Friday, August 12, 2011

மொதல்ல நான் ஒரு விஷயத்த தெளிவுபடுத்திடறேன். இது காதல் கதை கிடையாது. ஆனா நான் அங்கிருந்து தான் தொடங்கியும் ஆகணும். உன்னைப் போல, அவனப் போல நான் தொடங்கினதே அங்கருந்து தான்னு நெனைக்கறேன். அதுக்கு முன்னால வாழ்ந்ததெல்லாம் யாரு, யாருன்னு தன்னையே தேடிகிட்ருந்த ஒரு தத்தளிப்பு மட்டும் தான்.

பதிமூணு வயசு, திடீர்னு ஒரு நாள் குடும்ப ஆட்களோட, அந்த வயசுக்கே 
உரிய திருவிழா சந்தோஷத்துல நெறய உறவுக்கார ஜனங்கள பாக்க வேண்டி வந்தப்ப, ஒரு ஓரமா அவ. நான் பாத்தப்ப அவ என்ன பாத்துகிட்ருந்தா. திரும்பிகிட்டேன். மின்னி அணையற அலங்கார விளக்குங்கள, குட ராட்டினத்த, யானைங்க தென்னங்கீற்றக்  கிழிக்கறத பாத்துகிட்டேயிருக்கேன். மனசு எரிஞ்சிகிட்ருந்தது. வீட்டுக்கு போய் படுக்கணும் போலருந்தது.  

சீக்கிரமா படுத்துட்டேன். படுத்தது சீக்கிரமா உறங்கறதுக்கு இல்ல. போர்வைய உடல் முழுக்க போத்திகிட்டு யாரோ படுக்க என் பக்கத்துல கொஞ்சம் எடம் வெச்சுகிட்டு தலையண மேல கன்னத்த ஒத்தி எடுத்துகிட்ருந்தேன். இதுவர எனக்கு இப்படி மனசுக்   கஷ்டம் இருந்ததே இல்ல. சன்னல் வழி நெலா பாத்துக் குறுகுறுத்தப்ப கொஞ்சம் தப்பு தோணிச்சி. இது வேணா, அறுத்துகிட்டு வெளியே வரணும்னு பலவீனமா தான் முயற்சி செஞ்சேன். ஏன்னா அதவிட வலுவா எனக்குள்ளே அது கெட்டியா பிடிக்க ஆரம்பிச்சது.

மீச மொளச்ச நாள்ன்னு ஒண்ணு  இருக்காது. ஆனா அன்னைலேருந்து தான் மீசய பாக்க ஆரம்பிச்சேன். முகப்பருக்கள  ஒடைச்சு பவுடர் நிரப்பி கண்ணாடிய வெறுத்தேன். அவள பாக்கற சந்தர்பத்துல எல்லாம் காலுக்கு கீழே நிலம் நழுவிச்சி. பெரிய காரியக்காரியா பாவன பண்ணிக்கிட்டு, எல்லாருக்கும் நல்லவளா இருந்துகிட்டு மில்லிமீட்டர் இடைவெளில அவ கண்ணு என்ன அள்ளும். அந்த அநியாயம் ஒருத்தருக்கு கூட தெரியாது. அத மாதிரியே எடத்த விட்டு போறப்ப ஒரே ஒரு தடவன்னு என் மொத்த ஜீவனும் எரந்து நிக்கும் போது கல்லு மாதிரி தெடமா திரும்பியே பாக்காம போவா.

போடி தேவடியா.

என்னோட கோவம் பல தினுசுல வெடிச்சது. விடியற பொழுது நல்ல படியா முடியணும்ன்னு எந்த மாத்தத்தயுமே விரும்பாமே எப்பவுமே பயத்தோட நகர்ந்துகிட்ருந்த என் குடும்பம் என் சேஷ்டைகளை பாத்து நெளிய, இன்னும் இன்னும் நான் நிமிர்ந்தேன். பாவம் அப்பா. அவர் கொஞ்சங் கொஞ்சமா எப்படி தகர்ந்துகிட்ருந்துருப்பார்னு யோசிச்சா அத நாவலா எழுதலாம்.

அவ எங்கயோ இருந்தா. நான் எங்கயோ இருந்தேன்.

அவள மறக்கறதுக்காக என் கண் முன்னால பட்ட எல்லாத்லேயும் ஈடுபட்டேன். இல்ல.. அவள ஜெயிக்கணும்ங்கறதுக்காக கூட இருக்கலாம். இருபத்தி நாலு மணி நேரமும் ஒரு ஆவி மாதிரி எங்கயோ இருந்து என்ன பாத்துகிட்டேயிருந்தா. நடுராத்திரி ரெண்டு மணிக்கு மேல ஒரு போலீஸ்காரன் என்னப் போட்டு நொறுக்கிட்டு போனதுக்கு அப்புறம் நான் 'ஓ' ன்னு அழுததுக்கு காரணம் அதுதான். என் முட்டாள் பிரெண்ட்ஸ் நெனச்சது போல தாங்க முடியாத வலி இல்ல.

