Friday, July 1, 2016

விஜயா என்கிற பெயர் சாதாரணமாய் இருக்கிறது அல்லவா?

அவளே அப்படி இருந்தாள். பேசுவது சாதாரணம்,  பேசுவதோ அசாதாரணம். அவள் ஒரு இடத்துக்கு வந்து இருந்து கடந்து சென்றால் பலரும் கவனித்திருக்க முடியாது தான். ஆனால் அவளை சற்றே கூர்மையாய் கவனித்து இருந்தால், கருத்த கண்கள். அப்புறம் அவை பெரிதாய் விரிந்திருக்கும். அதில் சுறா மீன் ஒன்று வாயைத் திறந்து கொண்டு மேலெழுவது போல கற்பனை செய்யலாம். யாருக்கும் பிடி கொடுக்காத அந்தக் கண்களால் அவள் எப்போதும் மேனகாவை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பாள்.

அப்படியா. இன்னும் இருக்கிறது.

அலுவலகம் ஓயும் நேரம் உண்டு. ஆண் ஊழியர்கள் வந்து மொய்க்காத,  பெண் ஊழியைகள் வந்து வளவளக்காத, அவள் பிரார்த்தித்துக் காத்திருந்த இடைவெளியில் மேஜை மீது தலையை சாய்த்துக் கொள்ளும் மேனகாவின் முதுகு அல்லது தோளில் தன்னை படர்த்திக் கொண்டு பின்னங்கழுத்தை முகர்ந்து கொள்வது உண்டு. முலைகளை அழுத்தியதில்லை. பயம். சில நிமிஷங்கள் கூட நீடிக்காத அந்த வதை பொழுதில் நெஞ்சு இடிப்பதை அறிந்து கொள்ளக் கூடாது. இரவெல்லாம் இரக்கமற்ற உலகை நினைத்து கண்ணீர் பெருக்குவாள். காலையில் சொல்ல வேண்டும் என்று கருதியதெல்லாம் மறந்து போகும். ஒருநாள் வரும் என்று காத்திருப்பது பெருகும் துயரில் அலை பாய்வது தான் என்றாலும் அந்த நாள் வராமல் போகவில்லை. மேனகாவிற்கு வீடு மாற்ற பணம் தேவைப்பட்ட போது மேனகாவிற்கே கூட சொல்லாமல் வளையல்களை வைத்து பணம் கொடுத்த மறுநாள் அவள் இவளது டயரியை தற்செயலாக பார்த்து விட்டாள். அதன் நூறு பக்கங்களில் தனது பெயர் வரிசையாய் எழுதப்பட்டிருப்பதை அவளால் நம்பவே முடியவில்லை .மறுநாள் கும்பல் கூடி கிளம்பிப் போன வேடந்தாங்கலில் ஆயிரம் பறவைகள் ஒரே நேரத்தில் சுழன்று தெற்கு திக்கில் ஒரு விரிந்த மேகம் போல மறைந்தவாறிருந்த போது மற்றவர்களுடன் சேர்ந்து கை தட்டி விட்டு அவர்களுடன் இறங்காமல் மேனகாவை தடுத்து நிறுத்தினாள். பக்கத்திலேயே ஒரு பறவை மீது மற்றொன்று வழுக்கிக் கொண்டிருக்கும் போக்கில் வெறித்தவாறு "மேனு" என்றாள்.

"ம்?"

"சாவலாமானு இருக்குடி. ஐலவ்யூ"

"ஏ சீய்"

"எனக்கு ஒண்ணும் வேணா. ஒரே ஒரு தடவ உன் வாய்ல முத்தம் குடுக்கவா? ஒரு தடவ தான். அப்றம் நான் கேக்கவே மாட்டேன்."

மேனகா ஆடாமல் அசையாமல் பார்த்தாள்.

அழுகை போல பரவி வந்த ஒன்று உதடுகளில் துடிக்க "ப்ளீஸ்"  என்றாள்.

