Thursday, August 4, 2011

இயக்குனர் என்ன விரும்புகிறார் என்பது எனக்கு தெளிவாயிற்று. சக தோழர்களெல்லாம் மண்டைக்கடியில் இருந்தார்கள். பிரச்சனை மிகவும் சுலபமான ஒன்று. கதையில் வரும் ஹீரோ ஹீரோயினை ஒரு இடத்தில் சந்திக்க வேண்டும். அந்த சந்திப்பு பவர்புல்லாக இருப்பது அவசியம். இயக்குனர் நெற்றிப் பொட்டை கசக்கி பிழிந்து துயரப்படுவது அத்தனை பேரையும் குற்ற உணர்ச்சி கொள்ள வைத்தது. அனைவரும் அவரது உழைப்பை பகிர்ந்து கொள்ள விரும்பினார்கள்.

இயக்குனரின் சமூக பார்வை புரிந்து கொண்டு விட்டதாய் நம்புகிற ஒருத்தன். "சார் ஹீரோ வந்துகிட்டே இருக்கான். எதையோ பார்த்து ஷாக். அங்க டர்ன்  பண்ணா ஒரு கண்ணு தெரியாத தாத்தா ரோட்ட கிராஸ் பண்றாரு. இரண்டு பக்கமும் வண்டி. ஹீரோயின் பாய்ஞ்சி வந்து உயிருக்கு பயப்படாம அவர காப்பாத்திகிட்டு நின்னுடறா. ஒரு வண்டி மேல இன்னொரு வண்டி. இன்னொரு வண்டி மேல இன்னொரு வண்டி இடிச்சி ஹாலிவுட் ரேஞ்சுல பிக் பேங்க். அந்த நகரமே ஸ்தம்பிச்சுப் போயி அங்கேயே பாத்துகிட்டு நிக்க. அவ எதையும் துளி கூட கேர் பண்ணாம அந்த தாத்தாவோட போயிகிட்டேயிருக்கா".

இயக்குனர் தனது உதவியாளனை கூர்ந்து பார்த்தவாருயிருக்க. அவன் புல்லரிப்புடன் "ஹீரோ மனசு நெகிழ்ந்து போயி இலேசா ஸ்மைல் பண்ணிடறார் சார். பின்னால கோரஸா ஒரு தீம் மியூசிக் போட்டு விட்டுரலாம்" என்று விட்டு அவரை தத்தளிப்போடு பார்க்க அவர் முகம் சுருக்கினார். முகமெங்கும் வேறு அமைதி.

என்னை தூக்கம் வந்து மெல்ல தட்டியது. சுதாரிக்க முயலுகையில் கொட்டாவி வந்தது. மிகுந்த அயர்ச்சியை உணர்ந்தேன். ரத்த புற்று நோய் வளர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற பயம் ஒரு உலுக்கு உலுக்கியது.  எதாவது உளறி கொட்ட ஆரம்பிக்கலாமா என்று முன்னகர்ந்து பிறகு பம்மினேன். என்ன எழவை சொல்லி தொலைப்பது. நான் அடங்கி நாலு மாத வாடகை பாக்கி பற்றியும், வீட்டுக்காரனுக்கு என்ன சாக்கு சொல்ல முடியும் என்பது பற்றியும் தீவிரமாய் யோசித்து கொண்டிருக்கையில் இயக்குனர் என்னை பெயர் சொல்லி அழைத்தார்.

நான் நிகழ் உலகுக்கு ஒரு திடுக்கலுடன் வந்து விழ.

அவர் "பேசாம இருந்தா என்ன அர்த்தம் !" என்றார்.

நான் ஒரு சிரிப்பு சிரித்து வைத்தேன்.

"ஏதாவது சொல்லு".

"சொல்றேன் சார்".

"எப்ப ! ட்டூ அவர்சா நாம இதே சீன்லயே இருக்கிறோம் !".

"யோசிச்சிட்டு தான் இருக்கிறேன்".

"சீக்கிரம்".

