Thursday, August 25, 2011

நான் என் அம்மாவிற்கு கடிதம் எழுதியதில்லை.

அப்போது எல்லாம் நிறைய ஆர்வகோளாறு. நாடகம் நாடகம் என்று பத்து பேரோடு கும்மாளி. எங்களுக்கு நடுவே ஒரு தனசேகர் இருந்தான். சாது. பிற்பாடு அவனுக்கு திருமணமாகி கொஞ்சம் நாளில் மாரடைப்பில் இறந்து போனான். ஒரு வெளிச்சம் குறைந்த மது விடுதியில் அன்று கிளம்பி வந்த கதைகள் ஆயிரம். அது முக்கியமாக அவன் மனைவியையும் தம்பியையும் பற்றியது. நரபோதையில் அநீதியின் பாரம் அழுத்தியதில் சகா சொன்னான் "மச்சான் துக்கத்த தாங்கிக்க முடியாம நெஞ்சு வெடிச்சிடிச்சி".

* * *
தனசேகரை அத்தனை பேரும் மறந்து விட்டார்கள். நானும்தான். என்னென்றால் ஆயிரம் விஷயத்தில் அது ஒரு காரியம். ஆனால் இந்த விஷயத்தை ஒரு திரைகதையாக்கி அதில் சிவா ஜி கணேசனை ஹீரோவாக போட்டால் ? சோதனை மேல் சோதனை என்று படிக்கட்டில் இறங்கி பாட்டு பாடுகிற அவரை நினைத்து கொள்ளுங்கள். சரி, பழைய கதை எதற்கு ? இது வேறு ஒரு காலம் அல்லவா. இப்ப எல்லாம் எதார்த்தம் பதார்த்தம் தான் முக்கியம். லாஜிக் லாஜிக் என்று ரத்த குசு விடும் சினிமாகாரர்களுக்காக சேரன் ஹீரோ. என்ன ஆகிவிட போகிறது. எல்லாம் ஒன்றுதான். தனசேகரின் கதையை போல அமுங்கி விடாமல் இது ஒரு காவியமாக விஸ்வரூபமெடுத்து உலகத்தை வலம் வரும். ஆ சினிமா என்பது கூட்டு முயற்சி அல்லவா ?. நூறு பேர்  சேர்ந்து பிலாக்கணம் வைத்தால் ஒரு வேளை படம் சூப்பர் பம்பர் ஹிட்.

இது தமிழ் சினிமா மட்டும் அல்ல. சராசரி இந்திய சினிமாக்கள் அனைத்துக்குமே உரியது. இவைகளை சுண்டு விரலால் புறமொதுக்கி காரி துப்புவதற்கு நான் யார் ?. அனால் சினிமா என்கிற காட்சி கலையின் சாத்தியகூறுகள் அவ்வளவு தானா. அது ஏன் தெய்வதிருமகள் விக்ரம் மாதிரி இருக்க வேண்டும். நூறு வருஷமாக ஒரே மாதிரி தத்தக்கா பித்தக்கா தானா. விதி விலக்கான இந்திய தமிழ் படைப்பாளிகள் பலரும் மூச்சு திணறும் இந்த கொடிய விஷ சூழலில் ஜாணை பற்றி பேச வேண்டும். முக்கியமாக அவனது அம்ம அறியான் படத்தை பற்றி.





ஜாண் ஒடியனை போல எளிமையான ஒரு மந்திரக்காரன்.

தன்னை ஒரு கலைஞனாய் அல்டாப்பு பண்ணி கொள்ளாமல் வெறும் சினிமாக்காரனாய் ஒரு ஒரிஜினல் சினிமாவை படைத்து காட்டுகிறான்.

ஒருபோதும் சினிமாவாய் இல்லாத அந்த சினிமாவிற்குள் ஒரு கதை வேண்டும் அல்லவா ?.

