல இழுத்து விட்டேன். எல்லாத்தையும் இதுக்கு மேல கோர்வையா யோசிக்க முடியாதுன்னு புரிஞ்சுது. லாட்ஜ் ஆளு வேற என்ன மேல இருந்து கீழ வரைக்கும் பாத்துட்டு வெளிய போனான். என்ன நடந்தாலும் சரி, ஜமுனா ராணி என் பிகர். ஏன், என் லவ்வர். ஒருவேள பிற்காலத்துல  எனக்கு மனசு இருந்தா நான் அவள கல்யாணம் கூட பண்ணிக்கிடுவேன். என் உரிமை. என் ஜமுனா. எவனும் இதுக்கு நடுவுல வரவே முடியாது.



என்ன தான் டென்ஷனா இருந்தாலும் ஒரு பொண்ணு ஒடம்ப தொட்ட பெறகு நடக்கறதே வேற. இத்தனைக்கும் ஜமுனா ராணி, "தரணி அந்த ரூம்ல இருக்காரா" ன்னு கேட்டா. "அவன் அத்த பொண்ண கூட்டிட்டு வர போயிருக்கான்" ன்னு கசக்க ஆரம்பிச்சேன். அவ வெக்கபடறாளா , வா வான்னு இழுத்துக்கிறாளா. எதையுமே நான் கண்டுக்கல. சர சரன்னு பத்த வச்ச மாதிரி நடந்து முடிஞ்சது காரியம். சும்மா அப்படியே சாதாரணமா பாக்கறதுக்கு இவ சாதாரணமா தான் தெரிவா. ஆனா எங்கயோ திருச்சி பக்கம் போய் புது தண்ணி வந்த காவேரில விழுந்து நீச்சலடிச்சா மாதிரி இருந்திச்சி எனக்கு. அவ என்னையே பாத்துகிட்டு இருக்க நான் டிரெஸ்ஸ போட்டுக்கிட்டு எதோ நெனைப்புல கதவ தொறந்தேன்.

அத இன்னும் தள்ளிகிட்டு உள்ள வந்துட்டான் தரணி.

டேய்ன்னு நான் கத்தும் போதே ஜமுனா பெட்ஷிட்டுக்குள்ள உட்காந்துட்டா.

"ஏ, மரியாதையா வெளிய போடா!"

"கத்தாத மச்சான். வாசல்ல எதுக்கோ நாலு பீசிங்க  நின்னுகிட்டிருந்தாங்க. எல்லா எடத்துலயும் ரெய்டாண்டா!. ஒருத்தி கூட மாட்டல"

"நீ வெளிய போறியா இல்லையா""

"கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு மச்சான். ஜமுனா ராணிய வேணுன்னா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்."

"ஒத்தா, இது துரோகண்டா . இவள பாத்தா உனக்கு பரிதாபமா இல்லையா?. இந்த அநியாயத்துக்கு இவ ஒத்துக்குவாளா?"

"யம்மா, ஜமுனா!. ஆசப்பட்டுட்டேன் தாயி!. ப்ளீஸ் ஒரே ஒரு தடவ!"

"அவ கிட்ட ஏண்டா பேசற, நான் தான் சொல்றனே, வெளிய போ."

"யம்மா ஜமுனா, நான் போணுமா?"

"போவ சொல்லு ஜமுனா. மரியாதையா வெளிய போவ சொல்லு"




அப்ப தான் இடி இடிச்சது. பூகம்பம் எங்க? அய்யய்யோ நான் தான் அப்படி ஆடிப் போயிட்டானா. அவ என்ன சொன்னா, பாவம்ன்னா? பாவம்ன்னா சொன்னா? யாரு. இந்த தேவிடியா பையனா பாவம்? அடிப்பாவி. எப்பிடி நான் ரோட்டுக்கு வந்தேன். எப்பிடி ரெண்டு பெக்கா கோட்டர உள்ள தள்ளினேன்?. எதுவுமே ஞாபகம் இல்ல. அந்த பொண்ண சீல் ஒடைச்சுட்டதுக்கு பாவமன்னிப்பே கேட்க மாட்டேன். எதுக்கு?. எல்லாம் பொய்!. ஜீசஸ் என்ன சொன்னார்ன்னு யாருக்காவது தெரியுமா? அவர் சொன்னதுதான் பைபிள்ல இருக்கா? பைபிள்ல இருக்கிறது பூரா போப்புக்கு தெரியுமா? போப்புக்கு தெரிஞ்சதெல்லாம் நம்ம ஏரியா சர்ச்சப்பாக்கு தெரியுமா?

அட சீ , நான் என்ன யோசிச்சிட்டுருக்கேன். இப்ப இதுவா பிரச்சின. ஓத்தா, ஒரு கத்திய வாங்கிட்டு போய் கதவ ஒடச்சா என்ன.

கொஞ்ச நேரம் கத்தி கடைய தேடி நடந்ததுல மப்பு கம்மியாயி வேர்த்து விட்ருச்சி. எங்கியாவது நிழல் கெடச்சா படுக்கலாமின்னு ஐடியா வந்துடவே மெதுவா வந்தேன். தரணி வெளியதான் தம் அடிச்சிகிட்டு நின்னான்.