பிரமிளாவுக்கு அப்போது வயது பதிமூன்று. எனக்கு வயது பதினான்கு. அவளுடைய வீட்டில் ஐயப்பன் பூஜை நடந்து கொண்டிருந்தது. மார்கழி மாதத்தினுடைய இரவின் குளிர் இலேசாய் உறைத்து கொண்டிருக்க கும்பலோடு சேர்ந்து நடுக்கத்துடன் பாடிக் கொண்டிருக்கிறேன். என் கண்கள் அடிக்கடி ஒரு திசையை கவனமாய் பார்த்துக் கொள்கின்றன. ஹார்மொனியத்தில் பதிந்து விலகுகின்ற அவள் கைகள்தான் எவ்வளவு அழகியவை?. அவள் ஐயப்பனை நேசிக்கிறவள். அவளுக்குள்ளே என்னவோ ஊறி ததும்புகின்றன. வழிந்தோடுகிறாள். விவரித்துக் கூற முடியாத ஒரு பேரமைதி அந்த கண்களில் நிரம்பி நிற்க அவளுடைய பாட்டு சத்தம் எனக்கு தனியாய் கேட்கிறது. என் கடவுளே நான் விரும்புவதென்ன? எங்கே கரைந்து மறைந்து காணாமல் போக விரும்புகிறேன். நெகிழ்வால் என் குரல் ஆழமாகிறது. உச்சத்தில் சஞ்சரித்து உருகுகிறேன். கண்ணீரை மறைக்க வேண்டி வருகிறது. பஜனை ஒரு கட்டத்தில் அதன் முடிவை எட்ட அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது.

விருவிருப்படைந்த குரல்கள் முறுக்கி ஆவேசம் அடைந்து அனைவரும் கிளர்ச்சியடைந்த அந்த தருணத்தில் ஒருத்தன் தனது கட்டுபாட்டை இழந்தான். சாமி வந்துவிட்டது என்கிற முணுமுணுப்பு பரவியது. அனைவரும் அடங்கி நிற்க அவன் மூச்சிறைப்புடன் என்னென்னவோ பிதற்றியபடி சாமியாடினான். தடித்த உருவமுடைய அவனது மீசையும், தாடியும் அலங்கோலப்பட்டு, வியர்வையில் நிறம் மாறின குங்குமக் குழம்பு முகத்துடன் அவன் நறநறக்க எனக்குள்ளே ஜில்லிப்பு தட்டியது. ஜனங்கள் ஏதேனும் குறையிருக்கிறதா என்று அவனிடம் வினவ ஆரம்பித்தார்கள். அவன் பிரமிளாவினுடைய அப்பாவின் தலைமுடியை பிடித்து கொண்டு ஆட ஆரம்பித்தான். தேம்பியவாறு அவன் துப்புகிற சொற்கள் பிடிபடவில்லை. பிடிப்பட்டிருந்த அவர்  மிகுந்த வலியுடனும், தர்ம சங்கடத்துடனும் அல்லாட சாமி ஏதோ ஏதோ கேட்டவாறிருந்தது. ஆட்களினுடைய நடுவில் நான் வேறொன்றை மெதுவாக அறிந்தேன்.

வாரிப் போட்டது.

அது எனது பிரமிளாவின் விசும்பல் சத்தம்.

அப்பா அப்பா என்ற ஈனத்தில் கசிந்து கொண்டிருந்தாள். விழிகளில் கண்ணீர் துளிகள் துடித்து நின்றன. பயமும் துயரும் ஆட்களுடைய நெரிசலும் அவளை கலைத்து விட்டிருந்தன. நான் எப்போதும் நிறைவெய்துகிற அந்த எழிற்கோலம் இப்போது இல்லை. எந்த பிடிப்புமின்றி பரிதாபகரமாய் அழுதாள். எனக்குள்ளே என்னமோ நொறுங்கியது. அதை போலவே வேறேதோ பொங்கியது. அழாதே அழாதே என்றேன். அது எனக்கே கேட்கவில்லை. அவள் எனது மன்றாடலை கவனிக்கவுமில்லை. மிகவும் நெருங்கி ஆறுதல் கூற தத்தளித்தவாறிருந்தேன். அவளது அழுகை எனக்குள்ளே மிக பயங்கரமாய் எதிரொலிக்க துவங்கி என்னையும் அது அழ வைத்து விடும் என்கிற கட்டத்தில் தாங்க முடியாமல் அவளது கரங்களைப் பற்றினேன். வியர்த்து குளிர்ந்து போயிருந்தது. நன்றாக அழுத்தி "பிரமீ !" என்றேன், ஆதுரத்துடன். ஏதோவென பரபரப்பில் அவள் என்னைப் பார்க்க "ப்ளீஸ் அழாதேப்பா !" என்றேன். "ஒண்ணும் ஆகாது !" என்று சொல்ல முயன்றேன் ஒரு பெரிய மனுஷ தோரனையில். அவள் ஒரு கணம் புரியாதிருந்துவிட்டு புரிந்தவுடன் இன்னும் வேகத்துடன் ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

இந்நிமிடம், இதோ எழுதுகிறேன். இப்போது வரை மறக்க முடியாமல் வதைபட்டிருந்த கணங்கள் அவை.