பேசாமல் வாவென்று கூட்டிப் போனாள் மேனகா. இவள் தொடர்ந்தாள். நாளுக்கு நாள் நெஞ்சு வலி கூடிக் கொண்டிருப்பதாய் சுய இரக்கம் தோன்றிக் கொண்டிருந்தது. முறுக்கிப் பிடித்துக் கொண்டு அவள் ஏவுவதை எல்லாம் செய்து கொண்டு, அவளிடம் வழிந்தவாறு இருந்த ஆம்பிளைக் கழுதைகளை சபித்தவாறு காத்திருந்தாள். அலுவலகத்தில் தனிமை கூடும் போது, அல்லது லிப்டில், ஸ்டோர்ரூமில், டாய்லெட்டில் இருவர் மட்டுமே இருக்கும் போது இதோ, இதோ என்றிருக்கும். இந்த நொடியில் மேனகா இவளைப் பற்றி இழுத்து இதழ்களைப் பிளந்து தருவாள் என்று திரண்டு முட்டி பால் திரியும் போதெல்லாம் சோர்வு சுருட்டியது. மேனகா அவ்வப்போது சிரித்துக் கொண்டிருப்பது சரியாய் இல்லை. சில நேரம் சில பெண்களிடம் அவள் கிசுகிசுப்பதையும் நெருங்கி செல்லும் போது அவள் மாற்றி பேசுவதையும் அறிந்தாள். வீட்டில் கூடின சபையில் இவள் கலக்கத்துடன் நின்றதை வேறு ஒரு நினைப்பில் பார்த்து அனைவருக்கும் பிடித்துப் போகவே, தவிர்க்க முடியாத நிச்சய நாளின் முன் நாள் விஜயா மேனகாவின் காலில் விழுந்தாள். விம்மி அழுதவாறு எழுந்து கொண்டு மேனகாவின் உதடுகளில் முத்தப் போன போது சீ யென்று முகம் சுழிந்து விலகிப் போனது அவளது முகம். அதை எப்போதும் யோசித்தவாறிருந்தாள், "நீங்க பாடுவீங்களா?" என்று காசிவிஸ்வநாதன் கேட்கும் போது கூட.

பாச்சுலர் பார்ட்டியில் இருந்து விடை பெற்றுக் கொண்டு முதலிரவு அறைக்கு வந்து இலேசான பிராந்தி மணத்துடன் இவள் பக்கத்தில் அமர்ந்த அவன் பாடட்டுமா என்று ஒரு வார்த்தை கேட்கவே இல்லை. டிஎம்எஸ் அல்லது சிவாஜி கணேசன் மாதிரி தலையால் வட்டம் போட்டுக் கொண்டு "அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்"  என்று பெருமிதத்துடன் பாடி விட்டு "உனக்குஎன்னென்னபிடிக்கும்" என்று கேட்டு விட்டு அவள் பதில் சொல்லுவதற்குள் தனக்கு என்னென்ன பிடிக்கும் என்று பாதியை சொல்லியவாறு அவளுடைய மொத்த துணிகளையும் அவிழ்த்து விட்டான். இவளது ஒத்துழைப்பு தேவைப்படாத நிலையில் தனுஷ்கோடி சாம்பியன் மாதிரி ஒற்றையாய் நீந்தி முடித்து மூச்சு வாங்கியவாறு "தூங்கிக்கோ" என்று எழுந்து போனான். விடிகிற ஒளி கண்ணைக் குத்தியதில் கோபமாய் புரண்டு படுத்த போது அவன் பக்கத்தில் இருந்தான், குறட்டை மாதிரி எதுவும் இல்லை. எழுந்து அமர்ந்து வெகு நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்த போது வாழ்க்கை புரிந்து விட்ட மாதிரி இருந்தது. வேறென்ன. மாமியார் வேலைக்கு அனுப்பவில்லை. குடும்ப விளக்காக இருக்க சொன்னாள். உடலில் சக்கரை முற்றி கால் வெட்டப்பட்டு கிடந்தவளின் பீ மூத்திரத்தை அள்ள வேண்டியிருந்தது. அன்றாடம் நாற்றம் பிய்க்கிற அம்மணத்தை பார்க்க வேண்டியிருந்தது. எங்கேயாவது சிதறி விடுவோமோ என்று பயந்து கடுகளவேனும் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு வருவதற்கு அவள் மேனகாவை தான் நினைத்துக் கொள்ளுவாள். அவளது உடலை கற்பனை செய்து அவளையே ஒரு பானமாக்கி அருந்துவது போல உணர்ச்சியுடன் தன்னை தானே பிழிந்து போட்டு தூங்கி எழுந்து அன்றாடம் பெற்று விட முடியும் கையகல நம்பிக்கையை. இருட்டு. தனிமை. நூல் பிடிக்காத ஒரு சிறிய கதை. எல்லாம் அவளுடையது. அந்த அந்தரங்கத்தில் லட்ஷம் பறவைகள் எல்லா திக்கிலும் பறந்தன.

"என்னோட கேரக்டரப் பத்தி நான் சொல்லணும்னா எனக்கு எப்பவும் பிராண்டி தான் பிடிக்கும்" என்றான் காசிவிஸ்வநாதன்.

"எனக்கு ரம்மு" என்றான் நீலமேகம்.

