Wednesday, July 6, 2011

Is this Cinema ?.




ஜேம்ஸ்பாண்ட் கிளம்பிவிட்டார்.

ஏகப்பட்ட தாகங்களுடன் இருளில் வாய்பிளந்து காத்திருக்கின்ற ரசிகப் பெருமக்களுக்கு பொங்கி வரும் புது நதியாக முலைகள் காட்டி நடனமாடும் அழகிகளின் பின்னணியோடு துப்பாக்கியை சுழற்றிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

'பாண்ட் " என்கிறார் கண்டிப்புடன். " ஜேம்ஸ்பாண்ட்"

பூஜ்யம்,  பூஜ்யம், ஏழின் சிகரெட் ஸ்டைலாயிருக்கிறது. அது எந்த பெண்ணையும்  அசத்திவிடும். வாயில் சிகரெட் தொங்க, ஊடுருவல் பார்வை ஒன்றை உபயோகப்படுத்தியவாறு ப்ரா கழற்றும் லாவகம் உலகின் பிரமிப்பாகிறது.

பளபளக்கும் கார்கள் உலகின் எல்லா வீதிகளிலும் ஓடுகின்றன. உடம்பை அசைத்துக் கொண்டு அசிங்கம் பண்ணி விடாத வெள்ளை கனவான்கள் உலாவும் நட்ஷத்திர சோற்றுக் கடைகளில் அமைந்த நீச்சல்குளங்களில் ஒரு டால்பினின் நேர்த்தி. குற்றங்களை தேடி அலைகிறார் அவர். கோடிகளால் டாலர்கள் உருட்டப்பட்டு நடக்கின்ற சூதாட்டம் அவரை இன்னும் அழகாக்குகிறது. யாராலும் அவர்  இன்னும் எட்ட முடியாத கனவு. அதனால் அவர் அனைவருக்கும் வழிக்காட்டியாகிறார்.

குரூரமான எதிரிகள் வருகிறார்கள்.

விசித்திர வர்ணங்களுடன், வினோத அசைவுகளுடன், அதியச இணைப்புகளுடன் அவர்கள் அடையளம் காட்டப்படுகிறார்கள். அந்த மனிதர்கள் துடிப்பு மிக்க இந்த உலகத்தை எத்தனை அலட்சியமாய் பாவித்து குற்றங்கள் புரியத் துணிகின்றனர் என்பது புரியவைக்கப்படுகிறது.

விடுவாரா நம்ம ஆள் ?

எதிரிகளை பந்தாடிவிட்டு தர்மத்தை காப்பாற்றி விட்ட புன்முறுவலுடன் , மேலும் பந்தாடவேண்டிய க்ளைமாக்ஸ் எதிரியை பற்றின தேடலுடன் ஏதோ சில தேவடியாள்களின் உதட்டைப்பற்றி துப்பு துலக்கலை உறியும்போது  உலகம் தன் தொடைஇடுக்கை வருடிக் கொடுக்கிறது. தர்மத்தை பற்றின பெருமிதம்தான். எப்படிப்பட்டவர் இந்த அமெரிக்க அங்கிள் என்று நம்முடைய குழந்தைகளின் மண்டைக் கோணுகிறது. கிடைத்த பருப்பையும் தயிரையும் மட்டுமே தின்று, மனப்பாடம் பண்ணி தேர்வுகளைத் தாண்டிக் குதித்து ஒரு பிரெஞ்சு கலர் முழுக்கைச் சட்டை மற்றும் கழுத்துப் பட்டையுடன் சோடாப் பாட்டில் மூக்கு கண்ணாடியுடன் நமது அர்ச்சகரின் சீமந்த புத்திரன் சுப்ரமணி மானிட்டரில் முள் கரண்டியால் துழாவி பன்றிகறியையோ, ஒட்டககறியையோ  மெல்லுகிறான்.

தீமையின் மொத்த உருவமாய்  ஒருத்தன். துரியோதனை போல,இராவணனைப் போல.

ஜேம்ஸ்பாண்ட் நெருங்குகிறார்.

கிளைமாக்ஸ்க்கு முன்னால் ஒரு உறுத்தல்.

அந்த விதூஷகன். தெருவில் வாழ்கிறவன். தெருவிலேயே தூங்குகிறவன். சர்க்கஸ்களில் பிதுங்குகிறவன். நட்சத்திர கடைகளுக்கு முன்னே ஒரு காயிதம் பொறுக்கி. கார்களுக்கு குறுக்கே வந்து விழும் சனியன். பசியால் குழிந்த மூஞ்சியையும், தந்திரமான கண்களும் கொண்ட ஜீவி. எவளையாவது காதலிக்க கூட வக்கில்லாமல் எவனுக்காவது கூட்டி குடுத்துவிட்டு போவான்.

சாப்ளின், சார்லி சாப்ளின்.
 
" என்ன செய்வது சார் ? " என்று கேட்கிறார் ஜேம்ஸ்பாண்ட் அமைப்பிடம்.

"உயிர் வாழ வேண்டியது இரண்டு மட்டும் தான். ஒன்று, நன்மை. மற்றொன்று தீமை..."

"ஆம்"

"இதற்கு நடுவில் உண்மை என்ற ஒன்று நமக்கு தேவை கிடையாது" சார் அர்த்தம் மிக்க இடைவெளி விடுகிறார்.

"நீ சூப்பர் ஸ்டார். வளர்ந்து கொண்டேயிருக்கும் தீமைகளை அழித்து கொண்டேயிருப்பாய். நடுவில் எது செய்தாலும் யாரும் கண்டு கொள்ள போவது இல்லை ... "

"ஸோ ? "

" fuck off . kill that basturd !".


 
 

  
 

 

1 comment:

சுவாதி ச முகில் said...

எல்லா ஜேம்ஸ் பாண்ட் படங்களையும் மொத்தமாய்ப் பார்த்த உணர்வு.

Post a Comment