டெல்லிக்கு கிளம்புகிற மகனிடம் அம்மா லெட்டர் போடு என்கிறாள். (அந்த அம்மா பண்டரிபாயோ, பாத்திமா பாபுவோ, பாபிலோனாவோ இல்லை. சத்தியமாய் கவியூர் பொன்னம்மாவும் இல்லை) அவனுக்கு அதெல்லாம் பழக்கமில்லை. கிளம்புகிறான். வழியில் ஒரு இளைஞனின் பிணத்தை பார்க்க வேண்டி வருகிறது. தற்கொலை. யார் அவன் ?. விசாரிக்க ஆரம்பித்து பிறகு அடையாளம் தெரிந்து கொண்டு மற்றும் பலருடன் இறந்தவனின் அம்மாவுக்கு சாவு சேதி சொல்ல போகிறான். டெல்லிக்கு போகவில்லை. அந்த கூட்டம் பல அம்மாக்களை பார்க்கிறது. தன்னை அறியாமல் தன் அம்மாவுக்கு மானசீகமாய் கடிதம் எழுத ஆரம்பிக்கிறான். அதுதான் படம்.

ஸ்நேகிப்பதை தவிர வேறொன்றும் தெரியாத குடும்பத்து அம்மாக்களுக்கு இளைஞனின் தற்கொலை பற்றியும் விஷமாய் முறுகி வரும் அரசியல் பற்றியும் புரட்சிகள் பற்றியும் மக்கள் பெற்ற வெற்றிகள் பற்றியும் அவன் மனசு சொல்லிக்கொண்டே இருக்கிறது. நாம் கடந்து போகும் எந்த பாதைகளுக்கும் வரலாறு இருக்கிறது. அதை சொல்ல தத்தளிக்கிறான் அவன். ஒரு அம்மாவில் இருந்து துவங்கிய படம் இன்னொரு அம்மாவின் முகத்தில் முடிகிறது.

 உண்மையில் நம் அம்மாக்களுக்கு எழுதி சொல்லாத கடிதம் தான் இந்த திரைப்படம் என்று சொல்லலாமா ?.

கருப்பு வெளுப்பில் நிஜ மனிதர்கள். அவர்களுடைய முகங்களுக்கு பெரிய அடையாளங்களே இல்லை. எப்படி பார்த்தாலும் அது நீ, நான், அவன், இவன், அவர்கள், இவர்கள் தான். ஒன்று இரண்டாகி, இரண்டு பனிரெண்டாகி பல்கி பெருகியவாறு இறந்தவனின் அம்மாவை தேடி செல்லும் கூட்டத்தில் நாம் இணைந்து கொள்ளுகிறோம். இது ஒன்றும் சும்மா பேச்சில்லை. படத்தை பாருங்கள். ஒரு ஒளிபதிவாளனும், ஒரு இசையமைப்பாளனும், ஒரு எடிட்டரும் ஜாணோடு சேர்ந்து நம்மை அந்த அம்மா முன்னாள் நிறுத்தி உங்கள் மகன் இறந்து விட்டான் என்பதை சொல்ல திணற  வைக்கிறார்கள். துளி கூட மசாலா மிதக்காத ஒரு கலப்படமற்ற அனுபவம்.

* *  *
     
படத்தை பற்றின மேலதிக குறிப்புகளை எழுதவில்லை. அதற்கு அவசியமுமில்லை. எங்கேயாவது நின்று என்சைக்ளோபீடியாவாக முந்திரிகொட்டை வேலை செய்யும் ஜென்மங்கள் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளட்டும். நான் சொல்ல வருவது இந்த படத்தை குப்பை என்று சொல்லி போனார்களே அவர்கள் எப்படி பட்டவர்கள். அவர்களுக்கு என்ன வேண்டும். திரையில் மனிதனின் தலை க்ளோஸ் - அப்பாய் வந்த போது ஜனங்கள் வெருண்ட சரித்திரம் சினிமாவுக்கு இருக்கிறது. எதுவுமே பழக்கப்பட்டால் தான். இரண்டு வயசு குழந்தை மொபைலின் சகல தொழில் நுட்பங்களையும் அறிந்து விளையாடுகிறது என்றால் நான்கு வயது கழுதைகளுக்கு சினிமா மட்டும் பழக்கப்படாதா.

ஜாணை பற்றிய ஆவண படத்தை எடுத்த சரத்சந்திரன் இறப்பை பற்றி படப் பெட்டியில் வாசித்த போது தவிர்க்க முடியாமல் அம்ம அறியான் நினைவுக்கு வருகிறது.

வாழ்நாள் முழுக்க இப்படத்தை மறக்க முடியாது.

No comments:

Post a Comment