Thursday, September 15, 2011

வாழ்வெனும் நகைச்சுவை


சட்டென்று விழித்துக்கொண்டான் அவன்.

வழக்கத்துக்கு மாறான சந்தடிகளை நுட்பமாக உணர்ந்து கொள்ளக்கூடியவன் தான். ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. ஏன் விளக்குகள் எரிகின்றன. ஆட்கள் கூட அதிகமாக. சட்டென்று புரிந்துவிட்டது. அழுகை சப்தம். ஆமாம், சப்தமாக அலறும் அந்தக் குரல் கோபியின் அம்மாவினுடையது தான். கடவுளே, என்ன ஆயிற்று. கமலிக்குட்டி செத்துப் போய்விட்டாளா ?

இவன் கோபியைத் தொட்டு பார்த்தான். அடப்பாவி, உன் தங்கைக்கு என்னவோ ஆகிவிட்டிருக்கிறது. நல்ல உறக்கம். மனசில் உறைந்த அதிர்ச்சியுடன் கோபியை உலுக்கிப் பார்த்தான். வலுவில்லை. உடம்பில் ஏதோ ஒரு தளர்ச்சி வந்துவிட்டிருந்தது. இப்போது என்ன தான் செய்வது. முணுமுணுப்புடன் ஆண்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். என்ன பேசுகிறார்கள் என்பது சரிவர புரியவில்லை. 'பெரம்பூருக்கு யாரையாவது அனுப்பிவைக்க வேண்டும்' என்று கோபியின் அப்பா சொல்வது கேட்டது. அங்கே சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். இவனுக்கு தெரியும். அப்படியென்றால் ... ?

கமலிக்குட்டி பிறந்து நான்கு மாதங்களாகிறது. அவள் பிறக்கும்போதே நோயைக் கொண்டு வந்திருந்தாள். பூஞ்சையாயிருந்தாள் . தினமும் ரிக் ஷா  வைத்து டாக்டர் வீட்டுக்குப் போய் வருகிறார்கள். கோபியும், இவனும் ஒன்றிரண்டு தடவை கூட போயிருக்கிறார்கள். அவ்வளவு சிறிய உடம்பில் எத்தனை ஊசிகள். கமலிக்குட்டி தன்னுடைய சிறிய வாயை முழுவதுமாய் திறந்து அடிவயிற்றுக்குள்ளேயிருந்து அலறுவாள். கண்ணீர் கொப்புளிக்கும். இவன் அதை மிகவும் நடுக்கத்தோடு பார்த்து நிற்பான். எப்படி சிவந்து போகிறது குழந்தையின் முகம். வலி, அழுகையை சமாதானப்படுத்தி பாலையெல்லாம் புகட்டிய பிறகு கூட திடீர் திடீர் என அவளது உதடுகள் துக்கத்துடன் கோணலாகும். கண்களுக்குள் நீர் ததும்பும். பக்கத்தில் கவனிக்க யாரும் இல்லையென்றால் இவன் மெதுவான குரலில் அந்தக் குட்டிக் காதுகளுக்கு குனிந்து கனிவாய் ஏதேனும் சொல்வான். புரியுமா அவளுக்கு, கமலிக்குட்டிக்கு காலை நேரங்கள் மிகவும் பிடித்தமானவை போலும். நோய்களின் சமிங்ஞை இல்லாத கூர்மைமிகுந்த முகமாயிருக்கும். கண்களை விரித்து நாலாபுறமும் பார்த்துக் கொண்டிருப்பாள். யாராவது சேட்டையுடன் கொஞ்சும் போது சிக்கனமாக சிரிப்பாள் . சிரிக்கும் நேரத்தில் சந்தேகமில்லாமல் பேரழகி அவள். இவனுக்கு கை துருதுருக்கும். எப்படி தன் ஆசையை வெளிப்படுத்துவது என்பதில் நிறைய சந்தேகங்கள் இருக்க, எப்போதும் உறைந்தே இருந்தான். கோபியோ பெருங்கிழவனைப் போல் வெட்கமின்றி ஏதேதோ சப்தங்களால் தன் தங்கையை சிரிக்க வைக்கிறவன். இப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதே இவனுக்கு போதுமானதாயிருந்தது. அப்புறம் கொஞ்சம் அந்தரங்கமாக, கமலிக்குட்டி தன்னை அடிக்கடி ஆழ்ந்து கவனிப்பதாகவும், அங்கசேஷ்டை செய்து வினோத குரல் எழுப்பி அவளை சிரிக்க வைக்கவில்லை என்றாலும் கூட அவளுக்கு தன் மீது விசேஷமான அன்பிருக்கிறதென்றும் அவன் நினைத்தான். தன்னைப் பற்றி கமலிக்குட்டிக்கு தெரியும் என்கிற நினைப்பே பெரும்பாலும் அவனை மௌனமாக்கி நிற்க வைத்தது.
 
