Wednesday, September 26, 2018





யாருமே
கொதிக்கிற பாலில் விழுந்து சக்கரையுடன் கலந்த
தேநீர் மும்முரம் மட்டும் தான்
நாவில் சுட்டுத் தொண்டைக்குள் இறங்கி
வயிற்றுள் மினுங்கி
மூளைக்கு வெப்பம் அனுப்புகிற
ஒரு குட்டி செய்தி
ஆனால் பாருங்கள்
யாருமே
எலும்பை தொடுகிற குளிரில்
இரண்டு அல்லது மூன்று வேளை
உணவைத் தவற விட்ட
பரிதாபதிற்குரியவர்களாக இருந்து
கை நீட்டுகிறோம்.

ஆத்மா பிச்சை பாத்திரம்
அதனால் உலகு எரியாதிருக்கிறது.

Monday, July 16, 2018




உலகை புரிந்து கொள்வது ஒரு
நல்ல செயல். அதற்கு ஒரு நெடிய
பயணம் போதும். ஒரு இரவும், சற்றே
குவிந்து கிடக்கிற நட்ஷத்திரங்களும்,
மதுக்குப்பிகளும் போதும். தன்னை
அவிழ்த்து மல்லாத்தி புன்முறுவலுடன்
சவால் வைக்கிற காமம் போதும்.
வங்கியில் பணம், சட்டைப் பையில் அதன்
அட்டைகள் இருக்க எங்கு நழுவிப் போகும்
அது புரிந்து கொள்ளப்படாமல்?

ஆயினும் இன அழிப்பில் கருகிய
மகளின் சடலத்தில் கொப்புளிக்கிற
புகையை ஆக்ரோஷமாக ஊதும் ஒரு
தகப்பனின் இதயம் இருப்பின் ஆஹா உலகம்
அழகியது, தங்கம் கொண்டு மெழுகியது.



அவனுக்கு அது தெரிகிறது
இவளுக்கு இது தெரிகிறது
என்னைப் போலவே தான்
அவ்வப்போது எல்லோருக்கும்
எல்லாமும் தெரிகிறது
அம்மாவின் பிறப்பறுத்து அனுப்பி
கவுச்சி தின்ற பிறகு
பட்டினத்தார் படிப்பதா
பிட்டுப் படம் பார்ப்பதா
தெரியாதது இப்போதைக்கு
இதுமட்டும் தான்
சகலரும் முழக்கி
சங்கம் வைத்து ஸ்பீக்கர் போட்டாலும்
வாழும் வரை அன்பு செய்ய ஆகாமல்
நழுவி செல்வது என்ன என்பதெப்போதும்.

விடுறா
லூலகோ.

Monday, June 25, 2018





அரிச்சந்திரன்
வெறித்திருக்கக்கூடிய
எரிகிற சடலம்
புரியக்கூடுகையில்
அந்த மழைக்காடு மணத்து
நீரிலிருந்து எழுந்து பறந்த ஒரு குமிழாகவே
காதோர மயிர்களை நீவிய காற்றில்
தாயின் இதயத்தைத் தட்டில் வைத்துக்
கொண்டு வந்தது போல் இருந்து விட்ட
ஒரு ஜென்மாந்திரப் பிழம்பு
பாயைப் போட்டு பக்கத்தில் கொசுவத்தி வைத்து
காண்டத்தில் பொத்தலுண்டா
என்று பார்க்கும்போது
நாம் வெறிப்பதற்கும் இரண்டு சடலம்.

என்னா ஜூஜூப்பிடா நம்ம கொக்கரிப்பெல்லாம்

Wednesday, June 20, 2018







அவசரம்
அடுப்புக்கு நின்று திரும்பி
அஞ்சறைப் பெட்டியை
நகர்த்திய போது
தூணுக்கு அருகிலிருந்து
பார்க்க முடிந்த
ஒரு துணுக்கைப் போன்ற
அந்த ஒற்றைப் பார்வையில்
தண்ணீர் வேண்டுமா என்று கேட்க சென்று
விரலறிந்து
வீட்டை விட்டு வந்து விவரமறிந்து
பெற்ற குழந்தையின் கழுத்தை நெறிக்கத் துணியும்
காதலில் ஒரு துளி தான்
மரம் சுற்றும் பிப்பிலிப்பி, எனவே மாக்காள்
அலட்ட வேண்டாம்.
அலப்பறை வேண்டாம்.
நாங்கள் சினிமா எடுக்கிறோம்
நீங்கள் மேதைகளாயிருங்கள்  


Sunday, May 27, 2018





கனவின் இடுக்கோ கள்ளின் இடுக்கோ
அது பள்ளத்தாக்கிலிருந்து எழுந்த நிலவு போலிருந்தது
அந்தத் தனிமை என்றான்
நிராகரிப்பின் கூர்மையுள்ள ஒரு கத்தி கொண்டு
எல்லா காயங்களையும் கீறி
அதற்குள் எட்டிப்பார்த்துக் கூச்சலிட்டு
எதிரொலிகளை கவனப்படுத்திக் காட்டியிருக்கிறது
அது.
சீலை விலக்கி முலையருந்தின துல்லியம் தவிர்த்து
மனசெல்லாம் மேகங்களில் நகரவே
இருந்திருந்ததாம்
முஷ்டி மடக்கித் தாக்குதல், முதுகில் குத்துதல்
இதிலெல்லாம் ஒன்றுமில்லை என்றான், கைவிட்டு போகும் போது ஒரு சொல்லை வைக்காமல் போவது
கத்திகுத்து என்றான்.

எதிர்ப்படுவோரின் விழுப்புண்களை எண்ணுவதே
இப்போ வாழ்க்கையாச்சு.

என்றான்.

Sunday, February 4, 2018






நரம்பில் நடக்கும் பித்தில்
எது வெள்ளப் பெருக்கு, எது
தீ சிற்றடி வைத்து நடக்கிற ஆறு
மரங்களை எரித்து செல்லும் குளிர்
பறவைகளின் சிறகிடுக்கில் தேங்கும் நெருப்பு
பால்ய பெயரில் இருந்து இறங்கி செல்லும் கிழவன்
இடுகாட்டில் இருந்து எழுந்து வரும் சிறுவன்

இதில் தான் வெறுத்திருக்கிறோம் தவிர்த்திருக்கிறோம்
என்பதில் தெளிந்தெழுந்து திடுக்கிட மிதக்கிறது
ஒரு சவத்தைப் போல, காதல்
கண் மலர்ந்து பார்க்கிறது கூட.

ஹலோ என்கிறது.

இந்த அசட்டு சிரிப்பை நாமெல்லாம் வாழ்க்கையென்று
குறிக்கிறோம், நமச்சிவாயா. நமது ஆணவத்தில் நாம்
நின்று நிலைக்கிற ஜித் எத்தனை ரசம்,
ருசி?

Monday, December 4, 2017






வாயிலில் வந்து நின்று
கரகரப்பான குரலில் கதவை இடிக்கிறது
திகுதிகுவென பெருகும் சிரிப்பை
உருட்டி விளையாடுகிறது நித்தமிந்த
அசுரம். ஒரு சிட்டிகையில் புறாக்கள்
எழுவது போல
பயம். ஒரு இமைப்பில் கண்ணுள்
மின்னிட்ட நிறம். ஒரு கனவில் வெளிறிட்ட
வாழ்வு. ஒரு ரோகியில் வெளியேறிய
தெய்வம். ஒரு சிசுவின் புன்முறுவல்
துப்பாக்கி.


தம்பி, பரோட்டாவை திருப்பிப் போடு.


நாலு நாள் பேப்பர் படிக்கல
மொத்தத்தையும் கொண்டாந்து வை.


வண்டிய தொடச்சியா.


பத்து அஞ்சுக்கு அந்த கட் அவுட் முதுகு
எதிர வரும்.




அவர் நடுத்தரம்
ஐரிஷ் தொப்பி அணிந்திருக்கிறார்
தொப்பையுண்டு, வழுக்கையும்
இருக்கலாம்
முறுக்கின மீசையில் புன்னகை
தெரியாது
முச்சந்திப் பிள்ளையாரின் முன்பு
கலகப் பிரங்ஞையின்றி தோப்புக்கரணம்
போடுகிறார்
கடன் தொல்லை?
உப்பு புளி மிளகாய்?
அலுவலக நெருக்கடி ?
உறவுகளின் இளக்காரம்?
சொல்ல முடியாது, கள்ளக் காதலி
நெக்லஸ் கேட்டிருக்கலாம்
மனைவியின் காதலன் தள்ளிப் படு
என்றிருக்கலாம்
அட விடு, நல்லவனாய் இருக்க முடியாத
தளர்வுமாகலாம்,
அநீதிக்கு கைவேலை செய்ய முடியாத
பிரமிப்பாயிருக்கலாம்.

கேட்டாயா சகா
நான் சொல்ல வரும் நீதி 
ரத்தத்துக்கு மட்டுமில்லை
நிறம், துக்கத்துக்கும் ஓன்று தான்.
         

Monday, November 13, 2017





பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நமக்கு
எட்டாக் கரையில் எட்டும் முன்னே
இந்தத் திட்டில் வைத்து ஒரு மதுக் குப்பி
திறந்தாலென்ன, வாழ்வை ஏந்தி கிண்ணம் மோதி
ஒரு மிடறில் சிரித்த பிறகு அதில் விஷம்
கலந்தால் தான் என்ன. எட்டிப் பார்த்தும்
தொட்டுப் பார்த்தும் அறிந்த பின் அறிந்தேன்
எனது முலைக் காம்பின் விளிம்பு
எவளுக்குமில்லை என்கிற செருக்கை
அணைத்தாலென்ன, அல்லது இழுத்து வைத்து
அறைந்தாலென்ன. குருடனுக்கு கண்,
கடவுளுக்கு இதயம். இருப்பவர் எவருமே
இல்லாதது தேடும் துயர். எரிகிற புண்ணில்
பறக்கிற புகை. சரியாய் வந்திருக்கிறதா சொல்
எக்சிஸ்டென்ஷியலிசம்.

விஸ்கி குடித்திருந்தேன்
எனக்கு ஊற்றாதே, ரம்மை கலக்க
முடியாது,

sorry.




   

         

Friday, October 27, 2017





சட்டிக்கு கழுத்து வனையும் விரல்களின்
மனம் அறியாதது போல தான், கவிதையின்
நாபியில் முத்தி விட முடியாதது போல தான்
ஆகாயப் பந்தல்களின் பொன்னுஞ்சல்கள் இருக்கின்றன,
அவனன்றி அவர்கள் அறிய முடியாதிருக்கும் ஒரு
கத்தி.


மனம் தித்திக்கையில் நெய் மணக்கிறது, முந்திரிகள்
புன்முறுவலிக்கின்றன. நானிருக்கும் காட்டில் ஒவ்வொரு பூவிலும்
அந்த திராவகம் சவால் வைக்கிறது, இப்போது ஒரே ஒரு சொல்லுக்கும் அஞ்சுகிறேன். நீ ஒரு அழகி என்றால் முடியுமா. உன்னோடு படுக்க வேண்டும் என்றால் முடியுமா.உன்னை கொலை புரிந்து நீ கண்கள் பிதுங்க விடுபட்டு போவது மூச்சை சகஜமாக்குமா


புரிந்து கொண்டு விட்டேன் ஒரு அளவில். தீ எங்கும் உள்ளது.
ஒரு சதையை ருசிக்கும் போதமாகவே தீயை வாழ முடியும்.
நாமறியாத ஒருவன் நாமறியாத திசைக்கு நடக்க தேடும் போது
அவனது நாகரீகம் நாம் ஒளித்த தீயில்
துவங்கும்


ஆமாம், இப்படி ஒரு பிரார்த்தனை கிடையாது.
இதைக் காட்டிலும் ஒரு தண்டனையும் கிடையாது.


Friday, October 6, 2017






ஜன்னலுக்கு வெளியே மார்கழி பனி
வீட்டினுள் அசைகிற கற்பூர பிரமை
விடிந்து வந்தவாறிருக்கிற வெளிச்சத்துடன்
தெச்சி மந்தாரம் துளசி பி லீலா
கண்களால் பேசுபவளும் கருப்பியுமான
அந்த டியூஷன் மிஸ்ஸின் ஆங்கில அதட்டலுக்கு எதிரே
குளித்து சுந்தரக் குட்டனாய் குட்டியாய்
இருவர்
பதிமூன்று வயதுக் கண்கள் பார்த்த நெஞ்சம்பற்றி
சொல்ல முடிந்தால் தானே
பதிமூன்று வயது நெஞ்சம் பார்த்த
குறுமுலைகள் பற்றி சொல்ல முடியும்
என்று கேட்கிறான் அவன்.

நாஷ்டால்ஜியா ஏன் இவ்வளவு
தொப்பலாய் இருக்க வேண்டும் என்பது அவன் கேள்வி. 

Saturday, September 23, 2017




மிக சாதாரணமாய் பூனையொன்று
நம்மை பார்த்தவாறு கண்களை மூடித் திறப்பது போலவே
அது படியேறி வந்து முற்றத்து நாற்காலியில்
அமரும், தலைவரின் சிலையில் செருப்பு மாலை போட்டு
ஊரை எரிய செய்கிற திட்டம் மாதிரி
அது யாருடனும் தெருவில் அலையும்
ஒரு துண்டு ரொட்டிக்காக ஆனான தேசமெல்லாம்
நொறுங்கிய கதையை சொல்லவே வேண்டுமா
ஆங்காங்கே கிழித்தது போக
எல்லாவற்றிலும் பட்டு தெறிக்கிறது
பகை. உள்ளோடியொளிந்த
பெருச்சாளிகளாயிற்று நிஜம். இடையே
நாகரீகத்தை இஸ்திரி போடுகிற பிழைப்பு.

ச்சை- வரியான்னு உன்ன கேக்கறதுக்கு நடுல
பல்லாயிரம் வருஷ பள்ளம்.







Friday, September 22, 2017




சன்னலுக்கு வெளியே அங்கே
ஒரு பறவை கிரீச்சிட்டு தேய்ந்து
மறைந்தவாறு இருக்கும் போது
இன்று அருவிக்கு செல்வதில்லை, விவாகரத்து
ஹியரிங் பற்றி கேட்க வேண்டும், ஷேவிங் லோஷன்
இல்லை, மீரா போனில் என்னவோ கிசுகிசுத்தாளே, இந்த விஸ்கியும்
மறதியும் என்ன சொல்ல, அடுத்த முறை
வனாந்திரத்துக்கு இப்படி தனியே வரக்கூடாது,
ஜூட் இருந்தால் சண்டை இழுத்து பொழுது போகும், ஆம்,
அடுத்த முறை நீ ரொம்ப நேரம் செய்ய வேண்டும்
என்று சொன்னாள், புது ஷூ ஓன்று வாங்கிக் கொள்வோமா,
மின்சாரம் தடைபடாவிட்டால் மின்மினிகள்
மினுங்கி பறக்கா விட்டால் அவள் இதழ்களிலேயே
இருக்க முடியுமே அரை மணி நேரம், மகளே
லாலிம்மா என்ன செய்து கொண்டிருக்கிறாய்

ஷட் அப் .

பள்ளத்தாக்கின் அமைதியெங்கிலும் விம்முகிறது
நூறாயிரம் பறவைகளின் ஹோ.

Monday, September 18, 2017




காலம் மரவட்டைக் கால்களில் நடந்தாலும்
திருப்பத்தில் மறிக்கிற பாறைக்கு முன்
திகைக்கும், அடியே முடிந்ததெல்லாம் சொப்பனமா
நேற்று கடலில் இறங்கிய சூரியன் தானே
இப்போ உச்சந்தலையில் முள் குத்துகிறது
உனது மகளுக்கு என்ன பெயர்
உனது பெயரின் எழுத்துக்களின் எதிரொலி
முடியும் முன்னே யாருக்கு பூ மலர்த்தி
எப்போது இவளை சறுக்கலில் இறக்கினாய்
சரிதான், இந்த மயங்கலில் ஒளிவருடங்கள்
பொடிக்கின்றன
கடவுளே அதோ காட்டுப் பன்றி போல
புழுதி கிளப்பிப் பறக்கிறான்
நல்லாள் நீ நூறு முறை சோரம் போய்
தகித்த தங்கத்தில்
நான் உலகடைந்திருக்கிறேன்
ஐ லவ் யூ பேபி என்பதாகவே திரும்பவும்
துவங்கவா.

Monday, August 28, 2017



தனிமை
அவன் அதை கனம் பண்ணிக் கேட்டதில்லை
யாரோ கைவிட்டு செல்வதில்லை
யாரோடும் இல்லாமல் இருப்பதில்லை
துண்டுபட்ட கண்டங்கள் மீது
வெண்பனி நழுவும்
விஸ்கி கோப்பையை தான்
வெறித்துக் கொண்டிருப்பதுமில்லை
நெஞ்சில் இருந்து ஏறி
தொண்டையடைத்து
வெடிக்காத குமிழி மச்சான்
என்பான்

ஆயுளுக்கும் ஆவியுலர காத்திருந்த
பொன்னுங்கட்டி முத்தமிடும் போது
துடைத்துக் கொள்ளுவது
தனிமை

அது கடவுள் நகர்த்தி உக்காரு என்ற
நாற்காலி.

Monday, August 7, 2017




ஒருவேளை நகர்ந்தால் மட்டுமே
துலங்கும் சூரியோதயம் போல
சில கண்கள்
உள்ளுக்குள் பேசும்போதும்
உள்ளாடை மாற்றும் போதும்
அடித்துப் பார்த்தவாறு இருக்கின்றன
ரகசியங்களை பரிகசிக்கின்றன
கீழே, கீழ்மையின் சுழிதலை
பெற்றெடுத்த மக்கள் போலும்
சகிக்கின்றன, சகஜமாக்குகின்றன
ஒரு மின்னல் வெட்டின் இடைவெளியில்
வேறு கண்களுடன் சென்றுவிட்டவர்
பற்றி எந்த செய்தியும்
இல்லை.


Thursday, August 3, 2017





அவள் அவளை
அணுகும் போதெல்லாம்
அதே மணம் எழுந்து வரும்
அவனது பித்து கிளர்ந்து வரும்
அடுப்பில் இருக்கிற கறிக்குழம்பை
அவன் சப்பு கொட்டுகிற சப்தம் வரும்
முகத்தில் தாடையில்
இதழ்கள் என்பார்களே அதனோரத்தில்
குறுஞ்சிரி வருவது தான்
இயங்கும் எவனையும் தளர்த்தும்
மந்திரம்


ஒரு நாடகத்திலும் இல்லாத வசனம்,
எல்லோரும் இறந்தொழியுங்கள்.




அவள் அவளை
அலம்பும் போதெல்லாம்
அந்தக் கலவி நினைவு வரும்
அவனது கண்கள் நினைவு வரும்
அவை என்னை கை விட்டு விடாதே என்பதாய்
அத்து மீறியது கொதிப்பாய் வரும்
முகத்தில் தாடையில்
இதழ்கள் என்பார்களே அதனோரத்தில்
குறுஞ்சிரி வருவது தான்
இயங்கும் எவனையும் தளர்த்தும்
மந்திரம்.

ஒரு நாடகத்தின் வசனம் போலவே,
உலகின் நெஞ்சினுள் எரியும் தீக்கொழுந்து
நான் !

Monday, July 3, 2017





உங்கம்மா பூட்ட
உங்கப்பா சாவி வெச்சு
திறப்பதை பார்த்திருக்கிறாயா
என்றான்.
அஞ்சும் அஞ்சும் பத்து வயசு
ஆறாம் வகுப்பின்
கடைசி பெஞ்சில் கண்கள் விரிய
கலவிக் கல்வி
நடுவில் இப்ப தான்
நாற்பது வருஷம் நழுவிப் போச்சு
சாவியொன்று உண்டு என்னிடம்
பூட்டை திறக்க வரலாமா
என்று இன்னமும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அதனால் தான் வாழ்க்கை ஒரு வட்டம் என்கிறது
தமிழ் சினிமா.