Tuesday, September 20, 2011

சுழலுகின்ற சில காதல் கதைகள்



எனக்கு இரண்டு கதைகள் தெரியும். இரண்டு பேரை பற்றியது. அவர்களுக்குள் எந்த சம்மந்தமும் இல்லையென்றாலும், இரு கதைகளுக்கும் பொதுவான ஒரு சரடு இருக்கிறது. ஆனால் எழுத வேண்டிய என் திரைக்கதையை எங்கே இருந்து துவங்குவது. அதற்கு என்ன நோக்கம்? சில நேரங்களில் நமக்கு எழுத்தாளனின் பம்மாத்து தெரியும். நிலைக்கண்ணாடியில் நான் என்னை கூர்ந்து பார்ப்பேன். உன்னை நீ என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? சரி, சரி, என்னிடம் இருக்கிற சரக்கு ஒரு பிடி மாற்று குறைந்ததாக இருந்தாலும் கோபாலுடைய கதை திரையில் வந்தாக வேண்டும். வரிசையில்  நின்று கொடி குத்தி கொள்ளுகிற பிணங்களை காறி துப்ப வேண்டுமென்றால் ஒழுங்கு மரியாதையாய் எழுது. மரியாவின் பாத்திரத்தில் ஒழுங்குபடுத்தக்கூடிய ஏதேனும் நடிகையை பற்றி யோசித்திருக்கிறாயா?. ஏனென்றால் காணும் பொங்கலன்று வர்த்தகப் பொருட்காட்சியில் நின்று இடுப்புக்கு கிழே இருந்த துணியை அவுத்து போட்டவள் அவள்.

"என்ன யோசிக்கிறாய்?."

"ம்?"

படம் போடுகிற நேரமாகி விட்டது. உள்ளே செல்லலாமா?"

"வா !"

புனிதா படம் பார்ப்பதை கொஞ்ச நேரம் வெறித்திருந்து விட்டு திரையில் கண்களை வைத்தேன். கமிஷனர் நகரில் பரவுகின்ற தீவிரவாதம் பற்றி சொல்லி கொண்டிருந்தார். வேறு நடிகரை போட்டிருக்கலாம். இந்த ஆள் கூட்டி கொடுப்பவனை போலவோ, எச்சிலை தின்கிறவனைப் போலவோ இருகிறார். இல்லை, ஒரு விதத்தில் வேஷ பொருத்தம் சரிதான். பல்வேறு அசௌகரியங்கள் இடைவிடாமல் தொந்தரவு செய்ய நெளிந்து கொண்டிருந்தேன். திரையில் முதல் காட்சி என்ன? ஒரு வெள்ளைப் பேப்பரில் பிள்ளையார் சுழி போடுவது போல வந்தது. மக்கி போன பொருட்கள் நிறைந்த ஒரு அறையில் சில்லாய் இருக்கிற ஒரு கண்ணாடியை பார்த்து கோபால் தன் முகத்தில் பவுடர் போட்டுக் கொள்கிறான். அது ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமாயிருக்கிறது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியாது. வாயை இரு பக்கமுமாய் இளிக்கிறான். பற்கள் சுத்தமாக இருக்கின்றன. ஆனால் உமிக்கரி ஈறுகளை கிழித்திருக்கிறது. நடு நெற்றியில் விபூதியை வைக்கும் போது மன்றாடுகிறது மனம். பாரம் கூடி தொங்குவது போல என்னது நெஞ்சுக்குள் ?. ஆனால் பயப்பட கூடாது. உரத்துடன் இரு. கண்களை நேருக்கு நேராய் பார். மீசை வைத்த ஆண் மகனாய் இரண்டொரு வார்த்தைகள். சின்னான் சிரிக்க வேண்டும். அவனது சிரிப்பை நினைத்த மாத்திரத்திலேயே கோபால் நடுக்கமுற்றான். அந்த நடுக்கம் போகாது. அவனுக்கு தெரியும். தளர்த்தும். வயிறெரிய செய்யும்.  கேண கூதியானை போல மூலையில் நிறுத்தி படபடப்பை உண்டாக்கி அடி வயிற்றில் மூத்திரம் முட்ட வைக்கும்.