அவன் படிக்கிற பள்ளியில் மூன்றாம் வகுப்பின் ஆசிரியைக்கு உட்கார்ந்து தூங்கும் பழக்கமுண்டு. எல்லோரும் அது பற்றி அறிந்துவைத்திருந்தார்கள்.    தூங்குகிற ஆளை எழுப்பி, அது அதிர்ச்சியோடு குச்சியை தூக்கி அடிக்க வந்து விடாமல் கிசுகிசுப்பாய் பேச கற்று வைத்திருந்தார்கள் எல்லோரும். இவன் தன்னுடைய கமலிக்குட்டியை பற்றி வரதராஜபெருமாளிடம் சொல்வான். எப்போதும் கோவிலில் கிடைக்கிற சுண்டல் கடலையைப் பற்றி பேசும் பெருமாள் இவன் சொல்வதை சரிவர காதுகொடுத்து கேட்பதில்லை. அதனால் என்ன, இவன் தான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி விடுகிறவன் தான். இந்த பெருமாளுக்கு ஏன் கமலிக்குட்டியினுடைய சிரிப்பு விளங்கமாட்டேன்கிறது. ஒரே ஒரு தடவை என்னோடு வந்து பார். அப்போ தெரியும். இந்த உலகத்தில் சுண்டல் என்பது அவ்வளவு பெரிய விஷயமா.

மணியடித்து, பள்ளியை விட்டு வீட்டுக்கு வருகிற வழியில் அன்று ஒரு நாகலிங்க மலர் கிடைத்தது. அளவில் மிகப் பெரியது. கம்பீரமாக மணத்தது. இப்போது தான் மரத்தில் இருந்து உதிர்ந்திருக்க வேண்டும். நல்லவேளை, யாரும் மிதிக்கவில்லை. அவனுக்கு கமலிகுட்டியின்  ஞாபகம் வந்துவிட்டது. அவளுக்கு இதை இப்படி சுற்றி சுற்றி காட்டினால் சிரிப்பாளோ. மர நிழலில் உட்கார்ந்து கிழங்கு விற்கும் அந்த பாட்டி இவனிடம் தனது வழக்கமான  பல்லவியை பாடினாள். 'போட்ரு, வீட்டுக்கு கொண்டு போனியானா நாகம் ஒன்னத்தேடி ஒன் வீட்டுக்கே வந்துரும். 'பொய், பொய். அப்படியெல்லாம் கிடையாது. எத்தனையோ தடவை வீட்டுக்கு கொண்டு போய் விளையாடி இருக்கிறான். எதுவும் வரவில்லை. ஆனால், இப்போது சற்று பயமாய் இருந்தது. கமலிக்குட்டி தன் கையில் நாகலிங்க பூ வைத்து விளையாடிக் கொண்டிருப்பதும், பக்கத்தில் ஒரு நாகம் படமெடுத்து நிற்பதும் ஒரு காட்சியாய் வந்தது. சின்ன நடுக்கம் ஏற்பட்டது. வராது தான். நிச்சயமாக வராது. இருந்தாலும், இருந்தாலும் அவன் பூவை தூக்கி எறிந்து விட்டான். கமலிக்குட்டியின் முன்னால்  நின்று மெளனமாக தனது முட்டாள்தனம் பற்றி யோசித்து புன்னகை செய்தான். அவளுக்கு விளையாட்டுக் காட்ட என்னென்னவோ பொருட்கள் இருந்தன. யாரிடமும் நாகலிங்கம் பூவைப் பற்றி சொல்ல முடியும் என தோன்றவில்லை. மனசு எதெற்கோ கஷ்டப்பட்டது.