"சாரி மச்சான். "

"நீ வழிய விடு"

"நான் பண்ணது தப்புதான். காம வெறி கண்ண மறச்சிடுச்சி."

"டேய், வழிய விடுறா."

"மன்னிச்சிட்டேன்னு நீ ஒரு வார்த்த சொன்னாதான் என் மனசு ஆறுதல் அடையும். எல்லா ஷிப்ப விட பெரிய ஷிப்பு,  பிரெண்ட்ஷிப்புடா."

அவன புடிச்சி தள்ளி வுட்டுட்டு உள்ள வந்தா ரொம்ப சாதாரணமா அவ தல வாரிகிட்டிருந்தா. அடிக்கலாமான்னு யோசிச்சிகிட்டே அப்படியே கட்டில்ல படுத்துட்டேன். எலி மாதிரி உள்ள வந்து தரணி ஒரு ஓரமா நின்னுக்கிட்டான். நான் கண்ண மூடிகிட்டேன்.

"யம்மா, ஜமுனா. எங்கயோ நடந்து போயிட்டு வந்ததால ஸ்டீபனுக்கு கால் வலிக்குதுன்னு நெனைக்கறேன். நீ வேணுமின்னா கொஞ்சம் கால அமுக்கி விடேன்."

மூச்சே விடாத மாதிரி நான் அடக்கிகிட்டு படுத்து கிடக்க, அவ என் கால அமுக்க ஆரம்பிச்சா பாருங்க, டபக்கான்னு எழுந்து உட்கார்ந்து பயங்கரமா கண்ண விரிச்சி சிட்டிக போட்டேன். என்ன பேசறதுன்னே வரல. போயிருன்னு மட்டும் சொன்னேன். அப்படியே கவுந்து படுத்துகிட்டேன். அவள நான் சரி காட்டு காட்டியிருக்கலாம். அத பண்ணாம விட்டதுக்கு என்ன காரணம். ஆங், அதான். அவ மேல கைய வச்சிருந்தா தரணி என்ன போட்டு பின்னி எடுத்துருவான். ச்சே, ரொம்ப அசிங்கமா இருக்கே எல்லாம்.



நான் பாதி தூக்கத்துக்கு போறப்ப தரணி ஜமுனா ராணியோட வீடு வாசல் கொலம் கோத்ரம் பத்தியெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டுருந்தான். அவ வீட்டு பக்கத்துல இருக்கற தளபதி நாராயணசாமிய எனக்கு தெரியுமின்னு அவன் சொல்லிகிட்டு இருந்தப்ப யாரோ கதவ தட்னாங்க.

                                                                                                                               


                                                                                                                      தொடரும்....







 



 

   




















Sunday, February 19, 2012

" நமது கால இயந்திரம்"




இசையை பற்றி எழுத வேண்டுமானால் அந்த துறையை சார்ந்த தீவிரவாதியாய் தான் இருக்க வேண்டும் என்றில்லை. இந்த 'ஜனநாயக' யுகத்தில் மனசில் பட்டதை எல்லாம் சொல்லலாம், யாரும். அப்படி மனசில் இருப்பதையெல்லாம் வரிசைப்படுத்தி பொறுமையாய் பக்குவமாக சொல்ல ஒரு திறன் தேவைப்படுகிறது அல்லவா? நான்கு பேர் அதை கேட்கும் போது நான் பேச நினைத்து பேச முடியாமற் போனதை இவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்று உணர்ச்சிவசப்படுவது எப்போதும் நிகழும் காரியம் அல்ல. நிஜமாகவே 'உயிர் எழுத்து' இதழில் 'என் கால இயந்திரம்' படித்த போது சொல்லவொண்ணா ஆற்றாமையும் பொறாமையும் எழுந்தது.

கட்டுரை என்றா சொல்வது? 



எனக்கு அதை இன்னதென்று நினைத்து பார்க்கவே பிடிக்கவில்லை. இளையராஜாவை பற்றி எழுதி இருப்பவர் செழியன். எனக்கு மிகவும் பிடித்த ஒளிபதிவாளர். தான் இருக்கிற இடத்தை காட்டிக் கொள்ளாமல் இரண்டாம் திரைக்கதை எழுதுபவர். 'காதல்' படத்தை விட 'கல்லூரி' முக்கியமான படம்  என்பது என் நம்பிக்கையெனில் இலக்கியம் தெரிந்த செழியனால் அந்த படம் பண்பட்டிருந்தது என்பதையும் நம்ப தலைப்படுவேன். இன்னும் சில படங்களில் கூட அவர் உண்டாக்கிய படிமங்கள் பல இடங்களில் தெரிந்திருந்தது. மற்றும் அவர் ஒரு எழுத்தாளரும் கூட. இல்லையா?