ஒரு வழியாய் எல்லாம் முடிந்து கூட்டத்துடன் அமர்ந்து சாப்பிடும் போது கூட எனக்குள்ளே அந்த துக்கம் என் நெஞ்சை போட்டு பிசைந்தவாறிருந்தது.

எங்கேயாவது சென்று சத்தம் போட்டு அழ விரும்பினேன்.

வீட்டுக்குக் கிளம்பும் போது, அத்தனை பேரிடமும் விடைபெறும் போது மின்னல் போல அங்கே தோன்றினாள்.

"போயிட்டு வர்ரேன் !" என்று தினறினேன்.

அவளது முகத்தில் அப்போது உண்டான பாவத்தை எப்படி சொல்வேன் இந்த பாழாய்ப்போன வார்த்தைகளால். அவளை முழுவதுமாய் அறிந்த எனக்காக அவள் கண்கள் விரிந்தன. வேறு ஒரு மனிதன் புரிந்து கொள்ள முடியாத கொந்தளிப்புடன் "சரி !' என்றாள். முகத்தில் நிறைவு பெருகி நின்றது.
 
நகரும் போது இன்னும் ஒரு தடவை நான் பார்த்துக் கொண்ட அந்த கண்கள் தான் இன்று என்னுடைய வாழ்க்கை.

ஆதாரம்.

எல்லாமே.

எவனையோ ஒருவனை கட்டி இரண்டு பிள்ளைகளின் தாய் இப்போது. நானும் பல பேரை காதலித்து பலபேரோடு படுத்துமாயிற்று. அவள் இருக்கிற திசைக்கே செல்வதில்லை என்றாலும் அவளது கண்கள் அந்நிமிடம் முதல் என்னை பார்த்துக் கொண்டே இருக்கின்றன. அதன் வெம்மையில் தான் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

என்னையறியாமல் ஒரு பெருமூச்சு வெளியேற சகா " என்ன யோசிக்கிறாய் ? என்றான்.

"ப்ஸ ஒண்ணும் இல்ல !"

இயக்குனர் என்னவோ சொல்வேன் என்று என்னையே பார்க்க இப்போது எதையாவது பேசியாக வேண்டும். என்ன சொல்வது. ஒருவன் வாழ்கை முழுக்க காதலிக்க கண்கள் மட்டும் போதுமென்றா. அதற்கு குருட்டு கிழவர்கள் உதவி செய்ய தேவை இல்லை என்றா.

"சொல்லுப்பா !"

"சார் - தாத்தாங்கள விட்டுட்டு ஒரு குருட்டு பொண்ணு சார் ! பதினாறு வயசு பொண்ணு. நடந்து நடந்து .... அப்படியே தொறந்து வச்ச ஒரு பாதாள சாக்கடைல விழுந்துடறா சார் ... ! என்றேன்.

"மேல சொல்லு ".

"ஹீரோயின் ஓடி  வர்றா. பதறிப் போறா ".

"யோசிச்சு யோசிச்சு  கடசில தன் பொடவைய அவுக்றா சார் !".

அத்தனை பேரும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

"தன்னோட ரெண்டு மொலயும் அப்படியே வெளிய தெரியறது பத்தி கவலையே படாம சாக்கட உள்ளே தன் முந்தானைய வீசி எரியறா !"..

மீதி கதை என்னவாயிருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். அப்படி தெரியாவிட்டால் கூட வெளிவரப் போகிற அந்த திரைப்படத்தில் அந்த காட்சியை நீங்கள் பார்க்கத்தானே போகிறீர்கள்.

                                                                                                                                                                                                                                                         "பார்வை"                                                                                                                                                                                                                                                      ( A  short  story ) 




No comments:

Post a Comment