முருகா.

புனிதா கைகுட்டையால் கண்களை ஒற்றிகொள்கிறாள். நாயகி காதலின் பெருமையை பாடி சொல்வது புரிகிறது. சினிமா என்பது கூட்டு முயற்சி ஆதலால் நிறைய பேர் கண்ணா பின்னாவென்று உழைத்திருக்கிறார்கள். ஒளி ஓவியம் ஜம்ப் கட் எல்லாம் இருக்கின்றன. படத்தின் காஸ்ட்யும் டிசைனைர் வெளிநாட்டை சேர்ந்தவர் அல்லவா? ஏதோ தினசரியில் அந்த செய்தி வந்திருந்தது.

"படம் பார்கிறாயா ? "

"ம்"

விதியென்னும் நூலாலே விளையாடும் பெண்மை விஷமாகி போனாலே எது வாழ்வில் உண்மை ? நல்ல வரி. இல்ல? 



"ம், ம்."

அது ஒரு சின்ன ஓட்டல். ஆனால் அக்காலத்தைய மன நிலை வேறு. என்னதான் நகரமாய் இருந்தாலும் வெளியில் சாப்பிடுவது என்றால் கொஞ்சம் பம்மல் தான். அதனால் சின்ன ஹோட்டலையே பெரிய ஹோட்டலாய் சொல்ல வேண்டும். அது போல அங்கே சாப்பிட வருகிறவர்கள் சற்று உல்லாசக்காரர்களாய் தான் இருக்க முடியும். ஒரு சர்வர் என்பவன் மிகுந்த மரியாதையுடன் பிழைப்பு பண்ண கடமைப்பட்டவன். ஆயினும் கோபால் விறைப்பாய் இருக்கிறான். சாப்பிட வருகிறவர்களுக்கு அவன் கண்டிப்பு பிடிக்கவில்லை. முதலாளி அவனது நடத்தையை ஓரக் கண்களால் சேகரித்து கொண்டிருக்கிறார். ஒரு கண இடைவேளைக்கு தவித்து அது கிடைத்ததும் எச்சிலைகளை குழியில் போட வருகிற சின்னானிடம் "பசி எடுக்கிறா மாதிரி இருந்துச்னா மாஸ்டர் கிட்ட சொல்லி ஒரு காபி குடிச்சிக்கோ" என்கிறான்.
 
சின்னானாக நடிக்க வருகிறவன் பதினான்கு வயதை தாண்டக்கூடாது. மூக்குக்கு கீழே மஞ்சளித்த சிறு ரோம வரிசை. ஒரு தெற்றுப்பல் ?. கண்டிப்பாய் ஓரிரு முகப்பரு. முகத்தில் வழிகிற எண்ணையை, அழுக்கு திட்டுக்களை ஊடுருவினால் அறிந்து கொள்ள கூடிய யவ்வனத்தின் குஜால். அசட்டை. முதன் முதலாக கோபால் உன் பெயரென்ன என்று சாதாரணமாய் கேட்ட போது கூட சின்னான் தனது பெயரை சிரிப்போடு சொல்லுகிறான். அந்த சிரிப்பு ராவிக்கொண்டே இருக்கிறது. அது வாழ்வை சாபமாக வரம் வாங்கி வந்த கோபாலை யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும். அது அவனது ஊரை, சாதியை, கூடபிறந்தவர்களை, இதுவரையிலும் நாய் போல வாழ்ந்த வாழ்க்கையை உருட்டிக் கொண்டே இருக்கிறது. சின்னானுடன் மல்லுகட்ட முடியாமல் அவனை வெறுத்து வெறுத்து இறுதியாய் அவனது புறக்கணிப்பையே சுகமாய் எடுத்து கொள்ள ஆரம்பித்தவுடன் வாழ்க்கை மீதே கூட கவனம் இன்றி போயிற்று. முதலாளி திட்டினால் பதிலுக்கு கேள்வி கேட்டான். கோபாலுக்கு என்ன ஆச்சென்று பல்வேறு வதந்திகள் உலாவிய போது உள்ளுக்குள்ளே அவன் செத்து பிழைத்தவாறு இருந்தது ஒரு ஆளும் அறியாத ரகசியம். ஆனால் தியாகராஜன் வேலைக்கு வந்து சேர்ந்து அத்தனை பயல்களுக்கும் சினிமா கதை சொல்ல ஆரம்பித்து சின்னானை தன் படைத்தளபதி மாதிரி வைத்து கொண்டதும் கோபால் உடைந்தான். விதியென்னும் நூலாலே விளையாடும் பெண்மை விஷமாகி போனாலே எது வாழ்வில் உண்மை. இது என்ன பாட்டு ? இதுக்கு என்ன அர்த்தம் ? இப்படியெல்லாம் எதற்கு பாட்டு எழுதுகிறான்கள் ?.