அவ வளந்துகிட்டேயிருந்தா. வயசுக்கு வந்து என் கோவத்த அதிகப்படுத்தன அந்த வளர்ச்சிய சொல்லல. வேற விதத்துல. படிப்பு, அழகு, நாகரிகம், நாசூக்கு. இப்ப எல்லாம் அவ பார்வ  ரொம்ப பயங்கரமானதா இருக்க, நான் ஒரு வேட்ட நாயா எப்பவும் பாய்ச்சல்லயே இருந்தேன். நிரூபிக்கணுமே. என்னென்னவோ செஞ்சதுல அவ பார்வைக்கு பெரிசா எதுவும் கெடைக்கல. என் தலையில ஊர்காருங்க வச்ச க்ரீடம் பத்தி தெரிஞ்சுகிட்டருக்கலாம். காறி துப்பட்டும்னு நெனச்சுகிட்டு அதிலேயும் சந்தோஷப்பட்டுக்குவேன். ஒரு தடவ என் வீட்டுக்கு வந்தவ எங்க வீட்டு சொவர பாத்துகிட்டு நின்னா.

அது ஒரு தில்லாலங்கடி விஷயம் தான்.

வயிறு வீங்கிய  ஓணான் உருவத்திலிருக்கும் ஒரு பிள்ளையை ஏந்திக் கொண்டு உலகின் கருணையை பசியுடன் எதிர்பார்க்கிற பெண் ஒருத்தியின் புகைப்படம் அது. வதை செய்கிற வாழ்வை சகித்துக் கொண்டு பின்வருகிற காலத்தை சந்திக்க நிற்கும் அந்தப் பெண் என்னை எந்த அளவுக்கு பாதித்திருந்தாள் என்பது ரொம்பவும் சந்தேகத்திற்கிடமானது. பெரிய வேதாந்தி கூறுகிற சமரசமாக ' எங்கே துயரம் இருக்கிறதோ அது புனித பூமி !' என்று புகைப்படத்துக்குக் கீழே என் கையெழுத்தில் எழுதியிருந்தேன்.அந்த சோமாலியா பெண்ணுக்கும், மேற் சொன்ன வரியைச் சொன்ன ஆஸ்கார் ஒயில்டுக்கும்   சம்மந்தம் இல்லாததைப் போல ஒருவிதத்தில் அவள் பார்த்திருந்த விஷயத்துக்கும் எனக்கும் கூட சம்மந்தமில்லை தான். எனது அப்போதைய பிரச்சனை சுலபமானது. இதை ஒட்டி வைத்தவன் நான், கையெழுத்து என்னுடையது. அதை புரிந்துகொள்வாளா ?.

அவள் என்னை புரிந்து கொள்ளாதவளாகவே இருந்ததில் எனது பயணங்கள் வெகு மும்முரப்பட்டன. எல்லோரையும் எதிர்த்து கொண்டிருப்பதில்   நாட்கள் செலவாகி களைத்துக் கொண்டிருந்தேன். யாரும் எதுவும் பேசாமல் இருந்து விட மிக இலகுவாக அவள் கனவான் ஒருவனுக்கு மனைவியாகி போனாள்.

அழாமல் பார்த்துக் கொண்டேன். அறிவு இதற்கு ஆயிரம் பதில்களை வைத்துக்  கொண்டிருந்தது. எத்தனை பெரிய பிரபஞ்சம், அதன் கால வெளிக் கணக்கில் எத்தனையோ நிகழ்வுகள்... என்று.

ஓ. போதை. இரு. ஒதறிக்கிறேன். இலக்கணமா பேச ஆரம்பிச்சுட்டனா. வேணா. அவ்ளோ சீரியஸ் தேவயில்ல. சுருக்கமா வரேன். நாளுங்க போன பெறகு நானும் தனியாவ ஆரம்பிச்சேன். தனியாவ ஆரம்பிச்சேன்னு சொல்ற அந்த வரில விவரிக்க முடியாத பயங்கரங்கள் இருக்கு. அந்நியப்பட்டு தனிமப்பட்டு போய் நின்ன ஒருத்தன் மட்டுமே புரிஞ்சுக்கக் கூடிய பயங்கரங்க. பசி. அவமானங்க. வலி. அப்படி நெறய.