ஆனால் இந்த தகுதிகளை நினைத்து பார்க்கவே தேவையில்லாமல் வேறு ஒரு தடத்தில் அவர் ராஜாவின் பாடல்களை பற்றி சொல்லியிருக்கிறார். என்னைப் போல ஆயிரக்கணக்கானவர்களில் வாழ்வு ராஜாவின் இசையோடு கூடி நடந்த கதையை, அவர் தனது அனுபவமாக மட்டும் சொல்லியிருப்பது தெரியும். நகரத்திலேயே பிறந்து வளர்ந்த நானும் கூட செழியனோடு வித்தியாசப்படவில்லை என்று புரிந்து கொள்கிறேன். நிலக்காட்சிகள் வேறாய் இருக்கலாம்.  ஞாபகங்களும் கற்பனைகளும் வேறு கோணத்தில் இருக்கலாம். ஆனால் எங்குமே கண்ணீரின் சுவை ஒன்று.




ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட் பற்றியெல்லாம் என்ன சொல்வது? செழியன் எழுதிய வரிகளையெல்லாம் தான் நான் திருப்பி எழுத வேண்டும். என்னைப் போல ஆயிரம் பேர் கூட இருப்பார்கள். இன்று இருக்கிற இடத்தில் இருந்து ஒரு கணம் திரும்பி பார்த்தால் நாம் எப்போதும் நினைத்து கொண்டிருக்க முடியாத மூச்சு காற்று போல் இருந்திருக்கிறாரா ராஜா? அப்படி தான். அதனால் தான் இப்போதைய டக்கு முக்கு டிக்கு தாளங்களை சகித்து கொள்ள ஆகாமல் பலரும் பொருமுகிறார்கள். காலம் அணிந்து கொள்கிற புது புது கோலங்களுக்கு முன்னே மூச்சு வாங்க பேசி திக்கி திணறி தோற்கிறார்கள். இளையராஜா தனக்குள் திகழ்த்தியதைப் பற்றி அவர்களால் சொல்ல முடியவில்லை. பழசு போய் புதுசு வரும் என்கிற விதிக்கு இளையராஜாவுமா என்பது திகைப்பாய் வருகிறது. ஆன்லைன் அப்டேட்  முற்போக்கு ரைட்டர்ஸ் எல்லாம் காலம் மாறி போச்சு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே?

செழியன் எழுதியதில் இருந்து நான் யோசித்தது கொஞ்சம்.

இளையராஜா இறுதி வரையில் ஒரு சினிமாக்காரர் அல்ல. அவர் பணி புரிந்த படங்கள் இருக்கும், போகும். சாகா வரம் பெற்ற திரைப்படங்கள் நம்மிடம் ஏது? ஆனால் எந்த கான்கிரிட் வனங்களாயினும் அதில் உலவுகிற இரும்பு மனிதர்களின் இதயம் ஒரு கணம் தளர்த்தப்படுமானால் அதை நெகிழ்த்துவதற்க்கு ராஜாவால் முடியும். விற்பன்னர்களின் வீதியில் பாமரர்களை இயக்கியவர் அவர். கம்பனையோ இளங்கோவையோ  ஷேக்ஸ்பியரையோ தஸ்தவேஸ்கியையோ நீங்கள் அடையாளம் கண்டு கொண்டு உங்களுக்குள் இளகியதுண்டா?  அந்த இளக்கத்திற்கு எது காரணமோ அது இளையராஜாவை அறிந்து கொண்டு சிலிர்த்து கொள்ளும். எவ்வளவோ டக்கு முக்கு தாளங்களை தாண்டி அது நடக்கும்.

செழியனுக்கு நன்றி!

Tuesday, February 14, 2012

"வீழ்வேன் என்று நினைத்தாயோ ?"


மணி மூன்றிருக்குமா? புலரியின் இளங்குளிரை  தள்ளி வைத்து கிறக்கத்தில் அமிழ்ந்திருக்கிற விழிகளை விரித்து பிரித்து சன்னல் வழியே நிலவிருக்கிற அட்டகாசத்தை பார்க்க ஆகவில்லை. காரணம் நீ. ஆமாம். மனக்கண்ணில் அந்நிலவு இப்போதும் அமிர்தம் பொழிந்து கொண்டு தான் இருக்கிறது. என்னைப் போல. ஆஹா, நான் நனைந்து போயிருக்கும் ஒரு துணியைப் போல இருப்பதை இன்னும் உன்னிடம் சொல்லவில்லை அல்லவா. மலைஅடிவாரத்தில் கொத்து பூக்கள் பனித்துளிகளை ஏந்தியபடி சுகந்தம் பரப்புகின்றன. கனவில் கள்ளத்தனமாய் வந்து மேய்ந்து போன மாதிரி இப்போதும் உன்னால் பிரத்தட்ஷய பட முடியுமெனில் நான் இரண்டு தொடைகளுக்கு நடுவே உன்னை அழுத்திக் கொள்வேன். வெய்யிலோடி  களைத்த ஒரு சிறுவன் சில்லென்ற நதிநீரை இரண்டு கைகளாலும் அள்ளி எடுத்து பருகுவதை நான் இப்போதே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. மழைக்கால வெள்ளத்தின் போது மேடுகளை ஏறி, கதகதப்பான ஒரு பொந்தில் சுருண்டு கொள்கிற நாகத்தின் தியானத்தை எப்போதும் பார்த்திருக்கிறேன். ம்ம்.... உனது முகத்தில் தான். எப்பேர்ப்பட்ட மந்திரக்காரன் நீயென்று நினைத்து என் பெருமூச்சை தீயாக்கிக் கொள்ளும் போது, ரவுடி கையில் இருக்கிற உருட்டுக்கட்ட மாதிரி என் புருஷனின் கரம் உடம்பு மீது விழுகிறது.