அட,

அடுத்த பாட்டு ஓடி கொண்டிருக்கிறது.

திரையில் இரண்டு கால்களையும் விரித்து தனது மேடிட்ட சாமானை நம் முகத்தின் மீது ஒற்றி எடுப்பது போல ஆடி செல்கிற பெண்ணை மரியா பாத்திரத்துக்கு கேட்க முடியாது. கதை கேட்டு முகம் சிவந்து விடுவாள். தமிழ் ரசிகர்களை அவமானப் படுத்த நான் தயார் இல்லை என்று அவள் பொருமக் கூடும். சமரசத்துக்கு உட்பட்டு கீழே இறங்கி வருகிறவளாய் இருந்தால் ஒரு பெரிய தொகையை கேட்பாள். அந்த தொகையில் மரியா மாதிரி நான்கு பெண்களை பற்றி படம் எடுக்கலாம்.



எவ்வளவு சிம்பிளான விஷயம் தெரியுமா? என் மரியா ஒரு அழகி. அழகிகளுக்கு இருக்க கூடிய குழப்பங்கள் சாதாரணமானது இல்லை. அவளை எல்லா பையன்களும் காதலிக்க விழைந்தார்கள். அதனால் அவளுக்கு மினுக்கவும், குலுக்கவும், தளுக்கலாக இருக்கவும் தெரிந்தது. யாராவது ஒரு ஆள் சற்றே அடக்கி வைக்க இருந்திருக்க வேண்டும். இல்லை. அவளது அம்மாவும் அப்பாவும் அவளை கிளி கிளி என்று அழைத்தார்கள். கிளியோபட்ராவின் சுருக்கமாம் அது. அல்லேலுயா !. கிளி உலகத்தை புரிந்து கொள்ளாமல் தத்தி தத்தி தன்னையே ரசித்து கொண்டிருந்த போது சர்ச்சுக்குள் வந்து இளங்கோ குட் மார்னிங் என்றான். அவனது இதயம் இடித்து கொள்வது இவளுக்கு கேட்டது. பாவம் என்று அனுதாபப்பட்டு இவள் எல்லோருக்குமான ஒரு புன்னகையை கட்டவிழ்த்து விட அவன் அதை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு இவளது சகோதரனுடன் போனான். அதற்கு பிறகு அவனுடன் வீட்டுக்கு வந்தான். மரியாவின் அம்மா கொஞ்சலுடன் ஐஸ்கிரீம் கேட்டாள். அவன் பண்டல் பண்டலாக நொறுக்கு தீனிகளையும் விருந்து பொருட்களையும் கொண்டு வர ஆரம்பித்தான். இதல்லாம் பல இடங்களில் நடக்கிற கதைதான் இல்லையா? அந்த பயல் இளங்கோ ஒரு கால் பந்தாட்டகாரன். அதனால் ஊர் மெச்சும் வேலை கிடைத்து ரொம்ப செழிப்பாய் இருந்தான். சம்பளமாய் வந்த பணத்தில் பாதிக்கு பாதி மரியாவின் வீட்டில் கொட்டி விட்டு கொந்தளிக்கிற லவ்வை தாக்கு பிடிக்க ஆகாமல் குடிக்க கற்றுக்கொண்டான். நிம்மதியை கண்ணால் பார்த்தால் போதும் என்று ஏங்க வேண்டி வந்ததால், கூட சேர்ந்து குடிப்பதற்கு பத்து பேர். இளங்கோவின் வீட்டில் பெரியார் படம் மாட்டி வைத்திருந்தாலும் அவனது அம்மா தன் பக்கத்து வீட்டுக்காரியை தீர்த்துக்கட்ட பாஷா பாயை பார்க்க போகிறவள். அவரால் அவளும் பேய் பிசாசு, சைத்தான், சூனியம் போன்ற