கமலிக்குட்டியின் கண்கள் அவனுக்கு ரொம்பவும் பிடித்து போயிற்று. அவள் எல்லோரையும் போல அல்லாமல் உள்ளே இருக்கிற கருமணிகளைப் போட்டு எப்போதும் உருட்டுகிறாள்.

அவளுக்கு பால் வேண்டுமென்றால் அந்த குட்டிக் கண்கள் தா, தா என்று பேசுகிறது. வாயால் பேசுகிற வயது தான் இன்னும் வரவில்லையே. கண்கள் பே சுகின்றவை தாம். நிஜமாகவே அவன் தன் அம்மாவை அறிவாள். அப்பாவை, அண்ணனை அறிவாள். இவன் தன்னைப் பற்றி அவள் நன்றாக அறிவாள் என்பதை அந்த கண்களுக்குள் புகுந்து பார்ப்பதன் மூலமாகவே நம்பிக்கொண்டிருந்தான். சாயந்திரமாவதற்குள்  குளிப்பாட்டி, பவுடர் அப்பி, பொட்டிட்டு, கண்களிலும் மை தீட்டி வைத்திருப்பார்கள். தூக்கம் போட்டு அழுத்துகின்ற நேரம் அவளுக்கு அது, மூக்கு கொர், கொர்ரென்று உறுமும். எப்போதேனும் திடுக்கிட்டு முழித்துப் பார்க்கிற அந்த கண்களில் மிகுந்த சோர்வு தெரியும்.  தூங்காமல் இருந்தால் எரிச்சலோடு இருப்பாள். விளையாட்டு காட்டுகிற கோபியை பார்த்த உடன் கிரீச்சிட்டு கத்தி தன் எதிர்ப்பை தெரிவிப்பாள். பால் கூட குடிக்கமாட்டாள் போல. அவளுடைய அம்மா உடனே தனது முலைகளை ரவிக்கைக்குள் திணித்து கொள்ளுவதை இவன் பார்த்திருக்கிறான். அவளுடைய நோயை புரிந்து கொண்டு இடைஞ்சல் செய்யாமல் தான் பார்த்துக் கொண்டு இருப்பது அவளுக்கு எப்போதும் தெரிந்திருக்கலாம். ஒரு தைரியம் கூட கிடைத்திருக்கலாம்.

யாரிடம் சொல்லுவது இதையெல்லாம். மூத்திரமோ, மலமோ வெளியேறி ஈரமாகும் போது பயங்கர எரிச்சல் வந்துவிடும் அவளுக்கு. எல்லாம் துடைக்கப்பட்டு சுத்தமாகி உலருகிற வரை அந்தக் கண்களில் பாவம், நிம்மதியே இருக்காது. சீக்கிரம், சீக்கிரம் என்று மனசுக்குள் படபடத்துப் போவான் இவன். யாருக்கு தெரியும் அது. சுத்தம் செய்கிறவர்கள் மிகவும் சாவகாசமாக செய்வார்கள். அவளுடைய கஷ்டத்தை புரிந்து கொள்ளமாட்டார்கள். அவளுக்கு சட்டென்று நிம்மதியை கொடுத்து விடமாட்டார்கள். அவன் எப்போதும் தனது மனசில் பெரியவர்களை சபித்தான். அவளை அழவைத்து, சுரனை இல்லாமல் பொறுமையாயிருக்கிற அவளுடைய பெற்றோர்களைக் கூட பெரும்பாலும் வெறுத்தான், சே, எப்படிப்பட்ட ஆட்கள் இவர்களெல்லாம்.