விஜயாவும், மேனகாவும் சிரித்துக் கொண்டார்கள். இன்ன மாதிரி என்று சொல்ல முடியாத சிரிப்பு. சிம்பனி மாதிரிஉயர்ந்து கொண்டே வந்தது கோழி பொரிகிற மணம். சமையலறையை குறை சொல்ல முடியாது. என்றாலும் பொருட்களை எடுக்கிற சாக்கில் இவள் மீது பட்டுக் கொண்டே இருந்தாள் மேனகா. விஜயாவுக்கு எல்லா கதைகளும் தெரியும். தனக்கு எல்லா கதைகளும் தெரியும் என்பது மேனகாவுக்கு தெரியுமா என்பது தான் தெரியாது. விஜயாவிற்கு கல்யாணம் முடிந்த அந்த நேரத்தில் மேனகாவின் காதலன் என்று உறுதி செய்யப்பட்டிருந்தவன் யுவராஜ். மோசமில்லை. காதல் கிளிகள் சுதந்திரமாய் வானில் சிறகடித்துப் பறந்திருக்கின்றன. ஒரு தடவை திருப்பதிப் பக்கம் ரெய்ட் செய்யப்பட்ட லாட்ஜில் இருவரும் பிடிபட அதற்கு அப்புறம் யாரோ சொல்வார் பேச்சைக் கேட்டு தான்
திருந்தி விட்டதாய் அறிவிப்பு பண்ணி மேனகா பக்கமே திரும்பாமல் இருந்திருக்கிறான் அவன். பக்கத்து வீட்டில் இருந்த நீல மேகத்திடம் தான் மேனகா கண்ணீர் கடிதங்களை கொடுத்து அனுப்பியவாறு இருந்திருக்கிறாள். யுவராஜின் கல் மனசு கரையவில்லை. வேலைக்கு போவதை எல்லாம் நிறுத்தி விட்டு மேனகாவிற்கு ஆறுதல் சொல்லுவதையே தன் முழு நேரப் பணியாய் எடுத்துக் கொண்டு விட்ட நீல மேகத்தை ஒரு நாள் விடியற்காலை தனது கழுத்தில் தாலி கட்ட வைத்து அவனுடன் இல்லற வாழ்வில் புகுந்து விட்டாள் அவள். பத்தே நாளில் தாடி வளர்த்து யுவராஜ் இவர்கள் எடுத்த புது வீட்டுப் பக்கம் சுற்றவே "நான்அவனோடுபோய்விடவா?" என்று ஒரு சலனத்தில் மேனகா கேட்கப் போய் நீலமேகம் மின் விசிறியில் மாட்டிக் கொள்ளப் போய் காப்பாற்றினார்கள். அப்புறம் அவன் பல முறை அப்படி காப்பாற்றப்பட்டிருக்கிறான். இவளும் பல ஆண்களுடன் தத்தளிப்போடு இருந்து, மீண்டு வந்திருக்கிறாள். விஜயாவைப் போலவே மேனகாவிற்கும் இரண்டு குழந்தைகள்.

"இல்ல,  இல்ல,  இல்ல நீலமேகம். காசி,  நீ சரி இல்லனு என்னப் பாத்து சொல்லுங்க. நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன். அதில ஏதாவது ஒரு உண்மை இருக்கலாமுன்னு நினைச்சுப்பேன். ஆனா நீங்க இப்படி சொன்னது தப்பு. பிராண்டியை தப்பு சொன்னது தப்பு. எத்தன வருஷமா நான் இத குடிச்சிக்கிட்டிருக்கேன் தெரியுமா, இதனோட அரும பெருமய புரிஞ்சுக்காம வாய விட்டுட்டீங்களே,  எனக்கு அப்பிடியே வலிக்குது நீலமேகம்."

நீலமேகம் வருத்தத்துடன் கைகளைப் பிசைந்தான். "தப்புசெஞ்சிட்டேன்,  ஓகே. மன்னிச்சுக்கோங்க. இதுக்கு இப்பவே நான் ஒரு பிராயசித்தம் பண்ணிடறேன்,  சரியா?"

"என்ன பிராயசித்தம்?"

"நான் இது வரைக்கும் ரம்மு தானே குடிச்சேன்? பாத்தீங்க இல்ல? இப்ப உங்க கையால 90 போடுங்க. என்னது?"

"என்னது?"

"பிராண்டி சார்,  பிராண்டி"  என்றுவிட்டு "அத குடிச்சிட்ட பெறகு என் லைஃப்ல இனிமே பிராண்டி தான் குடிப்பேன்னு பிராமிஸ் பண்ணிடறேன் சார்"  என்கிறான் நீலமேகம்.