பல பிராந்தியங்களில் உலவினாள். வீட்டில் அதை தன் மகன்களுடனும் பரிமாறி கொள்ள தவறுவதில்லை. இளங்கோ மாச சம்பளத்தை ஏதோ வேதக்காரிகள் குடும்பத்திற்கு படியளந்து கொடிருக்கிறான் என்று கேள்விப்பட, "அடேய் படுபாவி !. அவுங்க உனக்கு மருந்து குடுத்திட்டாங்கடா" என்று பிலாக்கணம் வைக்க ஆரம்பித்தாள் . இவளும்  தன் பங்குக்கு நடு வீட்டில் குழி தோண்டி சக்கரங்களை புதைக்க ஆரம்பிக்க இளங்கோ திகிலுடன் தன் லவ்வை தீவிரமாக்கினான். காற்று வேறு பக்கம் வீச ஆரம்பித்தது. புயல் போல் நுழைந்தது டேவிட்டின் குடும்பம். அவர்கள் பத்து பேருக்கும் அதிகமானவர்கள். தினம் தினம் ஆட்டுக்கறியுடன் விருந்து. ஒரு நாள் இந்த பய்யன் யார் என்று ஒரு கிழம் கேட்க மரியாவின் அம்மா "இனிமே எதுக்கும் வீட்டு பக்கம் வராமயே இரு" என்று கிசு கிசுத்தாள். இவன் மரியாவிடம் நடக்கிற அநீதியை பற்றி சொல்லலாம் என்று பார்த்தால் அவளோ மைக்கேலுடன் நடனமாடிக்கொண்டிருந்தாள். யாரும் இவன் வாங்கி வந்த கேக்கை பிரித்து பார்க்கவே இல்லை.

இளங்கோ வழுக்கி கொண்டு வெளியே வந்தான். நடக்கிறோமா, ஸ்கேட்டிங் செய்கிறோமா என்று அவனுக்கே சந்தேகமாக இருந்தது. ஒலிப்பெருக்கியில் அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா பாடிகொண்டிருந்தது. பின்னால் வருகிறவரை எல்லாம் கும்பல் சேர்த்து கொண்டு குடி வாங்கினான். மூழ்கி குளித்தும், யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை. அதற்கு அப்புறமும் பேசவில்லை. வேலைக்கு போகவில்லை. நேராய் சென்று குடித்து விட்டு மரியா வீட்டு தெருவில் எப்போதும் அவன் இருந்தான். நின்று, உட்கார்ந்து, இறுதியாய் படுத்து கிடக்கிற நிலமைக்கு ஆளானான். அவனது வீட்டார் கடத்தி சென்று பராமரித்தாலும் அவனை கட்டுபடுத்த தோதுபடவில்லை. விட்டு விட்டார்கள். அநேகமாய் அவர்கள் அவனை மறந்தே போனார்கள். இளங்கோவை தாண்டி மரியாவின் குடும்பம் டேவிட்டின் குடும்பத்தோடு சர்ச்சுக்கு, சினிமாவுக்கு, கோவாவுக்கு, கோடம்பாக்கத்துக்கு போயிற்று. அவன் இமை கொட்டாமல் பார்த்து கொண்டு நின்றானே தவிர எவ்விதமான வன்முறையையும் பிரயோகிக்கவில்லை. என்னிடமே ஒரு முறை உள்ளங்கையால் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்பது போல செய்தது ஞாபகம் இருக்கிறது. அதிர்ச்சி தாங்காமல் நான் ஐந்து ரூபாவை கொடுத்து விட்டு ஓடி வந்திருக்கிறேன்.
 