பாதுகாப்பா இருந்துகிட்டா பைத்தியக்கார ஆஸ்பத்தரிக்கு போவாம தப்பிச்சுக்க முடியமானு யோசிச்சேன். வேல, வீடு, குடும்பம்ன்னு கொஞ்சம் விஷயங்கள மேல இழுத்து போட்டுகிட்டு நாமளும் அதுக்குள்ள சுருண்டுக்கலாமேன்னு வந்துச்சு. திரும்பி வந்த ஆடு மரியாதைக்குரியது இல்லயா. இப்ப என்கிட்ட அதெல்லாம் இருக்கு. என் மூத்த பையன் ' பின் நவீனத்துவம்ங்கறது ஒரு வடிவம் இல்லப்பா, கலகம் !' ங்கறான். யாரயாவது லவ் பண்றானோ என்னமோ.

நான் கத சொல்ல ஆரம்பிச்சது அவளப் பத்தி. இல்லயா. அதுக்கு வரேன். பாதுகாப்பு கருதி நான் ஜனக்கூட்டத்துல கரைஞ்சதுக்கு அப்புறம் அவளப் பத்தி நெனச்சுப் பாக்கவே எனக்கு வெக்கம் வர ஆரம்பிச்சது. கோழைத்தனமான அந்த அவமானமான நாட்கள மறக்கணும்னு நெனைச்சேன். அவள சந்திக்க விரும்பல.

அவள சந்திக்க முடியற எடங்கள நான் தவிர்த்தேன்னு சொல்லணும்.

பொம்பளையா பொறந்துருந்தா நாலு பேரு கூட படுத்து சம்பாதிச்சிருக்க வேண்டிய காசை இப்ப ஒரு வேலையில இருந்து சம்பாதிக்கறனா, ஒரு அந்தஸ்து வேற வந்துருச்சி. நெறய பேரு கை குலுக்கிட்டு முதுக தட்டிக் குடுத்துட்டு போறான். செல நேரம் தொண்ட முட்ட குடிச்சிட்டு வாந்தி வந்துடறா மாதிரி வேற என்னென்னவோ விஷயங்க போட்டு அமுக்கும். காலைலயே குளிச்சி கிளிச்சி பொண்டாட்டி கூட கோவிலுக்கு எங்கயாச்சும் போயிட்டு யாராவது ரெண்டு பேருக்கு ' அன்னதானம்' போட்டு சாந்தியாயிடறேன்.

  உத்தமமான இந்த காலம் முழுக்க நான் அவள சந்திக்கவே இல்ல. பொய்யாய், கனவாய், பழங்கதையாய் போனதுவேன்னு முடிஞ்சிருக்கணும்.  ஆனா எதிர்பாராத ஒரு எடத்துல விலகிப் போயிர முடியாத ஒரு சூழல்ல மொகத்துக்கு மொகம் இன்னைக்கு காலைல பாத்துகிட்டோம். ப்ஸ. விதி.

என்ன செய்யறது.

அவள நான் காலமெல்லாம் பாக்காம இருந்துட்டனே தவிர, அவ வாழ்க்கயெல்லாம் தெரியும். அவளோட புருஷன் உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச ஆள் தான். (கரெக்ட், மூணு வருஷம் முன்ன அவன்தான் அந்த நடிகய வெச்சுகிட்ருந்தான்.) மூணு பொம்பளப் பசங்கன்னும் தெரியும். 

'எப்படி இருக்கே ' ன்னு கேட்டேன்.

புருஷன் இப்ப வேற ஒரு நடிகய வெச்சுக்கிட்ருக்கானாம். மொத பொண்ணு சூயிசைட்  பண்ணிகிட்டாளாம். ரெண்டாவது பொண்ணு போத பழக்கமாயி ரொம்ப காலமா ஆஸ்பிட்ட ல்லே தான் இருந்துகிட்ருக்கா. அவள பாக்கதான் போய்கிட்டிருக்கேன்னா.   மூணாவது பொண்ணு சின்னது. காருக்குள்ள உக்காந்து என்னை மொறைச்சிகிட்ருந்தா.

நெறைய நேரம் என்னால பேச முடியல. ரெண்டு மார்க்கு கம்மியா போட்டுட்டா டீச்சர், ஜொரமடிச்சிருக்கு இவளுக்கு. காலத்த பத்தி கொஞ்ச நேரம் யோசிச்சுகிட்டு நின்னேன். அவளோட கண்ணுகள பாத்து என்னால கேட்காம இருக்க முடியல. "எப்படி சமாளிக்கற ?"

" எங்கே துயரம் இருக்கிறதோ அது புனித பூமி !" ன்னா.

தம்பீ, இன்னும் ஒரு பெக்க கொண்டு வாப்பா. லார்ஜ்.




                                                                   " ஒரு வாக்கியம், ஒரு வாழ்க்கை "
    



No comments:

Post a Comment