இனி என்ன.

பில்ட்டர் காப்பிக்கான ஆயத்தங்களை தொடங்க வேண்டியது தான்.

***

டபிள்யூ எப்போதுமே தன்னை ஒரு கோபக்காரனாய் நினைத்து கொள்வது வழக்கம். ஆனால் பிரச்சனை என்னவென்றால் யாரை பார்த்தாலும் கோபம் வருகிறது. ஒருத்தன் முன்னாலேயும் சீறி விழ வக்கில்லாமல் போவது கூட பரவாயில்லை. இளித்து வைத்து விடுவது தான் கஷ்டம். பாரதியாய் வந்த எஸ் வி சுப்பையா மாதிரியோ, தொலைகாட்சி நேர்காணலில் வருகிற வைரமுத்து மாதிரியோ ரொம்ப நேரத்துக்கு தன்னை தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லை.

கோபம் ஆவியாய் போன பிறகு வருகிற அயர்ச்சி இருக்கிறதே, அது நரகம். கொட்டாவியை அமுக்கி மகாவிஷ்ணு மாதிரி சயனித்துக் கொண்டு டபிள்யூ "தம்பி, என்ன கேட்டிங்க?" என்றான்.

இரண்டு இளைஞர்களில் ஒருவன் மட்டுமே பேச சளைக்காதவன். காத்திரமான ஆர்வத்துடன் "இதுவரைக்கும் நீங்க ஏழு நாவல் எழுதிட்டீங்க. நாலு ஷாட் ஸ்டோரீஸ் கலக்சன். அப்புறம் பத்து கட்டுர தொகுப்பு. சினிமா விமர்சனம். இத எல்லாம் நீங்க எப்படி எழுதறீங்க. எங்க இருந்து சார் வருது?" என்றான்.

இப்போது ஒரு புன்முறுவல். அதற்கு நூறு அர்த்தம். ஆர்வ கோளாறுகள் அதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

இளைஞன் புரிந்து கொண்டு விட்ட தற்பெருமையுடனும் ஒரு சீரிய எழுத்தாளனை அண்ணாந்து பார்க்கிற வியப்புடனும் "இந்த புக் பெஸ்டிவலுக்கு கூட உங்களோட புது நாவல் வரபோவது இல்ல? " என்று கேட்க - அதே புன்முறுவலை நீட்டித்து கொண்டு டபிள்யூ தலையசைத்து வைத்தான்.

"எவ்ளோ பேஜ் எழுதியிருக்கீங்க சார், முடிச்சீட்டீங்களா? "

இப்போது டபிள்யூ சற்று குழம்பிக் கொண்டான். இணையத்தில் அப்ப அப்ப பூந்து வந்து ஏறக்கொறைய காபி பேஸ்ட் பண்ணினது கொஞ்சம். அப்புறம் பொழுது விடிந்து பொழுது போகிற வரைக்கும் அது இல்ல இது இல்ல என்று வருகிற தலைவலிகளை எழுத்தாளனின் தலைவிதியோடு ஒப்பிட்டு எழுதினது கொஞ்சம் வருமே. எல்லாத்த விட லவ் சீன்ஸ் தான் அதிகம் இருக்கும். ருமேனியால செத்து போன ஜனங்கள பத்தி எழுதி அத்தையும் இத்தையும் மிக்ஸ் பண்ணா எவ்ளோ சேரும். கணக்கு புலப்பட்டு தெளிவுக்கு வரமாட்டேன்  என்கிறது.

எந்த கேள்விக்கும் பதிலே சொல்லாமே சிரிச்சு வைக்க வேண்டியது பின் நவீனத்துவ காலத்து அவஸ்தையோ. புதுமைப்பித்தனுக்கு இந்த மாதிரி புடுங்கலுங்க இருந்துருக்காது என்று நினைக்கும் போதே எந்த நினைப்பெல்லாம் ஏன் வருகிறது என்று தோன்றியது.

"தம்பீ "

"சொல்லுங்க சார் "

"நான் பழைய காலத்து தயிர் சாதம் கெடையாது. தலைக்காணி சைஸ்ல எழுதினா தான் எழுத்தா. கார்யத்த விட வீர்யம் பெருசு. நூறு சூரியன்கள் வசிக்கும் அரை இரவுன்னு ஒரு நாவல். மொத்தம் நாற்பது பக்கம். குரோஷிய நாவல். கேள்விபட்டுருக்கீங்களா?"

லலிதாங்கியின் எஸ் எம் எஸ் வந்தவுடன் இளைஞர்களை சகிக்க முடியவில்லை. ஒரு கலைஞனின் படைப்பு தருணங்கள் பற்றி சுருக்கென்று சொல்ல ஆரம்பித்து, அது அந்த முண்டங்களுக்கு புரியாமல் போகவே எழுதணும் என்று புளுகி அவர்களை கழற்றி விட்ட பின்னர் காபி ஷாப்புக்கு வந்தான். என்ன கொடுமையடா சாமி லலிதாங்கியால் வர முடியவில்லையாம். அது கூட பரவாயில்லை. அந்த லூசு சாமிநாதனை அனுப்பி வைத்திருக்கிறாள். ஒரு வேளை இந்த கழிசடைக்கு மூடு வந்து பாருக்கு போலாமா என்று கேட்க கூடும். நாகூர் ஆண்டவர் புண்ணியத்தில் அது நடந்தால் மெக்சிகனின் கோழி அயிட்டத்தை சாப்பிட்டு விட வேண்டும்.

"என்ன டபிள்யூ டயர்டா இருக்கே ?"

"நாவல் வேல. "

"காலையில இருந்து ராத்ரி வர எழுதிகிட்டே இருப்பியா டபிள்யூ ?"

"வேற வழி"

"நீ இவ்ளோ கஷ்டப்படற ஆனா அதுக்கு வேண்டிய இன்கம் இதுல இருக்கா? "

" ஹா ஹா ... தமிழ்ல எழுத்துன்னு ஒரு பத்திரிக்க இருந்துச்சி. சி சு செல்லப்பா அத எப்படி தெரியுமா நடத்தினாரு ?" என்றவனுக்கு மேலும் பல பெயர்கள் ஞாபகம் வந்தன. ஜே ஜே வில் ஒரு வரிசை சொல்ல பட்டிருக்குமில்லையா? கலகக்காரன் என்று பேர் எடுத்த பிறகு சில பெயர்களை உச்சரிப்பதே கஷ்டம்.மேலும் இந்த சாமிநாதன் எல்லாம் ஒரு ஆளா?.

" ஹலோ டபிள்யூ"

"ஆ , ஆ , ஆ பண்ணா மாட்டியோன்னு பாத்தேன். சொல்லப் போனா, பரபரப்போட உன் போனுக்காக காத்துகிட்டிருந்தேன் லலிதாங்கி !"

"இப்ப கூட நான் ரொம்ப தற்செயலா தான் பண்ணேன் !"

"அது இருக்கட்டும். பொம்பளைங்க சொல்றத எல்லாம் நான் சீரியஸா எடுத்துக்கறதில்ல, ஹ , ஹ, ஹ, மெயில் பாத்தியா ?"

"படிச்சு முடிச்சு தான் இந்த காள் பண்ணேன்"

"நீ ஒரு லக்கான தேவத, ஒரு நாவலாசிரியன் ஒரு நாவல எழுதிகிட்டிருக்கான். ஒலகமே என்ன வருமோன்னு தத்தளிச்சிகிட்டிருக்கு. அந்த நாவல நீ தெனம் தெனம் ஹாயா உன் வீட்டுக்குள்ளேயே படிச்சிகிட்டிருக்கே"

"அது என்னன்னா எனக்கு நெறைய விஷயம் புரியல"

"இட்ஸ் ஓகே, அதனால என்ன?"

"அந்த நாட்டோட ராணுவ ஜென்ரலுக்கு இதயமே இல்லையே, பொம்பளைங்கள அப்படி எல்லாமா சித்ரவத பண்றது?"

"இருக்காங்க லலிதாங்கி. அப்படிபட்டவங்க கண்டிப்பா இருக்காங்க. ஒவ்வொரு பொண்ணையும் தட்டுல வச்சு தாங்கி, அவங்க மாரோட சாஞ்சு மூஞ்ச வெச்சுகிட்டு அவங்க இதய  துடிப்ப கேக்கற டபிள்யூ மாதிரியே எல்லோராலயும் இருக்க முடியுமா?"

"... .... ...."

"ஆங், இப்ப நீ என்ன பத்தி தான யோசிச்ச?"

"இல்ல"

"அப்புறம்?"

"அந்த ராணுவ ஜென்ரல் ஏன் அப்படி இருக்கான். அவன பாக்கணும் போல இருக்கு......"

"வாட்? "     

"உங்களுக்கு தெரியுமா அவர? எழுத்தாளர்கள் எல்லாம் யாரையாவது ரோல் மாடலா வச்சு தான் எழுதுவாங்கங்கற உண்ம எனக்கு தெரியும். அவர நான் மீட் பண்ணியே ஆகணும். சாமிநாதனுக்கு தெரியாம அரேஞ்ச் பண்றீங்களா?"

டபிள்யூ போனை தூக்கி போட்டு உடைத்து விடலாமா என்று நறநறத்தான். இவளெல்லாம் ஒரு மாதிரி காஜி கேஸ் தான். ஆனால் எதையும் புரியாத விளக்கெண்ணை மாதிரி இருக்கிறாளே, இல்லையென்றால் அப்படி பண்ணிக் கொள்கிறாளா?

" லலிதா, லல்லும்மா "

" சொல்லுங்க டபிள்யூ "

"கதையோட ஹீரோயின் ஹீரோவ கனவு கண்டு முழிச்சி படுக்கைல படுத்து இருந்துருக்கா. அத பத்தி லெட்டர் எழுதறா மாதிரி ஒரு பாசேஜ் எழுதியிருந்தேனே, படிச்சியா?"