ஒன்றிரண்டு வருடங்கள் போயிற்று.

ஒரு நாள் இரவு உடம்பெல்லாம் வெடவெடக்க இளங்கோ தன் வீட்டு கதவை தட்டி இருக்கிறான். வீட்டில் உள்ளோர் பீதியுடன் பார்த்திருக்க "அம்மா என் உடம்புள்ள அஞ்சாறு பேய் ஏறி இருக்குமா. என்ன எப்பிடியாவது பாய் கிட்ட சொல்லி காப்பாத்தும்மா" என்று கதறியிருக்கிறான். விடியட்டும் என்று சொல்லி ஒரு பிடி சோறை சாப்பிட வைத்து, கம்பளியால் போர்த்தி, அவன் தூங்குவது போல இருக்கவே  விளக்கை அனைத்து விட்டு எல்லோரும் படுத்து இருக்கிறார்கள். நடு இரவில் அவன் வளர்த்த பேய்கள் அவனை எழுப்பி இருக்கின்றன. என்னடா இளங்கோ படுத்து கிடக்கிறாய் என்று கேட்டிருக்கின்றன. உள்ளோடுங்குவது போல் பம்மாத்து பண்ணியிருந்த கடல் பொங்கியது. மட்டமான ஒரு மூட்டை பூச்சி மருந்து டப்பாவை இடுப்பில் எடுத்து மறைத்துக் கொண்டு அவன் தன் சாம்ராஜ்ஜியத்துக்கு திரும்பி வந்தான். ஒரு வேளை கொஞ்சம் சாராயமோ, சப்பியோ, வார்னிஷோ கிடைத்திருந்தால் அவன் அந்த கன்றாவியை குடித்திருக்க போவதில்லை. நெஞ்சிலிருந்து, அடிநாக்கிலிருந்து  ஆத்மா வரைக்கும் வரண்டு கொண்டே போகும் போது வேறு எதை கொண்டு நனைப்பது. அவன் அந்த சனியனை குடித்தான்.

வெட்டி வெட்டி துடிக்கும் போது ஒன்றிரண்டு நாய்கள் பார்த்துகொண்டு நிற்க, விடிந்தது.

திரைகதையில் இந்த நாள் ஒரு முக்கியமான நாள். 



அறிஞர் அண்ணாவை தெரியுமில்லையா,   அவருடைய நினைவு நாள். திரைக்கதை எப்படி போகுமோ தெரியாது. ஆனால் அண்ணா இறந்த அன்று நான் சிறுவன். வானொலியின் நேரடி வர்ணனையை கேட்டு நானும் கூட ரகசியமாய் அழுது கொண்டிருந்தேன். பெரியவர்கள் மட்டும் பகிரங்கமாய் அழுதார்கள். அப்படித்தான் சற்றுநேரம் நின்று அழுது விட்டு ஹோட்டலில் முதலாளியான என் அப்பாவிடம் "எனக்கொரு பொண்ணு பொறந்திருக்குப்பா, நான் ஆஸ்பிட்டலுக்கு போறேன்" என்று சொல்லி விட்டு ஜான் போனார். அந்த பெண் குழந்தைதான் மரியா. {அப்புறம் அன்றைக்கே வேறு ஒரு சம்பவமும் நடந்தது. ஒரு மாபெரும் தலைவரை பறிகொடுத்த சோகத்தில் ஊரே வெறிச்சோடி போயிருக்க, மற்ற பணியாளர்கள் இறுதி சடங்குக்கு போனார்கள். கோபாலை மட்டும் விட்டு விட்டு நானும் அப்பாவும் வீட்டுக்கு போகவே உள்ளே, சமையல் அறையில் கோபால் தூக்கு மாட்டி செத்து போனான். } சரி அதை விடுங்கள். விடிந்தது என்று முடித்தேனா ...

                                                                                                                (தொடரும்)






 


No comments:

Post a Comment