அங்கே இருந்து ஒதுக்குப்புறமாய் இருந்த படுக்கையறைக்கு விஜயாவை உந்திக் கொண்டு சென்றது மேனகா தான். அவளே பேஸ்ட் மாதிரி ஒட்டி கொண்டும் உட்கார்ந்தாள். "எப்பிடி இருந்தோம் இல்ல?எப்பவும் உன்ன நினைச்சுக்கிட்டு இருப்பேன் தெரியுமா?" என்று கிசுகிசுத்த போது அவளது மூச்சுக் காற்று பட்டு காதோரத்தில் மயிர்கள் நிமிர்ந்தன. ஓண்ணுக்கு வருவது போல தோன்றியது. மேனகா ஒரு முறை வெளியே எட்டிப் பார்த்து விட்டு விஜயாவின் கன்னங்களைப் பற்றி நோக்கம் தெரியாமல் அடித்துக் கொண்டு போகிற வேகத்துடன் உதடுகளைக் கவ்வி நுழைய யத்தனித்து கடித்து முடித்தாள். வாய் மீது ஈரமாய் உறுத்தின எச்சிலை துடைத்துக் கொண்டு விஜயா மெல்ல எழுந்து போனாள் ஒரு புன்னகையுடன். மேனகா முகம் பேயடித்தது போல இருந்தாலும் சற்று நேரத்தில் அதை சரி பண்ண முடிந்தது.

நீலமேகம் காசியுடன் உட்கார்ந்து வெளுத்துக் கட்டினான். விஜயாவும் பிள்ளைகளும் மேனகாவும் சாப்பிட்டார்கள். அதற்கு முன்னேயே விஜயா ஒரு நெக்லஸ்ஸை எடுத்துக் கொடுத்து விற்று எடுத்துக் கொள்ள சொல்லி விட்டாள். இதை திருப்பிக் கொடுக்க சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் மறுபடியும் ஏதாவது கஷ்டம் என்றால் வெட்கம் கொள்ளாமல் கேளு என்றும் பல வார்த்தைகளில் சொன்னாள். மேனகாவின் விழிகளில் ஈரம் படருவதற்குள் சாப்பாட்டில் உட்கார வைத்து விட்டாள். நீலமேகமும் காசியும் குழறலோடு கடைசியாய் பிராண்டியைப் பற்றி பேசி அணைத்துக் கொள்ள மேனகாவிடம் நான் இப்போது முன்பு போல இல்லை என்பதை மட்டும் சற்று அழுத்தமாகவே சொல்லி விடை கொடுத்தாள் இவள்.

காசி படுத்து விட்டான். குழந்தைகளும் தூங்கி விட்டன. என்ன என்று தெரியாத ஒரு படபடப்பு. ஏதோ ஒரு மாதிரி. செத்து போன மாமியாரின் மல நாற்றம் எட்டி பார்த்து அவளுக்குள் நிரம்ப துவங்கியது.  "எருமை" என்று மேனகாவை திரும்ப திரும்ப திட்டிக் கொண்டே ஈறுகளில் ரத்தம் வருகிற வரை பல் தேய்த்தாள். திருப்தி வருகிற வரை சுடுநீரால் கொப்புளித்துக் கொண்டிருந்து விட்டு ஆன்லைனில் வந்து உட்கார்ந்தாள்.

மீண்டும் உள் பெட்டியில் பிரதீபாவின் செய்தி இருந்தது. வழக்கம் போல தான். விஜயா உன் குளுமையை என்னால் உணர முடிகிறது என்று ஆங்கிலத்தில். அவளது பக்கத்தில் இருந்த ஒரு புகைப்படத்தை சற்று நேரம் பார்த்த விஜயா இனி காலம் தாழ்த்துவதில்லை என்று நினைத்த போது எழும்பி வந்த கோபத்தில் முகங்கள் இல்லை. யாரை எல்லாமோ போட்டு வெட்டுவது போல ஒரு சினிமா கணத்தில் ஓடி முடிந்தது. மேனகாவை விட ஆங்கிலத்தில் புலமை கொண்ட விஜயா சரசரவென டைப் பண்ணினாள். இருபத்தி ஐந்தை தாண்டாத பிரதீபாவின் புன்னகையை துடித்தவாறு.

"எனக்கு உன்னை தெரியும். பேசி பேசி சொல்லாமல் இருந்தால் எப்படி? நகராமல் இருந்தால் எப்படி?.எப்போது சந்தித்துக் கொள்ளப் போகிறோம்?"

பால்வீதி
ஒருசிறுகதை.

No comments:

Post a Comment