"ம்"

"எப்டி இருந்திச்சு ?"

"புரியல"

"புரியலையா?" ச், ச், ச்,.... டீப்பா படிக்க வேண்டியது தானே? புரியலன்னா மறுபடியும் ட்ரை பண்ணி படிக்கறதில்லையா? ஒரு பொண்ணு வெட்டா இருக்கறதா கவித நடையில எழுதியிருக்கேன்" என்று ஆரம்பித்து விளக்கியது வெந்ததா வேகலையா என்று புரியவில்லை. சாமிநாதன் வேறு அதிகாரத்தில் இருக்கிறவன். உளறி வைப்பாளா. ஒரு கட்டத்தில் நிறுத்தி கொண்டு இணையத்துக்கு வந்தான். எவ்வளவு பிரச்சனைகள். ஈழத்து பிணக் குவியல்கள் போதாதா?

மனம் ஒன்றிலும் குவியவில்லை. ஏற்கனவே சமுக போராளி என்றெல்லாம் பெயர் வாங்கியாயிற்று. ஆறு மாதம் கழித்து ஒரு இஷ்யுவை எழுதி விட்டால் கூட போதும். தனக்கே தனகென்று எதையாவது செய்து கொள்ள வேண்டும் என்பது தான் பேய் போல உதைத்து கொண்டிருந்தது.

டபிள்யூ மெயிலை திறந்து ஒவ்வொருத்த்தனின் அசட்டு கடிதங்களை வெறித்து கொண்டிருந்த போது தான் நிர்மலாவின் பெயரை கவனித்தான். மனம் துள்ளியது. படைப்பு கணம் மேலேழுந்து வருகிறது.

"ஹாய், நான் எழுதற நாவல்லருந்து ஒரு பாசேஜ  மெயில்ல அனுப்பி வெச்சிருக்கேன். ஏதோ ஒரு வகைல நீ தான் ஏன் கவித நடைக்கு இன்ஸ்பிரஷன்னு வெச்சுக்கோ. படிச்சு பாத்துட்டு எப்டி இருக்குன்னு சொல்லு!"






Saturday, December 31, 2011

வாய்மையே வெல்லும் என்றால் என்ன ?




பெல் எப்போது அடிக்கும் என்று காத்திருப்பதே ஒரு கிறுகிறுப்பு தான். மிஸ் போன பிறகு மற்றவர்களெல்லாம் ஓடின மாதிரி பாசு ஓட வேண்டியிருக்கவில்லை. ஏன் என்றால் அவனாக வீட்டுக்கு ஓடிவிட முடியாது. குறைந்தது மூன்று நான்கு அறைகளாவது பெருக்கி முடித்து விட்டு தான் ஸ்கூல் ஆயா 'என்னப்பா எல்லோரும் வந்தூட்டீங்களா ?' என்று தயாராகி வரும். தேன்மொழி, கல்யாண சுந்தரம், நூருன்னிசா ஆகியோரை அவரவர் வீடுகளில் சேர்ப்பித்து விட்டு கடைசி கடைசியாய் தான் இவன் வீடு வந்து சேர முடியும்.

ஒரு தடவை நாளைக்கு செய்ய வேண்டிய வீட்டுப்பாடம் என்னவென்று நினைவுப்படுத்திக் கொண்டே பாசு நிதானமாய் தன் 'பெட்டி' யில் புத்தகங்களை அடுக்கினான். ஸ்கேலை பென்சிலை பத்திரப்படுத்தும் போது காலையில் கடித்து விட்டு வைத்த நெல்லிக்காய் அகப்பட்டது. அதை எடுத்து ஒரு கடி கடித்து விட்டு வைத்தான். மென்று கொண்டே தண்ணீர் பற்றி நினைத்தவாறே பெட்டியை மூடினான். பெரிய பசங்க படிக்கும் அஞ்சாங்கிளாசுக்கு பக்கத்தில் தான் தண்ணீர் குடிக்கிற குழாய் இருக்கிறது. நாக்கில் சின்ன அரிப்போடு பெட்டியுடன் எழுந்தவனுக்கு ஒரு திகைப்பு. உற்று பார்த்தான்.

ப்ரௌன் பென்சில். புதுசு. ஒரு பக்கம் ரப்பர் இருக்கும்.

அது யாருடையது என்று அவனுக்கு தெரியும்




ஒரு கணம் யோசித்து நின்றான். முறைப்படி அதை மறுநாள் காலையில் மிஸ்ஸிடம் ஒப்படைப்பது போல் அவனது மனசுக்குள் ஒரு காட்சி ஓடியது. அடுத்த நொடியிலேயே வேறு ஏதோ ஒன்று அவனுக்குள் சில்லிட்டது. அதை  விளங்கி கொள்வதற்குள் அவன் அதை சட்டென எடுத்துக் கொண்டு ட்ரவுசர் ஜேபிக்குள் வைத்துக் கொண்டு விட்டான்.

