Monday, June 4, 2012




நீ எப்படி சகிக்கிறாய் என்பதை
சொல்லி கொடு

வசந்தங்களும்
இலையுதிர் காலங்களும் கடக்க
நூற்றாண்டுகள் தாண்டி நீ
எப்படி இப்படி காத்து கொண்டிருக்கிறாய்

மனுஷ்ய இரைச்சல்களும் , தொழுகைகளும்,
கண்மூடிதனங்களும் முடிந்து
நீ நிசப்தயாய் ஆகும்போது
ஜீவவெறியுடன் முணுமுணுக்கிற கானகத்தை
அளவற்ற காதலுடன் நுரைத்து ததும்பி ஓடும் பம்பை ஆற்றின் சலசலப்பை
புணரும் பட்சிகளின் சிறகோசைகளை
எப்படி சகிக்கிறாய்

மேனியை கருங்கல்லாக்கி உறைந்த போதும்
பவுர்ணமிக்கால நிலவொளி ஒரு மயிலிறகாகி வருடும்போது
சிலிர்த்துக்கொள்வது இல்லையா, குறைந்தபட்ஷம்
மனசு

இளைப்பாறுவதற்கு ஒரு நிழல் சோலை வளர்த்து
நெஞ்சுக்குள் வைத்து காப்பாற்றி
ஓய்வெடுக்க வராத ஒரு ஆளின் நிழலுக்கு காத்திருக்கும் போது
உன் யவ்வனத்தை அரித்துக்கொண்டிருக்கிறது
காலம்

தேங்காய் உருட்டி
சாஷ்டாங்கமாய் விழுந்து எழுந்து
இயலாமையை தலையில் சுமந்து
திரும்பி செல்கிறது மானிடம்

மனமெரிய ஒரு பாமரன் கேட்கிறேன்
எப்படி

எப்படி சகிப்பது எல்லாவற்றையும் என்று
சொல்லிக்கொடு   

No comments:

Post a Comment