Monday, September 26, 2011

பிலிம் காட்டியவர்கள் தொகுதி ஒன்று



கஞ்சிக்கே வகையற்ற மக்கள் திரள் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் விரவி இருக்கும்போது உலகமே கிராமமாய் சுருங்கிவிட்டது எனும் பெருமிதத்தை எப்படி எடுத்துகொள்வது. சினிமாவும் அப்படித்தான். நெருப்பு பற்றி எரிகிற இடத்தில் நின்று மேனாமினுக்கியாய் ஒய்யாரம் பண்ணிக்கொண்டு இருக்கும். ஏனெனில் எதிர்காலத்துக்காக பேசுகிற திராணி அதற்கு கிடையாது. வரலாற்று பிரங்ஜை கிடையாது. நேற்று நடந்ததென்ன என்பதை அறியாதவன் நாளை செய்ய வேண்டியதை பற்றி உணர்வானா?.

ஹரிச்சந்திராச்சி பாக்டரி (2010) மராத்திய படத்தில் 'பிலிம் காட்டிய' தாதாசாகிப் பால்கேவின் ஆரம்ப கால சினிமா முயற்சிகள் சொல்லப்படுகிறது. செய்வதற்கரிய காரியங்களை செய்து முடிக்கிற பால்கேவின் துணிகரங்களை மிகவும் எளிமையாய் சொல்லியிருக்கிறார்கள். சினிமாவை கவனிக்கிற எண்ணம் இருக்கிற எவனுக்கும் இந்த படம் ஒரு விருந்து தான்.  காரணம் இரண்டு மணி நேரம் நாம் கடந்த கால வரலாற்றை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

'பிலிம் காட்டியவர்கள்' புத்தகமும் அந்த மாதிரி ஒரு உணர்வை எழுப்புகிறது. 




உலகாயுதா தேவைகளுக்கு பொருந்துகிறது என்று நினைக்கிறேன். ஜனநாதன் தமிழ் சினிமாவில் முக்கியமானவர். வரலாற்று உணர்வு இருக்கிற ஒரு இயக்குனர். அவரது நல்ல முயற்ச்சிக்கு யோகானந்த் ஓரளவிற்கு பலன் சேர்த்து இருக்கிறார். மகேஷின் டிஜிட்டல் ஓவியங்கள் உயிரோடு இருக்கின்றன. ஒவ்வொரு முகமும் நம்முடன் பேசுகிறது. புத்தக வடிவமைப்பும் சந்தேகமின்றி கச்சிதம். 




ராஜாசாண்டோ, கே. சுப்பிரமணியம், எல்லீஸ் ஆர் டங்கன், கே. ராம்நாத் போன்றவர்கள் இயக்கிய படங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஒரு தலை ராகம் போன்ற பல படங்களை பார்த்த ராக்சி தியேட்டர் பற்றின குறிப்பை பார்த்த போது ஏதோ இழப்புணர்ச்சி. பால்கேவின்  சினிமா  ஆசைக்கே  காரணமாய்  இருந்த     'ஏசுவின்கதை' யை  திரையிட்ட வின்சென்ட் சாமிக்கண்ணுவை பற்றி அறியும் போது பெருமிதம்.

புத்தகம் சிறியது தான்.

முன்னுரைகளில் சொல்லப்படுவது போல இது ஆரம்பமும் தான். 



எனினும் புத்தகத்தின் நோக்கம் விளைவுகளை ஏற்படுத்துகிறது. 'மரியாதை கொடுத்து மரியாதை பெறவும்' என்று டி. ஆர். சுந்தரத்துக்கு சீட்டு எழுதி கொடுத்த பட்டுக்கோட்டையை பற்றி கொஞ்ச நேரமேனும் சிந்திக்காமல் இருக்க முடியாது. அதை போலவே பல பேருடைய குறிப்புகள் இருந்திருக்க வேண்டும். அதாவது அவை குறிப்புகளாகவே நின்று இருந்திருக்க கூடாது.

எப்படியாயினும் சினிமாவை பற்றி அறிய விரும்பும் இந்த தலைமுறைக்கு சில அடிப்படைகளை கோடிட்டு காட்டியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment