Sunday, October 2, 2011




காலையில் சொப்பனத்திலிருந்து திடுக்கிட்டெழுந்து, வெகு நேரம் யோசனையிலிருந்து, காலைக் கடன்கள் எல்லாம் நடந்து  கொண்டிருக்கையிலும் சிந்தனை அறுபடாமல் தொடர்ந்து சோர்வு அவனை தளர்த்திய போதே இன்றைக்கு வேலைக்கு போகவில்லையென்று முடிவு செய்து விட்டான். ஒரு நாள் கூலி போச்சு.எப்படியும் அடுத்த வாரம் ஒன்றிரண்டு வேளைக்கு சாப்பாடு கிடையாது. இந்த நினைப்பையும் மீறி மேற்கொண்டு இன்று எங்கே போக வேண்டும் என்பதை மூளை தீர்மானம் செய்து விட்டது. வேறு வழி இல்லை. கனவு அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தோன்றும் போது உடனே செய்து விடுவதுதான் சரி. ஒருவேளை, போகிற வாய்ப்புகளே இருக்காது.

 குமாரின் கடையில் நிறைய வாடிக்கையாளர்கள் காத்து இருந்தார்கள். பொறுமையில்லாமல் 'தினத்தந்தி' யைப் புரட்டிக் கொண்டு. குமார் யாரோ ஒரு ஆளுக்கு முகம் வழித்து கொண்டிருந்தான். இவன் வருவதைப் பார்த்தான். பேசமாட்டான் என்றும் தெரிகிறது. கொஞ்சம் தயங்கி ஒரு ஓரமாக உட்கார்த்து கொண்டான். எல்லோரும் தன்னையே பார்க்கிற மாதிரி இருந்தது. தன் முகத்தில் இருக்கிற தாடியை வைத்துக் கொண்டு ஒரு வாடிக்கையாளர் என்று யாராலும் எண்ணி விட முடியும். ஏதாவது ஒரு பழைய புத்தகத்தை எடுத்து பார்க்கலாமா என்று யோசிக்கும் போது கண்கள் தன்னை அறியாமல் சுவர் கடிகாரத்தை பார்த்தது. எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

 எதிரே கண்ணாடியில் முகம் தெரிந்தது. அதிகாலை இப்படி ஒரு ஞானோதயம் ஏற்படும் என்று தெரிந்திருந்தால் நேற்று ராத்திரி குமார் ஓய்வாக இருந்த போது ஷேவ் பண்ணியிருக்கலாம். தாடி இருப்பதால் ஒன்றும் இல்லை, முக லட்ஷணம் எல்லாம் சரிதான், அனால் அது மோசமான யூகங்களை ஏற்படுத்திவிடுகிறது. எதற்கும் பரிதாபபடக் கூட லாயக்கற்றவர்கள் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். எந்த அனுதாபம் சொட்டும் வார்த்தையையும் இவனால் சகிக்க முடியவில்லை. அதற்காக நல்ல பிள்ளைகள் கணக்காய் சவரம் பண்ணுகிற காரியத்தையும் ஒப்புகொள்ள முடியவில்லை.

நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது.

போகட்டும். அதனால் என்ன. சாயந்திரம் வரை நேரம் இருக்கிறது. வாழ்க்கையில் எல்லா விஷயங்களுக்கும் பொறுமையைத் தான் கடைப்பிடித்து இருக்கிறான். காரியங்கள் தோற்றுப் போகிற வரை கூட பொறுமை நீடித்திருக்கிறது. மேலே வந்து விழுந்த பாரங்களை எல்லாம் பொறுமையின்றி தள்ளி விட்டதில்லையே, மனசுக்குள் ஒரு சிரிப்பு வந்தது. கூடவே ஒரு பெருமூச்சும். எல்லோரையும் பார்த்தான். யாரும் தன்னை கவனிக்க வில்லை. கவனிக்க மாட்டார்கள். இவன் குமாரையே பார்க்க ஆரம்பித்தான். அதற்கு பலன் இருந்தது. ஷேவிங் முடிகிற நேரத்தில் கண்ணாடி வழியாக குமார் இவனை பார்த்தான். கண்கள் சந்தித்தவுடன் வேறு வழியில்லாமல் புன்னகை செய்ய வேண்டி இருந்தது, இவனுடைய புன்னகைக்கு பதிலாக. அந்த ஆள் எழுந்து தன்னை உதறிக் கொண்டு, காலரை சரி பண்ணிக் கொண்டு, கண்ணாடியை பிரிய முடியாத மனசுடன் ஒரு முறை ஊன்றி பார்த்துக் கொண்டு பணத்தை எடுத்து குமாரிடம் கொடுத்தான். குமார் அதை மேஜையின் இழுப்பறைக்குள் திணிக்கும் போது இவன் எழுந்தான்.