அக்கம் பக்கம் பார்க்க தோன்றவில்லை. எழுந்து நடந்தான். குழாயின் அருகே பெட்டியுடன் நின்றவனுக்கு தண்ணீர் வேண்டுமா என்று புரியவில்லை. நெல்லிக்காயின் துவர்ப்பு உறுத்தினால் தானே. ஸ்கூல் ஆயா வருவதற்குள் அவன் நூறு முறை தன் டிரௌசர் பாக்கெட்டை தொட்டுப் பார்த்து கொண்டான். வழக்கமாய் கேட் மீது ஏறிக் கொண்டு வண்டியோட்டுவான். இப்போது அதை யோசிப்பது கூட அபத்தமாய் பட்டது.

வீட்டுக்கு போகிற வழியில் நூருன்னிசா உன் பெட்டியில் நெல்லிக்காய் வைத்திருக்கிறாய் தானே என்பது போல எதையோ கேட்டாள்.

பதற்றமாய் இருந்தது.

சுவர் மீது வரையப்பட்ட ராட்டை சின்னத்தை பார்க்கிற மாதிரி அமைதி காத்து நடந்தான். நூருன்னிசா ஞாயிற்று கெழமை வரப்போகிற அப்பாவை பற்றியும் அவரது மிலிட்டரி டிரஸ் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தாள்.பென்சில் ஜேபிக்குள் பத்திரமாய் இருந்தது என்றாலும் இவன் அதை கையால் அமுக்கி பாதுகாத்துக் கொண்டே வந்ததால் அதன் முனை அவ்வப்போது தொடையை குத்திக் கொண்டிருந்தது.

உண்மையை சொல்வது என்றால் பாதுகாப்பு எங்கேயுமே இல்லை.

வீட்டில் பல்வேறு பகுதிகளையும் அவன் ஆராய்ந்தான். அம்மாவோ அப்பாவோ மாமாவோ புழங்குகிற இடங்களே எல்லாம். இந்த பென்சில் எங்கிருந்து வந்தது என்று கேட்க ஆரம்பித்து கடைசியில் இவனை தானே குடைவார்கள். ச்சே, எவ்வளவு பேஜாராயிருக்கிறது இதெல்லாம் ? காலையில் பென்சிலை கொண்டு போய் மிஸ்ஸிடம் கொடுத்து விட வேண்டியது தான்.

நிம்மதி.

பெட்டியில் ரொம்ப சகஜமாய் அதை போட்டு விட்டு தெருவுக்கு வந்தான். பக்கத்து கட்டை தொட்டியில் கை வண்டி இழுக்கிற முருகன் மாமாவின் பிள்ளைகள் இருவரும் இவனுக்கு சிநேகிதக்காரர்கள். பாசு என்று ஆனந்த கூச்சலிட்டார்கள். இவன் போய் ஜோதியில் அமிழ்ந்தான். ஒரு கட்டத்தில் விளையாட்டு உச்சத்துக்கு போய் எதற்கோ வாய் விட்டு சிரித்துக் கொண்டிருக்கும் போது பென்சில் ஞாபகம் வந்து விடவே மூச்சு ஒரு கணம் நின்றது.

எவ்வளவு அழகான பென்சில். நிச்சயமாய் அந்த பென்சிலால் எழுதினால் முத்து முத்தாய் கையெழுத்து வரும். அதை ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும்?

பென்சிலின் மேல்பகுதி எங்கும் ஒரு துண்டு பிளேடால் சீவினான். ப்ரௌன் கலர் கொஞ்ச கொஞ்சமாய் போய் கொண்டிருந்தது. கையில் வைத்து உருட்டி பார்த்தான். சற்று தூரமாய் அதை பிடித்து நிறுத்தி பார்த்தான். பென்சிலையே முனையில் வெட்டி சிறிதாக்கி விட்டால் என்ன. அது தான் சரி. ஒருவராலும் கண்டுபிடிக்க முடியாது. கோலம் கலைந்த பென்சிலுடன் மறுபடி அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்தான். அவர்களுக்கு தெரியாமல் அவன் அந்த பென்சிலை 'பழசாக்க' ஆரம்பித்தான். அழுக்கு மண்ணில் நுழைத்து அமுக்கி அமுக்கி எடுத்து விட்டால் அது புதுசாய் இருக்க முடியாதே. பையன்களோடு விளையாடுகிற மாதிரியே பாவனை பண்ணிக் கொண்டு அவன் பென்சிலை வதம் பண்ணியவாறு இருந்த போது வேறு ஒரு சந்து வழியாய் மாமா வீட்டுக்கு போய் கொண்டிருந்தது தெரிந்தது.

ஒரு மின்னல் தான்.

பாசு ஓடினான் அவரை நோக்கி.

"டேய், டேய், டேய், ஓடாத, மெதுவா மெதுவா"

" மாமா, எனக்கு அங்க இருந்து பென்சில் கெடச்சிச்சு" என்று குதித்தான்.

அவர் அந்த பென்சிலை பார்த்தார். குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா? களிப்புடன் இருக்கிற அவனது முகத்தை பார்த்து அன்பு சுரந்தது. சரி என்பது போல தலையை அசைத்து விட்டு அவனது கரத்தை பற்றிக் கொண்டார். "கை, கால எல்லாம் அலம்பிட்டு வீட்டு பாடம் எழுது. தமிழ், இங்கிலீஷ் ரெண்டும் கொடுத்திருக்காங்க இல்ல? "

அன்று இரவு புதுசாய் இருந்து பழசாய்  மாறின பென்சில் இருந்ததால் மிஸ்ஸுங்க கொடுத்த வீட்டு பாடம் மறக்கவில்லை. ரைட் போட்ட மிஸ் அவனது தலையை தட்டி கொடுத்து நோட்டில் வி குட் போட்டார்கள்.

தண்ணி குடிப்பதற்காக பெல் அடிக்கும். அப்போது வகுப்பில் மிஸ் இல்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த விஜயாவிடம் அவன் "எனக்கு கட்ட தொட்டியாண்ட ஒரு பென்சில் கெடச்சிச்சே" என்றான்.

அவள் அவனையே பார்க்க.

பெட்டியிலிருந்து அதை எடுத்து காட்டினான்.

அவள் அதிர்ச்சியுடன் "ஏய் இது என் பென்சில்" என்றாள்.

அது அவனுக்கு மட்டும் தெரியாதா என்ன. என்னென்னவோ நடந்தது.

பாசுவுடன் மாமாவே பள்ளிக்கு கிளம்பி வந்தார். ஏழெட்டு மிஸ்ஸுகள் நின்றிருக்க, மாமா கொதிப்புடன் பேசுவதை இவன் பார்த்திருந்தான்.

"நான் பென்சிலுக்காக வரல. இவுளுண்டு அழுக்கு பென்சில். ஆனா நீங்க எங்க கொழந்தைய திருடனாக்கிட்டிங்க பாருங்க - அதத்தான் என்னால பொறுத்துக்கவே முடியல. ஏங்க, இந்த பென்சில கட்ட தொட்டியாண்ட இருந்து எடுத்து குடுத்ததே நான் தான்! தெரியுமா?".




எல்லோருமாய் சேர்ந்து விஜயாவிடம் இருந்து அந்த பென்சிலை வாங்கி பாசுவிடம் கொடுத்தார்கள். மாமாவிடம் சாரி சொன்னார்கள்.

பாசு அதற்கு அப்புறம் அடிக்கடி விஜயாவை சைடில் பார்த்து கொள்வது வழக்கம். அவனது திருட்டு கண்களை நேரிடும் போதெல்லாம் அவளுக்கு ஒரு மாதிரியான முழிப்பு வந்தது. அவள் தன்னை தானே ஒரு திருடி என்று நினைத்து கொள்கிற மாதிரிதான் அது இருந்தது.

* * *

"உங்க பேரு?"

"ரமா தேவி"

"எதாவது படத்துல நடிச்சிருக்கீங்களா?:"

"ஆங், பத்து பதினஞ்சி இருக்கும்".

"போட்டோ கொண்டுவந்து இருக்கீங்கல்ல? அதுக்கு பின்னால எல்லாத்தையும் எழுதுங்க. அப்படியே காண்டக்ட் நம்பரையும் எழுதிடுங்க".

நான் சற்று வேலை மும்முரத்தில் இருந்தேன். இருபது நாள் படபிடிப்பு. புதன் கிழமை ஷெடியூல் துவங்குகிறது. இனி செய்து முடிக்க வேண்டிய காரியங்களை வரிசையாய் நினைத்து பார்த்தால் தலையை சுற்றுகிறது. அசிஸ்டெண்ட் என்னிடம் தூக்கிபோட்ட ரமாதேவியின் போட்டோவை பார்த்தேன்.

"டேய், அவங்களை கூப்பிடுறா"

"ஏங்க, ஏங்க இங்க வாங்க".

அவளை நான் ஆழமாய் பார்த்தேன். ஒரு சினிமாக்காரி எப்படி தளுக்காக சிரிக்க வேண்டுமோ அப்படி சிரித்தாள்.  

"ஏங்க உங்க பேரு ரமா தேவிதானா, இல்ல சினிமாவுக்காக வெச்சிக்கிட்டிங்களா ?"

"எல்லாம் வச்சிகிட்டது தான் சார். நல்லதா ஒரு வாய்ப்பு குடுங்க. அம்மா கேரக்டர் குடுத்தா சூப்பரா அழுவேன்".

அவளை அனுப்பி வைத்து விட்டு புகைப்படத்தை பார்க்க அதில் இருந்தது விஜயா தான். அவன் ஏன் என்னை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்? சாகும் வரை மறக்க முடியாமல் நினைத்து கொண்டிருக்க வேண்டியவன் நான் தான். வாய்மையே வெல்லும் என்கிற எனது படத்தின் டைட்டிலை குறிப்பு புத்தகத்தில் நான் திரும்ப திரும்ப எழுதி கொண்டிருந்தது உணர்ந்து திடுக்கிடுகிறேன்.

செல் அடிக்கிறது.

எனது மகன் தான். தனது ப்ளே ஸ்டேஷன் காணோம் என்கிறான். யாரோ திருடிவிட்டார்கள் என்று ஆங்கிலத்தில் விளக்கி கொண்டிருக்கிறான். புகைப்படத்தில் எனக்கு இரண்டாம் கிளாஸ் விஜயா புலப்பட ஆரம்பிக்கிறாள்.