அவன் தனது கற்பனையில் வெகுதூரம் போவதுண்டு. அவனது மார்பில் காம்புகள் முளைத்து பால் வழிந்தது. கமலிக்குட்டியின் எச்சிலில் குழைந்து பெருகின அவை. அவளை தனது மடியை விட்டு இறக்க முடிவதில்லை. அவளது உடலெங்கும் அவன் வருடிக் கொடுத்தான். கமலிக்குட்டி, கமலிக்குட்டி என்கிற ஒரே உச்சாடனத்தில் அவன் தான் சொல்ல வேண்டியிருப்பது அனைத்தையும் சொல்ல அவளுக்கு எல்லாம் புரிந்து கொண்டிருந்தது. அவனுக்கு இவையெல்லாம் மிகுந்த ஆசுவாசத்தைக் கொடுத்தன. சுற்றி கேட்கின்ற குறட்டைச் சத்தங்களுக்கு நடுவே தூங்காத இரவுகள் இனித்தன. பள்ளியில் இருக்கும் போது நேருகின்ற பிரிவு சற்று பெருமையாகவே இருந்ததோ.

நேற்று இரண்டு மூன்று தடவை ஹாஸ்பிட்டலுக்கு போய் வந்தார்கள். காலையில் கூட அவள் சோர்வாக தான் இருந்தாள். சிரிக்கவே இல்லை. கண்கள் நொந்து போயிருந்தன. எனினும் அவை என்னவோ சொல்லின. என்ன ஆயிற்று கமலிக்குட்டிக்கு. தெரியும். அதுதான். அவளுடைய  அம்மா ஏன் அழ வேண்டும். ஏன் இவ்வளவு ஆண்கள் கூட்டம். எல்லோருக்கும் இது பற்றி தெரியுமா. அதனால் தான் அவனுடைய அம்மா அவள் இருக்கின்ற அறையில் ராத்திரி படுத்து கொண்டார்களோ. எப்படி தூங்கி போனேன். எப்போது இப்படி ஆயிற்று. ஐயோ, செத்துதான் போய் விட்டாளா கமலிக்குட்டி..
 
இவன் எழுந்து உட்கார்ந்தான். இப்போதே அவளைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையை அடக்கி தூக்கத்தில் இருந்து விழித்த சின்னப் பையனாகவே நடந்து கொள்ள வேண்டியிருந்தது. இவன் கண்களைக் கசக்கி நடிப்பை துவங்கிய அடுத்த கணத்திலேயே யாரோ படுத்துக்கோ தம்பி, தூங்கு என்றார்கள். அடப்பாவி, எனக்கு தெரியும் என்னால் தூங்க முடியாது. என் கமலிக்குட்டி செத்துப் போய்விட்டாள். நான் படுக்க மாட்டேன். அவனுடைய அப்பா வந்து அருகே குனிந்து 'என்னடா, படுத்துக்கறது தானே' என்றார். 'கோபி தூங்கறான் பார் படுத்துக்க' என்றார். அவன் மூர்க்கமாக முடியாது என்று தலையை அசைத்தான். அவனுடைய அப்பா அவனை உற்றுப் பார்க்க அவனுக்கு தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்தது. "மூத்திரம் வருது" என்றான். "சரி எழுந்துரு"