 "குமார் கொஞ்சம் வெளிய வாயேன். ஒரு விஷயம்"

"என்ன?"

"வாயேன். சொல்றேன்"

"டேய், வேலை இருக்குடா, பாக்கற இல்ல?"

"ஒரு நிமிஷம்பா"

"சே" என்று சலித்துக் கொண்டு இவனுக்கு பின்னால் வெளியே வந்தான் அவன். இளம் சூரியன் கண்களுக்குள் வந்து முட்டி கூசியது. பகுதி திறந்த கண்களுடன் வெளிச்சத்தை பார்க்க விரும்பாதவன் போல தலையை குனிந்து கொண்டு மெதுவாக பேசினான். "சனி கெழம தரேன். அவசரமா எனக்கு கொஞ்சம் பணம் வேணும்.

"டேய்".

இல்ல. முக்கியமான விஷயம்..." என்று தயங்கினவனுக்கு சட்டென்று  பயம் ஏற்பட்டது. வேலைக்குக் கூட போகவில்லை. பணம் கிடைக்கவில்லை என்றால் அவ்வளவுதான். எல்லாம் நஷ்டம். "ப்ளீஸ்" என்றான். "இல்லேன்னு மட்டும் சொல்லிடாத. சத்தியமா சனி கெழம தந்துடுறேன்"

ஒரு முறை தலையை சொறிந்து விட்டு ஏதோ முனகிக் கொண்டு குமார் உள்ளே ஓடினான். ஏறக்குறைய அவனது முனகலுக்கு அர்த்தம் தெரிந்துக் கொண்டிருந்த இவனால் அதை பற்றி சிந்திக்க முடியவில்லை. அதே வேகத்துடன் வெளியே வந்த குமார் "இவ்வளவுதான் இருக்கு. இங்க பார். சனி கெழம. அப்புறம் மறந்துட்டேன்னு சொல்லிடாத". என்று பணத்தை திணித்தான். பிரித்து பார்பதற்குள் அவன் போயாயிற்று. எவ்வளவு கேட்க நினைத்தானோ அவ்வளவு இல்லை.

இவன் இறங்கி நடந்தான்.

வழக்கம் போன்ற காலை நேரம். வேலைக்கு போவதாக இருந்தால் இதோ இவர்களையெல்லாம் போல ஓடவேண்டும். சற்று நிம்மதியாக தோன்றிற்று. இன்னும் சொன்னால் மற்றவர்களுடைய வேகங்களை, நிதானமின்மையை கவனிக்க கூடிய அளவில் தோன்றின நிம்மதி. மொட்டை மாடியில் படுத்து கொண்டு ராத்திரிகளில் பார்க்கக் கூடிய வானம் பற்றி ஞாபகம் வந்தது. பார்த்தான். மனசுகளுக்கு ஆகாசம் ஒத்து வர வேண்டிய கட்டாயம் ஒன்றும் கிடையாது. கண்களில் திராணி இல்லை. கண்களுக்கு தட்டுபட்டு விட்ட மேகங்களால் மனசில் ஏதோ அர்த்தமற்ற வரிகள் ஓடின. அது முழுமை பெறாதது என்பது தெரியும். குமாரின் கடையில் உட்கார்ந்து இருந்தவர்களுக்கு இந்த கடன் விவகாரம் தெரிய வந்திருக்கலாம் என்பது திடீரென்று கிளம்பி வந்தது. அது உண்மைதான். குமார் தன்னுடைய தலைவிதியை பற்றி சத்தமாக பேசுவான். அவனுக்கு அப்படி பல பெருமைகள் வேண்டி இருக்கிறது


பஸ் ஸ்டாப்பில் ஏகப்பட்ட ஜனம். பெண்கள் தான் அதிகம். ஏறக்குறைய எல்லாருமே வேலைக்குப் போகிறவர்கள் தான். பள்ளிகூடங்களில் நேரம் முடிந்துவிட்டது. நாம் கண்டுபிடிக்க கூடிய சோர்வான முகங்கள் மற்றும் சவலை பேச்சுகள். அப்புறம் வளைந்த முதுகுகள். காலை மாறி மாறி தாங்கிக் கொண்டு நிற்பதில் கசிகின்ற முதுமை. இவன் மாநகராட்சி வளர்ப்பு மரத்தில் சாய்ந்து கொண்டு எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு அறுவெறுப்பு வந்தது. கொஞ்ச நேரத்தில் அது தன்னைப் பற்றியதுதான்  என்று கண்டுபிடித்தான். எல்லா கனவுகளையும் விட்டு விட்டு சனிகிழமை சம்பள லட்சியத்துக்காக ஒரு சைக்கிளில் காலை சவாரி போவதை நினைவில் கொண்டு வந்தான். எங்கேயாவது நிமிர்ந்து பார்ப்பதுண்டா இப்போதெல்லாம். சத்தங்கள் ஏதாவது காதில் விழுவதுண்டா.

எதற்கு.

அது சரி, எதற்கு. எல்லோரும் அப்படிதான் கேட்கிறார்கள். நாமும் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டியது தான். இனி என்ன செய்ய வேண்டும். ஒரு வீட்டுக்கு செல்லும் போது எதையாவது வாங்கிக் கொண்டு போவதுதான் மரியாதை. வீட்டில் ஒரு பெண்குழந்தை வேறு இருக்கிறது. குமார் கொடுத்த பணத்துடன் கொஞ்சம் சில்லறையும் இருக்கிறது. இவன் பஸ் ஏறுகிற எண்ணத்தை தவிர்த்து விட்டு சாலையை கடந்து எதிர்பக்கத்துக்கு நடந்தான். பிறகு தான் அப்படி தனக்கு வேண்டிய பொருள் இருக்கிற கடை ஒன்றும் பக்கத்தில் இல்லை என்பது உறைத்தது. ஏனோ திரும்பி நடக்க மனம் வரவில்லை. நடப்பதும் நிற்கவில்லை. அதெற்கென்ன. அடுத்த ஸ்டாப்பில் ஏறிவிட்டால் போகிறது. ஆனால் மனசு சாந்தமடையவில்லை. தேவையில்லாமல் இப்படி நடக்க வேண்டுமா என்று இடித்தது. செல்ல வேண்டி இருந்த இடத்தில் இறங்கி அங்கேயிருந்து எதையாவது வாங்கி இருக்கலாமில்லையா. இடதுபுறத்து நடைபாதையிலிருந்து வலதுபுறத்தில் சில கடைகள் இருப்பதை பார்க்க முடிந்தது. பிசாசுகள் போல பாய்ந்து கொண்டிருக்கும் வாகனங்களுக்கு இடையே சர்க்கஸ் பண்ணுகிற காரியம் கசப்பாய் இருந்தது. இந்த பக்கத்தில் ஏதாவது ஒரு கடை வந்தால் சரி. இல்லையென்றால் இறங்கிய பின்னர் பார்த்து கொள்ளலாம்.

நடப்பது எனக்கு மிகவும் பிடித்தமான காரியம் என்று தான் ஒரு நினைவு. ஆனால் அதற்கு உகந்த நேரம் இது கிடையாது. கொஞ்சமும் கூட சுரணையில்லாமல் அல்லது மரியாதையோ நாகரீகமோ இல்லாமல் (அப்படியெல்லாம் ஏதாவது இருக்கிறதா என்ன?) உடம்பின் மேல்  இடித்துக் கொண்டு தாண்டிப் போகின்ற ஆசாமிகளை திட்டித் தீர்க்க வேண்டும் போலிருந்தது.  அது முடியாது. வாகனங்களின் சப்தமோ.... அவைகள் மண்டைக்குள்ளேயே ஓடுகிற மாதிரி பிரமை. விவஸ்தை கெட்ட  பூக்காரி. என்னை பார்த்தால் சாமந்தி பூவை வாங்குகிறவன் போலவா தெரிகிறேன். இருக்கலாம். ஒரு குடும்பஸ்தன். வீட்டில் பொண்டாட்டிக்கோ சந்திரிகா பீடி காலண்டர் விநாயகருக்கோ பூ வாங்கி போகிறவன். சிரித்துக் கொண்டான். வியர்த்து வழிந்து கொண்டிருந்தது. கைகுட்டை எடுத்து துடைக்க வேண்டும் என்றோ, நிழலில் நடக்க வேண்டும் என்றோ தோன்றவில்லை. என்ன இருக்கிறது இந்த முகத்தில். எல்லாம் பார்த்ததுதான். புதுசாக பார்க்க அவளுக்கு எதுவும் இருக்காது. அப்படியும் சொல்ல முடியாததுதான். கண்களுக்கு கீழே வளையங்கள் விழுந்து இருக்கின்றன. கருமை கூடி விட்டது. ஞாபகங்கள் என்பது கொஞ்சமேனும் இருந்து உற்று கவனிக்க முடிந்தால் இதெல்லாம் தெரியவரலாம். தாடியை வழித்திருக்கலாம் என்பது மீண்டும் வந்தது. சோகமாய் இருப்பதாக நான் காட்டி கொள்ள முயலுவதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?

பஸ் ஸ்டாப்பை நெருங்கிய போது தான் சோர்வாயிருப்பது குறித்து அறிந்து கொண்டான். சாயாக் கடையில் இவனது சைகைகளும், குரலும் எடுபடாமற் போகவே, வெகுநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. மனசுக்குள் கருவிக் கொண்டு இருந்த போது தேனீர் வந்தது. நெஞ்சை ஆற்றிக்  கொள்வது போல விழுங்கினான். சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக் கொண்டு வந்து நின்றான். அவன் ஏறிப் போக வேண்டிய பேருந்துகள் வந்து போயின. எதிலும் தொங்கிக் கொண்டு போவதில் சம்மதம்மில்லை என்பது மட்டுமில்லை. காசு கொடுத்து வாங்கின சிகரெட்டை எறிய மனம் வரவில்லை. ஆழ்ந்து புகைத்தான். அவளுடைய முகம் ஞாபகத்துக்கு வந்தது. என்ன நினைப்பாள்?. இப்படியே திரும்பிப் போய் அறையில் படுத்து தூங்கி விட்டால் தான் என்ன. 


எக்கச்சக்கமாக நெருங்கிய போராட்டங்களுடன் கழித்து, கடைசியாக பஸ் வந்து சேர்ந்தவுடன் ஏறிக் கொண்டான். இதோ ஒருத்தன் காலை நசுக்க ஆரம்பித்து விட்டான். ஏதோ ஒருவனுடைய கை எலும்பு நடுமுதுகை துளைத்துக் கொண்டிருக்கிறது. நடத்துனர் தனது சிம்மாசனத்தை விட்டு அசையாது டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். சில்லறையை நீட்டிக் கொண்டு நின்றது கையை வலித்தது. பலம் மிக்க பாக்கியவான்கள் எங்கோ தூரத்திலெல்லாம் நின்று கொண்டு சீட்டை வாங்கிக் கொள்ளும் போது உரசிக் கொண்டு நின்று இருப்பவனால் வாங்க முடியவில்லை. உத்தியோகத்தை சலித்துக் கொள்பவராக இருந்த கண்டக்டர் இவனிடம் காசைப் பெற்றுக் கொள்ளும் போது "சத்தமா தான் சொல்லேன், கலையில சாப்பிடலையா?" என்றார். இவன் தன்னைப் பார்க்கிற ஆட்களைப் பார்த்தான். எல்லோரும் சாப்பிட்டு விட்டு வந்து இருக்கிறவர்களாகவே தென்பட்டார்கள். பெண்களின் பக்கமாக திரும்பிய முகம் தானாகவே கவிழ்ந்து கொண்டது. யோசிக்க விஷயங்களிருந்தன. அவனுக்கு பெண்களைப் பற்றி நன்றாக தெரியும். அது ஒருத்தியின் மூலமாக இருக்கலாம். ஆனால் மிக நன்றாக தெரியும். ஏதோ ஒரு கெட்ட வார்த்தை வாயில் வந்தது. இப்போது இவர்களெல்லாம் பொருட்படுத்தக் கூடியவர்களாய் தோன்றவில்லை.

ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். வீடுகள், மரங்கள், கடைகள் என்று எல்லாம் கடந்து சென்று கொண்டிருந்தன. அடையாளமற்ற முகங்கள் தத்தம் காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டு. வாழ்க்கை முழுவதும் இப்படி ஒரு பார்வையாளனாகத் தான் இருக்க வேண்டியிருந்தது. கடந்து செல்கின்ற எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு. ஒரு நாள் அவள் வந்து கூர்மையான வருத்தம் தோய்ந்த முகத்துடன் 'எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு' என்று சொன்னபோது அந்த முகத்தை பார்த்து பேசாமல் தான் நின்றான். இப்படிப்பட்ட நேரங்களில் பலரும் பலவிதமாக நடந்து கொள்வார்கள் என்பதைப் பற்றி அறிந்திருந்த போதிலும். ' காம்பில் வைத்து ரோஜாவை முகர்ந்ததுண்டா, துப்பாக்கியின்றி பறவையை ரசித்ததுண்டா' என்கிற கொட்டேஷனுடன் இவன் வரைந்து கொடுத்த பென்சில் ஓவியம் திரும்பி வந்தது. சரி, இவனும் தன் பங்குக்கு கொஞ்சம் கடிதங்களையும், புகைப்படங்களையும் கிழிக்க வேண்டியிருந்தது. கிழிந்து போய் விடாத விஷயங்கள் உலகில் இருக்கின்றன என்பது தனக்குப் புரிந்தது போல் அவளுக்கு இப்போதாவது புரிந்திருக்குமா என்கிற சந்தேகம் இப்போதெல்லாம்.

இறங்க  வேண்டிய இடம் வந்து விட்டது. நடத்துனர் மிகவும் கண்டிப்பானவர். அவர் கொடுக்கிற சிக்கனமான நேரத்தில் உயிருக்கு பயந்து பரபரப்புடன் இறங்க வேண்டியதாயிற்று. நடந்தான். இனி சிவன் கோவிலை தேட வேண்டும். யாரிடம் கேட்பது. நேர சிக்கனம் பற்றி தெரியாமல் தன்னைப் போல ஆசுவாசமாயிருக்கிற ஏதாவது ஒரு முகம் வேண்டுமே. நல்லவேளை. அப்படிப்பட்ட சிரமத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கவில்லை. அங்கே தெரிகிற கோபுரம் நிச்சயமாக சிவன் கோவில் கோபுரமாகத் தான் இருக்கும். ஒரு கடையில் பிஸ்கட் பொட்டலம் ஒன்று வாங்கிக் கொண்டு பாக்கெட்டில் திணித்துக் கொண்டாயிற்று.

தேர்வு எழுதப் போகின்ற மக்குப் பையனைப் போல 13 ம் எண்ணுக்கு வந்து சேர்ந்த போது அவளும், குழந்தையும், அவளுடைய புருஷனும் வெளியே இருந்தார்கள். புருஷன் சிரத்தையாக வீட்டைப் பூட்டி கொண்டிருக்க அவள் தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"வா" என்றாள். "வெளிய கெளம்பறோம். பரவால்ல. பூட்ட தெறங்க"

"வேண்டா" என்றான் இவன். அவள் தன் பட்டு சேலையை கவனத்துடன் சரி செய்வதைப் பார்த்துக் கொண்டு " ஒரு பிரெண்ட பாக்கறதுக்காக இந்தப் பக்கம் வந்தேன். நானும் அவசரமா போயாகணும்" என்றான்.

அம்மாவை உரித்து வைத்திருந்த குழந்தை பொறுமையற்ற முகத்துடன் "சீக்கிரம் போலாம்" என்றது.

                                                                                                        "அவசரம்"
                                                                                                       (A  short story )


  

No comments:

Post a Comment