எழுந்தவன், அழுகைகள் பீறிட்டு வெளியேறும் அறையை பார்க்க முற்பட்ட போது அப்பாவின் வலுவான கைகள் அதை தடுத்து விட்டன. அனைத்துக் கொண்டிருக்கிற மாதிரியான வன்முறையோடு கூடிய ஒரு நெம்புதலில் இவன் வெளியேற்றப்பட்டு விட்டான். "பெய்டா" என்கிறார் அப்பா. உணர்வுகளை மறைத்துக் கொண்டு உடலின் நடுக்கத்தை அவர் பார்த்து விடக் கூடாது என்று தோன்றியதில் அண்ணாந்து வானத்தைப் பார்த்தவாறே தன் அரைடிராயரை விலக்கினான். வெட்டி எடுத்ததைப் போல துண்டாய் அம்புலியும், கொஞ்சம் நட்ஷத்திரங்களும். " நாயே எங்கே வேடிக்கை பாக்கறே நீ "

மனசு, அழுகையுடன் கூறப்படுகின்ற வார்த்தைகளை மிகக் கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்தது. செத்துப் போய்விட்டாள் என்பதில் சந்தேகமே இல்லை. இனி என்ன செய்ய முடியும். இனி அவ்வளவு தானா. எதுவுமே இல்லையா. தன்னை எதோ ஒன்று வந்து சூழ்ந்து கொண்டு நெருக்கிக் கொண்டிருப்பதை அவனால் அறிந்து கொள்ள முடிந்தது. மூத்திரம் பெய்வதை நிறுத்திக் கொண்டு ஒரு காலடி எடுத்து வைத்து நடப்பதில் கூட ஒரு அர்த்தமும் இல்லையென்று தோன்றிற்று. ஓடிப்போய் ஆவேசமாக கமலிக்குட்டியை வாரி எடுத்துக் கொண்டு அழ விரும்பினான்.

"அப்பா, கமலிக்குட்டி..... "

"என்னது?" அவர் கொஞ்ச நேரம் அந்த திசையைப் பார்த்து கொண்டு யோசித்தார். "வா, நம்ப ரெண்டு பேரும் ஜாலியா போயி பால் குடிச்சிட்டு வரலாம். "

தெருவுக்கு வந்தாயிற்று. எல்லாக் கடைகளும் அடைத்து கிடந்தன. அப்பா எந்த கடைக்கு அழைத்து போவார் என்பது தெரியும். " அப்பா, எனக்கு பால் வேணாம்பா" என்றான். சரி வா சாப்பிடறத்துக்கு ஏதாச்சும் வாங்கி தரேன். நடந்தார்கள். கமலிக்குட்டியினுடைய கண்கள் அடைந்து போயிருக்கும். உருளாது என்றைக்குமே. இனி நாகலிங்கப் பூவை தைரியமாக கொண்டு வர வேண்டியது இல்லை.

அவர்கள் திரும்பிய போது வாசலில் கோபியின் அப்பா கோபியோடு நின்றிருந்தார். இரண்டு அப்பாக்களும் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டார்கள். கண்ணையன் வந்தவுடன்  சதி புரிந்தது. "வாடா புள்ளைங்களா, எங்க வீட்டுக்கு போலாம்" என்றார் அவர்.

கண்ணைய்யனின் வீட்டுக்கு போகிற வழியில் கோபி தன் நண்பனிடம் முகத்தை ஒரு மாதிரியாக வைத்து கொண்டு சொன்னான். " நீ பாத்தியா, எங்க கமலிக்குட்டி செத்து போயிருச்சாம்".

இவன் பேசவில்லை.

கண்ணையா சேரிப்பகுதியை சேர்ந்தவர். பொம்மைகள் விற்கிறவர். கொஞ்சம் இங்கிலீஷ் எல்லாம் கூட பேசுவார். இவனுக்கும் கோபிக்கும் அவர் மீது பிரியம் தான். அவரது வீட்டுக்கு செல்ல கிடைக்கின்ற தருணங்கள் மிகவும் எதிர்பார்த்திருந்தவை ஆனால் ........

"என்னடா எதுவுமே பேசாம வரே ?"

கண்ணையன் தள்ளிக்  கொண்டு வருகின்ற பொம்மை வண்டியில் ஏகப்பட்ட அற்புதங்கள். ஒரு நாள் இவனுடைய கேள்விக்கு கண்ணையன் சொன்னார். அது கொழந்தைடா கிளின்னா என்னன்னு தெரியாது. மோட்டார் சைக்கிள்னா தெரியாது. கொஞ்ச நாள் போவட்டும் அப்புறம் எல்லா பொம்மையும் நம்ம கமலிக்குட்டி வெளயாடறதுக்கு தான். அவனுக்கு ஒன்று தெரிந்தது. இனி மேல் பொம்மைகளோட விளையாட முடியாது.

சூரியன் வந்து விட்டது. ஆட்கள் கண்ணயனிடம் விசாரிப்பது பற்றி புரிகிறது. விதி. ஒரு வார்த்தை மறுபடி மறுபடி அதை சொல்லிக் கொண்டிருந்தான். மனதிற்குள் மனனம் ஆகி வெளியேறாமல் பிடிவாதம் பிடித்தது. விதி எல்லாமே விதி தானோ. கோபி இரண்டு பையன்களுடன் வந்து விளையாடக் கூப்பிட்டபோது கண்ணையனின் மனைவி கொடுத்த இட்லிகளை வழியற்று விழுங்கிய போது, மதியத்தில் பாயை விரித்துக் கொடுத்து தூங்குங்கள் என்று இருவரையும் படுக்க வைத்த போது, விதியால் செத்துப் போன அவனது கமலிக்குட்டியின் பிணம் அவனோடிருந்தது. இனி எதுவும் யாரிடமும் சொல்ல வேண்டியிருக்கவில்லை. உண்மையிலேயே எதுவும் இல்லை. எல்லாம் புரிந்து விட்ட மாதிரி கூட மிகவும் நுட்பமாய் வந்து அணைந்தது உறக்கம்.

சாயந்திரத்துக்கு மேல் அப்பா வந்தார். எதையுமே அறியாத தனது அப்பாவின் வரவுக்கு அவனால் சந்தோஷப்பட முடியவில்லை. தெரியும். அங்கே எதுவும் இருக்காது. கடைசியாக கமலிக்குட்டி மறைந்து விட்டாள். பிணத்தைப் பார்த்த சித்தார்த்தன் கௌதம புத்தனாக ஆன கதை பாடபுத்தகச் சித்திரங்களுடன் யோசனைகளாக ஒரு வார்த்தை பேசாமல் நடந்தான்.

கமலிக்குட்டியின் அறையில் ஒரு தீபம் மட்டும் தான் எரிகிறது.
 
இரவில் அவன் குமுறி குமுறி அழுதான். அது கமலிக்குட்டிக்காக மட்டுந்தானா.

****
நான் புத்தனாகவில்லை.

கமலிக்குட்டிக்காக கடவுளிடம் பிராத்தித்த நான் இன்று பெரியவன். வயது ஆகி விட்டது. கண்ட மாத்திரைகளை விழுங்கி கருவிலேயே அவளது அழிவை எதிர்பார்த்தவர்கள் பற்றித் தெரிந்து கொள்ளாமல் பூமிக்கு வந்து நான்கே மாதங்கள் தங்கி கிளம்பிப் போனவளுக்காக அழுத நான் இன்று எதற்கும் பிரார்த்திப்பதோ அழுவதோ இல்லை. அப்படி அழுவதாகவோ, பிரார்த்திப்பதாகவோ இருந்தால் எதிர்பார்க்கிற மரணம் என்னை வந்து சேர வேண்டுமென்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இருக்கும். வேறு என்ன சொல்வது. இப்போதும் உங்களிடமெல்லாம் சொல்ல எனக்கு எதுவுமேயில்லை.






 

No comments:

Post a Comment